Dinamani - தத்துவ தரிசனம் - http://www.dinamani.com/junction/thaththuva-dharisanam/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2577619 ஜங்ஷன் தத்துவ தரிசனம் 51. பாரதி தரிசனம் பத்மன் Friday, October 7, 2016 01:12 PM +0530
‘வாராதுபோல் வந்த மாமணி’ என்று அந்தக் கவிஞர், தத்துவ ஞானி, புதுயுக சித்தர் கூறிய வார்த்தை அவருக்கே மிகவும் பொருந்தும். “காலா என் காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்” என்று அந்த ஞானி பாடியதால் கோபமுற்று, காலன் அவரது உயிரை 40 வயது நிறைவதற்குள் பறித்துச் சென்றாலும், அவரது உணர்வு, கவிதைகளாலும், கருத்துகளாலும் காலனைக் காலடியில் போட்டுக் காலத்தை விஞ்சி நிற்கின்றன. பாரதத்தின் தத்துவ ஞானம் அனைத்தும் ஒரு மனித உருவில் திரண்டதைப்போல், பூமியில் வந்துதித்து குறுகிய ஆயுட்காலமேயானாலும் வாழ்வாங்கு வாழ்ந்து நிறைவடைந்த தன்னிகரில்லாத் தமிழன் அந்த மகான். அந்தப் பெருமகனார், “பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம்; நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்” என்று நமக்குக் கட்டளையிட்ட மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

பாரதி என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று கலைமகள் – அதாவது, சரஸ்வதி. சிறுவயதிலேயே சொற்சுவை, பொருட்சுவை நிறைந்த பாக்கள் புனைந்து பாரதி என்ற பட்டம் பெற்றதுடன், அந்தக் கலைமகளே வந்து உதித்தைப்போல மேதாவிலாசத்துடன் பல்வேறு விஷயங்கள் குறித்த கவிதைகள், கட்டுரைகளை எழுதி தமிழருக்கு ஞானமூட்டிய அவர் ஆண் வடிவிலான சரஸ்வதி என்பதில் சந்தேகமில்லை. பாரதிக்கு மற்றொரு பொருள், போர்க்களத்திலே பேயாட்டம் போடும் காளி. ‘பேயவள் காணெங்கள் அன்னை’ என்று அன்னை பராசக்தியைத் தாம் பாடியதைப்போலவே, சமூக அவலங்களைக் கண்டதும் அதனைக் கொன்றழிக்கும் கொற்றவையைப் போன்ற ஆவேசம் கொள்பவர் பாரதியார். அவ்வகையில், தம் பெயருக்கேற்ப இரு விதங்களிலும் சுப்பிரமணிய பாரதியார், பாரதியாகவே வாழ்ந்தார்.

பாரதிக்கு பன்முகங்கள் உண்டு. அவற்றில் கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர் என்பது மட்டுமே பலருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், தமிழின் முதல் சிறுகதை எழுத்தாளர், முன்னோடி நாவலாசிரியர், மிகச் சிறந்த கட்டுரையாளர், தலைசிறந்த பத்திரிகையாளர், தமிழில் கேலிச் சித்திரத்தையும் (கார்ட்டூன்) நேரடிக் களச் செய்தியையும் (ஸ்பாட் ரிப்போர்டிங்) முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர், பெண்களின் முன்னேற்றதுக்காக சக்ரவர்த்தினி, விஜயா போன்ற பத்திரிகைகளைத் தானே தொடங்கியவர், இவற்றையெல்லாம் தாண்டி மிகச் சிறந்த ஆன்மீகவாதி, யுகபுருஷர் என்பதை ஒருசிலர் மட்டுமே அறிந்திருக்கின்றனர். இதில், பாரதியின் ஆன்மீக தத்துவ முகத்தை தரிசனம் செய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.

பாரதி ஏழு வயதிலேயே அருட்கவிதைகளைப் பொழிந்த ஆசுகவி. பதினோரு வயதில் எட்டையபுரம் சமஸ்தானப் புலவர்கள் அவையில் சோதிக்கப்பட்டு, பாரதி என்ற பட்டம் பெற்றவர். இளம்வயதிலேயே எட்டையபுரம் சமஸ்தானத்தின் அரசவைக் கவிஞராக ஆனவர். சங்க இலக்கியங்கள், திருக்குறள் தொடங்கி சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம், ஆழ்வார் பாசுரங்கள், தேவாரம்-திருவாசகம், தாயுமானவர் பாடல்கள், வள்ளலாரின் திருவருட்பா வரையில் தமிழ் இலக்கியங்களைப் பயின்று, அவற்றின் வழியில் இலக்கியத்திலும் தத்துவத்திலும் தேர்ச்சி பெற்றவர். நெல்லை ஹிந்து காலேஜ் பள்ளியில் ஆங்கிலக் கல்வி பயின்றதால், அம்மொழியில் மிகுந்த தேர்ச்சி உண்டு.

இயற்கையைப் பாடும் ஷெல்லி, வேட்ஸ்வொர்த் ஆகியோரின் கவிதைகளை மட்டுமின்றி எமர்ஸென் உள்ளிட்டோரின் தத்துவங்களையும் ஆழப் பயின்றவர். காசியில் ஹிந்து கலாசாலையில் (கல்லூரியில்) சம்ஸ்கிருதமும், ஹிந்தியும் கற்றவர். வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள் ஆகியவற்றை வயிற்றுப் பிழைப்புக்காக மனனம் செய்யாமல், அவற்றின் உட்பொருள் உணர்ந்து படித்தவர். புதுவையில் இருந்தபோது பிரெஞ்சு மொழியையும் நன்கு பயின்றவர். பாரதிக்குப் பாரத மற்றும் அயல்நாட்டு மொழிகள் என 14 மொழிகள் தெரியும் எனக் கூறப்படுகிறது. ஆகையால், தாம் வாழ்ந்த காலகட்டத்தில் நாட்டு நடப்புகளை மட்டுமின்றி, உலக நடப்புகளையும் உடனுக்குடன் தெரிந்துகொண்டு தமது தாய்நாட்டுத் தமிழருக்கு வெளிப்படுத்தினார், அறிவுறுத்தினார், வழிகாட்டினார் பாரதி.

பாரதி உள்ளதை உள்ளபடி உரைப்பவர், போலித்தனங்களை அறவே வெறுப்பவர். ஆகையால், பாரதத்தின் பழம்பெருமைகளைப் புகழ்ந்து அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்றுரைத்த பாரதி, மூடப் பழக்கங்களைச் சாடவும் தவறவில்லை. அதேநேரத்தில், புதுமை என்ற பெயரால் பாரதத்தின் பழமையையெல்லாம் அழிக்க வேண்டும் என்ற மூர்க்கத்தனமும் அவரிடமில்லை. எதையும் சரியாகப் பகுத்தாய்ந்து, ஏற்பதை ஏற்று, தள்ளுவதைத் தள்ளுவது அவரது இயல்பு. சொல்லப்போனால், தமிழுக்குப் புரட்சி என்ற சொல்லைக் கொடுத்ததே பாரதிதான். ரஷியாவில் ஏற்பட்ட சமூக-அரசியல் மாற்றத்தைக் குறிப்பிடும்போது, ‘ஆகாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி’ என்று, ரெவல்யூஷன் என்ற ஆங்கில வார்த்தைக்கு புரட்சி என்ற பதத்தை முதன்முறையாகப் பயன்படுத்தினார். அதில்கூட, “மாகாளி கண்ணுற்றாள், ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி” என்றே பாடியிருப்பார். அதாவது, அதர்மத்தை அழிப்பதற்காக அன்னை பராசக்தியின் கோபப் பார்வையால் எழுந்தது அப்புரட்சி என்று பாரதீய தத்துவ மரபில் அதனைத் தெரிவித்திருப்பார்.

நாட்டை அடிமைப்படுத்தி, சிறுமைப்படுத்தி, பாழ்படுத்திய அந்நிய ஆங்கிலேயர்களை விரட்டுவதற்குத் தமிழர்கள் தயாராக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர் மகாபாரத்தில் ஒரு சிறு பகுதியை பாஞ்சாலி சபதம் என்ற பெயரில் தமிழின் புதிய காவியமாகப் படைத்தார். மரபைப் பேணி, புதுமை படைப்பதே பாரதியின் பாணி. தேச விடுதலை என்ற புதிய விஷயத்துக்கு, பாரதப் போருக்கு வழிவகுத்த பாஞ்சாலியின் சபதம் என்ற பழைமையைப் பாடுபொருளாகக் கொண்டு இலக்கியம் படைத்து, விடுதலை வேள்வித் தீயை வளர்த்தார். வீர சிவாஜி, மொகலாயப் படைகளை எதிர்த்து நாட்டின் சுதந்திரத்துக்கும் சனாதன ஹிந்து தர்மத்தைக் காப்பதற்கும் பாடுபட்டதை நினைவுகூர்ந்து, ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போரைத் தூண்ட, சத்ரபதி சிவாஜி தம் சைன்னியத்துக்குக் கூறியது என்ற நெடும்பாடலை இயற்றினார். இதேபோல், விடுதலைப் போருக்கு வேகம் கொடுக்க, ஔரங்கசீபின் மதவெறி கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிராகப் போராடிய சீக்கிய ஆன்மீகத் தலைவர் குரு கோவிந்தர் குறித்து அதே தலைப்பில் ஒரு நெடும்பாடல் எழுதியுள்ளார். கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரப் பாடல்களின் மெட்டுகளில் தொண்டு செய்யும் அடிமை, நம்ம ஜாதிக்கு அடுக்குமோ போன்ற விடுதலைப் போராட்டப் பாடல்களையும் எழுதினார்.

வேதமும், சம்ஸ்கிருதமும் ஒரு பிரிவினருக்கே, குறிப்பாக பிராமணருக்கு மட்டுமே உரியது என்ற நினைப்பைத் தகர்த்தவர் பாரதி. அனைத்து சாதியினருக்கும், ஏன் பெண்களுக்கும் வேதம் பயில்வதில் உரிமை உண்டு என்று குரல் கொடுத்தவர். பிராமணர் என்பது ஜாதி அல்ல, அது அடையக்கூடிய நிலை என்பதை நாற்குலம், பிராமணன் யார், ஜாதிக் குழப்பம் உள்ளிட்ட கட்டுரைகள் மூலம் தெளிவாக விளக்கியிருக்கிறார். குறிப்பாக, பிராமணன் யார் என்ற கட்டுரையில், பிறப்பின் அடிப்படையில் பிராமணன் என்று பெருமைபட்டுக்கொள்வோரின் போலித்தனங்களை சாடியிருப்பதுடன், வஜ்ர ஸூசி (வைர ஊசி) என்ற உபநிஷதத்தில் பிராமணன் என்ற நிலைக்கு உரிய விளக்கம் கூறப்பட்டிருப்பதை விண்டுரைக்கிறார்.

‘ஜீவனாலோ, தேகத்தாலோ, பிறப்பாலோ, அறிவாலோ, செய்கையாலோ, தர்ம குணத்தாலோ ஒருவன் பிராமணன் ஆகிவிடமாட்டான்’ என்று வஜ்ர ஸூசி உபநிஷதம் கூறுவதைக் குறிப்பிடுகிறார். அத்துடன், “எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம்போல கலந்திருப்பதும், அளவிடக்கூடாததும் (இயலாததும்), அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப்பொருளை, நேருக்கு நேராகத் தெரிந்து காமம், ரோகம் முதலிய குற்றங்கள் இல்லாதவனாய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கினவனாய், டம்பம், அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கிறானோ, இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி, ஸ்மிருதி, புராண, இதிகாசமென்பவற்றின் அபிப்பிராயமாகும். மற்றப்படி ஒருவனுக்கு பிராமணத்துவம் சித்தியாகாது என்பது (என்கிறது) உபநிஷத்து” என்று எடுத்துரைக்கிறார். “பிராமணராக வேண்டுவோர் மேற்கூறப்பட்ட நிலைமையை முயற்சிசெய்யக் கடவர்” என்று அக்கட்டுரையில் தெளிவாகவும், உறுதியாகவும் கூறியுள்ளார் பாரதியார்.

வெறும் பேச்சளவில் கொள்கையை நிறுத்திக்கொள்ளாமல், கனகலிங்கம் என்ற அரிசன வகுப்பைச் சேர்ந்தவருக்கு பூணூல் அணிவித்து, வேத மந்திரங்களைச் சொல்லிக்கொடுத்து அந்தணர் ஆக்கியவர் பாரதியார். சுவாமி தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜத்தின் மூலமும், ஸ்ரீநாராயண குரு ஸ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகம் மூலமும் அமைப்பு ரீதியாக மேற்கொண்ட சீர்திருத்தங்களை. தமிழகத்தில் தனியொரு மனிதனாக முன்னெடுத்தவர் பாரதியார். அதேநேரத்தில் பிராமணரல்லாதோர் கிளர்ச்சி (தற்காலத்து திராவிட இயக்கங்களின் முன்னோடி) என்ற பெயரில் அக்காலத்தில் தொடங்கிய கூத்துகளையும் ஜாதிபேத விநோதங்கள் என்ற கட்டுரை வாயிலாகக் கண்டித்திருக்கிறார்.

“எல்லா வகுப்பு மக்களுக்கும் சரியானபடி படிப்புச் சொல்லிக் கொடுத்தால், எல்லோரும் ஸமான அறிவுடையோராய் விடுவார்கள்” என்று சரியான திசையை அக்காலத்திலேயே ஜாதிக் குழப்பம் என்ற கட்டுரையில் தெளிவாகக் காட்டியிருக்கிறார். இதேபோல், பறையர் என்ற கட்டுரையில், ‘பறையர் என்ற வார்த்தை மரியாதைக் குறைவல்ல’ என்றும், ‘அவர்களை மிருகத்தனமாக நடத்துவதே இழிவானது’ என்றும், “பூர்வகாலத்தில் நமது ராஜாக்கள் போர் செய்யப்போகும்போது ஜயபேரிகை (பறை) கொட்டிச் சென்ற உத்தமமான தொழில் இந்த ஜாதியார் செய்துவந்தபடியால் இப்பெயர் வழங்குவதாயிற்று” என்றும், “பறையரை, பரை (அதாவது ஆதிசக்தி முத்துமாரி)யின் மக்களென்றும் பொருள் சொல்வதுண்டு” என்றும் விளக்கமாகக் கூறுகிறார் பாரதியார். இவ்வாறாக எல்லாவற்றிலும் உண்மையைக் கண்டு, நேர்மையாக எடுத்துரைத்தார். தெய்வப் புலவர் திருவள்ளுவர் அவதரித்த வள்ளுவர் ஜாதி, பறையர்களில் ஓர் உட்பிரிவு என்பதைப் பெருமையுடன் குறிப்பிடும் பாரதியார், வள்ளுவன்தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று மெய்சிலிர்க்க முரசறைகிறார். இதேபோல், பெண்ணடிமைத்தனத்தைச் சாடும் பாரதியார், நீதிநெறிகளையும், ஆன்மீகத்தையும் போதிக்கும் பெண்பாற்புலவர் ஔவையாரைக் கொண்டாடுகிறார்.

‘சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளீரோ?’ என்று கேட்டு, ஞானத்தின் நிறைவே தெய்வீக நிலை என்பதை உணர்த்துகிறார். புதிய ஆத்திசூடியில் தெய்வம் நீயென்றுணர் என்று உபநிஷதத்தின் உட்கருத்தை மிக அழகாக எடுத்துரைக்கிறார். மனிதர்கள் மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளும், இயற்கையும் ஆண்டவனே என்ற ஒப்பற்ற பாரதீய மெய்ஞானக் கருத்தை, “காக்கை குருவி எங்கள் ஜாதி நீள்கடலும் வானும் எங்கள் கூட்டம் நோக்கும் இடமெல்லாம் நாமின்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்” என்று வண்ணமுறப் பாடியுள்ளார். இதே கருத்தை “யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மையெல்லாம் உன் தெய்வ லீலையன்றோ” என்ற பாடலில் கூறி, அனைத்திலும் இறைநிலையைக் காணும் அனுபூதியை போதிக்கிறார். ஹிந்து மதத்திலே ஒரே தெய்வத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை எடுத்துரைக்கும்போது, அதன் உட்கருத்தை உணராமல், இறை வடிவில் ஒன்றை மட்டுமே தெய்வம் என்று கருதுகின்ற போக்கை பாரதியார் சாடியுள்ளார். அறிவே தெய்வம் என்ற கவிதையில், “வேடம் பல்கோடி ஓர் உண்மைக்கு உளவென்று வேதம் புகன்றிடுமே ஆங்கோர் வேடத்தை உண்மையென நீர் கொள்வீரென வேதம் அறியாதே” என்கிறார். உண்மைக் கருத்தைக் கூறாமல், மனிதர்களை மயக்க புதுப்புது மதங்களை உற்பத்தி செய்யும் மனிதரைப் பார்த்து அதே கவிதையில், “மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறுங் கதைகள் சேர்த்து பல கள்ள மதங்கள் பரப்புதற்கோர் மறை காட்டவும் வல்லீரோ?” என்று வினவுகிறார்.

சரி, பின்னர் யாரைத் தொழுவது? இந்தக் கேள்விக்கு இதே தலைப்பில், அதாவது யாரைத் தொழுவது? என்ற தலைப்பிலான கட்டுரையில் பதிலளித்திருக்கிறார் பாரதியார். “பல தேவராக (தெய்வங்களாக) வணங்காமல் ஒரே மூர்த்தியாக (உருவமாக) தெய்வத்தை உபாஸனை செய்வதற்கும் ஹிந்து மதம் இடம் கொடுக்கிறது. இவ்வித உபாஸனை சித்தத்தை எளிதிலே ஒருமுகப்படுத்தும். பக்திக்கு இதுவே சுலபமான வழி. ஆதலால் வீர சைவன், வீர வைஷ்ணவன் இவர்களுடைய உபாஸனை வேத விரோதமில்லை. இதர தெய்வங்களை விஷயம் தெரியாமல் பழித்தால், அதுதான் வேத விரோதம்” என்கிறார் பாரதியார். இதே கட்டுரையில், “வேத புராணங்களில் சொல்லப்படும் மூர்த்திகளெல்லாம் ஒரே பரமாத்மாவின் கலைகள் (அம்சங்கள்) என்பதை ஹிந்துக்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது” என்றும் அறிவுறுத்துகிறார்.

இதேபோல், கோவில் எதற்காக என்பதை இனி என்ற தலைப்பிலான கட்டுரையில் விளக்குகிறார். “கடவுள் எங்கும் இருக்கிறாரே, எல்லாம் கடவுள்தானே, ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ, செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் (ஒற்றுமை) ஏற்படுவதற்காக” என்கிறார் பாரதியார். அதே கட்டுரையில், “கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறதென்று நம்பி, நம்மைச் சூழ்ந்த ஜனங்களிடம் தெய்வம் இல்லை என்று நம்பலாமா?” என்றும் கேள்வி கேட்கிறார்.

“கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது. இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து – ‘தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்’ என்பது முன்னோர் கொள்கை. உன்னுடைய ஆத்மாவும், உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை – எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம். ஒன்றுகூடிக் கடவுளை வணங்கப்போகுமிடத்து, மனிதரின் மனங்கள் ஒருமைப்பட்டு, தமக்குள் இருக்கும் ஆத்ம ஒருமையை அவர்கள் தெரிந்துகொள்ள இடம் உண்டாகுமென்று கருதி முன்னோர் கோவில் வகுத்தார்கள். ஊரொற்றுமை கோவிலால் நிறைவேறும். வீட்டுக்குள் தனியாகச் சிலைவைத்துக் கும்பிடுவது குடும்ப ஒருமை உண்டாகும் பொருட்டாக” என்கிறார் பாரதியார். இதனைவிட கோவில் வழிபாட்டுக்கான விளக்கத்தை எளிதாகவும், உறுதியாகவும் யாரேனும் சொல்ல இயலுமா?

ஆண், பெண் பேதத்தை உடைக்கும் விதத்தில் இதே கட்டுரையில் அவர் கூறியுள்ள ஆன்மீகக் கருத்துகள், தினசரி பாலியல் பலாத்காரக் கொடுமை நிகழும் இன்றைய காலகட்டத்தில் நிச்சயம் படித்துப் பின்பற்றப்பட வேண்டியவை. “கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்கிறேன். ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம் உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களிடத்தே வெளிப்படாமல் (வெளியே தெரியாமல்) இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளிவீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு.

ஆண் தெய்வமெல்லாம் நீ, உன் பிதா, உன் சகோதரர், உன் மகன், உன்னைச் சேர்ந்த ஆண் மக்கள் அடைய வேண்டிய நிலைமையைக் குறிப்பிடுகின்றன. சிவன் நீ, சக்தி உன் மனைவி; விஷ்ணு நீ, லக்ஷ்மி உன் மனைவி; பிரம்மா நீ, ஸரஸ்வதி உன் மனைவி. இதைக் காட்டி மிருக நிலையில் இருந்து மனிதரைத் தேவ நிலையில் கொண்டுசேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோவில்களாம்” என்கிறார்.

இதை பூசாரிகள் மறைக்கிறார்கள் என்றும் “கும்பிடுவோர் நித்ய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லது என்று பூசாரி யோசனை பண்ணுகிறான். பிறரை அடிமை நிலையில் வைக்க விரும்புபவரிடம் தெய்வாம்சம் ஏற்படாது. அப்படி இருக்கப் பல பூசாரிகள் தம்மிடம் தெய்வாம்சம் இருப்பதைப்போல நடித்து ஜனங்களை வஞ்சனை செய்து பணம் பிடுங்குகிறார்கள்” என்று உண்மையைப் பட்டவர்த்தனமாகப் போட்டுடைக்கிறார் பாரதியார். “கோவில் குருக்களுக்கு இனி நம்முடைய தேசத்து ஜனங்கள் ஒத்து நடக்க வேண்டுமானால், ஜனங்களிடம் பூசாரிகள் எதையும் மறைக்காமல், எந்த விஷயத்திலும் ஜனங்களை ஏமாற்றாமல், விஷயத்தைச் சொல்ல வேண்டும்” என்றும் கட்டளையிடுகிறார்.

வேதமும், கோவில்களும் மனிதர்களை தெய்வீக நிலைக்கு உயர்த்துவதற்காக என்பதை விளக்கி, அவற்றை சிலர் தங்கள் வயிற்றுப் பிழைப்புகாகக் கெடுத்துவிட்டார்கள் என்பதையும் கூறி அந்த நிலையைத் திருத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்ற பாரதி மிகப் பெரிய சீர்திருத்த சித்தர் அல்லவா? ஆனால், கோவில்களே கூடாது என்று முதலில் பேசி, பின்னர் அந்தக் கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதே நமது கவலை என்று கூறி, கோவில்களை வளைத்துப்போட்டு, இப்போது கோவில்களில் பல்வேறு கொள்ளைகளுக்கு வழிவகுத்திருக்கும் பகுத்தறிவு சீர்திருத்தவாதிகளை என்னென்று சொல்ல? பாரதியின் வழியைப் பின்பற்றி முன்போல் தெய்வீக நிலைக்கு உயர வேண்டிய தமிழன், பாதை தவறி மிருகத்துக்கும் கீழாக அல்லவா போய்க்கொண்டிருக்கிறான்! பாரதியின் வரிகளிலேயே கூறினால், “விதியே விதியே என் தமிழச் சாதியை என்செய்ய நினைத்தாய்?” என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. நிற்க.

தமிழர்களை மதிமயக்கும் ஆரிய-திராவிட இனவாதப் புளுகை ஓரங்கட்டியவன் பாரதி. ‘அச்சம் கொண்டவன் ஆரியனல்லன்’ என்று முழங்கியவன். ஆரிய என்றால் உயர்ந்த, சிறந்த என்ற பொருள்தான் உண்டு என்பதும், இந்த நாடே ஆரிய நாடு இங்குள்ள தமிழர் உள்பட அனைவரும் ஆரியர் (உயர்ந்தவர்) என்பதும் பாரதியார் கருத்து. இந்திரன் என்றால் ஆரியர்களின் தலைவன், விருத்திரன் என்பவன் திராவிடன் அல்லது இந்தியப் பழங்குடித் தலைவன் என்றெல்லாம் ஆங்கிலேயரும், அவர்களைப் பின்பற்றி அடிவருடிகளான நமது இந்தியரும் அரசியல் பிழைப்புக்காக பொய் பேசினர், பேசி வருகின்றனர்.

உதாரணத்துக்கு, ஒரு ரிக் வேதச் செய்யுள் விருத்திரன் கட்டிய அணையை வஜ்ராயுதத்தால் இந்திரன் உடைப்பதைக் குறிப்பிடுவதாகவும், இது ஆரிய-திராவிடப் போர் என்றும் சில ஐரோப்பிய ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். ஆனால், பாரதியார் உண்மையைப் போட்டு உடைக்கிறார். இந்திரன் என்பது இந்திரியங்களின் தலைவனாகிய மனத்தைக் குறிக்கிறது. இந்திரனின் ஆயுதம் எனப்படும் வஜ்ராயுதத்துக்கு உறுதியான, பலம் வாய்ந்த ஆயுதம் (கருவி) என்று பொருள். விருத்திர என்றால் தடை என்று பொருள், ஆகையால் விருத்திரன் என்ற அசுரன் அறியாமையாகிய தடையைக் குறிக்கிறது. ஞானம் எனப்படும் தெய்வீக அறிவாகிய நதியை நாம் அணுகவிடாமல் விருத்திரன் ஆகிய அறியாமை தடுக்கிறது. அந்த அறியாமையை மனமாகிய இந்திரனின் உறுதியான ஆயுதத்தைக் கொண்டு, அதாவது மனஉறுதி, விடாமுயற்சி ஆகியவற்றால் ஆன பலமான வஜ்ராயுதத்தைக் கொண்டுத் தாக்கினால் தடை நீங்கி நமக்கு ஞானம் கிடைக்கிறது என்பதுதான் அந்த ரிக் வேத ஸ்லோகத்துக்கு உரிய பொருள் என்பதை தமது கட்டுரையொன்றில் பாரதியார் விளக்கியிருக்கிறார்.

பாரத ஜாதி என்ற கட்டுரையில், “கிறிஸ்தவர்களாயினும் பார்ஸிகளாயினும் மகம்மதியராயினும், எங்கிருந்து வந்து எந்த இஷ்ட தெய்வத்தைக் கொண்டாடியபோதிலும், பாரத பூமியிலே பிறந்து வளர்ந்து இதையே சரணாகக் கொண்ட மனிதர்களையெல்லாம் பாரத ஜாதியிலே சேர்த்துக் கணக்கிட வேண்டும். இது ஒரே ஜாதி, பிரிக்க முடியாதது, அழிவில்லாதது. இதற்கு ஆதாரமும் மூலபலமுமாவது யாதெனில், ஆரிய ஸம்பத்து அதாவது ஆரியரின் (நமது மூதாதையரின்) அறிவும் அந்த அறிவின் பலன்களும்” என்றுரைக்கும் பாரதியார், “அந்த ஆரிய ஸம்பத்திலே (செல்வத்திலே) துருப்பிடிக்க இடம் கொடுத்தால் பாரத ஜாதியை செல் அரித்துவிடும்” என்றும் எச்சரிக்கிறார். அனந்த சக்தி என்ற மற்றொரு கட்டுரையில், “புராதன ஸம்பிரதாயமென்பதால் மட்டுமே ஒன்று பொய்யாகிவிட மாட்டாது, புதியதென்பதால் மாத்திரமே ஒன்றை மெய்யாகக் கொண்டுவிடுதலும் பிழை. ஆராய்ந்து, அனுபவத்தால் பார்க்குமிடத்தேதான் ஒரு விஷயத்தின் மெய்ம்மையும் பொய்ம்மையும் விளங்கும்” என்கிறார் பாரதியார். இதுவன்றோ மெய்யான பகுத்தறிவு!

பாரதி எதையும் பகுத்தறிந்து பார்க்கும் ஆன்மீகவாதி என்பதற்கு, அவரது பகவத் கீதை முன்னுரையே சான்று. கீதைக்கான அந்த முன்னுரையே தனியொரு நூல்போலத் திகழும் மகத்துவம் கொண்டது. அந்த முன்னுரையின் இரண்டாம் அத்தியாயத்தில், “வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது. ரிக் வேதத்திலுள்ள புருஷ சூக்தம் சொல்கிறது இஃது எல்லாம் கடவுள் என்று. இந்தக் கருத்தையொட்டியே கீதையிலும் பகவான், எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையவன் என்கிறார்” எனப் பாரதி மொழிகிறார். முன்னுரையின் ஐந்தாம் அத்தியாயத்தில், “பகவத் கீதை தர்ம சாஸ்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கிறார்கள். அதாவது, மனிதனை நன்கு தொழில் புரியும்படி தூண்டிவிடுவதே அதன் நோக்கமென்று பலர் கருதுகிறார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமான மோக்ஷ சாஸ்திரம். மனிதன் சர்வ துக்கங்களில் இருந்தும் விடுபடும் வழியைப் போதிப்பதே இந்த நூலின் முதல் கருத்து” என்றுரைக்கிறார். “தொழில் செய் (கடமையைச் செய்) என்று மட்டுமே கிருஷ்ணர் கூறவில்லை, பற்று நீக்கித் தொழில் செய் இதுதான் கீதையின் முக்கியப் பாடம்” என்றும் எடுத்துரைக்கிறார்.

இங்ஙனம் மோக்ஷத்தை அடைய விரும்புபவனுக்கு மனமே சத்துரு அதனை அடக்க வேண்டும் என்றும், பக்தியும் அனைத்து உயிர்களுக்கு அன்பு செய்தலுமே கீதை உணர்த்தும் வழி என்றும் அடுத்த அத்தியாயங்களில் விளக்குகிறார். முன்னுரையின் 9-ஆவது அத்தியாயத்தில் கீதையின் ரகசியத்தை விண்டுரைக்கிறார் பாரதியார். ‘துரியோதனாதிகள் காமம், குரோதம், சோம்பல், மடமை, மறதி, கவலை, துயரம், பயம் முதலிய பாவ சிந்தனைகள். அர்ஜுனன் ஜீவாத்மா, ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா. இந்தப் பாவ சிந்தனைகளைக் கொன்றழிக்குமாறு ஜீவாத்மாவுக்கு பரமாத்மா போதிப்பதே கீதை’ என்கிறார்.

முன்னுரையின் 12-ஆவது அத்தியாயத்தில் துறவு மாத்திரமே மோக்ஷத்துக்கு வழியில்லை. இல்லறமும் ஏற்றதே என்பதை கீதை கூறுகிறது என்பதை பல்வேறு வாதங்களைக் கூறி பாரதியார் நிறுவியிருப்பது அவரது ஞானத்துக்கும் மேதமைக்கும் சான்று. அவரது கூற்றுகளில் சிலவற்றைக் காண்போம் –

“எங்கும் கடவுள் நிறைந்திருக்கிறார். ஸர்வமிதம் பிரஹ்ம – உலகமெல்லாம் கடவுள் மயம் என்பதே வேதத்தின் கொள்கை. இங்ஙனமாயின், வீட்டிலிருந்து பந்துக்களுக்கும் உலகத்தாருக்கும் உபகாரம் செய்துகொண்டு மனுஷ்ய இன்பங்களையெல்லாம் தானும் பூஜித்துக்கொண்டு, கடவுளை நிரந்தரமாக உபாசனை செய்து, அதனால் மனிதத் துன்பங்களினின்றும் விடுபட்டு, ஜீவன் முக்தராய் வாழ்தல் மேலான வழியா? அல்லது காட்டிலேபோய், உடலை விழலாக வற்றடித்து மடிந்தும், புலி, பாம்பு முதலிய துஷ்ட ஜந்துகளுக்கு இரையாய் மடிந்தும், கடவுளைத் தேட முயலுதல் சிறந்த உபாயமா? சூரியனைக் காணவில்லையென்று ஒருவன் தன் கைப்பெட்டிக்குள்ளே சோதனை போடுதலை ஒக்குமன்றோ, ஒருவன் கடவுளைக் காண வேண்டி, காடுகளிலும் இருண்ட முழைகளிலும் புகுந்து வாழ்தல்?

வேதகாலத்திலே இந்தத் துறவு வழி ஹிந்துக்களுக்குள்ளே கிடையாது. (ஆனால்) வேதகாலத்தில் சந்நியாஸம் நமக்குள்ளே இருப்பதாக சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். வசிஷ்டர், வாமதேவர் முதலிய வேதரிஷிகள் அத்தனைபேரும் மணம் புரிந்துகொண்டு மனைவி, மக்களுடனேயே இன்புற்று வாழ்ந்தனர். புலன்களை அடக்கியாளும் பொருட்டாக அக்காலத்து ரிஷிகள் பிரம்மசாரிகளாக இருந்து நெடுங்காலம் பல கொடிய தவங்கள் செய்ததுண்டு. ஆனால் குறிப்பிட்ட காலம் வரை தவங்கள் செய்து முடித்துப் பின்பு இல்வாழ்க்கையுட் புகுதலே மகரிஷிகளுக்குள்ள வழக்கமாக நடைபெற்று வந்தது” என்றுகூறி ‘இல்லறமல்லது நல்லறமில்லை’ என்பதை எடுத்துச் சொல்லி, பகவத் கீதை அனைவரையும் துறவறம் பூணச் சொல்லவில்லை இல்லறத்திலும் முறையாக வாழ்ந்து மோட்சம் அடையலாம் என்பதையே போதிக்கிறது என்று நிறுவுகிறார். இதில் குறிப்பிடப்பட வேண்டியது, தமது குருவின் (சகோதரி நிவேதிதை) குருவாகிய சுவாமி விவேகானந்தரின் கருத்தையே தனது மேதாவிலாசத்தால் நாகரீகமாக மறுதலிக்கிறார். இதற்கு, ‘சுவாமி விவேகானந்தர் சம்ஹிதை எனப்படும் வேத மந்திரங்களைவிட, வேதத்தின் பிற்சேர்க்கைகளாகிய உபநிஷத்துகளைத்தான் மிகவும் பயின்றார்’ என்ற காரணத்தையும் பாரதி கூறுகிறார்.

மேலும், “பாரத தேசத்தின் புத்த மதம் ஜீவ காருண்யம், சர்வஜன சமத்துவம் என்ற இரண்டு தர்மங்களையும் நெடுங்தூரம் ஊன்றும்படி செய்தது. ஆனால், உலக வாழ்க்கையாகிய ஜகத்தின் ஒளி போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து, அவர்களுக்குக் கீழே மற்ற உலகத்தை அடக்கிவைத்து உலகமெலாம் பொய் மயம், துக்க மயம் என்பதே ஞான நெறியாக ஏற்படுத்தி மனித நாகரிகத்தை நாசம் செய்ய முயன்றதாகிய குற்றம் புத்த மதத்துக்கு உண்டு” என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் பாரதியார். இறுதியாக தமது பகவத் கீதையின் முன்னுரையை இவ்வாறு நிறைவு செய்கிறார் – “உலகமெலாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தை கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதே எனில், மாறுதல் மாயையின் இயற்கை. மாயை பொய்யில்லை, அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன. நன்மைகள் செய்தற்கும், எய்துதற்கும் உரியன. சரணாகதியால் – கடவுளிடம் தீராத, மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவன்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால் விடுதலை அடைவீர்கள். சத்திய வீரத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மையை அடைவீர்கள். இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது” என்று அற்புதமாக எடுத்துரைக்கிறார் பாரதியார்.

ஆன்மாவுக்கு ஆண், பெண் பேதமில்லை என்பதை அவரைப்போல புரட்சிகரமாக யாரும் சொன்னதில்லை. இறைவனை வணங்கும் அடியார்களும் ஆழ்வார்களும் தாம் வணங்கும் பரமாத்மாவாகிய கடவுளை ஆணாகவும், ஜீவாத்மாவாகிய தங்களைப் பெண்களாகவும் கருதி பாடல்களை இயற்றி வழிபட்டுள்ளனர். உயர்ந்த ஆன்மாவாகிய பரமாத்மா ஆண், தாழ்ந்த ஆன்மாவாகிய ஜீவாத்மா பெண் என்பது அவர்களை அறியாமல் ஊறிப்போன நினைப்பு. ஆனால், பாரதியோ தாழ்ந்த ஆன்மாவாகிய ஜீவாத்மாவை ஆணாகவும், உயர்ந்த ஆன்மாவாகிய பரமாத்மாவை பெண்ணாகவும் கொண்டு, தனது இஷ்ட தெய்வங்களில் ஒன்றாகிய கண்ணனை கண்ணம்மாவாக்கி பாடல்கள் புனைந்துள்ளார். ஆன்மாவுக்கு உயர்வு தாழ்வோ, பாலின பேதமோ இல்லை என்பதையும் அற்புதமாய் அறிவுறுத்தியுள்ளார். அவரது கண்ணன் பாட்டுகளைப் போலவே கண்ணம்மா பாட்டுகளும் சாகாவரம் பெற்றவை.

பாரதியார், வள்ளலாரைப்போல சமரச சன்மார்க்கவாதிதான். அதேநேரத்தில் தனி வழி காணாமல் பாரதீயத்துக்கு ஆதாரமாக விளங்கும் வேத நெறியையே வாழ்க்கை நெறி என்று உபதேசித்தார். ஆயினும், அதில் காலப்போக்கில் கலந்துவிட்ட கசடுகளை மென்று முழுங்கி ஆதரிக்காமல், தூ என்று உமிழ்ந்தார். ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் என்று தொடங்கி யேசு கிறிஸ்து குறித்து கவிதை பாடியும், யேசு கிறிஸ்துவின் வார்த்தை, சிலுவை என்று கட்டுரைகளை எழுதியும், இதேபோல் அல்லா அல்லா அல்லா என்று கவிதை பாடியும், இஸ்லாத்தின் மகிமை, முஹம்மது நபி குறித்து சொற்பொழிவாற்றியும் கட்டுரை வரைந்தும், ஹிந்து தர்மத்தின் அடிப்படைக் குணமாகிய சமதர்ம சமபாவம் என்கிற நல்லிணக்கத்தைக் காட்டியர் பாரதி. ஜாதி, மத வித்தியாசம் பாராட்டிய அக்காலத்தில் முகம்மதியர் ஒருவரின் டீக்கடைக்கு முன்பு இருக்கை போட்டு அமர்ந்து அக்கடையின் தேநீரை அருந்தி பட்டவர்த்தனமாக ஜாதி, மதப் பாகுபாடுகளை உடைத்தெறிந்தவர். அதேநேரத்தில், மனிதர்களை ஏமாற்றியோ, பலவந்தப்படுத்தியோ கட்டாய மதமாற்றம் செய்வதையும், மதத்தின் பெயரிலான அட்டூழியங்களையும் அவர் சாடுவதற்குத் தயங்கியதில்லை. இதற்கு ஓர் உதாரணம், கிறிஸ்தவராக மதம் மாறிய தமது நண்பன் சுரேந்திரநாத் ஆர்யாவுக்கு அவர் எழுதிய கடிதம்.

பாரதியின் மேதமைக்கும் ஞானத்துக்கும் மற்றோர் சிறந்த எடுத்துக்காட்டு, அவரது ஞானரதம் என்ற குறுநாவல். இதில் ஆன்மீகத் தத்துவங்களை மட்டுமல்ல, மிகச் சிறந்த சமூக, வாழ்வியல் கருத்துகளையும் பாரதியார் நகைச்சுவையாகவும், நளினமாகவும் விளக்கியிருக்கிறார். அவரது ஞான ரதத்தில் நாமும் ஏறிப் பயணிப்பது சுகானுபவம், வாழ்வில் உய்வதற்கான உபாயம்.

பாரதி ஒரு தீர்க்கதரிசி. பாரதம் பிரிவினைக்கு ஆட்படும் என்பதை முன்பே உணர்ந்ததைப்போல, “சேதமில்லாத ஹிந்துஸ்தானம் அதனை தெய்வமென்று கும்பிடடி பாப்பா” என்று பாடியுள்ளார். இதேபோல் சீனர்கள் நமக்குத் தொல்லை கொடுக்கக்கூடியவர்கள் என்பதை மற்றொரு பாடலில், “சீனத்தரைப் போல் பல தீங்கிழைப் பாரோ?” என்ற கேள்வி வரிகளால் உணர்த்தியுள்ளார். “காசியில் புலவர் செப்பிடும் உரைதனை காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்று வானொலி குறித்தும், “சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்று வானவியல் ஆய்வு குறித்தும் அக்காலத்திலேயே பாடியுள்ளார். வங்கத்துள் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம், சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம், வெள்ளிப் பனிமலை மீது உலாவுவோம், அடிமேலைக் கடல் முழுவதும் கப்பல் விடுவோம் என்பவையெல்லாம் பாரத தேசமென்று நாம் தோள் கொட்டுவதற்காக, நமது எதிர்காலத்துக்காக அவர் இட்டுள்ள கட்டளைகள்.

ஜனவகுப்பு என்ற கட்டுரையில் அவர் நமக்கு நேரடியாக இட்டுள்ள கட்டளைக் காண்போம் – “மனிதனுக்கு மனிதன் இயற்கையில் விரோதம் என்ற நிலையில் உங்களுடைய மூடத்தனமான மனுஷ்ய நாகரிகம் வந்து சேர்ந்திருக்கிறது. இதை மாற்றி, அன்பை மூலாதாரமாக்க வேண்டும். முதலாவது, சிலருக்குச் சோறு மிதமிஞ்சியிருக்க, பலர் தின்னச் சோறில்லாமல் மடியும் கொடுமையைத் தீர்த்துவிட வேண்டும்.... அன்புதான் இதற்கெல்லாம் தீர்ப்பு (தீர்வு). எல்லா மனிதருக்கும், ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தைகளுக்கும், வெள்ளைக்கும், மஞ்சளுக்கும், செம்புக்கும், கருநிறத்து நீக்ரோவருக்கும் – சகலருக்கும் உள்ளே பரமாத்மா பரம புருஷனாகிய நாராயணனே அந்தர்யாமியாக நின்று வெளித்தொழில்களை நிகழ்த்துகிறான். ஆதலால் மானிடரே, சகோதர உணர்ச்சியே தீர்ப்பு... அன்புண்டானால் இன்பமுண்டு என்று புத்த பகவான் கண்டுபிடித்துச் சொன்னார்... அன்பு கொள்கையில் இருந்தால் போதாது, செய்கையில் இருக்க வேண்டும்” என்கிறார் பாரதி.

பாரதியார் ஒரு விநோதக் கலவை. அவரிடம் பாரதீய மெய்யியல் தத்துவங்கள் அனைத்தும் இணைந்து சமரச ஓடையாகப் பிரவாகிப்பதைக் காணலாம். அவர் மாயையை ஏற்காத அத்வைதி, வழிபடு கடவுளை வலியுறுத்தாத விசிஷ்டாத்வைதி, சக்திக்கு சரிபாதி அளித்த சைவர், கண்ணனையை கண்ணம்மாவாக்கிய வைஷ்ணவர், தாந்திரீகம் பேசாத சாக்தர், பழைமையைப் பேணுகின்ற புரட்சிவாதி, புதுமையை வரவேற்கும் மரபியல்வாதி, இறைவனை உணர்த்தும் சோஷலிஸவாதி, உலகை வெறுக்காத சித்தர், இவற்றையெல்லாம் தாண்டி ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் யுகபுருஷர்.

மானுட வாழ்வின் நோக்கத்தை, விநாயகர் நான்கணி மாலையின் 8-ஆவது பாடலில், அகவல் பா வகையில், ஆன்மீக ஒருமைப்பாட்டு உணர்வுடன் அவர் பாடியுள்ளார்.

கடமை யாவன: தன்னைக் கட்டுதல்,
பிறர்துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல்,
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்,
நாரா யணனாய், நதிச்சடை முடியனாய்,
பிறநாட் டிருப்போர் பெயர்பல கூறி
அல்லா! யெஹோவா! எனத்தொழுது அன்புறும்
தேவரும் தானாய், திருமகள், பாரதி,
உமையெனும் தேவியர் உகந்த வான்பொருளாய்,
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்,
இந்நான் கேஇப் பூமியில் எவர்க்கும்
கடமை யெனப்படும்; பயனிதில் நான்காம்;
அறம்,பொருள், இன்பம், வீடெனும் முறையே.

தன்னை ஒழுங்குபடுத்துவதே அறம், பிறர் துயர் தீர்ப்பதற்காக ஈட்டப்படுவதே பொருள், பிறர் நலம் நாடுவதே இன்பம், இம்மூன்றையும் ஆற்றி, பல்வேறு பெயர்களில் விளங்கும் பரம்பொருளாகிய இறைவனைப் போற்றித் தொழுவதே வீடு. ஆகா! பாரதீய மெய்ஞானத்தின் அடிப்படைப் பண்புகள் நான்கையும் எத்தனை எளிமையாய், அருமையாய் விளக்குகிறார் நம் பாரதியார்.
அவர் கூறிய தோத்திரம் ஒன்றுடன் இக் கட்டுரையை நிறைவு செய்கிறேன். அன்னையை வேண்டுதல் என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள இப்பாடலை, எவரொருவரும், தான் விரும்பும் எந்தக் கடவுளின் (கடவுளின் எந்த வடிவின்) முன்பும் கூறிப் பிரார்த்திக்கலாம்:

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம் பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்.

பாரதீய மெய்ஞானத் தேடலாகிய தத்துவ தரிசனம் பாரதியாரோடு நிறைவுகிறது. ஆயினும், இவற்றின் வழியில் நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன. அவை பற்றிய சிறு அலசலுடன் இக்கட்டுரைத் தொடர், சம்பிரதாயமான முறையில் அடுத்த அத்தியாயத்துடன் சம்பூர்ணமடைகிறது.

]]>
http://www.dinamani.com/junction/thaththuva-dharisanam/2016/oct/05/51-பாரதி-தரிசனம்-2577619.html
2560509 ஜங்ஷன் தத்துவ தரிசனம் 47.  அடக்கு, ஆற்றல் பெறு பத்மன் Thursday, September 8, 2016 04:06 PM +0530
தாந்திரீக மார்க்கம் சக்தி வழிபாடு மூலம் வாழ்வில் நிறைவு பெற்று சிவத்தை அடைவதற்கான வழியைச் சொல்கிறது என்றால், சித்த மார்க்கம் யோகப் பயிற்சிகள் மூலம் தனக்குள் சிவனை அறிந்துகொண்டு, அட்டமகா சித்திகள் எனப்படும் அபார ஆற்றலைப் பெற்று முக்தி பெறுவதற்கான வழியைக் கூறுகிறது. சடங்குகளுக்கும் பூஜை, விரதம் உள்ளிட்ட வழிபாடுகளுக்கும் தந்திரம் முக்கியத்துவம் தருகிறதென்றால், சடங்குகளையும் மூடநம்பிக்கைகளையும் கண்டித்து, தியானத்தையும், யோக சாதனைகளையும் சித்த சம்பிரதாயம் வலியுறுத்துகிறது. தந்திரம் பாமர பொது மக்களுக்கான வழிமுறை என்றால், சித்த மார்க்கம் அறிவார்ந்த தனிமனித மேம்பாட்டுக்கான வழிமுறையாக விளங்குகிறது.

தலைமுடி சடைமயமாய், உடலெல்லாம் சாம்பலை (விபூதியை) அள்ளிப்பூசிக்கொண்டு, அரை நிர்வாணமாக அல்லது சில சமயங்களில் முழு நிர்வாணமாக அலைபவர்கள் தாந்திரீக மார்க்கிகளான காபாலிகர்கள். பார்வைக்கு அவர்களைப்போலவே இருப்பார்கள் சித்த சம்பிரதாயத்தினர். ஆனால் வழிமுறையில் இருவரும் நேர் எதிரானவர்கள். சித்த சம்பிரதாயத்தினருக்கு பாரதத்தின் வடபகுதியில் நாத சம்பிரதாயத்தினர் அல்லது நாத பந்திகள் என்றும் பெயர் உண்டு. சம்பிரதாயம்,  மார்க்கம், பந்த் ஆகிய சொற்களுக்கு கடைபிடிக்கப்படும் வழிமுறை என்று பொருள்.
பாசுபதம், லகுலீசம், காபாலிகம், காளாமுகம், கௌலம் என தாந்திரீகத் தொடர்புடைய சைவப் பிரிவுகள் அனேகம் உண்டு. ஆனால், பெரும்பாலும் சைவர்களான சித்த சம்பிரதாயத்தினர் யோக மார்க்கத்தையே முன்னிறுத்துகின்றனர். சித்தி என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு குறிப்பிட்ட ஆற்றல் நிலையை அடைவது என்று பொருள். அதன்படி தவம் அல்லது யோக வலிமையால் வியத்தகு ஆற்றல்களைப் பெற்றவர்கள் சித்தர்கள் ஆவர். தமிழில் சித்தம் என்பதற்கு சிந்தனை, எண்ணம் என்று பொருள். அதன்படி சித்தர்கள் எனப்படுவோர் தமது சிந்தனைகளை அடக்கி, ஒருநிலைப்படுத்தி, யோகப் பயிற்சிகள் மூலம் குறிப்பிட்ட ஆற்றல்களைப் பெற்றவர்கள் ஆவர். ஆக, தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் கூறப்படும் சித்தர் என்ற சொல்லுக்கான வேர்ச் சொற்களின் அர்த்தம் சற்று வேறாக இருந்தாலும், குறிக்கும் பொருள் ஒன்றுதான். தன்னை அறிந்து, அடக்கி, ஆற்றல் பெற்றவர்களே சித்தர்கள் ஆவர்.

சித்தர்களில் மிக முக்கியமானவர்கள் நாதர்கள் என்று வட மாநிலங்களில் அழைக்கப்படுகின்றனர். நாத் அதாவது நாதன் என்பதற்கு தலைவன், பாதுகாப்பவன்,  பராமரிப்பவன், வளர்ப்பவன், கணவன் என்று பல பொருள்கள் உண்டு. மனிதரிடமுள்ள ஆற்றலில் மேம்பட்டவர்கள் என்பதாலும் அந்த ஆற்றலை மேம்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றுவதாலும் சக்திபாதர்கள் என்றும் இவர்களுக்குப் பெயர் உண்டு. யோகி, முனி, தவசி என்றும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

சித்தர்களின் வழிமுறை மிக எளிமையானது. மிகவும் பொருள் பொதிந்த தத்துவங்களைக்கூட சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் எடுத்துரைத்தார்கள். தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சித்தர்களில் யோக சூத்திரம் இயற்றிய  பதஞ்சலி தவிர மற்ற எவரும் சம்ஸ்கிருதத்தில் இலக்கியம் மொழியவில்லை. உள்ளூர் மக்களின் மொழியிலேயே தங்களது கருத்துகளையும், அறிவுரைகளையும் கூறினர். ஆன்மிகம் மட்டுமின்றி மருத்துவம், தற்காப்புக் கலை, ரசவாதம்  (ரசாயனம் அல்லது இன்றைய வேதியியலுக்கு முன்னோடியான அல்கெமி), பௌதீகம் (இயற்பியல்), வான சாஸ்திரம் (வானியல்), ஜோதிடம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளிலும் சித்தர்கள் திறமை பெற்றிருந்தனர். பெரும்பாலும் சித்தர்கள் குருவிடமிருந்து நேரடியாக உபதேசமும் கடுமையான சோதனைகளுக்குப் பிறகான பயிற்சிகளையும் பெற்ற பின்னரே, சித்த சம்பிரதாயத்தில் இணைக்கப்படுகின்றனர். ஆகையால் ஒரு வகையில் வட்டார மொழிகளில் மிகவும் எளிமையான கருத்துகளைக் கூறியுள்ள சித்தர்கள், மறு வகையில், வட்டார மொழியில் இருந்தாலும் புரிந்துகொள்ளக் கடினமான ரகசியக் குறியீடுகள் அடங்கிய மருத்துவ, ஜோதிட, அறிவியல், தற்காப்புக் கலை குறித்த குறிப்புகளைக் கொடுத்துள்ளனர். இவையெல்லாம் மனித குலத்துக்கு எந்த அளவுக்கு நன்மைகளைத் தருகின்றனவோ அந்த அளவுக்குத் தீமைகளும் தரக் கூடியவை என்பதால், நல்லவர்களிடம் அதுவும் கடுமையான பயிற்சி முறைகளுக்கு உகந்தவர்களிடம் மட்டுமே இது வழிவழியாய் சென்று சேர வேண்டும் என்பதில் அவர்கள் திடமாக இருந்ததால் ஒரு வகையான ஏற்பாடாக இவ்வாறான ரகசிய பரிபாஷைகளைக் கையாண்டுள்ளனர். சித்த மருத்துவம், ஆயுர்வேதம், வர்மக்கலை, நாடி சுத்தி, சில வகை ரசாயன ஆய்வுகள், இயற்கையை நேசித்தல் ஆகியவை சித்தர்களின் கொடைகள்.


 

சித்தர்களுக்கு சிவன்தான் ஆதி சித்தர், ஆதி யோகி, ஆதி நாதர். சிவனிடமிருந்து அவரது அணுக்கத் தொண்டரும் வாகனமாகச் சித்திரிக்கப்படுபவருமான நந்தி தேவர் யோக வித்தைகளை அறிந்துகொண்டு, அவற்றை சீடர்கள் மூலம் மக்களிடையே பரப்பியதாகக் கூறப்படுகிறது. வாகனம் என்பது ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குச் செல்ல பயன்படுவது. இதே வாகனத்துக்கு வழிமுறை என்றும் பெயர் உண்டு. ஆதி நாதரும் ஆதி யோகியுமான சிவனின் முதல் சீடர் என்ற வகையில் யோகக் கலைக்கான வழிமுறையைப் படைத்தவர் என்பதால் நந்தி, சிவனின் வாகனமாக உருவகப்படுத்தப்பட்டிருக்கலாம். மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணர், பீஷ்மர் உள்ளிட்டோர் சிவபெருமானை யோகீஸ்வரன் என்றே விளித்துள்ளனர். சிவனிடமிருந்து பொதுமக்களுக்கு யோகக் கலை சென்றடைவதற்கான வாகனமாக நந்தி திகழ்கிறார். தன்னுள் சிவனைக் கண்டுகொண்டவர்கள் சித்தர்களாகவும், நாதர்களாகவும் போற்றப்படுகின்றனர்.

ஆதி நாதர், சித்தர், நந்தி ஆகிய இதே சொற்கள் ஏறத்தாழ இதே பொருளில் ஜைன (சமண) சம்பிரதாயத்தில் பயன்படுத்தப்படுகின்றன. நந்தி எனப்படும் காளைக்கு சம்ஸ்கிருதத்தில் ரிஷப எனவும் பெயர் உண்டு. வரலாற்றுப் பாடங்களில் மகாவீரர் ஜைன மதத்தை நிறுவியவராகக் கூறப்பட்டாலும், ஜைனம் மட்டுமின்றி ஹிந்து புராணங்களின் படியும் ஜைன மதத்தை ஸ்தாபித்தவர் ரிஷப தீர்த்தங்கரர். மகாவீரர், 24-ஆவது மற்றும் இறுதி தீர்த்தங்கரர். ஆகையால் ரிஷப தேவரை ஜைன மதத்தினர் ஆதி நாதர் என்று அழைக்கின்றனர். இவரது திருவுருவச் சிலைக்குக் கீழ் இவரைக் குறிக்கும் சின்னமாக ரிஷபம் எனப்படும் காளையே பொறிக்கப்படுகிறது. தியானத்துக்கும், யோகப் பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஜைனர்கள், உலகைப் படைத்து, காத்து, அழித்து மனிதர்களுக்கு முக்தியைக் கொடுக்கும் ஆண்டவன் என்ற கருத்தை மறுக்கின்றனர். அதேநேரத்தில் கடவுள் நிலைக்கு உயரும் மனிதர்களை சித்தர்கள் என்று ஜைனர்கள் தொழுகின்றனர். இந்தச் சித்தர்களுக்கு உருவம் கிடையாது. அவர்கள் சர்வ வல்லமை பொருந்தியவர்கள். பிறவாப் பெருநிலையை எய்தியவர்கள். சிவனை ஆதி நாதராகக் கூறும் சித்த சம்பிரதாயத்தினரும், சித்தர்கள் இதேபோன்ற அட்டமகா சித்திகளைப் பெற்று அமரத்துவம் அடைவதாகக் கூறுகின்றனர்.

இருப்பினும் ஜைன மதத்திலும் சித்த மார்க்கத்திலும் கூறப்படும் அட்ட மகாசித்திகள் சற்று வேறுபடுகின்றன. கடையிலா ஞானம் அதாவது முடிவில்லாத அறிவு (அனந்த ஞானம் அல்லது கேவல ஞானம் – கேவலம் என்பதற்கு அதுவின்றி வேறற்றது என்று பொருள்), கடையிலா காட்சி (அனந்த தர்சனம்), கடையிலா வீரியம் அதாவது எல்லையிலா ஆற்றல் (அனந்த வீர்யம்), கடையிலா இன்பம் (அனந்த சுகம்), நாமமின்மை (அக்ஷய ஸ்திதி), கோத்திரமின்மை (அகுருலகுத்வம் - அதாவது பெரியது சிறியது என்று பிரித்துக் கூறக்கூடிய தன்மை எதுவும் இல்லாதது), ஆயுள் இன்மை (சூட்சுமத்வம்), அழியா இயல்பு (க்ஷாயிக ஸம்யக்த்வம்) ஆகியவையே சித்தர் நிலையை எட்டுவோரின் எண்வகை ஆற்றல்கள் என்கின்றனர் ஜைனர்கள். ஆகையால் ஜைனர்களால் பிற்காலத்தில் கடவுளாகக் கருதி வழிபடப்படுகின்ற இந்தச் சித்தர்கள் எண்குணத்தார் என்று போற்றப்படுகின்றனர்.

சித்த மார்க்கமும் யோக மார்க்கமும் கூறும் அட்ட மகாசித்திகளை இப்போது காண்போம். அவை – அணிமா (அணுவின் அளவுக்குச் சுருங்குதல்), மஹிமா (பிரபஞ்சம் முழுமைக்கும் இணையாக விரிவடைதல்), லகிமா (மிகப் பெரிதாகக் காட்சியளித்தாலும் எடையற்றுப் போதல்), கரிமா (மிகச் சிறியதாகக் காட்சியளித்தாலும் மிகுந்த எடையுள்ளதாக ஆகுதல்), பிராப்தி (நினைத்ததை அடைதல்), பரகாயப்ரவேசம் (பிற உடலுக்குள் உட்புகுதல் அதாவது கூடுவிட்டுக் கூடுபாய்தல், இருந்த இடத்தில் இருந்தபடியே உலகின் எந்த மூலைக்கும் சென்று வருதல்), ஈசத்துவம் (ஈசனுக்கு அதாவது இறைவனுக்கு இணையான ஆற்றலைப் பெறுதல், இயற்கை மீதும் மூலப்பொருள்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துதல்), வசித்துவம் (தேவர்கள் உட்பட எவரையும் எதையும் வசியப்படுத்துதல், நினைத்த உருவத்தை எடுத்தல்) ஆகியவையே அந்த அட்டமகா சித்திகள்.

வேதத்தின் ஷட்தர்சனங்களில் (ஆறு தரிசனங்களில்) ஒன்றாகிய யோக மார்க்கம் குறித்து விளக்கமளிக்கும் யோக சூத்திரம் எழுதிய பதஞ்சலி இந்த அட்ட மகாசித்திகள் பற்றி விவரிக்கிறார். இந்த பதஞ்சலியும் தமிழகத்தின் 18 சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இதேபோல் சிவனின் நேரடிச் சீடர்கள் என்று கூறப்படும் அகத்தியரும், நந்தி தேவரும் 18 சித்தர்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளனர். இவர்களில் பதஞ்சலியின் குருவாக நந்தி தேவர் கூறப்படுகிறார். மேலும், திருமூலர், சட்டைமுனி ஆகியோரும் நந்தி தேவரின் சீடர்கள் எனப்படுகின்றனர்.

 

 

சித்தர்களில் மிகவும் மூத்தவராக அகத்தியர் போற்றப்படுகிறார். இவர் 4 யுகங்களைக் கண்டவராகக் கூறப்பட்டாலும், சித்த புருஷராகவும் தமிழின் முதல் இலக்கண நூலான அகத்தியத்தை இயற்றியவராகவும் மதிக்கப்படும் அகத்தியர் கி.மு. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. இவர் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வல்லமை பொருந்தியவர். சித்த வைத்தியம், நாடி சாஸ்திரம், ஜோதிடம் உள்ளிட்டவை குறித்த நூல்களையும் அகத்தியர் எழுதியதாக நம்பப்படுகிறது. அதேநேரத்தில், அகத்தியர் என்ற பெயரில் பல முனிவர்கள், புலவர்கள் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். போகர், திருவள்ளுவர் (சித்தர்), மச்சமுனி ஆகியோர் அகத்தியரின் சீடர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களில் மச்சமுனிதான் வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள நாத சம்பிரதாயம் எனப்படும் சித்த சம்பிரதாயத்தைத் தோற்றுவித்த மச்சேந்திரநாதர் எனக் கூறப்படுகிறது. இவரின் முக்கிய சீடரும் நாத சம்பிரதாயத்தின் முக்கிய நாதராகவும் போற்றப்படும் கோரக்ஷநாதர் தமிழகத்தின் 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கர் என்று கருதப்படுகிறது.

18 தமிழ்ச் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டாலும், 18-க்கும் மேற்பட்ட சித்தர்கள் கூறப்படுகின்றனர். ஆகையால் 18 என்ற இந்த வகைப்பாடு ஒவ்வொரு தொகுப்பிலும் மாறுபடுகிறது. எனவே தமிழ்ச் சித்தர்கள் என்று சுட்டப்படுபவர்கள் அனைவரின் பெயரையும் இனி காண்போம். அகத்தியர், நந்தி தேவர், திருமந்திரம் இயற்றிய திருமூலர், பழனியில் நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலையை உருவாக்கிய போகர் (இவர் சீன தேசத்தில் இருந்து தமிழகம் வந்தவர் என்று ஒருசிலரும், தமிழ்நாட்டில் இருந்து சீனாவுக்குச் சென்று லாவோட்ஸு என்ற பெயரில் அங்கு யோகம், தத்துவம், மருத்துவக் கலையை வளர்த்தவர் என்று வேறு சில ஆய்வாளர்களும் கூறுகின்றனர்), நாத சம்பிரதாயத்தை உருவாக்கியவரும் ஹடயோகியும் திருப்பரங்குன்றத்தில் சமாதி அடைந்தவருமான மச்சேந்திர நாதர்  (மச்சமுனி), அவதூத கீதை இயற்றிய கோரக்ஷநாதர் எனப்படும் கோரக்கர், மருத்துவம்- யோகம்- தத்துவம் சார்ந்த 25-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ள கொங்கணவர், இலங்கையில் பிறந்து ஸ்ரீரங்கத்தில் சமாதி அடைந்த சட்டைமுனி (கயிலாய சட்டைமுனி, கம்பளி சட்டைமுனி, ரோமரிஷி என்றும் கூறுவர்), மருத்துவ நிபுணரும் மதுரையில் சமாதி அடைந்தவருமான சுந்தரானந்தர், மருத்துவம் மற்றும் மந்திர தந்திரக் கலையில் வல்லவரான ராமதேவர் (இவர் பரகாயப்ரவேசத்தின் மூலம் எகிப்து சென்று யாகோப் என்ற பெயரில் சில ஆண்டுகள் அங்கு வாழ்ந்து ஆன்மீகம் வளர்த்தவர் என்று கூறப்படுகிறது) ஆகியோர் 18 சித்தர்களில் அடங்குவர்.

குதம்பைச் சித்தர், தஞ்சை பெரிய கோவிலைக் கட்டுவித்தவராகக் கருதப்படும் சித்தர் கருவூரார், விஷ்ணுவின் அவதாரமாகப் போற்றப்படுபவரும் காயகல்ப சிகிச்சை நிபுணருமான இடைக்காடர், குண்டலினி யோகக் கலை வல்லுநரும் யோக சூத்திரம் இயற்றியவருமான பதஞ்சலி, வியாக்ரபாதர் எனப்படும் புலிப்பாணி சித்தர், திருவாரூரில் சமாதி அடைந்த கமலமுனி, வைத்தீஸ்வரன் கோவிலில் சமாதி அடைந்தவரும் மருத்துவம்- காயகல்பம்- ரஸவாதம் ஆகியவற்றில் நிபுணருமான தன்வந்திரி (இவரை விஷ்ணுவின் அவதாரம் என்றும் கூறுவர்), யோகக் கலை மற்றும் தத்துவத்தில் வித்தகரான பாம்பாட்டிச் சித்தர் ஆகியோரும் 18 சித்தர்களில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர, வான்மீகர் (ராமாயணம் இயற்றிய வால்மீகியே இவர் என்றும் கூறுவர்), திருவள்ளுவர், கபிலர், அழுகணி சித்தர், அகப்பேய் சித்தர், புசுண்டர் எனப்படும் காகபுஜண்டர், புண்ணாக்கீசர், தேரையார், புலத்தியர் (புலஸ்தியர்), நாகார்ஜுனர், சென்னிமலை சித்தர், கஞ்சமலை சித்தர், கடுவெளி சித்தர், பட்டினத்தார், பத்திரகிரியார் (பர்த்ருஹரி என்னும் வட மாநில அரசனே இவர் என்பாரும் உண்டு), சிவவாக்கியர் ஆகியோரும் தமிழக சித்தர்களில் அடங்குவர்.

இவர்களில் சிவவாக்கியர் பிறக்கும்போதே சிவ சிவ என்று உச்சரித்துக்கொண்டே பிறந்ததால் சிவவாக்கியர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். இவரது பாடல்கள் சிவவாக்கியம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. சைவராக இருந்தபோதிலும் சடங்கு சம்பிரதாயங்களையும் உருவ வழிபாட்டையும் இவர் கடுமையாக எதிர்த்ததால் சிவனை உருவத்திலும் லிங்கம் எனப்படும் அருவுருவத்திலும் (அருவ உருவம்) ஆராதிக்கும் சைவ சித்தாந்தவாதிகள் இவரை ஏற்பதில்லை. இவர் தியானத்தின் மூலமான உள்முக வழிபாட்டையே வலியுறுத்தினார். நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ என்பது இவரது பிரபலமான சிவவாக்கியம். மூடநம்பிக்கைகளையும், சாதிப் பாகுபாட்டையும், பிராமண மேலாதிக்கத்தையும் கடுமையாக எதிர்த்தவர் சிவவாக்கியர் (இவர் பிராமண குலத்தில் தோன்றியவர்). பேயாழ்வாரைச் சந்தித்த பின் இவர் வைணவராக மாறியதாகவும் அதன் பிறகு இவர் திருமழிசை ஆழ்வார் என்று அழைக்கப்பட்டதாகவும் சிலர் (குறிப்பாக வைணவர்கள்) கூறுகின்றனர். ஆனால், சிவவாக்கியர் மற்றும் திருமழிசை ஆழ்வார் இடையே பாக்கள் அமைந்துள்ள விதத்திலும், சில கருத்துகளிலும் ஒற்றுமை இருக்கின்றபோதிலும், சிவவாக்கியர் திருமழிசை ஆழ்வாரின் காலத்துக்கு முற்பட்டவர் என்பது ஒப்பாய்வில் தெரியவந்துள்ளதாக வரலாற்று, இலக்கிய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வைணவரான திருமழிசை ஆழ்வார், புரட்சிகர சைவரான சிவவாக்கியரின் பாடல்களால் கவரப்பட்டு அவரைப் போலவே பாடல்கள் புனையத் தொடங்கியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வட மாநிலங்களில் மகாசித்த புருஷர்கள் நாதர்கள் என்று போற்றப்படுகின்றனர். இவர்களது வழிமுறை நாத சம்பிரதாயம் என்று அழைக்கப்படுகிறது. இதனை மச்சேந்திர நாதர் தோற்றுவித்த போதிலும் அவரது சீடராகக் கருதப்படும் கோரக்க நாதர் என்ற கோரக்ஷநாதரே இதனை அமைப்பு ரீதியில் கட்டமைத்தவர். சிவனின் அம்சமாகக் கருதப்படும் கோரக் நாத் வட மாநிலங்களில் மட்டுமின்றி கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் புலியில் வலம் வரும் முனிவர் உருவத்தில் வணங்கப்படுகிறார். மச்சேந்திர நாத், கோரக் நாத், ஜலந்தர் நாத், கனீஃப் நாத், கஹினி நாத் (கஜேந்திர நாத்), பர்தரி நாத் (பர்த்ருஹரி), ரேவண்ண நாத், சர்பதி நாத், நாக நாத் ஆகியோர் நவ நாதர்கள் எனப்படுகின்றனர். அதேநேரத்தில், பிரும்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின் அம்சமாகவும் விஷ்ணுவின் அவதாரமாகவும் போற்றப்படும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தத்தாத்ரேயர்தான் நாத சம்பிரதாயத்தை உருவாக்கியவர் என்பது சிலரது கருத்து. அதன்படி நவ நாதர்களை நவ நாராயணர்கள் என்றும், அவர்களது வழிமுறையை அவதூத மார்க்கம் என்றும் அழைப்பதுண்டு. தமிழகத்தில் இயற்றப்பட்ட நூலான அபிதான சிந்தாமணியில் வேறு 9 பேர், நவ நாதர்களாகச் சுட்டப்படுகின்றனர். அவர்கள் – சத்யநாதர், சாதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வெகுளிநாதர், மாதங்கநாதர், மச்சேந்திரநாதர், கஜேந்திரநாதர், கோரக்கநாதர். பிகார் மாநிலத்தின் மைதிலி என்ற வட்டார மொழியில் இயற்றப்பட்ட கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வர்ணரத்னாகர என்ற நூல் 84 சித்தர்களைப் பட்டியலிடுகிறது. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹடயோக பிரதீபிகா என்ற நூலில் 32 சித்தர்கள் இடம்பெற்றுள்ளனர்.

முற்காலத்தில் யோக மார்க்கத்தில் சிறந்து விளங்கி யோகிகள் என்று அழைக்கப்பட்டவர்களே பிற்காலத்தில் சித்தர்கள் என்றும் நாதர்கள் என்றும் பெயர் பெற்றனர். வெறும் வழிபாட்டில் இவர்களுக்கு நம்பிக்கையில்லை. ஒழுக்கமான நெறிமுறைகள், யோகம், தியானம் ஆகிய வழிமுறைகள் மூலம் தனக்குள்ளே சிவனை, நாதனை, இறைவனைக் காணும் அனுபவத்தைப் பெறுவதே இவர்களது முனைப்பு. அவ்வாறான அனுபவத்தை ஒரு முறை கண்டுவிட்டால் போதாது, இடைவிடாத பயிற்சி மூலம் மனிதரில் இருந்து மேம்பட்ட அந்த இறை நிலையில் எப்போதும் ஒன்றியிருக்க வேண்டும் என்பதே இவர்களது இலக்கு. விழிப்பு (ஜாக்ரதா), கனவு (ஸ்வப்னம்), உறக்கம் (நித்ரா) ஆகிய மூன்று நிலைகளைத் தாண்டி, எவ்விதச் சலனமும் அற்ற அறிதுயில் (துரியம்) எனப்படும் நான்காவது நிலையில் நிலைகொள்வதே இவர்களது லட்சியம். நாத மார்க்கத்தில் இணைந்து ஒரு குறிப்பிட்ட பயிற்சி நிலையைக் கடந்தவர்கள், தங்களது செவிகளில் மிகப் பெரிய குண்டலத்தை அணிந்திருப்பர். குண்டலினி எனப்படும் உள்ளாற்றலை மேம்படுத்தியவர்கள் என்பதை உணர்த்தவே இந்தக் குண்டல அணிகலன். யோகீஸ்வரன் எனப்படும் சிவபெருமான், தனது செவிகளில் மகரக் குழைகளை அணிந்திருப்பதும், தோடுடைய செவியன் என்று புகழப்படுவதும் இத்தகு உருவகம் சார்ந்ததே.

உடலை இறைவன் வாழும் கோவிலாக சித்தர்கள் உணர்ந்தனர். ஆகையால் உடலாகிய கோவிலுக்கு உரிய திருப்பணிகள் அதாவது கட்டுப்பாடு, தியானம், யோகப் பயிற்சிகள் ஆகிய திருப்பணிகளைச் செய்து, உள்ளிருக்கும் இறையை உய்த்துணர்ந்து ஆராதித்தனர். உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றும் உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு வாய்கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே என்றும் திருமூலர் பாடியிருப்பது இங்கே நோக்கத்தக்கது.

இவ்வாறு தன்னுள் இறைவனைக் கண்டுணர்ந்து அதில் திளைப்பவர், இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் எந்த கர்மவினைகளுக்கும் ஆட்படாமல் ஸ்தித ப்ரக்ஞனாக (நிலை உணர்வினனாக) இருப்பதாக பகவத் கீதை கூறுகிறது. யோகயுக்தோ விஸுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்திரிய சர்வபூதாத்மபூதாத்மா குர்வன் அபி ந லிப்யதே என்று  பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். யோக நிலையில் அதாவது தனது ஆத்மனை பரமாத்மனோடு ஒன்றிய நிலையில் வைத்திருக்கும் யோகியின் ஆத்மா பரிசுத்தமடைகிறது, அத்தகு யோகி தனது புலன்களை வென்றடக்குகிறான், அனைத்து உயிரினங்களிலும் தன்னுள் வீற்றிருக்கும் ஆத்மாவே அவற்றுக்கெல்லாம் ஆத்மாவாக விளங்குவதை உணர்ந்துகொள்கிறான், அத்தகு யோகி செயல்படுவதுபோல் தோன்றினாலும் உண்மையில் எல்லா வினைகளில் இருந்தும் அவன் விடுபட்டவனாகிறான் என்பதே இதன் பொருள்.

சித்த மார்க்கத்தினர் பெரும்பாலும் சைவர்கள் என்ற போதிலும் வைணவம், சாக்தம், ஜைனம், பௌத்தம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்களும் சித்தர்களாக மதிக்கப்படுகின்றனர். உலகியல் பந்தத்தை அறவே துறந்த சித்தர்களை மட்டுமின்றி, மகா சித்திகளை அடைந்தபோதிலும் உலக மக்களின் நன்மைக்காக உலகியல் தொடர்பை வைத்திருக்கும் அர்ஹந்த் எனப்படும் அருகதர்களையும் ஜைனம் போற்றுகிறது. பௌத்தத்தில் அபார சக்தி படைத்தவர்களாகவும், மனிதர்களின் மேம்பாட்டுக்காக மீண்டும் மீண்டும் அவதரிப்பதாகவும் கூறப்படும் போதிசத்வர்கள், சித்தர்களை ஒத்தவர்களே. போதிசத்வர்கள் புத்தரின் அம்சங்களாக அல்லது அவதாரங்களாக மதிக்கப்படுகின்றனர்.

உண்மையில் சித்தர் அல்லது யோகி என்பவர், அனைத்து வித பேதங்களையும் கடந்த பரிபக்குவ நிலையை, மானுடத்தின் உன்னத நிலையை எட்டியவர்கள் ஆவர். இதனைத்தான் திருவள்ளுவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்று போற்றுகிறார். மனிதரும் தெய்வமாகலாம் என்பதே சித்தர்கள் காட்டும் வழிமுறை. அந்த உயர்நிலை வெவ்வேறு பெயர்களில் சுட்டப்பட்டாலும் உட்பொருள் ஒன்றுதான். இதனை, ராஜயோக சமாதீஸ்ச உன்மணீ மனோன்மணீ அமரத்வம் லயஸ்தத்வம் சூன்யாசூன்யம் பரம்பதம் அமனஸ்கம் ததாத்வைதம் நிராலம்பம் நிரஸ்ஜனம் ஜீவன்முக்தீஸ்ச சஹஜா துர்யா சேத்ஏக வாசகா என்று ஹடயோக பிரதீபிகா என்ற நூல் சிறப்பாக எடுத்துரைக்கிறது. இதன் பொருள் - ராஜயோகம், சமாதி நிலை, உன்மணீ, மனோன்மணீ, அமரத்துவம், லய தத்துவம் (இயற்கையில் அல்லது இறையில் ஒன்றுதல்), சூன்ய-அசூன்யம், பரமபதம், அமனஸ்கம், அத்வைதம் (இருமையற்ற நிலை), நிராலம்பம், நிரஸ்ஜனம், ஜீவன்முக்தி, சஹஜம், துரியம் என்று வெவ்வேறு சொற்களில் கூறப்படும் இவை அனைத்தும் ஒற்றை நிலையைக் குறிப்பதுவே.

இவ்வாறாக வேற்றுமையில் ஒற்றுமை என்ற மாபெரும் தத்துவத்தைப் பின்பற்றி, பாரதீய மெய்ஞானம் பல்கிக் கிளைத்தாலும் வேரில் ஒன்றுபட்டுத் திகழ்கிறது. இத்தகு உயர் பண்புக்கு மாபெரும் சோதனை, அயல்நாட்டு ஆக்கிரமிப்பின் மூலம் நேர்ந்தது. அப்போதும் பாரதீய மெய்ஞானத்தின் வேற்றுமையில் ஒற்றுமை, எதனையும் தள்ளிவிடாமல் அரவணைத்து சிறப்பானதை உள்வாங்கிக்கொள்ளுதல் ஆகிய குணங்களால் புதிய தத்துவங்கள் முளைத்தன. அவற்றில் முக்கியமானதும் உலகின் இளைய மதம் என்றும் புகழப்படுவதுமான சீக்கியம் குறித்து அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

]]>
http://www.dinamani.com/junction/thaththuva-dharisanam/2016/sep/07/47 -அடக்கு-ஆற்றல்-பெறு-2560509.html
2557878 ஜங்ஷன் தத்துவ தரிசனம் 45. முடிந்த முடிவு பத்மன் Tuesday, August 30, 2016 02:58 PM +0530  

சிவனை வழிபடு தெய்வமாகக் கொண்ட விசிஷ்டாத்வைத வேதாந்த மரபுகளில் தமிழகத்தில் வேரூன்றிய சித்தாந்த சைவம் மிக முக்கியமானது. வேதாந்தம் என்ற சொல்லுக்கு இணையான சித்தாந்தம் என்ற பதத்தைக் கொண்டிருப்பது இதன் தனிச் சிறப்பு. வேதம், அதாவது அறிவின் முடிவு வேதாந்தம் என்றால், அனைத்து வகை சிந்தனைகளின், அதாவது எண்ணங்களின் முடிவு சித்தாந்தம் என்பதாகும். சைவ சித்தாந்தத்தின்படி அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், பேதாபேதம் மற்றும் இன்னபிற தத்துவங்கள் எல்லாம் நிறைவுபெறாதவை, சித்தாந்தம் மாத்திரமே முழு நிறைவான முடிவு. ஆகையால்தான், சைவ சித்தாந்தத்தை முடிந்த முடிவு என்பார்கள்.

வேதங்களுடன் சைவ ஆகமங்களையும் தனது தத்துவத்துக்கு ஆதாரங்களாகக் கொண்டிருக்கிறது சித்தாந்த சைவம். அத்துடன், சைவ நாயன்மார்களின் தமிழ்ப் பாசுரங்களான தேவாரம், திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளை தலையாயதாகக் கருதுகிறது சைவ சித்தாந்தம்.

வேதாந்தத்துக்கு மாற்றாக சித்தாந்தம் என்று பெயர் கொண்டிருப்பதால், இதனை வேதத்துக்குப் புறம்பானது என்று வேறு தத்துவங்களைச் சார்ந்த சிலரும், இத் தத்துவத்தைப் பின்பற்றுவர்களில்கூட ஒருசிலரும், நவீன கால நாத்திகர்களும் அவர்களால் திரிவுபட்ட சில தீவிரத் தமிழ்ப் பற்றாளர்களும் கூறுவதுண்டு. அது முற்றிலும் தவறு. வேதத்தையும் வேதாந்தத்தையும் சித்தாந்தம் புறந்தள்ளிவிடவில்லை. மாறாக, அவற்றின் உண்மையான, தொன்மையான உட்பொருளை மீட்டெடுத்துத் தந்தது. வைதீக மார்க்கத்தில் புறச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் தரும் மீமாம்சை மேலோங்கியபோது சில வேள்வி வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. அதன்படி பலிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இந்த பலிகளை ஏற்றுக்கொள்ளும் தெய்வம் மேதாபதி என்றழைக்கப்பட்டார். பலியிடப்படும் விலங்குகள் பசு என்றழைக்கப்பட்டன. இந்த விலங்குகளை யாகத் தூணில் கட்டிவைக்கப் பயன்பட்ட கயிறு பாசம் எனப்பட்டது. சுயத்தை பலி தந்து இறைவனோடு ஐக்கியமாகும் மிக உயர்ந்த பேற்றை வலியுறுத்தும் சைவ சித்தாந்தம், இந்த பதி, பசு, பாசம் ஆகிய மூன்றையும் தனது தத்துவ விளக்கங்களாக எடுத்துக்கொண்டது.

பதி என்பது ஒற்றைக் கடவுளான சிவம், பசு என்பது ஜீவாத்மாக்களாகிய உயிர்கள், பாசம் என்பது பதியுடன் பசுவை இணையவிடாமல் தடுக்கும் கட்டுக் கயிறு என்பதே சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான விளக்கம். பதி, பசு, பாசம் ஆகிய இம்மூன்றும் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் கூறும் முறையே ஈஸ்வரன், சித், அசித் ஆகியவற்றுக்கு நேரானவை. இந்த பதி, பசு, பாசம் என்ற சைவ சித்தாந்த அடிப்படைக் கூறுகள், மிகப் பழமையான ஸ்வேதாஸ்வதர உபநிஷத்திலேயே கூறப்பட்டுள்ளன. இதனை ரௌரவம், காமிகம், சிந்த்யம் உள்ளிட்ட 28 சைவ ஆகமங்கள் விளக்கமாகக் கூறியுள்ளன. இவற்றின் அடிப்படையில் எழுந்த சித்தாந்த சைவம், வேதத்தின் உண்மைப் பொருளை மற்ற தத்துவங்கள் எல்லாம் முழுமையாக விளக்கவில்லை என்றும் இல்லையேல் ஓரளவோ முழுமையாகவோ திரித்துக் கூறியுள்ளன என்றும் கூறுவதுடன், சைவ சித்தாந்தம் மாத்திரமே வேதத்தின் உண்மையான மற்றும் பொருத்தமான விளக்கம் என்று வாதிடுகிறது. இதனால், இதற்கு வேதாந்த சித்தாந்தம் என்றும் வைதீக சைவம் என்றும் பெயர் உண்டு. அதேநேரத்தில் தத்துவ நோக்கில் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்தை ஒத்திருக்கும் சைவ சித்தாந்தம், தன்னை சுத்த அத்வைதம் (சுத்தாத்வைதம்) என்று அறிவிக்கிறது. அத்துடன், ஆதிசங்கரரின் அத்வைதம் உண்மையான அத்வைதம் இல்லை என்று வாதிடும் சைவ சித்தாந்தம், அதனை மாயாவாதம் என்றுதான் குறிப்பிடுகிறது.

கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் (அப்பர்), திருஞானசம்பந்தர் மற்றும் கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தரர் ஆகியோர் காலத்திலும் அதற்கு முன்பும் தமிழகத்தில் சைவம் தழைத்திருந்தாலும், பெரும்பாலும் அது வழிபாட்டுச் சமயம் சார்ந்த சைவம்தான். இந்த நால்வரும் (சைவ) சமயக் குரவர் நால்வர் என்று போற்றப்படுகின்றனர். (குரவர் என்பது குருவின் பன்மைச் சொல். இதன் பொருள் குருமார்கள், ஆசார்யர்கள் என்பதாகும்). இவர்களது திருவாசகம், தேவாரம் ஆகியவற்றுடன் நால்வருக்கும் முந்தைய திருமூலரின் திருமந்திரம் உள்ளிட்ட பாசுரங்களை, பன்னிரு (12) திருமுறைகளாக கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி என்ற சைவத் தொண்டர் தொகுத்தளித்தார். இவற்றில், திருமூலரின் திருமந்திரத்தில் பக்தியைவிட சைவ சித்தாந்தக் கொள்கைகள், தத்துவங்கள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன.

இருப்பினும், தத்துவ நோக்கிலான சைவ சித்தாந்தம் அதற்கும் பழைமையானது; சிவனைப் போலவே அனாதியானது. அதேநேரத்தில், கி.மு. 3-ம் நூற்றாண்டில் காஷ்மீரில் வாழ்ந்தவராகக் கருதப்படும் நந்திதேவர், வரலாற்று ரீதியில் சைவ சித்தாந்தத்தை வடிவமைத்தவராகக் கூறப்படுகிறார். சுத்தாத்வைதம் அல்லது ஈஸ்வராத்வயவாத சைவம் எனப்படும் காஷ்மீர சைவத்துக்கும் சைவ சித்தாந்தத்துக்கும் சில வேறுபாடுகள் இருந்தபோதிலும், மிக நெருங்கிய தொடர்பும் அதிக ஒற்றுமைகளும் இருப்பது இங்கே நோக்கத்தக்கது. எனினும், சைவ சித்தாந்தவாதிகளின் கருத்துப்படி, சிவபெருமானின் அணுக்கத் தொண்டரான நந்திதேவரிடமிருந்து சைவ சித்தாந்தம் தொடங்கியுள்ளது. நந்திதேவர், அவரது சீடர் சனற்குமாரர் (சனத்குமாரர்), அவரது சீடரான சத்தியஞானதரிசி முனிவர், அவரது சீடரான பரஞ்சோதி முனிவர் ஆகிய நால்வரும், சைவ சித்தாந்தத்தின் அகச் சந்தான ஆசார்யர்கள் என்று போற்றப்படுகின்றனர். சந்தானம் என்றால் பரம்பரை என்று பொருள். இவர்கள் அனைவரும் கயிலாய (கைலாஸ) மலையிலேயே வாழ்ந்ததால், அகச் சந்தான ஆசார்யர்கள் எனப்படுகின்றனர்.

கி.பி. 11-ம் நூற்றாண்டில் ராமானுஜர் தோன்றிய பின்னர், விசிஷ்டாத்வைதம் சார்ந்த வைஷ்ணவத்தின் வளர்ச்சி அதிகரித்து சைவம் சற்று தளர்ந்தபோது, தத்துவ ரீதியில் சைவ சித்தாந்தத்தின் அடிப்படையில் அதற்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தி மக்களிடையே செல்வாக்குபெறச் செய்தவர், கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மெய்கண்டார். வேதங்கள் மற்றும் ரௌரவம் உள்ளிட்ட சிவாகமங்களின் அடிப்படையில் சைவ சித்தாந்தத்தை இவர் மீண்டும் நிறுவினார். வேத, ஆகமக் கருத்துகளைத் தூய தமிழில் சிவஞானபோதம் என்ற நூலாக மெய்கண்டார் படைத்தார். (பரஞ்சோதி முனிவர், கைலாஸ மலையிலிருந்து பொதிகை மலைக்கு ஆகாய மார்க்கத்தில் சென்றபோது, சிறுகுழந்தையாக இருந்த இவருக்கு சிவஞானத்தை போதித்ததாகக் கூறப்படுகிறது). இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பம்சம், இவர் அந்தணர் அல்லர். வேளாளர் குலத்தைச் சார்ந்தவர். விருதாசலத்துக்கு அருகே திருபெண்ணாகடத்தில் வாழ்ந்துவந்த அச்சுதக் களப்பாளர் என்ற மிகச் சிறந்த சிவபக்தரின் மகனாகப் பிறந்தவர். தனது குலகுருவும் சகலாகம பண்டிதர் என்று புகழப்படும் வேதியருமான அருள்நந்தி (அருணந்தி) சிவாசாரியரைத் தனது சீடராகப் பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு.

அருள்நந்தி சிவாசாரியர், சிவஞானபோதத்தின் வழிநூலாக, சிவஞான சித்தியார் என்ற அற்புத நூலைப் படைத்துள்ளார். இந்த நூலின் சிறப்பம்சம் - மற்ற தத்துவ, மதக் கருத்துகளை எடுத்துக்கூறி அவற்றையெல்லாம் எதிர்வாதம் செய்து நிராகரித்துவிட்டு, பின்னர் சைவ சித்தாந்தத்தை எடுத்துக்கூறி நிறுவுவதாகும். நாத்திகம் பேசும் லோகாயதம்; சௌத்திராந்திகம், யோகாசாரம் உள்ளிட்ட பௌத்த தத்துவப் பிரிவுகள்; நிகண்டவாதம் எனப்படும் சமணம், பட்டாசாரியம் எனப்படும் மீமாம்சை, சுத்த பிரும்மவாதம், மாயாவாதம் எனப்படும் சங்கரரின் அத்வைதம், சாங்கியம், பாஞ்சராத்ரம் எனப்படும் வைஷ்ணவம் உள்ளிட்டவற்றின் கருத்துகளைக் கூறி, அதற்கு மறுதலையும் (மறுப்பும்) கூறும் பகுதி பரபக்கம் ஆகும். இதன் தொடர்ச்சியாக சைவ சித்தாந்தம் குறித்து எடுத்துரைக்கும் பகுதி சுபக்கம் ஆகும். இருபா இருபது என்னும் சைவ சித்தாந்த நூலையும் இவர் இயற்றியுள்ளார்.

இந்த அருள்நந்தி சிவாசாரியரின் சீடர், வேதியரான மறைஞான சம்பந்தர். இவர் நூல் எதுவும் படைக்கவில்லை. எனினும் இவரது சீடரும் தில்லைவாழ் அந்தணர் மரபைச் சேர்ந்தவருமான உமாபதி சிவாசாரியர் சித்தாந்த அட்டகம் என்று சிறப்பித்துக் கூறப்படும் சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, சங்கற்ப நிராகரணம் உள்ளிட்ட 8 நூல்களையும், சேக்கிழார் புராணம், சிவநாமக் கலிவெண்பா உள்ளிட்ட பிற நூல்களையும் இயற்றியுள்ளார். மெய்கண்டார், அருள்நந்தி சிவாசாரியர், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாசாரியர் ஆகிய நால்வரும் புறச் சந்தான ஆசாரியர்கள் எனவும் சந்தானக் குரவர் நால்வர் என்றும் போற்றப்படுகின்றனர்.

சைவ சித்தாந்தத்தைத் தெளிவுற அறிவதற்கு மெய்கண்ட சாத்திரம் என்ற நூல் மிகவும் பயன்தரும். இந்த நூலில், மெய்கண்டாரின் சிவஞான போதம், அருள்நந்தி சிவாசாரியரின் சிவஞான சித்தியார், இருபா இருபது, உமாபதி சிவாசாரியரின் சித்தாந்த அட்டகம் எனப்படும் 8 நூல்கள் ஆகியவற்றுடன் திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் இயற்றிய திருவுந்தியார், அவரது சீடரான திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் இயற்றிய திருக்களிற்றுப்படியார், மெய்கண்டரின் மற்றொரு சீடரான திருவதிகை மனவாசகம் கடந்த தேவநாயனார் இயற்றிய உண்மை விளக்கம் ஆக மொத்தம் 14 நூல்கள் இடம்பெற்றுள்ளன. இதனுடன் நீலகண்ட சிவாசாரியர், பிரும்மசூத்திரத்துக்கு எழுதிய பாஷ்யமும் சைவ சித்தாந்தத்துக்கு துணை நிற்கிறது.

பிரத்யட்சம் (நேரடியாக உணர்தல்), அனுமானம் (ஊகம்), ஆப்த வசனம் (வேதம், ஆகமம்) ஆகிய மூன்றையும் உண்மையை நிரூபிப்பதற்கான பிரமாணங்களாக (ஆதாரங்களாக) சைவ சித்தாந்தம் எடுத்துக்கொள்கிறது. இதன் அடிப்படைக் கோட்பாடு, பதி எனப்படும் இறைவன், பசு எனப்படும் உயிர்கள், பாசம் எனப்படும் கட்டுக்கள் ஆகிய மூன்றாகும்.

சிவபெருமானே மேலான உண்மை, பரமாத்மா, பரம்பொருள். அவருக்கு மேலோ, இணையோ யாருமில்லை. அவர் எங்கும் நிறைந்திருப்பவர், எல்லாம் அறிந்திருப்பவர், சுதந்திரமானவர். உலகாகவும், உயிரினங்களாகவும் இருக்கின்ற பசுவுக்கு அவரே பதி, அதாவது தலைவர். ஆகையால் அவர் பசுபதி. உலகமும் உயிரினங்களும் அவரது சக்தியால் (ஆற்றலால்) உருவாக்கப்பட்டு, காப்பாற்றப்படுகின்றன. தீயோடு அதன் வெப்பம் இணைந்திருப்பதைப்போல, சூரியனோடு ஒளி இணைந்திருப்பதைப்போல சிவனோடு சக்தி நீக்கமற இணைந்திருக்கிறது. (இதனை மகாகவி காளிதாசர், சொல்லையும் அதன் பொருளையும்போல சிவனும், சக்தியும் பிரிக்க முடியாமல் இணைந்திருப்பதாக வர்ணிக்கிறார்). உலகைப் படைத்த நிமித்த காரணராகவும், துணைக் காரணராகவும், பொருள் காரணராகவும் அவரே விளங்குகிறார். ஒரு மண்பானை செய்ய களிமண் பொருள் காரணமாகவும், களிமண்ணைச் சுற்றும் இயந்திரமான திரிகை துணைக் காரணமாகவும், அதனைத் தயாரிக்கும் குயவர் நிமித்த (செயல்படுத்தும்) காரணமாகவும் இருப்பதைப்போல, இந்த உலகின் தோற்றத்துக்கு சிவபெருமானே முக்காரணமாகவும் திகழ்கிறார்.

ஆக்கல், படைத்தல், அழித்தல் (மறுஉருவாக்கம் செய்தல்) ஆகிய மூன்றோடு மறைத்தல் (ஜீவாத்மாவுக்கு குறிப்பிட்ட பக்குவம் வரும்வரை அல்லது பக்குவம் பெறுவதற்காக உண்மையை அறியவிடாமல் உலக விஷயங்களைக் கொண்டு மறைத்தல்), அருளல் (இறுதி நிலையாகிய முக்திப் பேற்றை, அதாவது சிவத்துவத்தை அருளுதல்) ஆகிய ஐந்து தொழில்களை சிவபெருமான் புரிகிறார். சிவன், அறிவு எனப்படும் சித் ஆக உள்ளார். அதேநேரத்தில், அன்பாகவும் இயக்கமாகவும் அவரே உள்ளார். இதுவே, முறையே அவரது ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி என மூவகை ஆற்றலாக வெளிப்படுகிறது. சிவனது அன்புக்கு, ஆலகால விஷத்தை அவர் அருந்தி, உலகையும் உயிரினங்களையும் காப்பாற்றியதே மிகப்பெரிய சான்று.

சிவன் நிர்குணன் என்று கூறப்படுவதற்கு அவர் குணங்கள் அற்றவர் என்று பொருள் அல்ல. மாறுவதும் அழிவதுமான இயல்புகளை உடைய சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவன் என்று பொருள். அவர் மாறாத உண்மையாகிய சத் ஆகவும், அனைத்தும் அறிந்தவராகவும் அனைத்தையும் அறியச் செய்பவராகவும் விளங்குகின்ற பேரறிவாகிய சித் ஆகவும், என்றும் மாறாத இயல்பான மகிழ்ச்சியாகிய ஆனந்தமாகவும் திகழ்கிறார். அதுவே சச்சிதானந்தம் (சத் சித் ஆனந்தம்). அனைத்துவித நற்குணங்களும் நிரம்பப்பெற்ற அவர் அஷ்டகுண மூர்த்தி (எண்குணத்தான்) ஆக விளங்குகிறார். அந்த எட்டு குணங்களாவன – அனைத்தும் அறிந்தவர் (சர்வக்ஞர்), அனைத்து ஆற்றல்களும் கொண்டவர் (சர்வசக்திமான்), அனைத்திலும் ஊடுருவி இருப்பவர், அதாவது எங்கும் நிறைந்திருப்பவர் (சர்வவியாபி), அனைத்து உயிர்கள் மீதும் எல்லையற்ற கருணையுடன் நன்மைகளைச் செய்பவர் (சங்கரர்), எவ்வித வரையறைக்கும் கட்டுப்படாத சுதந்திரமயமானவர் (சர்வஸ்வதந்திரர்), நிலைத்த ஞானமுடையவர் (நித்யர்), குறைகளோ தோஷங்களோ அற்றவர் (நிர்மலர்), எப்போதும் ஆனந்தமுடையவர் (நித்யானந்தர்).

பசு என்பது உயிர்கள் எனப்படும் ஆன்மாக்கள். இவை ஒருவகையில் பதியாகிய சிவனை ஒத்தவை என்றபோதிலும், சிவனாகவே ஆகிவிடுவதில்லை. பசுக்கள் எனப்படும் ஆன்மாக்கள் அனைத்திலும் சிவத்தன்மை உள்ளது (அபேதம்). ஆயினும் வேறு வகையில் சிவனிடமிருந்து பசுக்கள் வேறுபட்டவையாக உள்ளன (பேதம்). பதியைப் போலவே பசுக்களும் நித்தியமானவை, அறிவுள்ளவை. இருப்பினும், பசுக்கள் மாற்றம் பெறுபவை, முழுமையான சுதந்திரமற்றவை, முழுமையான அறிவு இல்லாதவை. அவற்றின் அறிவு பாசத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், இந்தப் பாசத்தின் காரணமாக இன்ப-துன்ப உணர்வுகளும் அவற்றின்பாற்பட்டு செயல்புரிபவையாகவும் அந்தச் செயல்களுக்கேற்ப பயன்களை அனுபவிப்பவையாகவும் பசுக்கள் இருக்கின்றன. இந்தப் பாசத்தைக் கட்டறுத்து, பதியோடு பசுக்கள் இணைவதே முக்தி எனப்படும்.

பசுக்களைக் கட்டுப்படுத்தும் பாசம் மூவகைப்படும். அவை ஆணவம், கன்மம், மாயை. இவற்றுக்கு மும்மலம் என்றும் பெயர். இந்த மும்மலங்களும் பசுக்களின் அறிவையும், ஆற்றலையும் மறைத்து, பசுக்களை அறியாமையில் கிடத்தி, பதியுடன் இணையவிடாமல் தடுக்கின்றன. இதில் முதலாவதான ஆணவ மலம், ஆத்மாக்களின் அதாவது பசுக்களின் இயல்பான மலம் (சஹஜ மலம்). எந்தவொரு ஆன்மாவுக்கும் அதன் தோற்றத்திலேயே இது இணைந்திருக்கிறது. இதுதான் குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்ட தானாக பசுவைச் சுருக்கி, நான், நீ, அவர் என்ற பேதத்துக்குக் காரணமாக இருக்கிறது. ஸத் (நிலையான உண்மை) ஆகிய சிவத்தை அனுபவிக்கவிடாமல், அஸத்தாகிய உலகியல் பேதமாகத் தன்னை பாவித்து அதன்படியான அனுபவங்களைத் தருவது இந்த ஆணவம்தான். கைவல்ய முக்தி எனப்படும் சிவனோடு ஐக்கியமாகும் விடுதலை கிடைக்கும்வரை இந்த ஆணவ மலம் நீடிக்கும். இரண்டாவது மலம் கன்மம். தான் என்ற ஆணவத்துக்கு உட்பட்டு செய்கின்ற அனைத்துச் செயல்களுமே பசுவை பாதிக்கும். வினைப் பயன்களால் கட்டப்படுவதே கன்ம மலம்.

மூன்றாவதாக உள்ள மலம் மாயை. இது, ஆதிசங்கரர் கூறுகின்ற மாயையில் இருந்து வேறுபட்டது. இது, பதியாகிய சிவபெருமானின் கருவி. பசுக்கள் பக்குவப்பட்டு உண்மையை உணர்ந்து சிவத்தோடு ஐக்கியமடைகின்ற வரையில் அதற்கான தூண்டுதலாக பல்வேறு அனுபவத்தைத் தருகின்ற கருவியாக விளங்குகிறது. பசுக்களை அவற்றின் விருப்பங்களாலும், அறியாமையாலும் உணர்வுச் சாதனங்களோடு கட்டிவைப்பது இந்த மாயைதான்.

இது சுத்த மாயை, அசுத்த மாயை என்று இருவகைப்படும். இவை இரண்டும் நித்தியமானவை, அழிவில்லாதவை. அதேநேரத்தில், அசுத்த மாயையில் இருந்து பிரகிருதி மாயை எனப்படும் மூன்றாவது மாயை உருவாகிறது. இது குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அழியக்கூடியது. சுத்த மாயை என்பது பொருள்கள் தோன்றுவதற்கு முதற்காரணமாய் இருப்பது. எங்கும் வியாபித்திருக்கும் இது மயக்கம் இல்லாமல் சுத்தமாய் இருப்பது. அசுத்த மாயை என்பது பிரளய காலத்தில் ஆன்மாக்களின் கர்மங்களுக்கு உறைவிடமாகவும், பின்னர் மறுபடி தோன்றும் பிரபஞ்சத்தில் ஆன்மாக்களுக்கு அதன் வினைப் பயன்களுக்கு ஏற்ப வாழ்க்கை அனுபவத்தைத் தருவதற்கு முதற் காரணமாகவும் விளங்குவது. இது ஆன்மாக்களுக்கு மயக்கத்தை தருகின்ற விதத்தில் இருப்பதால் அசுத்த மாயை எனப்படுகிறது.

இந்த அசுத்த மாயையில் இருந்து 24 தத்துவங்கள் கொண்ட பிரகிருதி மாயை தோன்றுகிறது. காற்று, நீர், ஆகாயம், தீ, நிலம் ஆகிய பஞ்ச பூதங்கள்; அவற்றின் தன்மாத்திரை குணங்களான தொடுஉணர்வு, சுவை, ஒலி, ஒளி, மணம்; 5 கர்மேந்திரியங்கள், 5 ஞானேந்திரியங்கள்; மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் 4 அந்தகரணங்கள் (உள்ளுறுப்புகள்) ஆகியவையே அந்த 24 தத்துவங்கள். இந்த 24 தத்துவங்களைக் கொண்டு, தூய்மையற்ற ஆன்மாக்களுக்கான உடல்கள், உறுப்புகள், உலகங்கள், அவற்றுக்கான அனுபவங்கள் ஆகியவற்றை பதியாகிய சிவபெருமான் படைத்து, அவை தூய்மை பெற்று விடுதலை அடைவதற்கான வாய்ப்பைத் தருகிறார்.

பசுக்களை முக்தியின் பாதையில் திருப்புவதற்கான பாச ஞானத்தையும், பசு ஞானத்தையும் இந்த மாயையே தருகிறது. பசுக்களுக்கு நல்வினை, தீவினைகளை அறிவுறுத்தி தீவினைகளைக் களைந்து, நல்வினைகள் மூலம் பக்குவப்படுவதற்கும் இந்த மாயையே உதவுகிறது. இருப்பினும் முக்தி பெற இந்த பாச ஞானமும் (கட்டுகள் குறித்த விழிப்புணர்வு), பசு ஞானமும் (ஆன்மா குறித்த விழிப்புணர்வு) மாத்திரம் போதாது, பதி ஞானமும் (இறைவன் குறித்த விழிப்புணர்வு) தேவை. இந்த பதி ஞானம், அவனருளால் அவன் தாள் வணங்குவதன் மூலமே கிடைக்கும். மேலும் அவனருள் பெற்ற குருவைச் சரணடைந்து குருவருள் மூலமாகவும் திருவருள் பெறலாம்.

சைவ சித்தாந்தத்தின்படி ஒரு ஜீவாத்மா, நான்கு வழிமுறைகளில் முக்தி நிலை அடைகிறது. அவை சரியா பாதம், கிரியா பாதம், யோக பாதம் மற்றும் ஞான பாதம். இதில் எந்தப் பாதை ஒருவருக்கு உகந்தது என்பதை குரு தீர்மானிப்பார். இல்லையேல், குருவுக்கெல்லாம் குருவாகிய சிவபெருமான் தீர்மானிப்பார்.

சிவ ஆலயங்களில் துப்புரவு செய்தல், பிரசாதங்களைச் சமைத்தல், அபிஷேகத்துக்கு நீர் கொண்டுவருதல், பூஜைக்கு மலர்களைப் பறித்துவருதல் என சிவபெருமானுக்கு ஒரு தொண்டனாக உழவாரப் பணிகளைச் செய்தல் சரியை ஆகும். இதற்கு தாஸ மார்க்கம், அதாவது தொண்டு வழி என்றும் பெயர். இதற்கு உதாரணமாகச் சுட்டிக் காட்டப்படுபவர் அப்பர் பெருமான் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர்.

சிவபெருமானின் விக்ரகங்களை ஆராதித்தல், அவர் குறித்த பக்திப் பாடல்களைப் பாடுதல், சிவ மந்திரங்களை உச்சரித்தல், சிவ கதைகளை உபன்யாசமாகக் கூறுதல் என சிவனுக்கு ஒரு நல்ல மகனைப்போல பணிவிடை செய்தல் கிரியை ஆகும். இதற்கு சத்புத்திர மார்க்கம் அதாவது நற்பிள்ளை வழி என்றும் பெயர். இதற்கு உதாரணமாகக் காட்டப்படுவர் பிள்ளைப் பெருமான் என்று அழைக்கப்படும் திருஞானசம்பந்தர்.

சிவனை நினைத்து தியானித்தல், யோகாசனங்களைச் செய்தல் உள்ளிட்ட வழிமுறைகள் மூலம் தியானப் பொருளாகிய சிவனும் தானும் ஒன்றே எனக் கருதுதல், ஓர் உற்ற நண்பனைப்போல சிவபெருமானை எப்போதும் கருதுதல் யோகம் ஆகும். இதற்கு சக மார்க்கம், அதாவது நட்பு வழி என்றும் பெயர். இதற்கு உதாரணமாகத் திகழ்பவர் சுந்தரமூர்த்தி நாயனார்.

ஞான நூல்களைப் படித்தும், கேட்டும், சிந்தித்தும் சிவன் குறித்து ஞானம் வரப்பெற்று, சிவனோடு ஐக்கியமாகுதல் ஞானம் ஆகும். இது சிவனோடு நேரடித் தொடர்புகொண்டு உண்மையை விளங்கச் செய்வதால் இதற்கு ஸத் மார்க்கம் (சன்மார்க்கம்), அதாவது உண்மை வழி என்றும் பெயர். இதனை (சிவனின் நேரடி) சீட மார்க்கம் என்றும் கூறுவார்கள். இதற்கு உதாரணமாக விளங்குபவர் மாணிக்கவாசக சுவாமிகள்.

இந்த நான்கு வழிமுறைகளில் சரியை மூலம் சிவ லோகத்தை அடையும் பாக்கியம் கிடைப்பதால் அதனை சாலோகம் என்றும், கிரியை மூலம் சிவனுக்கு மிகவும் நெருக்கமான இடம் கிடைப்பதால் அதனை சாமீபம் என்றும், யோகம் மூலம் ஏறத்தாழ சிவனுக்கு இணையான பதம் கிடைப்பதால் அதனை சாரூபம் என்றும், இறுதியான ஞானத்தின் மூலம் சிவனோடு ஐக்கியமடைவதால் அதனை சாயுஜ்யம் என்றும் அழைப்பர்.

இவ்வாறு முக்தியடையும் ஜீவாத்மா, சிவனாகவே ஆகிவிடுவதில்லை. சிவத்தின் ஓர் அங்கமாகத் துலங்கி, அனைத்துவித கட்டுகளில் இருந்தும் விடுபட்டு, சிவனைப்போல எல்லையற்ற ஆனந்தத்தில் திளைக்கிறது. இருப்பினும், சிவனுக்குரிய படைப்பு முதலிய ஐந்தொழில்களின் ஆற்றல், முக்தியடைந்த பசுக்களுக்குக் கிடைப்பதில்லை என்கிறது சைவ சித்தாந்தம். ஆக விசிஷ்டாத்வைதமாகவும், அபேத பேதவாதமாகவுமே சைவ சித்தாந்தம் திகழ்கிறது.

சைவம், வேத வழிக்கு உட்பட்டதாகவும் வேத நெறிகளுக்கு அப்பாற்பட்டதாகவும் பரந்துபட்டுத் திகழ்கின்ற தன்மை கொண்டது. சிவனின் ஆற்றலாகவும் இணையாகவும் வர்ணிக்கப்படும் சக்தியை மையமாகக் கொண்டு, பெரும்பாலும் வேத வழிகளுக்கு அப்பாற்பட்ட அவைதீக தத்துவமாகவும் வெகுஜன சமயமாகவும் திகழ்வது தாந்திரீக மார்க்கம் எனப்படும் தந்திரம். பாரதத்தில் தோன்றிய அனைத்து மதங்களிலுமே தனது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள தந்திரம் குறித்து அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...

 

]]>
http://www.dinamani.com/junction/thaththuva-dharisanam/2016/aug/24/45-முடிந்த-முடிவு-2557878.html
2555253 ஜங்ஷன் தத்துவ தரிசனம் 43. பார்வைகள் பலவிதம் பத்மன் Tuesday, August 9, 2016 04:37 PM +0530  

கௌதம புத்தரின் போதனை ஒருவகையில் அஸத்காரியவாதம் என்ற வகையைச் சார்ந்தது. அதாவது, ஏற்கெனவே இல்லாத ஒன்றே (அஸத்), உலகம், உயிர் உள்ளிட்ட விளைவுகளுக்கான காரணம் என்பதே அஸத்காரியவாதம். அனைத்தின் ஆதாரமாக இருப்பது வெறுமை என்று அவர் கூறியது இதன்பாற்பட்டதே. அதேநேரத்தில், நாம் காணுகின்ற உலகமும் உயிர்களும் நிரந்தரமான உண்மை அல்ல; மாறுபடுகின்ற உண்மை என்றும் அவர் மொழிந்தார். இதற்கு க்ஷணிகவாதம் என்று பெயர். ஸத் அல்லது ஸதம் என்றால் நிரந்தரமான உண்மை என்று பொருள். உடலும் ஸதமல்ல, உயிரும் ஸதமல்ல; அதாவது, நிரந்தரமற்றவை என்பதால் எல்லாமே அஸத் (உண்மையற்றவை) ஆகும் என்பதை க்ஷணிகவாதத்தின் விளக்கமாக எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறாக, எதுவுமே நிரந்தரமான உண்மையல்ல என்ற எண்ணம், தத்துவம் பெரிய அறிவாளிகள் தொடங்கி, அடித்தட்டு பாமரர்கள் வரை பரவியது. அப்போதுதான் ஆதிசங்கரர் வந்தார். அவர், இந்தச் சிந்தனைப்போக்கில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தார். உலகில் உள்ள அனைத்துமே நிரந்தரமற்றவை, ஸத் இல்லாதவை என்றபோதிலும் இவற்றுக்கு அடிப்படையான ஒன்று நிரந்தமானதுதான், ஸத்தியமானதுதான் என்று அவர் வாதிட்டு, ஸ்தாபித்தார். எப்போதும் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பேரறிவுதான் இந்த உலக இயக்கத்தின் சாராம்சம் என்று அவர் கருதினார். வேத, உபநிஷதங்களில் பிரும்மம் என்று கூறப்படுவது அதுவே என்று அவர் பல்வேறு தத்துவ விளக்கங்களால் எடுத்துரைத்தார். அந்தப் பிரும்மம் மாத்திரமே நிரந்தரமான உண்மை (ஸத்) என்பது சங்கரரின் வாதம். ஆகையால், இது ஸத்காரியவாத வகையைச் சார்ந்தது.

உண்மை என்பது என்ன... எப்போதும் எது மாறாமல் உள்ளதோ அதுவே உண்மை. ஆக, மாறக்கூடிய இயல்புடைய இந்த உலகமோ, உயிரினங்களோ எப்போதும் உள்ள உண்மை அல்ல. ஆகையால், அவற்றை உண்மைபோல் தோன்றி பொய்யாகக்கூடிய மாயை என்ற பெயரால் அழைத்தார். எப்போதும் இருக்கக்கூடிய தூய அறிவு என்ற பிரும்மம் மாத்திரமே உண்மை. மற்றவை எல்லாம் அதன் பிரதிபலிப்புகள், அறிவின் சலனங்கள் என்றார் ஆதிசங்கரர். அவரது அத்வைத தத்துவப்படி, ஆன்மாக்கள் பலவன்று என்பது மட்டுமல்ல, ஆன்மா என்று தனியாக ஏதுமில்லை, அதுவும் பிரும்மத்தின் பிரதிபலிப்பே. ஆகையால், சங்கரரின் அத்வைதம் மாயாவாத அத்வைதம் என்றும் அழைக்கப்படுகிறது. பிரும்மம் எனப்படும் தூய அறிவு மாத்திரமே உண்மை என்பதைத்தான், சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளீரோ என்று மகாகவி பாரதியார் குறிப்பிடுகிறார். அனைத்தும் பிரும்மம் என்ற இந்தத் தத்துவம் பாரதிக்கு ஏற்புடையபோதிலும், சங்கரரின் மாயாவாதத்தில் அவருக்கு உடன்பாடில்லை. மாயையைப் பழித்தல் என்றே அவர் ஒரு கவிதை எழுதினார். நிற்பதுவே நடப்பதுவே நீங்கள் எல்லாம் சொப்பனந்தானா, வெறும் தோற்ற மயக்கங்களா என்று தொடங்கி பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்.

பேதாபேதவாதம்

இதேபோல், அக்காலத்திலேயே சங்கரரின் மாயாவாதத்துக்கு எதிர்ப்பு, மாற்றுக் கருத்து எழுந்தது. அவ்வகையில், முக்கியமானதும் முதலில் தோன்றியதுமான வேதாந்தப் பிரிவு பேதாபேதவாதம், அதாவது பேத அபேதவாதம். ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், மத்வரின் துவைதம் ஆகியவற்றுக்கெல்லாம் முன்னோடி இந்த பேதாபேதவாதம். இதனை அபேதபேதவாதம் என்றும் சிலர் அழைப்பர். இதனை மொழிந்தவர், கி.பி. 996 முதல் 1061 வரை வாழ்ந்த தத்துவ ஞானியான பாஸ்கரர். (இவர் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று சிலர் கருதுகின்றனர்). இவரும் ஆதிசங்கரரைப்போல உபநிஷதங்களுக்கும், பிரும்மசூத்திரங்களுக்கு மிகச் சிறந்த விளக்கவுரையும் (பாஷ்யம்) எழுதியுள்ளார்.

உபநிஷதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு நேரடியாகப் பொருள்கொள்ள வேண்டுமே அன்றி, அவற்றுக்கு வித்தியாசமான வியாக்யானங்களை (சிறப்பு விளக்கங்களை) தருவது கூடாது என்பது பாஸ்கரரின் வாதம். இனி அவரது கோட்பாட்டைப் பார்ப்போம் –

பிரும்மம் என்பது எண்ணிலடங்காத மங்கள குணங்கள் கொண்டதும், குறிப்பிட்ட ஒரு வடிவம் இல்லாததும் ஆகும். அதாவது நாம, ரூப, குண வடிவில் பிரும்மத்தை வரையறுக்க முடியாது. பிரும்மத்துக்கு அனுபவிப்பவரின் ஆற்றல் எனப்படும் போக்த்ருசக்தி, அனுபவிக்கப்படும் ஆற்றல் எனப்படும் போக்யசக்தி ஆகிய இருவகை ஆற்றல்கள் உண்டு. இந்த இருவகை ஆற்றல்களைக் கொண்டு, அனுபவிக்கப்படுவதும் அறிவற்றதுமான (அசேதனம்) பிரகிருதியாகவும், அனுபவிப்பதும் அறிவுள்ளதுமான (சேதனம்) ஆத்மாக்களாகவும் பிரும்மம் உருமாற்றம் பெறுகிறது. இந்த உருமாற்றம் உண்மை என்றபோதிலும், அதற்கு அடிப்படையான பிரும்மம் எந்தப் பாதிப்பும் அடைவதில்லை.

இந்த உலகமானது, பிரும்மத்தின் செயல்வடிவம் (கார்யரூபம்) ஆனபடியால், அதுவும் உண்மையே. ஆத்மாக்கள் அவற்றின் அடிப்படை இயல்பைப் பொருத்தவரையில், பிரும்மம் எனப்படும் பரமாத்மாவோடு ஒன்றாக இருக்கின்றபோதிலும், உடல், மனம் ஆகிய உபாதிகளால் (கட்டுப்படுத்தும் உறுப்புகளால்) ஏற்பட்ட பந்தம் (கட்டு) காரணமாக, பிரும்மத்தில் இருந்து வேறானவையாக இருக்கின்றன. இந்த உபாதிகள் உண்மையானவை என்றபோதிலும், அவை நிரந்தரமானவை அல்ல. அவை அனுபவிக்கப்படுகின்ற வரையில்தான் உண்மையானவை. உண்மை ஞானம் கிடைத்து முக்தி அடைந்த பின்னால், ஜீவாத்மாக்களோடு அவையும் பிரும்மத்துடன் ஒன்றிணைந்துவிடுகின்றன. பல்வேறு ஆறுகள், கடலுடன் சங்கமித்த பிறகு பேதமற்ற ஒன்றாகிவிடுவதைப்போல அவை ஒன்றாகி விடுகின்றன என்கிறார் பாஸ்கரர். ஆகையால், உடல்கள், உயிர்கள் ஆகிய பேதம் இருப்பதை ஏற்றுக்கொண்டு அவை அனைத்தும் பின்னர் பிரும்மத்துடன் பேதமின்றி ஒன்றிவிடுகின்றன என்ற தத்துவத்தைக் கூறுவதால், பாஸ்கரரின் கோட்பாடு பேதஅபேதவாதம் எனப்படுகிறது.

எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளைச் செய்வதும், பிரும்மத்தோடு தனது ஆத்மாவை ஐக்கியப்படுத்தி தியானிப்பதுமே முக்திக்கான சாதனம் (வழிமுறை) என்கிறார் பாஸ்கரர். அதேநேரத்தில், உபாசனைக்கான (வழிபாட்டுக்கான) தனிப்பட்ட கடவுள் என்பதில் அவருக்கு உடன்பாடில்லை. அதாவது, பக்தியை முக்திக்கான சாதனமாக பாஸ்கரர் ஏற்கவில்லை. ஆனால், ஞானநிலையில் பிரும்மம் மாத்திரமே இருப்பதாகக் கூறுகின்ற சங்கரர், சாதகர்களின் முன்னேற்றம் கருதி, தனிப்பட்ட வழிபாட்டுக்காக ஷண்மதங்களையும், பஞ்சாயதன வழிபாட்டு முறையையும் ஏற்றுக்கொண்டு வழிமுறைப்படுத்தினார். பிற்காலத்தில் வந்த ராமானுஜர், மத்வர் ஆகியோர், பக்தியே முக்திக்கான வழி என்றும், மற்ற தெய்வ ரூபங்களை ஒதுக்கிவிட்டு விஷ்ணு ரூபத்தில் மாத்திரமே பக்தி செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தத்துவ மதங்களைப் பொருத்தவரை ராமானுஜரும் மத்வரும் வேறுபட்டு இருந்தபோதிலும், வழிபடு மதத்தைப் பொருத்தவரை வைஷ்ணவர்களாகவே இருந்தனர்.

துவைதாத்வைதம்

இதனையொட்டியே, பிற்கால வேதாந்தப் பிரிவுகளை நிறுவியவர்களில் பெரும்பாலானோரும் வழிபாட்டு முறையில் வைஷ்ணவர்களாகவே திகழ்ந்தனர். அந்தவகையில் முக்கியமானவர் 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த நிம்பார்கர். இவர் ஆந்திரத்தில் பிறந்தவர் என்று சிலரும், கிழக்கு மகாராஷ்டிரத்தில் பிறந்தவர் என்று வேறு சிலரும் கூறுகின்றனர். பிரும்மசூத்திரங்களுக்கு வேதாந்த பாரிஜாத சௌரப என்ற பெயரில் அமைந்த விளக்க நூலை இவர் எழுதியுள்ளார். இவரது தத்துவம் துவைதாத்வைதம், அதாவது துவைதஅத்வைதம் எனப்படுகிறது. இவரும் பாஸ்கரரைப் போலவே பேதங்களை ஏற்றுக்கொண்டு, பின்பு அவை பிரும்மத்தில் ஒன்றுபடுவதாகக் கூறுகிறார். அதேநேரத்தில், பிரும்மம் குறிப்பிட்ட வடிவமும் குணநலன்களும் கொண்டது என்றும், பக்தியால் மாத்திரமே முக்தி பெற முடியும் என்றும் நிம்பார்கர் கூறுகிறார். அந்தவகையில், இவர் ராமானுஜரை ஒத்திருக்கிறார்.

ராமானுஜர் பிரும்மத்தை விஷ்ணு என்றும் அவரது இணையான சக்தியை லக்ஷ்மி என்றும் கூறுவதைப்போல, நிம்பார்கர் பிரும்மத்தை கிருஷ்ணர் என்றும் அவரது இணையான சக்தியை ராதை (ராதா) என்றும் கூறுகிறார். ராமானுஜரைப் போலவே இவரும் பிரும்மம், சித், அசித் ஆகிய மூன்று உண்மைகள் இருப்பதாகத் தெரிவிக்கிறார். நிம்பார்கரின் கோட்பாடு - பிரும்மமானது எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகின்றவர் (நியந்த்ரு), அறிவுடைய (சித்) ஆன்மாக்களே அனுபவிக்கின்றவர்கள் (போக்த்ரு), அறிவற்ற (அசித்) பிரகிருதியாகிய உலகம் அனுபவிக்கப்படுவது (போக்யா).

அசித் மூவகையானது. அவை - பொருள்மயமான பிரகிருதியில் இருந்து வெளிப்பட்டதான காணுகின்ற உலகம் எனப்படும் பிராக்ருதம், பிரும்மத்தின் பொருள்சாராத அம்சத்தில் இருந்து வெளிப்பட்டதும், பிரகிருதியில் இருந்து வெளிப்படாததுமான அப்ராக்ருதம் மற்றும் காலம். இவை மூன்றும் அவற்றின் இயல்பின் அடிப்படையில் வெவ்வேறானவை.

சித் எனப்படும் ஜீவன்கள் அணு போன்ற நுண்ணியவை, கணக்கில் அடங்காதவை. அவை ஒவ்வொன்றும் உடலுக்கு முகவராகச் செயல்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் தங்களுக்கு உரிய உடலை இயக்கி, அறிபவராகவும் (ஞாத்ரு), செயல்புரிபவராகவும் (கர்த்ரு), அனுபவிப்பவராகவும் (போக்த்ரு) செயல்படுகின்றன. ஆத்மாக்களில் பாவம் செய்தவை நரகத்துக்கும், புண்ணியம் செய்தவை ஸ்வர்கத்துக்கும் செல்கின்றன. பக்தியாலும் ஞானத்தாலும் விடுதலை அடைந்த ஆன்மாக்கள் பிரும்மத்தோடு ஐக்கியமாகிவிடுகின்றன, மீண்டும் பிறப்பதில்லை. முக்திக்கு வேத விதிப்படியான கடமைகள், ஞானம், பக்தி, இறைவனைச் சரணடைதல் ஆகியவற்றுடன் குருவுக்குக் கீழ்படிதலும் அவசியம்.

சித், அசித் ஆகிய இரண்டுமே உண்மை என்றபோதிலும் அவை பிரும்மத்தைச் சார்ந்திருப்பவை (பரதந்த்ர தத்வங்கள்). பிரும்மமானது அழகும், கருணையும் ஒருங்கே நிறைந்த வடிவம் கொண்டது. அதுவே கிருஷ்ணர். சித் (ஆத்மாக்கள்), அசித் (உலகம்) ஆகிய பேதங்கள், பிரும்மம் எனப்படும் பேதமின்மை ஆகிய இரண்டுமே உண்மைதான். அவை இணைந்திருக்கின்றனவே அன்றி முரண்படவில்லை. கடலும் அதன் அலைகளும்போல, சூரியனும் அதன் கதிர்களும்போல பிரும்மமும் சித், அசித்துகளும் இணைந்தே இருக்கின்றன. எந்த நிலையிலும் சித், அசித்துகள் பிரும்மத்தை விட்டுத் தனியாகப் பிரிவதில்லை என்கிறார் நிம்பார்கர். இவ்வாறு இருவகையாகப் பிரித்து (துவைதமாக) கூறி, பின்பு ஒன்றுபடுத்தி (அத்வைதமாக) கூறுவதால் நிம்பார்கரின் தத்துவம் துவைதஅத்வைதம் எனப்படுகிறது.

சுத்தாத்வைதம்

நிம்பார்கரைப் போலவே, 15-ம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி, 16-ம் நூற்றாண்டின் முற்பாதி வரை வாழ்ந்த வல்லபர் என்ற ஆசார்யரும், கிருஷ்ணரை பிரும்மமாகக் கொண்ட புதிய வேதாந்த தத்துவத்தை முன்வைத்தார். இவர் சத்தீஸ்கர் மாநிலம் சம்பரன் என்ற இடத்தில் பிறந்தவர். இவரது கோட்பாட்டுக்கு சுத்தாத்வைதம், அதாவது சுத்தஅத்வைதம் என்று பெயர். உபநிஷதங்களில் கூறப்படும் பிரும்மம், மகாபாரத இதிகாச நாயகனான கிருஷ்ணர்தான் என்பது இவரது கொள்கை. உபநிஷதங்கள், பிரும்மசூத்திரங்கள், பகவத்கீதை ஆகிய பிரஸ்தான திரையங்களைப்போல, கிருஷ்ணரின் வரலாற்றையும், லீலைகளையும் கூறும் பாகவதமும் உயர்வானது என்பது இவரது கருத்து.

பிரும்மசூத்திரங்களுக்கு பிருஹத்பாஷ்யம் என்ற பெரிய விளக்கவுரையையும், அனுபாஷ்யம் சிறு விளக்கவுரையையும் வல்லபர் எழுதியுள்ளார். இவற்றில் பிருஹத்பாஷ்யம் முழுவதும் மறைந்துவிட, அனுபாஷ்யத்தில் ஒரு பகுதி மட்டுமே தற்போது கிடைக்கப்பெறுகிறது. இந்த அனுபாஷ்யத்தையும் வல்லபரின் மகன் விட்டலநாதர் பூர்த்திசெய்ததாகக் கூறப்படுகிறது. பாகவதத்துக்கு வல்லபர் இயற்றிய சுபோதினி என்ற நூலும் முழுமைபெறாமல் உள்ளது.

வல்லபரின் கோட்பாடு – கிருஷ்ணரே பிரும்மம், அவரைத் தவிர வேறு எவரும் அல்லர். அவர் ஸத் (இருப்பு), சித் (அறிவு), ஆனந்த (மகிழ்வு) மயமாகத் திகழ்கிறார். கிருஷ்ணர் மூன்று வடிவம் எடுத்துள்ளார். முதலாவது, பரப்ரும்மம் எனப்படும் புருஷோத்தமனான கிருஷ்ணர். இரண்டாவது, அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் திகழும் அந்தர்யாமி. மூன்றாவது, கிருஷ்ணர் உறைகின்ற இடமாகத் திகழும் அக்ஷரப்ரும்மம். இந்த அக்ஷரம்தான் அறிவற்ற பிரகிருதியாகவும், அறிவுள்ள ஆன்மாக்களாகவும் (புருஷ) தோற்றம் அளிக்கிறது. இந்த அக்ஷரம், கிருஷ்ணரின் வெளிப்பாடே. இந்த அக்ஷரம், காலம் (நேரம்), கர்மம் (செயல்), ஸ்வபாவம் (இயற்கை) ஆகிய மேலும் மூன்று வடிவங்களையும் எடுக்கிறது.

பிரும்மமாகிய கடவுள், நிர்குணம் (குணமற்றவர்), சகுணம் (நற்குணத்தவர்) ஆகிய இரண்டுமாகத் திகழ்கிறார். அவரது அருளால் அன்றி அவரை நாம் அறியமுடியாது. தமது மாயாசக்தியால் அந்த இறைவன், எந்த நேரத்திலும் எதுவாக வேண்டுமானாலும் மாறலாம். இந்த உலகுக்குப் பொருள் வகையிலும், செயலாற்றியவர் என்றவகையிலும் அவரே காரணமாகத் திகழ்கிறார். தனது இயல்பினாலேயே அவர் இந்த உலகத்தைத் தோற்றுவித்தார். சத், சித், ஆனந்தம் என்ற தனது மூவியல்பால் அந்த இறைவன் எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கின்றபோதிலும், படைக்கப்பட்ட இந்த உலகில் அம்மூன்றின் பரிணாமங்கள் வெவ்வேறானவை. பொருள்கள் ஸத் எனப்படும் இருப்பை மாத்திரம் கொண்டிருக்க, ஆன்மாக்கள் இருப்போடு சித் எனப்படும் அறிவையும் கொண்டிருக்க, அந்த இரண்டுடன் ஆனந்தம் எனப்படும் மூன்றாவதையும் முழுமையாகக் கொண்டிருப்பவர் பிரும்மமாகிய இறைவனே.

மாற்றமடையாததும், எங்கும் நிறைந்திருப்பதுமே இறைவனின் சுய இயல்பு என்றபோதிலும், தனது எண்ணத்தால் இந்த உலகை இறைவன் படைத்ததன் காரணமாக, அவர் பல்வேறு மாற்றங்களாகவும் அறிந்துகொள்ளக்கூடிய இலக்காகவும் திகழ்கிறார். பிரும்மமாகிய இறைவனிடமிருந்து தோன்றிய இந்த உலகம் அழிவதில்லை, அவரது சங்கல்பத்தால் மீண்டும் அவரிடமே ஒடுங்குகிறது.

நெருப்பில் இருந்து கனல்கள் தோன்றுவதுபோல, அக்ஷரபிரும்மத்தில் இருந்து ஆன்மாக்கள் தோன்றியுள்ளன. பிரும்மத்தின் அழிவில்லா உறுப்புகளான அந்த ஆன்மாக்கள், அளவில் அணுவை ஒத்தவை. ஆன்மாக்களில் மூவகை உண்டு. அவை – புஷ்டி, மர்யாதா, பிரவாஹ. புஷ்டி வகையைச் சேர்ந்த ஆன்மாக்கள் கடவுளின் கருணையினால் எப்போதுமே அவர் மீது பக்தியுடன் திகழ்கின்றன. ஆகையால் அவருடனேயே இணைந்துள்ளன. இரண்டாவது வகையைச் சேர்ந்த மர்யாதா ஜீவன்கள், வேதத்தில் கூறப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றி, பக்தி மார்க்கத்திலும் செல்கின்றன. இவ்வகையைச் சார்ந்தவை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு இறைவனை அடைகின்றன. மூன்றாவது வகையைச் சேர்ந்த பிரவாஹ ஜீவன்களுக்கு, உலகியல் இன்பங்களிலேயே நாட்டம் இருப்பதால் மீண்டும் மீண்டும் பிறவிச் சுழலில் அகப்பட்டு உழல்கின்றன. சத்சங்கம் எனப்படும் நல்லோர் தொடர்பு கிடைப்பதன் மூலம், இவ்வகை ஜீவன்களுக்கும் பின்னர் பக்தி ஏற்பட்டு இறைவனை அடைகின்றன.

வெறும் ஞானத்தால் பிரும்மத்தை அறிகின்ற ஜீவன்கள், அக்ஷரப்ரும்மத்தில்தான் இணையமுடியும். பிறகு பக்தியின் மூலமே அவர்களும் இறைவனுடன் ஒன்றிணையமுடியும் என்கிறார் வல்லபர். அவரது கருத்துப்படி, மர்யாதா, புஷ்டி ஆகிய இருவகை பக்திகள் உண்டு. வேத சாஸ்திரங்களில் கூறியுள்ள முறைப்படி, கடமைகளை ஆற்றியபடி அதன் அடிப்படையில் தானாக வளர்த்துக்கொள்ளும் பக்தி மர்யாதா பக்தி ஆகும். அதேநேரத்தில், தனது சுயமுயற்சி ஏதுமின்றி இறைவனின் கருணையால் அவர் மீது ஒருவர் கொள்கின்ற பக்தியே புஷ்டி பக்தி ஆகும். இந்த புஷ்டி பக்தியே உயர்வானது என்கிறார் வல்லபர். ஆகையால், அவரது தத்துவ வழிமுறை புஷ்டி மார்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணர் வடிவில் இறைவனை வழிபடுகின்றனர்.

அசிந்த்யபேதாபேதம்

நிம்பார்கரின் வைஷ்ணவ வேதாந்தப் பிரிவான துவைதாத்வைதம், ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்தையும், வல்லபரின் வைஷ்ணவ வேதாந்தப் பிரிவான சுத்தாத்வைதம், சங்கரரின் அத்வைதத்தையும் பெரிதும் ஒத்திருக்கிறது என்றால், மத்வரின் துவைதத்தை ஒத்த வைஷ்ணவ வேதாந்தப் பிரிவாக அசிந்த்யபேதாபேதம் திகழ்கிறது. இதனை உருவாக்கியவர் கி.பி. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பலதேவர்.

துவைத சிந்தனையால் ஈர்க்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் (கி.பி. 1485-1533), வங்காளத்தில் கிருஷ்ண பக்தி கொண்ட மாபெரும் வைஷ்ணவ மார்க்கத்தை ஏற்படுத்தினார். இந்த மார்க்கத்தைச் சேர்ந்தவரான பலதேவர்தான் பின்னர் அசிந்த்ய பேதாபேதம் என்ற தத்துவத்தை முன்வைத்தார். பெரும்பாலும் துவைதத்தை ஒத்திருந்தாலும், சில அம்சங்களில் அதில் இருந்து வேறுபட்டதாக இந்தத் தத்துவம் உள்ளது. தனது தத்துவத்தை விளக்க பிரும்மசூத்திரங்களுக்கு கோவிந்தபாஷ்யம் என்ற பெயரிலான விளக்கவுரையை எழுதியுள்ள பலதேவர், சித்தாந்த ரத்னா என்ற மற்றொரு நூலையும் இயற்றியுள்ளார்.

அசிந்த்ய என்றால் சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்று பொருள். பலதேவரின் தத்துவப்படி விஷ்ணு, ஹரி எனப்படும் கிருஷ்ணரே பிரும்மம். அவர் எண்ணற்ற, நமது சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட (அசிந்த்ய) நற்குணங்கள் கொண்டவர். அவரே நமது உபாசனைக்கு உரிய சகுண பிரும்மம். அவரை நிர்குணமாகக் கூறுவதன் பொருள், அவர் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களையும் கடந்தவர் என்பதே. வேதத்தின் மூலமே அவரை அறியமுடியும்.

பிரும்மத்திடம் (கடவுளிடம்) பராசக்தி (உயர்ந்த ஆற்றல்), அபராசக்தி (கீழான ஆற்றல்), அவித்யாசக்தி (அறியாமை ஆற்றல்) என்ற மூவகை ஆற்றல்கள் உண்டு. இதில் தனது உயர்ந்த ஆற்றலால், இந்த உலகை உருவாக்கிய (கருத்துமுதல்) காரணமாக அவர் திகழ்கிறார். மற்ற இரு ஆற்றல்களால் இவ்வுலகின் பொருள் சார்ந்த (பொருள்முதல்) காரணமாகவும் அவரே விளங்குகிறார். பிந்தைய இரு ஆற்றல்களின் காரணமாக பிரகிருதி எனப்படும் இயற்கையும், உயிர்களும் தோன்றின. படைப்பு என்பது இறைவனின் தன்னிச்சையான செயல். அதேநேரத்தில், தனிப்பட்ட ஆன்மாக்களின் கர்ம வினைகளைப் பொருத்தே அவர் இதனைப் படைக்கிறார்.

ஆன்மாக்கள் பல. ஒவ்வோர் ஆன்மாவும் அணு அளவிலானது. ஆன்மா நிரந்தரமானது. அதுவே அறிவாகவும், அறிபவராகவும் திகழ்கிறது. இதேபோல் அனுபவிப்பவராகவும், உடலின் முகவராகவும் திகழ்ந்தாலும், ஆன்மா சுதந்தரமானது அல்ல. பக்தி மாத்திரமே முக்திக்கு வழி. தியானம், உபாசனை எனப்படும் வழிபாடு ஆகியவையும் பக்தியின் வடிவங்களாக உள்ளபோதிலும், இறைவன் மீதான பிரேமபக்தி (கனிந்த அன்பிலான பக்தி) மூலமே இறைவனை அறியமுடியும். வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளைச் செய்வதால் மனம் தூய்மை அடையும். வேதங்களைப் படிப்பது இறைவனை நாடுவதற்கான சாதனைக்கு உதவும். ஆனால், இறைவனின் கருணையால் மாத்திரமே எந்தவொரு ஆன்மாவும் முக்திபெற முடியும். முக்தி என்பது இறப்புக்குப் பிறகு இறைவனின் உலகில் (வைகுந்தத்தில்) அவருக்கு அருகே இருப்பதே. அந்த நிலையிலும் பரமாத்மாவோடு ஜீவாத்மா ஐக்கியமாகிவிடுவதில்லை, தனித்தே இருக்கும். அதேநேரத்தில் உயிருடன் இருக்கும்போதே விடுதலை அடைகின்ற ஜீவன்முக்தி என்பது கிடையாது என்பதே பலதேவரின் அசிந்த்ய பேதாபேத தத்துவம்.

இவ்வாறாக, சங்கரருக்குப் பிறகு பாஸ்கரரைத் தவிர, ராமானுஜர், மத்வர், நிம்பார்கர், வல்லபர், பலதேவர் ஆகியோர் வைஷ்ணவமயமாகவே வேதாந்த தத்துவங்களை மொழிந்துள்ளனர். இவர்களுக்கு மாறாக, சிவபெருமானை பிரும்மமாகக் கொண்ட வேதாந்த தத்துவத்தை மொழிந்தவர் ஸ்ரீகண்டர். அவரது தத்துவம் குறித்து அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...

 

]]>
http://www.dinamani.com/junction/thaththuva-dharisanam/2016/aug/10/43.-பார்வைகள்-பலவிதம்-2555253.html
2547551 ஜங்ஷன் தத்துவ தரிசனம் 41. ஒன்றுதான் ஆனாலும்... பத்மன் Tuesday, July 26, 2016 05:47 PM +0530  

ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட அரசு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சிறப்புத் தகுதியும், கூடுதல் மதிப்பும், சிறப்பு உரிமைகளும் உண்டல்லவா? அதுபோல்தான் வேதாந்தத்தில் பரமாத்மாவும், ஜீவாத்மாக்களும் ஒன்றுதான் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்கூட, சில சிறப்புத்தன்மைகளால் ஜீவாத்மக்களைவிட பரமாத்மா மேலானது என்று வாதிடும் தத்துவம்தான் விசிஷ்டாத்வைதம்.

விசிஷ்டாத்வைதத்தை விசிஷ்ட அத்வைதம் என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். அத்வைதம் என்பது இருமையற்ற ஒருமை என்பதை அறிவோம். விசிஷ்ட என்றால் விசேஷத் தன்மை வாய்ந்த, அதாவது சிறப்புத்தன்மையுடன் கூடிய என்று பொருள். ஆக, விசிஷ்டாத்வைதம் என்றால் சிறப்புடை ஒருமை என்று கூறலாம்.

பரமாத்மாவும், ஜீவாத்மாக்களும் வேறு வேறு அல்ல, பரமாத்மாவின் பிரதிபலிப்புதான் ஜீவாத்மா. ஆகையால், இருப்பது பரப்பிரும்மம் மாத்திரமே என்கிறது அத்வைதம். விசிஷ்டாத்வைதம் இதில் இருந்து சற்று மாறுபடுகிறது. “பரமாத்மா எனப்படும் பரப்பிரும்மம்தான் அனைத்திலும் வியாபித்திருக்கிறது என்றவகையில் இரண்டும் ஒன்றே என்றபோதிலும், ஜீவாத்மாக்களைவிட மேம்பட்டதாக பரப்பிரும்மம் எப்போதும் இருப்பதால் அது சற்று வேறுபட்டது, சிறப்புடையது” என்கிறது விசிஷ்டாத்வைதம். ஆற்றில் உள்ள நீர்த்துளிகள் எல்லாம் சேர்ந்து ஆறு என்று ஒற்றைச் சொல்லில் அழைக்கப்பட்டாலும், ஆற்று நீர்த்துளியைவிட ஆறு பெரியதும், சிறப்பும் வாய்ந்தது அல்லவா? அதைப்போல்தான் பரமாத்மாவும் ஜீவாத்மாக்களோடு ஒன்றியிருக்கின்றபோதிலும், அவற்றில் இருந்து மேம்பட்ட தனித்தன்மை வாய்ந்த சிறப்புடையதாகவும் திகழ்கிறது என்கிறது விசிஷ்டாத்வைதம்.

அத்துடன், பரப்பிரும்மத்தை எவ்வித குணங்களும் அற்ற நிர்குணமாய் அத்வைதம் கூறுவதை விசிஷ்டாத்வைதம் ஏற்றுக்கொள்ளவில்லை. நிர்குண பிரும்மத்துக்குப் பதிலாக நற்குண பிரும்மத்தை முன்வைக்கிறது. அதாவது, ஜீவாத்மாக்கள் தங்களது முக்திக்காக சகுண (நல்ல குணங்கள் நிரம்பிய) பிரும்மத்தை ஆராதிக்கலாம் என்று அத்வைதம் கூறுகிறதல்லவா, அந்த நற்குணங்கள் எல்லாம் நிரம்பப் பெற்றதாகவே பரப்பிரும்மம் இருக்கிறது என்கிறது விசிஷ்டாத்வைதம். மேலும், அத்வைத ஆசார்யர் ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுகின்ற மாயாவாதத்தை விசிஷ்டாத்வைதம் அடியோடு நிராகரிக்கிறது. பிரும்மம் மட்டுமே உண்மை, உலகம் ஒரு மாயை என்பதே சங்கரரின் அத்வைதம். ஆனால், பிரும்மத்தின் ஓர் அங்கமாகிய உலகமும் உண்மைதான் என்கிறது விசிஷ்டாத்வைதம்.

adi_shankaracharya_wallpaper.jpg 

பிரும்மத்தை நிர்குணமாகக் கூறுவது பிரும்மமே இல்லை என்று கூறுவதற்கு ஒப்பாகும் என்றும், இவ்வாறு கூறுவதும் உலகம் மாயை என்று மாயாவாதம் பேசுவதும் பௌத்தத்தின் தாக்கத்தால் விளைந்தது என்றும் குற்றம் சாட்டுகின்ற விசிஷ்டாத்வைத ஆசார்யர் ஸ்ரீ ராமானுஜர், இதன் அடிப்படையில் ஸ்ரீ ஆதிசங்கரரை பிரசன்ன புத்தர் (மறைமுக புத்தர்) என்று விமரிசிக்கிறார். அக்காலத்தில், படித்தவர்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்ற தத்துவங்களான பௌத்தம், சமணம், சாங்கியம், மீமாம்சை ஆகியவற்றை ஒருபுறம் வாதத்திறமையால் சமாளித்தும், பாமரர்களிடையே மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்து மூர்க்கத்தனம் நிரம்பியவையாக காட்சியளித்த காபாலிகம், தந்திரம் போன்றவற்றை சீர்திருத்தியும் வேத, உபநிஷதங்களின் அடிப்படையிலான வேதாந்தக் கருத்துக்கு பாரதம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனிப்பெரும் செல்வாக்கை நிலைநாட்டிய பெருமை ஆதிசங்கரரையே சாரும். இருப்பினும், அவர் வகுத்த பாதையில் சற்று பயணித்து புதிய மார்க்கங்களை பிற்கால வேதாந்திகள் உருவாக்கினர். அவர்களில் முக்கியமானவர், விசிஷ்டாத்வைதத்தை வகுத்தளித்த ராமானுஜர்.

சங்கரரைப் போலவே, ராமானுஜரும் பிரும்மசூத்திரத்துக்கு விளக்கவுரை எழுதியிருக்கிறார். அதற்கு ஸ்ரீ பாஷ்யம் என்று பெயர். மேலும், பகவத்கீதைக்கு கீதாபாஷ்யம் என்ற தலைப்பிலான விளக்கவுரையையும், வேத – உபநிஷதக் கருத்துகளுக்கான விளக்கத்தை வேதாந்த சங்கிரஹ என்ற தலைப்பிட்டும் எழுதியுள்ளார். மேலும் வேதாந்த சார, வேதாந்த தீப, சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுந்த கத்யம் ஆகிய தத்துவ நூல்களையும் நித்ய கிரந்தம் என்ற வழிபாட்டுச் சடங்குகள் சார்ந்த நூலையும் இயற்றியுள்ளார்.

தனக்கு முன்பே விசிஷ்டாத்வைத ஆசார்யர்கள் இருந்ததாக வேதாந்த சங்கிரஹத்தில் ராமானுஜர் கூறுகிறார். போதாயனர், திரமிடர், தங்கர், குஹதேவர், கபர்தீ, பரூச்சி ஆகியோரை விசிஷ்டாத்வைத ஆசார்யர்களாக அவர் குறிப்பிடுகிறார். இவர்களில், போதாயனரின் உபநிஷத பாஷ்யங்கள் போதாயன விருத்தி என்ற பெயரில் தற்போது கிடைக்கப்பெற்றாலும், மற்றவர்களது படைப்புகள் தற்போது காணப்படவில்லை.

சங்கரரைப் போலவே உபநிஷதக் கருத்துகளையே தனது கொள்கைக்கான ஆதாரமாக ராமானுஜர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், தனது சிறப்புடை ஒருமையை (விசிஷ்டாத்வைதத்தை) நிரூபிக்க, அந்த உபநிஷதக் கருத்துகளுக்கும் நேரடியான பொருள் அன்றி சிறப்புத்தன்மை வாய்ந்த விளக்கத்தை எடுத்துரைக்கிறார்.

ramanujar.jpg 

அந்தவகையில், அத்வைதம் சார்ந்ததாகக் கருதப்படும் உபநிஷதங்களின் முக்கியக் கருத்துகளுக்கு ராமானுஜர் விசிஷ்டாத்வைதக் கண்ணோட்டத்தில் தரும் விளக்கங்களை தற்போது காண்போம். ‘சர்வம் கல்வ இதம் பிரும்ம’ என்கிறது சாந்தோக்ய உபநிஷதம். இதன் நேரடிப் பொருள் – ‘இவை அனைத்தும் பிரும்மமே. ராமானுஜர் தருகின்ற சிறப்புப் பொருள் – இங்கே இவை என்பது பரப்பிரும்மம் எனப்படும் ஈஸ்வரன், அதன் அறிவுடை அங்கமாக விளங்கும் அதாவது சித் பிரும்மமாக விளங்கும் ஜீவர்கள், அதன் அறிவற்ற அங்கமாக அதாவது அசித் பிரும்மமாக விளங்கும் பொருள்மய உலகம் ஆகிய மூன்றைக் குறிக்கிறது. இந்த மூன்றும் ஒருங்கிணைந்ததே பிரும்மம்’ என்கிறார் ராமானுஜர். ஆக சித், அசித், ஈஸ்வரன் ஆகிய வேறுபட்ட மூன்று தத்துவங்கள் ஒன்றுபட்டிருப்பதே பிரும்மம், இந்த மூன்றுமே உண்மையானவை, எதுவுமே மாயையோ பொய்யோ அல்ல என்கிறார்.

அயம் ஆத்மா பிரும்ம’ என்பது மாண்டூக்ய உபநிஷதத்தின் மகா வாக்யம். இதன் நேரடிப் பொருள், இந்த ஆன்மாவே பிரும்மம்; அதாவது, ஆன்மாவாக எது திகழ்கிறதோ அதுவேதான் பிரும்மம் என்பதுதான். இதற்கு ராமானுஜர் தரும் சிறப்புப் பொருள் – சித், அசித், ஈஸ்வரன் ஆகிய மூன்றும் இணைந்ததே பிரும்மம் என்பது விளங்கிக்கொண்டபடியால், அதாவது அனைத்துமே பிரும்மம் என்பதை அறிந்துகொண்டபடியால், ஜீவாத்மாவானது பரமாத்மாவாகிய பிரும்மத்தில் இருந்து வேறுபட்டதல்ல.

சாந்தோக்ய உபநிஷதத்தின் மிகச்சிறந்த மகா வாக்கியம், தத்வமஸி (தத் த்வம் அஸி). இதன் பொருள், அது நீயேதான். இங்கு அது என்பது பிரும்மம், நீ என்பது ஜீவாத்மா. ஆக, ஜீவாத்மாதான் பரமாத்மா, இரண்டும் வேறு வேறு அல்ல என்கிறது அத்வைதம். இதற்கு ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் தருகின்ற சிறப்புப் பொருள் – அனைத்தின் உள்ளிருப்பாகவும் அந்தப் பிரும்மம் இருப்பதால், உனக்குள்ளும் அந்தப் பிரும்மம் இருக்கிறது என்று இதற்குப் பொருளே அன்றி, நீயே (தானே) பிரும்மம் ஆகிவிட முடியாது என்பதே. அதாவது, உயிரினங்கள் (சித் ஆகிய ஜீவர்கள்), பொருள் மய உலகம் (அசித்) ஆகியவற்றை உடலாகக் கொண்டுள்ள அந்தப் பரப்பிரும்மமே, ஒவ்வொரு ஜீவருக்குள்ளும் உள்முகமான ஆத்மாவாகவும் திகழ்கிறார் என ராமானுஜர் கூறுகிறார்.

இதேபோல் நேதி, நேதி என்ற உபநிஷதக் கருத்துக்கு இதுவன்று, இதுவன்று என்பது நேரடிப் பொருள். இதற்கு அத்வைதம் தரும் பொருள், இதுவா, இதுவா என்று தேடிக்கொண்டே போனால் எந்தவொரு விளக்கத்துக்கும் அகப்படாததே பிரும்மம் என்பதுதான். இதற்கு விசிஷ்டாத்வைதம் தருகின்ற சிறப்புப் பொருள் – இது மட்டுமே அன்று, இது மட்டுமே அன்று. அதாவது, பிரும்மம் என்பது இதுமட்டும்தான் என்று வகைப்படுத்திவிட முடியாது, எண்ணிலடங்கா பல குணங்களைப் பூண்டது பிரும்மம்.

இவ்வாறாக, பிரும்மம் என்பது ஒருமைதான் என்றபோதிலும், அதற்கு சித், அசித் ஆகிய விசேஷ குணங்கள் இருப்பதால் அது சிறப்புடை ஒருமை என்கிறது ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். மரம் ஒன்றுதான் என்றபோதிலும், அதற்குப் பல கிளைகள் உள்ளன. இந்தக் கிளைகள் ஒன்றோடு ஒன்று வேறுபட்டவை என்றபோதிலும், அவை மரம் என்ற ரீதியில் ஒன்றாகவே உள்ளன என்பதைப்போல்தான் சித், அசித், ஈஸ்வரன் ஆகிய மூன்றும் இணைந்த வகையில் பிரும்மம் ஒன்றாய் இருக்கிறது என்கிறது விசிஷ்டாத்வைதம்.

சாங்கிய தரிசனம், பிரகிருதி, புருஷன் என்று கூறுவதைத்தான் விசிஷ்டாத்வைதம் முறையே அசித், சித் என்று கூறுகிறது. சாங்கியம் ஈஸ்வரனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், விசிஷ்டாத்வைதம் அசித் (பிரகிருதி), சித் (புருஷன்) ஆகியவற்றுடன் ஈஸ்வரனையும் முன்னிறுத்துகிறது. சித்தும், அசித்தும் புருஷனின் இருவித வடிவங்கள், அதாவது தோற்றங்கள் என்றால், அந்தப் புருஷனின் சாராம்சமாக இருப்பதே ஈஸ்வரன் என்கிறது. அந்தப் புருஷன் நிர்குணமுடையது அல்ல, கல்யாண குணங்கள் (நற்குணங்கள்) நிரம்பியது. இதுவே புருஷனின் முதன்மைக் குணம். அது மாற்றம் இல்லாதது. அதனுடைய இரண்டாவது குணமாகிய சித், அசித் என்ற வடிவத்தில்தான் பரிணாமங்கள் (மாற்றங்கள்) தோன்றுகின்றன.

அசித் எனப்படுவது உயிரற்ற பொருள்மயமான உலகம். தன்னைப் பற்றிய விழிப்புணர்வு கொண்ட அனைத்துமே சித் எனப்படும் ஜீவன்கள் ஆகும். அதாவது, ஆத்ம அறிவு கொண்ட அனைத்துமே சித், ஜீவன்கள் ஆகும். இந்த ஜீவன்கள் மூவகைப்படும். முதலாவது, ஒருபோதும் சம்சார சாகரத்தில் (பிறவிப் பெருங்கடலில்) ஆட்படாமல் எப்போதுமே சுதந்தரமாக இருப்பவை. இவற்றுக்கு நித்ய என்று பெயர். இரண்டாவது வகையைச் சேர்ந்தவை, பிறவிகளை எடுத்து, விடுதலையை அடைந்தவை. இவற்றுக்கு முக்த என்று பெயர். மூன்றாமவை, சம்சார சாகரத்தில் கட்டுண்டு கிடப்பவை. இவற்றுக்கு பத்த என்று பெயர்.

சித், அசித் ஆகியவற்றை ஆட்சி செய்வதே ஈஸ்வரன். இந்த மூன்றும் இணைந்த நிலையே பிரும்மம். அதுவே சர்வேஸ்வரன். அந்தப் பிரும்மத்தில் இருந்தே உலகம் தோன்றி, இயங்கி, மீண்டும் ஒடுங்குகிறது. முக்தி அடைவதே ஜீவன்களின் லட்சியம். அதற்கு அந்த சர்வேஸ்வரனிடம் பக்தியும், பிரபத்தியும் (சரணடைதல்) அவசியம் என்கிறார் ராமானுஜர். பிரும்மம், சர்வேஸ்வரன் என்று தான் குறிப்பிடுவது நாராயணன் எனப்படும் விஷ்ணுவே என்கிறார் அவர். அந்த விஷ்ணுவின் ஆற்றலாக (சக்தியாக) இருப்பது ஸ்ரீ எனப்படும் லக்ஷ்மி என்கிறார். ஆகையால், ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், ஸ்ரீ சம்பிரதாயம் என்றும் ஸ்ரீ வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது.

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்பூதூரில் கி.பி. 1017-ம் ஆண்டில் தோன்றியவர் ராமானுஜர். மனிதர்களின் முழுமையான ஆயுட்காலம் என்று மதிக்கப்படும் 120 ஆண்டுகள் வாழ்ந்த பரிபூரணரான இவர், தன்னால் ஸ்ரீவைஷ்ணவத்தின் கோட்டையாக உருவாக்கப்பட்ட திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ஜீவன்முக்தர் ஆனதாகக் கருதப்படுகிறது. (ஆயினும், ராமானுஜர் 80 ஆண்டுகள் வாழ்ந்ததாக சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்). ஸ்ரீரங்கம் கோவிலில் இருப்பது ராமானுஜரின் சிலை அல்ல; பல ஆண்டுகளாகக் கெடாமல் இருக்கும் தானாகிய திருமேனி எனப்படும் ராமானுஜரின் உடலேதான் என்று கூறப்படுகிறது.

ராமானுஜர் என்ற பெயருக்கு ராமனின் தம்பி என்று பொருள். லக்ஷ்மணனுக்கு இந்தச் சிறப்புப் பெயர் உண்டு. அந்தவகையில் ராமானுஜர், லக்ஷ்மணனின் அவதாரமாகவும், அதற்கு முந்தைய ஆதிசேஷனின் அவதாரமாகவும் வைஷ்ணவர்களால் மதிக்கப்படுகிறார். வைணவ மதத்தின் தீவிர வளர்ச்சிக்கு வித்திட்ட ராமானுஜர் சைவ, வைஷ்ணவ பேதமில்லாத அத்வைதத்தைப் பின்பற்றும் ஸ்மார்த்த பிராமண குலத்தில் வடமர் என்ற உட்சாதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவரது தந்தை பெயர் கேசவ சோமயாஜி, தாயார் பெயர் காந்திமதி (நெல்லை சங்கரன்கோவில் அம்மனின் பெயர்). ராமானுஜருக்குப் பிறகுதான், ஸ்ரீவைஷ்ணவம் தனிப்பெரும் மதப் பிரிவாக உருவெடுத்தது.

திருமணத்துக்குப் பிறகு, காஞ்சிபுரத்தில் வேதக் கல்வி பயிலச் சென்ற ராமானுஜர், யாதவப்ரகாசர் என்ற அத்வைதியிடம்தான் பாடம் பயின்றார். ஆனால், அவர் கூறிய அத்வைதக் கருத்துகள் ராமானுஜரின் சிந்தனையோட்டத்துக்கு ஒத்துப்போகவில்லை. ஆகையால், குருவோடு முரண்பட்டு பல வாக்குவாதங்களைப் புரிந்த அவர், தானாகவே வேதங்களைப் படிக்கத் தொடங்கினார். ஸ்ரீவைஷ்ணவரும் வேதாந்தியுமான (ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களை உபயவேதாந்தி என்றே அழைத்துக்கொள்வார்கள்) யமுனாசார்யரின் கருத்துகள் ராமானுஜரைப் பெரிதும் கவர்ந்தன. பின்னர், பெரியநம்பி என்ற குருவிடம் ஸ்ரீவைஷ்ணவ தீட்சை பெற்ற ராமானுஜர், இல்லறத்தைத் துறந்து துறவியானார். பல இடங்களில் ஸ்ரீவைஷ்ணவ மடங்களை இவர் ஸ்தாபித்தார். ஸ்ரீவைஷ்ணவத் துறவிகள் பெரும்பாலும் இல்லறத்தில் இருந்து சன்யாசம் பெறுபவர்களாகவே உள்ளனர். அவர்களில் மடத்தின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள் ஜீயர்கள் எனப்படுகின்றனர். ராமானுஜருக்கு யதிராஜர் (அதாவது துறவிகளின் தலைவர்), எம்பெருமான், உடையவர் எனச் சிறப்புப் பெயர்கள் உண்டு.

ராமானுஜருக்கு முன்பே ஓரளவு விசிஷ்டாத்வைதக் கருத்துகளும், விஷ்ணு வழிபாடும் இருந்திருக்கின்றன. அவற்றை முறைப்படுத்தி, பெரிய தத்துவமாகவும், மதமாகவும் வளர்த்த பெருமை ராமானுஜரையே சாரும். வேத காலத்தில் உபேந்திரனாக, அதாவது இந்திரனுக்குத் தம்பியாக இருந்த விஷ்ணு, பிற்காலத்தில் காக்கும் கடவுளாகவும், புருஷோத்தமனாகவும், சர்வேஸ்வரனாகவும் உயர்ந்தார். இதேபோல் ராமர், கிருஷ்ணர், பரசுராமர் உள்ளிட்ட 10 அவதாரங்கள் தவிர தத்தாத்ரேயர், சாங்கியம் தந்த கபிலர், ஜைனத்தின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபர், ஏன் புத்தரேகூட விஷ்ணுவின் 21 அவதாரங்களாகக் கருதப்படும் காலம் ஏற்பட்டது.

அதேநேரத்தில், தமிழகத்தில் மாயோன், திருமால் என்ற பெயரில் விஷ்ணு வழிபாடு சங்க காலந்தொட்டே இருந்துவருகிறது. (மை, மால் என்ற சொல்லுக்கு கரிய என்று பொருள். உருவகக் கடவுளான விஷ்ணு கரிய நிறம் படைத்தவராகக் கருதப்படுவதுடன், அவரது அவதாரமாக மதிக்கப்படும் கிருஷ்ணரும் கரிய நிறத்தவரே). சங்க இலக்கியமான பரிபாடலில், சேயோன் (சிவந்த நிறத்தவன்) எனப்படும் முருகனையும், மாயோன் எனப்படும் விஷ்ணுவையும் புகழ்ந்து பல பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. பிற்காலத்தில் நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட 12 வைணவ ஆழ்வார்களின் பாசுரங்களும் (நாதமுனிகள் தொகுத்த நாலாயிர திவ்யபிரபந்தம்) ராமானுஜரின் கருத்துகளுக்கு வலு சேர்த்தன.

வேத, உபநிதஷதக் கருத்துகளோடு ஆழ்வார்களின் பாசுரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனது ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைக் கட்டமைத்தார் ராமானுஜர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தமது மார்க்கத்தில் உரிய பங்களித்த சமூக சீர்திருத்தவாதியாகவும் அவர் மதிக்கப்படுகிறார். ராமானுஜரின் மறைவுக்குப் பின்னர், ஸ்ரீவைஷ்ணவத்தில் வடகலை, தென்கலை என்ற முக்கிய வேறுபாடு தோன்றியது. தமிழகத்தின் வடக்கில் உள்ள காஞ்சியைச் சேர்ந்த வேதாந்த தேசிகர் வழிவந்த ஆசார்யர்களைப் பின்பற்றுவோர் வடகலையினர் என்றும், தமிழகத்தின் தெற்கில் உள்ள ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பிள்ளைலோகாசார்யர், மணவாள மாமுனிகள் ஆகிய ஆசார்யர்களைப் பின்பற்றுவோர் தென்கலையினர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அக்காலத்தில் மற்ற தத்துவங்களோடு கடும் விவாதம் நடைபெற்ற காஞ்சியைச் சேர்ந்தவர்கள் அதற்கு உதவிகரமான சம்ஸ்கிருத உபநிஷதங்கள், தத்துவ நூல்களைப் பயின்றதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அதேநேரத்தில், பாமரர்கள் நிறைந்த ஸ்ரீரங்கத்தில் பக்தி பஜனைகள், சொற்பொழிவு ஆகியவையே கோலோச்சியதால் அதற்கு உதவிகரமான தமிழில் உள்ள ஆழ்வார் பாசுரங்களை அதிகம் பயின்று அதற்கு முக்கியத்துவம் தந்தனர். ஆகையால், வடகலையினர் வடமொழியான சம்ஸ்கிருதத்துக்கும், தென்கலையினர் தென்மொழியான தமிழுக்கும் முக்கியத்துவம் தருவது முக்கிய வேறுபாடாக உள்ளது. மேலும், தத்துவ அடிப்படையில் வடகலையினருக்கு, முக்தியை வேண்டி தன்னை இறைவனிடம் ஒப்படைக்கும் பிரபத்தி எனப்படும் சரணாகதிதான் முக்கியமானது. ஆனால் தென்கலையினருக்கோ, முக்திக்காக சரணாகதி அடைந்து இறைவனை நிர்பந்திப்பது தகாது; ஆகையால், இறைவனின் விருப்பப்படி நமக்கு எப்போது வேண்டுமானாலும் முக்தி கிடைக்கட்டும், நமக்கு அவரது நினைப்பே போதும் என்ற பக்தியே பிரதானம். வடகலையினருக்கு, விஷ்ணுவின் இணையான ஸ்ரீ எனப்படும் மகாலக்ஷ்மி (திருமகள்), விஷ்ணுவைப் போலவே ஆண்டவன், பரமாத்மா, முக்திக்குப் பரிந்துரைப்பவர். ஆனால் தென்கலையினருக்கோ, மகாலக்ஷ்மி முக்திக்குப் பரிந்துரைப்பவராக இருக்கின்றபோதிலும் அவரும் ஜீவாத்மாவே, அவரே ஆண்டவன் அல்ல.

ராமானுஜரும், அவரது சீடர்களும் சைவனான இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் துன்புறுத்தப்பட்டதாகவும், இதனால் அவர்கள் கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்த மேலக்கோட்டைக்குச் சென்று சிலகாலம் வாழ்ந்ததாகவும் வைஷ்ணவ இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால், ராமானுஜர் முக்தியடைந்த சில காலத்துக்குப் பிறகுதான் இரண்டாம் குலோத்துங்கச் சோழன், மன்னனாகப் பட்டமேறினார் என்றும் சைவராக இருந்தாலும் அனைத்துச் சமயங்களையும் அவர் போற்றிப் பாதுகாத்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாரதத்தின் வட மாநிலங்களில் பக்தி இயக்கம் - குறிப்பாக கிருஷ்ண (விஷ்ணு) பக்தி இயக்கங்கள் உருவானதற்கு ராமானுஜரின் விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயக் கருத்துகளின் தாக்கமே பெரிதும் காரணம். வடமாநிலங்களில் செல்வாக்குப் பெற்றுத் திகழும் ஸ்ரீ ராமானந்த சம்பிரதாயம், குஜராத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ ஸ்வாமிநாராயண் சம்பிரதாயம் ஆகியவையும் வைஷ்ணவ விசிஷ்டாத்வைதத்தையே பின்பற்றுகின்றன. இவற்றுக்கு மாறாக, ஸ்ரீகண்டரால் ஸ்தாபிக்கப்பட்ட சைவ விசிஷ்டாத்வைதம் சிவனைப் பரமாத்மாவாகக் கொண்டு சற்று வித்தியாசமான விசிஷ்டாத்வைதத்தை உரைக்கிறது. (இதுபற்றி பின்னர் காண்போம்).

அதேநேரத்தில், விஷ்ணுவை பரமாத்மாவாக வரித்துக்கொண்டு, ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு என்றும், பக்தியின் மூலம் பரமாத்மாவின் அருளால் ஜீவாத்மா முக்தி அடைகின்றபோதிலும் பரமாத்மாவுடன் ஒன்றுபடாமல் தனித்தேதான் இருக்கும் என்றும் ஒருமையை மறுதலித்து இருமை பேசுகிறது, மத்வர் நிறுவிய துவைத தத்துவம்.

அதுபற்றி அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...

]]>
http://www.dinamani.com/junction/thaththuva-dharisanam/2016/jul/27/41.-ஒன்றுதான்-ஆனாலும்...-2547551.html