Dinamani - திரை விமரிசனம் - http://www.dinamani.com/cinema/movie-reviews/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2655883 சினிமா திரை விமரிசனம் விஜய் ஆண்டனியின் 'எமன்' - சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, February 25, 2017 10:44 AM +0530  

துரோகத்தால் வீழ்த்தப்படும் தந்தையின் எம்.எல்.ஏ. கனவை அதே துரோகத்தின் வழியிலேயே மகன் சென்று அடைவது 'எமன்' திரைப்படத்தின் ஒருவரிக்கதை. சாதாரண பின்னணியில் இருந்து கிளம்பும் ஒருவன் எவ்வாறு நிழல் உலகின் சட்ட விரோதங்களையும் அரசியல் உலகின் சாணக்கியத்தனங்களையும் கடந்து சட்டமன்ற உறுப்பினராக மேலெழுகிறான் என்கிற பயணத்தைச் சுவாரசியமாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ஜீவா சங்கர். சற்று இழுவையான திரைக்கதையாக அமைந்திருந்தாலும் அரசியல் உலகைச் சுற்றி நிகழும் சூதுகளையும் துரோகங்களையும் அடிப்படையாக வைத்து கட்டப்பட்டிருக்கும் காட்சிகளின் தன்மைதான் படத்தைக் காப்பாற்றுகின்றன. 

தமிழக அரசியல் சூழலில் பரபரப்புகளும் திருப்பங்களும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் பொருத்தமான நேரத்தில் வந்திருக்கும் இந்த அரசியல் திரைப்படம் இன்னமும் துணிச்சலான காட்சிகளுடனும் சுவாரசியத்துடனும் இறங்கி அடித்து ஆடியிருந்தால் முக்கியமான படமாக இருந்திருக்கும்.

***

திருநெல்வேலியின் பின்னணியில் படம் தொடங்குகிறது. நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் விஜய் ஆண்டனியின் தந்தைக்கு எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பு உருவாகிறது. முன்னாள் எம்.எல்.ஏ.-வின் மகனால் இந்தக் குறுக்கீட்டைச் சகிக்க முடியவில்லை. எனவே விஜய் ஆண்டனியின் திருமணத்தைச் சாதிப்பிரச்னையாக்கி அந்தக் குழப்பத்தில் அவரைச் சாகடிக்கிறார். குடும்பப் பிரச்னையில் நிகழ்ந்த பரஸ்பர கொலை என்பது போன்ற நாடகத்தை உருவாக்குகிறார்.  

தன் தந்தையின் மரணத்துக்குப் பழிவாங்கும் விதத்தில் வில்லன் உபயோகப்படுத்திய அதே பாணியை தானும் உபயோகப்படுத்தி அந்தப் பாதையின் வழியாக வில்லனை அடைந்து மகன் பழி வாங்குகிறான். எம்.எல்.ஏ-வாகவும் ஆகிறான். 

***


தனக்கேற்ற திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் விஜய் ஆண்டனியின் புத்திசாலித்தனம் ரசிக்க வைக்கிறது. அவருக்கென்று உருவாகி வரும் சந்தை மதிப்பை தக்கவைத்துக்கொள்ளவும் மெல்ல நகர்ந்து முன்னேறவும் இந்தத் திரைப்படம் நிச்சயம் உதவும். 

வெளியே சாதுவான தோற்றத்தில்  தெரிந்தாலும் சமயம் வரும்போது எதிராளியின் மீது பாயும் விஜய் ஆண்டனியின் வழக்கமான பாத்திர அமைப்பு இந்த திரைக்கதைக்கு உதவுகிறது. ஆனால் இதுவே தொடர்ந்து பலனளிக்கும் என்று உத்திரவாதமில்லை. அவரது தோற்றமும் தோரணைகளும் பாத்திரத்துக்கு ஏற்ப பொருத்தமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சண்டைக்காட்சிகளில் நல்ல முன்னேற்றம். நடனக்காட்சிகளில் சொதப்புகிறார். தந்தை - மகன் என்று இரண்டு பாத்திரத்திலும் விஜய் ஆண்டனி. எந்த வித்தியாசமும் இல்லை. நல்ல வேளையாக அப்பா விஜய் ஆண்டனி பாத்திரம் முதல் சில நிமிடங்களிலேயே சாகடிக்கப்பட்டு விடுவதால் நாம் பிழைத்து விடுகிறோம். 

நாயகனாக முன்னேறி வரும் அதே சமயத்தில், ஓர் இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. எந்தப்பாடலும் ரசிக்கும்படியாக இல்லை. திரைக்கதையில் பாடல்களும் அசந்தர்ப்பமான நேரங்களில் வந்து பொறுமையைச் சோதிக்கின்றன. ஆனால் சாமர்த்தியமான பின்னணி இசையின் மூலம் இதைச் சமன் செய்துவிடுகிறார். 

நாயகி மியா ஜார்ஜூக்கு பெரிதாக வாய்ப்பில்லை. படத்திலும் நடிகையாக வரும் இவர் எதிர்கொள்ள நேரும் பாலியல் சீண்டல், சமகால துயரச் சம்பவம் ஒன்றை நினைவுப்படுத்துகிறது. இவருக்கும் விஜய் ஆண்டனிக்கும் உருவாகும் காதல், கண்ணியத்துடன் அமைந்திருக்கிறது. இந்த விஷயத்தில் விஜய் ஆண்டனி, எம்.ஜி.ஆரையே மிஞ்சிவிடுவார் போலிருக்கிறது. படம் ஏறத்தாழ அதன் இறுதிப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்போது 'அடடே.. எந்தவொரு டூயட்டும் இல்லாமலேயே எடுத்திருக்கிறார்களே' என்று வியந்துகொண்டிருக்கும் நேரத்தில் பொறுமையைச் சோதிக்கும் ஒரு பாடல் காட்சி சரியாக வந்து நிற்கிறது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியாகராஜன் தமிழ்த் திரைக்கு வந்திருக்கிறார். ஏறத்தாழ அதே தோற்றத்தில் நீடிக்கும் இளமை ஆச்சரியத்தைத் தருகிறது. தோற்றத்தில் மாற்றமில்லாததைப் போலவே நடிப்பிலும் எந்த மாற்றமும் இல்லை. இயக்கி விடப்பட்ட ரோபோ போலவே பேசுகிறார். 'என்னமாக நடித்திருக்கிறார்' என்று நிச்சயம் சிலர் பாராட்டுவார்கள். 

அமைச்சர் தங்கபாண்டியனாக நடித்திருப்பவரின் பங்களிப்பு சில இடங்களில் மிகையாக இருந்தாலும் பல காட்சிகளில் கவனிக்கத்தக்க அளவில் சிறப்பாக அமைந்திருந்தது. திருநெல்வேலி வட்டார வழக்கை இயன்ற வரையில் காப்பாற்றியிருக்கிறார். சில காட்சிகளில் வந்தாலும் சார்லியின் நடிப்பு இயல்பு. இது தவிர சங்கிலி முருகன், சுவாமிநாதன், மாரிமுத்து  உள்ளிட்ட சிலபல பாத்திரங்கள்.

***

வழக்கமான அரசியல் திரைப்படங்களின் சாயல் இருந்தாலும், இயக்குநர் ஜீவா சங்கர் திரைக்கதையை கையாண்டிருக்கும் வித்தியாசமே இந்தப் படத்தைக் காப்பாற்றுகிறது. தொடக்கக் காட்சியில் வில்லன் பின்பற்றும் அதே சூழ்ச்சியையே நாயகனும் படம் முழுக்கவும் பின்பற்றுகிறான். இறுதிக் காட்சியைத் தவிர அவன் நேரடியாக எவரையும் கொல்வதில்லை. தன்னுடைய எதிரிகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தை மட்டுமே உருவாக்குகிறான். இந்த வித்தியாசமான டிரீட்மெண்ட் கவர்கிறது. 

அரசியல் திரைப்படமென்பதால் படம் முழுவதும் எவரையாவது எவராவது துரோகித்துக்கொண்டே இருக்கிறார்கள். முடிவே இல்லாத இந்தத் துரோகத்தின் பாதை ஆயாசத்தை தருகிறது. படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் சில சம்பவங்கள், தமிழக அரசியலை நினைவூட்டுகின்றன, அல்லது அரங்கிலுள்ள பார்வையாளர்கள் அவ்வாறுதான் புரிந்துகொள்ள விரும்புகிறார்கள். சில இடங்களில் வசனங்கள் அபாரமாக அமைந்திருக்கின்றன. 'அரசியலில் எதிரி நேரெதிராக இருக்கமாட்டான். நம் பக்கத்திலேயே விசுவாசமானவாக தோற்றமளிப்பான்' என்பது போன்ற சாணக்கியத்தனமான வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. 

ஒரு திட்டமிட்ட அரசியல் கொலை நடக்கிறது. ஆனால் ஊடகங்களில் அது விபத்தாக பதிவாகிறது. விஜய் ஆண்டனி, அதிர்ச்சியுடன் இது குறித்து கேட்கும் போது 'சில உண்மைகள் பொய்யாக வெளிப்படும்போது நாமும் அதை பொய்யாகவே நம்பிவிடவேண்டும். அப்போதுதான் மனச்சாட்சி உறுத்தல் இல்லாமல் இருக்கமுடியும்' என்று  தியாகராஜன் பாத்திரம் பதிலளிக்கிறது. நம் அரசியல்வாதிகள் பொதுவெளியில் எவ்வாறு சிரித்த முகத்துடன் பொது வெளியில் உலா வருகிறார்கள் என்பது நினைவுக்கு வருகிறது. 

வெளிப்பார்வைக்கு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் எலியும் பூனையுமாகக் காட்சியளித்தாலும் பலவிதமான உள்பேரங்களில் எவ்வாறு ரகசியக் கூட்டணியாக இணைந்திருக்கிறார்கள் என்பதை சார்லி விளக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது. உண்மையில் இந்த விஷயம்தான் இந்தப் படத்தின் மையம் என்றுகூட சொல்லி விடலாம். 

***

திரைக்கதை இந்தத் திரைப்படத்தின் பலம் என்றால் காட்சிகள் உருவாக்கப்பட்ட விதம் பலவீனமாக இருக்கின்றன. பெரிதாக எந்தவொரு புதுமையும் இல்லை. போலவே இவற்றில் நம்பகத்தன்மையும் இல்லை. எவ்விதப் பின்புலமும் இல்லாமல் நாயகன் எவ்வாறு தனியாளாக தன் மீதுள்ள சிக்கல்களைச் சமாளிக்கிறான் என்கிற கேள்வி எழுந்து கொண்டேயிருக்கிறது. தியாகராஜனின் பாத்திர வடிவமைப்பு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பல சம்பவங்களின் காரணகர்த்தாவாக, பலமுள்ள மூளைக்காரராக இருப்பவர் எம்.எல்.ஏ. வாய்ப்புக்காக விஜய் ஆண்டனியிடம் தோற்பது நம்பும்படியாக இல்லை. நாயகனுக்கு ஏன் எமன் என்கிற பட்டப்பெயர் என்பதற்கும் படத்தின் தலைப்புடன் எவ்வாறு அது பொருந்துகிறது என்பதற்கும் போதுமான அளவு அழுத்தம் தரும் காட்சிகள் அமையவில்லை. 

இறுதிக்காட்சியில் நாயகனுக்கு ஏற்படும் ஒரு சிறிய திடுக்கிடல் ரசிக்க வைக்கிறது. அடுத்த பாகம் தொடர்வதற்கான சமிக்ஞையை தருகிறது.

]]>
விமரிசனம், விஜய் ஆண்டனி, எமன் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/25/w600X390/yaman11111xx.jpg http://www.dinamani.com/cinema/movie-reviews/2017/feb/25/விஜய்-ஆண்டனியின்-எமன்---சினிமா-விமரிசனம்-2655883.html
2643129 சினிமா திரை விமரிசனம் ஜெயம் ரவி - அரவிந்த் சாமி நடித்த 'போகன்'  - சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Friday, February 3, 2017 02:46 PM +0530  

இந்த விமரிசனத்தின் தலைப்பு, அரவிந்த் சாமியின் 'போகன்' என்று அமைந்திருந்தாலும் பொருத்தமே. நாயகர்களின் பாத்திரப் பெயர்களை திரைப்படங்களுக்குத் தலைப்பாகச் சூட்டுவது பொதுவான வழக்கம். எதிர்நாயகனின் பெயரைச் சூட்டுவதாக இருந்தால் 'ஹீரோவே' அந்தப் பாத்திரத்தை ஏற்றிருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. 

அப்படியல்லாமல் ஓர் எதிர்நாயகனின் பாத்திரப் பெயரைப் படத்தின் தலைப்பாக வைத்திருப்பதில் வித்தியாசப்பட்டு நிற்கிறது 'போகன்'. படமும் அதைப் போலவே வித்தியாசமானதா என்றால் சற்று தயக்கத்துடன் தலையை ஆட்டி வைக்கலாம்.

'ஆள் மாறாட்டம்' என்கிற விஷயத்தை வைத்துக்கொண்டு பூனை - எலி வேட்டையை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக ஒரே மாதிரியான தோற்றத்தில் உள்ள இரட்டையர்களைக் கொண்டு பல சுவாரசியமான திரைக்கதைகள் உள்ளன. எஸ்.ஜே.சூர்யாவின் 'வாலி' ஒரு நல்ல உதாரணம்.

போகனில் என்ன வித்தியாசம்? 

ஆய கலைகள் அறுபத்து நான்கில் ஐம்பத்தி இரண்டாவது கலையாக சொல்லப்படுவது 'பரகாய பிரவேசம்'. சித்தர்களின் விளையாட்டுக்களில் ஒன்று. 'கூடு விட்டு கூடுபாயும்' இந்தக் கலையை அடிப்படையாகக் கொண்டு தமிழில் நிறைய தொன்மக்கதைகள் உள்ளன. 1997-ல் வெளிவந்த Face/off என்னும் திரைக்கதையின் மீது இந்த தொன்மத்தின் வர்ணத்தை அடித்து மறைக்க முயன்ற  இயக்குநரின் 'சித்து விளையாட்டே' 'போகன்'.


**

ஆதித்யா (அரவிந்த் சாமி)  ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர். ராஜாக்களின் சொகுசுகளைச் சுதந்தர அரசு பறித்துக்கொள்வதால் இவரின் தந்தை மீதமுள்ள சொத்துக்களை அனுபவித்து தீர்த்து விடுகிறார். போண்டியாகி விடும் மகன், தந்தையைப் போலவே வாழ்க்கையை மது, மாது என கொண்டாட்டமாக கழிக்க நினைக்கிறான். எனவே பல்வேறு திருட்டுக்களில் ஈடுபடுகிறான். பிறகு ஓலைச்சுவடி மூலம் தற்செயலாக கிடைத்த ஓர் அரிய சக்தியைப் பயன்படுத்துகிறான். அதன்படி, நடுத்தர வர்க்கச் சமூகம் சிட்பண்டில் தாமாக வந்து ஏமாறுவதைப் போலவே பணத்தைக் கையாள்பவர்கள் அத்தனை பணத்தையும் தாமாகக்கொண்டு வந்து இவருடைய வண்டியில் கொண்டுவந்து வைத்துவிட்டு பொத்தென்று மல்லாக்காக விழுந்து சரிகிறார்கள்.

இப்படிப் பணத்தைக் கொட்டிவிட்டு விழுபவர்களில் வங்கி மேலாளரும் ஒருவர். பணத்தைத் திருடியதாக அவர் மீது பழி விழுகிறது. அவரின் மகன்தான் உதவி கமிஷனரான விக்ரம் (ஜெயம் ரவி). தன் தந்தையின் மீதான களங்கத்தைத் துடைக்க இந்தக் குற்றங்களைப் பற்றி விசாரணை செய்வதின் மூலம் போகனை அடையாளம் காண்கிறான். சாமர்த்தியமாக அவனை ஏமாற்றி கைது செய்கிறான். . பதிலுக்கு போகன் தன்னிடமுள்ள பிரத்யேகமான சக்தியைப் பயன்படுத்தி விக்ரமைப் பழிவாங்க முயல்கிறான். இருவரும் எதிரெதிர் நிலைகளுக்குச் சென்று விடுகிறார்கள். அதாவது ஜெயம் ரவியின் உடலில் அரவிந்த் சாமியின் ஆளுமை புகுந்து விடுகிறது. அவரின் உடலில் இருக்கும் ஜெயம் ரவி சிறையில் தவிக்கிறான். 

பிறகு நிகழும் சடுகுடு ஆட்டங்களை சற்று விறுவிறுப்பாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் லக்ஷ்மண். ஆனால் ஒரு நிலையில் இது சலிப்பான விளையாட்டாகி 'எப்போதடா முடியும்' என்று நமக்குள் ஒரு கோப ஆவி வந்து புகுந்து கொள்கிற அளவுக்கு நீள்கிறது. 

**

ஜெயம் ரவி கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு போகனின் குணாதிசயங்கள் அவருக்குள் புகுந்து கொள்ளும் வித்தியாசமான தோரணைகளை நன்றாகவே கையாள்கிறார். போலவே போகனை ஏமாற்றி கைது செய்யும் காட்சிகளிலும் அவர் நடிப்பு நன்றாக உள்ளது. 

நாயகனுக்கும் எதிர்நாயகனுக்கும் சமமான வாய்ப்பு உள்ள திரைக்கதை. எனவே ஜெயம் ரவியை விடவும் சில இடங்களில் அரவிந்த் சாமியின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. ஜெயம் ரவியும் அவரது போலீஸ் கூட்டணியும் தனியறையில் அடைத்து வைத்து விசாரிக்கும்போது அவர்களை அநாயசமாக கையாளும் காட்சிகளில் 'அடடே' சாமியாகியிருக்கிறார். போதை மருந்தின் உற்சாகத்தில் தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு காருக்குள் அமர்ந்தபடியே அவர் நடனமாடுவது ரகளையான காட்சி. 

நாயகி ஹன்சிகாவின் நடிப்பு தொடக்க காட்சிகளில் நன்றாகவே அமைந்துள்ளது. ஆனால் நாயகிகளால் எதையும் சுயமாக சிந்திக்க முடியாது என்கிற வழக்கமான தன்மையை இத்திரைப்படமும் கொண்டிருக்கிறது. ஆங்கிலப்படத்தின் நாயகி, தன்கூட குடும்பம் நடத்துவது தன் கணவன் அல்ல என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்கிறாள். ஆனால் இதில் வழக்கமான 'நாயகித்தனத்துக்காகவும்'  கவர்ச்சிக்காகவுமே அந்தப் பாத்திரம் சித்தரிக்கப்படுவது சோர்வூட்டுகிறது. 

**

இமானின் ரகளையான இசையில் பாடல்கள் ஏற்கெனவே வெற்றியடைந்து விட்டன. குறிப்பாக 'செந்தூரா' பாடலில் தாமரையின் கவித்துவமான வரிகள் வசீகரமாக அமைந்துள்ளன. போலவே போகனின் பாத்திர வடிவமைப்பை சரியாக உணர்த்தும் வகையில் 'காதல் என்பது நேர செலவு, காமம் ஒன்றே உண்மைத் துறவு' என்பது போன்ற மதன் கார்க்கியின் வரிகளும் அபாரம். 

நாயகன் x எதிர்நாயகன் என்கிற கருத்தை மையமாகக் கொண்ட 'டமாலு டுமீலு' திரைக்கதைக்கு பொருந்தாதாக இருந்தாலும் கேட்பதற்கு உற்சாகமளிக்கிறது. இமானின் பின்னணி இசையும் பல இடங்களில் அதிரடியாக அமைந்துள்ளது. சில இடங்களில் ஆங்கிலப்படங்களை நினைவூட்டும் திறமையான ஒளிப்பதிவு. படத்தொகுப்பாளர் ஆன்டனி இன்னமும் கூட சிக்கனமாக செயல்பட்டிருக்கலாம் என தோன்ற வைக்குமளவுக்கு சில இழுவையான காட்சிகள்.

**

இந்த திரைப்படத்துக்காக, எதிர்நாயகன் பாத்திரத்துக்கு முதலில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க முயன்று அது இயலாமல் போன செய்தி ஒன்றைக் கவனித்தேன். அது சாத்தியமடைந்திருந்தால் இத்திரைப்படம் நிச்சயமாக வேறு வண்ணத்தில், சுவாரசியத்தில் இன்னமும் மேம்பட்டிருக்கும். அரவிந்த் சாமியின் நடிப்பு நன்றாக இருந்திருந்தாலும்கூட 'தனியொருவன்' கூட்டணியே இதிலும் தொடர்வதால் அது சார்ந்த சலிப்பு தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. 

'கூடுவிட்டு கூடு பாயும் கலையை' தன் திரைக்கதைக்காக யோசித்திருக்கும் இயக்குநரைப் பாராட்டலாம் என்றாலும் அந்தச் சாத்தியத்தை அவர் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே பயன்படுத்தியிருப்பது  ஏமாற்றத்தை தருகிறது. 'இந்தச் சக்தியை வைத்துக்கொண்டு நான் என்னவெல்லாம் செய்திருப்பேன் தெரியுமா?' என்று நாசர் ஒரு காட்சியில் சொல்லும்போது 'ஆமாப்பா' என்று நமக்கே தோன்றுகிறது. இயக்குநருக்குத் தோன்றவில்லை.

இறுதிப்பகுதியில் எப்படிப் பயணிப்பது என்று தெரியாமல் அலைமோதும் திரைக்கதை, இரண்டாம் பாகமும் தொடர்வதற்கான சமிக்ஞையுடன் நிறையும்போது  நம்முடைய கூட்டுக்குள் திகில் பாய்ந்து வெளியேறுகிறது.

வித்தியாசமான பின்னணியைக் கொண்டிருக்கும் திரைக்கதைதான் என்றாலும் அதன் பெரும்பாலான சாத்தியங்களைப் பயன்படுத்தியிருந்தால் போகன் இன்னமும் வசீகரமானவனாக அமைந்திருப்பான்.

]]>
போகன், Bogan http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/3/w600X390/bogan11.jpg http://www.dinamani.com/cinema/movie-reviews/2017/feb/03/ஜெயம்-ரவி---அரவிந்த்-சாமி-நடித்த-போகன்----சினிமா-விமரிசனம்-2643129.html
2639925 சினிமா திரை விமரிசனம் கலையரசன் நடித்த அதே கண்கள்: சினிமா விமரிசனம் ச.ந. கண்ணன் Saturday, January 28, 2017 06:26 PM +0530  

ஒரு தமிழ்ப்படம் பார்த்துமுடித்துவிட்டு அந்தப் படத்தின் கதாநாயகியின் நடிப்பை வியந்தபடி, திரையரங்கைவிட்டு வெளியேறிய அனுபவம் எத்தனைமுறை வாய்க்கும்? அதே கண்கள் படத்தில் ஷிவதா ஒரு நடிப்பு ராட்சசியாக தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மிரட்டும் கண்களும் துடிக்கும் உதடுகளும் அவர் கதாபாத்திரத் தன்மையும் அமோகமான அனுபவத்தைத் தந்துவிடுகின்றன. ஓர் இளம் நாயகிக்கு இப்படிப்பட்ட மகத்தான வாய்ப்பு கிடைப்பதும் அதை அவர் எதிர்பார்ப்புக்கு மேலாகப் பயன்படுத்திச் சாதித்திருப்பதும் அரிதாகவே நடக்கிற விஷயங்கள். இந்த அம்சத்துக்காக இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

பார்வையற்ற இளைஞர்களைக் காதல் வலையில் வீழ்த்தி பணம் அபகரிக்கும் பெண்ணை, ஒரு சாதாரண கான்ஸ்டபிளின் உதவியுடன் வலைவீசிப் பிடிக்கிறான் கதாநாயகன். காரணம் இல்லாமல் இல்லை, அவனும் ஏமாந்தவர்களின் பட்டியலில் உள்ளவன்.  இந்த ஒருவரிக்கதைதான் அதே கண்களாக இரண்டு மணி நேரத்துக்கு விரிந்துள்ளது.

படத்தின் முதல் பாதையில் நிறைய கேள்விகள்: என்னதான் சொந்தக் காலில் நிற்பவராக இருந்தாலும் ஒரு பார்வையற்றவரைக் காதலிக்க இரண்டு அழகான பெண்கள் போட்டி போடுவார்களா, முதலில் நடந்த கொலையை விட்டுவிட்டு ஏன் இரண்டாவது கொலையை நோக்கி கதை நகர்கிறது என இரண்டாம் பாதிவரை இக்கேள்விகள் தொடர்கின்றன. ஆனால் இரண்டாம் பாதியில் கதை வேறொரு வண்ணத்துக்கு மாறிவிடுகிறது. கேள்விகளுக்கான விடைகள் பலவிதங்களில் கிடைக்கின்றன.  

அடுத்தடுத்த படங்களில் திறமையை மேலும் மெருகேற்றுவார் என்கிற நம்பிக்கையை மெட்ராஸில் உண்டாக்கியவர் கலையரசன். இம்முறை கதாநாயகன் வாய்ப்பு. இரு கதாநாயகிகளில் ஒருவர் ஜனனி (டைட்டில் கார்டில் ஐயர் இல்லை). இருவருடைய பங்களிப்பிலும் குறையும் இல்லை. சிறப்பும் இல்லை. கதையில் திடீரென முளைக்கும் கான்ஸ்டபிள் பால சரவணன், நிறைய சிரிப்பு மத்தாப்புகளைக் கொளுத்தி ஒரு த்ரில்லர் படத்துக்கிடையே தேவைப்படுகிற இளைப்பாறலைத் தந்துவிடுகிறார்.  

படத்தின் பலங்களில் ஒன்று - ஒளிப்பதிவு. இதுபோன்ற சிறிய பட்ஜெட் படங்களில் அதன் சிக்கனச் செலவுகள் கதையைப் பாதித்திடாதபடி இருப்பது கட்டாயம். அதை ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகம் கச்சிதமாகச் செய்துமுடித்துள்ளார். ஒரு காதல் மற்றும் த்ரில்லர் படத்துக்குரிய பொருத்தமான ஒளிப்பதிவு. தந்திரா பாடலில் ஜிப்ரானின் முத்திரை. படத்தின் கடைசிப் பகுதியில் இப்பாடலே ஒரு பின்னணி இசையாக இருப்பது ஷிவதாவின் கதாபாத்திரத்தை மேலும் கூர்மையாக்கியுள்ளது. 

முதல் பாதியில் மேலும் பல சுவாரசியமான காட்சிகள் இருந்திருந்தால் முழுமையான திருப்தி கிடைத்திருக்கும். ஜனனி காதலில் உள்ள உணர்பூர்வமான தருணங்களை வெளிப்படுத்த சில நல்ல வாய்ப்புகள் இருந்தும் அவை வெளிப்படவில்லை. படத்தின் பலமே இரண்டாம் பாதியும் ஷிவதாவின் நடிப்பும்தான். கடைசிக்கட்டக் காட்சிகள் பார்வையாளர்களை அப்படியே கட்டிப்போட்டுவிடுகின்றன. இரண்டாம் பாதியில் ஒவ்வொரு கட்டமாகக் கதை நகர்ந்து முடிச்சு அவிழ்வது இயக்குநர் ரோஹின் மற்றும் முகிலின் திரைக்கதையின் வீச்சை வெளிப்படுத்துகிறது. 

தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் அசத்தும் காலகட்டம் இது. புதுமுகங்களால் உருவான இந்தப் படமும் அனைவருக்கும் ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/28/w600X390/adhey_kankal111.jpg http://www.dinamani.com/cinema/movie-reviews/2017/jan/28/கலையரசன்-நடித்த-அதே-கண்கள்-சினிமா-விமரிசனம்-2639925.html
2632230 சினிமா திரை விமரிசனம் விஜய்-யின் பைரவா: சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Friday, January 13, 2017 11:22 AM +0530  

ஒரு வழக்கமான வெகுஜன மசாலா திரைப்படம் இது. விஜய் போன்ற மக்கள் திரளின் பெரும் அபிமானம் பெற்ற நடிகர்கள், தங்களின் பாதுகாப்பான பாதையிலிருந்து விலகவே விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கும் இன்னொரு சலிப்பான படைப்பு. சமகால சமூகப் பிரச்னைகளை ஊறுகாயாகத் தொட்டுக்கொண்டு அதன்மூலம் தன்னை அவதார நாயகனாக முன்நிறுத்திக் கொள்ளும் எம்.ஜி.ஆர் காலத்து ஃபார்முலாவை 'பைரவா'வும் சலிக்க சலிக்கப் பின்பற்றியிருக்கிறது. 'கத்தி' திரைப்படத்தில் விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி பேசுவதாக அமைந்த பாவனை, இத்திரைப்படத்தில், ரவுடிகளாக இருந்தவர்கள் கல்வித் தந்தைகளாக மாறியிருக்கிற ஆபத்தைப் பற்றியதாக மாறியிருக்கிறது. அவ்வளவே. மற்றபடி வெகுஜன திரைப்படத்தின் அதே வழக்கமான விஷயங்கள். 

***

நாயகன் (விஜய்) சென்னையில் கலெக்ஷன் ஏஜெண்ட்டாகப் பணிபுரிபவன். பெரும் நிதியைக் கடனாக வாங்கிவிட்டு பிறகு வங்கி அதிகாரியை மிரட்டி ஏமாற்ற முயலும் ரவுடிக்கும்பலை அடித்து உதைத்து பணத்தை மீட்கும் சாகசங்களோடு படம் தொடங்குகிறது. அதிகாரியின் மகளுடைய திருமணத்துக்குச் செல்லும்போது நாயகியிடம் (கீர்த்தி சுரேஷ்) வழக்கம்போல் முதல் சந்திப்பிலேயே காதலில் விழுகிறான். அவளுக்குப் பின்னால் சில ஆபத்துகள் ஒளிந்திருப்பதை அறிகிறான். என்னவென்று விசாரிக்கிறான். நாயகி படிக்கும் மருத்துவக் கல்லூரி தொடர்பான மோசடிகளை அறிகிறான். கசாப்புக் கடை வைத்திருந்த ரவுடியொருவன் தனது பலத்தின் மூலமும் அரசியல் தொடர்பின் மூலமும் கட்டியிருக்கும் வணிக சாம்ராஜ்யத்தை நாயகன் வீழ்த்தும் காட்சிகளோடு படம் நிறைகிறது. முதல் பாதி சென்னையிலும் பிற்பாதி நெல்லையிலும் நிகழுமாறு காட்சிகள் அமைகின்றன.  

வெகுஜன மனநிலைக்கு இணக்கமான ஒரு திரைப்படத்தை உருவாக்குவது அத்தனை சுலபமான விஷயமில்லை. எந்த அடுக்கில் காட்சிகளை எப்படி அடுக்கினால் அவர்கள் ரசிப்பார்கள் என்பது தொடர்பான நுணுக்கங்கள் அத்துப்படியாக தெரிந்திருக்கவேண்டும். இயக்குநர் பரதனுக்கு இதில் அடிப்படையான திறமை வாய்த்திருக்கிறது. 'பைரவா'விலும் அப்படி ரசிக்கக்கூடிய சில காட்சிகள் இருக்கின்றன. இந்தக் கதை சொல்லும் திறமையை வைத்துக்கொண்டு ஒரு புதிய களத்தில், பாணியில் இறங்கி விளையாடினால் பார்வையாளர்கள் நிச்சயம் வரவேற்பார்கள். ஆனால் தேய்வழக்கான திரைக்கதை, காட்சிகளின் மிகையான வடிவமைப்பு போன்றவை சலிப்பூட்டுகின்றன.  


***

விஜய்க்கு 42 வயதாகிறது. ஆனால் இன்னமும் தன்  இளமையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் என்பது ஆச்சர்யம். ஒரு காட்சியில் தன் சட்டையைக் கழற்றி விட்டு ஓடுகிறார். அவர் தன் உடலை கச்சிதமாக வைத்துக் கொண்டிருக்கும் விதம் பாராட்ட வைக்கிறது. ஆனால் இளமை மாறாதிருப்பதைப் போலவே அவருடைய நடிப்பிலும் பல வருடங்களாக மாற்றமில்லை என்பதுதான் அதிகம் சோர்வூட்டக்கூடியது. 'பைரவா'வில் அவருடைய தலையில் 'விக்' சேர்ந்திருப்பதுதான் கவனிக்கத்தக்க மாற்றம். 

கீர்த்தி சுரேஷ் வழக்கமான நாயகி. சில கோணங்களில் அழகாகவே இருக்கிறார். ஜெகபதி பாபு வழக்கமான வில்லன். துணை வில்லனான டேனியல் பாலாஜி சிறிது வித்தியாசம் காட்ட முயன்றிருக்கிறார். ஆனால் பாவம், அவரும்தான் என்ன செய்யமுடியும்? 

Laughing gas துணை கொண்டு பாத்திரங்களைச் சிரிக்க வைப்பது போல சில காட்சிகள் வருகின்றன. சதீஷூம் தம்பி ராமையாவும் அவ்வாறே நம்மைச் செயற்கையாக சிரிக்க வைக்க முயல்கிறார்கள். ஒன்றும் தேறவில்லை. விஜயராகவன் போன்ற அற்புதமான மலையாள நடிகர்கள் எல்லாம் ஓரமாக வந்து வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். 

***

இதன் உருவாக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியவர்களாக ஒளிப்பதிவாளர் எம்.சுகுமாரையும் சண்டைக்காட்சி வடிவமைப்பாளர் அனல் அரசுவையும் சொல்ல வேண்டும்.  இவர்களின் கூட்டணி ஒத்திசைவில் சண்டைக்காட்சிகள் மிகையாக இருந்தாலும் அனல் தெறிக்கிறது. ஆனால் இவர்கள் போன்றவர்களின் அசாதாரணமான உழைப்பு மோசமான திரைக்கதைகளுக்காக வீணாகிக்கொண்டிருக்கும் பரிதாபமும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிகழ்கிறது. 

தாம் நிரம்பும் பாத்திரத்துக்கேற்ப நீர் தன்னை உருமாற்றிக் கொள்வதற்கேற்ப, சந்தோஷ் நாராயணன் போன்ற புதுமையான இசையமைப்பாளர்களும் வணிகப்படங்களுக்கேற்ப மாற வேண்டிய பரிதாபம். 'நில்லாயோ' பாடல் மட்டும் அருமை. 'காற்றின் உடலா, பெண்பால் வெயிலோ' என்று வசீகரிக்க முயன்றிருக்கிறார் வைரமுத்து. இதர பாடல்கள் சப்தங்களின் தொகுப்பு. 'வர்லாம் வா' பாடலும் அதன் இசையும் அவசியமான இடங்களில் படத்தின் விறுவிறுப்புக்கு நன்றாக உதவியிருக்கிறது. ஒரு சண்டைக்காட்சியில் வழக்கமான பின்னணி இசையாக அல்லாமல் மாறுதலான இசையை சந்தோஷ் முயன்றிருப்பது வரவேற்கத்தக்கது.

விறுவிறுப்பான காட்சியோடு தொடங்கும் திரைப்படம், கீர்த்தி சுரேஷ் தன் ஃபிளாஷ்பேக்கை விவரிக்கும் நீளமான பின்னணிக் காட்சிகளால் சுவாரசியத்தை இழந்துவிடுகிறது. பிறகு நாயகன் வில்லனை வெற்றி கொள்ளும் காட்சிகள். அத்தனை பலம் பொருந்திய வில்லனை ஒற்றை ஆளாக நாயகன் எதிர்கொள்வது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. எதிலுமே புதுமையோ, வித்தியாசமோ இல்லை. நாயகனின் உடலில் எரிபொருளை வீசி தீப்பற்ற வைக்கும் காட்சி சற்று ஆர்வத்தை தூண்டி, பிறகு எதுவுமே இல்லாமல் அணைந்து போகிறது. போலவே இதன் கிளைமாக்ஸ். இப்படியொரு உச்சக்காட்சியை சிந்திப்பதற்கெல்லாம் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் மூளையமைப்பும் துணிச்சலும் வேண்டும். திருநெல்வேலியில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் நாயகியின் தந்தையே அங்குள்ள கல்லூரி  மோசடிகளை அறியாத அப்பாவியாக இருக்கிறார் என்பது போன்று பல தர்க்கப் பிசிறுகள். 

சமூகப் பிரச்னைகளைத் தங்களின் வணிகத்துக்காகத் தந்திரமாகப் பயன்படுத்தும் இதுபோன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் ஆகப் பெரிய சோகங்களுள் ஒன்று.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/13/w600X390/bairavaa1.jpg http://www.dinamani.com/cinema/movie-reviews/2017/jan/13/விஜய்-யின்-பைரவா-சினிமா-விமரிசனம்-2632230.html
2624975 சினிமா திரை விமரிசனம் அமீர் கானின் டங்கல்: நிறைகளும் குறைகளும்! ச.ந. கண்ணன் Saturday, December 31, 2016 05:03 PM +0530  

முதல் வாரத்தில் மட்டுமே ரூ. 300 கோடி வசூலித்த படம், டங்கல். உலகம் முழுக்க பலத்த பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. கிட்டத்தட்ட அனைத்து விமரிசனங்களும் படத்தைப் பாராட்டித் தள்ளுகின்றன. சமீபகாலத்தில் ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் விமரிசகர்களிடமும் பேராதரவைப் பெற்ற படம் வேறு எதுவும் கிடையாது.  

டங்கல், யுத்தம் என்கிற பெயரில் தமிழிலும் வெளிவந்துள்ளது. ஒரு சராசரி தமிழ்சினிமா ரசிகனுக்கு இந்தப் படம் பலவிதங்களில் ஆச்சர்யம். அமீர் கான் போன்ற ஒரு பிரபல நடிகர், தந்தை வேடத்தில் படம் முழுக்க அமைதியாக நடித்துவிட்டுப் போகமுடியுமா? அட, கடைசிக் காட்சியில் அந்தப் பயிற்சியாளருடன் விஷால் போல ஒத்தைக்கு ஒத்தை மோதியிருக்கவேண்டாமா? பாபநாசத்தில் கூட கமலும் கெளதமியும்
கொஞ்சிக்கொள்ளும் காட்சிகள் உண்டு. இதில் மருந்துக்குக்கூட மனைவியுடன் அமீர் கான் காதல் செய்கிற காட்சிகள் எதுவும் இல்லையே! இதுபோன்ற பல ஆச்சர்யங்களுடன்தான் படத்தில் பயணிக்கமுடிகிறது.  

பெண்ணுரிமையை உயர்த்திப் பேசும் இந்தப் படம், அநாவசியக் காட்சிகள் எதுவுமின்றி அடுத்தடுத்தக் கட்டத்துக்குச் செல்கிறது. அதைவிட பேராச்சர்யம், படத்தில் மருந்துக்கும் காதல் காட்சிகள் கிடையாது. அமீர் கான் மட்டுமல்ல, அவர் மகள்களுக்கும் படத்தில் எந்தவொரு காதல் காட்சியும் கிடையாது. இறுதிச்சுற்று படத்தில்கூட தன் பயிற்சியாளர்மீது காதல் வயப்படும் கதாநாயகியைக் கண்டோம். ஆனால் இதில் வயது காரணமாகக் கொஞ்சம் கவனம் திசைதிரும்பும் கதாநாயகி, அதிகபட்சமாக தன் வயது பையன்களை சைட் அடித்து உள்ளூற மகிழ்கிறார். அவ்வளவுதான். காதல் காட்சிகளே இல்லாத எத்தனை தமிழ்ப்படங்களைக் காண நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது?! அப்படியே ஒன்றிரண்டு இருந்தாலும் அவற்றில் எத்தனை இப்படி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது? 

படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரியையும் மறக்காமல் பாராட்டவேண்டும் (பெரும்பாலான பாராட்டுகள் அமீர் கானுக்கே கிடைக்கின்றன). மல்யுத்தக் காட்சிகளைத் தத்ரூபமாக எடுத்துள்ளார். ஆயிரம் பேர் மத்தியில் மத்தியில் மல்யுத்தக் காட்சியைப் பார்க்கும் அனுபவத்தைத் திரையரங்கில் ஏற்படுத்தியுள்ளார். மேலும் கதாபாத்திரத் தேர்வுகள் எல்லாம் துல்லியம். முதல் பகுதியில் வந்த அந்த சின்னஞ்சிறுமிகளை எந்த ஒரு ரசிகனாலும் மறக்கமுடியாது. மூத்த பெண் கீதா, முதல்முறையாகப் பையன்களுடன் குஸ்தி போடும் காட்சிகள் எல்லாம் படத்தை வேறுதளத்துக்குக் கொண்டுசென்று விடுகிறது.

காட்சிபூர்வமாக நகரும் திரைக்கதை படத்தின் பெரிய பலம். பக்கம் பக்கமாக வசனங்கள் பேசுவதெல்லாம் இதில் கிடையாது. பல முக்கியமான தருணங்கள் குறைந்த வசனங்களிலும் முகபாவங்களிலுமே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் சினிமா இயக்குநர்கள் கற்றுக்கொள்ள இந்தப் படத்தில் நிறைய அம்சங்கள் உள்ளன. 

மேலும், குறைகளுடன் கொண்டாடப்படவேண்டிய படம்தான் டங்கல். 

முதல் பாதி அவ்வளவு யதார்த்தம். ஒரு காட்சியில்கூட யாரும் கைவைக்க முடியாது. ஆனால் இரண்டாம் பாதியில் பல இடங்களில் கதை திடீர் திடீரென சினிமாத்தனத்துக்குத் தாவிவிடுகிறது.

படத்தில் வில்லன் இல்லாத குறையைப் போக்குகிறார் பயிற்சியாளர். இத்தனைக்கும் நிஜவாழ்வில் கீதா போகட்டும் பபிதா குமாரியும் அப்படியொரு பயிற்சியாளரிடம் எந்தவொரு அவஸ்தையும் படவில்லை. நிஜத்தில் என்ன நடந்தது என்றால், பட்டியாலா பயிற்சி மையத்துக்குச் சென்றபிறகு மகள்கள் இருவரும் முன்புபோல கடுமையாக உழைப்பதில்லை என்று அவர்களுடைய தந்தை கோபம் கொண்டிருக்கிறார். பட்டியாலாவில் அவர்கள் எடுத்துக்கொண்ட பயிற்சிகள் கடுமையாக இல்லாததால் விமரிசனம் செய்துள்ளார். இந்த முரண்பாடு இயக்குநரைக் கவர்ந்துள்ளது. அதில் சினிமாத்தனம் கலந்ததுதான் படத்தின் இரண்டாம் பகுதி. படத்தில் வருகிற பயிற்சியாளர் ஒரே குரலில் தந்தையின் பயிற்சிமுறைகளை நிராகரிக்கிறார். இதனால் தந்தைக்கும் பயிற்சியாளருக்கும் இடையே ஈகோ மோதல் ஏற்படுகிறது. மேலும் கீதா தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் தோற்கவே, இதைப் பயன்படுத்திக்கொண்டு தனது பயிற்சிமுறைகளின் வலிமையை மகளிடம் எடுத்துரைக்கிறார் தந்தை. இதுதான் டங்கல் இரண்டாம் பகுதியில் காட்சிகளாக விரிகின்றன. 

பயிற்சியாளரின் வில்லத்தனத்தில் செயற்கை அம்சமும் கொண்டிருப்பது திரைக்கதை மீது கறையைப் பூசிவிடுகிறது. மேலும் இரு தரப்பின் பயிற்சிகளில் உள்ள வேறுபாடுகளையும் இயக்குநர் சரியாக முன்வைக்கவில்லை. பாட்டியாலாவில் இருந்து ஊர் திரும்பும் கீதாவின் குஸ்தித்திறமையில் தந்தைக்குக் கருத்துவேறுபாடு ஏற்படுகிறது. அதிலும் ஒரேயொரு பயிற்சிமுறையில்தான் அவர் வேறுபாடு காண்கிறார். இதைவைத்து அவருடையது பயனில்லாதது, இவருடையது மகத்தானது என்கிற ஒரு கருத்து படத்தில் முன்வைக்கப்படுகிறது. இதை எப்படி ஏற்கமுடியும்? உதாரணமாக, இன்று கிரிக்கெட்டில் உள்ள எல்லாப் பயிற்சியாளர்களும் குறிப்பிட்ட பிட்சில் ஆடும் விதம் குறித்து வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருப்பார்கள். இதேதான் ஒவ்வொரு விளையாட்டிலும். சமகாலப் பயிற்சியாளர்களிடமே ஒரே அம்சம் குறித்து பல்வேறுவிதமான பயிற்சிமுறைகள் நிலவுவது இயல்பு. எனில் இருவேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களிடம் தோன்றும் இந்தக் கருத்துவேறுபாட்டில் பெரிய விசித்திரம் கிடையாது. இயக்குநர் முன்வைக்கும் வேறுபாடுகளை இன்னமும் ஆதாரபூர்வமாக, அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கலாம். திரைக்கதையிலும் காட்சிகளின் அமைப்பிலும் முன்பகுதியில் காண்பிக்கப்பட்ட சிரத்தை, பின்பகுதியில் இதுபோன்ற காட்சிகளில் மட்டும் மேலோட்டமாகச் செல்வது உறுத்துகிறது.

கீதா, தங்கம் வென்ற அதே காமன்வெல்த் கேம்ஸில் அவர் சகோதரி பபிதா குமாரி, வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவருடைய சாதனையை இயக்குநர் தவிர்த்தது ஏன் என்று புரியவில்லை. ஒரே போட்டியில் ஒரு தங்கம் ஒரு வெள்ளி வாங்கித் தந்த தந்தை என்றால் கதைக்கு இன்னும் வலு சேர்த்திருக்குமே!

டங்கல் படத்தின் இறுதிக்காட்சியைத் தமிழ் ரசிகர்கள் இறுதிச்சுற்று படத்திலேயே பார்த்துவிட்டார்கள். வழக்கம்போல, இறுதிப்போட்டியைக் காணமுடியாதபடி பயிற்சியாளரைப் பழிவாங்கும் இன்னொரு உச்சக்கட்டக் காட்சிதான் டங்கலிலும். ஆனாலும் அந்தத் தேசிய கீதம் ஒலிக்கும் காட்சியில் மாஸ் படம் பார்க்கும் உணர்வு ஏற்பட்டுவிடுகிறது.

வசனங்களில் பெரிய குறையில்லைதான். அதேசமயம் பல இடங்களில் பிரமாதமாகவும் இல்லை. பல காட்சிகளில் அதன்பொருட்டு வெளிப்படுத்தவேண்டிய உணர்வுகளை வசனங்கள் இன்னும் அழுத்தமாகவும் கூர்மையாகவும் பிரதிபலித்திருக்கலாம். (தமிழில் ஜெயமோகன் போன்றவர்கள் வசனம் எழுதியிருந்தால் நிறைவு கிடைத்திருக்குமோ?). மேலும், மல்யுத்தத்தைத் தொடர்புபடுத்தி இன்னும் சில பொருத்தமான வசனங்கள் எழுதப்பட்டிருக்கலாம் என்கிற ஆதங்கமும் எனக்கு உண்டு. லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற யோகேஸ்வர் தத் ஒரு பேட்டியில், மல்யுத்தத்தில் ஒருநாள் பயிற்சியைத் தவறவிட்டாலும் மூன்று மாதங்கள் பின்தங்கிவிடுவோம் என்றார். இதுபோன்ற அந்த விளையாட்டுக்குரிய பல வசனங்களை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தேன். மேலும் தமிழ் ஊடகங்களில் மல்யுத்தம் என்கிற சொல் இயல்பாக இடம்பெறுகிறபோது படம் முழுக்க இந்த விளையாட்டை குஸ்தி என்றே குறிப்பிடுகிறார்கள். படத்துக்கு யுத்தம் என்று தமிழில் பெயர்வைத்தவர்கள் வசனங்களிலும் மல்யுத்தம் என்கிற சொல்லை இடம்பெறவைத்திருந்தால் தலைப்புக்கும் பொருத்தமாகவும் இருந்திருக்குமே!  

தமிழில் அதிக வசூல் செய்த ஹிந்தி டப்பிங் படம் என்கிற பெருமை நிச்சயம் டங்கலுக்குக் கிடைக்கும். இதேபோல பெரிய நடிகர்கள் நடித்த மற்றும் முக்கியமான படங்களை தமிழிலும் டப் செய்தால் தமிழ்நாட்டில் ஒரு நல்ல மார்க்கெட்டை பாலிவுட்டால் உருவாக்கமுடியும். அதற்கான முதல்படியாக டங்கல் அமையட்டும். ( ஹிந்திப் படங்களை தமிழில் ரீமேக் செய்து சொதப்பித் தள்ளுவதற்கு டப்பிங் படங்களைத் தாராளமாக வரவேற்கலாம்.) 

அமீர் கான் மற்றும் தமிழில் டப் செய்ய விரும்புபவர்களுக்கு ஓர் ஆலோசனை: படத்தின் டைட்டில் கார்டு, முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் உள்ளது. அதாவது தமிழில் இல்லை என்பது என் புகார். மணி ரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களின் டைட்டில் கார்டில் முழுக்க முழுக்க தமிழே இடம்பெறும். டப்பிங் படம் தானே என டைட்டில் கார்டில் அலட்சியம் காண்பித்திருக்கவேண்டியதில்லை. அதேபோல படம் முடிந்தபிறகு மஹாவீர் சிங் போகட், கீதா போகட், பபிதா குமாரி ஆகியோரைப் பற்றி ஆங்கிலம், ஹிந்தியில் குறிப்புகள் இடம்பெறுகின்றன. அந்தக்குறிப்புகளும் தமிழில் இடம்பெறாதது ஏன் என்கிற கேள்வியும் எதிர்பார்ப்பும் காசு கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகனின் அடிப்படை உரிமைகள். அடுத்துவரும் டப்பிங் படங்களில் இக்குறைகள் கட்டாயம் களையப்படவேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/31/w600X390/dangal3.jpg http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/dec/31/அமீர்-கானின்-டங்கல்-நிறைகளும்-குறைகளும்-2624975.html
2621086 சினிமா திரை விமரிசனம் விஷாலின் 'கத்தி சண்டை' - சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, December 24, 2016 12:40 PM +0530  

வணிக நோக்கில் உருவாக்கப்படும் வெகுஜனத் திரைப்படங்கள் என்றாலும் கூட அதில் தங்களது அக்கறையையும் உழைப்பையும் செலுத்தி சுவாரசியமாக உருவாக்க முயலும் இயக்குநர்கள் சிலர் இருக்கிறார்கள். ஷங்கர், மணிரத்னம் போன்றவர்கள். இதற்கு முன் வெளிவந்த பெரும்பாலான சினிமாவின் கதைகளை கலந்துகட்டித் தூக்கலான மசாலா சமாசாரங்களோடு எதையோ ஒப்பேற்றி வணிகப்பண்டமாக்க முயலும் இயக்குநர்கள் சிலரும் இருக்கிறார்கள். இயக்குநர் சுராஜ் இந்தப் பட்டியலில் முதன்மையானவர் என்பதை இதற்கு முன் வந்த அவருடைய திரைப்படங்கள் துல்லியமாக நிரூபிக்கின்றன. சுந்தர். சி -யிடம்  பணிபுரிந்தவர் என்பது கூடுதல் தகவல்.  

எனவே இதுபோன்ற இயக்குநர்களின் திரைப்படங்களை ஏதோவொரு எதிர்பார்ப்போடு பார்த்துவிட்டு பின்பு சலித்துக் கொள்வதில் உபயோகமில்லை. 'சுராஜின்' இதுவரையான திரைப்படங்கள் எப்படியிருந்ததோ, அப்படியேதான் 'கத்தி சண்டை'யும் இருக்கிறது.  

என்றாலும் சுராஜின் முந்தைய சில திரைப்படங்களில் நகைச்சுவைப் பகுதிகள் மட்டும் சற்று ரசிக்கத்தக்கவையாக இருந்தன. தலைநகரம், மருதமலை, படிக்காதவன் போன்றவற்றைச் சொல்லலாம். மட்டுமல்லாமல்,  'கத்தி சண்டை' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்படுவதற்கு கூடுதலான காரணம் ஒன்றிருந்தது. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை நடிகராக வடிவேலுவின் மறுவருகை இத்திரைப்படத்தின் மூலம் நிகழ்கிறது என்பதுதான் அது. அவர் நீண்ட காலமாகக் காணாமற் போயிருந்ததால் ரசிகர்களிடம் ஏற்பட்டிருந்த ஏக்கத்தை இத்திரைப்படம் தீர்க்கும் என்றொரு நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பையும் பொய்க்கச் செய்த சாதனைத் திரைப்படமே 'கத்தி சண்டை'.

***

பல கோடி ரூபாய் பணம் பதுக்கப்பட்டிருக்கும் வாகனத்தை வேகமாக ஓட்டி வருகிறான் வில்லன். காவல்துறை உயரதிகாரியாக இருக்கும் ஜெகபதி பாபு சாகசத்துடன் அதைக் கைப்பற்றி அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறார். இவரின் தங்கையான தமன்னாவை, விஷால் காதலிக்க முனைகிறார். இதற்காக சூரியின் உதவியுடன் 'மறுஜென்மக் காதல்' என்று பல பொய்களை அவிழ்த்து விடுகிறார். ஆனால் அவரது உண்மையான நோக்கம், தமன்னாவை காதலிப்பதல்ல, ஜெகபதி பாபு அரசாங்கத்திடமிருந்து மறைத்து, பதுக்கி வைத்திருக்கும் பணத்தைக் கொள்ளையடிப்பதே. 

விஷால் யார், அவருடைய பின்னணி என்ன, எதற்காக அவர் இந்தக் கொள்ளையில் ஈடுபட வேண்டும்? என்பன போன்ற விவரங்களை, திருப்பங்கள் என்கிற பெயரில் பல அபத்தங்களுடன் நாம் கதறக் கதற கதையாகச் சொல்கிறார்கள். 

'கத்தி சண்டை' என்று தலைப்பு வைத்து விட்டதால் 'கத்தி' திரைப்படத்திலிருந்து கொஞ்சம், ஷங்கரின் 'ஜென்டில்மேன்' திரைக்கதையிலிருந்து கொஞ்சம் என பல திரைப்படங்களில் இருந்து காட்சிகள் உருவப்பட்டிருக்கின்றன. 

***

விஷால் வழக்கமான நாயகன்  வேடத்தை வழக்கமான பாணியிலேயே கையாள்கிறார். சில காட்சிகளில் ஸ்டைலாகவே இருக்கிறார். சண்டைக்காட்சிகளில் சுறுசுறுப்பு. நாயகன் சொல்லும் பொய்களையெல்லாம் நம்பும் வழக்கமான 'லூஸூ' நாயகி தமன்னா. இதற்கு உளவியல் காரரணங்கள் எல்லாம் வேறு. 

காவல்துறையாக அதிகாரியாக வரும் ஜெகபதி பாபு, நாயகியைவிட அதிக லூஸாக இருக்கிறார். நாயகனின் பின்னணியை விசாரிப்பதற்காக இவர் செய்யும் விஷயங்கள் எல்லாம் ஒருபக்கம் காமெடி என்றால், அவன் சொல்லும் பொய்யையெல்லாம் நம்பும் இவரை, காவல்துறையின் உயரதிகாரியாக வேறு காண்பிக்கிறார்கள். தமிழக காவல்துறை, ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸுக்கு அடுத்தபடியானது என்று சொல்லப்படும் பெருமையின் மீது இயக்குநர் செய்ய முயலும் அவதூறாகவே இவற்றைக் கருதவேண்டும். இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாக, இவரை ஏன் தமன்னாவின் அண்ணன் பாத்திரமாக சித்தரிக்கிறார்கள் என்று வேறு குழப்பமாக இருந்தது. 

பொய்யான பில்டப் தரும் ரவுடியாக 'சூரி'. இந்த 'கைப்புள்ள' பாத்திரத்தை வைத்து தமிழ் சினிமா இன்னமும் எத்தனை காலத்துக்கு ஜீவிக்குமோ என வியப்பாகவும் சலிப்பாகவும் இருக்கிறது. பெண் வேடத்தில் இவர் வரும் காட்சிகள் எல்லாம் கர்ண கொடூரமாக இருக்கின்றன. சூரியின் நகைச்சுவையில் மிக அரிதாகவே புன்னகைக்க முடிகிறது. 

மிகவும் எதிர்பார்த்த வடிவேலுவின் பகுதி, படத்தின் பிற்பாதியில் வருகிறது. 'நெருப்புடா' என்கிற அதிரடிப்பாடலின் பின்னணியோடு 'I am back' என்று நுழைகிறார் வடிவேலு. ஏறத்தாழ கபாலி 'ரஜினி'யின் அறிமுகக்காட்சிக்கு நிகரான ஆரவாரத்தை திரையரங்கில் பார்க்க முடிந்தது. அவர்களின் நீண்ட கால ஏக்கம், இதோ தீரப் போகிறது என்கிற மகிழ்ச்சியின் மீது மொத்தமாக தண்ணீர் ஊற்றி 'நெருப்புடா'வை மொத்தமாக அணைத்து விட்டார்கள். முந்தைய வடிவேலுவின் துள்ளலும் இயல்பும் இந்த மெகா வடிவேலுவிடம் இல்லை. உருவத் தோற்றமும் நன்றாக பெருத்து பழைய வடிவேலுவின் பெரியப்பா மாதிரி இருக்கிறார். ஆக.. படத்தின் மீதான ஒரே எதிர்பார்ப்பும் வீணாகப் போய் விடுகிறது. 

***

இந்த திரைப்படத்தில் திருப்பங்கள் என்று வரும் காட்சிகளை எல்லாம் கொசுவின் மூளையுள்ளவர்கள் கூட யூகித்து விட முடியும். தமிழ் சினிமாவின் பார்வையாளர்களை இன்னமும்கூட எளிதாக எடைபோடும் தமிழ் இயக்குநர்களின் துணிச்சல் வியக்க வைக்கிறது. என்னதான், சி செண்ட்டருக்கான படமென்றாலும் இத்தனை மட்டமான திரைக்கதையையா உபயோகிப்பார்கள்? தர்க்கம் என்பதே மருந்துக்கும் இல்லை. பாத்திரங்களின் வடிவமைப்பிலும் அவற்றின் இயங்குமுறையிலும் நம்பகத்தன்மை என்பது துளியும் இல்லை. 

நாயகரின் கருப்பு நிறம் அவராலேயே சிலபலமுறை தாழ்வாகச் சொல்லப்படுகிறது. 'நான் கொஞ்சம் கருப்புதான்' என்பது இதிலுள்ள பாடல் ஒன்றின் தொடக்க வரி. இதற்கு மாறாக நாயகியின் வெள்ளை நிறத்தைப் பற்றிய உயர்வான வசனங்கள். அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஏதாவது படத் தயாரிப்புப் பின்னணியில் இருக்கிறதா என விசாரிக்கவேண்டும். 

பணமாக இதில் காட்டப்படுபவை எல்லாம் பழைய ஆயிரம் ரூபாய் தாள்கள். இதிலுள்ள தற்செயலான அவல நகைச்சுவையைப் பார்வையாளர்கள் உடனே புரிந்து கொண்டு சிரிக்கிறார்கள்.

'எப்போது படம் முடியும், கிளம்பலாம்' என  அதிகபட்ச எரிச்சலோடு காத்துக் கொண்டிருக்கும் அசந்தர்ப்பமான நேரத்தில் நாயகனின்  பின்னணி பற்றிய 'பிளாஷ்பேக்' ஒன்று வருகிறது. 

விவசாயிகளின் பிரச்னையைப் பற்றி இனி எந்தவொரு தமிழ் சினிமாவும் பேசக்கூடாது என்று விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் எவராவது பொதுநல வழக்கொன்று போடலாம். 'மெசேஜ்'  சொல்கிறோம் என்கிற பெயரில் சமூகத்தின் முக்கியமான பிரச்னைகளை ஊறுகாயாக பயன்படுத்திக்கொண்டு நாயகனின் போலி வசனங்களோடு இவர்கள் செய்யும் நாடகத்தனம் குமட்ட வைக்கிறது. இதே திரைப்படத்தின் நாயகன் நடிக்கும் குளிர்பானத்தின் விளம்பரம் ஒன்று படம் தொடங்குவதற்கு முன்னால் காட்டப்படுகிறது. என்னவொரு முரண்நகை?


இத்திரைப்படத்துக்காக எவரையாவது பாராட்டலாம் என்றால் அது ஒளிப்பதிவாளரையும், சண்டைக்காட்சி வடிவமைப்பாளரையும் எனச் சொல்லலாம். பொதுவாகவே இதன் ஒளிப்பதிவு அபாரமாக இருக்கிறது. சண்டைக்காட்சிகளில் அதிக மிரட்டலாக இருக்கிறது. ஆனாலும் என்ன உபயோகம்?

***

'கராஜ்'ஜில் இருக்கும் பழைய துருப்பிடித்த வண்டி மாதிரியான திரைக்கதையை வைத்துக் கொண்டு 'சுராஜ்' செய்திருக்கும் அலப்பறைகள் எல்லாமே சலிப்பு ரகம். 'கத்தி' திரைப்படத்திலிருந்து ஒரு விஷயத்தை உருவினதாக இருந்தாலும் கூட, இந்த திரைப்படத்துக்குக் 'கத்தி சண்டை' என்று ஏன் இயக்குநர் தலைப்பு வைத்தார் என்று எழுகிற கேள்வி வேறு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 

'நான் அப்பவே சொன்னேன்ல.. இந்தப் படத்துக்கு டிக்கெட் புக் பண்ண வேணாமின்னு'' என்று படம் பார்த்து வெளியே வந்த பிறகு பார்வையாளர்கள் ஒருவரையொருவர் நோக்கி கத்திச் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்கிற விஷயம் இயக்குநருக்கு முன்பே தெரிந்து விட்டதோ?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/24/w600X390/kathi_sandai3200.jpg http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/dec/24/விஷாலின்-கத்தி-சண்டை---சினிமா-விமரிசனம்-2621086.html
2613298 சினிமா திரை விமரிசனம் வெங்கட் பிரபுவின் 'சென்னை-600 028 - II' - சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, December 10, 2016 07:42 PM +0530  

வருடம் 2007.  தமிழ் சினிமாக்களின் மீது பொதுவான அவநம்பிக்கை கொண்டு நான் சலிப்புற்றிருந்த காலம். நண்பர்கள் சந்திப்பொன்றில் ஒருவர் கேட்டார். 'சென்னை -600 028'-ன்னு ஒரு படம் வந்திருக்குதே, பார்த்தீங்களா?'. அவருடைய ரசனை பொதுவாக என் அலைவரிசையுடன் ஒத்துப் போகும் என்பதால் மறுநாளே சென்று பார்த்தேன். தமிழ் சினிமாவில் அதுவரை இல்லாத வகையில் திரைக்கதையை புத்துணர்ச்சியுடன் கையாண்டிருந்த வெங்கட் பிரபுவின் அந்த முயற்சி  எனக்குப் பிடித்திருந்தது. 

அத்திரைப்படத்தில் கதை என்று பெரிதாக ஏதும் இருக்காது. சமகால இளைஞர்களின் கலாய்ப்பு மனநிலையைக் கச்சிதமாக எதிரொலிக்கும் சம்பவங்கள், வசனங்கள். இதனுடன் சற்று சென்ட்டிமென்டைக் கலந்து ரகளையான பாடல்கள், சுவாரசியமான காட்சிப்படுத்துதல்கள், இளமைப் பாய்ச்சலுடன் கூடிய எடிட்டிங் என்று ஒரு கொண்டாட்ட மனநிலையைப் பார்வையாளனுக்கு ஏற்படுத்தியது அந்தத் திரைப்படம். சென்னையின் பிரத்யேகமான வழக்குச் சொற்களும் பின்னணியும் சுவாரசியத்தை ஏற்படுத்தின. 'Cult' அந்தஸ்தை எட்டும் படமாகவும் அமைந்தது.  

Sports drama-வை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் என்றால் எளிய பின்னணியிலிருந்து கிளம்பும் ஒரு திறமையான விளையாட்டு வீரன்,  அத்துறையில் உயரிய அங்கீகாரத்தை அடைவதையே அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஆனால் தங்களை வருங்கால சச்சின்களாக நினைத்துக் கொண்டு சாலையோரங்களில் ஆடப்படும் Street Cricket-ஐ மையமாக வைத்துக்கொண்டு அமெச்சூரான கிரிக்கெட் குழுவின் பின்னணியோடு ஒரு ஜாலியான திரைப்படத்தை வெங்கட் பிரபுவால் தர முடிந்தது ஆச்சர்யமான விஷயம். 

ஆனால் 'மங்காத்தா' என்கிற பெரிய வெற்றியைத் தவிர வெங்கட் பிரபுவின் இதர திரைப்படங்கள் பிற்பாடு சுவாரசியமாக அமையவில்லை. அதிலும் கடந்த திரைப்படமான 'மாசு என்கிற மாசிலாமணி' பயங்கரமான தோல்விப்படமாக அமைந்தது. 

இந்த நிலையில்தான் தன்னுடைய பழைய ஆயுதமான 'சென்னை-28'-ன் திரைக்கதையைக் காலத்திற்கேற்றவாறு இன்னமும் மெருகேற்றித் தந்திருக்கிறார் வெங்கட் பிரபு.  இறங்கி அடித்து ஆடிய அவரது தன்னம்பிக்கையான முயற்சியும் நோக்கமும் வீண் போகவில்லை. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் ஏறத்தாழ ரகளையான சுவாரசியத்துடனும் இளமையான, சரி.. ஒகே.. சற்று வயதான இளமைக் கொண்டாட்டத்துடனும் அமைந்துள்ள படமாக உருவாகியுள்ளது. ஒரு Sequel -ஐ முந்தைய திரைப்படத்தின் ஒத்திசைவுடன் எப்படி சுவாரசியப்படுத்த முடியும் என்பதற்கு வெங்கட் பிரபுவின் இந்த முயற்சி சிறந்த உதாரணம். 

***

முதல் பாகத்தில் திருமணமாகாத இளைஞர்களாக வந்த அதே டீம், இதில் இளம் அங்கிள்களாக களம் இறங்கியிருக்கிறது. கிரிக்கெட் பேட்டை பிடித்த கைகளில் இப்போது காய்கறிப் பையும் ரேஷன் கார்டும். வாழ்க்கை எனும் பயணத்தில் விதி செலுத்தியவாறு அவரவர்களின் பயணங்களில் மிதந்து செல்கிறார்கள். மனைவிகளின் பிடுங்கல்களினால் கிரிக்கெட்டையும் நண்பர்களையும் பெரும்பாலும் மறக்க முயல்கின்ற ஒரு வாழ்க்கை.

இந்த நிலையில், சில பல போராட்டங்களுக்குப் பிறகு ஒருவழியாக சாத்தியமாகும் நண்பன் ரகுவின் காதல்திருமணத்துக்காக  நண்பர்கள் அனைவரும் தேனிக்குச் செல்கிறார்கள். அங்கு ஏற்படும் ஒரு சிக்கலினால் நண்பனின் திருமணத்தில் தடையேற்படும் சூழல் ஏற்படுகிறது. அதிலிருந்து வெளிவர வேண்டுமென்றால் அவர்கள் மறுபடியும் கிரிக்கெட் ஆடியே தீர வேண்டுமென்கிற நிலைமை. 

அது என்ன சிக்கல், அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள், ரகுவின் திருமணம் நடந்ததா என்பதைச் சிரிப்பும் கும்மாளமுமாக சில லாஜிக் மீறல்களுடன் ரகளையான நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். முதல் பாகம் உங்களுக்கு பிடித்தது என்றால் இரண்டாம் பாகமும் நிச்சயம் பிடிக்கும் என்பது மாதிரியான திரைக்கதை. முதல் பாகத்தின் சென்னையின் பின்னணியையே உபயோகிக்காமல் இரண்டாவதில் தேனியாக மாற்றியிருப்பது புத்திசாலித்தனம். 

***
எஸ்.பி.பியின் வாய்ஸ்ஓவரோடு தொடங்கும் முதல் பாகத்தின் அதே பாணியில் இரண்டாவது பாகமானது வெங்கட் பிரபுவின் குரல் விளக்கத்தோடு தொடங்குகிறது. இந்தியாவை ஒன்றிணைக்கும் விஷயமாக முதல் பாகத்தில் கிரிக்கெட்டை சுட்டிக் காட்டிய விஷயம், இரண்டாவதில் கடந்த வருட வெள்ளத்தில் மக்களிடம் தன்னிச்சையாக வெளிப்பட்ட மனித நேயமாக மாறியிருக்கிறது. இப்படிப் படமெங்கிலும் சுவாரசியமான தீற்றல்கள். இரண்டாம் பாகத்தில் இல்லாதவர்களை சுவாரசியமான விளக்கத்துடன் கழற்றி விட்டிருப்பது சிறப்பு.

வெங்கட் பிரபுவின் உருவாக்க பாணி ஒருவகையில் பின்நவீனத்துவ காலக்கட்டத்தை பிரதிபலிக்கும் முயற்சியாக சொல்லலாம். சுயபகடி முதற்கொண்டு பல பிம்பங்களை சரமாரியாகக் கிண்டலடிக்கிறார்; கலைத்துப் போடுகிறார். 'உன் தங்கச்சியை உசார் பண்ணா இப்படி சும்மா இருப்பியாடா’என்று முதல் பாகத்தில் ஏழுமலையிடம் வெடிக்கும் பழனி, இரண்டாம் பாகத்தில் உண்மையிலேயே அப்படிச் செய்திருப்பதாக இயக்குநர் விளக்கும்போது,  உணர்ச்சிமயமான காட்சியை, அதிலிருந்து எழும் தீவிரமான உணர்வுகளை, அடுத்த திரைப்படத்தில் தானே கலைத்துப் போடும் விதத்தை ரசிக்க முடிகிறது. 

படம் முழுவதும் வெறுமனே நகைச்சுவைச் சம்பவங்களின் கோர்வையாக இருந்தால் சலிப்புத்தன்மை ஏற்பட்டுவிடும் என வெங்கட் பிரபுவுக்குத் தெரிந்திருக்கிறது. இனிப்புகளின் நடுவே சிறிது காரத்தை வைப்பதைப் போல நகைச்சுவைக் காட்சிகளின் இடையே தீவிரமான உணர்ச்சிகள் வெளிப்படும் சம்பவங்களை இணைப்பதின் மூலம் சமன் செய்கிறார். முதல் பாகத்தில் பழனியின் சகோதரியை கார்த்திக் காதலிப்பதால் நண்பர்களுக்குள் ஏற்படும் பிரச்னை போன்று, இரண்டாவது பாகத்தில் ரகுவின் திருமணம் நடக்குமா, நடக்காதா என்கிற சிக்கலை உருவாக்குவதில் வெற்றி பெற்றிருக்கிறார். 

***

பொதுவாக நம் அனைவருக்குமே நண்பர்களினால் இணைந்த குழு ஒன்றின் உறவு இருக்கும். அதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி குணாதிசயங்கள், மனோபாவங்கள், பழக்கங்கள் இருக்கும். அந்தக் குழுவில் இவையெல்லாம் பயங்கரமாக கலாட்டா செய்யப்படும். தீவிரமான விஷயங்கள் முதற்கொண்டு அனைத்துமே நகைச்சுவையாக்கப்படும். இதுபோன்றதொரு குழுவின் இயக்கத்தை மிக இயல்பாகக் காட்சிப்படுத்துவதின் மூலம் ஒவ்வொரு பார்வையாளரும் தங்கள் நண்பர்களை அவற்றுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதை வெங்கட் பிரபு திறமையாக உருவாக்குகிறார். 

பொதுவாக திருமணமான பிறகு இடம்பெயர்வதால் பெண்கள் தங்களின் இளம்வயது நட்புகளை இழக்க நேர்வது ஒரு கலாசார சோகம். ஆனால் இது பெண்களுக்கானது மட்டுமல்ல. பொருளாதார தேடல் சார்ந்த சிக்கல்கள், மனைவி ஏற்படுத்தும் கட்டுப்பாட்டு எல்லைகள் உள்ளிட்ட பலகாரணங்களால் ஆண்களுக்கும் இந்தச் சிக்கல் நேர்கிறது. இந்த நடைமுறை விஷயத்தை நகைச்சுவை கலந்த தீவிரமான காட்சிகளுடன்  இரண்டாவது பாகத்தில் சொல்கிறார் வெங்கட் பிரபு. 

விஜய் வசந்த் தன்னுடைய சென்ட்டிமென்ட் கிரிக்கெட் பேட்டை சிறுவர்களிடம் இழந்து சோக கீதம் வாசிக்கும் முதல் பாகத்தின் தொடர்ச்சியை இரண்டாம் பாகத்திலும் சுவாரசியமாக இணைத்திருப்பது அதிர வைக்கும் நகைச்சுவை. இரண்டு கிரிக்கெட் போட்டிகள் முதல் பாகத்தின் அதே சுவாரசியத்தோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  

ஃபைனான்ஸ் கம்பெனி நடத்தும் (சமகால ரூபாய் நோட்டு பிரச்னையை ஒருவரியில் சாமர்த்தியமாக இணைத்திருப்பது சுவாரசியம்) சிவாவின் உபதொழில், சமீபத்திய தமிழ் திரைப்படங்களை இணைய வீடியோவின் வழியாக விமரிசனம் செய்தல், இண்டர்நேஷனல் 'அவதார்' திரைப்படத்தை உள்ளூர் 'வியட்நாம் காலனி' திரைப்படத்தோடு ஒப்பிட்டு ஜேம்ஸ் கேமரூனுக்கே அவர் சவால் விடும் காட்சிகள் போன்றவை நல்ல அலப்பறை. ஓர் அயல் திரைப்படத்தின் சாயல் லேசாக வந்தாலே 'அது காப்பி' என்று உற்சாகமாக கூவும் அரைகுறை விமரிசகர்களை ஜாலியாக பழிதீர்த்துள்ளார் வெங்கட் பிரபு. ஆனால் இதைப் பதில் வன்மமாக அல்லாமல் காமெடி கலாட்டாவாகச் செய்திருப்பதால் ரசிக்க முடிகிறது. 

'டாஸ்மாக் பார்' காட்சிகளை தம் திரைப்படங்களில் தொடர்ந்து வைக்கிறார் என்று குற்றச்சாட்டை எதிர்கொண்ட எம்.ராஜேஷே, தம் சமீபத்திய திரைப்படத்தில் அவற்றைத் தவிர்த்திருப்பதின் மூலம் திருந்திவிட்டபோது, வெங்கட் பிரபு அடங்குவதாயில்லை. படத்தில் எதற்கெடுத்தாலும் எவராவது 'மச்சி.. ஓப்பன் தி பாட்டில்' என்று உற்சாகமாக கூவிக் கொண்டேயிருக்கிறார்கள். அதிலும்  பிரேம்ஜி குடிவெறியராக இருக்கிறார். சந்தானபாரதி, கங்கைஅமரன் போன்றவர்களையெல்லாம் இந்த குடி விளையாட்டில் இழுத்துப் போட்டிருப்பது அராஜகம்.

கிராமத்து வில்லனாக வரும் 'வைபவ்'வின் நடிப்பு கச்சிதம். முதல் பாகத்தின் சிறப்புக்கு யுவனின் பாடல்கள் முக்கியமான காரணமாக இருந்தன. அந்த மாயாஜாலம் இரண்டாம் பாகத்தில் நிகழவில்லை. 'சொப்பன சுந்தரி.. யாரு வச்சிருக்கா' என்பது மட்டுமே அதிரடியாக கவர்கிறது. ஆனால் அந்தக் குறையை பின்னணி இசையில் சமன் செய்திருப்பது ஆறுதல். 

முதல் பாதி விறுவிறுப்பாக நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதி தொடங்கும்போது சில சறுக்கல்கள் நிகழ்ந்து சலிப்பூட்டுகின்றன. ஆனால் உடனே சுதாரித்துக்கொண்டு அந்த சுவாரசியம் தக்க வைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் end credits முடிவதற்குள்ளாக திரையரங்கம் காலியாகி விடுவதுதான் பொதுவான வாடிக்கை. ஆனால் ஜாக்கிசான் திரைப்படங்களுக்குப் பிறகு bloopers-ஐ பார்வையாளர்கள் பொறுமையாக நின்று ரசிப்பது வெங்கட் பிரபுவின் திரைப்படங்களில்தான் நிகழ முடியும் என்று தோன்றுகிறது. 

மூன்றாம் பாகமும் வரக்கூடிய சாத்தியத்துடன் இதன் முடிவு அமைந்திருப்பது மகிழ்ச்சி. இளைய மனதினருக்கான ஒரு நல்ல கேளிக்கைத் திரைப்படம் இது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/10/w600X390/chennai28-2-2.jpg http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/dec/10/வெங்கட்-பிரபுவின்-சென்னை-600-028---ii---சினிமா-விமரிசனம்-2613298.html
2609800 சினிமா திரை விமரிசனம் சுசீந்திரனின் 'மாவீரன் கிட்டு' - சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, December 3, 2016 02:03 PM +0530  

கல்லா கட்டும் ஒரே நோக்கத்துடன் முற்றிலும் வணிக விஷயங்களாகத் திணித்து திரைப்படங்களைப் பண்டமாக உருவாக்கும் வியாபாரிகள் ஒருவகை. இம்மாதிரியான பாணித் திரைப்படங்களின் இடையேயும் பொறுப்புடனும் மனச்சாட்சியுடனும் சமூகப் பிரச்னைகளை உரையாடும் இயக்குநர்கள் இன்னொருவகை. இயக்குநர் சுசீந்திரன் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். 

கிராமத்தின் சிறிய விளையாட்டுக் குழு முதல் தேசிய அளவிலான பெரிய குழு வரை, அவற்றில் எவ்வாறு சாதிய அரசியல் கலந்துள்ளது என்பதை முந்தைய திரைப்படங்களில் நுட்பமாக உரையாடியுள்ளார். இந்தமுறை மேலதிகத் துணிச்சலுடன் இறங்கி அடித்து ஆட முயன்ற முயற்சியே 'மாவீரன் கிட்டு'. சமகாலத்துக்கு மட்டுமல்ல பலகாலமாகவே இந்தியச் சமூகத்தில் புரையோடிருக்கிற பிரச்னையாக உள்ள சாதி என்கிற சமூகப் பாகுபாட்டைப் பற்றி சுசீந்திரன் தொடர்ந்து தம் திரைப்படங்களில் உரையாடுவது வரவேற்கத்தக்கது.

***
எண்பதுகளின் காலக்கட்டத்தில் இயங்கும் திரைக்கதை இது. பழநி அருகேயுள்ள புதூர் என்கிற கிராமம். தன் வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களுக்காகப் போரடிய ஒரு தலைவரின் மரணம் நிகழ்கிறது. அவரது பிணத்தை தங்களின் தெருக்களின் வழியாக எடுத்துச்செல்லக்கூடாது என ஆதிக்கச்சாதியினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 

தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று உள்ள கரடுமுரடான பாதையில் சடலத்தைத் தூக்கிச் செல்ல வேண்டும்; ஆனால் மழைக்காலமென்பதால் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டும் என்கிற நிலைமை. விஷயம் நீதிமன்றத்துக்குச் செல்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சாதகமாக நீதி வந்தாலும்கூட 'பிணத்தை எடுத்துச் செல்லலாம்' என்றுதான் தீர்ப்பு வந்திருக்கிறதே தவிர எவர் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தீர்ப்பில் இல்லை என்று ஆதிக்கச் சாதியினர் சாமர்த்தியமாகக் காயை நகர்த்துகிறார்கள். வன்முறையைத் தவிர்ப்பதற்காக காவல்துறையும் ஆதிக்கச்சாதிகளுக்கு ஆதரவாக நிற்கிறது. எனவே காவல்துறையினர் சடலத்தை தூக்கிச் செல்வது என்று  முடிவாகிறது. 

தங்களுக்காகப் பாடுபட்டவரின் பிணத்துக்குச் சரியான விதத்தில் மரியாதை செலுத்த முடியவில்லையே என்ற கொதிப்பு இருந்தாலும் அவருடைய சடலம் ஆதிக்கச் சாதியினரின் தெரு வழியாக செல்வது இந்தப் போராட்டத்தின் தற்காலிக வெற்றி என்கிற அளவில் சமாதானம் அடைகிறார்கள். 

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருநாள்கொண்ட சேரியில் இதே போன்று சமீபத்தில் நிஜத்தில் நடந்த சாதியக் கொடுமைச் சம்பவத்தை அப்படியே தம்முடைய திரைப்படத்தில் இணைத்திருக்கும் சுசீந்திரனின் துணிச்சலைப் பாராட்ட வேண்டும். அது சமகாலமாக இருந்தாலும் சரி, இந்தத் திரைக்கதை நிகழும் எண்பதுகளின் காலக்கட்டமாக இருந்தாலும் சரி, பிறப்பு முதல் இறப்பு வரை தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னைகளின் அவலம் பெரிதும் மாறாத நிலைமையே என்று இயக்குநர் இதைச் சுட்டிக்காட்டுவதாகக் கொள்ளலாம். 

இந்தியா முழுக்க சாதியம் என்பது ஆதிகால விஷமாக வேர் வரை பரவியிருப்பதற்குச் சற்றும் குறையாத உதாரணமாக இருக்கும் அந்தக் கிராமத்தில், பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மாணவனாக வருகிறான் இளைஞன் கிட்டு. (விஷ்ணு விஷால்). கல்வியின் வழியாகவே தன் சமூகம் முன்னேற முடியும் எனக் கருதுகிறார், அந்த ஊரின் போராளியான சின்ராசு (பார்த்திபன்). எனவே கிட்டுவை ஐ.ஏ.எஸ். படிக்கச் சொல்கிறார். 

தாழ்த்தப்பட்ட சமூகம் தங்களுக்குச் சமமாக மெல்ல முன்னேறுவதைச் சற்றும் சகிக்க முடியாத ஆதிக்கச் சாதியினர் ஒவ்வொரு விஷயத்துக்கும் முட்டுக்கட்டை போடுகின்றனர். அந்த ஊருக்கு வரும் பேருந்தை நிறுத்துவதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தடுக்கின்றனர். ஆனால் பொதுநிதியைத் திரட்டி ஒரு பழைய பேருந்தை வாங்கி இயக்குவதின் மூலம் அவர்களின் சதி முறியடிக்கப்படுகிறது. எதிர்த்தரப்பு இன்னமும் உக்கிரமாகிறது.  

இளைஞன் கிட்டுவின் கல்வியைப் பாழாக்க வேண்டும் என்கிற வலை பின்னப்படுகிறது. ஆதிக்கச்சாதி நிகழ்த்தும் கொலைப்பழியொன்று அவன் மீது சுமத்தப்படுகிறது. இந்த சூழ்ச்சியை விவேகத்துடன் எதிர்கொள்ள முடிவு செய்கிறார் சின்ராசு. சாமர்த்தியமான ஒரு வியூகத்தின் மூலம் இதை மக்கள் போராட்டமாக திரட்ட முனைகிறார். இதன் மூலம் தங்களின் நீண்ட காலப் பிரச்னைகளுக்குச் சிறிய விடியலாவது பிறக்கும் என நம்புகிறார். 

சின்ராசுவின் நோக்கம் நிறைவேறிற்றா? கிட்டுவின் நிலைமை என்னானது போன்றவை பிற காட்சிகளில் விரிகின்றன. 


***

இத்திரைப்படத்தின் மிக முக்கியமான அம்சமாக திரைக்கதை கையாளப்பட்ட விதத்தைச் சொல்லவேண்டும். சாதியம் தொடர்பான திரைப்படங்கள் என்றால் ஒன்று பெரும்பாலும் வன்முறைக்காட்சிகளால் நிறைந்து இறுதிக்காட்சியில் நீதிக்கதையுடன் முடியும். அல்லது வணிகநோக்கத்துடனும் சாதியப் பெருமிதங்களுடனும் மசாலா திரைப்படமாக எரிச்சலூட்டும். ஆனால் மலையுச்சியின் ஒற்றையடிப்பாதையில் நடப்பது போன்ற கவனத்துடன் இதன் திரைக்கதையைக் கையாண்டுள்ளார் சுசீந்திரன். சாதியப்பாகுபாட்டின் அலவத்தை, ஆதிக்கச்சாதியினரின் வன்மத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் அதேவேளையில் அதுசார்ந்த பதற்றமோ, வன்முறையோ அல்லாமல் கட்டுப்பாடான நிதானத்துடன் காட்சிகளை உருவாக்கியிருப்பது சிறப்பு. 

சாதியம் சார்ந்த பதற்றம் ஏற்படும்போதெல்லாம் இதன் பாத்திரங்கள் அவற்றை முதிர்ச்சியாக எதிர்கொள்கின்றன. ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவியின் உயிரைக் காப்பாற்ற அவளைத் தொட்டு தூக்கிச் செல்ல வேண்டிய நிலைமை கிட்டுவுக்கு ஏற்படுகிறது. அந்த நேரத்து நெருக்கடியைச் சாமர்த்தியமாக எதிர்கொள்கிறான். ஆனால் உயிர் காப்பாற்றப்பட்டதை விட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் தங்கள் சமூகப் பெண்ணைத் தொட்டுத் தூக்கியதையே பிரச்னையாக முன்வைக்கிறார்கள். 

'நான் செஞ்சது, தப்புதான் மன்னிச்சுடுங்க' என்று கைகூப்பியபடி நிதானமாக வெளியேறுகிறான் கிட்டு. அவ்வாறு செய்யாமல் போனால் அது வன்முறையாக வெடிக்கும், தன்னுடைய எளிய சமூகத்துக்குப் பாதிப்பு ஏற்படும், தன் ஐஏஎஸ் கனவுக்கு இடைஞ்சல் ஏற்படும் என அவனுக்குத் தெரியும். இது கோழைத்தனமோ, பின்வாங்கலோ அல்ல. விவேகமான போராட்டத்தின் ஒரு வியூகம். ஐ.ஏ.ஏஸ் முடித்துவிட்டு மாவட்ட ஆட்சியர் ஆவதன் மூலம் தன் சமூகத்தின் விடுதலைக்காக ஜனநாயக வழியில் போராடலாம் என்கிற தெளிவு அவனுக்கு இருக்கிறது. 

இதைப் போலவே போராளியான சின்ராசுவின் காட்சிகளும் இதே போன்ற முதிர்ச்சியுடன் அமைந்திருக்கின்றன. சாதியப்பதற்றத்தைத் தணியாமல் வைத்துக் கொள்வதில்தான் தங்களின் அரசியல் இருப்பு  இருக்கிறது என நினைக்கும் அரசியல் தலைவர்களுக்கான நீதி இந்தக் காட்சிகளில் அமைந்திருக்கின்றன. 


***

'மாவீரன்' மற்றும் 'கிட்டு' போன்ற பெயர் அடையாளங்கள், ஈழத்துக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்த்தியாகம் செய்த திலீபனை நினைவுப்படுத்தும் நாயகனின் தோற்றம் ஆகியவற்றைப் படவெளியீட்டுக்கு முன்பு கவனித்தபோது இத்திரைப்படம் ஈழப்போராட்டம் தொடர்பானதாக இருக்குமோ என்கிற வலுவான அனுமானத்தை தந்தது. (இந்தியாவில் அப்படியெல்லாம் படமெடுத்து விட முடியுமா என்கிற சந்தேகமும் கூடவே இருந்தது). ஆனால் திரைப்படம் அவ்வாறாக உருவாக்கப்படவில்லை. எனில் எதற்காக இந்த அடையாளங்களை இயக்குநர் உருவாக்கினார் என்பதில் தெளிவில்லை. வீரத்தினால் மட்டுமல்ல தியாகத்தினாலும் சாதுர்யமான விவேகத்தினாலும் ஒரு சமூகப் போராட்டம் வெற்றி பெறும் என்கிற செய்தியை உணர்த்த விரும்பினாரோ என்று தோன்றுகிறது. 

பெரியவர்களின் உலகத்திலிருந்து இளம் மனங்களுக்குத் தன்னிச்சையாக கடத்தப்படும் சாதிய மனோபாவம் மற்றும் அது சார்ந்த வன்மம், அவை ஏற்படுத்தும் குழப்பம், அவை தெளிந்த பின் சமூகநீதியின் பால் மனம் திரும்பும் விதம் போன்றவற்றைக் கல்லூரி மாணவர்கள் தொடர்பான காட்சிகள் இயல்பாக உணர்த்துகின்றன. 

படம் எதைப் பற்றியது என்பது தொடக்கக் காட்சியிலேயே நமக்கு அழுத்தமாகப் புரிந்துவிடுகிறது. இது தொடர்பான விறுவிறுப்புகளோடு முதல் பாதி நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதி இந்த சுவாரசியத்தைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை. போதாக்குறைக்கு காதல் பாடல்கள் வேறு இடையூறாக வந்து எரிச்சலையூட்டுகின்றன. சின்ராசு நிகழ்த்தும் மக்கள் பேராட்டம், வார்த்தைகளில் மட்டும் பிரமாண்டமாகச் சொல்லப்படும்போது காட்சிகளில் அது வலிமையாக வெளிப்படவில்லை. 

ஆணவக்கொலையொன்று நிகழும் காட்சியில் அதை முன்பே எளிதாக யூகித்து விட முடிகிறது. (அந்தக் காட்சியில் நடித்த பெரியவரின் நடிப்பு அபாரமானதொன்று). போலவே இதன் உச்சக்காட்சியையும் எளிதாக யூகித்து விட முடிந்தது. மட்டுமல்லாமல் உச்சக்காட்சி அழுத்தமானதாக இல்லாமல் மொண்ணையாக முடிந்தது திரைக்கதையின் பெரிய பலவீனம். ஒரு நோக்கில் படம் முழுவதுமே ஸ்கூல் டிராமா போல சாதாரணமான உருவாக்கமாக இருப்பது போன்று ஒரு பிரமை. 

***

யுகபாரதியின் வசனங்கள் அருமை. வார்த்தை ஜாலத்துடனும் சினிமாத்தனமாகவும் இருந்தாலும் சில இடங்களில் சூழலின் பின்னணிக்குப் பொருத்தமான, அழுத்தமான உரையாடலாக அமைந்திருக்கிறது. 'சாப்பிடற சோத்துல கல்லு வந்து எரிச்சல்படுத்தறா மாதிரி, அவனுங்க எதையோ செஞ்சிக்கிட்டே இருக்காங்கல்ல' என்று ஆதிக்கச்சாதி பெரியவர் ஒருவர் உறுமும் காட்சியின் வசனத்தை உதாரணமாகச் சொல்லலாம். 

சில பலவீனங்கள் இருந்தாலும் ஏற்கெனவே விவரித்தபடி படம் முழுக்க இயக்குநரின் கட்டுப்பாட்டில் நிதானமான போக்குடன் நகர்கிறது. நடிகர்களும் இதைக் கச்சிதமாக எதிரொலிக்கின்றனர். தேவையற்ற ஒரு சாகசக் காட்சியைத் தவிர படம் முழுவதும் விஷ்ணு விஷால் ரசிக்கத்தக்க வகையில் இயல்பான அமைதியுடன் நடித்திருக்கிறார். இதைப் போலவே பார்த்திபனும். தனது வழக்கமான கோணங்கித்தனங்களைக் கைவிட்டு நடித்திருப்பது சிறப்பு. 

நடிகர்களின் வரிசையில் மிகவும் ஆச்சர்யப்படுத்தியது பரோட்டா சூரி. அவர் இந்தப்படத்தில் இருக்கிறாரா என்று கூட தோன்றும்படி ஓரமாக வந்து போகிறார். வழக்கமாக உரத்த குரலில் பேசி நகைச்சுவையூட்டும், சமயங்களில் எரிச்சலூட்டும் அவரது பாணியை முற்றிலுமாக முடக்கிப்போட்டு இயல்பாக நடிக்க வைத்திருப்பதற்காக இயக்குநரைப் பாராட்ட வேண்டும்.

ஆதிக்கச்சாதிகளுக்கு ஆதரவாக இயங்கும் போலீஸ் வில்லனாக ஹரீஷ் உத்தமன் சிறப்பாக எரிச்சலூட்டியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்தை வேரறுக்கும் வகையில் நிதானமாக ஒவ்வொரு காயாக நகர்த்தும் நாகிநீடுவின் நடிப்பும் சிறப்பு. ஸ்ரீதிவ்யா வழக்கமான நாயகி. அமைதியான நடிப்பு.

எண்பதுகளின் காலக்கட்டத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு விஷயத்தையும் சிரத்தையுடன் கவனித்து உருவாக்கியிருக்கும் கலை இயக்குநரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. இமானின் பாடல்கள் வழக்கமான 'கும்கி'த்தனம். சூர்யாவின் ஒளிப்பதிவு எங்கும் உறுத்தலாக இல்லாமல் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு முக்கியமான சமூகப் பிரச்னையைக் கருப்பொருளாகக் கொண்டு சிரத்தையுடன் உருவாக்க முனைந்திருக்கும் சுசீந்திரனின் பங்கு பாராட்டத்தக்கது. தேய்வழக்குக் கதைகூறல் முறையை இயக்குநர் பல இடங்களில் தவிர்க்க முயன்றிருந்தாலும் திரைப்படத்தின் பிற்பாதி கனமே இல்லாமல் சமநிலையை இழந்திருக்கிறது. 

வன்முறைக் காட்சிகளுக்கான வாய்ப்பிருந்தும் அதைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு பிரச்னைக்கான ஆக்கபூர்வமான தீர்வை நிதானமான போக்கில் சொல்லியிருக்கும் காரணத்துக்காகவே 'மாவீரன் கிட்டு' கவனத்துக்குரிய படைப்பாக மாறியிருக்கிறது. 
 

]]>
மாவீரன் கிட்டு, விமரிசனம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/3/w600X390/maaveran_kittu10.JPG http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/dec/03/சுசீந்திரனின்-மாவீரன்-கிட்டு---சினிமா-விமரிசனம்-2609800.html
2609199 சினிமா திரை விமரிசனம் விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' - சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Friday, December 2, 2016 04:00 PM +0530  

தமிழ் சினிமாவினால் தனது படைப்புகள் தொடர்ந்து கொத்து பரோட்டா போடப்பட்டதைப் பற்றிப் பலமுறை புலம்பியிருக்கிறார் எழுத்தாளர் சுஜாதா. அந்த வரிசையில் அவருடைய படைப்பைக் கைமா செய்த இன்னொரு படம்தான் 'சைத்தான்'. இதுகுறித்த சலிப்புடன் நரகத்திலிருந்து சுஜாதா ஏதாவது எழுதிக் கொண்டிருக்கக்கூடும். (அவர் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்பவில்லை).

கணினி நிறுவனத்தில் பணிபுரியும் தினேஷின் மண்டையில் திடீரென சில குரல்கள் கேட்கின்றன. தற்கொலை செய்யச் சொல்லி கட்டளையிடுகின்றன. தினேஷ் தனது நண்பனின் சாவுக்குக் காரணமாகிறான். அதுகுறித்த குற்றவுணர்வும் அசரிரீகள் ஏற்படுத்தும் மனநெருக்கடியும் என உளைச்சலுக்கு ஆளாகிறான். அந்தக் குரல் அவனை தஞ்சாவூர் என்கிற அந்நியப் பிரதேசத்துக்கும் வேறுபல சிக்கல்களுக்கும் இட்டுச் செல்கின்றன. கடந்த ஜென்மத்தின் நிழலுருவங்கள் அதன் பின்னணியில் அசைகின்றன.

தினேஷின் இந்த விநோதமான பிரச்னைக்குக் காரணமும் பின்னணியும் என்ன, அவற்றில் இருந்து விடுபட்டானா?  என்பதையெல்லாம் முதல் பாதியில் சுஜாதாவின் 'ஆ' நாவலுக்கு சற்று விசுவாசமாகவும் பிற்பாதியில் நாவலில் இருந்து மொத்தமாக விலகி தமிழ் சினிமாவின் வழக்கமான 'உட்டாலக்கடி' பாணியில் சலிப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள். 


***

'சைத்தான்' திரைப்படம் சுஜாதாவின் 'ஆ' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானது என்கிற தகவலை 'spoilers' காரணமாக திரைப்படக்குழு அடக்கி வாசிக்க விரும்பியது ஒருவகையில் நியாயமான விஷயம். ஆனால், படம் பார்த்த பிறகு, நாவலை இத்தனை மேலோட்டமாகவா கையாள்வார்கள் என்று பயங்கரமான எரிச்சல் தோன்றியது. 

ஒரு புகழ்பெற்ற நாவலைச் சுருக்கி, திரைப்பட மொழியில் மாற்றுவது சவாலான விஷயம்தான். நிச்சயம் அத்தனை பெரிய வாசகப் பரப்பை திருப்திப்படுத்த முடியாது. நாவலுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாத விஷயம் என்றாலும்கூட அதைச் சற்று நேரம் மறந்துவிட்டு சினிமாவாக மட்டும் பார்த்தால் கூட 'சைத்தான்' மிகச் சாதாரணமான உருவாக்கம். வெகுஜனப் பார்வையாளர்களுக்காக நிறைய விஷயங்களை மாற்றி எளிமைப்படுத்தியதற்குப் பின்னால் உள்ள உழைப்பையும் நோக்கத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும், நாவலின் ஆன்மாவைச் சாகடித்த அந்த விஷயத்தை சகிக்கவே முடியாது.

Reincarnation, Schizophrenia, Auditory hallucination, ஹிப்னாடிசம், யோகா, திருச்சி, பகவதியம்மன் கோயில், மனநிலைப் பிறழ்ந்தவர்கள் செய்யும் குற்றங்கள் தொடர்பான சட்டச்சிக்கல்கள், அதிலுள்ள ஓட்டைகள் என்று தன் நாவலில் கலந்து கட்டி அசத்தியிருப்பார் சுஜாதா. வெகுஜன வாசகர்களுக்காக இந்த விஷயங்களை சுஜாதாவும் கொத்து பரோட்டா போட்டிருப்பார் என்றாலும் பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவலில் மருத்துவம் உள்ளிட்ட பல விஷயங்களின் அரிய தகவல்கள் போகிற போக்கில் குவிந்திருக்கும். மேலும் சுஜாதா எனும் திறமையான கதைசொல்லியின் மூலம் நம்பகத்தன்மை மிகுந்த உலகம் நம் முன் நிற்கும். சமயங்களில் நம் மண்டைக்குள்ளே குரல் கேட்கக்கூடிய ஒரு சாத்தியத்தை அந்த வாசிப்பனுபவத்தின் மூலம் நமக்கு ஏற்படுத்தியிருப்பார் சுஜாதா.


***

சைத்தான் திரைப்படத்தில் இந்த மாயாஜாலம் எதுவுமே நிகழவில்லை. திரும்பத் திரும்ப சொல்வதுதான். திரைக்கதையுடன் பார்வையாளனை உணர்வுபூர்வமாகக் கட்டிப் போடாத சினிமா எத்தனை தொழில்நுட்ப ஜிகினாக்களை இறைத்தாலும் எடுபடாது. அழுத்தமான, சுவாரசியமான திரைக்கதைதான் அதன் ஆதாரம். 'பாசமலர்' திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் சிவாஜி அழும் காட்சியை மட்டும் துண்டாகப் பார்த்தால் இன்று சிரிப்பு வரக்கூடும். ஆனால் முழுப்படத்தின் தொடர்ச்சியோடு, அந்த உணர்வுக்கடத்தலோடு பார்த்தால் இன்றைய தலைமுறைப் பார்வையாளன் கூடத் தன்னிச்சையாகக் கண்கலங்குவான். அதுதான் அந்தத் திரைக்கதையின் மாயாஜாலம். சினிமாவின் வெற்றி. 

வெகுஜனப் பார்வையாளர்களுக்குப் புரியும்படி நாவலை எளிமைப்படுத்தியது வரையில் கூட சரி. ஆனால் நாவலின் மிக ஆதாரமான விஷயமே தினேஷின் மண்டையில் ஒலிக்கும் குரல்தான். தன் வாசகர்களைப் பல வழிகளில் திசை திருப்புவதற்காகப் பல்வேறு சுவாரசியமான மீறல்களை சுஜாதா செய்திருந்தாலும் அவனுடைய மனச்சிதைவே அவனுடைய சிக்கலின் ஆதாரமான காரணம் என்கிற மையத்திலிருந்து விலகியிருக்கமாட்டார்.

ஆனால் சைத்தான் திரைப்படம் படத்தின் பிற்பாதியில் இந்த விஷயத்தை அப்படியே கை விட்டு விட்டு மனைவியைத் தேடும் நாயகனின் சாகசம், மனித உடல்மீது சட்டவிரோதமாகச் செய்யப்படும் பரிசோதனை என்று லாஜிக்கே இல்லாமல் ஜல்லியடித்துக் குழம்பி விட்டது. எழுத்திலிருந்து உருவாகும் சினிமா, அதிலிருந்து மீறலாம் என்றாலும் எழுத்தை விட சிறப்பாக அமைந்திருக்கவேண்டும் என்பது ஆதாரமான விதி. சைத்தானில் இது நிகழவில்லை.


***

சினிமாவின் இதர துறைகளில் பிரபலமானவர்கள், அந்தப் புகழ் மீதான அடிப்படையில் நடிக்க வருவதும் அது நமக்குச் சகிக்க முடியாமல் போவதும் மோசமான விஷயம். விஜய் ஆண்டனியின் நிலைமையும் அதுவே. விருந்தில் அதிகம் சாப்பிட்டு விட்டு ஆசை அடங்காமல் அதன் மீது ஒரு ஐஸ்கிரீமையும் விழுங்கி விட்டு பிறகு ஒருமாதிரியாக அவஸ்தையுடன் முழிப்போம் அல்லவா? விஜய் ஆண்டனியின் முகபாவங்கள் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கின்றன. 'ஏன் இந்த மூஞ்சுல ரொமான்ஸ்ஸூம் நடிப்பும் வரமாட்டேங்குது' என்று நம் மண்டைக்குள் ஒரு குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. 

நாயகி அருந்ததி நாயர் நிறையவே புஷ்டியாக இருந்தாலும் சில காட்சிகளில் நடிக்க முயன்றிருக்கிறார். சில காட்சிகளில் களையாக இருக்கிறார். தொடக்கக் காட்சிகளில் இவர் இலைமறையாக ஏதோ பேசுவதைக் கேட்டவுடன் இவர் நாயகனின் மனைவியா அல்லது வேறு ஏதாவதா என்று நமக்குச் சந்தேகமே வந்து விடுகிறது. அத்தனை இரட்டை அர்த்தம். 'ஆடுகளம்' முருகதாஸை ஐடி ஊழியராக நடிக்க வைத்திருப்பதெல்லாம் casting அபத்தம். டெடரான வில்லனாகக் காட்டும் மருத்துவரைப் பின்பு காமெடியாகச் சித்தரிப்பதெல்லாம் character assassination.

நாவலில் சிறுவன் கோபாலனின் மறுபிறவிதான் சமகால தினேஷ் என்று சுஜாதா எழுதியதில் ஒரு காரணம் இருந்தது. விஜய் ஆண்டனி டபுள் ரோலில் வருவதற்காகவோ என்னவோ இதை சினிமாவில் மாற்றியிருக்கிறார்கள். செய்து விட்டுப் போகட்டும். ஆனால் தஞ்சாவூரில் இருக்கும், ஜெயலஷ்மியின் பின்னணி விவரங்களை அறிந்த பெரியவரான சாருஹாசனுக்கு சர்மாவின் அச்சான ஜாடையில் இருக்கும் தினேஷைப் பார்த்ததும் அந்தக் கேள்வி எழுந்திருக்க வேண்டுமே? இல்லை. சாருஹாசன் விநோதமாக விழித்துப் பார்ப்பதோடு இது முடிந்துவிடுகிறது. இது மட்டுமல்ல, படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் நாயகனை எவராவது பூடகமாக முறைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். இதுதான் சஸ்பென்ஸ் என்று இயக்குநர் சித்தரிக்க முயன்றால், இதெல்லாம் பழைய 'அதே கண்கள்' காலக்கட்டத்திலேயே முடிந்துவிட்டது என்பதை அவருக்கு யாராவது சொல்ல வேண்டும். 

பின்னணி இசை சில சமயங்களில் காட்சிக்குப் பொருத்தமாக வசீகரமான ஓலத்துடன் ஒலிக்கிறது. ஆனால் என்ன புண்ணியம்? வயிற்று வலி உபாதையுடனான குரலில் விஜய் ஆண்டனியே பாடுவதெல்லாம் ஓவர். இரண்டுப் பாடல்கள் தவறான இடத்தில் வந்து சலிப்பூட்டுகின்றன.

***

இத்திரைப்படத்தின் விளம்பரங்களில் சுஜாதாவின் வாசகனாக அவரின் பெயரைப் பிரதானப்படுத்தவில்லையே என்று எனக்கு ஆதங்கமாக இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்த பிறகு அவரின் பெயரைக் குறிப்பிடாமல் இருந்திருந்தால் அதுவே சிறந்த அஞ்சலியாக இருந்திருக்கும் எனத் தோன்றிற்று. 

சுஜாதாவின் நாவலைச் சிதைத்த காரணமாக அந்த வலியில் படத்தின் முற்பகுதியில் ஏற்பட்ட 'ஆ' என்கிற சத்தம், பிற்பகுதியின் சலிப்பால் 'ஆவ்'.. என்று கொட்டாவி விடும்படியாகி விட்டது.  

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் 'அப்பாலே போ.. சைத்தானே'

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/2/w600X390/saithanxx1111.jpg http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/dec/02/விஜய்-ஆண்டனியின்-சைத்தான்---சினிமா-விமரிசனம்-2609199.html
2601360 சினிமா திரை விமரிசனம் ஜி.வி.பிரகாஷ் நடித்த 'கடவுள் இருக்கான் குமாரு': சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, November 19, 2016 10:53 AM +0530  

இயக்குநர் எம். ராஜேஷின் திரைப்படங்களில் கதை, லாஜிக் என்று பெரிதாக ஏதும் இருக்காது. நாயகன்  தன் காதலைத் துரத்துவது. இருவருக்கும் நேரும் ஊடலும் கூடலும், உதவி செய்கிறேன் என்கிற  
பேரில் உபத்திரவம் செய்யும் நண்பன். 

அவருடைய எல்லாத் திரைப்படங்களிலும் இந்த ஒருவரிக்கதைதான் திரும்பத் திரும்ப வரும். இந்த திரைப்படத்திலும் அதேதான்.

சமகால இளைஞர்களின் கலாய்ப்புத்தன்மையுடன் கூடிய உரையாடல்கள்தான் ராஜேஷ் உருவாக்கும் நகைச்சுவையின் அடிப்படை. வானத்தின் கீழே உள்ள சகல விஷயங்களையும் நபர்களையும் கதறக் கதறக் கலாய்ப்பார்கள். கூடவே பரஸ்பரம் தங்களையும் கிண்டலடித்துக் கொள்வார்கள். அப்போதைய சர்ச்சைகள், வம்புகள் ஆகியவற்றை மீம்ஸ் ஆக உருமாற்றி இணையத்தில் நகைச்சுவையாக்கும்  அதே பாணிதான். சமயங்களில் எல்லை மீறிப் போனாலும் இவற்றில் சில ரசிக்கத்தக்க வகையில் இருக்கும். 

இதுபோன்ற தொடர் நகைச்சுவையைத் தனது பிரத்யேகமான திரைக்கதையாக உருவாக்குவது ராஜேஷின் பாணி. இந்த வகையில் ஒழுங்கும் கோர்வையும் மிக கச்சிதமாக ஒருங்கிணைந்து வந்த முன்உதாரணம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. ஆனால் இந்த மாயாஜாலம் 'கடவுள் இருக்கான் குமாரு'வில் நிகழாமல் போனது பரிதாபம்.

***

முதல் காட்சியிலேயே படம் நேரடியாகத் தொடங்கிவிடுகிறது. குமாருக்கும் ப்ரியாவுக்கும் நிச்சயதார்த்தம். அடுத்த இரண்டு நாள்களில் திருமணம். குமாரின் முன்னாள் காதலியான நான்சி என்கிற பெயர் இடையூறாக இவர்களின் இடையில்  நுழைகிறது. ப்ரியா கடுப்பாகிறாள். 'இனி அவள் பெயரையே உச்சரிப்பதில்லை' என்கிற போலி வாக்குறுதியின் பேரில் குமார் தப்பிக்கிறான். பாண்டிச்சேரியில் 'பாச்சுலர் பார்ட்டி' கொண்டாடுவதற்காக அவளிடம் கெஞ்சிக்கூத்தாடி கிளம்புகிறான். ஆனால் திரும்பி வரும் வழியில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். திருமணத்துக்காக அவன் சென்னை திரும்பியேயாக வேண்டும். ஆனால் முட்டுக்கட்டையாக சில நெருக்கடிகள் உருவாகின்றன. 

குமாரின் அந்தச் சிக்கல்கள் என்ன, அது தீர்ந்ததா, திருமணம் நடந்ததா, நான்சி யார் என்கிற விவரங்களை முற்பாதியில் சுவாரசியமாகவும் பிற்பாதியில் இழுவையாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

***

இசையமைப்பாளர்கள் நடிக்க வந்து விடும் காலக்கட்டம் இது. தம்முடைய  திறமை பிரகாசிக்கும் துறையில் நீடிப்பதே ஒருவரின் வளர்ச்சிக்கு நல்லது என்பதற்கான சிறந்த உதாரணம் ஜி.வி. பிரகாஷ். திரையில் அவர் நடிப்பதைப் பார்க்கும் அபத்தங்களைப் பார்க்கும்போது சிறுவனொருவன் இளைஞனின் வேடத்தை ஒட்டிக்கொண்டு ஃபேன்ஸி டிரஸ் போட்டியில் கலந்து கொள்வதைப் போலவே எனக்குத் தோன்றும். இதிலும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் ஆச்சரியகரமாக இத்திரைப்படத்தில் நடிக்க முயன்றிருக்கிறார். ராஜேஷின் பிரத்யேகமான கதாநாயகன் நன்றாக எட்டிப் பார்க்கிறான். ஜி.வி. பிரகாஷ் சில காட்சிகளில்  ரசிக்க வைக்கிறார். 

ஆஸ்தான துணை நாயகனான சந்தானம் இல்லாத குறையை ஆர்.ஜே. பாலாஜி தீர்க்க முயல்கிறார். இவர் சொல்லும் எதிர்வசன நகைச்சுவைகளுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. பிரகாஷ்ராஜ் தனது வழக்கமான கடுமையையும் நகைச்சுவையையும் இணைந்து தர முயன்றிருக்கிறார். ஆனால் இறுதிக்காட்சியில் மட்டும் இது எடுபடுகிறது. ரோபோ சங்கர், சிங்கம்புலி போன்றவர்கள் நகைச்சுவை என்ற பெயரில் எதையோ செய்ய முயன்றிருக்கிறார்கள். 

'மைக்கேல் ஆசிர்வாதமாக' வரும் எம்.எஸ்.பாஸ்கர், தனது வழக்கமான நடிப்பை கைவிட்டு இதில் வித்தியாசமாக நடிக்க முயன்றிருப்பது சிறப்பு. பணக்காரத் தோரணையுடன் தோன்றும் ஆனந்தி அழகாக இருக்கிறார். நடிக்கவும் செய்திருக்கிறார். பாடல்காட்சிகளில் நிக்கி கல்ராணி கவர்ச்சியான உடைகளில் வரும்போது, ஆனந்தி கண்ணியத்தைக் காப்பாற்றியிருக்கிறார். நிக்கி  கல்ராணிக்கு பெரிதான வாய்ப்பில்லை. 


***

ஹாரிஸ் ஜெயராஜின் கிறிஸ்துவ பாடல்களின் இசை நகல், சிம்பு, பிஎஸ்என்எல் விளம்பரம், மீனம்பாக்கம் விமானநிலையத்தில் கண்ணாடி தொடர்ச்சியாக உடைதல், விஜய் டிவி அவார்ட் அழுகை என்று சமகாலத்தின் சகல விஷயங்களையும் வசனங்களில் தைரியமாக நக்கலடிக்கிறார்கள். சில விஷயங்கள் எல்லை மீறிப் போகின்றன. தமிழ்நாடு மறந்து போயிருக்கிற ஃபீப் சாங்கை மறுபடியும் நினைவுப்படுத்தியிருக்கும் விபத்தும் நிகழ்ந்திருக்கிறது. 

இந்தக் கிண்டல்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது 'சொல்வதெல்லாம் உண்மை' போன்ற தொலைக்காட்சி 'கட்டபஞ்சாயத்து' நிகழ்ச்சிகளைச் சகட்டு மேனிக்குக் கிண்டலடித்திருக்கும் பகுதியைச் சொல்லலாம். தங்களின் வணிகத்துக்காக அப்பாவியான, எளிய சமூக மக்களின் குடும்ப விஷயங்களில் மூக்கை நுழைத்து தப்பும் தவறுமாக பஞ்சாயத்து செய்து அதில் பரபரப்பு மசாலாக்களைக் கூட்டி அவர்களின் பிரச்னைகளை இன்னமும் பூதாகரமாக்கும் விஷயத்தை நகைச்சுவையின் இடையே அம்பலப்படுத்தியிருப்பது சிறப்பு. தொலைக்காட்சி உத்தரவிடுவதற்கேற்ப தன் நிலையை மாற்றிக்
கொள்ளும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஊர்வசி அசத்தியிருக்கிறார். ஆனால் மிகையான அலட்டல். இந்தப்பகுதி சுவாரசியமாக இருந்தாலும் இழுவையான நீளம்.

ராஜேஷின் படங்களில் 'டாஸ்மாக்' குடி காட்சிகள் நிறைய வருகின்றன என்கிற புகாரினாலோ என்னவோ இத்திரைப்படத்தில் அவற்றை தவிர்த்திருக்கிறார். மதுபாட்டில்களை காட்டுவதோடு சரி. அதற்கு மாறாக நாயகனும் நண்பனும் 'கும்பகோணம் காபி' குடிக்கும் காட்சி மட்டுமே வருகிறது. (சாதா தம்ளர்ல குடிச்சா சாதா காஃபி, பித்தளை தம்ளர்ல குடிச்சா கும்பகோணம்  காபி).

ஜி.வி.பிரகாஷே இசையும் கூட. அவர் நடிப்பதைப் பார்க்கும் கொடுமையோடு இதையும் அனுபவிக்க நேர்கிறது. தமிழ் சினிமாவின் வழக்கமான விபத்து போல எரிச்சலூட்டும் ஸ்பீடு பிரேக்கர்களாக பாடல்கள். 'இரவினில் ஆட்டம்' என்கிற சிவாஜியின் பழைய பாடலை ரீமிக்ஸ் செய்ய முயன்றிருப்பது மட்டும் சற்று ரசிக்க வைக்கிறது. 

முதல் பாதி சற்று சுவாரசியமாகச் செல்லும்போது இரண்டாம் பாதி சறுக்கி விடுகிறது. பேய்ப்படங்களை கிண்டலடித்திருக்கும் பகுதி சுவாரசியமில்லாதது மட்டுமன்றி திரைக்கதை சுவாரசியத்தின் வீழ்ச்சிக்கும் காரணமாகி விடுகிறது. 

***

இத்திரைப்படத்தின் குழுவே நேர்மையாக ஒப்புக் கொண்ட படி, 2009-ல் வெளிவந்த 'The Hangover' எனும் ஹாலிவுட் திரைப்படத்தை உள்ளூர் வடிவத்துக்கு ஏற்றபடி மனம் போன போக்கில் திரைக்கதையாக மாற்றியிருக்கிறார்கள். பிரேக் இல்லாத வாகனம் போல இதன் திரைக்கதை அதன் இஷ்டத்துக்கு அலைபாய்ந்து நம் மீது வந்து மோதி நிற்கிறது. 

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி எம்.ராஜேஷ் அவருடைய பாணியில் இதுவரை உருவாக்கிய  திரைப்படங்களில் முழுமையான அழகும் கோர்வையும் கூடி நின்ற திரைப்படம் என்பது 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. எந்த விஷயத்திலும் ஆர்வமும் நோக்கமும் இன்றி இலக்கின்றி அலைபாயும் சமகால இளைஞர்களின் மனோபாவத்தை அதன் நாயகன் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். 

குறிப்பாக ஒரு காட்சியை சொல்ல வேண்டுமானால் வங்கி மேலாளரிடம் நாயகன் கடன் கேட்கச் செல்லும் காட்சியைச் சொல்லலாம். 'எதற்காக, எவ்வளவு கடன்?' என்கிற அடிப்படையான, சாதாரணமான கேள்விக்கு கூட தடுமாற்றத்துடன் தெளிவில்லாமல் அலட்சியத்துடன் நாயகன் பதில் சொல்லும் காட்சியைக் கவனியுங்கள். அதுதான் அந்தப் பாத்திரத்தின் வடிவமைப்பின் சிறப்பு. 'சிவா மனசுல சக்தியும்' கவரக்கூடிய படைப்பே. முந்தைய படங்களைத் தாண்டிச் செல்வதை விட்டு விட்டு  அதிலிருந்து பின்னோக்கிச் செல்வது இயக்குநரின் கற்பனை வறட்சியைக் காட்டுகிறது. ஆனால் தனது முந்தைய திரைப்படங்களின் பாணியிலிருந்து சற்று விலக முயன்றிருப்பது மகிழ்ச்சி. 

சமகால இளைஞர்களின் மனோபாவத்தை கேளிக்கையாக மாற்றித் தருவதே ராஜேஷ் திரைப்படங்களின் பாணி. அதற்கு மேல் இவற்றுக்கு மதிப்பில்லை. இந்தத் திரைப்படம் அந்த நோக்கத்தையும் கூட சிறப்பாக நிறைவேற்றவில்லை. 

'கடவுள் இருக்கான் குமாரு, ஆனால் கதையே இல்லையே ராஜேஷூ!'

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/19/w600X390/KIK-6325xx11.JPG http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/nov/19/ஜிவிபிரகாஷ்-நடித்த-கடவுள்-இருக்கான்-குமாரு-சினிமா-விமர்சனம்-2601360.html
2597336 சினிமா திரை விமரிசனம் அச்சம் என்பது மடமையடா! கோட்டை விட்ட திரைக்கதை! உமா ஷக்தி Wednesday, November 16, 2016 01:23 PM +0530 சில இயக்குனர்களின் படங்களுக்கு நிச்சயம் பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பு இருக்கும். மின்னலே படத்தில் தொடங்கி அச்சம் என்பது மடமையடா வரையில் கெளதம் வாசுதேவ் மேனனின் படங்களுக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக தயாரிப்பில் இருந்து வந்த அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் கெளதம் மேனனின் மேஜிக் நிகழ்ந்திருக்கிறதா என்று பார்க்கலாம்.

அவன் அவளுடைய தோழியின் அண்ணன். விஸ்காம் முடித்துவிட்டு தோழியின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருக்கிறாள். (அவளைக் கண்டதும் காதல் கொள்கிறான் அவன்). அவளுக்கோ அவனுடைய பெயர் கூட தெரியாது. எதிர்ப்படும் சமயங்களில் புன்னகைகளை பரிமாறிக்கொள்வதும், உறக்கமற்ற இரவுகளின் அரட்டைகளும் மட்டுமே அவனைப் பற்றிய அறிதல்கள். இந்நிலையில் அவனுடன் ஒரு நீண்ட பயணத்தை தொடங்க முடிவெடுக்கிறாள் லீலாவாகிய அவள் (மஞ்சிமா மோகன்).  லீலாவுக்கும் அவனுக்கும் (சிம்பு) இடையேயான காதலும், அதன் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும், குழப்பங்களும் அதன் பின்னணியும், சில ப்ளாஷ்பேக்குகளின் தொகுப்பு தான் இந்த ரொமான்ஸ் ஆக்‌ஷன் படம்.

எதிர்ப்பார்த்தவை மட்டுமே வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்குமா என்ன? பல விஷயங்கள் நம் கைமீறித் தானே நிகழ்கின்றன. இரவில் உறங்கச் செல்லும் முன் இன்று நள்ளிரவு முதல் உங்களிடம் இருக்கும் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று ஒரு அரசு அறிவிக்கும் என்று நாம் எதிர்ப்பார்த்தோமா என்ன? சொந்த வாழ்க்கை மட்டுமல்லாமல் அரசியல், சமூகம் என பல தளங்களில் எதிர்பாராதவையே நிகழ்கின்றன. அவற்றின் மொத்த தொகுப்புத்தான் மனித வாழ்க்கை. வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் நம்மை அதற்குத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் இது தான் இப்படத்தின் ஒரு வரிக் கதை.

எழுத்தாளர் ஜி.நாகராஜனின் புகழ்ப்பெற்ற வாக்கியமான நாளை மற்றொரு நாளே’ என்ற வாக்கியம் போல ஒரேவிதமாகப் போய்க்கொண்டிருந்த நாயகனின் வாழ்க்கையில் திடீர் என்று ஒரு திருப்பம் ஏற்படுகிறது. காதல் என்ற ஒன்று மனத்துக்குள் முகிழ்ந்தபின் ஒவ்வொரு நாளும் அவனுக்கு புத்தம் புதிது. காதல் தரும் ஒளிய அவன் உள்ளும், புறமும் சிற்சில மாற்றங்களுக்கு உட்படுகிறது. தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. விட்டேத்தியாகத் திரிந்து கொண்டிருந்தவனை பொறுப்புள்ளவனாக மாற்றுகிறது. அவளுடனான பைக் பயண முடிவில் அவன் முற்றிலும் வேறு ஒருவனாக மாறி, அவனுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையை திசை மாற்றப்படுகிறது. சாவின் விளிம்பில் நின்று கொண்டு செயலற்ற நிலையில் துரிதமான சில முடிவுகளை எடுக்கச் செய்கிறது. துப்பாக்கியைக் கையில் எடுத்தவன் அதைக் கீழே போட்டானா அல்லது மிச்சமிருக்கும் வாழ்க்கை முழுவதும் தன்னுடன் தக்க வைத்துக் கொண்டானா என்பதை அழகியலுடன் இத்திரைப்படத்தில் விளக்கியிருக்கிறார் கெளதம் மேனன்.

படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பரிசாய் கிடைத்திருப்பது மீண்டும் மீண்டும் கேட்க / பார்க்கத் தூண்டும் பாடல்கள். விக்னேஷ் இயற்றியுள்ள ஷோக்காலி பாடலும், மதன் எழுதியுள்ள ’இது நாள் வரையும்’ பாடலும் அச்சு அசல் ஏ.ஆர்.ரஹ்மான் மேஜிக். பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளை நானும் அவளும் பாடலில் சுகமான மெட்டில் இசையமைத்துள்ள ரஹ்மானை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கவிஞர் தாமரையின் வரிகளில் தள்ளிப் போகாதே, ராசாளி பாடல்களும் அருமை. படம் வெளிவருதற்கு முன்னரே வைரலாகிவிட்டன பாடல்கள். இந்தப் படத்தின் வெற்றிக்கு பெரும் பங்களித்திருப்பது இசை. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை இன்னொரு தளத்துக்கு உயர்த்திச் சென்றது ஏ.ஆர். ரகுமானின் இசைதான். அதே போல அச்சம் என்பது மடமையடா படத்தின் முதல் பாதியை முழுக்க முழுக்க தன் இசையால் ஆக்கிரமித்துவிட்டார் ஏ.ஆர்.ரகுமான். தள்ளிப் போகாதே, ராசாளி ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் பாடல்களை முணுமுணுக்காத உதடுகள் இல்லை. படத்தின் முதல் பகுதி பாடல்களுக்கு இடையில் தான் வருகிறது எனும்படி ஒவ்வொரு பாடலும் கதையோட்டத்துடன் ஒத்திசைவாக, சிறப்பான ஒளிப்பதிவுடன் காண்பவர்களை பரவசத்தில் ஆழ்த்துகின்றன.

சிம்பு மற்றும் மஞ்சிமா மோகன் உள்ளிட்ட அனைவரின்  நடிப்பும் இயல்பும் எதார்த்தமானதாகவும் இருந்தது. லீலாவை (மஞ்சிமா மோகன்) சுதந்திரமான சிந்தனையுள்ள பெண்ணாக சித்தரித்ததற்கும், கதையின் மையப்பாத்திரமாக நாயகியை முன் நிறுத்தியதற்கும் இயக்குனரை பாராட்டலாம். மஞ்சிமா மோகன் ஆரம்பத்தில் சிம்புவுடனான காதல் காட்சிகளிலும் சரி, அப்பா அம்மாவுக்காக துடித்து துயர் அடையும் காட்சிகளாகட்டும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். சிரிப்பும், நெகிழ்ச்சியும், உயிர்ப்பும் நடிப்புமாக ஒரு நாயகியை திரையில் உலவ விட்டிருக்கும் கெளதம் மேனனை பாராட்டலாம்.

படத்தைத் தூக்கி சுமப்பவரான சிம்பு கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதல் பொங்கி வழியும் கண்களும், தாடிக்குள் மலர்ந்த முகமுமாக சிம்புவின் புதிய தோற்றம் அழகு. முக்கியமாக தள்ளிப் போகாதே பாடல் காட்சியில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் முகபாவங்கள், ஆக்‌ஷன் காட்சிகளில் சுறுசுறுப்பு, பொறியில் சிக்கிவிட்ட இயலாமையின் கணங்களில் கண்களால் வெளிப்படுத்தும் துயர் போன்ற முக்கிய இடங்களில் மிகையற்ற நடிப்பால் அசத்தியிருக்கிறார். சிம்புவின் அப்பாவாக நடித்திருப்பவர் தன் மகனின் பெயர் சொல்லும் ஒற்றை வரி வசனத்தில் கைதட்டல் பெறுகிறார். தமிழ் திரைக்கு ஒரு அழகான அப்பா கிடைத்துள்ளார். பாபா சேகலின் நடிப்பு அவர் திடீரென்று பேசும் தமிழ்ச்சொற்கள் கருத்தை கவர்வதில்லை. டேனியல் பாலாஜி தூக்கக் கலகத்தில் வந்து நடித்துவிட்டுப் போயிருப்பதைப் போல திரையில் தோன்றுகிறார். அவரின் பாத்திரப்படைப்பும் முழுமை அடையவில்லை.  

படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் நாயகனின் பைக். பைக் தான் சிம்புவின் முதல் காதலில். வகித்திருப்பது பைக். பெரும்பாலான நடுத்தர வர்க்க இளைஞர்களின் கனவு வாகனம் அது. கை நிறைய சம்பளம், ஒரு பைக், பின்னால் கட்டியணைத்தபடி அமர்ந்து உடன் பயணிக்கும் ஒரு காதலி. இதுவே ஒவ்வொரு சராசரி இந்தியனின் கனவு. இன்னும் சிலருக்கு பைக் என்றால் சுதந்திரம். தரை, வானம், காற்று, நகரும் நாம் என்று அவர்கள் பைக்கில் ஊர் ஊராக பயணம் செய்வதை சாகசமாகச் செய்து வருவார்கள். இந்தப் படத்தில் இலக்கற்ற ஒருவனுக்காக இலக்கை தேர்ந்தெடுத்துக் கொடுத்ததன் ஆரம்பம் பைக் பயணம் தான். 

தனுஷ் நடித்து வெற்றி பெற்ற பொல்லாதவன் படம், பயணத்தினூடே கதை நகரும் ‘பையா’ போன்ற படங்களில் சில சாயல்கள் இப்படத்தில் இருந்தாலும் இக்கதையை இயக்குனர் கையாண்ட விதம் முற்றிலும் வேறு. கூறுவது கூறுல், போல செய்தல் எல்லாம் கெளதம் மேனனுக்கு வேறு திரைப்படங்களிலிருந்து கிடைப்பதில்லை. தன்னுடைய படங்களிலிருந்தே அவர் எடுத்துக் கையாள்வதில் நிபுணர். தவிர இப்படம் காட்ஃபாதர் திரைப்படத்தின் காதல் காட்சியில் வரும், ஒரு வரியை ஆதர்சமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்று அவரே பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் காட்ஃபாதர் இன்றளவும் உலக சினிமா ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம் பெற்றதற்கு முக்கிய காரணம் அதன் இயக்குனர் பிரான்சிஸ் ஃபோர்ட் கப்போலா செதுக்கி செதுக்கி எழுதிய திரைக்கதை. முழுமையாக திரைக்கதை எழுதிய பின்னர் தான் கப்போலா படப்பிடிப்புக்குச் சென்றார். ஆனால் கெளதம் மேனனின் படத்தின் திரைக்கதையில் பல இடங்களில் முழுமை இல்லை. திரைக்கதை என்பது அர்த்தபூர்வமாக இணைக்கப்படும் நிகழ்வுகளால் ஆனது. அந்த அர்த்தத்தை அளிப்பது அதன் கதையோட்டம்.  காட்சிகளின் வழியே திரையில் கதையை நகர்த்திக் கொண்டே, துல்லியமாகவும் அக்கதையைச் சொல்லி, இறுதியில் சொல்ல வந்த கதைக்கு நேர்மையான முடிவை கொடுப்பதே நல்ல திரைக்கதை எனலாம். இப்படத்தின் பிற்பகுதி இதில் எதுவொன்றையும் செய்யவில்லை. ஆரம்பக் காட்சிகளில் இருந்த நேர்த்தி இறுதிக் காட்சி வரை நீண்டிருக்கவில்லை என்பதே இத்திரைப்படத்தின் வீழ்ச்சி. இறந்துவிடுவோமோ என்று பயந்து நாயகன் சொல்லும் காதல் வரை கதை நெருடல்களின்றி முதல் பாதியில் கவிதையாக விரிகிறது. ஆனால் இரண்டாம் பாதியில், புதிர்க்கட்டங்களை அவிழ்க்கும் முயற்சிகளில் ஒருவித அலட்சியத்தன்மையால் படம் தத்தளிக்கிறது.

சஸ்பென்ஸ் என்று நினைத்து வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் எளிதாகவே யூகிக்கக் கூடியதாக இருந்தது. ஒரு லாரி வரும் போதே அது விபத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதையும் நாயகனின் அடுத்த அவதாரம் இதுவாகத்த்டான் இருக்கும் என்றும் இப்படத்தில் எளிதில் சொல்லிவிடலாம். தவிர விவரணையில் (Narration) கதை கூறல் முறை அதிலும் முக்கியமாக மஹாராஷ்ட்ராவில் நடக்கும் விஷயங்களை நேரடியாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம். கதையுடன் ஒட்டாமலும், மனதில் பதியாமலும் காட்சிகள் மேலோட்டமாக இருப்பதால் தான் இத்தகைய நிறைவின்மை ஏற்படுத்துகிறது.  

திரைக்கதையில் பிரச்னைகள் இருந்தாலும் படத்தின் சிறப்பம்சம் அதன் வசனங்கள் மற்றும் நேர்த்தியாக சொல்லிய விதம் (மேக்கிங்). அவ்வப்போது சிம்பு பேசும் பர்சனல் வசனங்கள் (என்னைப் பத்தி தான் தமிழ்நாட்டுக்கே தெரியுமே) போன்ற ஜிமிக்ஸ் நன்றாக எடுபட்டிருக்கின்றன. அவ்வகையில் ரசிகர்களின் கவனத்தை திரைக்குள் வைத்திருந்த கெளதம் வாசுதேவ் மேனனின் திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி எனலாம். கதைப்போக்கில் சில சிக்கல்கள், கெளதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களில் மட்டுமே தென்படும் தேய்வழக்குகள், மற்றும் லாஜிக் மீறல்கள் ஆகியவற்றால் திரைக்கதையில் தள்ளாட்டம் ஏற்பட்டுவிட்டது. கவனம் எடுத்து இவற்றைத் தவிர்த்திருந்தால் இத்திரைப்படம் நிச்சயம் ஆழமான ஒரு அனுபவத்தைக் தந்திருக்கும். கெளதம் வாசுதேவ் மேனன், சிம்பு ரசிகர்கள் மற்றும் இசைப் பிரியர்களை இந்தப் படம் நிச்சயம் ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு இட்டுச் செல்லும். மற்றவர்களைப் பொறுத்தவரையில் அச்சம் என்பது மடமையடா இன்னொரு படம் அவ்வளவே.

]]>
கெளதம் வாசுதேவ் மேனன், GVM, Accham enbathu madamaiyada, A.R.Rahman, அச்சம் என்பது மடமையடா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/12/w600X390/acham.jpg http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/nov/12/அச்சம்-என்பது-மடமையடா-கோட்டை-விட்ட-திரைக்கதை-2597336.html
2597335 சினிமா திரை விமரிசனம் கெளதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ - சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, November 12, 2016 03:19 PM +0530  

நடிகர்களைத் தாண்டி இயக்குநர்களுக்கென்று ரசிகர்கள் பெருகத் தொடங்கியது ஸ்ரீதரின் காலக்கட்டத்துக்குப் பிறகு. கே.பாலச்சந்தரின் காலத்தில் இது அழுத்தமான போக்காக மலர்ந்தது. அது எந்த வகைமையான படமாக இருந்தாலும் இயக்குநரின் சில குறிப்பிட்ட முத்திரைகள், அடையாளங்கள் போன்றவை நிச்சயமாக அந்தத் திரைப்படத்தில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கினார்கள். இவையே அந்த இயக்குநர்களின் தனித்தன்மையாகவும் இருந்தது. அந்த வரிசையில் கெளதம் மேனன் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்.

பிரத்தியேகமான ரொமான்ஸ் அல்லது ரொமான்ஸ்ஸூம் ஆக்ஷனும் கலந்திருப்பது என்பது அவர் உருவாக்கும் திரைப்படங்களின் வழக்கமான வகைமை. கெளதமின் தனிப்பட்ட வாழ்க்கை, அவருடைய கற்பனைகள், பகற்கனவுகள் போன்றவை அவருடைய திரைப்படங்களில் பெரும்பான்மையாகக் கலந்திருக்கும். இயக்குநரின் ஆளுமைப்பண்புகளும் வெளித்தோற்றத்தின் அடையாளங்களும் இவர் உருவாக்கும் பிரதான பாத்திரங்களில் வெளிப்படும். நீலச்சட்டை, கைவளையம் போன்றவை சில உதாரணங்கள். தம்முடைய பாத்திரங்களில், படைப்பில் இயக்குநரின் செல்வாக்கு அதிகமிருப்பது ஒருவகையில் படம் அவருடைய கட்டுப்பாட்டில் இருப்பதைக் காண்பிக்கிறது. இன்னொரு புறம் அவருடைய எல்லையிலிருந்து தேய்வழக்காக மாறும் அபாயத்தையும் கொண்டிருக்கிறது. 

'அச்சம் என்பது மடமையடா' கெளதம் மேனனின் வழக்கமான வகைமையிலிருந்து பெரும்பாலும் பிசகாத திரைப்படம். ஆனால் ரொமான்ஸூம் ஆக்ஷனும் கலந்திருக்காமல் இரண்டும் சரிபாதியாக பிரிந்திருப்பது இத்திரைப்படத்தின் வித்தியாசம். ஆனால் இந்தக் கலவை சரியாக உருவாகியிருக்கிறதா என்றால் இல்லை. முதல் பாதி 'விண்ணைத் தாண்டி வருவாயா'யின் வசீகரமான தொடர்ச்சி போலவே அருமையாக அமைந்திருக்கிறது. இதர ரசிகர்களுக்கு ஒருவேளை சலிப்பூட்டலாம் என்றாலும் கெளதமின் திரைப்படத்தில் என்ன இருக்கும் என்று  உறுதியாக எதிர்பார்த்து வரும் ரசிகர்களை  ஏமாற்றவில்லை. ஆனால் இரண்டாம் பகுதியாக வரும் ஆக்ஷன் காட்சிகளின் பெரும்பான்மையானவற்றில் நம்பகத்தன்மையில்லை. அந்தப் பகுதியின் திரைக்கதை மனம் போன போக்கில் அலைகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் மிகையான நாடகமாக இருக்கிறது. படத்துக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருப்பது இரண்டாம் பகுதியே. 

***

'அச்சம் என்பது மடமையடா' எதைப் பற்றிய திரைப்படம்?

ஒரு சாதாரணனின் வாழ்வில் திடீரென அசாதாரண சம்பவங்கள் நிகழ்ந்தால், அதை எதிர்கொள்ள அவன் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறான், அதிலிருந்து மீள எந்த எல்லை வரை செல்வான் என்பது இந்தத் திரைப்படத்தின் மையம். 

இதன் நாயகன் (சிம்பு) பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டில் வெட்டியாக இருக்கிறான். (இந்தக் கதாபாத்திரத்தின் பெயரை படத்தின் இறுதிப்பகுதியில் வரையில் பார்வையாளர்களுக்கும் நாயகிக்கும் வெளிப்படுத்தாமல்  மர்மமாக வைத்திருக்கிறார் இயக்குநர். அது திரைக்கதையில் பெரிய திருப்பமாக இருக்குமென்று பார்த்தால் அதுவொரு சுவாரசியமான கிம்மிக்ஸ்ஸாக மட்டுமே முடிந்திருப்பது பரிதாபம்). படிப்பு தொடர்பாக அவனுடைய தங்கையின் தோழி (மஞ்சிமா மோகன்) இவனுடைய வீட்டில் வந்து தங்குகிறார். நாயகனுக்கு 'நெஞ்சில் வந்து தாக்குகிற' காதல் உற்பத்தியாகிறது. மெல்ல அவளிடம் பழகுகிறான். 

எங்காவது பணிக்குச் சேருவதற்கு முன் தன்னுடைய பைக்கில் தென்னிந்தியா வழியாக சுற்றுலா செல்ல முடிவு செய்கிறான் நாயகன். சரியாக அதே சமயத்தில் தன்னுடைய சொந்த ஊருக்கு கிளம்புகிறார் நாயகி. இருவரின் சாலைவழிப் பயணம் இணக்கமானதாகவும் கண்ணியமான நட்பாகவும் ஒளித்து வைத்துக் கொண்ட காதலாகவும் தொடர்கிறது. வழியில் ஒரு விபத்து. நாயகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புகிறான். கொடூரமான ஒரு வன்முறைக் கும்பலில் நாயகியும் அவளது குடும்பத்தாரும் சிக்கிக்கொண்டிருக்கும் விஷயம் அவனுக்குத் தெரிகிறது. அவளுக்கு உதவுவதற்காக அவன் இறங்கும் அந்த நிமிடம் அவனைப் பல பயங்கரமான தருணங்களுக்கும் சிக்கல்களுக்கும் இட்டுச் செல்கிறது. 

அந்தச் சிக்கல்களிலிருந்து நாயகனும் நாயகியும் மீண்டார்களா என்பதை துப்பாக்கிச் சத்தங்களுடனும் மிகையான உச்சக்காட்சியுடனும் சொல்லி படத்தை முடித்திருக்கிறார் கெளதம் மேனன். 

***

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி படத்தின் முற்பாதியின் பெரும்பான்மையும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தொடர்ச்சி போலவே உள்ளது. வீடு, கேமராக் கோணங்கள் என்று அதை நினைவுப்படுத்தும் அம்சங்கள் நிறைய. 

மறைத்துக்கொண்ட ஆவலுடன் நாயகியைப் பற்றி தங்கையிடம் விசாரிக்கிறான் நாயகன். 'அவளோட ஊர் அலெப்பி.. கேரளா' என்று அவள் விளையாட்டாக பொய் சொல்லும்போது விதாவ படத்தின் பின்னணி இசை ஒரு சுவாரசியமான கலாட்டாவாக ஒலிக்கிறது. இருவருக்கும் உருவாகும் நட்பும் காதலும் எப்படி மெல்ல மெல்ல அடுத்தக் கட்டத்துக்குப் பரிணமிக்கிறது என்பதைக் கவிதையான காட்சிகளாலும் வசனங்களாலும் விவரிக்கிறார் இயக்குநர். ஓர் அசாதாரண சமயத்தில் தன் காதலைத் தெரிவிக்கிறான் நாயகன். (‘டைமிங் தப்புதான், ஆனா மேட்டர் சரியானது’ என பிற்பாடு இதை சிம்பு விளக்குவது ரகளையான காட்சி).

இடைவேளைக்குப் பிறகு நாம் அரங்கம் மாறி அமர்ந்து விட்டோமா என்கிற சந்தேகம் எழுமளவுக்குப் படத்தின் முற்பகுதியிலிருந்து முற்றிலுமாக விலகி ஆக்ஷன் காட்சிகளுக்குள் திரைப்படம் இறங்கி விடுகிறது. ஆனால் இவை வழக்கமான நாயகனின் அதிசாகசங்களாக அல்லாமல் எப்படி நாயகன் அந்தச் சம்பவங்களால் தன்னிச்சையாக செலுத்தப்படுகிறான், உத்வேகம் கொள்கிறான் என்பதைப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும்படி சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். அதற்காக அவரைப் பாராட்டலாம் என்றாலும் இந்தக் கலவை சரியாக உருவாகி வரவில்லை. நம்பகத்தன்மையற்ற காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தச் சலிப்பின் உச்சம் இதன் கிளைமாக்ஸ். இயக்குநர் எவ்வாறு இத்தனை நாடகத்தனமான உச்சக்காட்சியை தீர்மானித்தார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. அவசரம் அவசரமாகப் படத்தை முடித்த மாதிரி இருக்கிறது. 


***

பொதுவாக மற்ற படங்களில் எரிச்சலூட்டும்படி நடித்தாலும் கெளதமின் திரைப்படங்களில் மட்டும் சிம்பு பிரத்யேகமானவராகத் தெரிகிறார். சில பல காட்சிகளில் இவருடைய அடக்கமான நடிப்பும் முகபாவங்களும் அருமை. நாயகியின் மீது காதல் வருவது, அந்த உணர்வுகளால் தவிப்பது, நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது, சிக்கலான தருணத்தில் அச்சத்தை வென்று அதை எதிர்கொள்ள எடுக்கும் முடிவு போன்ற பல காட்சிகளில் இவரது நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது. என்னவொன்று, குண்டான உடலுடனும் தாடியுடனும் சட்டென்று பார்க்க ‘மினி டி.ஆர்’ மாதிரியே இருக்கிறார். விதாவ படத்தில் இருந்த வசீகரமான இளைஞனின் தோற்றத்தைக் காணவில்லை என்பது நெருடல். ஒரு பெண்ணிடம் கண்ணியமாக நடந்து கொண்டாலே அவளிடமிருந்து சாதகமான எதிர்வினை வரும் என்கிற செய்தி இந்தக் காட்சிகளில் உள்ளுறையாகப் பதிந்திருப்பது சமகால இளைஞர்களுக்கு முக்கியமான செய்தி.

நாயகி மஞ்சிமா மோகன். மலையாளத்திலிருந்து தமிழுக்குப் புதுவரவு. அடிப்படையில் அழகி. ஒளிப்பதிவாளரின் புண்ணியத்தில் சில காட்சிகளில் பேரழகியாகத் தோன்றுகிறார். படத்தின் பிற்பகுதியில், சில தீவிரமான காட்சிகளில் நடிக்கவும் முயன்றிருக்கிறார். ஆனால் சிம்புவுக்கு இணையான தோற்றத்தில் இருப்பதுதான் இவர் விஷயத்திலும் நெருடல்.

பாபா சேகல் கெட்ட போலீஸ் அதிகாரியாக வருகிறார். சொல்லிக் கொள்ளும்படி ஏதுமில்லை. வழக்கமான வில்லன். ஓர் எதிர்பாராத கணத்தில் டேனியல் பாலாஜி வருகிறார். கெளதம் இவரை முன்பு எப்படி திறமையாக உபயோகப்படுத்தியிருந்தார் என்பது நமக்குத் தெரியும் என்பதால் ஆவல் பற்றிக்கொள்கிறது. ஆனால் இவரும் பாபா சேகலின் பின்னால் ஒளிந்து கொண்டு ஏதோ வில்லத்தனம் செய்து விட்டுப் போகிறார். சிம்புவின் நண்பராக வரும் சதீஷ் நடனமாடுவதைத் தாண்டி நடிக்க முயன்றிருக்கிறார். கெளதம் மேனன் வழக்கம் போல் ஒரு கேமியோ காட்சியில் வருகிறார். அரங்கில் அத்தனை ஆரவாரம் செய்கிறார்கள். மற்றபடி விளம்பரப் படங்களில் வருவது போன்ற உயர்வர்க்க முகங்களும் சூழலும் என வழக்கமான 'கெளதம்'தனம் படத்தில் நிரம்பி வழிகிறது. 

***

இத்திரைப்படத்தின் பிரதான சிறப்பம்சங்களுள் ஒன்று ஏ.ஆர். ரஹ்மானின் இசை. பாடல்கள் ஏற்கெனவே தாறுமாறாக 'ஹிட்' ஆகியிருப்பது நமக்குத் தெரியும். பிற்பாதி முழுக்க ஆக்ஷன் தொடர்பான காட்சிகள் என்பதால் அதன் இடையே பாடலைத் திணித்து பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிக்காமல் இருப்பதில் கெளதமின் புத்திசாலித்தனம் தெரிகிறது. எனவே முதல் பாதியிலேயே பாகவதர் காலத்து படம் மாதிரி படத்தின் அத்தனை பாடல்களும் தொடர்ச்சியாக வந்து விடுகின்றன. ஆனால் சலிப்பே ஏற்படவில்லை. மாறாக கொண்டாட்டத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது. காரணம் ரஹ்மானின் இளமை தீராத இசை. 

இன்னொரு காரணம், பாடல்கள் எங்கே இடம்பெற வேண்டுமென்று கெளதம் தீர்மானித்திருக்கும் விஷயம். பொதுவாக பாடல்களைப் பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிப்பது மாதிரியே இடம்பெறச் செய்வது தமிழ் சினிமாவின் வழக்கம். இதிலும் வழக்கமான மரபை கடைப்பிடிப்பார்கள். 

ஆனால் 'நீதானே என் பொன் வசந்தம்' திரைப்படத்தை கவனித்தீர்கள் என்றால் 'என்னோடு வாவாவென்று' பாடல் முடிந்த சில நிமிடங்களிலேயே 'பெண்கள் என்றால்' பாடல் தொடங்கிவிடுவதைக் கவனிக்கலாம். அது முடிந்த சில நிமிடங்களில் அடுத்தப் பாடல் வரும். கதைப் போக்கில் அதன் உணர்ச்சிகளோடு இயைந்து இவை வருவதால் நமக்குச் சலிப்பே வராது. 

இதே மாயாஜாலம்தான் 'அஎம'விலும் நடக்கிறது. படத்தின் முற்பாதியில் காதல் பொங்கி வழிவதற்கும் இளமைக் கொண்டாட்டமாக அமைவதற்கு ரஹ்மானின் இசையும் கெளதமின் மேக்கிங்கும்தான் காரணம். 

இதில் மிக குறிப்பாக 'தள்ளிப் போகாதே' பாடல் அமையும் இடத்தைச் சொல்ல வேண்டும். இதுவரை தமிழ் சினிமாவே கண்டிராத ஓர் அற்புதம் அது. அசாதாரணமான சூழலின் தருணத்தில் இந்தப் பாடலைப் பொருத்துவதற்கு ஓர் இயக்குநருக்கு தனியான துணிச்சலும் கலையுணர்வும் இருக்க வேண்டும். கெளதம் இதை அபாரமாக சாதித்திருக்கிறார். இதைப் போலவே ரஹ்மானின் பின்னணி இசையும் இதில் அற்புதமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் பரபரப்பான இசைக்கு நடுவே வேறு சில மென்மையான இழைகளும் ஒலிப்பது ரஹ்மானின் பிரத்யேகமான முத்திரை.

படத்தின் பெரும்பான்மையும் பிரதான பாத்திரங்களின் அண்மைக் கோணங்களால் நிறைந்திருக்கின்றன. ஆக்ஷன் காட்சிகளில் அதன் பரபரப்பு நம்மையும் தொற்றிக் கொள்ளுமளவுக்கு அபாரமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் Dan Macarthur-ம், தேனீ ஈஸ்வரும். 


***

படத்தின் முற்பாதி முழுக்க ரொமான்ஸ் காட்சிகளால் நிரப்பிவிட்டு அதற்கு எதிர்முரணாக, பிற்பாதியில் ஆக்ஷன் அதிர்ச்சியைத் தர விரும்பியது இயக்குநரின் நோக்கமாக இருக்கலாம். ஆனால் இந்த பரிசோதனை விளையாட்டு வினையானதுதான் மிச்சம். விபத்தில் சிக்கி கையில் அடிபட்ட சிம்பு எப்படிச் சண்டை போடுவார் என்பது முதற்கொண்டு பல காட்சிகளில் நம்பகத்தன்மை முழுவதுமாக சேதப்பட்டிருக்கிறது. அதுவரையான இயல்பிலிருந்து விலகி 'நீங்கள் பார்ப்பது தமிழ் சினிமா' என்கிற கசப்பான உண்மையை நம் முகத்தின் மீது எறிகிறார் கெளதம். அதிலும் குறிப்பாக உச்சக்காட்சி மிகையான நாடகம். கெளதம் மேனனின் திரைப்படத்தில் நாயகன் காக்கி உடையில் தோன்றியே ஆக வேண்டிய கட்டாயத்தினால் திணிக்கப்பட்டது போல இருக்கிறது. அதுவரையான சிக்கல்களுக்கான காரணத்தை படத்தின் இறுதியில் ஒரு சுருக்கமான பிளாஷ்பேக்கில் சொல்லி முடிப்பது திரைக்கதையின் ஒருவகையான வசீகரம் என்றாலும் பிற்பகுதியின் சுவாரசியமின்மையால் இது பொருந்தாமல் அமுங்கிப் போகிறது.

முதற்பாதியின் உற்சாகமெல்லாம் வடிந்து இஞ்சி தின்றது போன்ற முகபாவத்துடன் ரசிகர்கள் அரங்கிலிருந்து வெளியேற வேண்டிய சூழலை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். 

தம்முடைய வழமைகளிலிருந்து விலகுவது ஒரு படைப்பாளிக்கு முக்கியமானது என்றாலும் அது சரியாக திட்டமிடப்படவில்லையென்றால் பூமராங் போல திருப்பித் தாக்கி விடும் என்பதற்கு இந்தப்படம் ஒரு சரியான உதாரணம். முதற்பாதியின் தொனியைச் சேதப்படுத்தியிருக்காமல் அப்படியே நீட்சியடையச் செய்திருந்தால் இது 'விண்ணைத் தாண்டி வருவாயா' மற்றும் 'நீதானே என் பொன் வசந்தம்' வரிசையில் ஓர் அற்புதமான ரொமாண்டிக் மூவியாக ரசிகர்களின் நெஞ்சில் உறைந்திருக்கக்கூடிய சாத்தியத்தை கெளதமே துப்பாக்கியால் சுட்டு சாகடித்திருக்கிறார். 

இத்திரைப்படத்தைப் பொறுத்தவரையில் ‘உச்சம் என்பது மடமையடா’. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/12/w600X390/achan9011.jpg http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/nov/12/கெளதம்-மேனனின்-அச்சம்-என்பது-மடமையடா---சினிமா-விமரிசனம்-2597335.html
2590139 சினிமா திரை விமரிசனம் 'தனுஷ்'-ன் 'கொடி' - திரை விமர்சனம் சுரேஷ் கண்ணன் Monday, October 31, 2016 11:04 AM +0530
தமிழ் சினிமாவில் இதுவரை காதலர்களுக்கு இடையில் சாதி, மதம், வர்க்கம் உள்ளிட்ட சில காரணங்கள் இடையூறாய் வந்து நின்றிருக்கின்றன. ஆனால், முதன்முறையாக இருவேறு கட்சியின் அரசியல் உணர்வு தடைக்கல்லாக இருக்கும் சுவாரசியமான பின்னணியில் இயங்குகிறது 'கொடி' திரைப்படம். தனுஷ் முதன்முறையாக இரு வேடங்களில் நடித்திருக்கிறார். படத்தின் முக்கால் பாகம் வரை எதற்காக இத்திரைப்படத்துக்கு இரண்டு தனுஷ்கள் தேவை என்ற குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில், நாடகத்தனமாக இருந்தாலும் இதற்கான அவசியத்தை வலுவாகவே சித்தரித்திருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார்.

'ஒருதலை ராகம்' திரைப்படத்தின் போஸ்டர் பின்னணியோடு காலத்தைச் சுட்டும் அடையாளத்துடன் படம் துவங்குகிறது. அரசியலில் தீவிர ஈடுபாடுள்ள ஒருவர் (கருணாஸ்) தனக்குப் பிறந்த இரட்டை மகன்களில் ஒருவனை கோயிலுக்கு நேர்ந்துவிடுவதுபோல, தாம் நம்பும் கட்சியின் அரசியலுக்கு நேர்ந்துவிடுகிறார். பாதரசக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு போராட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு தந்தை தீக்குளித்து இறந்து போக, அவரின் பாதையில் தன் அரசியல் பயணத்தை தீவிரமாகத் தொடர்கிறான் மகன்.

இதே போன்றதொரு அரசியல் லட்சியத்தோடு முன்னகர்கிறாள் இவனின் தோழியும் காதலியுமான ருத்ரா (திரிஷா). ஆனால் எதிர்க்கட்சியைச் சார்ந்தவள். வெளிப்பார்வைக்கு இருவரும் சண்டைக்கோழிகள்போல தெரிந்தாலும், ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அரசியல் எவ்வகையிலும் குறுக்கிடக்கூடாது என்கிற தெளிவுடன் இயங்குகிறார்கள். என்றாலும், அரசியல் அவர்களை அவ்வாறு நிம்மதியாக இருக்க விடுவதில்லை. காதலை விடவும் அதிகாரத்தின் மீதான ஈர்ப்பே ருத்ராவுக்கு அதிகமாக இருக்கிறது. ஒருநிலையில், அப்பாவியாக வளரும் இன்னொரு தனுஷ், இந்த அரசியல் பாதையில் வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. 

அரசியல்வாதிகளான தனுஷ் - ருத்ராவின் காதல் என்னவானது, ருத்ரா தன் லட்சியத்தை அடைந்தாளா, இன்னொரு தனுஷின் பங்கு இதில் என்ன என்பதையெல்லாம் அரசியல் பரமபத விளையாட்டுகளின் பின்னணியில் சுவாரசியமாக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர்.

***

முதலில் இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகப் பெரிய பாராட்டைச் சொல்ல வேண்டும்.

ஹீரோக்களின் ஆதிக்கமே நிறைந்து வழியும் தமிழ் சினிமாவில், நாயகிகள் பெரும்பாலும் ‘லூஸு’களாவே சித்தரிக்கப்படும் தமிழ் சினிமாவில், ஏறத்தாழ நாயகனுக்கு இணையான வலிமையான பாத்திரத்துடன் நாயகியை வைத்து திரைக்கதையை உருவாக்கியதற்காக. 

'எங்க வீட்டுப் பிள்ளை' மாதிரி இரண்டு தனுஷ்கள். அரசியல் தனுஷ் ஆக்ரோஷமானவர். இன்னொரு தனுஷ், உப்பு பெறாத காரணத்துக்காக ஓர் இளம்பெண்ணிடம் கன்னத்தில் அறை வாங்குகிற அப்பாவி. அந்த இளம்பெண்ணை தன்னால் பழிவாங்க முடியாத காரணத்தினால், தன் அண்ணனை உபயோகித்து பழி தீர்த்துக்கொள்ளும் காட்சிகள் நகைச்சுவையாக உள்ளன. போலவே, அவளிடம் வம்பு செய்யும் கந்துவட்டிக்காரனையும் அண்ணனை அனுப்பி சண்டை போடவைத்து, அதன்மூலம் தான் பெயர் வாங்கிக்கொள்ளும் காட்சிகள். 

அப்பாவி தனுஷ்-ன் நடிப்பு சராசரியானது என்றால், அரசியல்வாதி தனுஷ் தன்னுடைய ஆக்ரோஷமான உடல்மொழியில் அசத்துகிறார். 'புதுப்பேட்டை' அரசியல்வாதியின் சாயல் ஏதும் இல்லாமல், வேறு பாணி. காதலியால் துரோகம் செய்யப்படும் ஒரு சிக்கலான காட்சியிலும், தன்னைப் புரியவைப்பதற்காக அவரிடம் போராடும் ஒரு காட்சியிலும் இவரது நடிப்பு அபாரமாக உள்ளது. வழக்கமான மசாலா காட்சிகளின் இடையேயும் தான் ஒரு இயல்பான நடிகன் என்பதை அழுத்தமாக நிறுவத் தவறவில்லை. 

***

திரிஷாவுக்கு இது ஒரு மைல்கல் திரைப்படமாக அமைந்திருக்கக்கூடிய அரிய வாய்ப்பிருந்தது. அந்தளவுக்கு வலிமையான பாத்திரம். அரசியலின் வழியாக அதிகாரத்தைக் கைப்பற்றி சட்டென்று மேலுயர வேண்டும் என்பதே இவரது வாழ்நாள் லட்சியம். அதற்காகப் பதுங்கவும் பாயவும் தயாராக இருக்கிறார். அதே சமயத்தில் காதலா, அரசியலா என்கிற மெல்லிய தடுமாற்றமும் இவருக்குள் இருக்கிறது. இந்த உணர்வுகளை தனது முகபாவங்களால் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். அவரின் தோற்றம் இயல்பானதாகவும் வசீகரமானதாகவும் இருக்கிறது. 

ஆனால், குருவி தலையில் பனங்காயை வைத்தது போன்ற வலிமையான பாத்திரத்தை அவரால் சிறப்பாகக் கையாள முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். திரிஷாவின் அப்பாவித்தனமான தோற்றமும் உடல்மொழியும், அவரது பாத்திர வடிவமைப்புக்கு முரணாக உள்ளது. படையப்பாவில் 'நீலாம்பரி' பாத்திரத்தை ரம்யா கிருஷ்ணன் ஆக்ரோஷமாக கையாண்டிருப்பது நினைவுக்கு வருகிறது. 

ஆணாதிக்கமும் ஆண்மைய சிந்தனையும் போட்டியும் வலுவாக உள்ள அரசியல் போன்ற சிக்கலான தளங்களில் பெண்கள் நுழையும்போது கடுமையானவர்களாக மாறிவிடுகிறார்கள். இதன் சர்வாதிகார உளவியல் தன்னிச்சையாக உருவாகிவிடுகிறது. சுற்றியிருக்கும் ஆண்களைக் கட்டுப்படுத்தவதற்காக ஒரு நெருப்பு வளையத்தை தன்னைச் சுற்றி அமைத்துக்கொள்கிறார்கள். முரட்டுத்தனமான முடிவுகளை எளிதில் எடுத்து ஆண்களை மிரட்சியில் வைத்துக்கொள்கிறார்கள். அவர்களிடமுள்ள பாதுகாப்பற்ற உணர்வே இதற்குக் காரணம். உலகமெங்கிலும் பெரும்பாலான பெண் அரசியல்வாதிகளின் வரலாற்றைப் பார்த்தால் இதை அறிய முடியும்.

இந்த வகையில், திரிஷாவின் பாத்திர வடிவமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பே என்றாலும், இன்னமும்கூட வலிமையாக சித்தரிக்கப்பட்டிருக்கலாம். அரசியல் தனுஷ்-ன் லட்சியத்தின் பின்னணி துல்லியமாக சித்தரிக்கப்பட்டிருப்பதுபோல, திரிஷாவின் பின்னணி சொல்லப்படாதது ஒரு குறை. ஆனால், நாயகனே எப்போதும் ஜெயிக்கும் கதையாக இத்திரைப்படமும் நிறைவது ஒரு நெருடல். 

சரண்யா வழக்கமான லூஸு அம்மாவை சற்று கட்டிப் போட்டிருப்பதே பெரும் ஆறுதல். இதில் அவர் நடிப்பதற்கான சந்தர்ப்பங்களும் அமைகின்றன. பல வருடங்களாக ஒதுக்கிவைத்திருக்கும் மகன், ஒருநாள் 'அம்மா' என்று அழைக்கும்போது இவரின் உடல் தன்னிச்சையாக பதறுவது நல்ல காட்சி. பழைய படங்களில் தாம் நடித்திருப்பதைப்போல முஷ்டியை உயர்த்திப்பிடித்து கண்களை சிவக்கவைத்து நம்மை வேதனைப்படுத்தாமல் அடக்கமாக நடித்திருக்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகர். அனுபமா பரமேஸ்வரனால், தமிழ் சினிமாவின் வழக்கமான நாயகியாக மட்டுமே இருக்க முடிகிறது. 

***

இரண்டு கழகங்களின் பின்னணியில் திரைக்கதையை அமைத்திருப்பதின் மூலம், தமிழகத்தின் அரசியல் பின்னணியையும் சூசகமாக இயக்குநர் சொல்ல முயன்றிருப்பது சிறப்பு. ஆட்சிகள் மாறினாலும் ஒரு தீவிரமான சமூகப் பிரச்னை மட்டும் மாறாமல், இரு கட்சிகளாலும் பரஸ்பர ஆதாயங்களோடும் குற்றச்சாட்டுகளாலும் பந்தாடப்பட்டு தீர்க்கப்படாமல் உறைந்திருக்கும் அவலம் சரியாகவே சொல்லப்படுகிறது. ஆனால், பாத்திரங்களின் உணர்ச்சி மோதல்களுக்குள் இந்தப் பிரச்னை மழுங்கடிக்கப்பட்டு ஒரு பாவனைக்காவது தீர்க்கப்படாமலேயே முடிந்துபோவது, சினிமாவின் வேடிக்கை அரசியலைக் காட்டுகிறது. 

அரசியல் கட்சிக்குள் நுழைபவர்கள் சேவை மனப்பான்மை என்பதே துளியுமின்றி சுயநல அரசியல் காரணமாக ஒருவரையொருவர் துரோகித்துக்கொள்வதும், அரசியல் தொண்டர்களின் படிநிலைகளுக்குள் உள்ள அடிமைத்தனமும் விரோதமும் நகைச்சுவை போர்வையில் அசலான சித்திரங்களாக விரிகின்றன. திரிஷா கெட்ட அரசியல்வாதியாக சித்தரிக்கப்பட்டிருக்கும்போது, இரண்டு தனுஷ்களுமே நாயகத்தன்மைக்கு பாதகமின்றி நேர்மையான அரசியல்வாதிகளாகக் காட்டப்படுவது யதார்த்தத்துக்கு முரணாக உள்ளது. 

அதிரடியான காட்சிகளுக்கு சந்தோஷ் நாராயணனின் ரகளையான இசை பொருத்தமாக ஒலிக்கிறது. ஆனால், பாடல்கள் எதுவும் நினைவில் தங்கவில்லை. இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பு. வணிகரீதியாக வெற்றியடையக்கூடிய திரைக்கதையை தேர்ந்தெடுத்தது புத்திசாலித்தனம்.

அரசியல் ரீதியாக எதிரெதிர் தரப்பில் உள்ள காதல். இதில் உண்மையின் பக்கம் நாயகனும், துரோகத்தின் பக்கம் நாயகியும். இந்தப் பின்னணியை வைத்து இன்னமும் சுவாரசியமான திரைக்கதையை இயக்குநர் உருவாக்கியிருக்கலாம். இன்னொரு தனுஷ்-ன் வழகக்கமான தமிழ் சினிமாத்தனமான காட்சிகளைக் குறைத்துவிட்டு இந்தப் பகுதியைப் பிரதானப்படுத்தியிருந்தால், கொடி இன்னமும் உயரப் பறந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

-    சுரேஷ் கண்ணன்
 

]]>
http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/oct/31/தனுஷ்-ன்-கொடி---திரை-விமர்சனம்-2590139.html
2589623 சினிமா திரை விமரிசனம் கார்த்தியின் ‘காஷ்மோரா’ - திரை விமர்சனம் சுரேஷ் கண்ணன் Saturday, October 29, 2016 03:57 PM +0530 'பேய் ஓட்டுவதாகச் சொல்லி ஊரை ஏமாற்றும் ஒரு டுபாக்கூர் ஆசாமி, உண்மையாகவே பேய்க்கூட்டத்திடம் சிக்கிக்கொண்டால் என்ன ஆகும் என்கிற கற்பனைதான் இத்திரைப்படத்தின் ஒற்றைவரிக் கதை.

கடந்த பல வருடங்களாகவே தமிழ் சினிமாவை பேய் பிடித்துக்கொண்டிருக்கும் விஷயம் நமக்குத் தெரியும். ஹாரர் காமெடி எனும் வகைமையில் பல திரைப்படங்கள் தொடர்ந்து குவிந்துகொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் 'காஷ்மோரா' இருந்தாலும், இதனுடன் ஃபேன்டஸியையும் கலந்து ஒரு சுவாரசியமான கலவையாகத் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் கோகுல்.

இவரது முந்தைய திரைப்படமான 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' நகைச்சுவைப்படம்தான் என்றாலும், தனித்துவமான நகைச்சுவையைக் கொண்டது. 'சுமார் மூஞ்சி குமாரு, குமுதா ஹேப்பி அண்ணாச்சி, ப்ரென்டு லவ் பெயிலரு ஃபீல் ஆயிட்டாப்ல' போன்ற வசனங்கள், அது தொடர்பான காட்சிகளுடன் இன்றும்கூட ரசிகர்களின் நினைவுகளில் தங்கியுள்ளன. விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் வரிசையில் இது முக்கியமானதாக அமைந்திருந்தது. தனித்தனியான இரண்டு இழைகளில் பயணிக்கும் திரைக்கதை, இறுதியில் ஒன்றிணைந்து நிறையும் சுவாரசியத்தையும் கொண்டிருந்தது.

காஷ்மோரா திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்தபோது ஒரு தீவிரமான ஃபேன்டஸி படமாக மட்டும் தெரிந்ததில் சற்று குழப்பமாகி, கோகுலின் அந்தப் பிரத்யேகமான நகைச்சுவைக் காட்சிகள் இதில் இருக்காதோ என்கிற எண்ணத்தில் திரைப்படத்துக்குள் நுழைந்தால், 'நான் எங்கயும் போகலஜி' என்று தீவிரமான காட்சிகளுக்கு இடையில் நன்றாக சிரிக்கவைத்தும் அனுப்பியிருக்கிறார். இந்தக் கலவைதான் இத்திரைப்படத்தின் பலமும் பலவீனமும்.

***

காஷ்மோரா என்கிற விநோதமான பெயரைச் சூட்டிக்கொண்டிருக்கும் ஓர் இளைஞன், பேய், பில்லி சூன்யம் போன்றவற்றை நீக்குவதில் புகழ்பெற்றவனாக அறியப்பட்டிருக்கிறான். இவனுடைய ஏமாற்று வேலைக்கு குடும்பமே துணையாக நிற்கிறது. இதனுடன் ஆன்மிக வியாபாரத்தையும் திறமையாக இணைப்பதில் வருமானம் கொட்டுகிறது. விளம்பரங்களின் மூலம் இந்த வணிகத்தை வளர்த்துக்கொள்கிறான். ஊடகங்களும் இணைந்து இவனை பரபரப்பாக்குகின்றன. காவல் துறை அதிகாரி, மாநில அமைச்சர் என்று சில பல பிரபலங்களும் இவனிடம் ஏமாறத் துவங்குகிறார்கள்.

ஒருபுறம் இவனுடைய ஏமாற்று வேலைகள், மறுபுறம் வாடிக்கையாளர்களுக்குத் தற்செயலாக நிகழும் நல்ல விஷயங்கள் ஆகியவற்றினால் இவனுடைய நம்பகத்தன்மை உயர்கிறது. இவனுடைய கிராஃப் மெல்ல உயரத்துவங்கும் சமயத்தில், அமைச்சரிடம் இவனுடைய குட்டு அம்பலப்பட்டுவிட, அவருடைய பல கோடி பணத்துடன் இவனுடைய குடும்பம் தப்பிச் செல்லும்போது, ஒரு பாழடைந்த அரண்மனையில் மாட்டிக்கொள்கிறது. ஒட்டுமொத்த குடும்பமே பலியாகப்போகும் அதிர்ச்சியான தகவலை அங்கு அறிய நேர்கிறது. அதற்குப் பின்னால் பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்றுக் காரணமும் துரோகமும் மரணங்களும் இருக்கின்றன. இன்னொருபுறம் அமைச்சரும் இவர்களை கொலைவெறியுடன் தேடுகிறார்.

காஷ்மோராவின் குடும்பம் இந்தப் பயங்கரங்களிலிருந்து தப்பித்ததா, அந்த வரலாற்றுக் காரணங்களின் பின்னணி என்ன என்பதை ஒருபுறம் தீவிரமாகவும், இன்னொரு புறம் நகைச்சுவையாகவுமான கலவையில் சொல்ல முயன்றிருக்கிறார்கள். இரண்டிலுமே வெற்றியும் தோல்வியும் அடைந்திருக்கிறார்கள்.

***

சாதாரண பின்புலத்திலிருந்து கிளம்பி பல தில்லுமுல்லுகளுடன் பிரபலமாகும் ஆன்மிகக் குருமார்கள், கார்ப்பரேட் சாமியார்கள் போன்றவர்கள் எப்படி உருவாகிறார்கள், அதிகார வட்டத்தின் பின்னணியும் செல்வாக்கும் எப்படி அவர்களுடன் இணைகிறது என்பதை படத்தின் முற்பகுதி காட்சிகள் நகைச்சுவையாக விவரிக்கின்றன. இது தொடர்பான முட்டாள்தனங்களை சரமாரியாகக் கிண்டலடித்திருக்கிறார்கள். ஆனால், இவற்றை வெறுமனே அசட்டு நகைச்சுவையாக்காமல் சற்று தீவிரமான தொனியிலேயே கையாள முயன்றிருப்பதில்தான் இயக்குநரின் தனித்துவம் தெரிகிறது. இந்தத் தீவிரத்தை சற்று பின்னுக்கு இழுப்பதாக விவேக்கின் வழக்கமான நகைச்சுவை அமைந்திருப்பது துரதிர்ஷ்டம். என்றாலும் புடவையை மேலே போர்த்திக்கொண்டு ஒரு சமகால ஆன்மிகக் குருவை நினைவுப்படுத்திக் கிண்டலடிப்பதில் ரசிக்கவைக்கிறார்.

ஆனால், காஷ்மோரா ஏமாற்றுக்காரன் என்பதை நிறுவுவதையும், அவனுடைய குடும்பம் சிக்கலில் சென்று விழுவதையும் சித்தரிக்க இத்தனை நீளத்தை அனுமதித்திருக்க வேண்டாம். இந்தக் காட்சிகள் சுவாரசியமாகவே அமைந்திருந்தாலும், கதையின் மையத்துக்குள் சட்டென்று நுழைகிற திரைக்கதைதான் பார்வையாளர்களின் கவனத்தை தக்கவைத்துக்கொள்ளும் என்பது அடிப்படை.

பாழடைந்த அரண்மனைக்குள் காஷ்மோராவின் குடும்பம் தத்தளிக்கும் காட்சிகளுக்குப் பிறகு அவர்கள் உள்ளே சிக்கவைக்கப்பட்டிருக்கும் காரணமும் அதன் அசத்தலான, ஆனால் சுருக்கமான வரலாற்றுப் பின்னணிக் காட்சிகளும் விரிகின்றன. பிறகு நிகழும் உச்சக்காட்சியுடன் படம் நிறைகிறது. ஆனால், இந்தச் சிக்கல்கள் நகைச்சுவையுடனும் இணைந்து சித்தரிக்கப்படுவதால், பார்வையாளர்களுக்கு எவ்வித பதட்டமும் ஆர்வமும் தோன்றாமல் இருப்பதே இந்தத் திரைக்கதையின் பெரிய பின்னடைவு.

***

கார்த்தி மூன்று பரிமாணங்களில் தோன்றுகிறார். ஒன்று, ஏமாற்றுக்காரனாக வழக்கமான வேடம். இதை அவருடைய பல படங்களில் பார்த்திருப்பதால் நமக்குப் பெரிதாக ஆச்சரியம் தோன்றுவதில்லை. ஆனால், தோற்றத்தில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். பாழடைந்த அரண்மனைக்குள் நுழைந்தவுடன் அங்கு நிகழும் அமானுஷ்ய சமிக்ஞைகளை, தன்னைப்போலவே எவரோ டுபாக்கூர் ஆசாமிதான் இவற்றை நிகழ்த்துகிறான் என்று எண்ணிக்கொண்டு இவர் எதிர்வினை செய்யும் மோனோ ஆக்டிங் அபாரமான நகைச்சுவை. ரசிகர்களின் ஆரவாரத்தைப் பெறும் காட்சியாக இது அமைகிறது. போலவே, தன் உயிர் போகும் சமயத்தில் அதைக் காப்பாற்றிக்கொள்ள சமயோசிதமாக இளவரசியின் ஆவியைப்போல நடிப்பதும், பின்பு மாட்டிக்கொண்டு அசடு வழியும் காட்சியையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இதுபோல தீவிரமாகத் துவங்கும் சில காட்சிகள் சட்டென்று திசைமாறி நகைச்சுவையாகிவிடும் விதம் ரசிக்கவைக்கிறது.

இன்னொரு கார்த்தி, சாப விமோசனம் கிடைக்காமல் உடலும், தலையும் தனித்தனியாக அலையும் வேடம். இதில் ஒப்பனையும் உடல்மொழியும் சிறப்பாக இருக்கிறது. மூன்றாவது பரிமாணம்தான் இருப்பதிலேயே மிகச் சிறப்பானது. கார்த்திக்கு பெரிய சவாலாக அமைந்திருப்பது. இதை அவர் வெற்றிகரமாகக் கையாண்டிருப்பதுதான் இத்திரைப்படத்தின் முக்கியமான அம்சம். மன்னருக்குத் துரோகம் செய்யும், இளவரசியின் மீது மையலுறும் தளபதி ராஜ்நாயக்காக நடித்திருக்கும் பாத்திரம் அசத்தலானது. ஒற்றை ஆளாக ஒரு சேனைப் படையையே துவம்சம் செய்யும் ஆக்ரோஷமும், இளவரசியின் மீதான இச்சையின் குரூரத்தையும் துரோகத்தின் பயங்கரத்தையும் இந்தக் குறுகிய நேரக் காட்சிகளிலேயே அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒரே நடிகர் ஒன்றுக்கும் மேற்பட்ட பாத்திரத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்தால், அவை வெவ்வெறு பாத்திரங்கள் என்று பார்வையாளர்களை நம்பச் செய்வதில்தான் அவற்றின் வெற்றி அமைகிறது. அந்த வகையில், சாதாரண இளைஞனின் பாத்திரத்துக்கும் மன்னர் காலத்து தளபதி பாத்திரத்துக்குமான வேறுபாட்டை ஒப்பனை, உடல்மொழி முதற்கொண்டு பல விஷயங்களில் கார்த்தி சாதித்திருக்கிறார்.

சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், ஓர் இளவரசிக்கான வனப்பையும் கம்பீரத்தையும் நயன்தாரா சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், பேலியோ டயட்டில் இருக்கும் முதிர் இளவரசிபோல இருப்பது சின்ன நெருடல். காஷ்மோராவின் குடும்பத்துக்கு முன்னாலேயே அரண்மனையில் வந்து மாட்டிக்கொள்ளும் ஆசாமியாக முருகானந்தம். (இஆபா-வில் ஃப்ரென்டு, லவ் பெயிலரு, ஃபீல் ஆயிட்டாப்பல. ஒரு ஹாப் சாப்ட்டா கூல் ஆயிடுவாப்ல என்பாரே, அதே நபர்). அரண்மனைக்குள் நிகழ்ந்த அமானுஷ்ய சம்பவங்களை காஷ்மோரா குடும்பத்திடம் ‘க்ளோஸா வாங்க ஜி’ என்று ஏற்ற இறக்கங்களுடன் விவரிக்கும் காட்சிகளில் கவர்கிறார்.

***

இயக்குநரைத் தாண்டி, இது நுட்பக்கலைஞர்களின் படம் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அவர்களின் உழைப்பு இதில் கொட்டிக்கிடக்கிறது. ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ், கலை இயக்குநர் ராஜீவன், ஆடை வடிமைப்பாளர், விஷூவல் எபெக்ட்ஸ் குழு போன்று பல நுட்பக் கலைஞர்கள் இணைந்து, மன்னர் காலகட்ட காட்சிகளை ரகளையான அனுபவமாக்கித் தருகிறார்கள். அரண்மனை மற்றும் அந்தப் பிரதேசத்தின் முழுத் தோற்றமும் தெரியும் பறவைப் பார்வை காட்சிக் கோணங்கள், அவை பயணித்து ஒரு பிரம்மாண்ட பறவையின் பகுதிக்குள் நுழைந்து அங்கிருக்கும் ஆட்களைக் காண்பிப்பது, அரண்மனையின் வண்ணமயமான, பிரம்மாண்ட உட்புறம் போன்றவை மிகுந்த அழகியலுடன் திறமையாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களில் முக்கியமானதாக இதைச் சொல்லலாம். என்றாலும் வரைகலை காட்சிகள் சில இடங்களில் அரைகுறையாக இயங்குவது சறுக்கல்.

சந்தோஷ் நாராயணின் அதிரடியான பின்னணி இசை காட்சிகளுக்குப் பொருத்தமாக ஒலிக்கிறது. ‘திக்கு திக்கு சார்...’ என்கிற பாடல் சுவாரசியமான ரகளை. ‘ஓயா… ஓயா’ ஏன் தெலுங்கு டப்பிங் பாடல்போலவே ஒலிக்கிறது என்பது தெரியவில்லை. அந்தப் பிரதேசத்தின் சந்தையையும் சமன்படுத்தும் சமரச முயற்சியா என தெரியவில்லை.

***

புராதன காலத்தின் கதையையும் சமகாலத்தையும் இணைத்து, கதை சொல்லும் பாணியில் உருவான தமிழ்த் திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்தது நாசர் இயக்கிய ‘தேவதை’. பிறகு செல்வராகவனும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ மூலம் இந்த வகைமையை முயன்றார். (இதிலும் கார்த்தி நடித்திருந்தார் என்பது தற்செயலான ஒற்றுமை). இதற்குப் பிறகு ‘காஷ்மோரா’வை சொல்லலாம். ஆனால், அந்தப் படங்களைப் போன்றே ‘காஷ்மோரா’வையும் பாராட்டத்தக்க முயற்சி என்று குறிப்பிட முயன்றாலும், அவற்றைப்போலவே பெரிதான அளவில் கவராமல் போனது பரிதாபம்.

வெகுஜன திரைப்படம்தானே என்று வழக்கமான பாணியில் அல்லாமல் தம்மால் இயன்ற அத்தனை உழைப்பையும் மெனக்கெடலையும் தந்திருக்கும் இயக்குநர் கோகுலின் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது. ஆனால், இந்த உழைப்பை திரைக்கதையை சுவாரசியமாக அமைப்பதிலும் செலவழித்திருந்தால், ‘காஷ்மோரா’ தமிழின் ஒரு முக்கியமான பொழுதுபோக்குத் திரைப்படமாக ஆளகியிருக்கும். இது தீவிரமான வரலாற்றுப் படமாகவும் இல்லாமல் முழுமையான நகைச்சுவைப் படமாகவும் இல்லாமல் ஆகியிருப்பதே இதன் பெரிய பலவீனம். இந்தக் கலவையை இயக்குநர் தர திட்டமிட்டிருப்பது பாராட்டப்பட வேண்டியது; ஆனால், அது திறமையாக அமையவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்.

- சுரேஷ் கண்ணன்

]]>
cinema, சினிமா, Nayanthara, Tamil, நயன்தாரா, தீபாவளி, தமிழ், கார்த்தி, விமர்சனம், karthik, diwali http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/oct/29/கார்த்தியின்-காஷ்மோரா---திரை-விமர்சனம்-2589623.html
2579156 சினிமா திரை விமரிசனம் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’: நகைச்சுவைப் போராட்டம்! சுரேஷ் கண்ணன் Wednesday, October 12, 2016 11:30 AM +0530  

பெண்கள் நடிக்க முன்வரத் துணியாத காலக்கட்டத்தில் ஆண் நடிகர்களே பெண் வேடத்தையும் கையாண்டார்கள். தெருக்கூத்து, நாடகம் போன்றவற்றில் இந்த வழக்கம் இருந்தது நமக்குத் தெரியும். 'ஸ்திரிபார்ட்' என்று அழைக்கப்படும் இந்த வேடத்தை சிவாஜி கணேசன் முதற்கொண்டு பல பழைய நடிகர்கள் நடித்திருக்கின்றனர். எதிர் பாலினமான  பெண் வேடத்தில் நடிக்கத் துணிவதென்பது ஒவ்வொரு ஆண் நடிகனுக்கும் மிகப் பெரிய சவால். ஆனால் இதை எள்ளி நகையாடுகிறவர்களும் பாலியல் நோக்கி கொச்சையாக கிண்டலடிப்பவர்களும் உண்டு. ரஜினிகாந்த் முதற்கொண்டு தமிழ் சினிமாவின் ஒவ்வொரு முன்னணி நடிகரும் தங்கள் திரைப்படங்களின் சில காட்சிகளில் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக நகைச்சுவை நடிகர்கள் இதை நிறைய கையாண்டிருக்கிறார்கள். இவை பெரும்பாலும் அசட்டு நகைச்சுவை அடிப்படையிலேதான் அமைந்திருக்கும். தீவிரமான பாத்திரப்படைப்பாக அமைந்திருக்காது. 

ஒரு கதாநாயகன், பெரும்பாலான காட்சிகளில் பெண் வேடமிட்டு நடித்த திரைப்படங்களாக கமல்ஹாசனின் 'அவ்வை சண்முகி' மற்றும் பிரசாந்தின் 'ஆணழகன்' போன்றவற்றைக் குறிப்பிடலாம். மூன்றாம் பாலினத்தவர்களாக பிரகாஷ்ராஜ் (அப்பு), சரத்குமார் (காஞ்சனா 2) போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள். பாரதிராஜாவின் பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடிகையாக இருக்கும் இளம்பெண், உண்மையில் பெண்ணல்ல என்பது இறுதியில் வெளிப்படுவது போல அதன் திரைக்கதை அமைந்திருக்கும். சமீபத்தில் வந்த இருமுகன் வரை Cross dressing பாத்திர வடிவமைப்பில் தோராயமாக இந்த உதாரணங்களைச் சொல்லலாம். 

***

தமிழ் சினிமாவில் ஆண் நடிகர்கள், பெண் பாத்திரங்களில் நடிக்கும்போது அதில் பெரும்பாலும் நிகழும் ஒரு முரணைப் பற்றி திருநங்கை ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். 'பெண் பாத்திரங்களில் நடிக்கும் ஆண்கள், ஏன் பெண்களைப் போல நடிக்க முயலாமல், திருநங்கைகளைப் போல தங்களின் உடல்மொழியை அமைத்துக் கொள்கிறார்கள்?' என்பதே அந்தக் கருத்து. இது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்று எனக்குத் தோன்றுகிறது. காவல்துறை அதிகாரி உள்ளிட்ட வேறு எவ்வித பாத்திரமென்றாலும் அதற்காக தங்களின் உடலை வருத்தியும் மெனக்கெட்டும் உருமாற்றிக் கொள்ளும் நாயகர்கள், பெண் வேடத்தில் நடிப்பதென்றால் மட்டும் அதை மிக எளிதாக, தன்னிச்சையாக திருநங்கையின் உடல்மொழியாக மாற்றிக் கொள்ளும் அபத்தத்தை அவர் சரியாக சுட்டிக் காட்டியிருந்தார். இது மட்டுமன்றி, அவ்வாறான உடல்மொழியை ஆபாசமான கொனஷ்டைகளாகக் கையாளும் முறையற்ற போக்கும் கூட மிக அதிகம். 

இந்த நோக்கில் மிக முக்கியமான விதிவிலக்காக, ஒரு நடுத்தர வயது பிராமணப் பெண் பாத்திரத்தை அதன் நளினத்தோடு வெளிப்படுத்தியதில் கமல்ஹாசன் வித்தியாசப்பட்டிருந்தார். 'அவ்வை சண்முகியின்' படப்பிடிப்புத் தளத்திலேயே இவரை அடையாளம் தெரியாத அளவுக்கு இவரது ஒப்பனை சிறப்பாக அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதிலும் கூட மேற்குறிப்பிட்ட ஆபாச கொனஷ்டைகள் இல்லாமில்லை. 

ஆண்  நடிகர், ஒரு பெண் பாத்திரத்தை மிக தீவிரமாக கையாளும் ஒரு திரைக்கதையை, நடிப்பைப் பற்றி இயக்குநர்களும் நடிகர்களும் ஏன் யோசிக்கக்கூடாது என்று தோன்றுகிறது. 

**

இந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கும் 'ரெமோ'. எல்லா மசாலா திரைக்கதைகளும் சலிக்க சலிக்க சொல்லி முடிக்கப்பட்டிருக்கும் சமகால சூழலில், தங்கள் திரைப்படத்தின் மீது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் திரையரங்குக்கு வரச் செய்வதற்காகவும் பல்வேறு கிம்மிக்ஸ் குட்டிக்கரணங்களை இயக்குநர்களும் நடிகர்களும் செய்ய வேண்டியிருக்கிறது. திரைக்கதைக்கு தேவையேயில்லாமல் வித்தியாசமான வேடங்கள் அல்லது அவ்வாறான வித்தியாசமான தோற்றங்களைத் தீர்மானித்து விட்டு பிறகு அதற்காக வலிந்து உருவாக்கப்பட்ட திரைக்கதைகள் என்று பல விபத்துகள் தமிழ்த் திரை வெளியில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

'ரெமோ' திரைப்படத்தில், திரைக்கதை கோரும்படியாக, அதற்கு அவசியமாக சிவகார்த்திகேயனின் 'பெண் வேடம்' அமைந்திருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. ஆனால் இந்த திரைப்படத்திலும் ஆபாச கொனஷ்டைகள் இருப்பதை இயக்குநரால் தவிர்க்க முடியவில்லை. பெண் வேடத்தில் இருக்கும் ஆணை, அடையாளம் தெரியாமல் காமுறும் இதர ஆண்களின் அபத்தங்கள், 'நகைச்சுவை' என்ற பெயரில்  அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தாண்டி, அவ்வை சண்முகியின் கமல்ஹாசனைப் போலவே, சிவகார்த்திகேயனும் பெண் உடல்மொழியின் நளினத்தை சில காட்சிகளில் சற்று தீவிரமாக பின்பற்ற முயன்றிருப்பதும் ஒப்பனை முதற்கொண்டு உடல்மொழி வரையான மெனக்கிடலும்  பாராட்டப்பட வேண்டியது. இத்திரைப்படத்தின் USP என்று இந்தப் பாத்திரத்தை மட்டுமே சொல்ல முடியும். சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் வணிகச் சந்தையைத் தாண்டி பார்வையாளர்களை ஈர்க்கும் முக்கியமான அம்சம் இந்த 'பெண்  வேட' கதாபாத்திரமே.

***

எந்தவித வேலை வெட்டியிலும் ஈடுபாடின்றி இருக்கும் இளைஞன் எஸ்கே. (சிவகார்த்திகேயனின் சுருக்கம்). புகழ்பெற்ற நடிகனாக  வேண்டும் என்பதே அவனது கனவும் லட்சியமும். பெண்களைப் பார்த்து பேசுவது அவனுடைய பலவீனம். இதனாலேயே நடிப்பு வாய்ப்பு கிடைப்பதில் தடை ஏற்படுகிறது. அதுவரை காதல் என்கிற உணர்வே வராத அவனுக்கு காவ்யா (கீர்த்தி சுரேஷ்) என்கிற இளம் பெண்ணைப் பார்த்தவுடன் காதல் ஏற்படுகிறது. தன் மனதினுள் ஏற்படும் இந்த தீவிரமான மாற்றத்தை உணரும் அவன், அதை வெளிப்படுத்துவதற்காக செல்லும் நாள், அந்தப் பெண்ணின் நிச்சயதார்த்த நாளாக அமைந்து விடுகிறது. மனமுடைந்து போகும் அவன் தன் நடிப்பு கனவையாவது அடைவோம் என்று தீர்மானிக்கிறான். ஒரு திரைப்பட வாய்ப்புக்காக 'நர்ஸ்' வேடத்துக்கு மெனக்கெட்டு தன்னை ஒரு பெண் போல் ஒப்பனை செய்து கொள்கிறான். ஆனால் அந்த நோக்கம் நிறைவேறுவதில்லை என்றாலும், தான் விரும்பிய இளம் பெண் தன்னிடம் வந்து உரையாடும் சந்தர்ப்பம் தற்செயலாக அமைகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தன் காதலை நிறைவேற்றிக் கொள்ள முடியாதா என்று அவன் செய்யும் நகைச்சுவைப் போராட்டங்களே 'ரெமோ'.

ஒரு சாகச நாயகனுக்கும் நகைச்சுவை நடிகனுக்கும் இடைப்பட்ட புள்ளிதான் சிவகார்த்திகேயனின் இடம். அவர் அதை சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ற திரைக்கதைகளைத் தொடர்ந்து தேர்வு செய்வதால்தான் முன்னணி நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். குழந்தைகளுக்குப் பிடிக்கும் நாயகர்களின் திரைப்படங்கள் குறைந்தபட்ச வெற்றிக்கு உத்தரவாதம் என்கிற கணக்கு உண்டு. கூடுதலாக இளம் பெண்களுக்கும் பிடித்தமான நடிகராக உள்ளார் சிகே. ரெமோவும் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தும் திரைக்கதை. வழக்கமான 'வெட்டி இளைஞன்' வேடம், நர்ஸ் வேடம் என்று இரண்டிலுமே நன்றாக நடித்திருக்கிறார். ஆங்காங்கே சலிப்பை ஏற்படுத்தினாலும் ஒட்டுமொத்த நோக்கில் ஒரு சராசரியான கேளிக்கை திரைப்படத்தின் தேவையை இந்தத் திரைப்படம் பூர்த்தி செய்கிறது. அதற்கு மேல் இத்திரைப்படத்தில் எதையும் எதிர்பார்க்க முடியாது; எதிர்பார்க்கவும் கூடாது. 

சில இடங்களில் 'குஷி' ஜோதிகாவை நினைவுப்படுத்தினாலும், நடிப்பு தேவைப்படும் இடங்கள் கீர்த்தி சுரேஷுக்கு அமைந்திருக்கிறது. அதைச் சரியாகவே நிறைவேற்றியிருக்கிறார். நிச்சயிக்கப்பட்ட மணமகனுக்கும் காதலனுக்கும் இடையிலான தேர்வில் ஏற்படும் குழப்பத்தை, மனச்சிக்கலை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். சதீஷின் நகைச்சுவை வசனங்கள் நிறைய இடங்களில் வரவேற்பைப் பெறுகின்றன. பெண் வேடமிட்ட சிகேவைச் சுற்றி சுற்றி வரும் யோகி பாபுவின் நகைச்சுவையின் வடிவமைப்பு சற்று எரிச்சலூட்டுவதாக இருந்தாலும் சிரிப்பைத் தவிர்க்க முடியவில்லை. 'ஆடி போயி ஆவணி வந்தா டாப்பா வருவான்' எனும் வசனத்தில் புகழ்பெற்ற சரண்யா இதில் எதிர்மறையாக 'உருப்படவே மாட்டேடா' என்று தன் மகனை சபித்துக் கொண்டேயிருக்கிறார். ஆனால் அதே மாதிரியான நடிப்பு சலிப்பைத் தருகிறது. 

***

நவீன சினிமாவின் ஒளிப்பதிவில் ஓர் அழகியல் புரட்சியையே ஏற்படுத்தியவர் பி.சி. ஸ்ரீராம். தொடக்க கால திரைப்படங்களில் அவரது இருப்பை பார்வையாளர்களுக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருப்பார். ஆனால் ஒரு நல்ல படைப்பில் எந்தவொரு நுட்ப அம்சமும் அதன் திரைக்கதைக்கு துணையாகத்தான் நிற்க வேண்டுமே ஒழிய, துருத்திக் கொண்டு நிற்கக்கூடாது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் என்பது படம் பார்க்கும் போது நினைவுக்கு வரவில்லை. அந்த அளவுக்குக் காட்சிகள் மிக இயல்பாகவும், காதல் அடிப்படையிலான திரைக்கதை என்பதால் வண்ணமயமான அழகோடு அமைந்திருந்தன. இதில் பணியாற்றியவர் ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி என்பதால்தான் ஒலி வடிவமைப்பு என்கிற விஷயத்தையெல்லாம் நாம் சம்பிரதாயமாகப் பாராட்டுகிறோம். இதைப் போன்ற பல நுட்பக்கலைஞர்களின் உழைப்பை நாம் அறிவதில்லை. 

பொதுவாக அனிருத்தின் பாடல்களில் இரைச்சல் அதிகமாக இருந்தாலும் காதல் தொடர்பான மெல்லிசைப் பாடல்கள் வசீகரமாக அமையும். அதிலும் சிவகார்த்திகேயன் கூட்டணி என்றால் நிச்சயம் நல்லதொரு மெலடியை எதிர்பார்க்கலாம். ஆனால் அந்த மாயம் எதுவும் இத்திரைப்படத்தில் சாத்தியமாகவில்லை. எல்லோமே இரைச்சல். பின்னணி இசையும். 

எப்பாடு பட்டேனும் தன் காதலைப் பெற்று விடுவதற்காக ஓர் இளைஞன் செய்யும் நகைச்சுவையை அதன் சாத்தியமான எல்லைக்குள் சுவாரசியமாகவே உருவாக்க முயன்றுள்ளார் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன். காதலுக்காக அத்தனை சிரமங்களை எதிர்கொள்ளும் அந்த இளைஞன், தான் விரும்பிய பெண் முதன்முறையாக தன்னிடம் காதலைச் சொல்லும் போது பெண் வேடத்தில் இருக்க வேண்டிய அபத்த துயரமான சூழல் போன்று சில விஷயங்கள் இத்திரைப்படத்தில் நன்றாக அமைந்துள்ளன. போலவே பெண் வேடத்தைக் கலைக்க வேண்டிய சூழல் நாடகத்தனமானதாக இருந்தாலும் பொருத்தமான தொடர்ச்சியோடு அமைந்துள்ளது. 

ஆனால் இளைஞனின் காதல் போராட்டத்தை மட்டுமே மையப்படுத்தியதில் இதர பல விஷயங்களில் கோட்டை விட்டிருக்கிறார். எவ்விதப் பயிற்சியும் இல்லாத இளைஞன் எவ்வாறு மருத்துவனையில் பெண் செவிலியாகப் பணிபுரிய முடியும் உள்ளிட்ட நிறைய தர்க்கப் பிழைகள் மலிந்திருக்கின்றன. இதை நியாயப்படுத்தும்படியான காட்சிகளை, வசனங்களை இணைத்திருக்கலாம். போலவே ஒரு பெண்ணைத் துரத்தி துரத்தி காதலைச் சம்பாதிப்பது அல்லது பிடுங்குவது போன்ற நாயகர்களின் தேய்வழக்கு காட்சியமைப்புகளை இயக்குநர்கள் கைவிடலாம். இவை இளைஞர்களுக்கு மோசமான முன்னுதாரணமாக அமையும் ஆபத்தை சமூக உணர்வோடும் சிந்திக்கலாம். ஓர் ஆண் தனது கம்பீரத்தால், நல்லியல்பால் காதலை அடைவது போன்ற நல்ல உதாரணங்களை முன்வைக்கலாம். காதலைப் பற்றிய சரியான புரிதலோடு அமைந்த திரைக்கதைகளை உருவாக்கலாம். தன்னுடைய காதல் தோல்விக்கு பெண்கள் மீது பழியைப் போட்டு புலம்பும் அபத்தங்களைத் தவிர்க்கலாம். அந்த வகையில் இத்திரைப்படத்தில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள், உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் இவை நகைச்சுவைப் பூச்சோடு வெளிப்பட்டிருப்பதால் புன்னகையோடு கடக்க வேண்டியிருக்கிறது. பாறாங்கல்லைத் தலைமேல் தூக்கி மிரட்டி காதலைக் கேட்கும் 'சேது' மாதிரியான வன்முறைக் காதலுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் புரிந்து கொள்ளப்பட வேண்டியது. 

**

பல வருடங்களுக்கு முன்பு படித்த ஒரு பாரசீக கவிதையின் ஒரு வரியின் கருத்து மட்டும் மங்கலாக நினைவில் இருக்கிறது. தன் காதலியின் அருகாமையில் எப்போதுமே இருக்கவேண்டும் என்கிற தீரா ஆசையில் ஓர் இளம் கவிஞன் சொல்கிறான். 'நான் உன் சகோதரனாக பிறந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே. ஊராரின் பார்வைக்கு அஞ்சாமல் உன் வீட்டில், உன் அருகாமையிலேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்குமே' 

காதலின் பித்து உள்ளுக்குள் நிறைந்திருக்கும் நிலையில், காதலின் பிரிவுத் துயரத்தில், உறவுகளின் பொருள் கூட அவனுக்கு  உறைப்பதில்லை. கலாசாரக் காவலர்கள் ஒருவேளை அறச்சீற்றத்துடன் இதை எதிர்த்தாலும், மனம் முழுக்க காதல் நிறைந்திருப்பவர்களால்தான் இந்த நோக்கில் அந்தக் கவிதை வரியின் உள்ளார்ந்த தன்மையை புரிந்து கொள்ள முடியும். இதில் வரும் இளைஞனும் அம்மாதிரியான ஒரு பித்து நிலையில் பெண் ஒப்பனையுடன் குறுக்கு வழியில் தன் காதலை நிறைவேற்றிக் கொள்வதை தவிர வேறெந்த வன்முறையையும் செய்யவில்லை. 

ஆனால் இத்திரைப்படம் குறித்தான சில எதிர்விமரிசனங்கள், அதீதமான தொனியில் ஒலிக்கும் கண்டனங்களைக் கண்டேன்.

பொறுக்கி நாயகர்கள் தங்களின் காதலைப் பிடுங்கிக் கொள்ளும் பெருமிதத்தோடும் அது நிறைவேறாத பட்சத்தில் அதற்கும் பெண்களையே குறைசொல்லி 'அடிடா அவளை' என்று வன்முறை விதைகளைப் பரப்பும் திரைப்படங்களை கண்டிப்பது தேவையானதே. ஆனால் இந்த சாகசத்தோடு நின்றுவிடும் ஆபத்தான படங்களைப் பிரதானமாகக் கண்டிப்பதை விட்டு ஒரு நகைச்சுவை திரைப்படத்தில் அரசியல் சரிநிலைகளைக் கூர்மையாகக் கவனிப்பது வேடிக்கையானது. 

இத்திரைப்படத்திலும் அதுபோன்ற கருத்தியல் அடிப்படைக் காட்சிகள் அமைந்திருந்தாலும், இணைக்கோடாக அதை இயக்குநர் சமன் செய்திருக்கும் காட்சிகளையும் கவனிக்கவேண்டும். காதல் திருமணத்தில் ஏன் வெறுப்பு என்று நாயகன் கேட்பதற்கு காதல் விவகாரத்தில் ஆசிட் அடிக்கப்பட்டு மருத்துவனையில் இருக்கும் பெண்ணை ஆவேசமாக உதாரணம் காட்டுகிறாள் நாயகி. சரியான விஷயம். ஆனால் எல்லா ஆண்களுமே இம்மாதிரியான பொறுக்கித்தனங்களில் ஈடுபடுவதில்லை. உண்மையாகவே தன் காதலைப் புரிய வைக்கப் போராடும் இளைஞர்களும் இருக்கிறார்கள். அந்தத் தரப்பையும் பற்றி இத்திரைப்படம் உரையாடுகிறது. 

பெண் ஒப்பனையிட்டு நாயகன் காதலில் வெற்றி பெறுவதுடன் இத்திரைப்படம் நின்றுவிடவில்லை. அவன் செய்யும் தவறை நண்பர்கள் சுட்டிக் காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். காதல் வேகத்தில் அவனுக்கு ஒன்றும் தோன்றுவதில்லை. ஆனால் காதல் நிறைவேறிய செய்தி அறிந்தவுடன் அதுவரையான தவறின் மீது குற்றவுணர்வு எழுகிறது. அதற்காக மனம் வருந்துகிறான். ஒரு சிக்கலான சந்தர்ப்பத்தில் தன் தவறை நாயகியிடம் ஒப்புக் கொள்கிறான். நாயகிக்கும் அவன் ஏமாற்றியது குறித்தான கடுமையான கோபம் இருக்கிறது. அது மெல்ல தணியும் காட்சிகளோடுதான் படம் நிறைகிறது. 

அதுவரை காதலுணர்வே தோன்றாதவன், உள்ளுணர்வு பலமாக உந்த ஒரு பெண்ணைப் பார்த்து காதலிக்கத் தொடங்கினாலும் அவள் நிச்சயிக்கப்பட்டவள் என்று தெரிந்ததும் மரபை மீற நினைக்காமல்  ஒதுங்கிப் போகிறான். ஆனால் அதற்குப் பிறகு நிகழும் சில சம்பவங்கள் அவனுக்குள் வேறு விதமான சமிக்ஞையை உணர்த்துகின்றன. இப்படியான திரைக்கதைப் பயணத்தை இயக்குநர் சரியாகவே கையாண்டிருக்கிறார். 'பையன்களை அழ விடறதே பொண்ணுங்க வேலை' என்று பெண்களைக் குற்றம் சொல்லும் வசனங்கள், இன்றைய பெரும்பான்மையான பார்வையாளர்களான முதிராத இளைஞர்களை திருப்தி செய்யும் நோக்கில் எழுதப்பட்டவை என்பது அரங்கில் ஒலிக்கும் பலத்த கைத்தட்டல்கள் மூலம் தெரிகிறது. இவற்றைத் தவிர்த்திருக்கலாம். 

பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் எத்தனை சதவிகிதம் மணமகளுடைய தேர்வின் பங்களிப்பும் மனப்பூர்வமான ஒப்புதலும் இருக்கிறது என்பது போன்ற கேள்விகளையும் இத்திரைப்படம் எழுப்புகிறது. எத்தனை கல்வி கற்ற பெண்ணாக இருந்தாலும் தன்னுடைய பெற்றோர்களின் தற்செயலான தேர்வை பாசத்துக்குக் கட்டுப்பட்டு கண்மூடித்தனமான ஒப்புக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமே பெரும்பாலான பெண்களுக்கு அமைகிறது. அவளின் ரசனை, விருப்பம், உள்ளார்ந்த தேர்வு, குழப்பம் ஆகியவை குறித்து அந்தப் பெண் உட்பட எவருமே யோசிக்கிறார்களா என்கிற கேள்வியையும் இத்திரைப்படம் எழுப்புகிறது. 

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி 'ரெமோ' ஒரு சம்பிரதாயமான கேளிக்கைத் திரைப்படம். அதற்கு மேல் இதற்கு ஏதும் மதிப்பில்லை. என்னளவில் சில இடங்களில் அமைந்த சலிப்பைத் தவிர ஒட்டுமொத்தமாக, நகைச்சுவையின் மீதான ஒரு காதல் திரைப்படத்தை கண்ட அனுபவமே என்னுள் நிறைந்திருந்தது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/11/w600X390/Remo982_1.jpg http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/oct/11/2-2579156.html
2578199 சினிமா திரை விமரிசனம் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’: சினிமா விமரிசனம் ச.ந. கண்ணன் Saturday, October 8, 2016 03:38 PM +0530  

சுவாரசியமான காட்சிகளுடன் அழுத்தமான, உணர்வுபூர்வமான காட்சிகள் நிறைய கொண்டிருக்கும் ஒரு படம் அப்படியே நம்மைக் கட்டிப்போட்டுவிடும். அதேசமயம், அதற்குச் சம்பந்தமேயில்லாமல் நாலு மொக்கைக் காட்சிகளும் படத்தில் இருந்து தொலைக்கும். இங்கு அந்தப் படத்தின் இயக்குநரை நறுக்கென்று நாலு கேள்வி கேட்கமுடியும். ஒரு நல்ல படத்தைப் பாழாக்கிவிட்டீர்களே என்று! தமிழில் அப்படிப்பட்ட படங்கள் நிறைய உண்டு.

ரெமோவில் அதற்கெல்லாம் வேலையேயில்லை. மொத்தப் படத்திலும் சுத்தமாக லாஜிக்கே இல்லை என்பதுடன் திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களின் அமைப்பிலும் பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை. இயக்குநர் உள்ளிட்ட ரெமோ படக்குழுவே எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை எனும்போது நாமும் அக்குறைகளைப் பட்டியலிடுவதில் என்ன அர்த்தம் இருக்கமுடியும்? 

நடிகராக ஆசைப்படும் சிவகார்த்திகேயன், அந்த வாய்ப்பும் சரியாகக் கிடைக்காமல் வேலைவெட்டியின்றி உள்ளவர். ஒருநாள் அழகான பெண்ணைப் பார்க்கிறார். உடனே காதலில் விழுந்து, உடனே கையில் ரோஜாக்களுடன் காதலை வெளிப்படுத்த அவர் வீட்டுக்கே செல்கிறார் (அம்மாவிடம் சொல்லிவிட்டே போகிறார்). ஆனால் அங்குப் பார்த்தால், கதாநாயகிக்கு நிச்சயதார்த்தம் நடந்துகொண்டிருக்கிறது ( ஒரு பணக்காரப் பெண்ணுக்கு வீட்டு மொட்டை மாடியில்தான் நிச்சயதார்த்தம் நடக்குமா என்ன?) உடனே காதல் மன்னனின் இதயம் சுக்குநூறாகிவிடுகிறது. (நல்லவேளையாக இந்த இடத்தில் ஒரு சோகப்பாடல் இல்லை. அதற்கென்று இன்னொரு டெம்ப்ளேட் இடம் படத்தின் பின்பகுதியில் வசதியாக அமைந்துள்ளதால்).

சரி பொழப்பைப் பார்ப்போம் என்று கதாநாயகன், பட வாய்ப்புக்காக பெண் வேடமிட்டு (நர்ஸ்) கேஎஸ் ரவிக்குமாரைச் சந்திக்கிறார். அதே நர்ஸ் வேடத்தில் வீடு திரும்பும்போது பேருந்தில் கதாநாயகியைப் பார்க்கிறார். அவரே சிவகார்த்திகேயனின் அருகில் வந்து அமர்ந்து, தான் வேலை பார்க்கும் மருத்துவமனையில் நர்ஸ் வேலையும் வாங்கித் தருவதாகச் சொல்கிறார். அங்கு ஆரம்பிக்கிறது ரெமோவின் திருவிளையாடல்கள். ஒரு தோழியாக கதாநாயகியுடன் நெருக்கமாகி அவளுடைய மனத்தை மாற்றி (கூடவே மாப்பிள்ளையையும்), எவ்வாறு இறுதியில் கதாநாயகியின் கரம் பிடித்து மூக்கோடு மூக்கு உரசுகிறார் என்பதே ரெமோ.

சிவகார்த்திகேயன் படு ஸ்டைலாகத் தோற்றமளிக்கிறார். அவருடைய கதாபாத்திரத்துக்கும் அதற்கும் கொஞ்சம் பொருத்தமில்லை என்றாலும். அதிலும் தேவைப்படும்போதெல்லாம் நொடியில் பெண் வேடமிட்டு வருகிறார். படம் முழுக்க இப்படிப்பட்ட அபத்தமான மாயாஜாலங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே இப்படித்தான் இல்லையா? படக்குழுவில் பிசி ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி இருந்தாலும் இதற்கு மேல் என்ன எதிர்பார்த்துவிடமுடியும்?

வழக்கமாகத் தமிழ்ப் படங்களில் கதாநாயகிகள்தான் லூசாக வருவார்கள். ஆனால் இதில் கதாநாயகனே பல காட்சிகளில் அப்படித்தான் இருக்கிறார். போலி டாக்டரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் போலி நர்ஸைக் கேள்விப்பட்டதுண்டா? அது சாத்தியமா? அதுதான் ரெமோவின் மையக்கதை. (டாக்டராக நடித்துள்ள கீர்த்தி சுரேஷே ஒரு போலி டாக்டர் போல்தான் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளார் என்பது வேறு விஷயம்!). ஆனாலும் நர்ஸ் வேடத்துக்காக சிவகார்த்திகேயன் மெனக்கெட்டதன் பலன் திரையில் தெரிகிறது. படத்தின் ஆதாரமே அந்த வேடம்தானே! ஆனால், அவர் பெண்ணுமல்ல, நர்ஸுமல்ல என்பதை யாராலுமே கண்டுபிடிக்கமுடிவதில்லை. அப்படிப்பட்ட விநோத மனிதர்கள்தான் படம் முழுக்க உலவுகிறார்கள்.  

இன்னொன்று, இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷிடம் சிவகார்த்திகேயன் காதலை வெளிப்படுத்தும் ஒரு காட்சி இருக்கிறதே, அதை அம்பானி மகன் நினைத்தால்கூட அவ்வளவு சுலபமாகச் செய்துவிடமுடியாது. ஆனால், வேலைவெட்டி இன்றி, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சிவகார்த்திகேயன், போகிற போக்கில் அதைச் செய்து, காதலியின் மனத்தில் இடம்பிடிக்கிறார். ஹோய், லாஜிக் மீறல்களுக்கு ஓர் அளவு இல்லையா என்றுதான் படம் முழுக்கத் தோன்றிக்கொண்டே இருக்கிறது. 

மேலும், ஓர் அழகானப் பெண்ணைக் காதலிக்க, அவளுடன் பழகி மனத்தைப் புரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. அவள் சம்மதம் அவசியமில்லை. என்ன தகிடுதத்தங்கள் வேண்டுமானாலும் செய்து அவளை ஏமாற்றி, காதலிக்க முயற்சி செய்யலாம் என்கிற எண்ணத்தைவேறு இந்தப் படம் உருவாக்குகிறது. பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத தமிழ்ப்படங்களின் பட்டியலில் ரெமோவுக்கும் ஓர் இடம் உண்டு. படம் முழுக்க ஏமாற்றுவது சிவகார்த்திகேயன். ஆனால் வசனங்களில் எல்லாத் திட்டுகளும் கீர்த்தி சுரேஷுக்கே விழுகிறது. இதனால் படத்தில் உண்மையான காதல் உணர்வுகளுக்கு வேலையே இல்லாமல் போய்விடுகிறது. சிவகார்த்திகேயன் காதலுக்கு நிகராக இருக்கிறது கீர்த்தியின் காதல்! யார் என்ன என்றே தெரியாமல் அந்நியன் ரெமோ போல சீன் போடும் ஓர் இளைஞனை நம்பி தன் திருமணத்தை உதறுகிறார். அதிலும் கீர்த்தி சுரேஷுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை, சிவகார்த்திகேயனுக்குத் தோதாக வில்லனாக மாறுவதெல்லாம் அபத்தம்! இந்த இடத்தில் அவ்வை சண்முகி படத்தின் அருமை புரிகிறது. புத்திசாலித்தனமான வசனங்கள், உணர்வுபூர்வமான காட்சிகள் என்று நகைச்சுவையையும் தாண்டி பல விஷயங்களுக்காக அந்தப் படத்தில் மெனக்கெட்டிருந்தார்கள்.

படத்தில் இளமை ததும்ப அழகான கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய காரணம். ஒரு மருத்துவருக்கான எந்த உடல்மொழியும் இன்றி கல்லூரி மாணவி போல ஜாலியாக நடித்துள்ளார். பி.சி. ஸ்ரீராமின் கேமரா அவரை இன்னும் அழகாகக் காண்பித்துள்ளது. அனிருத்தின் பரபர பாடல்கள் தேவைப்படும் நேரத்தில் வந்து செல்கின்றன. இசை பெரிய பலமும் இல்லை, பலவீனமும் இல்லை.   

மாப்பிள்ளை புகைப்படத்தை வைத்து கீர்த்தியை சிவகார்த்திகேயன் குழப்புகிற காட்சிகள், குழந்தைக்கு மேஜிக் செய்யும் அந்தக் கடைசிக் காட்சி, நர்ஸைக் காதலிக்க முயற்சி செய்யும் யோகி பாபு தொடர்புடைய காட்சிகள் (அவர் வருகிற காட்சிகளில் ரசிகர்கள் ஒரு குதூகலத்துக்குத் தயாராகிவிடுகிறார்கள்!), ஆங்காங்கே வெடிச்சிரிப்பை ஏற்படுத்தும் சில வசனங்களும் காட்சிகளும் என படத்தில் ரசிக்கக்கூடிய தருணங்கள் இல்லாமல் இல்லை (வழக்கமாக ஒரு விமரிசனத்தின் கடைசிப் பகுதியைக் குறைகளைப் பட்டியலிடுவதற்குதான் பயன்படுத்துவார்கள். ஆனால் இதிலோ ரசித்ததைச் சொல்கிற இடமாக மாறியுள்ளது!) ஆனால், நம்பகத்தன்மை கொண்ட காட்சிகள், உயிர்ப்பான காதல், சிறப்பான வசனங்கள் என உண்மையான மெனக்கெடல் திரைக்கதையில் சாத்தியமாகியிருந்தால் இந்தப் படத்தை முழுவதுமாக ரசித்திருக்கமுடியும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/8/w600X390/Remo9_1.jpg http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/oct/08/1-2578199.html
2578192 சினிமா திரை விமரிசனம் விஜய் சேதுபதியின் ‘றெக்க’: சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, October 8, 2016 02:13 PM +0530  

இயல்பானதொரு திரைக்கதைக்குள் தம்முடைய எளிய நடிப்பை சிறப்பாக பொருத்திக் கொள்வதுதான் விஜய் சேதுபதியின் பொதுவான அடையாளமாக பெரும்பாலும் இதுவரை இருந்தது. அதுதான் அவருடைய மிகப் பெரிய பலமும் கூட. ஆனால் விக்ரமின் 'சாமி'  திரைப்படத்தை மோசமாக நகலெடுத்தது போல அமைந்த 'சேதுபதி'யில் அவரை காக்கி உடைக்குள் ஆக்‌ஷன் நாயகராகப் பார்த்தபோது சற்று திகிலாகத்தான் இருந்தது. மறுபடியும் அவர் தனக்கு இணக்கமான பாதைக்குத் திரும்பியபோது ஆசுவாசம் ஏற்பட்டது. தமிழ் சினிமாவுக்குள் பலகாலமாகப் பெருகி நிற்கும் 'அதிநாயகத்தன்மையை' உடைத்து சாமானிய நாயகர்களுக்கான சினிமாவாக ஆக்கிக்கொண்டிருப்பதில் விஜய் சேதுபதிக்கு ஒரு முக்கியமான பங்குண்டு.

2016-ம் வருடத்தில் இதுவரை வெளியாகியிருக்கும் அவரது ஐந்து திரைப்படங்களுமே பெரிய அளவில் பழுதில்லை. அவரது இதர இரு திரைப்படங்கள் அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் அதே சமயத்திலேயே  மூன்றாவது திரைப்படமான 'றெக்க' வெளியாகியிருக்கிறது. சமகால தமிழ் சினிமா போக்கின் படி  வேறெந்த நாயகருக்கும் கிடைக்காத பெருமை இது. கடந்த கால நாயகர்களுக்கு மட்டுமே இது சாத்தியமான விஷயம் இது.  

'றெக்க'யின் மூலம் தமது சாமானிய முகத்திலிருந்து விலகி மறுபடியும் 'ஆக்ஷன் பார்முலாவில்' இறங்கத் துணிந்திருக்கிறார் விஜய் சேதுபதி. உலகமெங்கிலும் சாகச நாயகர்களுக்கான வரவேற்பு பொதுவாக அதிகமிருக்கும் சூழலில் இந்தப் பரிசோதனையில் அவர் ஈடுபட்டது பெரிய குற்றமில்லைதான். ஆனால் அதுவரை தமக்கு வெற்றியைத் தேடித் தந்துகொண்டிருந்த ஒரு பாதுகாப்பான குகையில் இருந்து இன்னொரு வடிவத்துக்கு மாற நினைக்கும்போது அதற்கான திட்டமும் முன்தயாரிப்பும் வலுவானதாகவும் சுவாரசியமானதாகவும்  இருக்க வேண்டும். அந்த மாற்றம் நியாயமானதுதான் என்று பார்வையாளர்களை ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டும். அந்தளவுக்கான ஒரு திரைக்கதையை தேர்வு செய்திருக்க வேண்டும்.

விஜய்சேதுபதியின் இந்த மாற்றத்துக்கு 'றெக்க' உதவிகரமாக இருந்ததா என்றால் துரதிர்ஷ்டமாக இல்லை என்றுதான் சொல்லியிருக்கிறது. தேய்வழக்கு மசாலா திரைக்கதையை 'கொக்கு தலையில் வெண்ணைய் வைத்து பிடித்த கதையாக' அசுவாரசியமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரத்தின சிவா.


***

தமிழ் சினிமாவின் நாயகர்களுக்கு என்றே பிரத்யேகமாக உள்ள விநோதமான நோய்களுள்  ஒன்று, 'றெக்க' நாயகனான சிவாவிற்கும் இருக்கிறது. காதலர்களின் திருமணத்தில் தடையேற்பட்டால் அதில் நுழைந்து அவர்களை இணைத்து வைப்பது. இதற்கு முன்னர் விஜய், சசிகுமார் போன்றவர்களுக்கும் இந்த நோய் இருந்ததை நினைவுகூரலாம். இந்த வகையில் இத்திரைப்படத்தில் முக்கியமான வித்தியாசத்தை இயக்குநர் யோசித்திருக்கிறார். ஆம்.  எண்பது வயது முதியவர்களுக்கான  'சதாபிஷேக திருமணத்தில்' ஏற்படும் தடையையும் முறியடித்து அவர்களின் திருமணத்தை  நாயகனான விஜய்சேதுபதி நடத்தி வைக்கிறார். நகைச்சுவையெல்லாம் இல்லை. சீரியஸான காட்சிதான்.

சமூகநீதியின் அடிப்படையில் இயங்கும் இந்த  நோய்க்கூறுத் தன்மையின் வழக்கத்தின்படி வில்லனுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் மணப்பெண்ணையும்  நாயகன் சிவா கடத்தி வந்து விட, வில்லன் பழிவாங்குவதற்காக நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்த நிலையில் நாயகனின் தங்கைக்குத் திருமணம் நிச்சயமாகிறது. இதை அறிந்து கொள்ளும் வில்லன், திருமணத்தில் இடையூறு ஏற்படுத்த முயல, நாயகர்களுக்கு இருக்கும் இன்னொரு அடிப்படைத் தகுதியான பாசமிகு அண்ணனாக செயல்படுகிறான் சிவா. 'உனக்காக நான் என்ன செய்ய வேண்டுமானாலும் செய்கிறேன்' என்று  வில்லனிடம் வாக்குறுதி தருகிறான்.

'நான் சொல்லும் பெண்ணைக் கடத்தி வர வேண்டும்' என்கிறான் வில்லன். அது வில்லனின் பகையாளி ஒருவனுக்காக நிச்சயிக்கப்பட்டிருக்கும் மணப்பெண். இதன் மூலம் நாயகனைச் சிக்கலில் தள்ளி விட்டு பழிவாங்கலாம், தனது பகையாளியையும் பழிவாங்கி விடலாம் என்பது வில்லனின் திட்டம். ஒரு கல்லில் இரண்டு Mangoes. 

ஏற்கெனவே  இருக்கும் இந்த மங்கூஸ் வில்லனோடு, நாயகனுக்கு கூடுதலாக மேலும் இரண்டு பயங்கர வில்லன்களின் பகைமையையும் எதிர்கொள்ள வேண்டிய சவால் அமைகிறது. 

***

தனது தங்கையின் திருமணம் எவ்வித சிக்கலும் இல்லாமல் நடைபெற, சில மணி நேரங்களுக்குள் தம்மிடம் தரப்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சிக்கலான சூழல் நாயகனுக்கு. 

ஒரு கச்சிதமான ஆக்ஷன் மசாலா திரைக்கதையின் அடிப்படையான கட்டுமானத்துக்குள் அமைந்ததுதான். பரபரவென்று நகர்த்தியிருக்க  வேண்டிய திரைக்கதையை 'அதுல பார்த்தீங்கன்னா' என்று விகே ராமசாமி, சாவகாசமாக இழுத்து வசனம் பேசுவாரே, அப்படிக் கொட்டாவி வரும்படி, நம்பகத்தன்மை என்பது துளியுமில்லாமல் இழுத்திருக்கிறார்கள்.

'கில்லி' திரைப்படத்தின் சில தீற்றல்களை இயக்குநர் பின்பற்றியுள்ளதாக ஒரு தகவல் உள்ளது. 'சாமி' படத்தின் மோசமான நகலாக 'சேதுபதி' அமைந்ததைப் போல 'கில்லி'யின் அபத்தமான நகலாக  'றெக்க' முறிந்து போனதுதான் பரிதாபம்.

அது சாகசத் திரைப்படமாக இருந்தாலும் சரி, வேறு வகைமையில் அமைந்த திரைப்படமாக இருந்தாலும் சரி, பாத்திரத்தின் உணர்வுகளோடும் சிக்கல்களோடும் பார்வையாளர்கள் ஒத்திசைவுடன் இணையவேண்டும். பிரதான பாத்திரம் எதிர்கொள்ளும் சிக்கலை தன்னுடைய சிக்கலாக உணர வேண்டும். அவ்வாறான பிணைப்பை முதலிலேயே நிறுவும் திரைக்கதைதான் பெரும்பாலும் வெற்றி பெறும். இந்த மாயத்தை நிகழ்த்தாமல் எவ்வித பிரம்மாண்டமான நுட்பத்தைக் கொட்டினாலும் அது எடுபடாது. 'றெக்க'யில் நிகழ்ந்திருக்கும் பரிதாபமான தோல்வி இதுதான்.

தனது பால்ய கால தோழியான 'மாலா அக்காவை' பல வருடம் கழித்து ஒரு சிக்கலான நேரத்தில் லிஃப்ட் ஒன்றினுள் நாயகன் சந்திப்பதாக ஒரு காட்சி வருகிறது. பார்வையாளன் சற்று நெகிழ்வுபூர்வமாக உணரும் காட்சி இது ஒன்று மட்டுமாகத்தான் இருக்கும். இதுவும் நாடகீயத்தனம் கொண்டதுதான் என்றாலும் இதர மொண்ணைத் தனமான காட்சிகளோடு ஒப்பிடும்போது 'இரு கோடுகள் '  தத்துவம் போன்று இது சிறந்ததாக தோன்றி விடுவதில் ஆச்சரியமொன்றும் இல்லை.


***

"ஒரு அட்வைஸ் சொல்றேன், கேக்கறியா.. பில்டப்பை குறைச்சுட்டு நேரா மேட்டருக்கு வா'.. என்று ஒரு காட்சியில் வில்லனிடம் நாயகன் சொல்வதாக ஒரு வசனம் வருகிறது. இதை இயக்குநர் தமக்கே நிறைய முறை சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அந்த அளவுக்கு வில்லன்கள் குறித்தான மிகையான சித்திரங்கள் முதலில் சொல்லப்படுகின்றன. நாயகன் கடத்தவிருக்கும் பெண்ணின் தந்தை, மதுரையில் எத்தனை பெரிய அரசியல்வாதி  என்பதும் அவர் வீட்டு வாசலில் காலை வைத்தாலே வெட்டிவிடுவார்கள் என்றெல்லாம் மிரட்டலாக சொல்லப்படுகிறது. ஆனால் நாயகன் அங்கே செல்லும்போது வீட்டு வாசலில் வாட்ச்மேன் கூட இருப்பதில்லை. 

ஆனால் நாயகியுடன் கிளம்பும்போது மட்டும் எங்கிருந்தோ வந்த சுமார் நூறு  அடியாட்கள் நாயகனைத் துரத்துகிறார்கள். 'சர்ஜிக்கல் தாக்குதல்' மூலம் அவன் ஒவ்வொருவராக வீழ்த்திக்கொண்டே முன்னகர்கிறான். அந்தப் பகுதியில் மின்தடை உள்ள நேரத்தை முன்னே அறிந்துகொண்டு அதன் மூலம் அவன் தப்பிப்பதை நாம் சமயோசித சாகசம் என்று எடுத்துக் கொள்வதா, அல்லது  நகைச்சுவை என்று பார்ப்பதா என்று நீண்ட நேரம் குழம்ப வேண்டியிருக்கிறது. மட்டுமல்லாது, மின்மிகை மாநிலம் என்று அரசு தரப்பில் சொல்லப்படும் தமிழகத்தில் 'மின்தடை'யுள்ளதாக ஒரு காட்சியில் சித்தரிப்பதின்  மூலம் இத்திரைப்படத்தை ஓர் அரசியல் விமரிசனப் பிரதியாகவும் கருதலாம் என்று இதை வலிந்து பாராட்ட விரும்புபவர்கள் ஒரு காரணம் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உலகத்தில் உள்ள அத்தனை ராணுவமும் வந்தாலும் அதை எதிர்கொள்ளக்கூடிய தன்னம்பிக்கையுடன் நாயகன் இருப்பதே, 'இது சினிமா, இது சினிமா' என்கிற செய்தியை நம் முகத்தில் அறைந்து சொல்லிபடியே இருக்கிறது. இந்தச் சிக்கல்களை சற்றாவது யதார்த்தத்துடன் எதிர்கொள்ளும் பரபரப்போ திட்டமோ என்று எதுவுமே அவனிடம் இருப்பதில்லை. பூனை - எலி போன்று புத்திசாலித்தனமாக நிகழ்ந்திருக்க வேண்டிய இந்த ஆட்டத்தை, செயற்கையான, மிகை சாகச சித்தரிப்புகளின்  மூலம் 'எப்படியும் நாயகன்தானே ஜெயிக்கப் போகிறான்' என்று விட்டேத்தியான சோர்வை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தி விடுகிறார் இயக்குநர்.

இதில் ஆறுதலாக இருக்கிற ஒரேயொரு விஷயம் என்னவெனில், நாயகனின் சண்டைக்காட்சிகள் மசாலா திரைப்படங்களுக்கு இணையானதாக இருந்தாலும், இதர காட்சிகளின் வசனங்களில், உடல்மொழியில் விஜய்சேதுபதி தன்னுடைய இயல்பான நடிப்பை பெருமளவில் விட்டுத்தராமல் இருப்பதுதான். 'பஞ்ச் டயலாக் பேச மாட்டேன். பஞ்சு மாதிரி பேசுவேன்' என்று ஒரு காட்சியில் அவர் சொல்வதை  பெரும்பாலும் பிடிவாதமாக பின்பற்றுவது மட்டுமே இந்தச் சத்தங்களுக்கு இடையில் சற்று ஆறுதல்.

***

அதேதான். சமீபகால தமிழ் சினிமாவின் நாயகிகளைப் போலவே இதன் நாயகியும் புத்தி பேதலித்த மாதிரியே செயற்படுகிறார். பின்னர் வரும் காட்சிகளின் மூலம் இயக்குநர் மொண்ணையாக சமாதானம் சொல்ல முயன்றாலும், நாயகனைப் பார்த்தவுடனேயே அவன் மீது உலகளவுக்கு நம்பிக்கை வைத்து ஓர் இளம்பெண் கிளம்பி விடுவதும் காதலிக்கத் தொடங்கிவிடுவதும் அத்தனை அசட்டுத்தனமான சித்தரிப்புகளாக இருக்கின்றன. 

ஹீரோக்கள் ஆதிக்கம் செய்யும் தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கான இடம் அவர்களுக்கான இளமைப் பொலிவில் மட்டுமே அமைந்திருப்பது ஒருவகையில் துரதிர்ஷ்டம்தான். லஷ்மி மேனன், தனது முந்தைய திரைப்படங்களின் தோற்றத்தில் இருந்த  வசீகரத்தைப் பெருமளவு இழந்திருக்கிறார். விவேக் ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக்காட்சியில் தன் உடம்பெங்கும் காற்று ஏற்றிக் கொண்டு தோற்றமளிப்பது போல இவர் ஆகிவிட்டிருப்பதைக் காண நெருடலாக இருக்கிறது. 

நாயகியைப் போலவே அவரது அம்மா, பாட்டி, வில்லன்கள், நாயகனின் தந்தை என்று ஏறத்தாழ எல்லோருமே புத்தி பேதலித்தவர்கள் போலவே இருக்கிறார்கள். 

நாயகன் ஏன் காதலர்களை இணைத்து வைப்பதில் இத்தனை ஆர்வம் காட்டுகிறான் என்பதற்கு ஒரு கொடுமையான பிளாஷ்பேக் வருகிறது. அசோகன், நம்பியார் காலத்து பிளாஷ்பேக். அதிலும் வில்லன் துரத்திக் கொண்டிருக்கும் ஓர் அசந்தர்ப்பமான சூழலில் நிதானமாக இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

நாயகன் இளம் வயதில் தன்னுடைய ஆசிரியையிடம் காதலைச் சொல்ல முற்படுவதாக வேறு சில காட்சிகள் வருகின்றன.. இளைஞர்களை கெடுத்தது போதாதென்று 'பாக்யராஜ்தனமான' சிறுவர்களைச் சித்தரிப்பதின் மூலம் அவர்களையும் தமிழ் சினிமா இயக்குநர்கள் பாழ்படுத்தி விடுவார்கள் போலிருக்கிறது. 'திருநாள்' என்கிற காவியத்தில் வரும் ஒரு முத்தக்காட்சி இதிலும் வந்து விடுமோ என்று கூட பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளையாக, அந்த விபத்தெல்லாம் நடக்காமல் 'லவ்' என்பது 'அன்பு' என்று சிறுவன் தாமதமாகப் புரிந்து கொள்வதால் நாம் தப்பிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. 

மற்ற சாதாரண பாத்திரங்கள் மனப்பிறழ்வுடன் அலைந்து கொண்டிருக்கும்போது, திறமையான நடிகரான கிஷோரை 'பைத்தியக்கார' பாத்திரத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்திருக்கிறார் இயக்குநர். இதன் மூலம் கிஷோரின் திறமை பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டதுதான் மிச்சம். 'மாலா அக்காவாக' நடிப்பவர் சற்று தேவலை. ஆனால் இவரை தொலைக்காட்சி சீரியல்கள் விரைவில் தத்தெடுத்துக் கொள்ளும். அத்தனை டிராமா. நகைச்சுவை செய்ய வாய்ப்பில்லாமல் ஓரமாக நிற்க வேண்டிய அவலம் சதீஷுக்கு.

***

'கும்கி' என்கிற ரெடிமேட் மாவில் இன்னமும் பிடிவாதமாக வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் டி.இமான். வேக தாளயிசைப் பாடலாக 'விர்ரு விர்ரு' என்று வரும் பாடலைக் கேட்டாலே நமக்கு 'சுர்'ரென்று கோபம் வருகிறது. 'டால்பி' நுட்பத்தில் இவருடைய பின்னணி இசையின் அலறலைக் கேட்க கேட்க நமக்கு 'றெக்க' முளைத்து வெளியில் பறந்து விட்டால் கூட தேவலை என்றாகி விடுகிறது. அசந்தர்ப்பமான நேரத்தில் தடைக்கற்களாக  வரும் 'டூயட்'கள் எரிச்சலையூட்டுகின்றன. 

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், சண்டைக்காட்சி அமைப்பாளர்கள் உள்ளிட்ட சில நுட்பக் கலைஞர்களின் உழைப்பெல்லாம் அபாரம்தான். ஆனால் அத்தனை உழைப்பும் எதற்காக பயன்படுகிறது என்பதில்தான் அதன் பொருள் அர்த்தமாகிறது. 

விஜய் சேதுபதி தன்னுடைய அடுத்தடுத்த பயணத்தை சுயபரிசீலனையோடும் தெளிவான திட்டங்களோடும் தீர்மானிக்க வேண்டிய எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது 'றெக்க'. அவரது தொடர்ச்சியான, வெற்றிகரமான மைல் கல்களில் ஒரு தடைக்கல்லாக நிற்கும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது இத்திரைப்படம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/8/w600X390/rekka2.jpg http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/oct/08/1-2578192.html
2570735 சினிமா திரை விமரிசனம் இயக்குநர் மணிகண்டனின் 'ஆண்டவன் கட்டளை': சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Sunday, September 25, 2016 11:33 AM +0530 ஒரு திரைப்பட இயக்குநருக்கு இரண்டாவது திரைப்படம் எப்போதுமே ஒரு கண்டம். தன் முதல் திரைப்படத்தில் அத்தனை வருட மெனக்கிடலையும் கவனத்தையும் போட்டுச் செதுக்கியிருப்பார். அதன் வெற்றி இரண்டாவது படத்தின் முன்பாக ஒரு பெரிய சவாலாக நிற்கும். இதையும் வெற்றிகரமாகத் தாண்டிவிட்டால் அவரது படைப்பு ரசிகர்களால் எதிர்பார்க்கப்படக்கூடியதொன்றாக மாறிவிடும். எனவே மூன்றாவதில் இன்னமும் கவனமாக இருக்க வேண்டிய சூழல். (பா.ரஞ்சித் அப்படியொரு கவலையை ஏற்படுத்தினார் என்பதை நினைவுகூரலாம்). 

ஆனால் மணிகண்டன் இந்த எதிர்பார்ப்பை அபாரமாகப் பூர்த்தி செய்திருக்கிறார். 'காக்கா முட்டை' மற்றும் 'குற்றமே தண்டனை'  ஆகிய இரண்டு திரைப்படங்களும் 'பிலிம் பெஸ்டிவல்' பாணியில் அமைந்த படைப்புகள். அதற்கு மாறாக 'ஆண்டவன் கட்டளை' வெகுஜன பாணியில் அமைந்திருக்கிறது. ஆனால் இந்தப் பாணியிலும் ஓர் இயல்பான திரைப்படத்தை தர முடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் 'ஆண்டவன் கட்டளை'.  அதிலும் பெரும்பாலான இதர தமிழ் சினிமாக்களின் அபத்தங்களைப் பார்க்கும்போது இம்மாதிரியான முயற்சிகள் மேலதிகமாக வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.  எந்தவொரு ஆபாசமும் மசாலா விஷயங்களும் இல்லாமல் எளிய, சுவாரசியமான காட்சிகளுடன் நகரக்கூடிய திரைப்படத்தை மணிகண்டன் தந்திருக்கிறார். 

தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் பொதுவாக தங்கள் திரைப்படங்களின் கருப்பொருளுக்காக செவ்வாய் கிரகத்துக்கு எல்லாம் போய் தேடுவதாக நாடகமாடும்போது, நம்முடைய வாழ்வைச் சுற்றியே ஏராளமான சுவாரசியக் கதைகள் உலவிக்கொண்டிருக்கின்றன என்பதை நிரூபிக்கும் திரைக்கதை இது. (ஆனால் எதற்காக பழைய திரைப்படத்தின் தலைப்பை அவசியமின்றி மறுபடியும் உபயோகித்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை).
 
***
'ஆண்டவன் கட்டளை' எதைப் பற்றியது?

சாதாரண நேரத்தில் அலட்சியமாகச் சொல்லப்படும் ஒரு பொய், அடுக்கடுக்காக வளர்ந்து பெரிய சிக்கல்களுக்கு இட்டுச் செல்லும் ஆபத்தைப் பற்றி இத்திரைப்படம் உரையாடுகிறது. இது ஒரு பக்கம்.

இன்னொன்று, அரசு இயந்திரம் இயங்கும் விதத்தைப் பற்றி நமக்கு பல்வேறு விதமான முன்தீர்மானமான கருத்துகளும் அவநம்பிக்கைகளும் இருக்கின்றன. அரசு அலுவலர்கள் எல்லோருமே லஞ்சம் வாங்குபவர்கள், மெத்தனமாக இயங்குபவர்கள், பொதுமக்களை அலட்சியமாக கையாள்பவர்கள் என்பன போன்று பல விஷயங்கள்.

இது நடைமுறையில் பெரும்பாலும் உண்மைதான் என்றாலும், அந்த  ஊழல் அமைப்பிலும் கூட வாங்குகிற சம்பளத்துக்கு நியாயமாக, நேர்மையாக உழைக்கிற கனவான்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 'ஆண்டவன் கட்டளை' அவ்வாறான நபர்களின் மீது நாம் வைக்க வேண்டிய நம்பிக்கையைச் சுட்டிக்காட்டுகிறது. 

எந்தவொரு அரசு அலுவலகத்துக்குள் செல்வதற்கு முன்னாலும் நம்முள் படிந்திருக்கும் அவநம்பிக்கைகள், அதுசார்ந்து பல தயக்கங்களையும் அச்சுறுத்துதல்களையும் ஏற்படுத்துகின்றன.  எனவே நேரடியாக முயற்சி செய்யாமல், இதற்கான குறுக்கு வழி இருக்கிறதா என்று தேட ஆரம்பித்து விடுகிறோம்.  

இந்த மாதிரியான நபர்களுக்காகவே காத்திருக்கும் இடைத்தரகர்கள், அரசு அமைப்பின் பலவீனங்களைப் பூதாகரமாக ஊதிப் பெருக்கி, அதன்மூலம் தங்களின் வருமானத்தை ஈட்டுகிறார்கள். 'இவர்கள் இல்லாமல் அந்தக் காரியம் நடைபெறவே முடியாது' என்கிற மாயையை நமக்குள் விதைப்பார்கள். இப்படிச் சட்டத்தின் ஒட்டைகளில் புகுவதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைப் பற்றி எந்தவொரு எச்சரிக்கையையும் தராமல் அப்போதைக்கு தங்களின் வருமானம் குறித்தே சிந்திப்பார்கள். உங்களை எதையும் யோசிக்க விடாமல் 'அதெல்லாம் ஒண்ணும் பிரச்னையில்ல..பார்த்துக்கலாம் ' என்று சட்டத்துக்குப் புறம்பான பல விஷயங்களை எளிதான தொனியில் முன்வைப்பார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றுபவர்களும் பலர் உண்டு. அரசு ஊழியர்களுக்கும் இவர்களுக்கும் ரகசியக் கூட்டணியும் இருக்கும். இதன்மூலம் இந்த ஊழல் கலாசாரத்தை வளர்ப்பதில் நாமும் ஒரு பங்காக இருக்கிறோம். 

இவர்களின் ஜம்பங்களை நம்பி நாமும் பல ஆவணங்களில் மேம்போக்காக கையெழுத்துப் போட்டு, குறுக்கு வழியில் எளிதாக செல்ல விரும்புகிற அந்தப் பயணம், பல சமயங்களில் பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அந்தச் சமயத்தின் வேதனையுடன் நீங்கள் அவர்களை மறுபடியும் அணுகினால் அதற்கும் கூட பல்வேறு வழிகளை வைத்திருப்பார்கள். அவை உங்களை மேலதிகச் சிக்கலுக்கே இட்டுச் செல்லும். அவர்களுக்கு சட்டரீதியான ஆபத்து ஏற்படும் எனில் சடுதியில் காணாமற் போய் விடுவார்கள். 

இடைத்தரகர்களின் இப்படிப்பட்ட பல்வேறு வகையான மோசடிகளையும், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரை நேரடியாகத் தொடர்பு கொண்டால் வேலை எளிதில் முடிந்து விடக்கூடிய சாத்தியத்தையும், பிரசாரத் தொனியில்லாமல் அழுத்தமான இயல்புடன் கூடிய காட்சிகளாக முன்வைக்கிறது 'ஆண்டவன் கட்டளை'.

***

மதுரை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் இருப்பவன் காந்தி (விஜய் சேதுபதி). ஊரைச்சுற்றி கடன். அக்காவின் நகைகளை அடமானம் வைத்திருப்பதால் அது சார்ந்த உறவுச்சிக்கல் வேறு. அந்த ஊரில் உள்ள ஒரு 'டுபாக்கூர்' பேர்வழி பாரின் சென்ட் வாசனையுடன் வந்திறங்குவதைப் பார்த்து தானும் அது போல வெளிநாடு சென்று சம்பாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையுடன் சென்னைக்கு வருகிறான்.

'டூரிஸ்ட்' விசாவில் செல்ல மனைவியின் பெயர் நிச்சயம் தேவை என்று ஆலோசனை சொல்லப்படுவதால் பாஸ்போர்ட் விண்ணப்ப படிவத்தில் 'கார்மேக குழலி' என்று தனக்குப் பிடித்தமான, கற்பனையான பெயரை நிரப்புகிறான். ஆனால் இந்தத் தொடக்கப் பொய் அவனைப் பல சிக்கல்களுக்கு இட்டுச் செல்கிறது. அந்தப் பெயரில் உள்ள பெண்ணைத் தேடிச் சென்றதில்  செய்தி சானல் நிருபராக இருக்கும் பெண்ணை (ரித்திகா சிங்) சந்திக்கிறான். இவனுக்கு உதவ வருவதால் அவளுக்கும் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

காந்தி வெளிநாட்டுக்குச் சென்றானா, அவனுடைய சிக்கல்கள் என்னவாயின, கார்மேக குழலி யார் என்பது தொடர்பான காட்சிகள் மிகவும் இயல்பான நகைச்சுவையுடனும் அதே சமயத்தில் தீவிரத்தை இழக்காமலும் விரிகின்றன.

***
தனக்கு ஏற்றவாறான திரைக்கதையை தொடர்ந்து தேர்ந்தெடுப்பதில் விஜய் சேதுபதி வியக்க வைக்கிறார். சில மலையாளத் திரைப்படங்களைப் பார்க்கும்போது 'இப்படி இயல்பாக நடிக்கும் நடிகர்கள் தமிழிலும் இருக்க மாட்டார்களா' என்று தோன்றுகிற ஏக்கம் விஜய் சேதுபதியால் சற்று குறைகிறது. காட்சிக்குத் தேவையான நடிப்பை அளவாக வழங்குவதில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். பேச முடியாத நபராக நடிக்க சந்தர்ப்பம் ஏற்படும் காட்சிகளில் அந்த நிலைக்கு  மிக அநாயசமாக மாறுகிறார். தன் ஆண்மை சவாலுக்கு உள்ளாக்கப்படும் ஒரு சூழலில் அதைப் 'பேச முடியாத நிலையில்' வலுவாக எதிர்க்க முற்படும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது. 

துபாய்க்குச் சென்று பணியாற்றியது, பிறகு 'கூத்துப்பட்டறை' நாடகக்குழுவில் கணக்காளராகப் பணியாற்றியது, அங்கு நடிப்பை கற்றுக் கொண்டது போன்ற விஜய் சேதுபதியின் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள், இந்தத் திரைக்கதையுடன் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன.

'கார்மேக குழலியாக' ரித்திகா சிங். முதல் படத்தில் வெளிப்பட்ட இவரின்  அற்புதமான நடிப்பு, தற்செயலானது  அல்ல என்பதை இந்தத் திரைப்படத்திலும் நிரூபிக்கிறார். ஒரு செய்தித் தொலைக்காட்சி நிருபரின் தன்னம்பிக்கையான உடல்மொழி இவரிடமிருந்து நன்கு வெளிப்படுகிறது. பொதுவெளியில் புழங்கும் பெண்கள் தங்களின் பாதுகாப்புக்காகப் பெரும்பாலும் இறுக்கமாக இருப்பதை  சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். விஜய் சேதுபதி தன் விருப்பத்தைச் சொல்லும் இறுதிக் காட்சியில் அதுவரையிலான இறுக்கம் கலைந்து நாணத்தை வெளிப்படுத்துவது அத்தனை அழகாக இருக்கிறது. சிறப்பான  காட்சியது. 

***
பிரதான பாத்திரங்கள் தொடங்கி சிறிய பாத்திரங்கள் வரை மிகப் பொருத்தமாக நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது வியக்க  வைக்கிறது. இந்த அம்சம் படத்தின் மிகப் பெரிய பலமாக அமைகிறது. நடிப்புப் பட்டறையின் தலைவராக வரும் நாசர், கணக்குவழக்கில் தம்மை ஏமாற்றும் பணியாளரைக் கோபத்துடன் வெளியேற்றும் ஒரு காட்சியில், தான் 'சீனியர்' நடிகர் என்பதை நிரூபிக்கிறார். 

இதுவரை பெரும்பாலான திரைப்படங்களில் சிறிய வேடங்களில் மட்டுமே நடித்த யோகி பாபுவுக்கு இதில் பிரமோஷன் கிடைத்திருக்கிறது. விஜய் சேதுபதியின் நண்பராக நடிக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரது நகைச்சுவை ஒன்லைனர்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கின்றன. விஜய் சேதுபதியின் விசா மறுக்கப்பட்டு, இவருக்கு கிடைத்து விடுவதையொட்டி 'லண்டன் சிடிஸன் மேல கைய வைக்காதே' என்பது போன்று இவர் செய்யும் அலப்பறைகள் ரசிக்க வைக்கின்றன. படம் முழுவதிலும் இவர் வந்திருக்கலாமே என்று தோன்ற வைத்திருக்கிறார். 

சீனீயர் மற்றும்  ஜூனியர் வக்கீல்களாக முறையே ஜார்ஜும் விநோதினியும் இயல்பாக நடிப்பை வழங்கியிருக்கின்றனர். பொதுவாகவே சீனியர்களுக்கு தங்களின் ஜூனியர்கள் புத்திசாலித்தனமாக இருப்பது குறித்து ஒரு ரகசிய எரிச்சல் இருக்கும். அந்த நுட்பமான விஷயம் இவர்களின் சம்பந்தப்பட்ட காட்சிகளில் எதிரொலிக்கின்றன. குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதியாக வரும் பெண்மணியின் நடிப்பு, அத்தனை இயல்பாக இருக்கிறது. சுத்தியலை எடுத்துத் தட்டும் செயற்கைத்தனமான நீதிமன்றக்காட்சிகளிலிருந்து  எத்தனை தூரம் தமிழ் சினிமா விலகி யதார்த்தத்தை நோக்கி நகர்கிறது என்பதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. 

போலி ஏஜெண்ட்டாக நடித்திருக்கும் இயக்குநர் ஸ்டான்லி, திறமையாக போர்ஜரி செய்யும் கிழவர், நேசன் என்கிற பாத்திரத்தில் வரும் இலங்கை அகதி, வீட்டு புரோக்கர் சிங்கம்புலி, ஒரேயொரு சிறிய காட்சியில் வந்தாலும் இடைத்தரகர்களின் உடல்மொழியை கச்சிதமாக வெளிப்படுத்திய ரமேஷ் திலக், நாடகக்குழுவில் வரும் விஜய்சேதுபதியின் நண்பர், அவரின் தோழி பூஜா தேவரியா, பாஸ்போர்ட் அதிகாரி, அங்குப் பணிபுரியும் சீனுமோகன், ஒல்லியான உடம்பை வைத்துக்கொண்டு எகிறும் வீட்டு உரிமையாளர் என்று ஏறத்தாழ எல்லோருமே அவரவர் பாத்திரங்களில் சிறப்பாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதற்காகவே இயக்குநரைப் பாராட்டியாகவேண்டும். 

இந்த வரிசையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ஹரீஷ் பெராடி எனும் மலையாள நடிகரின் அட்டகாசமான நடிப்பைப் பற்றி. இத்திரைப்படத்தில் கடைசிப்பகுதியில், விஜிலென்ஸ் ஆபிசராக வருகிறார். அதுவரை இயல்பான நகைச்சுவையுடன் நகர்ந்து கொண்டிருந்த படத்தின் தொனி, சட்டென்று இறுக்கமாக மாறுவது இவருடைய அபாரமான பங்களிப்பினால் சாத்தியமாகிறது. 'சார், என் பிரெண்டுக்கு என்ன ஆச்சு?’ என்று விஜய்சேதுபதி தொடர்ந்து இவரிடம் பரிதாபமாகக் கேட்டுக்கொண்டிருந்தாலும், காவல்துறை அதிகாரிகளுக்கேயுரிய இறுக்கத்துடன் மெளனத்தைக் கடைப்பிடிப்பது திகிலைக் கூட்டுகிறது. இவரைப் போன்ற அபாரமான நடிகர்கள்  தமிழில் அதிகம் பயன்படுத்தப்படவேண்டும். 

***
போலி ஏஜெண்ட்டுகளால் பாஸ்போர்ட், விசா பெறுவதில்  கடைப்பிடிக்கப்படும் மோசடிகள், தகிடுதத்தங்கள் போன்றவை தொடர்பான நடைமுறைக் காட்சிகள் சற்று விரிவாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பாஸ்போர்ட் மற்றும் போலி டிராவல் ஏஜெண்ட் அலுவலகம், குடும்பநல நீதிமன்றச் சூழல் போன்றவை யதார்த்தத்துக்கு நெருக்கமாகக் காண்பிக்கப்படுகிறது. இவை நிர்மாணிக்கப்பட்ட அரங்குகள் என்பதை நம்பச் சிரமமாயிருக்கிறது. தங்களின் சொந்தக் கிராமங்களில் வீடு, நிலம் வைத்திருப்பவர்கள், நகரத்துக்கு வரும்போது குருவிக்கூடு போன்ற இடத்துக்காக வீட்டு உரிமையாளர்களால் பல்வேறு வகையாக அவமானப்படுத்தப்படும் நடைமுறை அலவங்கள் சார்ந்த கொதிப்புகளும் வெளிப்படுகின்றன. அனுதாபம் தேடும் நோக்கில் அல்லாமல் இலங்கை அகதிகளின் துயரங்களும் ஒரு பாத்திரத்தின் வழியாக இயல்பாக வெளிப்படுகிறது. விவாகரத்து என்பது இளையதலைமுறையிடம் மலிந்துவிட்ட கலாசாரத்தையும் இத்திரைப்படம் ஓரமாகச் சொல்கிறது. 

இதன் திரைக்கதையை இயக்குநருடன் இணைந்து அருள்செழியன் மற்றும் அனுசரண் எழுதியுள்ளனர். அருள்செழியனின் சுயவாழ்வில் உண்மையாக நிகழ்ந்த ஒரு சம்பவம் இந்தத் திரைக்கதையின் அடிப்படையாக இருப்பது நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது.

சந்தோஷ் நாராயணன் பாணியின் சாயலில் பாடல்களையும் பின்னணி இசையையும் உருவாக்கியுள்ளார் இதன் இசையமைப்பாளர் ‘கே’. பாடல்கள் காட்சிப்படுத்தப்படும் விதமும் திணிக்கப்பட்டதாக அல்லாமல், கதையின் போக்குடன் 'மாண்டேஜ்' வகையில் இருப்பது திரைக்கதையில் தடங்கலை ஏற்படுத்தாமல் இருக்கிறது. 

விஜய் சேதுபதியின் விசா மறுக்கப்படுவது, யோகி பாபுவின் வெள்ளந்திதனம் உள்ளிட்ட சில காட்சிகளில், இலங்கை எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தி எழுதிய 'ஒரு அகதி உருவாகும் நேரம்' என்று குறுநாவல் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. புத்திசாலி போல் நடிக்கும் ஒரு அப்பாவி நபர், டிராவல் ஏஜெண்ட்டுகளால் பலவிதமாகத் தயார்ப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டாலும் எதையாவது சொதப்பி மாட்டிக்கொண்டு கரப்பான் பூச்சி போல திரும்பத் திரும்ப வந்துவிடும் நகைச்சுவையை மையப்படுத்தி எழுதப்பட்டது அந்தப் படைப்பு. 

***
பாஸ்போர்ட் சோதனைக்காக வீட்டுக்கு வரும் கான்ஸ்டபிள், பாஸ்போர்ட் அலுவலக உயர் அதிகாரி போன்றவர்களை நேர்மையாகச் சித்தரிப்பதின் மூலம் அரசு இயந்திரம் ஒட்டுமொத்த ஊழலில் மூழ்கிப்  போய்விடவில்லை என்கிற ஆரோக்கியமான  நம்பிக்கையை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறார் இயக்குநர். இடைத்தரகர்களை நம்பிச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்கிற  செய்தி அவர்களிடம் வலுவாக சென்று சேரும்படியான படைப்பு - 'ஆண்டவன் கட்டளை'.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சிரிக்கவும் சிந்திக்கவுமான ஒரு சுவாரசியமான திரைப்படம் தமிழில் வெளியாகியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மணிகண்டன் மற்றும் அவரது குழுவினருக்குப்  பாராட்டு. 

]]>
ஆண்டவன் கட்டளை, விஜய் சேதுபதி, இயக்குநர் மணிகண்டன் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/25/w600X390/aandavan2_kattalai.jpg http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/sep/25/இயக்குநர்-மணிகண்டனின்-ஆண்டவன்-கட்டளை-சினிமா-விமரிசனம்-2570735.html
2562393 சினிமா திரை விமரிசனம் விக்ரம் நடித்த ‘இருமுகன்’ - சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, September 10, 2016 01:07 PM +0530 விக்ரம் ஒரு ஃபீனிக்ஸ் பறவை. தன் வீழ்ச்சியின் சாம்பலில் இருந்து அவ்வப்போது உயிர்த்தெழுவார். அப்படி எழ பாலா, ஹரி, ஷங்கர் போன்ற இயக்குநர்கள் இதற்கு முன் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அவரது சினிமா கிராஃபை கவனித்தால் அவ்வப்போது உற்சாகமாக மேலே ஏறி மீண்டும் அவ்வப்போது பாதாளத்தில் வீழ்ந்திருப்பதைக் கவனிக்கலாம்.

இந்த ஃபீனிக்ஸ் பறவை உயிர்த்தெழும்போதெல்லாம் அதை டீஃப் ஃபிரை செய்ய சில இயக்குநர்கள் உற்சாகக் கத்தியுடன் தயாராக இருப்பார்கள். 2015-ல் விஜய் மில்டன் (பத்து எண்றதுக்குள்ள). இப்போது ஆனந்த் ஷங்கர். இப்படி செத்து செத்து விளையாடும் ஆட்டத்தை விக்ரம் ஏன் தொடர்ந்து அனுமதித்துக்கொண்டிருக்கிறார் என்பதுதான் புரியவில்லை.

இருமுகன் எதைப் பற்றியது?

ஜேம்ஸ்பாண்ட் வகையிலான ஒரு திரைப்படத்தை தமிழில் முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் சீன் கானரி காலத்திலிருந்து பல ஹாலிவுட் திரைப்படங்களில் கதறக் கதற உபயோகப்படுத்தப்பட்டு விட்ட இந்தப் பாணி திரைக்கதையை மீண்டும் தூசு உதறி நவீன நுட்ப சாகசங்களுடன் திறமையாகவே சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால், தவறாக அசெம்பிள் செய்யப்பட்ட வெளிநாட்டுக்காரில் விபரீதமாக பயணம் செய்த அலுப்பே மிஞ்சுகிறது.

***


மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒரு தாத்தா உள்ளே நுழைகிறார். அவர் திடீரென 'இந்தியன்' தாத்தாவாகி பாய்ந்து பாய்ந்து அங்குள்ளவர்களைக் கொன்று போட, இந்திய அரசு தரப்பில் பதற்றம் ஏற்படுகிறது. தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட போராக இந்தச் சம்பவத்தை இந்தியா கருதுகிறது. தாத்தா சண்டை போட்ட வீடியோவை ஆராயும்போது அவர் கழுத்தின் பின்பகுதியில் ஒரு பிரத்யேக 'லவ்' சின்னம் காணப்படுகிறது.

அபாயகரமான மருந்துகளைக் கண்டுபிடித்து சர்வதேச அளவில் விற்பனை செய்துவந்த 'லவ்' எனப்படும் அதிபயங்கர வில்லனின் குழு அடையாளக் குறி அது. ஆனால், இந்திய உளவுத்துறையால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னே அவன் சாகடிக்கப்பட்டு விட்டான். அவனுடைய தொழிற்சாலையும் அழிக்கப்பட்டுவிட்டது. இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தவர், அகிலன் வினோத் என்கிற இந்திய உளவுத்துறை அதிகாரி. இவருக்கு மட்டுமே 'லவ்' குறித்தான அனைத்து விவரங்களும் தெரியும். ஆனால் இந்த ஆபரேஷனில் அவருடைய மனைவியை இழந்த துயரத்தில் முரட்டுத்தனமான ஆசாமியாகி விட்டதால் அவர் பணியிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்.

இப்போது 'லவ்' விவகாரம் மீண்டும் உயிர்தெழுந்திருப்பதால் அதைத் திறமையாகச் சமாளிக்க 'அகிலனின்' உதவி நிச்சயம் வேண்டும். வடகிழக்கு மாநிலத்தில் பணத்துக்காக மனிதச்சண்டைப் போட்டியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அவரை தேடிப்பிடித்து அழைத்து வருகிறார்கள். உளவுத்துறை பணிக்கு மீண்டும் திரும்ப அகிலனுக்கு விருப்பமில்லை என்றாலும் தன் மனைவியைப் பறிகொடுத்த ஆபரேஷன் தொடர்பானது என்பதால் ஒப்புக் கொள்கிறார்.

அகிலன் வினோத் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தாரா? அவருடைய மனைவியின் மரணத்துக்குக் காரணம் என்ன? யார் இந்த லவ்? நான்கு வருடங்களுக்கு முன் முடிந்த போன விவகாரம் ஏன் மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறது ஆகிய விஷயங்களை ஆக்ஷன் மசாலாவில் தோய்த்து தந்திருக்கிறார்கள்.

***


விதம்விதமான ஒப்பனைகளை இட்டு தன் பாத்திரங்களில் வித்தியாசம் தர முயன்ற முன்னோடியான சிவாஜி கணேசனைத் தொடர்ந்து ஒப்பனையைத் தாண்டி தன் உடலையும் பாத்திரத்துக்கேற்றபடி வருத்தி மாற்றிக்கொள்பவர் கமல்ஹாசன். அவரைப் பின்தொடரும் அடையாளம், விக்ரம்.

இப்படி அர்ப்பணிப்புடன் கதாபாத்திரங்களுக்காக தங்களின் உடல்களை மாற்றுவது ஒருபுறம் பாராட்டத்தக்க விஷயம்தான் என்றாலும் அது எந்த அளவுக்குத் திரைக்கதைக்குத் தேவையானது, எந்த அளவுக்குப் பொருந்துகிறது என்பதை முக்கியமாக கவனிக்கவேண்டும். இதை ஒரு ஜிம்மிக்ஸ் ஆகப் பயன்படுத்தக்கூடாது. திரைக்கதை கோரும் விதத்தில்தான் பாத்திரங்கள் உருவாகவேண்டும். 'வித்தியாசமான' பாத்திரங்களைத் தீர்மானித்துவிட்டு அதற்கேற்ப திரைக்கதையைப் பூசி மெழுகக்கூடாது. தசாவதாரம் அப்படி நிகழ்ந்த ஒரு விபத்து.

'இருமுகனில்', 'லவ்' எனப்படும் பாத்திரத்தில் ஒரு பெண்ணின் மெலிதான நளினத்துடனும் வித்தியாசமான ஒப்பனையுடனும் விக்ரமே நடித்திருக்கிறார். அபாரமான பங்களிப்பு. பிளாஸ்டிக் முகம் போல இருந்தாலும் எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விட முடியாதபடியான உடல்மொழி, வசன உச்சரிப்பு, ஒப்பனை என்று துல்லியமான வேறுபாட்டைப் பின்பற்றியிருக்கிறார். 'கழுத்தின் எந்த இடத்தில் வெட்டினால் எத்தனை நிமிடத்தில் உயிர் போகும்' என்று விளக்கியபடியே நித்யா மேனனை சாவகாசமாகக் கொல்லும் காட்சியில் அவரிடமிருந்து வெளிப்படும் நளினமான குரூரம் அபாரம். போலவே பெண்களின் கழிப்பறையில் இருந்து வெளியே வரும் இன்னொரு காட்சி.

இப்படி சிலபல காட்சிகளில் 'லவ்' பாத்திரத்தின் வசீகரம் மிளிர்ந்தாலும், சுவாரசியம் அளிக்காத ஒட்டுமொத்த ரைக்கதையினால் இந்த உழைப்பும் அர்ப்பணிப்பும் வீணாகி விடுவதைக் காண பரிதாபமாகத்தான் இருக்கிறது. படத்தின் தொடக்கத்தில் வரும் 'தாத்தா' கூட விக்ரம்தானோ என்று சந்தேகத்துடன் பார்த்து பின்பு தெளிவானேன்!

***

அகிலன் வினோத் என்கிற அண்டர்கவர் உளவு ஆசாமியாக இன்னொரு விக்ரம். மனிதர் எப்படி இத்தனை ஃபிட் ஆக இருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் நவீன ஒப்பனை, உடை, சிகையலங்காரத்தைத் தாண்டி முகத்தில் அலுப்பு தெரிகிறது. போலவே நயன்தாராவும். படத்தின் இதர இடங்களில் கெமிக்கல் விஷயங்கள் வருகின்றன. ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையில் எவ்வித வேதியியல் சமாச்சாரமும் நிகழவில்லை. விவாகரத்து ஆன தம்பதியினர் போல விலகலாகவே வந்து போகிறார்கள். மலேசிய போலீஸ் அதிகாரியாக வரும் தம்பி ராமையாவின் கோணங்கித்தனங்களை இந்திய சினிமாக்களில் மட்டுமே காண முடியும். மலேசிய நாட்டின் வெளியுறவுத்துறைத் துறை ஆட்கள் இந்தத் திரைப்படத்தைக் காணாமலிருப்பது நமக்கு நல்லது. மலேசியப் பின்னணியில் ரித்விகா வரும் காட்சிகளைப் பார்த்தால் 'கபாலி' பார்ட் 2 சினிமாவில் உட்கார்ந்திருக்கிறோமோ என்று சந்தேகமே வந்துவிடுகிறது.

ஆக்ஷன் காட்சிகளை அபாரமாக பதிவு செய்வதில் ஆர்.டி.ராஜசேகரின் காமிரா எப்போதுமே சோடை போகாது. இதிலும் அப்படியே. ஆனால் பாடல் காட்சிகளில் விக்ரம் மற்றும் நயனுக்கு, மூக்கு ரோமம் எல்லாம் தெரியும்படி அமைத்திருக்கும் அத்தனை குளோசப்களைத் தவிர்த்திருக்கலாம். மழுங்கடிக்கப்பட்ட இரண்டு முகங்களை அத்தனை நெருக்கத்தில் பார்க்க நமக்கே ஒருமாதிரி குறுகுறுவென்றிருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜுக்கு வழக்கம் போல அதிர்ஷடமில்லை. பாடல்கள் தவறான இடங்களில் எரிச்சலூட்டும்படி அமைந்திருப்பதால் நிதானமாக ரசிக்க முடியவில்லை. இரண்டு வருடங்கள் கழித்து மெல்ல மெல்ல ஹிட் ஆக வாய்ப்புண்டு.


***

'லவ்' பாத்திரம், ஸ்பீட் என்கிற விறுவிறுப்பு மருந்தை இன்ஹேலரில் ஒளித்து 'பல நாடுகளுக்கு’ ஏற்றுமதி செய்கிறது. இதன்மூலம் தீவிரவாதச் செயல்களை வீரியத்துடன் நிகழ்த்தமுடியும் என்பது இதன் தாத்பர்யம். இந்த விஷயத்தைத்தான் படம் முழுவதும் பல சாகசங்களின் மூலம் ஹீரோ தடுக்க முயல்கிறார். ராமாயணத்தில் வாலி என்கிற பாத்திரத்தோடு மோதுபவர் எத்தனை பெரிய வீரராக இருந்தாலும் அவருடைய பலத்தில் பாதி பங்கு வாலிக்கு வந்துவிடும் என்கிற வரத்தைப் போல, ஹிட்லர் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தாம் இது. இரண்டாம் உலகப் போரில் தனது படைகள், எதிரிகளுடன் மூர்க்கத்துடன் சண்டை போட கண்டுபிடிக்கப்பட்ட வீரிய மருந்து. 

'இருமுகன்' படத்தில் சித்தரிக்கிறபடி இந்த மருந்தை உறிஞ்சுபவர்கள், எத்தனை வயதானவர்களாக இருந்தாலும் மிகச்சரியாக ஐந்து நிமிடத்துக்கு மட்டும் அசகாய சூரனாகி விடுவார்கள். உடலுக்குள் அந்தளவுக்கான அட்ரினலினை தூண்டிவிடுகிறது இந்த மருந்து. இதை அருந்திவிட்டு ஒருவரை ஒரு குத்து குத்தினால் அவர் தென்னை மர உயரத்துக்குப் போய் 'பொத்'தென்று கீழே விழுகிறார். இயக்குநர் இதை ஏதோ இந்தப் படத்தில் புதிதாகக் கண்டுபிடித்ததுபோல் சித்தரிப்பது அத்தனை பெருமையானதாக இல்லை. ஏனெனில் தமிழ் பட ஹீரோக்கள் பலகாலமாகவே அப்படித்தான் இயங்குகிறார்கள். பத்து பதினைந்து 'ஸ்பீடு மருந்து இன்ஹேலர்களை' ஒரே சமயத்தில் எடுத்தது போன்று இவர்கள் செய்யும் சாகசங்கள் நமக்குப் பழகி விட்டதால் இந்த மருந்து விஷயமெல்லாம் நமக்கு அத்தனை பிரமிப்பாகத் தோன்றவில்லை. அதிலும் இந்த விஷயத்தில் தெலுங்குப் பட நாயகர்கள் சாதாரணமாகவே செய்யும் அதிசாகசக் காட்சிகளைப் பார்த்தால் ஹிட்லரே வெட்கிக் கண்ணீர் மல்குவார்.

இந்த ஸ்பீட் மருந்தை, ஹாரிஸ் ஜெயராஜூக்கும் ஒன்றிரண்டு தந்து விட்டார்களோ என்னமோ. ஆவேசமாக ஒலிக்கும் பின்னணி இசையில் நமக்கே வெறியேறுகிறது. 'பூஸ்ட் ஈஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி' என்கிற விளம்பரம் போல நயன்தாரா உடபட இதில் வரும் பாத்திரங்கள் எல்லாம் அவ்வப்போது இந்த மருந்தை ஏற்றிக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடுகிறார்கள். நமக்கும் கூட இப்படியொரு மருந்தை உட்கொண்டால்தான் இத்திரைப்படத்தைத் தாங்கும் திறன் ஏற்படும் போலிருக்கிறது.

வெகுஜன மசாலா இயக்குநர்தான் என்றாலும் இந்த மாதிரியான சமயங்களில்தான் ஷங்கர் போன்றவர்கள் ஏன் முக்கியமானவர்கள் என்பதும் திரைக்கதைக்காக மெனக்கிடுவது எத்தனை முக்கியம் என்பதும் நமக்குப் புரிகிறது.

]]>
விக்ரம், இருமுகன் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/10/w600X390/irumugan1.jpg http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/sep/10/விக்ரம்-நடித்த-இருமுகன்---சினிமா-விமரிசனம்-2562393.html
2559966 சினிமா திரை விமரிசனம் 'குற்றமே தண்டனை' - சினிமா விமரிசனம்  சுரேஷ் கண்ணன் Monday, September 5, 2016 12:15 PM +0530 'தமிழில் ஓர் உலக சினிமா' என்கிற பின்னொட்டுடன் விளம்பரப்படுத்தப்படும் தமிழ் சினிமாக்கள் பெரும்பாலும் போலித்தனமான சுயபெருமிதத்துடனும், சந்தைப்படுத்தும் உத்தியின் தந்திரத்துடனும் மட்டுமே இருந்திருப்பதைக் கவனிக்கிறேன். அவ்வாறல்லாமல் உண்மையாகவே உலக சினிமாவின் தரத்தை நோக்கி நகர முயலும் அசலான படைப்பாளியாக இயக்குநர் மணிகண்டனைப் பார்க்க முடிகிறது. இரானியத் திரைப்படங்களின் எளிமையின் அழகியலை நினைவுப்படுத்தும் 'காக்கா முட்டை'யும் ஹிட்ச்காக்கின் சஸ்பென்ஸ் மற்றும் டோரண்டினோவின் அவல நகைச்சுவை வகையின் கலவை முயற்சியில் உருவாகியிருக்கும் 'குற்றமே தண்டனை'யும் அவ்வாறான நம்பிக்கையைத் தருகின்றன. சர்வதேசத் திரைவிழாக்களில் திரையிடப்படும் ஒரு சிறந்த படைப்பை பார்த்துக் கொண்டிருக்கும் தோரயமான உணர்வைத் தருகிறது 'குற்றமே தண்டனை'.

ஒரு குற்றத்துக்குப் பின் நிலைநாட்டப்படவேண்டிய நீதி என்னும் கருத்தாக்கம், நடைமுறையில் அவ்வாறு அல்லாமல் குற்றம் என்பது எவ்வாறு சமூகத்தின் பல்வேறு நிறுவனங்களாலும் தனி  நபர்களாலும் பொருளியல் ரீதியாக லாபம் ஈட்ட முனையும் நோக்குடன் ஒரு பண்டமாக, சந்தர்ப்பமாக உருமாற்றப்படுகிறது என்பதை இத்திரைப்படம் அபாரமாகப் பதிவு செய்திருக்கிறது.

'வினை விதைத்தவன் வினையறுப்பான்' என்கிற ஆதாரமான நீதி பழமையானதாக இருந்தாலும் அது காலத்தாலும் எவராலும் மாற்றப்பட முடியாத அறத்தின் அடையாளமாக நீடிப்பதையும்  சுட்டிக்காட்டுகிறது. சட்டம், நீதி என்கிற நடைமுறைகளிலிருந்து ஒருவன் சாமர்த்தியமாகத் தப்பித்தாலும், அவனுடைய அகத்தில் பொருந்தியிருக்கும் நீதிமன்றத்திலிருந்து எந்நாளும் அவன் தப்பிக்க முடியாது என்பதையும் சரியாகவே பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது.

***

ரவி என்கிற இளைஞன் Tunnel Vision என்கிற பார்வைக் குறைபாட்டினால் அவதியுறுகிறான்.  இயல்பான பார்வையுடைய ஒருவர், பைப்பின் வழியாக ஒன்றைப் பார்த்தால் எப்படித் தெரியுமோ, அப்படிப்பட்ட குறுகிய எல்லையை மட்டுமே அவனுடைய இயல்பில் பார்க்க முடியும். மருத்துவமனைக்குச் சென்றால் மூன்று லட்சத்து இருபதாயிரம் செலவாகும் என்கிறார்கள். இல்லையென்றால் சிறிது சிறிதாக அந்த எல்லை குறைந்து ஒரு கட்டத்தில் பார்வையே போய்விடும் என்கிறார்கள். அவனுடைய சாதாரண பணியின் மூலம் அத்தனை பெரிய பணத்தைப் புரட்ட முடியாது. என்ன செய்வது என அவன் தவித்துக் கொண்டிருக்கும்போது ஒரு சந்தர்ப்பம் உருவாகிறது.

எதிர்வீட்டில் வசிக்கும் ஓர் இளம்பெண்ணை ரகசியமாகத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது இவனுடைய வழக்கம். அவ்வாறான ஒரு தருணத்தில் சந்தேகப்படும் விதமாக அந்த வீட்டில் ஏதோ தெரியவே விரைந்து சென்று பார்க்கிறான். அவ்வப்போது அங்கு வந்து செல்லும் ஒரு பணக்கார ஆசாமி வீட்டின் உள்ளே திருதிருவென்று விழித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். இளம்பெண் கொலை செய்யப்பட்டு ரத்தச்சகதியில் இருப்பதையும் பார்க்கிறான். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு  தன்னுடைய மருத்துச் செலவை பணக்கார ஆசாமியிடமிருந்து கறக்க முயல்கிறான். இதில் ஏற்படும் தடைகள் அனைத்தையும் ஒவ்வொன்றையும் சாமர்த்தியமாக மீறுகிறான்.

அவனுடைய நோக்கம் நிறைவேறியதா, பணம் கிடைத்ததா, கண்பார்வை சரியானதா என்கிற விஷயங்களைப் பரமபத ஏணி, பாம்பு விளையாட்டின கதையாக மீதக்காட்சிகள் நிதானமாக நகரும் சஸ்பென்ஸூடன் விவரிக்கின்றன.

***

பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள், அதிரடி சண்டைகள் போன்ற வழக்கமான செயற்கைத் திணிப்புகள் இல்லாமல் இருந்தாலே ஒரு தமிழ் சினிமாவை 'வித்தியாசமான திரைப்படம்' என்று கருதிக் கொள்வது நம் வழக்கம். அவ்வாறான  போலி முயற்சிகளும் சில இருக்கின்றன. ஆனால் இவ்வாறான அலைபாய்தல்களையும் தவிர்த்துவிட்டதோடு மட்டுமல்லாமல், நூல் பிடித்தாற் போல ஒரு நேர்மையான திரைக்கதையுடன், நேரான கதைகூறல் முறையைப்  பின்பற்றியிருக்கிறார் இயக்குநர். சினிமா என்பது காட்சி ஊடகம் என்கிற அடிப்படையை இயக்குநர் சரியாகப் புரிந்து கொண்டிருப்பதால் குறைவான வசனங்களோடு காட்சிபூர்வமாகவே பெரும்பாலான படம் நகர்கிறது. இதைப் போலவே அநாவசியமான காட்சிகளும் படத்தில் இல்லை. கச்சிதமான 90 நிமிடங்களுக்குள் முடிந்துவிடுகிறது. சில நெருடல்கள் தோன்றினாலும் ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த முழுமையைத் தருகிறது 'குற்றமே தண்டனை'.

படத்தின் நாயகன் விதார்த் மிக அடக்கமாக நடித்திருக்கிறார். மிகப் பெரிய மருத்துவ செலவை எதிர்கொள்ள நேரும் ஒரு சராசரி நபரின் அகம் சார்ந்த தத்தளிப்புகளை நன்றாகவே பிரதிபலித்திருக்கிறார். படத்தின் மிகப்பெரிய ஆச்சரியம் பூஜா தேவரியா. விதார்த்தின் மேலுள்ள தன் காதலை அபாரமான முகபாவங்களின் வழியாகவே அவர் வெளிப்படுத்தும் விதம் அத்தனை அழகாக இருக்கிறது. இவர்கள் பணிபுரியும் எளிய கால்சென்டரின் உட்புறக் காட்சிகளும் இயல்பாக பதிவாகியிருக்கின்றன. பணக்காரத் தோரணையுடன் இருக்கும் ரஹ்மான் அந்தப் பாத்திரத்துக்கு அசலாகப் பொருந்துகிறார். சாட்சியைத் தங்களின் சார்பாக வளைக்க முயலும் ஜூனியர் வக்கீலாக சோமசுந்தரம் அசத்தியிருக்கிறார். விதார்த்திடம் முதலில் சாமர்த்தியமாக பேரம் பேச முயன்று பின்பு அசடு வழிவதும் 'நீங்க செஞ்சதுதான்ஜி கரெக்ட்டு' என்று பின்பு சேம் சைட் கோல் போடுவதும் என சிறிது நேரமே வந்தாலும் அசத்தல். இன்ஸ்பெக்டராக வரும் மாரிமுத்து உள்ளிட்ட இதர பாத்திரங்களும் இயல்பான ஒழுங்கில் இயங்குகின்றன.
  
ஒரு திரைப்படத்தின் அடிப்படையான விதிகளுடன் கதைகூறல் முறையை நிகழ்த்த வேண்டும் என்கிற இயக்குநரின் நேர்மையான பிடிவாதத்தை ஒருபுறம் பாராட்டித்தான் ஆகவேண்டும் என்றாலும் இன்னொருபுறம் இந்த திரைக்கதையில் நாம் உணர்கிற நெருடல்கள் படத்துடன் முழுவதும் ஒன்ற முடியாமல் சங்கடப்படுத்துகின்றன. பாத்திரத்தின் வடிவமைப்புகளிலும் செயல்பாடுகளிலும் நம்பகத்தன்மை என்னும் விஷயம் இன்னமும் மேம்பட்டிருக்கவேண்டும்.

பிரதான பாத்திரமான ரவியின் பார்வைக் குறைபாட்டை இயக்குநர் தொடக்கக் காட்சிகளிலேயே சரியாக நிறுவியிருந்தாலும் இதர காட்சிகளில் அந்தப் பாத்திரம் தடுமாறாமல் இயல்பாக நடமாடுவது அல்லது அவ்வாறான பாவனையைச் செய்வது நம்பும்படியாக இல்லை. அவரது உடல்மொழி இன்னமும் சரியாக அமைந்திருக்கவேண்டும். சிகரெட் புகைக்காக கண்டிக்கும் பக்கத்து வீட்டுக்காரரை மெளனமாக சகித்துக் கொள்ளும் ஒரு சராசரியான நடுத்தரவர்க்க நபராக சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்தப் பாத்திரம், கொலை போன்ற மிகப் பெரிய குற்றச் செயலை மறைப்பதற்காகத் துணிவுடன் செய்யும் பேரங்களும் செயல்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன. தன் குறைபாட்டை எப்படியாவது போக்கிக் கொள்ள விழையும் அவனுடைய விருப்பம்தான் அவனை உந்தித் தள்ளுகிறது என்பதாகத்தான் இதை நாம் சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தனை தெளிவாக பேரங்களை நிகழ்த்தும், சந்தர்ப்பத்துக்கேற்ப மாறும் சாமர்த்தியமான இந்தப் பாத்திரம், தன் மருத்துவ சிகிச்சை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து சரியாக அறிந்து கொள்வதில் இத்தனை அலட்சியமாகவா இருக்கும் என்கிற நெருடலும் எழுகிறது.

'என்னுடைய செல்வாக்கு என்னவென்று உனக்குத் தெரியுமா?' என்று ஒரு கட்டத்தில் விதார்த்திடம் வெடிக்கும் ரஹ்மானின் பாத்திரம், ஏன் தொடக்கத்திலிருந்து அத்தனை அச்சப்பட்டு மென்று விழுங்கவேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது. கொலைக்குற்றம் தொடர்பான விஷயங்களை, எத்தனை நெருக்கம் என்றாலும், ஓர் அந்நிய நபரிடம் எவராவது விவாதித்துக் கொண்டிருப்பார்களா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. இறுதியில் அறத்தைப் போதிக்கும் அந்த நபரும் (நாசர்) 'பணத்தை வாங்கிட்டியா.. ஹே..ஹே.. உன்னையும் போட்டுத் தள்ளியிருப்பாங்கன்னு நெனச்சேன்’ என்று அந்தக் குற்றத்தைத் தொடக்கத்தில் எளிதாக எடுத்துக் கொள்வதும் முரணாக இருக்கிறது.

ஒரு சிறுகதையின் எதிர்பாராத திருப்பம் போல அமைந்திருக்கும் இதன் கிளைமாக்ஸ் உத்தி பாராட்டத்தக்கது என்றாலும் அதுவுமே நம்பகத்தன்மையுடன் அமையவில்லை. இயக்குநர், பார்வையாளர்களிடம் ஆட விரும்பும் சதுரங்க ஆட்டமானது அதற்கான நேர்மையுடனும் தர்க்க ஒழுங்குடனும் அமைந்திருக்கவேண்டும். எங்கிருந்து தொடங்குகிறதோ அங்கேயே முடியும் ஒரு முழு வட்டம் போல இதன் கிளைமாக்ஸ் அமைந்திருந்தாலும், அதுவரையான இயக்கத்தின் படி நம்பும் படியாக அமைந்திருக்கவில்லை.

இந்த ரீதியில், அண்மையில் நான் பார்த்த 'Remember' என்கிற திரைப்படத்தை நினைவு கூர விரும்புகிறேன். தன் எதிரி ஒருவரைப் பழிவாங்குவதற்காக கிளம்புகிறார் ஒரு முதியவர். ஆனால், பழிவாங்க ஆவேசமாக கிளம்பும் அவரேதான் அந்த எதிரி என்பது படத்தின் உச்சக்காட்சியில் அபாரமாக வெளிப்படுகிறது. இதற்கான காரணங்களையும் அவருக்கு இருக்கும் குறைபாட்டையும் நம்பகத்தன்மையுடனும் அதற்கான மெனக்கெடல்களுடன்  கூடிய திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நோக்கில் திரைக்கதையில் நம்பகத்தன்மையைக் கச்சிதமாக உருவாக்கும் திட்டமிடல்களை மணிகண்டன் இன்னமும் சிரத்தையாகச் செயல்படுத்தியிருக்கலாம்.

பார்வையாளர்களிடம் இவ்வாறான நெருடல்களைப் பெரிதும் எழுப்பாத, அதனுடன் ஒன்றிப் போக வைக்கிற சாமர்த்தியத்துடன் எழுதப்படும் திரைக்கதையின் மூலம்தான் ஒரு நல்ல சினிமா உருவாகிறது என்பதைப் பல கிளாசிக் திரைப்படங்களின் மூலமாக நாம் பார்க்கிறோம். இந்தக் குறைகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால், தமிழ் சினிமாவின் அபத்தமான சூழலில் உண்மையாகவே ஒரு வித்தியாசமான திரைக்கதையை உருவாக்க முயன்றிருக்கும் மணிகண்டன் பாராட்டப்பட வேண்டியவராகிறார்.

***

ஒரு திரைப்படத்தை அடுத்த தளத்துக்கு உயர்த்திச் செல்லும் வலிமை வாய்ந்த உப நுட்பங்களுள் ஒன்று, பின்னணி இசை. இந்த விஷயத்தில் ஒரு மேதையாகவே நம்மால் அறியப்பட்டிருக்கும் இளையராஜாவின் இசை, இந்த திரைப்படத்தைப் பொறுத்த மட்டில் சில தருணங்களில் அபாரமான உணர்வை எழுப்ப முயன்றிருந்தாலும், அவசியமற்ற இடங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருப்பது இம்சையை ஏற்படுத்துகிறது. சஸ்பென்ஸ், திரில்லர் படங்களுக்கு பின்னணி இசை எத்தனை முக்கியமோ, அதைப் போலவே மெளனத்தால் நிரப்பும் தருணங்களையும் அறிந்திருப்பது அவசியம். ஆனால் இந்தத் திரைப்படத்தில் சாதாரண காட்சிகளில் கூட வழக்கமான தமிழ் திரைப்படங்களைப் போல  பின்னணி இசை கதறிக் கொண்டேயிருக்கிறது.

இந்த திரைக்கதைக்கு live sound எனப்படும் இயற்கையான சப்தங்களையே பெரும்பாலும் இயக்குநர் பயன்படுத்தியிருந்தால் ஓர் ஆவணப்படத்தின் தன்மையோடு பார்வையாளர்கள் இதனுடன் அதிகம் ஒன்றியிருக்கும் சாத்தியம் கூடியிருக்கும். இத்திரைப்படத்தின் பின்னடைவுகளில் ஒன்று, இளையராஜாவின் அதீதமான பின்னணி இசை என்பது துரதிர்ஷ்டமான விஷயம்.

***

குற்றம் என்பது லாபமீட்டும் சந்தர்ப்பமாக மாற்றப்படும் ஆபத்தை சுட்டிக் காட்டும் இந்த  திரைப்படம், அதேவேளையில் மருத்துவத்துறையில் நிகழும் வணிக மோசடிகளையும் போகிற போக்கில்  சுட்டுகிறது. உயிர் காக்கும் மருத்துவம்  என்பது சேவை  என்கிற நிலையிலிருந்து நழுவி தம்மை நாடி வரும் ஒவ்வொரு நபரையும் ஏடிஎம் மெஷின்களாக பார்க்கும் 'கார்ப்பரேட்' தனத்துக்கு மாறியிருப்பதும் அடிநாதமாக சித்தரிக்கப்படுகிறது.

சராசரி மனங்களில் நவீன பொருளாதார உலகம் உற்பத்தி செய்யும் விருப்பங்கள், குற்றத்தின் ஊற்றுக்கண்களை மேலதிகமாக அதிகரிக்கின்றன. பல்வேறு விதமான மனநெருக்கடிகளை உற்பத்தி செய்கின்றன. விலையுயர்ந்த செல்போனை வாங்க இயலாத நடுத்தரவர்க்க இளைஞர்கள், தாழ்வு மனப்பான்மை தரும் நெருக்கடி தருவதின் உச்சமாக செயின் பறிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நடைமுறைப் பயங்கரங்கள் பனிப்பாறை நுனியின் உதாரணமாக இருக்கின்றன. இதில் வரும் நாயகனும் மருத்துவத் துறையின் நேர்மையின் வழிகாட்டுதலை எதிர்கொண்டிருந்தால் குற்றத்தை நோக்கி நகராதவனாக கூட இருந்திருக்கக்கூடும்.

இளம்பெண்ணின் வீட்டில் வளர்க்கப்படும் கிளிகளின் கூச்சல் சப்தம், ரவியிடம் மனச்சாட்சியை உலுக்கும் இரைச்சலாக ஒலிப்பது மாதிரியான காட்சிகள், படத்தின் மையத்துக்குப் பொருத்தமாக அமைந்திருக்கின்றன. இயக்குநரே ஒளிப்பதிவாளராக இருந்திருப்பதால் இத்திரைப்படத்தின் பல காட்சிகள் ஒளியின் அழகியலுடன் பதிவாகியிருக்கின்றன. உதாரணமாக மேல்கோணத்திலிருந்து வீட்டுக்குடியிருப்பு காட்டப்படும் காட்சி போன்ற பல கோணங்கள் படத்துக்குப் புதுவிதமான நிறத்தை தருகின்றன.

வழக்கமான தமிழ் சினிமாக்களின் அம்சங்களைத் தவிர்த்து, திரைக்கதை கோரும் பாதையில் மட்டுமே பயணித்திருப்பது மணிகண்டனை ஒரு நம்பிக்கையான படைப்பாளியாக அடையாளப்படுத்துகிறது. ஆனால் இன்னமும் மெனக்கெட்டிருந்தால் உண்மையிலேயே இதுவொரு உலக சினிமாவின் தரத்தை எட்டியிருக்கும். அவரது அடுத்தடுத்த உருவாக்கங்களில் இந்த எல்லையை நோக்கி நகர்வார் என்கிற ஆரோக்கியமான நம்பிக்கையைத் தருகிறது 'குற்றமே தண்டனை'

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/5/w600X390/Kuttrame_Thandanai_13xx.jpg http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/sep/05/குற்றமே-தண்டனை---சினிமா-விமரிசனம்-2559966.html
2559546 சினிமா திரை விமரிசனம் சசிகுமாரின் ‘கிடாரி’ பட விமரிசனம் – ரத்தக் காட்டேரி! சுரேஷ் கண்ணன் Saturday, September 3, 2016 12:52 PM +0530 பழைய திருவிளையாடல் திரைப்படத்தின் வசன பாணியில், பிரிக்க முடியாதது… என்கிற கேள்விக்கு ‘சசிகுமாரும் - தாடி, அரிவாளும்’ என்று புதிதான பதில் ஒன்றை இணைத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது. அந்தளவுக்கு மனிதர் இரண்டையுமே கைவிடும் உத்தேசம் இல்லாமலிருக்கிறார். ‘சார்.. உங்க நண்பனுக்காக நீங்க அரிவாளை எடுத்துக்கிட்டு எங்கயோ ஆவேசமா ஓடறீங்க..’ என்று கதை சொல்ல வரும் இயக்குநர் முதல் வரியை முடிக்கும் முன்னரே அவரை இயக்குநராக உறுதிப்படுத்தி, தயாரிப்பையும் உடனே ஏற்றுக்கொள்வார் போலிருக்கிறது.

தமிழில் இப்படி அரிவாள் நாயகர்கள் என்கிற தனிவகைமையே இருக்கிறது. கமல்ஹாசனில் தொடங்கி நெப்போலியன், ராஜ்கிரண், விஷால் என இரண்டு மூன்று தலைமுறையாக இந்த அரிவாள் கலாசாரத்தையும் குறிப்பிட்ட சமூகத்தின் சாதிப் பெருமிதங்களை விதந்தோதும் ஆபத்தான கருத்தியலையும் தொடர்ந்து இவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நடைமுறையில் சாதியக் கட்சிகளின் வளர்ச்சியும் அதுசார்ந்த பாகுபாடுகளும் பெருகிக் கொண்டே போவதையும் ஆதிக்கச் சாதிகளின் வன்முறைகளால் பல்வேறு விதமாக ஒடுக்கப்படும் எளிய சமூகங்களைப் பற்றியும் இவர்களுக்கு எவ்வித சமூக அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை.

இந்த ஆபத்தான மற்றும் அபத்தமான வரிசையில் காட்சிக்குக் காட்சி ரத்தம் சொட்டச் சொட்ட வந்திருக்கும் படமே – கிடாரி. ரத்தக்காட்டேரி என்றே தலைப்பை வைத்திருக்கலாம். அதற்குமுன் பன்னெடுங்காலமாக உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த அரிவாள் கலாசாரத்தில் ஏற்படுத்தப்பட வேண்டியிருக்கும் நவீன மாற்றங்களைப் பற்றியும் சொல்லியாக வேண்டும்.

தமிழ்நாட்டில், திரையின் உள்ளேயும் வெளியேயும் இயங்கும் அரிவாள் கலாசாரத்தைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது இதுதான். வல்லரசு நாடுகளில் நவீன வகை ஆயுதங்களை உற்பத்தி செய்யும் வியாபாரிகள், தங்கள் பொருள்களை சந்தைப்படுத்துவதற்காக சர்வதேச அளவில் எத்தனையோ தகிடுதத்தங்களை செய்து சிரமப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் அதிநவீன ஆயுதங்களை சந்தைப்படுத்த தமிழகத்திலும் ஏற்ற பிரதேசங்கள் உள்ளன என்பதை அவர்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இதற்குச் சான்றாக மேற்குறிப்பிட்ட தமிழ்த் திரைப்படங்களின் டிவிடிக்களையும் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். பாவம், இவர்களும் எத்தனை நாளைக்குத்தான் ஆபத்தான முறையில் அரிவாளை முதுகிலும் இடுப்பிலும் சுமந்து கொண்டு ஓடித் துரத்தி, கசாப்புக் கடைக்காரர்கள் மாதிரி சிரமப்பட்டு வெட்டிக்கொண்டு, சட்டையெல்லாம் ரத்தக்கறையாக்கிக் கொண்டு, அந்தச் சாட்சியங்களை மறைக்க இன்னமும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பார்கள்?! செல்போன் முதற்கொண்டு மற்ற வகைகளில் நவீன வசதிகளைப் பின்பற்றினாலும், இந்த ஆயுத விஷயத்தில்தான் அறியாமை காரணமாக இன்னமும் பழமையான கலாசாரத்தை இவர்கள் பின்பற்றித் தொலைக்கவேண்டியிருக்கிறது.

நிற்க, இதையெல்லாம் அவல நகைச்சுவை நோக்கில், அது சார்ந்த கசப்புடன்தான் சொல்லியிருக்கிறேன்.

**

‘கிடாரி’ படத்தின் விமரிசனத்தை, கதையை வாசிக்கலாம் என்று வந்தால் சம்பந்தா சம்பந்தாமில்லாமல் எதை, எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறாயே என்று நீங்கள் முணுமுணுப்புடன் சொல்வது காதில் விழத்தான் செய்கிறது.
அப்படியொன்று ஏதாவது இருந்தால் இந்நேரம் சொல்லியிருக்க மாட்டேனா, தோழர்களே. சரி. நீங்கள் வற்புறுத்துவதால் இந்த திரைப்படத்தில் இருக்கும் விஷயங்கள் சிலதை தேடியாவது சொல்லி விடுகிறேன்.

கொம்பையா பாண்டியன் (வேல ராமமூர்த்தி) என்பவர் ரத்தச் சகதியில் மிதக்கும் மங்கலகரமான காட்சியுடன் படம் தொடங்குகிறது. (பாத்திரங்களின் பெயர்களில் பின்னொட்டாக வரும் சமூக அடையாளத்தை பார்வையாளர்களே எளிதில் புரிந்து கொள்ளும் வாய்ப்பை இயக்குநர் வழங்கியிருக்கிறார்.)

கொம்பையாவின் தொடக்க காலத்திலிருந்தே அவருடன் கூட்டாளியாக இருக்கும் (மு.ராமசாமி) கணக்குப்பிள்ளையின் வாய்ஸ் ஓவரின் மூலமாக கொம்பையாவின் பின்னணி விரிகிறது. இவர் அவருக்குப் பங்காளி, இவனுக்கு அவனோடு பகை என்று கணக்குப்பிள்ளை மூச்சு விடாமல் சொல்லும் தகவல்களை நாம் உள்வாங்கிக் கொள்வதற்குள் மண்டை காய்ந்து விடுகிறது.

கொம்பையா தன் சண்டியர்தனத்தின் மூலமாக செய்த ஆக்கிரமிப்பினால் ஊரைத் தாண்டியும் பல நபர்களின் பகைமையைச் சம்பாதித்து வைத்திருக்கிறார். அவரது கொலைமுயற்சிக்கான நபர்களையும் காரணங்களையும் தேடி படம் அலைகிறது.

கொம்பையா பாண்டியனின் விசுவாசமான அடியாள் கிடாரி (சசிகுமார்). கிடாரியின் இளவயதில் அவனது தந்தை கொல்லப்பட அவனைத் தன் வீட்டில் வளர்க்கிறார் கொம்பையா. ‘உப்பு போட்டு சாப்பாடு போட்ட’ என்கிற கோட்பாட்டு ரீதியான விசுவாசத்துக்காக கொம்பையாவின் மீது ஒரு துரும்பு கூட விழக்கூடாது என்று கண்ணுங்கருத்துமாக பாதுகாவலனாக இருக்கிறான் கிடாரி.

ஐயா.. இதெல்லாம் எம்.ஜி.ஆர் – நம்பியார் காலத்து கதையாச்சே.. என்று நீங்கள் கதறுவது காதில் கேட்கத்தான் செய்கிறது. மூச்.. கிடாரியின் காதில் நீங்கள் கதறுவது கேட்டால் அரிவாள் உங்கள் மீது பாயும் ஆபத்து இருக்கிறது. எனவே பொறுமை.. பொறுமை..

கொம்பையா பாண்டியனைச் ‘சம்பவம்’ செய்ய எவரெல்லாம் முயன்றிருப்பார்கள் என்று சில நபர்களை வரிசையாகக் காட்டுகிறார் இயக்குநர். அவர்களுக்கும் கொம்பையாவுக்கும் பகைமை உண்டாகிய காரணங்களும் விரிகின்றன.

பல்வேறு ‘சதக் சதக்’களுக்குப் பிறகு கொம்பையாவைத் தாக்கியவரையும் அதன் பின்னணியையும் பற்றி அறிந்த பின்பு கிடாரி என்ன செய்கிறான் என்பதே கிளைமாக்ஸ்.

**

இது பழிவாங்கும் வன்முறைப் படமா அல்லது காமெடிப் படமா என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாத வகையில் எடுத்திருப்பது இயக்குநரின் திறமைக்குச் சான்று. சசிகுமார் ஒன் மேன் ஆர்மி மாதிரி இருக்கிறார். ஹிட்லர், முஸோலினி, இடி அமீன், பின்லேடன் என்று பலர் வரிசையாக வந்திருந்தால் கூட இவருடைய அரிவாளுக்குப் பரிதாபமாகப் பலியாக வேண்டியதுதான். அத்தனை புஜபல பராக்கிரமசாலியாக இவரைச் சித்தரிக்கிறார்கள். இதைக் கூட ஒருமாதிரியாக சகித்துக் கொண்டு விடலாம். ஆனால் டெரர் முகத்தை சட்டென்று மாற்றிக் கொண்டு இளிப்புடன் இவர் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளைத்தான் சகிக்கவே முடியவில்லை. ‘நண்பனுக்காக எதையும் செய்வம்டா’ என்று பேசாமலிருப்பதுதான் இதிலிருக்கும் ஒரே ஆறுதல். ஆனால் நண்பனுக்குப் பதிலாக முதலாளியிடம் விசுவாசத்தைக் காண்பிக்கிறார்.

இதில் வரும் நாயகிக்கு ஏதாவது ‘ஹார்மோன்கள்’ ஓவர் டைம் செய்யும் பிரச்னையா என்று தெரியவில்லை. கிடாரியின் உதட்டு முத்தத்துக்காக படம் பூராவும் ஏங்கிக் கொண்டேயிருக்கிறார். கடுமையான பல தடைகளுக்குப் பிறகே அது சாத்தியமாகிறது.

படத்தில் பல ரணகளமான சம்பவங்கள் நிகழ்ந்தாலும் போலீஸ்காரர்கள் என்கிற ஆசாமிகளைத் தேட வேண்டியிருக்கிறது. ஆம்.. தொடக்கத்தில் வருகிறார்கள். அதே ஊரைச் சார்ந்த போலீஸ்காரர், கொம்பையாவின் வீட்டிலேயே மோரை வாங்கிக் குடித்து விட்டு அவர்களுக்குச் சார்பாக இருக்கிறாரே என்று இயக்குநர் தீர்க்கமாக யோசித்ததால் ஒரு நேர்மையான வடஇந்திய காவல்துறை அதிகாரியைச் சிறிது நேரம் காட்டுகிறார். பிறகு படத்தில் அவரும் எங்குமே தென்படுவதில்லை.

**

வேலராமமூர்த்தி, மு.ராமசாமி, வசுமித்ர (அறிமுகம்) என்று மூன்று எழுத்தாளர்கள் தொடர்புடைய திரைப்படம் என்றொரு தகவல் கூட இந்தப் படத்தின் மீது சிறிது நம்பிக்கையை முதலில் எனக்கு ஏற்படுத்தியது. ஆனால் என்ன உபயோகம்?

வேலராமமூர்த்தியின் உருவமும் நடிப்பும் கம்பீரமாகத்தான் இருக்கிறது. ஓர் அச்சு அசலான திராவிட இனத்துப் பிரதிநிதியின் சித்திரம்தான். ஆனால் இதே பாணியில் தொடர்ந்தால் அவர் இன்னொரு வினுசக்கரவர்த்தியாக மாறி விடும் அபாயம் இருக்கிறது. மு.ராமசாமியின் நடிப்பு இயல்புத்தன்மையுடன் இருந்தது. அறிமுகம் என்றே சொல்ல முடியாமல் வசுமித்ர நிறைவாக நடித்திருக்கிறார். கொம்பையா தேவரின் மறைமுகப் பகையாளிகளில் ஒருவராக வரும் ஓ.ஏ.கே. சுந்தரின் நடிப்பு ரகளையாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கதிர் உள்ளிட்ட நுட்பக் கலைஞர்களின் உழைப்பெல்லாம் பிரமிப்பை ஏற்படுத்துவதாகத்தான் இருக்கிறது. ஆனால் சலிப்பூட்டும் திரைக்கதை இந்த உழைப்பையெல்லாம் வீணாக்குகிறது. ராஜதந்திரம் படத்தில் நகைச்சுவை வேடத்தில் வந்த தர்புகா சிவா இதில் இசையமைப்பாளர். பாடல்கள் அத்தனை கவராவிட்டாலும் அபாரமான பின்னணியிசையில் அதை ஈடுசெய்திருக்கிறார்.

**

அறிமுக இயக்குநர் பிரசாத் முருகேசன், வசந்தபாலனிடம் உதவி இயக்குநராக பணியாற்றவராம். என்ன சொல்ல? ஒவ்வொரு எபிசோடாக விரியும் திரைக்கதை உத்தியும் அதற்கான மெனக்கெடல்களும் சுவாரசியம்தான். ஆனால் உணர்வுபூர்வமாக எந்தவொரு பாத்திரத்துடனும் நம்மால் ஒன்ற முடியாததால் ‘கொம்பையா பாண்டியனை எவன் வெட்டினால் எனக்கென்னடா, ஆளை விடுங்கடா’ என்று தெறித்து ஓட வேண்டியிருக்கிறது. பழைய அம்பாஸிடரையும் சினிமா போஸ்டர்களையும் காட்டிவிட்டு இதன் காலகட்டம் எண்பதுகளில் நிகழ்கிறது என்று அபத்தமாக காட்ட முயல்வதின் மூலம் ‘இது சமகால நிகழ்வுகள் அல்ல’ என்று இயக்குநர் மழுப்ப விரும்புகிறாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா எனத் தெரியவில்லை.

இதில் வரும் ஒரு முதியவர் அசந்தர்ப்பமான சூழலில் பேசும் வசனங்கள்தான் நகைச்சுவையாம். இந்த நகைச்சுவைப் பாணிக்கும் முதியவருக்கும் ஏறத்தாழ ஒரே வயதுதான் இருக்கும். அத்தனை பழமையான எரிச்சல்.

போலவே இந்த திரைப்படத்தின் படத்தலைப்பான ‘கிடாரி’ நாயகனின் பெருமையான அடையாளமாகச் சுட்டப்படுகிறது. அந்தப் பிரதேசத்தின் வீரமிகு இளைஞர்களை அப்படி அழைக்கும் வழக்கமிருக்கிறதாம். ஆனால் ‘கிடாரி’ என்பதற்கு ‘ஈனாத இளம் பசு’ என்று பெண்ணின அடையாளம் சார்ந்த பொருள்தான் இருக்கிறது. இதில் நாயகனுக்கு என்ன பெருமை? இதில் இந்தத் தலைப்பை சமுத்திரக்கனியிடமிருந்து கடன் வாங்கி வைத்திருக்கிறார்களாம். கடவுளே!

தேவர் மகன் போன்ற திரைப்படங்களில் படம் முழுக்க வன்முறையைச் சித்தரித்தாலும், சம்பிரதாயத்துக்காக என்றாலும், படத்தின் இறுதியில் ‘போய் புள்ளகுட்டிங்களைப் படிக்க வைங்கடா’ என்கிற வன்முறைக்கு எதிரான நீதியின் குரல் அவைகளில் ஒலித்தது. ஆனால் கிடாரியில் அப்படி எதுவுமில்லை. ஒரு சமூகத்தின் நபர்களுக்குள் நிகழும் அதிகாரப் போட்டி தொடர்பான மோதல்கள் என்றாலும் அதன் நாயகன், சட்டத்தினாலும் அறத்தினாலும் அல்லது எவராலுமே தீண்ட முடியாத இன்னொரு ‘கொம்பையா பாண்டியனாக’ உருமாறும் வெற்றிப் பெருமிதத்துடன் படம் நிறைவதுதான் ஆபத்தான செய்தியாக இருக்கிறது.

இதிலுள்ள சாதிய ரீதியிலான ஆபத்துக்களைத் தவிர்த்துவிட்டு ஒரு வெகுஜனத் திரைப்படமாக இதைப் பார்க்கலாம் என்றாலும் அந்தச் சுவாரசியத்தையும் இது தராமல் போவதுதான் எரிச்சல் கலந்த சோகம்.

**

ஆனால் ஒரு விஷயத்துக்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

ஊரில் பெரிய மனிதர்களாக உலவும் பல நபர்களின் பழங்காலப் பின்னணியும் அது சார்ந்த வரலாறும் கேவலமாகத்தான் இருக்கிறது. பல்வேறு துரோகங்களின், அராஜகங்களின் மூலமாகத்தான் தங்களின் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு இன்றைக்குப் பெருமையாக உலவுகிறார்கள். பெரிய பெரிய மீசை வைத்த சண்டியர்கள் கூட சாய்க்க முடியாத அவர்களது கோட்டையை, ஓர் எளிய பெண் தன் உடலை ஆயுதமாகக் கொண்டு சாய்க்க முடிகிற அளவுக்கு அந்தக் கோட்டைகள் பலவீனமாக இருக்கின்றன என்கிற உண்மையைப் பதிவு செய்ததற்காக.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் சாதியப் பெருமிதத்தைப் பதிவு செய்யும் வழக்கமான, ஆனால் சலிப்பூட்டும் அனுபவத்தைத் தந்த திரைப்படம்தான் கிடாரி.

‘கொம்பையாவுக்குப் பரிசு மரணமல்ல, மரணபயம்தான்’ என்றொரு வசனம் படத்தின் இறுதியில் வருகிறது.

ஆனால் உண்மையில் இந்த விஷயம் நிகழ்ந்தது பார்வையாளர்களுக்குத்தான். ‘மரண பயத்தைக் காட்டிடாண்டா பரமா’ என்று சசிகுமாரின் முந்தைய திரைப்பட வசனத்திலிருந்தே உதாரணம் சொல்ல முடிவதுதான் இதிலுள்ள முரண்நகை.

]]>
விமரிசனம், கிடாரி, சசிகுமார் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/3/w600X390/Kidaari_Movie_Stills_1.jpg http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/sep/03/சசிகுமாரின்-கிடாரி-பட-விமரிசனம்-–-ரத்தக்-காட்டேரி-2559546.html
2557415 சினிமா திரை விமரிசனம் ‘தர்மதுரை' விமரிசனம்: விஜய் சேதுபதியின் ராஜ்ஜியம்!  சுரேஷ் கண்ணன் DIN Saturday, August 20, 2016 03:46 PM +0530 இயக்குநர் சீனு ராமசாமியின் நான்காவது திரைப்படம். இதற்கு முன்னர் வெளிவந்த ரஜினியின் ஒரு வணிகமசாலா திரைப்படத்தின் தலைப்பை நினைவுப்படுத்தும் ஒரே நெருடலைத் தவிர வேறு எந்த மசாலாத்தனமும் இதில் இல்லாதது பாராட்டுக்குரியது. வருங்கால முதல்வர் கனவுடன் பஞ்ச் டயலாக் பேசி சிரிக்க வைக்கும் ஆக்‌ஷன் நாயகன், டாஸ்மாக் பார் குத்துப் பாட்டு, வெளிநாட்டு டூயட், இயற்பியல் விதிகளை மீறி டாட்டா சுமோ ஜீப்புகள் வானத்தில் பறக்கும் சண்டைக் காட்சிகள், கவர்ச்சி நடனங்கள் என்று அபத்த ஜோடனைகள் எதுவுமில்லாமல் ஓர் எளிய, இயல்பான திரைப்படத்தைத் தந்து தன் குருவான பாலுமகேந்திராவின் பெயரைத் தொடர்ந்து காப்பாற்றும் விதத்தை இதிலும் கச்சிதமாகப் பின்பற்றியிருக்கிறார் சீனு ராமசாமி.

பெரும்பாலும் நெய்தல் நிலவெளிக் காட்சிகளின் பின்னணி, சிறுநகரத்து அல்லது கிராமத்து எளிய மனிதர்கள், எவ்வித முகச்சுளிப்பையும் ஏற்படுத்தாத இயல்பான, நெகிழவைக்கும் திரைக்கதை, பொருத்தமான நடிகர்கள், உணர்ச்சிகரமான சம்பவங்கள், இனிமையான இசை, சிறந்த ஒளிப்பதிவு போன்றவற்றின் கலவையை வைத்து தம் திரைப்படங்களை உருவாக்குவது சீனு ராமசாமியின் பாணி. இந்தத் திரைப்படத்திலும் அதே வசீகரமான முறையைப் பின்பற்றி ஒரு நல்ல திரைப்படத்தை தந்திருக்கிறார். ஆனால் இதிலுள்ள திரைக்கதை கோளாறுகளையும் குழப்பங்களையும் தேய்வழக்கு நாடகத்தனங்களையும் மீறி இதுவொரு ஃபீல் குட் திரைப்படமாக மிளிர்வதற்காக இயக்குநரைப் பாராட்டியாகவேண்டும்.

சிறுகதைகள் போல பல்வேறு இழைகள், நபர்கள், சம்பவங்கள் என அடுத்தடுத்து பயணிக்கும் திரைக்கதைதான் என்றாலும் இத்திரைப்படத்தை ஒரு சுவாரசியமான அனுபவமாக்கியிருப்பதற்கு முக்கியமான காரணம் விஜய் சேதுபதி. ஏறத்தாழ முழு திரைப்படத்தையும் அவர்தான் தாங்குகிறார் என்றாலும் கூட மிகையில்லை. புகழும் வெற்றியும் பெற்ற நடிகர்களின் பாணியைத் தெரிந்தோ அல்லது தன்னிச்சையாகவோ நகலெடுப்பது பொதுவாக இளம் நடிகர்களின் வழக்கமாக இருக்கும். அவ்வாறில்லாமல் தனக்கென்று ஒரு பிரத்தியேகமான இயல்பான நடிப்பை கையாள்வதில் விஜய் சேதுபதி தொடர்ந்து கவர்கிறார்.

அவரது நடிப்பை தோராயமாக எப்படி வர்ணிக்கலாம் என்றால், நீங்கள் வீட்டிலிருந்து புறப்படும்போது பள்ளிக்குச் செல்லும் பக்கத்து வீட்டுச் சிறுமியைப் பார்க்கிறீர்கள். ‘ஹேய்... குட்டி, எப்படி இருக்கே... ஸ்கூலுக்குக் கிளம்பிட்டியா... குட்... குட்... பார்த்துப் போ... நல்லாப்படி... என்ன...?!’ என்று சொல்லும் இயல்பான தொனியை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏறத்தாழ விஜய் சேதுபதி நடிப்பதில் உள்ள பொதுவான இயல்புதன்மையின் அழகு இப்படித்தான் இருக்கிறது. குறிப்பாக இத்திரைப்படத்தில் அவரின் நடிப்பு இன்னமும் கூட மெருகேறியிருக்கிறது எனலாம்.

'சுமார் மூஞ்சி குமாராக, துணை நடிகராக இருந்த தன்னை முதன்முதலில் நாயகனாக்கிய சீனு ராமசாமிக்குக் குருவணக்கம் செலுத்தும் விதத்தில் சில சச்சரவுகளையும் மீறி இதில் அவர் நடித்துத் தந்திருப்பது பாராட்டத்தக்கது. (ஆனால் - தர்மதுரை, உடம்பைக் குறை என்று சொல்ல வேண்டியிருக்கிறது!)

**
தர்மதுரை என்பவன் யார்?

தினமும் காலையில் எழுந்தவுடன் தவறாமல் தண்ணியடிப்பது, 'இவன்க உங்களை ஏமாத்திடுவாங்க. உஷாரா இருங்க' என்று சீட்டுத்தொழில் நடத்தும் தம் சகோதர்களைப் பற்றியே ஊர் மக்களிடம் போட்டுக் கொடுப்பது, சொந்த வீட்டிலேயே அலப்பறைகள் செய்வது, சகோதரர்கள் தம்மை அறையில் அடைத்து வைத்தாலும் விஜய் மல்லையா மாதிரி சாமர்த்தியமாக தப்பி அலப்பறையை வெளியில் தொடர்வது என்று தம் கிராமத்தில் ஒரு ரகளையான நபராக இருப்பவன் விஜய் சேதுபதி. இத்தனைக்கும் இவன் மருத்துவப் படிப்பு படித்தவன் வேறு.

சகோதரர்கள் இவனை எதிரியாகவும் மற்றவர்கள் பைத்தியக்காரனாகவும் பார்க்கும்போது அவனுக்கு ஆதரவாக இருக்கும் ஒரே ஜீவன், தமிழ் சினிமாவின் வழக்கம் போல அவனது தாயான ராதிகா மட்டுமே.

இவனுடைய தொல்லை தாங்காமல் அருமைச் சகோதரர்கள் ஒருநாள் இவனை 'ஏதாவது செய்து விடுவதற்காக' திட்டம் போட, 'எங்காவது போய் பொழச்சுக்கப்பா’ என்று அவனை சிறையிலிருந்து மீட்டு அனுப்புகிறார் ராதிகா. இரவில் கிளம்பும் விஜய் சேதுபதி, சகோதரர்கள் வைத்திருக்கும் சீட்டுப்பணத்தின் பையைத் தவறுதலாக எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார்.
டாக்டருக்குப் படித்தும் ஏன் இப்படி அலப்பறையான குடிகாரர் ஆனார்? ஏன் சொந்த சகோதரர்களிடம் இப்படி பகைமை பாராட்டுகிறார்? இவற்றின் பின்னணி என்ன? தவறுதலாக எடுத்துப்போகும் லட்சக்கணக்கான சீட்டுப்பணம் என்னவாகிறது? அதை அவர் திருடி எடுத்துக்கொண்டு ஓடியதாக நினைத்து அவரைக் கொலைவெறியுடன் துரத்தும் சகோதரர்களிடமிருந்து தப்பித்தாரா என்பதைப் பின்னர் வரும் காட்சிகள் விவரிக்கின்றன.

***

தமது திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களை வலிமையாகவும் முக்கியத்துவம் தந்தும் சித்தரிக்கும் இயக்குநர்களில் சீனு ராமசாமியும் ஒருவர்.
அவ்வாறு இத்திரைப்படத்திலும் விஜய் சேதுபதியின் வாழ்வில் மூன்று பெண்கள் வருகிறார்கள். ஒன்றன் பின் ஒன்றாக இந்தச் சம்பவங்களை எவ்வித குழப்பமும் அல்லாத தெளிவான திரைக்கதையின் மூலம் அவற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இதில் ஸ்ருஷ்டி டாங்கேவின் பகுதி அவசியமற்ற அளவில் சிறியது என்றாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தமன்னா வரும் பகுதிகள் அழுத்தமான காட்சிகளுடன் அமைந்துள்ளன.
மருத்துவக் கல்லூரியில் தம் கூட படிக்கும் மாணவியான ஸ்ருஷ்டி டாங்கே தம்மைக் காதலிப்பதாகச் சொல்லும்போது விஜய் சேதுபதி முதிர்ச்சியுடன் அதைச் சமாளிப்பது அருமை. தமன்னா இதில் நடிக்கிறார் என்றவுடன் அவர்தான் இதில் பிரதான நாயகியாக இருப்பாரோ என்கிற நம் எண்ணத்தில் வெற்றிகரமாக மண்ணள்ளிப் போடுகிறார் இயக்குநர்.

விஜய் சேதுபதிக்கும் தமன்னாவுக்கும் இருக்கிற பாலினப் பாகுபாடுகளைத் தாண்டிய இயல்பான நட்பு வெளிப்படுகிற காட்சிகள் எல்லாம் அருமையாகப் பதிவாகியிருக்கின்றன. கூட படிக்கும் மாணவி தம்மைப் பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டாலே அவள் தம்மைக் காதலிக்கிறாள் என்று எண்ணிக்கொள்வதும் பிறகு அவ்வாறில்லை என்று தெரிய வந்தவுடன் கொலைவெறியாகி அவள் மீது ஆசிட் அடிப்பதும், அரிவாள் தூக்குவதுமாக இருக்கும் சமகால இளைஞர்களின் குணாதிசயத்தின் போக்குக்கு ஒருவித கற்றலைத் தரும் விதமாக ஆண் - பெண் நட்பு இத்தனை இயல்பாக சித்தரிக்கப்பட்டதற்கு இயக்குநரைப் பாராட்டவேண்டும்.

வாழ்க்கையில் பழைய விஷயங்களை மறக்கக்கூடாது என்கிற செய்தியை உலகத்துக்குச் சொல்வதற்காக தாம் எல்.கே.ஜி படிக்கும்போது போட்ட ஃபிராக்குகளை, நாயகியான பிறகும் பெரும்பாலான திரைப்படங்களில் அணிந்து வெறுமனே கவர்ச்சிப் பொம்மையாக இதுவரை வந்து கொண்டிருந்த தமன்னாவுக்குப் புடவையணிவித்து அவரை உருப்படியாக நடிக்க வைத்திருப்பதற்காக இயக்குநருக்கு சிறப்பான நன்றி. திரைப்படத்தின் பிற்பகுதியில், தோல்வியடைந்த தமன்னாவின் திருமண வாழ்க்கையை விஜய் சேதுபதியின் வருகை சரிசெய்வதும் இவரைக் கொடுமைப்படுத்தின கணவனைப் போட்டுப் புரட்டியெடுப்பதும் அரங்கில் பலத்த கைத்தட்டல் வரவழைத்த காட்சிகள்.

படிப்பு முடிந்து கிராமத்தில் மருத்துவராகப் பணிபுரியும் விஜய் சேதுபதி, மற்றவர்களுக்கு உதவி செய்யும் நல்லியல்புடன் இருக்கும் இளம் பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷைச் சந்தித்த கணத்திலேயே மனத்தைப் பறிகொடுப்பதும், வழக்கமாக பெண்கள் ஆண்களைப் பாதுகாப்பாக அணுகுகிற முறையில் அவர் 'அண்ணா, அண்ணா' என்று அழைத்ததையும் ஒதுக்கி வீட்டுக்குப் பெண் கேட்டுச் செல்வதும் 'தெரியாம உங்களை அண்ணா -ன்னு கூப்பிட்டுட்டேன். நீங்க எனக்கு மாமா" என்று ஐஸ்வர்யா ராஜேஷ் வெட்கத்துடன் தன் காதலை ஒப்புக் கொள்வதும் ரசனையான காட்சிகள். இருவருமே பெரும்பாலும் பார்வைகளாலேயே தம் காதலை வெளிப்படுத்திக்கொள்வதும் இயல்பானதாக இருக்கிறது.

குறிப்பாக கிராமத்துக் கிழவிகளுக்கு விஜய் சேதுபதி மருத்துவம் பார்க்கும் சமயங்களில் அதைக் காதலும் பெருமையும் கலந்த பார்வையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கவனிக்கும் காட்சிகள் அருமை. இவ்வளவு பெரிய படிப்பு படித்த மாப்பிள்ளை தனக்குக் கிடைப்பாரா என்கிற சந்தேகம் அவருடைய கண்ணில் எப்போதுமே நிழலாடிக் கொண்டிருப்பதற்கு ஏற்ப இறுதியில் அவரது கனவு பொய்யாகிப் போவதும் அதனாலேயே விஜய் சேதுபதி குடியடிமை ஆவதுமான சோகங்கள் நிகழ்கின்றன. பெரிதும் ஒப்பனையற்ற தோற்றத்துடன் வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் கண்களில் வெளிப்படும் காதல் உணர்வின் போதை நமக்கும் பரவுகிறது.

இதில் வரும் துணைக் பாத்திரங்கள் கூட அத்தனை அருமையாக நடித்திருக்கின்றன. ராதிகா, சொல்லவே வேண்டாம். தன் மகனை வீட்டை விட்டு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை ரகசியமாகச் செய்துவிட்டு இரவில் அமைதியாகப் படுத்திருப்பதும், இறுதிக் காட்சியில் தன் மகன் ஒரு சிறுவனுக்கு மருத்துவம் பார்க்கும்போது தம் மகன் தரும் மருந்து கவரைப் பிரமிப்புடன் பிரசாதம் போல் வாங்கிக் கொள்வதும் என கலக்கியிருக்கிறார். சிறிது நேரமே வந்ததாலும் எளிய குடும்பத்தின் தகப்பனின் சித்திரத்தை எம்.எஸ்.பாஸ்கர் அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு கண்ணியமான மருத்துவப் பேராசிரியரின் பங்கை ராஜேஷ் அபாரமாக தந்திருக்கிறார். விஜய் சேதுபதியின் சகோதரர்கள் உள்ளிட்ட இதர துணைபாத்திரங்களும் கூட நன்றாகவே இயங்குகின்றன. வீட்டு மாப்பிள்ளையாக அமர்ந்திருக்கும் நபரின் நடிப்பு நகைச்சுவைக் கலாட்டா.
  
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜாவின் இசை, எப்படியாவது ஹிட்டாக்கி விட வேண்டும் என்கிற ஆவேசமெல்லாம் எதுவுமில்லாமல் அவருடைய இசை திரைக்கதையின் இயல்புடன் பொருந்தியிருக்கிறது. குறிப்பாக பருத்திவீரன் பாணியில் வரும் 'மக்கா கலங்குதப்பா' பாடல் (மதிச்சியம் பாலாவின் குரல் ரகளை) உற்சாகமளிக்கிறது. விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இடையிலான காதல் உணர்வுகளைச் சித்தரிக்கும் 'ஆண்டிப்பட்டி' பாடலும் அருமை. இந்தப் பகுதியில் தேனி மாவட்டத்தின் நிலவெளிக்காட்சிகளின் அழகியலை எம்.சுகுமாரின் காமிரா வைட் ஆங்கிளில் கலையுணர்வுடன் பதிவாக்கியிருக்கிறது.

பொதுமக்களின் பணத்தில் கற்கப்படும் படிப்பான மருத்துவம், கிராமத்தின் எளிய மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்கிற செய்தியை அடிநாதமாக, பிரசார உறுத்தல் இல்லாமல் சொல்லியிருக்கும் இயக்குநருக்குப் பாராட்டு. திருநங்கைக்குப் பணியளிப்பது, 'பரோட்டா சாப்பிடாதே' என்று சிறுவனுக்கு மருத்துவர் விஜய் சேதுபதி அறிவுரை கூறுவது என ஆங்காங்கே சமூக உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காட்சிகளை இயல்பாக இணைத்திருப்பதும் வரவேற்கத்தக்கதே.

துவக்க காட்சியிலேயே ஒரு குடிகாரராக அறிமுகம் ஆகும்போது 'ஐயோ, இதிலும் விஜய்சேதுபதிக்கு வழக்கமான வேடமா' என்று நாம் சலித்துக் கொள்ள ஆரம்பிப்பதற்குள் படம் அங்கிருந்து நகர்வது சிறப்பு. என்றாலும் கூட கிராமத்தில் விஜய் சேதுபதி செய்யும் ரகளைகள் ரசிக்க வைப்பதாகவே இருக்கின்றன. மந்திரம் போட்டு தம்மைக் கட்டுப்படுத்தும் சிறுமியின் அன்புக்கு இணங்குவதும் அருமை.

அசந்தர்ப்பமான நேரத்திலும் கூட தன்னுடைய உடை குறித்தே கவலைப்படும் விஜய் சேதுபதியின் இளைய சகோதரன் பாத்திரம் முதற்கொண்டு ஒவ்வொன்றுமே சுவாரசியமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் வரும் மனிதர்கள் பெரும்பாலும் நல்லவர்களாக, மெல்லுணர்வையும் அதன் பின்னான அன்பையும் நீதியையும் நமக்கு நினைவூட்டுபவர்களாக இருக்கிறார்கள். வன்முறையும் ஆபாசமும் தலைதூக்கி நிற்கும் திரைப்படங்களுக்கு இடையில் இது போன்ற மெல்லுணர்வுகளின் ஆதிக்கம் வெளிப்படும் திரைப்படங்கள் வணிகரீதியாகவும் வெற்றி பெறுவது சமூக நலத்துக்கு நல்லது.

***

'ஆரம்பம்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ஃபினிஷிங் சரியில்லையேப்பா" என்பார் வடிவேலு ஒரு திரைப்படத்தில். சீனு ராமசாமியின் திரைக்கதையின் பிசிறுகள், அதிலுள்ள செயற்கையான நாடகத்தன்மைகள் இப்படித்தான் நம்மை உணர வைக்கின்றன. அவரது முந்தைய திரைப்படமான 'நீர்ப்பறவை'யிலும் இந்தப் பிரச்னையைக் கவனித்தேன். ஒரு வலுவான துவக்கத்தை தந்துவிட்டு பின்பு இலக்கற்று அலையும் திரைக்கதையினால் அது மனத்தில் அத்தனை ஒட்டாத படைப்பாகி விடுகிற ஆபத்தை அவர் கவனிக்கவேண்டும்.

இந்த திரைப்படத்திலும் அவ்வாறு பல கேள்விகள் கிளம்புகின்றன.

செல்போன் முதற்கொண்டு ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற நவீன தொடர்பு சாதனங்களின் மீது இயக்குநருக்கு தனிப்பட்ட வகையில் விமரிசனமோ, ஒவ்வாமையோ கூட இருக்கலாம். தவறில்லை. ஆனால் தம்முடைய திரைப்படங்களின் பாத்திரங்கள் கூட அதை உபயோகப்படுத்தாதவாறு பார்த்துக் கொள்வது கொஞ்சம் ஓவர். இதுவொன்றும் தாமஸ் ஆல்வா எடிசன் பிறப்பதற்கு முன்பிருந்த காலக்கட்டத்தில் நிகழும் படம் இல்லைதானே?

அந்தளவுக்கு இத்திரைப்படத்தில் சிக்கலான சூழலிலும் கூட தகவல் தொடர்பேயில்லாமல் மனிதர்கள் அலைகிறார்கள். மருத்துவக் கல்லூரியில் அத்தனை நெகிழ்வான நெருக்கத்துடன் பழகும் மாணவர்கள் பின்பு எவ்வித தொடர்புமே இல்லாமல் பிரிந்திருப்பது செயற்கை. பாசத்தைக் கொட்டி தன்னை உயிர்தப்ப அனுப்பிய தாயை, அத்தனை காலத்துக்கு விஜய்சேதுபதி ஒருமுறை கூட தொலைப்பேசியில் கூட அழைப்பதில்லை என்பதும் இயல்பாக இல்லை.

போலவே தன் பையிலுள்ள லட்சக்கணக்கான பணத்தை விஜய் சேதுபதி நீண்ட காலம் கழித்துதான் பார்க்கிறார் என்பதும் நம்பும்படியில்லை. பெயருக்குக் காதலைச் சொல்லி விட்டு பின்பு காணாமற் போகும் ஸ்ருஷ்டி டாங்கேவின் பாத்திரம் அவசியமேயில்லையே. பின் எதற்காக? ஒரு தாய்க்கு நிராகரிக்கப்பட்ட மகனின் மீது கூடுதலான பிரியம் எழும் என்பது நடைமுறை உண்மைதான் என்றாலும் மற்ற மகன்கள் சிக்கலில் மாட்டித் தவிக்கும்போது கூட ஒரு தாய் மெளனமாக இருப்பார் என்பதும் நம்பும்படியில்லை. இறுதிக் காட்சியும் ஒரு எதிர்மறையான தீவிரத்தை எதிர்பார்க்க வைப்பது போன்று நகர்ந்து சட்டென்று 'சுபம்' என்று முடிந்துவிடுகிறது.

வன்முறையும் ஆபாசமும் அல்லாமல் தன் திரைப்படங்களைத் தர வேண்டும் என்கிற சீனு ராமசாமியின் பிடிவாத சமூக உணர்வை ஒருபுறம் பாராட்டியாக வேண்டியது அவசியம்தான் என்றாலும் ஒரு சாதாரண பார்வையாளனுக்கு ஏற்படக்கூடிய நெருடல்கள் கூட உருவாகாதவாறு திரைக்கதைக்கு மெனக்கெடுவது அவசியமானது. தனது வரப்போகிற இன்னொரு திரைப்படத்தின் தலைப்பை, சம்பந்தமேயில்லையென்றாலும் சாமர்த்தியமாக இணைத்திருக்கும் புத்திசாலித்தனத்தை திரைக்கதையிலும் காண்பிக்கலாம். ஆனால் இத்தனை குறைகள் இருந்தாலும் கூட ஒரு நீரோடை போன்று இயல்பாக நகரும் திரைக்கதையின் சுவாரசியம் இந்தக் குறைகளைக் காப்பாற்றுகிறது.

தர்மதுரை - சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் உருவான இயல்பான திரைப்படம். வாரஇறுதியில் குடும்பத்தோடு சென்று பார்க்கத் தகுதியான அருமையான படைப்பு. குறிப்பாக விஜய் சேதுபதியின் ரகளையான நடிப்பு ஒன்றுக்காகவே நம்பிச் செல்லலாம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/20/w600X390/dharmadurai2.jpg http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/aug/20/தர்மதுரை-விமரிசனம்-விஜய்-சேதுபதியின்-ராஜ்ஜியம்-2557415.html
2556843 சினிமா திரை விமரிசனம் இயக்குநர் ராஜூ முருகனின் ‘ஜோக்கர்’! Friday, August 19, 2016 04:26 PM +0530  

குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் டார்கெட் கொண்ட கமர்ஷியல் படங்களை எடுக்கவேண்டும் என்பதைவிடவும் நல்ல படங்களை இயக்கிக்காட்டவேண்டும் என்கிற எண்ணம் இயக்குநர் ராஜூமுருகனுக்கு உள்ளது. அவருடைய 2-வது படமும் அதே நோக்கத்தில் எடுக்கப்பட்டதே. ஓர் இளம் இயக்குநருக்கு இந்தச் சிந்தனை இருப்பது பாராட்டப்படவேண்டியது.

ஆனால் அரசியல்வாதிகளாலும் அதிகார வர்க்கத்தினாலும் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை வெளிப்படுத்த முயலும் இந்தப் படம், சுவாரசியமாகவும் வலுவான காட்சிகளுடனும் அமையாதது நம் துரதிர்ஷ்டம்.


வீட்டில் கழிப்பறை வசதி இருந்தால் தான் உன்னைக் கட்டிக்கொள்வேன் என்று காதலன் குரு சோமசுந்தரத்திடம் கட்டளையிடும் கதாநாயகி ரம்யா பாண்டியன், பிறகு மனம்மாறி திருமணம் செய்துகொள்கிறார். மத்திய அரசின் இலவசக் கழிப்பறை திட்டத்தின் வழியாக கழிப்பறை வசதி பெற முயற்சி செய்கிறார் கதாநாயகன். ஆனால் அதில் ஏற்பட்ட ஊழலால் அவருடைய வாழ்க்கை திசைமாறுகிறது. மனைவி கோமாநிலைக்குத் தள்ளப்படுகிறார். இதனால் மனநலம் பாதிக்கப்படுகிறார் குரு. பிறகு தன்னை மக்கள் ஜனாதிபதியாக எண்ணிக்கொண்டு ஊரில் நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கிறார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா என்பதே மீதிக்கதை.


படத்தின் பெரிய பலம் - குரு சோமசுந்தரத்தின் பக்குவமான நடிப்பு. பிளாஷ்பேக்கில் காதலால் ரம்யாவைப் பின்தொடரும் காட்சிகளிலும் பிறகு மனைவிக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்து பதறிப்போகும் காட்சியிலும் நடிகன்யா என்று உணரவைக்கிறார். விருதுகள் இவரைப் பின்தொடரட்டும். ஆரம்பக்கட்ட சோர்வான காட்சிகளுக்குப் பிறகு வருகிற பிளாஷ்பேக் காதல் காட்சிகள்தான் பெரிய ஆறுதல். அதில் புதுமுகம் ரம்யாவும் சிறப்பாக நடித்து குரு சோமசுந்தரத்துக்கு ஈடு கொடுத்துள்ளார். கதாநாயகனின் போராட்டங்களுக்குத் தோள் கொடுக்கும் மு. ராமசாமி, காயத்ரி கிருஷ்ணா ஆகியோரும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் குறையின்றி நடித்துள்ளார்கள். பவா செல்லத்துரை சில நிமிடங்களே வந்தாலும் மனத்தில் நிற்கிறார்.

செழியனின் ஒளிப்பதிவு விதவிதமான மனநிலையை உண்டாக்குகிறது. வறட்சியான கிராமத்திலிருந்து சட்டென்று பின்னோக்கிச் செல்லும் காட்சிகளில் கேமராவும் அழகாக கதை சொல்கிறது. இசை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம்.

தன் வீட்டிலும் பள்ளியிலும் கழிப்பறை இல்லை என்பதால் கணவன் வீட்டிலாவது அவ்வசதி கட்டாயமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிற கதாநாயகியின் நிலைமை சமூக அவலத்தைத் தோலுரிக்கிறது. ஆனால் அவருடைய இந்த அடிப்படைத் தேவையே வாழ்க்கையைத் துண்டாக்குவது தாங்கமுடியாத சோகத்தை ஏற்படுத்துகிறது. பிளாஷ்பேக் காதல் காட்சிகளும் அதைத் தொடரும் கதாநாயகனின் பரிதவிப்பும் படத்தின் சிறப்பான பகுதிகள். இங்கு வெளிப்பட்ட இயக்குநரின் நிபுணத்துவம் பிற காட்சிகளில் முழுமையாக இல்லாதது பெரிய குறையாக அமைந்துவிடுகிறது.

சமகால அரசியல் நிலவரங்களைக் கேலியுடன் விமரிசிக்கும் வசனங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளிக்கிறார்கள். ஆனால் கதாநாயகன் எதற்காக தன்னை மக்கள் ஜனாதிபதியாக எண்ணுகிறார், மக்களும் அந்த மரியாதையை எதற்காக அவருக்கு அளிக்கிறார்கள் என்கிற ஆரம்பக்கட்ட கேள்விகளுக்கு பிறகு விடை தெரிந்தாலும்கூட கதாநாயகனின் துண்டுதுண்டான போராட்டங்கள் மீது ஈடுபாடு உண்டாகவில்லை. வசனங்களை கைத்தட்டி ரசிக்கமுடிவதோடு போராட்டங்கள் மீதான பிடிப்பு முடிவடைந்துவிடுகிறது. தன் சொந்தப் பிரச்னைக்காகவும் கதாநாயகன் நீதிமன்றம் படியேறுவதுகூட நம்மிடம் பாதிப்பை ஏற்படுத்தாது திரைக்கதையின் பெரிய பலவீனம். இறுதியில் நீண்ட வசனம் மூலம் யார் ஜோக்கர் என மக்களைச் சாடும் காட்சி அவசியமா?
இயக்குநரின் நல்ல நோக்கம் நல்ல சினிமாவாகவும் மாறியிருக்கவேண்டும். அரசியல்வாதிகளின் ஊழலைக் குறிவைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் சுவாரசியமாகவும் அமைந்து பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. அந்த நிலையை முழுமையாக அடைய ஜோக்கர் தவறிவிட்டது.

]]>
இயக்குநர் ராஜூ முருகன், ஜோக்கர், விமரிசனம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/15/w600X390/joker.jpg http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/aug/15/இயக்குநர்-ராஜூ-முருகனின்-ஜோக்கர்-விமரிசனம்-2556843.html
2556847 சினிமா திரை விமரிசனம் பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி! DIN DIN Monday, August 15, 2016 09:49 AM +0530 மில்லினியம் பிறந்தபிறகு ஷங்கர், கே.எஸ். ரவிகுமார், சுரேஷ் கிருஷ்ணா, பி.வாசு ஆகியோரின் இயக்கத்தில் மட்டுமே திரும்பத் திரும்ப நடித்துவந்திருக்கிறார் ரஜினி (இடையில் மகளின் இயக்கத்தில் ஒரு கிராபிக்ஸ் படம்). அவர்கள் இயக்கிய படங்களுக்கும் பா. இரஞ்சித்தின் இந்த கபாலிக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு - நெகிழ வைக்கும் உணர்வுபூர்வமான காட்சிகள். அவைதான் கபாலி என்கிற பக்கா மசாலா படத்தை அதே வகையிலான இதர படங்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.

மனைவி உயிருடன் இருப்பதும் தெரியாதது மட்டுமல்ல, மகள் பிறந்ததே தெரியாமல் வாழ்கிற ரஜினி பிறகு உண்மைகளை அறிந்துகொண்டு அதன் வழியே செல்கிற ஒரு பாசப்போராட்டம்; தன்னை ஒவ்வொரு நொடியும் அழிக்கத் துடிக்கும் வில்லனுக்கு எதிரான தொடர்வன்முறைப் போராட்டம். இந்த இரு போராட்டங்களின் கலவையே கபாலி படம்.

மலேசியாவில் குடியேறிய தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுகிற கபாலி நாளடைவில் டான் ஆகிறார். ஆனால், தமிழர்களை கூடவே வைத்துக்கொண்டு கலகம் செய்யும் சீன வில்லனை வாழ்நாள் முழுக்க எதிர்த்துப் போராடவேண்டிய நிலைமை. தமிழ் நண்டுகளின் சூழ்ச்சியால் பலவருடங்கள் சிறையில் கழிக்க நேர்கிறது. சிக்கல்களிலிருந்து மீண்டு வந்து வில்லனை ஒரு கை பார்க்கிறார்.

இது வழக்கமான ரஜினி படக் கதையாகத் தோன்றினாலும் கதை நடக்கிற களமும் பாசவலையில் அவரைப் பிண்ணுகிற மனைவி, மகள் தொடர்புடைய காட்சிகளும் மிகமுக்கியமாக குஷி உண்டாக்கும் ரஜினி நடிப்பும் ரசிகர்களுக்கு நிரம்ப மகிழ்ச்சியை அளித்துவிடுகின்றன. திரையரங்கில் நிசப்தத்தை உண்டுபண்ணும் அந்த இறுதிக்காட்சி ரஞ்சித் முத்திரை.

ரஜினி ரசிகர்களுக்கு இது நிச்சயம் கொண்டாட்டமான படம்தான். மாணவர்களுக்கு மத்தியில் தன்னுடைய பிளாஷ்பேக்கைச் சொல்கிற காட்சியிலும் பாண்டிச்சேரியில் ஏற்படுகிற அந்த நெகிழ்ச்சியான தருணமும், பலரும் ஏங்கும் ரஜினியின் நடிப்புத் திறமையை மீட்டுக்கொண்டு வருகிறது. பாராட்டுகள் இரஞ்சித்.

ராதிகா ஆப்தே, வழக்கமான வட இந்திய இறக்குமதி அல்ல. மிகப் பொருத்தமான தேர்வு. நடிப்பைக் கோரும் காட்சிகளைச் சிறப்பாக கையாண்டுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் சாவடி அடிக்கும் தன்ஷிகாவுக்கு கபாலி நிச்சயம் ஒரு பெரிய திருப்புமுனை. படத்தில் சிரிப்பை ஏற்படுத்துவது தினேஷ் தான். வசனமே இல்லாமல் பரபரப்பான செய்கைகள் மூலமாக ரசிகர்களைக் குதூகலப்படுத்திவிடுகிறார். வில்லன் வேடத்தில் ஆரம்பித்து தினேஷ், கலையரசன், ரித்விகா என சின்னக் சின்னக் கதாபாத்திரங்கள் வரைக் கவனமாக நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ரஜினி படத்துக்கு அவசியமான உணர்ச்சியைக் கொந்தளிக்கச் செய்யும் இசை. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, ஆக்‌ஷன் காட்சிகளை ஒருபடி மேலே உயர்த்தியிருக்கிறது. பலமுனைகளைத் தொட்டுச் செல்லும் காட்சிகளுக்குத் தொய்வு ஏற்படுத்தாத எடிட்டிங் (பிரவீன்). முரளியின் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் பரபரவைக்க வைக்கின்றன. பிளாஷ்பேக் காட்சிகளில் வெளிப்படும் டோனும் மலேசிய கான்க்ரீட் அடுக்குகளை ஒளிவெள்ளத்தில் காண்பித்திருப்பதும் படத்துக்குத் தேவையான பிரமாண்டத்தை அளித்துள்ளன.
சிறையிலிருந்து வருகிற ரஜினி, கனக்கச்சிதமாகத் திட்டங்கள் போடுவதும், கூடவே மனைவிக்காக ஏங்குவதும்... சரியான திருப்பங்களுடன் படம் செல்ல உதவுகின்றன. ரஜினி  நடத்துகிற அந்தக் கருணை இல்லம் தொடர்புடைய காட்சிகளை இப்படியொரு மசாலா படத்தில் பார்ப்பது அரிது. இதுபோன்ற இடங்களில் பா.இரஞ்சித் திறமையாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்கிறார். இதனால் முதல் பாதியில் அப்படியொரு நிறைவு ஏற்படுகிறது. காந்தி-அம்பேத்கர், அடிமையாக வாழ்கிற தமிழன் என வசனங்களிலும் வழக்கமான இயக்குநர் டச்.

இடைவேளைக்குப் பிறகு பாண்டிச்சேரி காட்சிகளைத் தவிர மற்றதெல்லாம் வழக்கமான கரகர மசாலா. இங்குதான் பா.இரஞ்சித் ஏமாற்றம் அளித்துவிடுகிறார். படம் முழுக்க ரஜினியும் வில்லனும் சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அடியாட்களும் செத்துக்கொண்டே இருக்கிறார்கள். பாண்டிச்சேரியில் கூட ரத்தக்களறி நிற்கவில்லை. ஆனால் எங்குமே காவல்துறைக்கு வேலை இருப்பதில்லை என்பது திரைக்கதையின் பலவீனம்.

வில்லனின் தொழிலுக்குக் கட்டக்கடைசியில் தான் உலை வைக்கிறார் ரஜினி. ஆனால், ஆரம்பத்திலிருந்தே ரஜினியால் வில்லனின் போதை மருந்துக் கடத்தல் தொழில் பாதிக்கப்படுவது போல ஒரு தோற்றத்தைக் கொண்டுவருவது உறுத்துகிறது. ரஜினி - வில்லன் மோதலில் எந்தவொரு திருப்பமோ புது உத்திகளோ இல்லை. திரும்பத் திரும்பச் சுடுவதுதான் இரு தரப்பினரும் செய்கிற உருப்படியான வேலை. இடையில் ரஜினி ஆட்களைக் கைக்குள் போட வில்லன் கோஷ்டி நினைப்பதும் திரைக்கதைக்கு உதவவில்லை. திடீரென இறுதிக்காட்சியில் மலேசியாவில் வாழ்கிற தமிழ் இனத்தைக் கேவலமாகத் திட்டித் தீர்க்கிறார் வில்லன். அதற்கு ரஜினி கொடுக்கும் பதிலடி உற்சாகம் ஊட்டினாலும், இந்தக் கோணத்தில் இருவருக்கும் இடையேயான பகை அழுத்தமாக வெளிப்பட்டிருந்தால் மோதலுக்கான காரணமும் காட்சிகளும் வலுவாக இருந்திருக்கும். பதிலாக இரண்டு டான்கள் தொழிலை முன்வைத்து மோதிக்கொள்கிறார்கள் என்கிற தட்டையான காரணத்துடன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இரண்டாம் பாதியில் முழுத் திருப்தி கிடைக்காமல் போய்விடுகிறது.

கபாலி - ரஞ்சித் ஸ்டைலில் ஒரு ரஜினி படம்.

]]>
ரஜினி, கபாலி, பா.இரஞ்சித், விமரிசனம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/15/w600X390/kabali323.jpg http://www.dinamani.com/cinema/movie-reviews/2016/aug/15/பா-இரஞ்சித்-இயக்கத்தில்-ரஜினி-நடித்த-கபாலி-2556847.html