Dinamani - கட்டுரைகள் - http://www.dinamani.com/religion/religion-articles/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2966184 ஆன்மிகம் கட்டுரைகள் எல்லா மதத்தை விடவும் சிறந்த மதம் எது? சினேகா Monday, July 23, 2018 02:09 PM +0530 ஒரு சமயம் குருவும் சீடனும் பேசிக் கொண்டிருந்தபோது, சீடனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. குருவிடம் கேட்டதும் அவர் புன்னகைத்தார். சீடனின் கேள்வி உலகில் பல மதங்கள் உள்ளதே, அதில் எந்த மதம் இறைவனிடத்தில் சேர்க்கும் என்பதே.

குரு சீடனை அழைத்து இந்தக் கேள்விக்கான பதில் மறுகரையில் உள்ளது. ஒரு படகில் செல்லலாம் வா என்று கூற, சீடனும் அங்கிருந்த படகுகளில் ஒன்றைத் தயார் செய்து குருவை அழைக்கிறான்.  சீடனும் ஒவ்வொரு படகை எடுத்து வர அதில் ஏதேனும் குறை கூறி குரு வர மறுத்துவிடுகிறார். வெறுத்துப் போன சீடன் அவசரமாக ஒரு படகைப் பிடித்து வந்து அதில் போகலாம் என்று கூற குரு நீ சென்று திரும்பி வா என்று கூறி அவனை அனுப்பி வைக்கிறார். அவனும் மறுகரைக்குச் செல்கிறான். ஆனால் குருவிடம் கேட்ட கேள்விக்கு அவனுக்கு பதில் கிடைக்கவில்லை. சிறிது நேரம் அங்கும் இங்கும் அலைந்துவிட்டு பின் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்தான். குருவிடம் சென்று வணங்கி, குருவே, எதற்கு இந்தச் சோதனை? எனக்கு ஒன்றும் வி்ளங்கவில்லையே என்றான் பணிவுடன்.

குரு மீண்டும் புன்னகைத்து, ‘உண்மையை அறிந்து கொள்ள மறுகரைக்குச் சென்றாய். அங்கு செல்ல வேண்டும் என்ற உன்னுடைய உத்வேகம் மட்டும்தான் உன் கவனத்தில் அப்போது இருந்ததே தவிர மறுகரை கொண்டு செல்லும் படகில் அல்ல. மேலும், மறுகரைக்குச் செல்வதுதான் முக்கியமானதாக இருந்ததே தவிர உன்னை சுமந்து செல்லவிருந்த படகல்ல. அது போலத்தான் இறைவனை அடைய வேண்டும் என்ற சிந்தனையும் தீவிரமும் தான் முக்கியமே தவிர ஒருவர் பின்பற்றும் மதம் முக்கியமானது அல்ல. எந்தப் படகும் அக்கரைக்கு செல்லும் எந்த மதமும் இறைவனிடம் சேர்ப்பிக்கும்’ என்றார்.

தெளிவு கிடைத்த மகிழ்ச்சியில் சீடன் குருவை வணங்கினான்.

]]>
god, religion, மதம், கடவுள், இறைவன், ocean of life, சீடன், படகு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/23/w600X390/0.jpg http://www.dinamani.com/religion/religion-articles/2018/jul/23/which-is-the-best-religion-in-this-world-2966184.html
2954506 ஆன்மிகம் கட்டுரைகள் உங்கள் பொருள் பணம் நகை எதாவது திருட்டுப் போய்விட்டதா? கவலை வேண்டாம் திரும்பக் கிடைக்க இதோ வழி! ராஜி Friday, July 6, 2018 05:06 PM +0530  

அண்மையில் என்னுடைய குடையை தொலைத்துவிட்டேன். இதென்ன பெரிய விஷயமா என்று திகைக்கிறீர்களா? இது கடந்த பத்து ஆண்டுகளில் நான் தொலைக்கும் ஐம்பதாவது குடை. குடை மட்டுமல்ல, பர்ஸ், பென் ட்ரைவ், கைப் பை, மோதிரம், ப்ரேஸ்லெட், வாட்ச், செல்ஃபோன் என நான் தொலைத்த பொருட்களின் பட்டியலை கூற வேண்டுமானால் இந்தக் கட்டுரை சுயபுராணமாகிவிடும். இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், இன்னிலேர்ந்து உஷார் என்று எனக்குள் பல தடவை சொல்லிக் கொண்டாலும் ஒரு ஆப்செண்ட் மைண்டட் புரோபஸர் கடமை தவறாமல் தன் தொலைத்தலில் ஈடுபட்டுவிடுவார். ஏன் இப்படி அடிக்கடி பொருட்களை தொலைக்கிறேன் என்று அதற்கான தீர்வு ஏதேனும் இருந்தாக வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் அந்த வழி ஈஸியாக இருக்க வேண்டும் என்று கணவரிடம் கேட்டதற்கு கடவுளே வந்தாலும் உன்னைக் காப்பாத்த முடியாது என்று கூறிவிட்டார். 

அடக் கடவுளே என்று தலையில் கைவைத்து அமர்ந்த போது, மாமியார் அவரது ஊரில் உள்ள ஒரு கோவிலைப் பட்ற்றி கூறினார். அந்தக் கோவிலில் உள்ள கால பைரவருக்கு சாம்பிராணி புகை போட்டு கும்பிட்டால் தொலைத்த பொருட்கள் எல்லாம் தானாக வந்து சேரும் என்று ஒரே போடாக போட்டார். என்ன இது அதிசயமா இருக்கே என்று அவரிடம் மேலும் சில தகவல்கள் கேட்டு தெரிந்து கொண்டேன். அந்தக் கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துர்வாசபுரத்தில் உள்ள திருப்பாதாளேஸ்வரர் கோவில். ஈஸ்வரன் சுந்தரேஸ்வரர் அம்பாள் பாகம்பிரியாள். இந்த அம்மனை மனதார வேண்டி வழிபட்டால் திருமணத் தடை நீங்குமாம்.

இங்குள்ள கால பைரவர் மிகுந்த சக்தி வாய்ந்தவர். இந்த உக்கிரமான பைரவரிடம் என்ன வேண்டினாலும் அது நடக்கும் என்பது ஐதீகம் அல்ல உண்மை என்கிறார்கள் ஊர்க்காரர்கள். கால பைரவரின் சன்னதியில் சாம்பிராணி புகை போட்டு தொலைந்த பொருட்கள் திருடு போய்விட்ட பணம் என எதை நினைத்து வேண்டிக் கொண்டாலும், அவை எல்லாம் திரும்பக் கிடைத்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் பைரவர், சம்பாசுரனை வதம் செய்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் சம்ப சஷ்டி விழா நடத்தப்படுகிறது. குழந்தைகளின் படிப்பு, குடும்ப நிம்மதி என எதை வேண்டி விளக்கு ஏற்றினாலும் அந்த பிரச்னைக்கு சரியான தீர்வு கிடைத்துவிடும் என ஊர் மக்கள் நம்புகிறார்கள். 

இந்தக் கோவிலுக்குப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த போது ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. என்னுடைய ஆட்டோகாரர் தான் பேசினார். அவர் ஆட்டோவில் தான் விட்டிருக்கிறேன் என்று கூறினார். பொருள் சிறிதாக இருந்தால் என்ன பெரியதாக இருந்தால் என்ன, தொலைத்தவனுக்குத் தானே தெரியும் அந்த வலி! அப்பாடா என்றிருந்தது. உழைத்து சம்பாதித்த பொருள் எப்படியாவது திரும்ப கிடைத்துவிடும் என்று என் அம்மா அடிக்கடி சொல்வார். இப்படி நான் தொலைத்த பல பொருட்கள் தானாகவே திரும்பக் கிடைத்துள்ளது. அதற்கு தெய்வ சக்தி நிச்சயம் துணையிருந்துள்ளது. எல்லாம் வல்ல இறைக்கு நன்றி சொல்ல உடனே புதுக்கோட்டைக்கு ஒரு டிக்கெட் எடுக்கப் போறேன் என்றேன். இரண்டு டிக்கெட்டாக எடுத்துவிடு என்றார் மாமியார்.

]]>
Thirupaathaleswar temple, புதுக்கோட்டை, பாகம்பிரியாள், திருப்பாதாளேஸ்வரர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/6/w600X390/kala_bairava.jpg http://www.dinamani.com/religion/religion-articles/2018/jul/06/உங்கள்-பொருள்-பணம்-நகை-எதாவது-திருட்டுப்-போய்விட்டதா-கவலை-வேண்டாம்-திரும்பக்-கிடைக்க-இதோ-வழி-2954506.html
2954462 ஆன்மிகம் கட்டுரைகள் திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா! அடடா இது என்ன! Friday, July 6, 2018 12:47 PM +0530
கந்தர் அந்தாதியில் 54-ஆம் பாடல் இது.
 
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

இதன் பொருள் :

திதத்த ததித்த என்னும் தாள வரிசைகளை, தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற, உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும், மறை கிழவோனாகிய பிரம்மனும், புள்ளிகள் உடைய படம் விளங்கும், பாம்பாகிய ஆதிசேஷனின், முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்) அலை வீசுகின்ற, சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு), அயர்பாடியில் தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு, அதை மிகவும் வாரி உண்ட (திருமாலும்), போற்றி வணங்குகின்ற, பேரின்ப சொரூபியாகிய, மூலப்பொருளே, தந்தங்களை உடைய, யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, கிளி போன்ற தேவயானையின், தாசனே, பல தீமைகள் நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய) எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு), அக்னியினால், தகிக்கப்படும், அந்த அந்திம நாளில், உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி, உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும். ..

திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் கூறிய விளக்கம்
 
திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,
திதி – திருநடனத்தால் காக்கின்ற
தாதை – பரமசிவனும்
தாத – பிரமனும்
துத்தி – படப்பொறியினையுடைய
தத்தி – பாம்பினுடைய
தா – இடத்தையும்
தித – நிலைபெற்று
தத்து – ததும்புகின்ற
அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி – தயிரானது
தித்தித்ததே – தித்திக்கின்றதென்று
து – உண்ட கண்ணனும்
துதித்து – துதி செய்து வணங்குகின்ற
இதத்து – பேரின்ப சொரூபியான
ஆதி – முதல்வனே!
தத்தத்து – தந்தத்தையுடைய
அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத – தொண்டனே!
தீதே – தீமையே
துதை – நெருங்கிய
தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து – மரணத்தோடும்
உதி – ஜனனத்தோடும்
தத்தும் – பல தத்துக்களோடும்
அத்து – இசைவுற்றதுமான
அத்தி – எலும்புகளை மூடிய
தித்தி – பையாகிய இவ்வுடல்
தீ – அக்கினியினால்
தீ – தகிக்கப்படுகின்ற
திதி – அந்நாளிலே
துதி – உன்னைத் துதிக்கும்
தீ – புத்தி
தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்

நன்றி - கணபதி சுப்ரமணியம் (nytanaya)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/6/w600X390/Murugan.jpg http://www.dinamani.com/religion/religion-articles/2018/jul/06/திதத்தத்தத்-தித்தத்-திதிதாதை-தாததுத்-தித்தத்திதா-அடடா-இது-என்ன-2954462.html
2904073 ஆன்மிகம் கட்டுரைகள் ஸ்ரீமத் ஆதி சங்கரரின் அவதாரத்திற்கு மூல காரணம்! மாலதி சந்திரசேகரன் Friday, April 20, 2018 11:21 AM +0530  

ஸ்ரீமத் ஆதி சங்கர பகவத் பாதர், எப்பொழுது பிறந்தார் என்பதைப் போன்ற விஷயங்களை பற்றி அதிகப்படியாக நாம் விசாரம் செய்வதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. அவருடைய ஜெயந்தியை, நாம் சித்திரை மாதம், வளர்பிறை பஞ்சமி திதியில் அனுஷ்டித்து வருகிறோம்.

எட்டாம் நூற்றாண்டில், மிகவும் நலிவுற்று இருந்த சனாதர்மத்தின் மறுமலர்ச்சிக்காக, விஷ்ணு மற்றும் பிரும்மாவை முன்னிலையாக வைத்து, தேவதைகள், மற்றும் ரிஷிகள் கைலாயத்திற்குச் சென்று, ஸ்ரீ கங்காதரனிடம் ஒரு உபாயம் கேட்டு, பிரார்த்தனை செய்து கொண்டார்கள். ஸ்ரீ பரமேஸ்வரன் ஆனவர், அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, தானே பூமில் அவதாரம் செய்வதாகத் தெரிவித்தார். இதுதான் ஸ்ரீமத் ஆதி சங்கரரின் அவதாரத்திற்கு மூலக காரணமாகத் திகழ்ந்தது.

ஸ்ரீமத் ஆதி சங்கரர், தக்ஷிணாமூர்த்தியான ஸ்ரீ பரமேஸ்வரரின் அவதாரம். கேரள மாநிலத்தில், ஸ்ரீ சிவகுரு, ஸ்ரீ ஆர்யாம்பிகை தம்பதியருக்கு, திருச்சூர், வடக்கு நாதரின் அருளால், சிரேஷ்ட புத்திரனாக பிறந்தார். மூன்று வயதிற்குள், எல்லா பாஷா ஞானமும், ஐந்து வயதிற்குள், சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தெளிந்தார். ஸ்ரீமத் ஆதி சங்கரர் , இந்தப் பூவுலகில் அவதரித்த காலத்தில் சுமார், எழுபத்தியிரண்டு வெவ்வேறு மதவாதிகள், தம்முடைய கருத்துக்களின் வேறுபாட்டின் அடிப்படையில், சண்டையிட்டுக் கொண்டு, லோகத்தில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தார்கள். 

'பிரும்மம் ஒன்றே நித்யம், சத்யம் . அதைத் தவிர இரண்டாவது வஸ்து  இல்லை' என்கிற உன்னதமான அத்வைத தத்துவத்தினை உலகிற்கு அளித்த ஞான ஆசிரியன். அத்வைத தத்துவத்தை உலகிற்கு போதித்த அம்மகான், பத்து உபநிஷத்துக்கள், பிரும்ம சூத்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம், பகவத் கீதை ஆகியவற்றிற்கு விளக்க உரை அளித்துள்ளார். சிவானந்தலஹரி, கோவிந்தாஷ்டகம், விவேக சூடாமணி, ஆத்ம போதம், கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரமண்ய புஜங்கம் போன்ற இன்னும் பிற நூல்களையும் இயற்றி உள்ளார். 

இந்து மதத்தில் இருந்த வேற்றுமைகளை, நீக்குவதற்கு, தனித்தனி பெயர்கள் கொண்ட தெய்வங்கள் காணினும், முடிவில் எல்லாம் ஒன்றே என்னும் எண்ணத்தினை மக்களிடையே பரப்பினார்.  ஆறு மதங்களை கைகொள்ளச் செய்தார். அதனால் இவருக்கு 'ஷண்மத ஸ்தாபனாச்சாரியார்' என்கிற திருநாமமும் உண்டு. அவை,
ஞானத்திற்கு, சிவன் - சைவம். 
ஐஸ்வர்யத்திற்கு, விஷ்ணு - வைணவம் .
சக்திக்கு, அம்பிகை -  சாக்தம்.
பலத்திற்கு, கணபதி - காணாபத்யம்.
வீரியத்திற்கு, முருகர் - கௌமாரம். 
தேஜஸ்ஸிற்கு, சூரியன் - சௌரம்.

ஆகியவை ஆகும். 

தன்னுடைய முப்பத்து இரண்டு அகவைக்குள், ஸ்ரீமத் ஆதி சங்கரர், பாரத தேசம் முழுவதும் பயணித்து, கிழக்கில், புரியில், ஸ்ரீ கோவர்த்தன பீடத்தினையும், மேற்கில், துவாரகையில், ஸ்ரீ துவாரகா பீடத்தினையும், தெற்கில், சிருங்கேரியில், ஸ்ரீ சாரதா  பீடத்தினையும், வடக்கில் ஸ்ரீ ஜோஷி மடத்தினையும் நிறுவினார், 

ஸ்ரீமத் ஆதி சங்கரரின் சரிதத்தினை, மாதவீய சங்கர விஜயம், கேரளீய சங்கர விஜயம், சங்கர விஜய விலாசம் , குரு  ரத்ன மாலிகை, மார்க்கண்டேய சம்ஹிதை போன்ற  கிரந்தங்கள், விவரிக்கின்றன. எத்தனையோ ஆண்டுகள் கழிந்தும், அவரால் போதிக்கப் பட்ட அத்வைத சித்தாந்தம் இன்னும் மங்காத பொலிவோடு திகழ்கின்றது. 

முக்கியமாக, நாம் அவரது வாழ்க்கை வரலாற்றினை படித்தால் ஒன்று நிதர்சனமாகத் தெரிகின்றது. அதாவது, வயது முதிர்ந்த காலத்தில் சத் காரியங்களைச் செய்வதைவிட, சிறு வயதிலேயே செய்ய வேண்டும் என்பதுதான். குமார பருவத்திலேயே பகவத் தர்மங்களை அனுஷ்டிக்க வேண்டும்.

ஸ்ரீமத் ஆதி சங்கரர் அவதரித்திராவிட்டால், நமது ஆலயங்களும், பண்டிகைகளும், உற்சவங்களும், வழிபாட்டு முறைகளும் அடியோடு மறைந்திருக்கும். இருந்த நிறைந்த காட்டில், திக்கு திசை தெரியாமல் தத்தளித்த மானிடர்களுக்கு, செப்பனிட்டு சாலையில், விளக்கு வெளிச்சத்தினையும் உண்டாக்கி, நமக்கு ஞான மார்க்கத்தை போதிக்க அவதாரம் செய்த ஞான ஆசிரியனை துதித்து நிற்போம்.

அவருடைய ஜெயந்தி அன்று கூற வேண்டிய ஸ்லோகம்,

'ஸ்ருதி,  ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் 
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்'

]]>
Srimath Aadhi sankarar, ஷண்மத ஸ்தாபனாச்சாரியார், ஸ்ரீமத் ஆதி சங்கரர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/20/w600X390/aadhi_sankara.jpg http://www.dinamani.com/religion/religion-articles/2018/apr/20/ஸ்ரீமத்-ஆதி-சங்கரரின்-அவதாரத்திற்கு-மூல-காரணம்-2904073.html
2829211 ஆன்மிகம் கட்டுரைகள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தவறாதவர்கள் சனிப் பெயர்ச்சியைக் கண்டு பயப்பட வேண்டாம்! - அஸ்ட்ரோ சுந்தரராஜன் Tuesday, December 19, 2017 01:09 PM +0530  

நீண்ட நாட்களாக சனிப் பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக காலபுருஷனுக்கு எட்டாம் வீடு மற்றும் தனது பகைவனான செவ்வாயின் வீட்டில் பயணம் செய்து, பலருக்கும் பலவிதமான பலன்களை வழங்கிவந்த சனைச்சரன் எனப்படும் சனி பகவான், திருக்கணித பஞ்சாங்கப்படி, கடந்த ஐப்பசி மாதம் 9-ம் தேதி (26.10.2017) முதல் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசியை அடைந்து, அங்கிருந்தபடி தனது சஞ்சாரத்தை தொடர்ந்து வருகிறார். ஆனால், வாக்கிய பஞ்சாங்கபடி இன்று மார்கழி மாதம் 4-ம் தேதி (19.12.2017) அன்று விருச்சிகத்திலிருந்து தனுசு ராசிக்குச் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. எந்த பஞ்சாங்கமாக இருந்தால் என்னங்க! இந்த ஆண்டில் சனி மாறுவதால் நல்லதே நடக்கும் என நம்புவோம்.

ஜோதிடமே தெரியாதவர்கூட சனீஸ்வர பகவானை தெரியாமல் இருக்கமாட்டார்கள். யாருக்குப் பயப்படுகிறார்களோ இல்லையோ, சனியின் பார்வைக்குப் பயப்படாதவர் இருக்க முடியாது. அப்படிப்பட்ட சனைச்சரன் எனப்படும் சனி பகவான் யார்? அவர் நல்லவரா, கெட்டவரா? - இந்தச் சனிப் பெயர்ச்சி நாளில் பார்ப்போம்.

நவக்கிரகங்களில் சனி பகவானும் ஒருவர். சனைச்சரன் என்றும் மந்தன் என்றும் குறிப்பிடுவர். ‘சனை’ என்றால் மெள்ள, அதாவது மெதுவாக என்று அர்த்தம். ஒரு ராசியில் பயணிக்க சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் சனி பகவான். மற்ற கிரகங்களைவிட இவருடைய பயணம் மெதுவாக இருப்பதால், அந்தப் பெயரே பொருந்துகிறது இவருக்கு! விண்வெளியில் அவர் பயணிக்கும் பாதை, எல்லா கிரகங்களையும் தாண்டியதாக இருக்கும். விண்வெளியில் வெகு தொலைவில் இருப்பவர் இவர். சனி பகவானைக் கடந்து இருப்பது நட்சத்திர மண்டலம். அவரிடமிருந்துதான் கிழமைகளின் தோற்றமும் வரிசைகளும் உருவாயின.
 

ஒரு ஜாதகருக்கு ஜாதக ரீதியான நன்மையான அல்லது தீமையான பலன்கள் தருவதில் முக்கியப் பங்கு வகிப்பவர் சனி பகவான்தான். ஒருவன் யாருக்கு பயப்படுகிறானோ இல்லையோ, சனி பகவானுக்கு பயப்பட்டே ஆக வேண்டும். இவரிடமிருந்து யாரும் தப்ப முடியாது. 'சிவனாக' இருந்தாலும் சரி, 'எமனாக' இருந்தாலும் சரி. அல்லது வேறு 'எவனாக' இருந்தாலும் சரி. தீர்ப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். 

இவர் அரசனை ஆண்டியாகவும், ஆண்டியை அரசனாகவும் மாற்றக்கூடியவர். மனிதனுக்குத் துன்பம் என்றால் என்ன என்று புரியவைப்பவர். மனிதர்கள் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும், கஷ்டப்படும் நேரத்தில் ஜாதகத்தை கையில் எடுப்பதற்கும் இவர்தான் காரணம். இவர் அரசனை மட்டும் இல்லை, மனிதனையும் தண்டிப்பவர். இவரிடம் எந்த மந்திரியின் சிபாரிசும் எடுப்படாது. மனிதன் பிறப்பு எடுப்பதே கர்மத்தை தொலைப்பதற்குத்தான். அதனால், இவரின் பிடியில் இருந்து யாரும் தப்பமுடியாது. இந்த உலகமே இவரின் பிடியில்தான் உள்ளது என்றால் அது மிகையில்லை.

எனவேதான் இவரை தலைமை நீதிபதி என்பார்கள். இவர் தண்டிக்கும் தெய்வம் அல்ல; நம்மை திருத்தும் தெய்வம். இவர் நம் கர்மவினைகளுக்கு ஏற்ப சோதனை கொடுத்து, நம்மை திருத்தி நல்வழிப்படுத்தி, நம்மை சாதிக்க வைப்பார். சனி பகவான் நன்மை மட்டுமே செய்வார். ஆனால், மக்கள் இதை சரியாகப் புரிந்துகொள்ளாமல், இவரைக்கண்டு பயப்படுகிறார்கள். 

சூரிய புத்திரன்

சனீஸ்வர பகவான், சூரிய பகவானின் குமாரர். இவருடைய மாதா, சாயா தேவி. சாயா தேவிக்கு நிஷுபா, பிருத்வீ என்னும் பல பெயர்கள் உண்டு. சூரிய பகவானுக்கும், சாயா தேவிக்கும் புதல்வராக அவதரித்த சனீஸ்வர பகவானின் புராண வைபவம் நமக்கு பேரருளையும், செல்வத்தையும் அளிக்கும். சூரியதேவன், த்வஷ்டா என்பவரின் குமாரத்தியான சுவர்ச்சலா தேவியைத் திருமணம் செய்துகொண்டார். சுவர்ச்சலா தேவிக்கு ஸமுக்ஞா, ஸரேணு, ராக்ஞீ, பிரபாஸா என்றும் பல பெயர்கள் உண்டு. சூரிய தேவனுக்கும், சுவர்ச்சலா தேவிக்கும் சிராத்த தேவன் என்று அழைக்கப்படும் வைவசுதமனு, யமதர்ம ராஜன் என்று இரு புதல்வர்களும், யமுனை என்னும் பெயருடைய அதிரூபவதியான புத்திரியும் பிறந்தனர். யமனும், யமுனையும் இரட்டைப் பிறவிகள். சூரிய தேவனின் இல்லறக் கோவிலில் இன்புற்று வாழ்ந்து வந்த சுவர்ச்சலா தேவிக்கு, நாளாக நாளாக சூரிய தேவனின் உக்கிரமான கிரணங்களைத் தாங்கும்படியான சக்தி குறைந்துகொண்டே வந்தது.
 

சூரியனும் சுவர்ச்சலாவும்

இந்த நிலையில், சுவர்ச்சலா தேவி தனது துயர நிலையைச் சூரிய தேவனிடம் சொல்வதற்கு சக்தியற்றுப் போனாள். சுவர்ச்சலா தேவி, கானகம் சென்று கடும் தவம் இருந்து உரிய சக்தியைப் பெற்று வருவதற்கு எண்ணினாள். அந்த எண்ணத்தையும் சூரிய தேவனிடம் சொல்லும் ஆற்றல் அவளுக்கு இல்லாமல் போனது. சுவர்ச்சலா தேவி தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தாள். தனது மனோ சக்தியால் தனது நிழலையே, தன்னைப் போன்ற பேரெழில் கொண்ட பெண்ணாகத் தோன்றச் செய்தாள். நிழலில் நின்றும் உருப்பெற்று வந்த அந்த நளின சிங்கார வனிதை, தன்னைப் போன்ற உருவத்துடன் காணும் சுவர்ச்சலா தேவியைக் கண்டு திகைத்தாள். அவளை நமஸ்கரித்து நின்றாள். சுவர்ச்சலா தேவி அவளைப் பார்த்து, எனது சாயையில் நின்றும் தோன்றியவளே! உனக்கு சாயா தேவி என்று நாமகரணம் சூட்டுகிறேன். உனக்கு நான் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கிறேன். நான் தவம் செய்யப்போகிறேன். நான் திரும்பி வரும்வரை, நீ என் கணவருடன் சுகித்து வாழ்வாயாக! என் குழந்தைகளான வைவசுதமனு, யமதர்மன், யமுனா ஆகியோரை அன்போடு அரவணைத்து வாழ்வாயாக என்று கூறினாள். சுவர்ச்சலாவின் அன்புக் கட்டளைப்படி, சூரிய தேவனுடன் சாயா தேவி வாழத் தொடங்கினாள்.

சுவர்ச்சலாவின் நிழல் சாயா தேவி

சூரிய தேவனின் குழந்தைகளிடம் சாயா தேவி மிகுந்த வாத்ஸல்யம் கொண்டிருந்தாள். கண்ணும் கருத்துமாக அக்குழந்தைகளைக் காத்துவந்தாள். சூரிய தேவனுக்கும், சாயா தேவிக்கும் தபதீ என்னும் புத்திரியும், ச்ருதச்ரவஸீ, ச்ருதகர்மா என்று இரு புதல்வர்களும் பிறந்தனர். ச்ருதகர்மாதான் பின்னால் சனீஸ்வரர் என்று அழைக்கப்படுபவர். சுவர்ச்சலாவின் குழந்தைகளும், சாயா தேவியின் குழந்தைகளும் சாயா தேவியின் அரவணைப்பில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். நாளாக நாளாக, சாயா தேவி தனது குழந்தைகளிடம் சற்று அதிகப்படியான வாஞ்சை செலுத்தினாள். சுவர்ச்சலா தேவியின் மகனான எமதர்மராஜனுக்கு இதனால் மனத்தில் வேதனை மிகுந்தது. தனது தாய்க்கு ஏன் இந்த பாரபட்சம் என்று நினைத்து வருந்தினார்.
 

எமதர்மனின் கோபம்

ஒருநாள், எமதர்மராஜனுக்குத் தாயிடம் கோபம் மிகுந்தது. தந்தையாகிய சூரிய தேவனிடம் சென்றார். சிறிது காலமாகத் தாயார் தங்களைத் தரக்குறைவாக நடத்துவதாகச் சொல்லி கண் கலங்கினார். தர்மாத்மாவான யமனின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டார் சூரியதேவன். தருமபுத்திரா, தரும வழியில் நடந்துவரும் உனக்கே கோபம் வருகிறதென்றால், இதில் உண்மை இருக்கத்தான் செய்யும். நான் இப்போதே உனது குறையை நிவர்த்திக்கிறேன் என்று சூரிய தேவன் மகனை அன்போடு அருகே அழைத்து, ஆரத் தழுவி ஆறுதல் சொல்லி, சாயா தேவியிடம் விசாரித்தார். சாயா தேவி மெளனம் சாதித்தாள். சாயா தேவியின் மீது சூரிய தேவன் கடும் கோபம் கொண்டார். அவரது கோபத்தை கண்டு பயந்த சாயா தேவி, நடந்ததைச் சொல்லி தனது பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினாள். 

சாயா தேவியின் நிலை

சாயா தேவி சொன்னதைக் கேட்ட சூரிய தேவன், அவளை மன்னித்தார். எமதர்மராஜனும் சாயா தேவி மீது அனுதாபம் கொண்டார். சூரிய தேவன் தனது ஞானதிருஷ்டியால் சுவர்ச்சலா தேவி தவமிருக்கும் இடத்தை கண்டறிந்து, அங்கு சென்றார். சுவர்ச்சலா தேவியை ஆனந்தத்தால் தழுவினார். சூரிய தேவனின் சக்தியால், சுவர்ச்சலா தேவிக்கு இரு புத்திரர்கள் பிறந்தனர். அவர்கள் அஸ்வினி தேவர்கள் என்று திருநாமம் பெற்றனர். இவர்கள் தேவலோக வைத்தியர்களாக விளங்கினர். ரைவதன் என்று மற்றொரு மகனும் பிறந்தான். சூரிய தேவன், சுவர்ச்சலா தேவியை அழைத்துக்கொண்டு தமது இருப்பிடம் திரும்பினார். சாயா தேவியையும் ஏற்றுக்கொண்டு இரு தேவியர் சமேதராக பத்மாசனத்தில் எழுந்தருளி பாரெல்லாம் பவனி வந்தார்.
 

சனைச்சரனின் கொடும் பார்வை

சிருதகர்மாவான சனீஸ்வரர், இளமை முதற்கொண்டே மற்ற சகோதர, சகோதரிகள் எவருக்கும் இல்லாத ஓர் தனித்தன்மை பெற்று விளங்கினார். சனீஸ்வர பகவானின் திருவிழிகளிலே ஓர் அபார சக்தி! அவரது பார்வையிலே தனி தீட்சண்யம்! அவரது பார்வை பட்ட மாத்திரத்திலேயே பல விபரீதங்கள் ஏற்படும்! எவர் மீது அவன் பார்வை பட்டாலும் உடனே ஆபத்து விளையும். சாயா தேவி, குழந்தை சனீஸ்வரனின் நிலை கண்டு கண் கலங்கினாள். தனது புத்திரனால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏதும் வர வேண்டாம் என்பதற்காக, சனீஸ்வரரை எங்கும் அனுப்பாமல், தனது கண்காணிப்பில் வைத்துக்கொண்டிருந்தாள். சனீஸ்வரரும், சாயா தேவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

சனீஸ்வரன், தாயின் அனுமதியுடன் காசி சென்று லிங்கம் ஒன்றை பிரதிஸ்டை செய்து கடுமையான தவம் இருந்தார். சனியின் தவத்தை மெச்சிய பரமன் காட்சி கொடுத்து, 'சிருதகர்மா, உன் தவத்தால் என்னை மிகவும் மகிழ்வித்தாய். இன்று முதல் தேவர்களிலேயே ஈஸ்வரப் பட்டம் உனக்கு மட்டும்தான். மகேஸ்வரனுக்குப் பிறகு ஈஸ்வர பட்டம் சனீஸ்வரனான உனக்குதான். நவக்கிரகங்களில் ஸ்திர நிலையும் உனக்குதான். நீ பூஜித்த லிங்கம் சனீஸ்வரலிங்கம் என்று அழைக்கப்படும். உனக்கேற்ற நாளான சனிக்கிழமையும் ஸ்திரவாரம் என்று அழைக்கப்படும்' என்றார்.

சிருதகர்மா, அன்று முதல் சனீஸ்வரனாகவும் சனி பகவானாகவும் இருந்து நம்மை எல்லாம் ஆட்டுவிக்கிறார். சனி பகவான் அழிவைத் தருபவர் அல்ல. அழிவு வரும் வேளையைச் சுட்டிக்காட்டுபவர். பிறந்தவனுக்கு இறப்பு உண்டு. இறப்பு இருப்பவனே பிறக்க இயலும். அதுதான் நியதி என்கிறார். ஆன்மா குடியிருக்கத் தகுதியில்லாத நிலையில், உடலுக்கு மறைவு வருகிறது. அந்த வேளையை வரையறுக்கும் பணியை சனி பகவான் சுட்டிக்காட்டுகிறார். நம்மை வளர்த்து, நமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து, இன்ப - துன்பங்களை கர்மவினைப்படி செயல்படுத்தி, வாழவைப்பவர் சனி பகவான். உடல் வாழத் தகுதியற்ற நிலையில், மறுபிறவி தருவார். பாவமும் புண்ணியமும் அற்றுப் போயிருப்பின், மறைவை இறுதியாக்கி மோட்சம் தருவார். 

இந்த சனிப் பெயர்ச்சி நாளில், கர்மகாரகனான சனி பகவானின் அருளைப் பெற, அனைவருமே அவரை வணங்குவது நல்லது. சனி பகவானின் பிறப்பையும், அவரது பெருமையையும் படிப்பவர்களுக்கு அவரது பரிபூரண அருள் கிடைக்கும்.

ஏழரை சனி, அர்தாஷ்டம சனி, அஷ்டம சனி, கண்ட சனி ஆரம்பிக்கப்போவதற்கான அறிகுறிகள்

1. முதலில் மறதி. எல்லா விஷயங்களிலும் மறதி. அதனால் பொருள் இழப்பு. உதாரணம், கிரெடிட் கார்ட் பில், குழந்தைகள் பள்ளிக் கட்டணம் போன்றவற்றை தவறவிடுவது. அதற்கு அபராதத் தொகை கட்டுவது, இன்ஸூரன்ஸ் பாலிஸி காலாவதி ஆகும் வரை கவனிக்காமல் இருப்பது.

2. உணவுக் கட்டுபாடு, மனக் கட்டுபாடு இன்றி, மனம்போன போக்கில் உண்பது மற்றும் மது, மாது தொடர்பு, லாகிரி வஸ்துக்கள் உபயோகிப்பது.

3. மருத்துவர் சொல்வதை எதையும் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது. தேவையான மருந்துகளை மறதியாலோ அல்லது கவனக்குறைவாலோ எடுத்துக்கொள்ளத் தவறுவது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கண்களில் பாதிப்பு போன்ற அறிகுறிகள் தென்படும்.

4. வாகனங்களில் செல்லும்போது பழுது ஏற்பட்டு பயணத்தில் அவஸ்தை; தேவையான ஆவணங்களை கவனக்குறைவு / மறதியினால் உடன் வைத்துக்கொள்ளாமல் இருப்பது.

5. நடக்கும்போதே அடிக்கடி காலில் இடித்துக்கொள்வது.

6. திடீரென குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசை ஏற்பட்டு, அதற்கான முயற்சியில் இறங்குவது, இலவசத்துக்கு ஆசைப்பட்டு அதை அடைய படாத பாடு படுவது; அடுத்தவர் பொருளுக்கு ஆளாய்ப் பறப்பது.

7. நாம் அணியும் ஆடை எதிர்பாராதவிதமாகக் கிழிவது அல்லது எலி கடிப்பது.

8. நம்முடைய தூக்கம் குறைவது மற்றும் முரண்பாடான தூக்கம். உதாரணம், பகலில் தூங்கி இரவில் தூங்காமல் இருப்பது.

9. நம்மிடம் வேலை செய்யும் வேலையாட்களிடம் தகராறு.

10. நாம் விரும்பாவிட்டாலும் கடன் தேடித் தேடி வருவது. வட்டிக்கு மேல் வட்டிக்கு கடன் வாங்குவது. கடன் வாங்கி ஷேர் மார்க்கெட்டில் பணத்தைப் போட்டுவிட்டு, பெரும் நஷ்டம் ஏற்பட்டு திண்டாடுவது.

11. கடமைகளை மறப்பது. முக்கியமாக நித்திய கடமைகள், தாய் தந்தை, குழந்தைகள், கணவன்/மனைவி, பித்ருக்கள், வேலை, சமுதாயக் கடமைகளை மறதியாலோ, கவனக்குறைவாலோ மறப்பது.

12. நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் பலன் கிடைக்காமல் இருப்பது.

சனி பகவானுக்கான பரிகாரங்கள்

சனிப்பெயர்ச்சிக்காக இன்று ஒருநாள் ஏதோ ஒரு கோயிலுக்கு முண்டியடித்துக்கொண்டு சென்று வந்துவிட்டாலோ அல்லது ஏதாவது ஒரு ஹோமத்தில் கலந்துகொண்டுவிட்டாலோ சனி தோஷம் நீங்கிவிடுமா? இரண்டரை வருடங்கள் ஒரு ராசியில் இருந்துகொண்டு, அனைவருக்கும் அவரவர் கர்ம வினைப்படி பல்வேறு நன்மை தீமைகளை வழங்க இருக்கிறார் சனைச்சரன் எனும் சனீஸ்வர பகவான்.
 

கர்ம காரகரான சனீஸ்வர பகவான் நேர்மையானவர். கடமை தவறாதவர். கட்டுபாடு மிக்கவர். எனவே, எவரெல்லாம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தவறாமல் நடக்கிறார்களோ, அவர்களை சனீஸ்வர பகவான் ஒன்றுமே செய்வதில்லை. மாறாக நன்மைகளையே அதிகமாக வாரி வாரி வழங்குவார்.

சனிப் பெயர்ச்சிக்கு உண்மையாக பரிகாரம் ஒருவர் செய்ய வேண்டும் என நினைத்தால், முதலில் நாம் செய்ய வேண்டிய பல்வேறு கடமைகளைக் குறித்துவைத்துக்கொண்டு அவற்றை சரியான நேரத்தில் செய்யப் பழக வேண்டும். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்னும் நான்குவித கடமைகளைச் சரிவர செய்ய ஆரம்பித்துவிட்டாலே சனீஸ்வரனை கண்டு பயம் கொள்ளத் தேவையில்லை.

கண்ணியம் தவறாமல், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் சுய ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும். 

உணவுக் கட்டுப்பாடு, உடல் கட்டுப்பாடு, மனக் கட்டுப்பாடு, சுய ஒழுக்கம், இந்திரியங்களின் மீதான கட்டுப்பாடு, சமுதாயக் கட்டுப்பாடு ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடித்தால், சனிதோஷம் என்பது ஒன்றுமே செய்யாது.

சனி தோஷத்தால் அவதிப்படுபவர்களின் துன்பங்களை எல்லாம் ஆய்வு செய்து பார்த்தால், அதன் அடிப்படை ஏதாவது ஒருவிதத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இழந்திருப்பது புலனாகும்.

எனவே, சனீஸ்வர பகவானைக் கண்டு அச்சம் கொள்ளாமல், நமது கடமைகளை கண்ணியத்தோடும், கட்டுப்பாட்டோடும் செய்து வருவதோடு, பெரியோர், குலதெய்வம், பித்ருக்கள் ஆகியவர்களை வணங்கி வருவதோடு, நாம் குடியிருக்கும் இடத்துக்கு அருகில் இருக்கும் பாரம்பரியம்மிக்க ஆலயத்துக்கு அவ்வப்போது சென்று வந்தாலே, சனிதோஷம் நீங்கி சந்தோஷமாக வாழ வழி வகுக்கும் என்பது நிதர்சனம்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
செல்பேசி - 9498098786, 9841595510
மின்னஞ்சல் - astrosundararajan@gmail.com
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2014/12/16/23/w600X390/shri_sanibhagawan.jpg http://www.dinamani.com/religion/religion-articles/2017/dec/19/sani-peyarchi-december-2017-2829211.html
2690837 ஆன்மிகம் கட்டுரைகள் அட்சய திருதியையும் ஸ்ரீ அன்னபூரணியும் மாலதி சந்திரசேகரன் Friday, April 28, 2017 10:36 AM +0530  

'அட்சயம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்கு 'அள்ள அள்ளக் குறையாது’ என்பது தான் பொருள். 

சித்திரை மாதம், அமாவாசையைத் தொடர்ந்து வரும் திரிதியை அன்று அட்சய த்ரிதியை அனுசரிக்கப்படுகிறது. 

இந்தப் புண்ணிய தினமான, திரிதியை நாள்,  நமக்குத் தெரிந்ததும், தெரியாததுமான அநேக விஷயங்களை நாம் அறிந்து கொள்ள உதவும் உன்னத நாளாகத் திகழ்கிறது. 

இன்றைய தினத்தில்தான்... 

ஸ்ரீ வேதவியாசர், மகாபாரதம் என்னும் அற்புதமான காவியத்தை எழுதத்தொடங்கினார். 

ஸ்ரீ மகாவிஷ்ணுவின், ஆறாவது அவதாரமான, ஸ்ரீ பரசுராமரின் அவதாரம் நிகழ்ந்தது. 

குபேரன், தான் இழந்த செல்வங்களைத் திரும்பப் பெற்றார். 

ஒரு பிடி அவலுடன், குசேலர், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்த நாள். 

ஸ்ரீ கங்காமாதா, பூமியைத் தொட்ட நாள். 

ஸ்ரீ ஆதிசங்கரர், கனகதாரா ஸ்தோத்திரத்தை நமக்கு அருளிய நாள். 

இப்படி பல அம்சங்கள் இந்த நன்னாளில் அமைந்திருந்தாலும், முக்கியமான ஒரு தேவ நிகழ்வை, நாம் மறந்துவிடக்கூடாது. 

அதுதான்,  நம்முடைய அத்யாவசியத் தேவையான உணவை அதாவது அன்னத்தை, நமக்குக் குறைவில்லாமல் அன்றாடம் வழங்கி அருளும் ஸ்ரீ அன்னபூரணி மாதா அவதாரம் செய்த நாள்தான் அது. 

காரியம் என்று ஒன்று இருந்தால், அதற்குக் காரணம் இல்லாமல் இருக்காது அல்லவா? 

ஒருமுறை, கைலாயத்தில், ஸ்ரீ சிவபெருமானும், ஸ்ரீ பார்வதியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஆடும்பொழுது, பந்தயத்தில், தன்னுடைய சூலாயுதம் முதற்கொண்டு அனைத்தையும், உமாதேவியிடம், மகேசன் இழந்தார். 

செய்வதறியாது, மகேசன், ஸ்ரீ விஷ்ணுவை, அணுகி, உபாயம் கேட்டார். 

மீண்டும் ஒரு முறை சொக்கட்டான் ஆடினால், இழந்ததைப் பெறலாம் என்று பரமாத்மா கூறினார். 

அதன்படி, கங்காதரன், அன்னையுடன், மீண்டும்,  விளையாடத் தொடங்கினார். 

ஸ்ரீ கேசவன் கூறியது போல், கேட்ட விருத்தம் விளையாட்டில் விழ, ஸ்ரீ சிவபெருமானும் இழந்ததை மீட்டுக் கொண்டார். 

ஸ்ரீ பார்வதி தேவி, கணவர் தப்பாட்டம் ஆடி, தன்னை ஏமாற்றி, வெற்றி கண்டார் என்று கோபப்பட்டார். 

அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

அந்த சமயத்தில், அங்கு, ஸ்ரீ விஷ்ணு வருகை புரிந்தார். 

நடந்தது எல்லாமே மாயைதான் என்பதைக்கூறி இருவரையும் சமாதானப்படுத்தினார். 

ஆனால், எல்லாமே மாயை என்பதில் அன்னைக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது.

'பூலோகத்தில், ஒரு ஜீவனின் வாழ்வாதாரத்திற்கு ஆகாரம் என்பது அத்யாவசியமாகிறது. அது கூட மாயை ஆகுமா?’ என்று தன் பதியிடம் தன் சந்தேகத்தைக் கேட்டார், ஸ்ரீ பார்வதி. 

பதியின் 'இதிலென்ன சந்தேகம்?’ என்னும் பதிலைக் கேட்டதும், 'நான் மாயை இல்லை என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்’ என்று கூறி, சட்டென்று மறைந்து போனார், உமை. 

அவ்வளவுதான். சக்தியின் தயை இல்லாமல், உணவு பொருட்களின் விளைச்சல், உற்பத்தி நின்றது. 

ஆகாரம் இன்றி ஜீவராசிகள் அவதிப்படுவதை,  அன்னை, கண்ணுற்றார்.  

லோகமாதாவிற்கு, தன் குழந்தைகள் பசியால்வாடுவதை காணப்பொறுக்கவில்லை. 

காசி என்னும் மகா புண்ணிய பூமியில், அட்சய திருதியை அன்று, ஸ்ரீ அன்னபூரணியாக, அவதாரம் செய்தார். 

அங்கு, தானே தன் கைப்பட அன்னம் தயார் செய்து, எல்லாருக்கும் வயிறு நிறைய ஆகாரம் அளித்தார். 

ஸ்ரீ சிவபெருமானும், கப்பரையைக் கையில் ஏந்தி, ஸ்ரீ பார்வதியிடம் பிக்ஷை பெற்றார். 

பகவானின் லீலை எல்லாமே ஒரு நன்மைக்காகத்தான் என்பதை நாம் உணரவே, நாடகம் அரங்கேற்றப்படுகிறது. எல்லாமே தேவ கைங்கர்யம். 

அட்சய திருதியை அன்று நகைக் கடைக்குப் படையெடுப்பதைத் தவிர்த்து,  ஸ்ரீ லக்ஷ்மி குடியிருக்கும், மஞ்சள், பச்சரிசி, கல் உப்பு ஆகியவைகளை வாங்க வேண்டும். 

அன்றைய தினம், தன்னால் இயன்ற தானத்தைச் செய்ய வேண்டும். 

அன்றைய தினம் சொல்ல வேண்டிய ஸ்லோகம். 

சங்க சக்ர கதாபாணே 
த்வாரகா நிலையாச்யுத 
கோவிந்த புண்டரீகாட்ஷ 
ரக்ஷமாம் சரணாகதம். 

எந்த இக்கட்டான நிலையிருந்தாலும், இந்த ஸ்லோகத்தைக் கூறினால், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அனுக்கிரகம் கிடைக்கும். 

அட்சய திருதியை அன்று,  அன்ன  தானம், வஸ்திர தானம் செய்து  அட்சயமாக வளத்தைப் பெருக்கிக் கொள்வோம். 

- மாலதி சந்திரசேகரன்

]]>
Atchaya Tritiya 2017, அட்சய திருதியை, அன்னபூரணி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/25/w600X390/Akshaya-Tritiya.jpg http://www.dinamani.com/religion/religion-articles/2017/apr/25/atchaya-tritiya-2017-2690837.html
2721 ஆன்மிகம் கட்டுரைகள் ஆறுமுகப் பெருமானுக்கு அணி சேர்க்கும் முக்கியத் திருவிழா dn Thursday, July 28, 2016 12:11 PM +0530 தமிழ் மாதங்களில் "ஆடி'க்கும், "மார்கழி'க்கும் தனிப் பெருமை உண்டு. இவ்விரு மாதங்களையும் இறை வழிபாட்டிற்காகவே நம் முன்னோர்கள் அமைத்தனர். இறைவனின் திருவிழா வைபவங்களுக்கென்றே இரண்டு மாதங்களும் என்பதால், இந்த மாதங்களில் திருமண வைபவத்தைத் தமிழ் மக்கள் நடத்துவதில்லை. அதிலும் ஆடி மாதத்தில் அம்பிகைக்கும், அவளுடைய குமரன் முருகனுக்கும் கோயில்களில் கோலாகலமாகத் திருவிழா நடக்கும்.

அந்த வகையில், ஆடிக்கிருத்திகை அழகென்ற சொல்லுக்கு முருகா என்று போற்றப்பட்ட ஆறுமுகப் பெருமானுக்கு அணி சேர்க்கும் முக்கியத் திருவிழா.

சூரபத்மாதியர் செய்த கொடுமையால் தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தனர். அவர்களின் இன்னல்களைக் களையத் திருவுளம் கொண்டார் ஈசன். அவருடைய நெற்றிக் கண்ணிலிருந்து வெளியான தீப்பொறியிலிருந்து ஆறு குழந்தைகளாக அவதரித்தார் ஆறுமுகப் பெருமான். அந்தக் குழந்தைகளுக்குக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்ததால் முருகனுக்குக் கார்த்திகேயன் என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. அதன்பின் ஆறுமுகக் கடவுள் சூரனை வதம் செய்து தேவர்களைக் காத்த வரலாற்றை புராணங்கள் எடுத்தியம்புகின்றன.

"கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோருக்குத் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இனிமையான வாழ்வு அமையும்' என்று சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு அருள்பாலித்தார். எனவே ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு மிகவும் உகந்த நாளாயிற்று. மேலும் தமிழ் மாதங்களில் "கிருத்திகை' என்ற பெயரில் ஒரு மாதமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முருகப் பெருமான் அக்னியிலிருந்து தோன்றியவன் அல்லவா? அதை உணர்த்தும் வகையில் இம்மாதம் முழுவதும் தீப ஒளியால் இறைவனை வழிபாடு செய்தால் வாழ்வில் ஒளி பிறக்கும்.

வேத காலத்தில் கிருத்திகை நட்சத்திரமே முதலாவதாக இருந்தது. இது அம்பா, துலா, நிதத்னி, அப்ரயந்தீ, மேகயந்தீ, வர்ஷயந்தீ, சுபணிகா ஆகிய ஏழு நட்சத்திரங்களின் கூட்டமாகும். வேத நெறியில் ஒழுகும் அந்தணர்கள் கார்ஹபத்யம், ஆஹவனீயம், தட்சிணாக்னி ஆகிய மூன்று அக்னி கொண்டு யாக யக்ஞாதிகளை, வேத வேள்விகளைச் செய்வர். "மூன்று வகை குறித்த முத்தீச் செல்வத்து இரு பிறப்பாளர்'' என்று இதனை நக்கீரர், திருமுருகாற்றுப்படையில் போற்றுவார்.

இந்த யாகங்கள் ஆதானம் என்ற கர்மாவினால் செய்யப்படுகிறது. கிருத்திகை நட்சத்திரம் அக்னியின் நட்சத்திரம் என்றும் அந்த நட்சத்திரத்தில் அக்னியை ஆதானம் செய்ய வேண்டும் என்றும் வேதம் கூறுகிறது. ஏனெனில் நட்சத்திரங்களின் முகம் கார்த்திகை. மேலும் மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களின் கூட்டமாகும். ஆனால் கிருத்திகை நட்சத்திரம் மட்டும் ஏழு நட்சத்திரங்களின் கூட்டமாகும். எனவே, அதில் ஆதானம் செய்பவரும் அவரது வம்சத்தாரும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள் என்று வேதம் கூறுகிறது. எனவே அவ்வளவு சிறப்புடையது கார்த்திகை நட்சத்திரம்.

"ஸ்ரீசுப்ரமண்ய கடவுள் க்ஷேத்திரக் கோவை பிள்ளைத் தமிழ்' என்னும் பிரபந்தத்தில் காஞ்சிபுரம் சிதம்பர முனிவர் "கார்த்திகை மலை'' என்னும் தலத்தை ஒரு பாடலில் போற்றுகிறார். இது முருகன் தவமிருந்து சிவபெருமானை அர்ச்சனை செய்து வழிபட்ட மலையாகும். மஹாராஷ்டிர மாநிலத்தில் புனே அருகில் உள்ள பார்வதி மலையில் கார்த்திகேயன் கோயில் உள்ளது. இதனை கார்த்திகை மலை என்று அழைக்கிறார்கள்.

அனைத்து சிவாலயங்களிலும், முருகன் ஆலயங்களிலும் ஆடிக் கிருத்திகையன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வருவதும், பல விதமான காவடிகள் சுமந்து வந்து தண்டபாணியை வழிபடுவதும் அரங்கேறுகிறது.

மனிதனைப் பரம்பொருளுடன் ஐக்கியப்படுத்துவதற்கு ஆன்றோர் கண்ட சிறந்த நெறிகளே விரதங்கள் எனப்படும். இறைவனிடம் பக்தி பூண்டு தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள விரதங்களைப்போல ஒருவருக்கு வேறு எதுவும் துணை புரிவதில்லை. "வரிக்கப்படுவது விரதம்' "உடலளவு விரதம்' "காப்பது விரதம்' என்ற ஆன்றோர் வாக்குகளை நாம் சிந்திக்க வேண்டும். புலன்களை வெல்லுதலும் ஆன்மாவின் வெற்றிக்கு உற்ற துணையாகும். "புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்'' என்பது முதுமொழியல்லவா?

விநாயகப் பெருமான் கூறியபடி கிருத்திகை விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் அனுஷ்டித்த நாரதர், முருகன் அருளால் தேவரிஷியாக உயர்ந்தார். இவ்விரதத்தை மேற்கொண்ட மனு என்பவன் மன்னன் ஆனான். எனவே கிருத்திகை விரதம் மிக மிக உயர்ந்தது. ஆகவே ஆடிக் கிருத்திகையில் நாமும் விரதமிருந்து ஆறுமுகனின் அருள் பெறுவோம்.

]]>
ஆடிக்கிருத்திகை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/28/w600X390/murugan.jpg http://www.dinamani.com/religion/religion-articles/2016/jul/28/ஆறுமுகப்-பெருமானுக்கு-அணி-சேர்க்கும்-முக்கியத்-திருவிழா-2721.html
2690 ஆன்மிகம் கட்டுரைகள் அம்மன் கோயில்களில் ஆடித்திருவிழா dn Wednesday, July 27, 2016 02:35 PM +0530 செங்கல்பட்டு பகுதியில் உள்ள கோயில்களில் ஆடித்திருவிழா, கூழ்வார்த்தல் அண்மையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு பழைய பேருந்துநிலையம் அருகில் உள்ள கடும்பாடி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 18-ஆம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியும், 22-ஆம் தேதி கரக ஊர்வலமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தீமிதி விழாவும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.

24 ஆம் தேதி கடும்பாடி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கூழ்வார்த்தல் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கே.ஜெயவேல், ஜே.பாஸ்கர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

இதேபோன்று, செங்கல்பட்டு காட்டுநாயக்கன் வீதியில் உள்ள முத்துமாரியம்மனுக்கு 56-ஆம் ஆண்டு உற்சவத்தையொட்டி, கடந்த 22-ஆம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியும், மறுநாள் பூங்கரகம் வீதிவலமும், 24 ஆம் தேதி கூழ்வார்த்தில் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

இரவு உற்சவ அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் டி.பாலகுமார், ஆர்.வீரராகவன், காட்டுநாயக்கன் கிளை சங்கத் தலைவர் கே.எஸ்.முருகன், செயலாளர் இ.செல்வம், தர்மகர்த்தா கே.வெங்கடேசன், துணைத் தலைவர் ஓ.குமார் உள்பட கோயில் நிர்வாக குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

செங்கல்பட்டு முருகேசனார் தெருவில் உள்ள கங்கையம்மன் கோயில் ஆடி உற்சவ விழாவில் காப்புகட்டுதல், கரக ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

24 ஆம் தேதி கூழ்வார்த்தலைத் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆரத்தி நடைபெற்றது. இரவில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் ரத வீதியுலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

]]>
ஆடித்திருவிழா, கூழ்வார்த்தல் http://www.dinamani.com/religion/religion-articles/2016/jul/27/அம்மன்-கோயில்களில்-ஆடித்திருவிழா-2690.html