Dinamani - தலையங்கம் - http://www.dinamani.com/editorial/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2826730 தலையங்கம் தேவை, மீள்பார்வை! ஆசிரியர் Friday, December 15, 2017 02:25 AM +0530 ஆரம்பத்தில் உணவும் வேளாண்மையும் ஒரே அமைச்சகத்தின்கீழ்தான் இருந்து வந்தது. வேளாண் துறைக்கும் உணவுத் துறைக்கும் வெவ்வேறு அமைச்சகங்கள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே விவசாயிகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதால்தான்.
இந்தியாவைப் பொருத்தவரை உலகமயச் சுழலில் நாம் சிக்கிக்கொண்ட பிறகு வேளாண் துறை பல்வேறு சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச நிபந்தனைகளால் வேளாண் துறை பாதிக்கப்படுகிறது. ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான பல விதிமுறைகள் நமது விவசாயிகளைப் பெரும் அவதிக்கு உள்ளாக்குகின்றன.
இந்தியாவின் ஒட்டுமொத்த குருமிளகு உற்பத்தியில் 98 விழுக்காடு தென்னிந்தியாவில்தான் விளைகிறது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களை ஒட்டியிருக்கும் கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்திருக்கும் பகுதிகளில்தான் குருமிளகு உற்பத்தியாகிறது.
குருமிளகு உற்பத்தியாளர்கள் இந்த ஆண்டு மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தனர். கிலோ ஒன்றுக்கு ரூ.650-ஆக இருந்த குருமிளகின் விலை, இந்த மாதம் முதல் வாரத்தில் ரூ.350-ஆக திடீரென்று சரிந்தது. சர்வதேசச் சந்தையில் விலை குறைந்ததோ அல்லது குருமிளகுக்கான கேட்புத் தேவை குறைந்ததோ அல்ல இதற்குக் காரணம். எந்தவித வரைமுறையும் இல்லாமல் தரம் குறைந்த குருமிளகு மிக அதிகமான அளவில் வியத்நாமிலிருந்து இலங்கை வழியாக இறக்குமதி செய்யப்பட்டதால்தான் இந்த விலைச் சரிவு.
குருமிளகு இறக்குமதிக்கு 70 விழுக்காடு கலால் வரி இந்தியாவில் விதிக்கப்படுகிறது. "ஆசியான்' ஒப்பந்தப்படி கிழக்காசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குருமிளகுக்கு 54 விழுக்காடுதான் கலால் வரி. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சில வர்த்தக ஒப்பந்தங்கள் இருக்கின்றன. அதன்படி இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் குருமிளகுக்கு 8 விழுக்காடுதான் கலால் வரி. இதை இறக்குமதியாளர்கள் பயன்படுத்தி, கொள்ளை லாபம் சம்பாதிக்க முற்பட்டனர்.
வியத்நாமிலிருந்து இலங்கைக்குத் தரம் குறைந்த குருமிளகை இறக்குமதி செய்வதாகக் கணக்குக் காட்டி, கொழும்பு துறைமுகத்தில் அந்தக் குருமிளகைக் கப்பலில் இருந்து இறக்காமல் அப்படியே இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு மறுவிற்பனை செய்துவிட்டனர். அதன் விளைவாக, இந்தியச் சந்தையில் தேவைக்கு அதிகமாகக் குருமிளகின் வரவு ஏற்பட்டதுதான் விலைச் சரிவுக்கான காரணம்.
தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் உள்ள 12 குருமிளகு உற்பத்தியாளர் சங்கங்கள் ஒருங்கிணைந்து ஒரு கூட்டுக்குழுவை அமைத்தனர். மிகப்பெரிய இழப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட விவசாயிகள் வேளாண் அமைச்சகத்திடம் முறையிட்டும் எந்தவிதப் பலனும் கிடைக்கவில்லை. வர்த்தகத் துறைதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு தர முடியும் என்று கைவிரித்து விட்டது வேளாண் அமைச்சகம். குருமிளகு உற்பத்தியாளர்களின் கூட்டுக்குழு வர்த்தக அமைச்சர் சுரேஷ்பிரபுவைச் சந்தித்து தங்களது பிரச்னையை எடுத்துரைத்திருக்கிறார்கள். 
பல்வேறு நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி இறக்குமதியாளர்கள் பெரும் லாபம் ஈட்டுகிறார்கள். குருமிளகு மட்டுமல்ல, இந்தியாவின் ஏனைய பல வேளாண் உற்பத்தி பொருள்களும் உலக வர்த்தக நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் (ரபஞ) இந்தியா கையெழுத்திட்ட பிறகு இறக்குமதியால் பாதிக்கப்படுகின்றன. ரப்பர், ஏலம் உள்ளிட்ட மலைவிளைபொருள்களும் குருமிளகைப் போலவே பாதிக்கப்பட்டிருக்கின்றன. தாய்லாந்து, கௌதமாலா போன்ற நாடுகளில் இருந்து ரப்பரும், ஏலமும் இறக்குமதி செய்யப்படுவதால் இந்திய விவசாயிகள், உற்பத்தி செய்யும் ரப்பருக்கும், ஏலத்துக்கும் போதிய விலை கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.
மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ்பிரபுவின் தலையீட்டினால் குருமிளகு உற்பத்தியாளர்களுக்குத் தாற்காலிக நிவாரணம் கிடைத்திருக்கிறது. இதுபோல ஒவ்வொரு முறையும் விவசாயிகள் அமைச்சர்களை நாடி நிவாரணத்துக்காக ஓடுவது என்பது வழக்கமாகிவிட்டிருக்கிறது. நியாயமாகப் பார்த்தால், இந்தப் பிரச்னையை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் ராதாமோகன்சிங் முதலிலேயே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். குருமிளகு உற்பத்தியாளர்களின் பிரச்னையை அவரே வர்த்தகத் துறை அமைச்சரிடம் எடுத்துரைத்து தீர்வு கண்டிருக்க முடியும். அமைச்சர்கள் தனித்தனி தீவாக இந்திய நிர்வாக அமைப்பில் இயங்குகிறார்கள் என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது.
இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென்றால், நிலப் பயன்பாட்டுச் சட்டத்தில் மத்திய அரசு சில மாற்றங்களை ஏற்படுத்தியாக வேண்டும். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் ஒரு சட்டம் போடப்பட்டிருக்கிறது. அதன்படி ரப்பர், தேயிலை, ஏலம், கொக்கோ, முந்திரி உள்ளிட்ட மலைவிளை பொருள்கள் மட்டும்தான் 15 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பயிரிட முடியும். அதாவது பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை 15 ஏக்கருக்கும் குறைவான சிறிய விவசாய நிலப்பரப்பில் மட்டுமே பயிரிட முடியும். இதுபோன்ற சட்டம் உலகில் வேறு எந்த நாட்டிலும் தொடர்வதாகத் தெரியவில்லை. 
விவசாய நிலப் பயன்பாடு குறித்து மீள்பார்வை பார்த்தாக வேண்டும். இறக்குமதி ஏற்றுமதிக் கொள்கைகள் எந்தவிதத்திலும் விவசாயிகளைப் பாதிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும். இதையெல்லாம் நமது ஆட்சியாளர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவல நிலையில் இந்திய ஜனநாயகம் 70 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்கிறதே, அதுதான் மிகப்பெரிய வேதனை!

]]>
http://www.dinamani.com/editorial/2017/dec/15/தேவை-மீள்பார்வை-2826730.html
2826056 தலையங்கம் ஏன் தயக்கம்? ஆசிரியர் Thursday, December 14, 2017 02:34 AM +0530 கடந்த நவம்பர் 30-ஆம் தேதி தமிழகத்தின் தென்கோடிப் பகுதியைத் தாக்கிய ஒக்கி புயல் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரள மாநிலத்தின் தென் மாவட்டங்களும் இந்தப் புயலால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.
கடந்த நவம்பர் மாதம் 21-ஆம் தேதி தாய்லாந்துக்கு அருகில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வங்காள விரிகுடாக் கடலில் தீவிரமடைந்து, நவம்பர் 29-ஆம் தேதி இலங்கையையும் நவம்பர் 30-ஆம் தேதி திருவனந்தபுரம், கன்னியாகுமரி பகுதிகளையும் தாக்கியது. ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மரங்கள் சரிந்தன. கேரளத்தைச் சேர்ந்த 98 மீனவர்களையும் தமிழகத்தைச் சேர்ந்த 78 மீனவர்களையும் சேர்த்தால் ஏறத்தாழ இருநூறுக்கும் மேற்பட்டோர் ஒக்கி புயலில் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடிப்பவர்கள். நூறு மைலுக்கு அப்பால்கூடச் சென்று அரபிக் கடலிலும் இந்து மகா சமுத்திரத்திலும் மீன் பிடிப்பவர்கள். பாக். ஜலசந்தியில் மீன் பிடித்துவிட்டு, அதேநாளில் கரைக்குத் திரும்புவது தமிழகத்தின் கிழக்குக் கரையோர மீனவர்களின் வழக்கம் என்றால், குமரி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடித்துவிட்டுப் பல நாள்கள் கழித்துத் திரும்புபவர்கள். சில நிகழ்வுகளில் மாதக்கணக்கில் கடலில் இருப்பார்கள். இந்து மகா சமுத்திரத்தில் உள்ள சில தீவுகளில் கரை ஒதுங்கிப் பிறகு புறப்பட்டு வருவதும் உண்டு.
அதுபோல மீன் பிடிக்க பலர் கடலுக்குச் சென்றிருந்தபோதுதான் ஒக்கி புயல் தாக்கியது. கடலுக்குள் சென்றிருந்த ஆயிரக்கணக்கான மீனவர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பிவிட்டனர். சிலர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும்கூட 472 பேர் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் முயற்சியில் கடலோரக் காவல் துறையினர் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். இந்தியக் கடல் எல்லையில் வெறும் 200 கடல் மைல்கள்தான் என்றால் அந்தப் பகுதியைத் தாண்டி ஆழ்கடலில் மீன்பிடிப்பவர்கள் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள். இந்தியக் கடல் எல்லைக்குள் தேடுவதால் மட்டும் காணாமல்போன இவர்களை மீட்டுவிட முடியாது. இந்து மகா சமுத்திரத்திலும் அரபிக் கடலிலும் இருக்கும் பல ஆளில்லா தீவுகளில் அவர்கள் கரை ஒதுங்கியிருக்கக்கூடும்.
மொராக்கோ, மாலத்தீவு போன்ற நாடுகளைச் சுற்றிப் பல குட்டித்தீவுகள் காணப்படுகின்றன. குமரி மாவட்ட மீனவர்கள் அந்தத் தீவுகளுக்கு மீன் பிடிக்கப் போவது புதிதல்ல. ஆகவே, நம் கடலோரக் காவல்துறையினரின் கப்பல்களும்,ஹெலிகாப்டர், விமானங்களும் அதுபோன்ற ஆளில்லா தீவுகளிலும் மீனவர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டும்.
மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள், இவர்களைத் தொடர்ந்து இப்போது தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும் குமரி மாவட்டத்திற்குச் சென்று பாதிப்புகளை நேரில் கண்டறிந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்கள்.
கேரளத்தில் அறிவித்திருப்பதுபோல, தமிழகத்திலும் ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணமும், உயிரிழந்தவர்களின் வாரிசுகளில் தகுதியானவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் உறுதி அளித்திருக்கிறார். காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி முடிந்தால்தான் அடுத்தகட்ட நிவாரணம் குறித்து அரசு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.
இதுபோன்ற பேரிடர்கள் வரும்போது பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் இறங்குவது என்பது புதிதல்ல. மீனவர்களுக்கு நேர்ந்த பாதிப்பில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதும் புதிதொன்றுமல்ல. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலை மறியல், ரயில் மறியல், போராட்டம் என்று நடைபெற்று வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட 13,815 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதில் பல கிறிஸ்தவ பாதிரியார்களும் இருக்கிறார்கள். போராட்டத்தை நிறுத்துவதற்காக வழக்குப் பதிவு செய்து பயமுறுத்துவது நிர்வாகரீதியாக எந்த அளவுக்குச் சரியோ, அதே அளவு மனிதாபிமானத்துடன் போராட்டக்காரர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு வழக்குகளைத் திரும்பப் பெறுவதுதான் மாநில அரசுக்குப் பெருமை தரும்.
இதுபோன்ற பேரிடர் வரும் என்பதை உணர்ந்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காதது வியப்பை அளிக்கிறது. இப்போது உலக வங்கியிடம் நிதி பெற்று 300 அடி உயரத்தில் கடற்கரையில் தகவல் தொடர்பு கோபுரம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கும் தமிழக அரசு, ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு "வாக்கிடாக்கி' வழங்கும் திட்டத்தை ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது? இனிமேலும் அரசு தாமதிக்காமல், ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்பவர்கள் வாக்கிடாக்கி வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அதேபோல, முன்னாள் மத்திய உள்துறை அமைச்சராகவும், உள்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகவும் இருக்கும் ப. சிதம்பரம் இந்தப் பிரச்னை குறித்து எதுவும் கூறாமல் இருப்பது வியப்பை அளிக்கிறது. இந்தப் பாதிப்பை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மக்கள் மன்றத்தில் பகிர்ந்துகொள்வது கடமை என்று அனுபவசாலியான அவர் ஏன் உணரவில்லை?
மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒக்கி புயல் சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிப்பதில் மத்திய அரசு ஏன் இன்னும் தயங்குகிறது?

]]>
http://www.dinamani.com/editorial/2017/dec/14/ஏன்-தயக்கம்-2826056.html
2825335 தலையங்கம் பெருவழி மரணங்கள் ஆசிரியர் Wednesday, December 13, 2017 02:29 AM +0530 சாலைப் பாதுகாப்பு விதிகள், அனுசரிப்பதற்கு என்பதைவிட மீறுவதற்கு என்பதுபோன்ற தோற்றம்தான் இந்திய சாலைகளில் காணப்படுகின்றன. இதுகுறித்த எந்தவித அக்கறையும் நமது நிர்வாகத்துக்குக் கிடையாது என்பது இந்திய சாலைகளைப் பார்க்கும் எவருக்கும் தெரியும். உச்ச நீதிமன்றத்தில் அவ்வப்போது சாலைப் பாதுகாப்பு குறித்த பொதுநல வழக்கு வருவதும், நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்குவதும் எந்தவிதமான பெரிய மாற்றத்தையும் அதிகாரிகள் மத்தியிலோ வாகன ஓட்டிகள் மத்தியிலோ ஏற்படுத்தவில்லை.
இத்தனைக்கும் உச்ச நீதிமன்றம் சாலைப் பாதுகாப்புக் குழு அமைத்து அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த மூத்த வழக்குரைஞர் ஒருவரைக் கண்காணிப்பாளராகவும் நியமித்திருக்கிறது. அப்படியிருந்தும்கூட சாலைப் பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்துவதில் காவல் துறையினர் முனைப்புக் காட்டுவதில்லை. அவர்கள் மட்டுமல்ல, மோட்டார் வாகனத் துறை அதிகாரிகளும் ஓட்டுநர் உரிமம் வழங்குவதிலும் வாகனத் தகுதிச் சான்றிதழ் வழங்குவதிலும் போதிய கவனம் செலுத்துவதில்லை. 
கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் இந்தியாவில் 1,50, 785 பேர் மரணமடைந்திருக்கின்றனர். 2015-ஐவிட 2016-இல் சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை 3.2 சதவீதம் அதிகரித்திருப்பது பிரச்னையின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகிறது. 
சாலை விபத்து மரணத்துக்கு யார் காரணம் என்பதை அடையாளம் கண்டு குறிப்பிடுவதில் தெளிவின்மை காணப்படுகிறது. 2007-இல் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அமைத்த சுந்தர் குழு இதைச் சுட்டிக்காட்டுகிறது. தேசிய சாலைப் பாதுகாப்பு மற்றும் வாகன மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றியடையவில்லை. இப்போது உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது.
சாலை விபத்தைத் தடுக்க சில வழிமுறைகளையும், அவற்றை நடைமுறைப்படுத்த காலவரம்பையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது. அதில் மிக முக்கியமானது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சாலைப் பாதுகாப்பு செயல்திட்டம் ஒன்றை ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் அறிவித்தாக வேண்டும் என்பது. அதற்குப் போதுமான விளம்பரம் வழங்கும் பொறுப்பு அரசுடையது. 
இந்தச் செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்வரை காவல்துறையினரும் வாகனத் துறையினரும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சாலை விதிமுறை மீறல்கள் கண்காணிக்கப்பட்டு தவறு செய்பவர்களிடமிருந்து அபராதம் பெறுவதோ தண்டிப்பதோ விதிவிலக்கில்லாமல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் சாலைப் பாதுகாப்புக் குழு எல்லா மாநிலங்களுக்கும் சில வழிகாட்டுதல்களை அறிவுறுத்தி இருக்கிறது. போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுவதை மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ் தண்டிக்காமல் இந்திய தண்டனைச் சட்டத்தின் 279-ஆவது பிரிவின்கீழ் பதிவு செய்வதன் மூலம் சிறை தண்டனைக்கு ஆளாக்குவது; முறையான உரிமம் இல்லாமலோ, தரத் தகுதியில்லாத வாகனங்களை ஓட்டினாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை சாலைப் பாதுகாப்புக் குழு அறிவுறுத்தியிருக்கிறது. 
ஆனாலும் இன்னும்கூட சாலை விதிமுறை மீறல்களுக்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் குறைந்த அளவு அபராதத்துடன், மீறுவோர் மன்னிக்கப்படுவது கையூட்டு எந்த அளவுக்குப் புரையோடிப் போயிருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.
சாலை விபத்து மரணங்களுக்கு விதிமுறை மீறல்கள் மட்டுமே காரணமல்ல. இந்தியாவிலுள்ள சாலைகளின் தரமும் அகலமும் மிகப்பெரிய காரணம். அளவுக்கு அதிகமாக வாகன உற்பத்திக்கு அரசு அனுமதி அளித்துவிட்டு சாலைகளை அதற்கேற்றாற்போல் மேம்படுத்தாமல் இருப்பதுதான் சாலை விபத்து மரணத்துக்கும், சாலை நெரிசலுக்கும் முக்கியமான காரணம் என்பது அரசுக்கும், அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் நன்றாகவே தெரியும்.
எந்த சாலையிலும் மூன்று அடிக்கு அதிகமான அகலமுள்ள நடைமேடை கிடையாது. நெடுஞ்சாலைகளில் மட்டுமல்ல, ஊரகப்புறச் சாலைகளிலும் நகர்ப்புறங்களில் உள்ள சாலைகளிலும் குறிப்பிட்ட தூரங்களில் பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கான 'ஜீப்ரா கிராஸிங்' என்பது கிடையவே கிடையாது. 
சாலைகள் என்பது வாகனங்களுக்கு மட்டும்தானே தவிர, பாதசாரிகளுக்கானதல்ல என்பதுபோன்ற நிலைதான் இங்கே காணப்படுகிறது. இந்தியாவில் பாதசாரிகளுக்கு சாலை விதிகளை மதிக்கத் தெரியாது என்றும், கண்ட இடத்தில் சாலையைக் கடப்பார்கள் என்றும் வாகனங்களில் அமர்ந்து குறை கூறுவோர் சாலைகளில் நடந்துபார்த்தால்தான் யதார்த்தம் அவர்களுக்குப் புரியும்.
தொழில்நுட்ப மாற்றங்கள், சாலைப் பயன்பாடு, வாழ்க்கை முறை மாற்றம், பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வாகனப் பயன்பாட்டிலும் சாலைப் பாதுகாப்பிலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. 
இந்திய சாலைகளைப் பாதசாரிகளுக்கு ஏற்றதாக மாற்றியமைக்காமல், சாலைகள் மற்றும் நடைமேடைகளின் அகலத்தை அதிகப்படுத்தாமல், விதிமுறை மீறல்களை கையூட்டுப் பெறாமல் தண்டிக்கும் நிலை ஏற்படாமல் சாலை விபத்து மரணங்கள் அதிகரிப்பதை அரசாலோ நீதிமன்றத்தாலோ தடுக்கவே முடியாது.
விடை தெரிகிறது. நிறைவேற்றுவது எப்போது?

]]>
http://www.dinamani.com/editorial/2017/dec/13/பெருவழி-மரணங்கள்-2825335.html
2824613 தலையங்கம் நம்மைச் சுற்றும் ஆபத்து! ஆசிரியர் Tuesday, December 12, 2017 01:39 AM +0530 தெற்காசியாவிலுள்ள நமது அண்டை நாடுகளுடனான நட்புறவு பலவீனப்பட்டு வருகிறது என்பதைத்தான் சமீபத்தில் சீனாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் எடுத்துக்காட்டுகிறது.நம்மிடமிருந்து மாலத்தீவு விலகிப்போகிறது என்பதையும், சார்க் அணியின் மிகச்சிறிய நாடான மாலத்தீவைக்கூட சீனாவின் நட்புறவு வளையத்தில் சிக்கவிடாமல் நம்மால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதையும்தான் இது வெளிப்படுத்துகிறது.
பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்று மூன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளாத ஒரே நாடு மாலத்தீவுதான். 2015 மார்ச் மாதம் அவர் மாலத்தீவுகளின் தலைநகரான மாலேவுக்கு செல்வதாக இருந்து, கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. சீனாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுகிறது என்பதல்ல நமது கவலை. அந்த ஒப்பந்தம் மாலத்தீவின் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் விதம்தான் அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த நவம்பர் 29-ஆம் தேதி மாலத்தீவின் நாடாளுமன்றம் அவசரஅவசரமாகக் கூட்டப்பட்டது. நாடாளுமன்றத்தில் சீனாவுடனான ஒப்பந்தம் தாக்கல் செய்யப்பட்ட சில நிமிடங்களில் அங்கீகரிக்கப்பட்டு, தேசியப் பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழுவுக்கு அந்த 777 பக்க அறிக்கை அனுப்பப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் நாடாளுமன்றக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. அதேநாளில் அந்த ஒப்பந்தம் மாலத்தீவுகளின் 85 உறுப்பினர்கள் கொண்ட மஜ்லீஸ் என்கிற நாடாளுமன்றத்தின் 30 உறுப்பினர்களின் ஆதரவு வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையைப் புறக்கணித்ததும் ஆளும் கட்சிக்குச் சாதகமாகிவிட்டது.
இந்த மாதக் கடைசியில் மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் சீனாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்வதுகூட இப்படி அவசரஅவசரமாக இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டதற்குக் காரணமாக இருக்கக்கூடும். எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான முகமது நஷீத் நாடாளுமன்றம் முறையான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதால் இந்த ஒப்பந்தம் தாற்காலிகமாக முடக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார். இந்த ஒப்பந்தத்தின் சாதக பாதகங்கள் குறித்து பரவலான விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்த ஒப்பந்தம் மாலத்தீவின் பாதுகாப்புக்கும் சுதந்திரத்துக்கும் ஏற்றதுதானா என்பது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இப்படி ஓர் ஒப்பந்தம் ஏற்படக்கூடும் என்பது முன்னரே தெரியும். 2015 ஜூலை மாதம் மாலத்தீவின் அரசமைப்புச் சட்டத்தில் அவசரஅவசரமாக சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி வெளிநாட்டவர்கள் மாலத்தீவில் அசையாச் சொத்துகள் வாங்குவது அனுமதிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்துக்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன.
அப்போதே இந்தியா விழித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். இந்துமகாக் கடலில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சிதான் இது என்பதை நாம் உணராமல் விட்டுவிட்டோமா அல்லது நமது வெளிவிவகாரத் துறை அமைச்சகம் அதைத் தடுக்க முடியாமல் போய்விட்டதா என்று தெரியவில்லை.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் வர்த்தகரீதியான நட்புறவும் நெருக்கமும் வணிக அளவுடன் நின்றுவிடுவதில்லை. காப்பீடு, மருத்துவம், தொலைத்தொடர்பு, கல்வி, நீதித் துறை என்று சேவைத் துறையிலும் மாலத்தீவில் சீனா செயல்பட இந்த ஒப்பந்தம் வழிகோலுகிறது. இந்த ஒப்பந்தம் இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மாலத்தீவின் பாதுகாப்பில்கூட சீனாவுக்கு மிகப்பெரிய பங்கு ஏற்படக்கூடும்.
மாலத்தீவுடன் மட்டுமல்ல, இந்தியாவைச் சுற்றியுள்ள நமது அண்டை நாடுகள் அனைத்துடனும் சீனா தனது நெருக்கத்தை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. ஜிபோதியில் மிகப்பெரிய ராணுவத்தளத்தை அமைத்திருக்கும் சீனா, பாகிஸ்தானிலுள்ள குவேதார், இலங்கையிலுள்ள அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் துறைமுகங்களை அமைப்பதிலும் ஈடுபட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மாலே துறைமுகத்தில் மூன்று சீன கடற்படைக் கப்பல்கள் நங்கூரமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மாலே தீவுகளில் மிகப்பெரிய உள்கட்டமைப்புப் பணிகளில் சீனா ஈடுபட்டு வருகிறது. ஏறத்தாழ ஒரு மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பல சீன நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய முற்பட்டிருக்கின்றன. 
மாலத்தீவுகளுடன் மட்டுமல்ல, சீனா ஏற்கெனவே பாகிஸ்தானுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. வங்கதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளுடனும் இதேபோல ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
அப்துல்லா யாமீன் அரசின் மீன்வளத் துறை அமைச்சர் சமீபத்தில் கொழும்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது வெளிப்படையாகவே இந்தியாவுடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத்துக்கு இந்தியா ஆதரவு அளித்ததுதான் இப்போதைய யாமீன் அரசு இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுவதன் காரணம்.
இந்தியாவைச் சுற்றியுள்ள அத்தனை அண்டை நாடுகளும் சீனாவின் நட்பு நாடுகளாக மாறுவது ஆபத்தின் அறிகுறி. எங்கேயோ இருக்கும் அமெரிக்காவையும், ஜப்பானையும், ஆஸ்திரேலியாவையும் நம்பி அண்டை நாடுகளுடனான நமது உறவைத் தக்க வைத்துக் கொள்ளாமல் இருப்பது சரியான ராஜ தந்திரமாகாது!
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/dec/12/நம்மைச்-சுற்றும்-ஆபத்து-2824613.html
2823996 தலையங்கம் தாய்மைக்குத் தலைகுனிவு! ஆசிரியர் Monday, December 11, 2017 02:16 AM +0530 தேசியக் குற்ற ஆவணத் துறையின் 2016-ஆம் ஆண்டுக்கான அறிக்கை தேசத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தும் அளவுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. மகளிருக்கும், மழலைகளுக்கும் வாழத் தகுந்த இடமாக இந்தியா இல்லை என்கிற கசப்பான உண்மையைப் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
குற்றங்களின் எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசமும், தலைநகர் தில்லியும் இந்தியாவின் ஏனைய பகுதிகளைவிட மோசமாக இருக்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவில் பதிவாகியிருக்கும் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளில் நாற்பது சதவிகிதம் தலைநகர் தில்லியில் நடந்திருக்கின்றன.
ஊழல் தொடர்பான கிரிமினல் குற்றங்களில் மகாராஷ்டிர மாநிலமும், முதியோருக்கு எதிரான வன்முறையிலும், குற்றங்களிலும் சண்டீகர் நகரமும் முன்னணி வகிக்கின்றன. பிணை இல்லாத குற்றங்களில் கேரளா முன்னிலை வகிக்கிறது. அதேபோல, தலித்துகளுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்கொடுமைகள் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது.
பாலியல் வன்கொடுமை, கடத்தல், தாக்குதல், கணவராலும் அவரது உறவினர்களாலும் துன்புறுத்தப்படுதல் உள்ளிட்ட மகளிருக்கு எதிரான குற்றங்கள் தேசிய அளவில் 2015-இல் இருந்ததைவிட 2016-இல் 2.9 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதேபோல, ஊரகப்பகுதிகளைவிட நகர்ப்புறங்களில்தான் மகளிருக்கு எதிரான வன்முறை அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவிலேயே தில்லியும், மும்பையும்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நகரங்கள் என்று தேசியக் குற்ற ஆவணத்துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தேசிய சராசரியைவிட தில்லியில் குற்றங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் கொலைக் குற்றங்கள் குறைந்திருக்கின்றன. ஆனால், மாநில அளவில் சில மாநிலங்களில் கொலைக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 2016-இல் உத்தரப் பிரதேசத்தில் 4,889 கொலைகளும், பிகாரில் 2,581 கொலைகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மிக அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட கேரளாவில் கொலைக்குற்றங்களின் எண்ணிக்கை 2016-இல் வெறும் 305 மட்டுமே. கல்வி வளர்ச்சியும், சமுதாய முன்னேற்றமும் கொலைகள் போன்ற கிரிமினல் குற்றங்கள் குறைவதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்பதைத்தான் இந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
குற்ற ஆவணத் துறை அறிக்கை வெளிப்படுத்தியிருக்கும் புள்ளிவிவரங்களில் தலைகுனிவையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவது குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்திருக்கும் அவலம். 2015-உடன் ஒப்பிடும்போது 2016}இல் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் 82 சதவிகிதம் அதிகரித்திருக்கின்றன. ஒருவேளை இப்படி அதிகரித்திருப்பதற்கு பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வும்கூடக் காரணமாக இருக்கக்கூடும். 
இந்த அளவுக்குக் குழந்தைகள் பாதுகாப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும்போது இதயம் வெடிக்கிறது. நாம் நாகரிகத்தை நோக்கி நகராமல் காட்டுமிராண்டிகளாக மாறிக்கொண்டிருக்கிறோமோ என்கிற அச்சம் மேலெழுகிறது.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை 82 சதவீதமாக அதிகரித்திருக்கிறது என்பது மட்டுமல்ல, குழந்தைகளுக்கு எதிரான தாக்குதல்களும், குற்றங்களும்கூடக் கணிசமாகவே அதிகரித்திருக்கின்றன. வீடுகளும் சரி, பள்ளிக்கூடங்களும் சரி, பொதுஇடங்களும் சரி குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக மாற்றப்பட வேண்டும் என்பதைப் போர்க்கால நடவடிக்கையுடன் நமது சமுதாயம் உடனடியாக மேற்கொள்ளாவிட்டால், நம் வீட்டுக் குழந்தைகளை தைரியமாக வீட்டுக்கு வெளியே அனுப்பப் பெற்றோர்கள் அச்சப்படும் சூழல் ஏற்படக்கூடும்.
குழந்தைகள் மீதான வன்கொடுமைத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு குழந்தைகளுக்கு எது சரியான தொடுதல், எது தவறான தொடுதல் என்பது குறித்துப் பெற்றோர்கள் புரிய வைக்க வேண்டியது மிக மிக அவசியம். அதேபோல, அக்கம்பக்கத்து ஆடவர்கள், இளைஞர்கள், உறவினர்கள், ஏன், ஆசிரியர்கள் உள்பட அனைவருடைய பார்வையையும், நடவடிக்கையையும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்கிறது.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை விரைந்து விசாரிப்பதற்கு விசாரணைக் குழுக்களையும், சிறப்பு நீதிமன்றங்களையும் அமைப்பது அவசியம். குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைத் தாக்குதல் செய்பவர்களைத் தயக்கம் இல்லாமல் உடனடியாகப் பிடித்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டியதன் அவசியத்தைக் காவல் துறையினருக்கு வலியுறுத்த வேண்டும்.
பெரியவர்களைப்போல குழந்தைகளால் தங்களுக்கு நேரும் அவலத்தை துணிந்து வெளியில் சொல்ல முடியாது என்பதால் சமூகம்தான் அவர்களுக்காக உரத்தக்குரலில் எதிர்ப்பை எழுப்ப முடியும். அப்படிச் செய்தால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்த முடியும். 
கொலை, கொள்ளை, வழிப்பறி, வன்முறை ஆகிய குற்றங்கள் குறைந்துவருவதுபோல அரசின் கொள்கைகள் முறையாகச் செயல்படுத்தப்பட்டு, கண்காணிப்பு உறுதிப்படுத்தப்பட்டு, விரைந்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட்டால் மகளிர் மீதும், குழந்தைகள் மீதும் நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளும், வன்முறைகளும் நிச்சயமாகத் தடுக்கப்பட முடியாவிட்டாலும் கணிசமாகக் குறையும். குற்றமற்ற சமுதாயத்தால்தான் முன்னேறிய சமுதாயமாக மாற முடியும்.
இந்தியா பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற நாடு என்று தொடருமேயானால், அது நாம் கடவுளைத் தாயாகவும் சக்தியாகவும் வணங்குவது வெறும் போலித்தனம் என்பதைத்தான் வெளிப்படுத்தும்!

]]>
http://www.dinamani.com/editorial/2017/dec/11/தாய்மைக்குத்-தலைகுனிவு-2823996.html
2822968 தலையங்கம் அழுத்தம் அகல வேண்டும்! ஆசிரியர் Saturday, December 9, 2017 03:26 AM +0530 இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் 36 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடக்கும் தாக்குதலில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்புப் படையினர் மத்தியில் இதுபோல தற்கொலைகள் அதிகரித்து வருவது, ஒட்டுமொத்த ராணுவத்தையே அதிர்ச்சியில் நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், இந்த ஆண்டில்தான் இந்த அளவு தற்கொலைகள் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
2007 முதல் 2010 வரையிலான மூன்று ஆண்டுகளில் மத்தியப் பாதுகாப்பு வீரர்கள் 368 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அதே காலகட்டத்தில், மாவோயிஸ்டுகளுடன் நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 208 மட்டும்தான். பாதுகாப்புப் படையினர் தற்கொலை செய்து கொள்வது என்பது புதிதல்ல. இந்த ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுதான் கவலையளிக்கிறது.
இது குறித்து மத்திய அரசும், உள்துறை அமைச்சகமும் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றன. கடந்த ஆண்டு மாநிலங்களவையில் பாதுகாப்புப் படையினர் மத்தியில் தற்கொலை மனோநிலை அதிகரித்து வருவது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலளிக்கையில், 2014-இல் 109 பேரும், 2015-இல் 97 பேரும், 2016-இல் 82 பேரும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினர் மத்தியில் மட்டுமல்ல, இந்திய ராணுவத்திலும் இதேபோல வீரர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இது குறித்த புள்ளிவிவரம் ஒன்று 2014-இல் வெளியிடப்பட்டது. 2011-இல் இருந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் ராணுவம் 362 வீரர்களையும், விமானப்படை 76 விமானிகளையும், கடற்படை 11 மாலுமிகளையும் தற்கொலைக்கு பலி கொடுத்திருப்பதாக அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
2016-இல் மட்டும் 125 இந்திய ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 19 பேர் விமானப் படையையும், 5 பேர் கடற்படையையும் சேர்ந்தவர்கள். இதுமட்டுமல்லாமல், ராணுவ முகாம்களில் நடந்த கைகலப்பில் கொல்லப்பட்டவர்கள் மூன்று பேர்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, 2014 ஜனவரி முதல் 2017 மார்ச் மாதம் வரையிலான இடைவெளியில், பணியில் இருக்கும்போது 348 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 276 பேர் காலாட்படையையும், 12 பேர் கடற்படையையும், 6 பேர் விமானப்படையையும் சார்ந்தவர்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் 597 வீரர்களை நாம் தற்கொலையால் இழந்திருக்கிறோம்.
மூன்று நாள்களுக்கு ஒருமுறை, ஒரு ராணுவ வீரர் தற்கொலை செய்து கொள்கிறார். அவர்களது தனிப்பட்ட பிரச்னைகள்தான் அதற்குக் காரணம் என்பது பாதுகாப்பு அமைச்சகம் தரும் விளக்கம். பணியில் இருக்கும்போது, சொந்த ஊரில் அவர்களது குடும்பம் எதிர்கொள்ளும் நிலத்தகராறு குறித்த பிரச்னைகளும், உள்ளூரில் அரசு நிர்வாகம் தங்கள் குடும்பத்தினர் மீது காட்டும் பாராமுகமும்தான் அதற்குக் காரணம் என்றுகூறி கோப்புகள் மூடப்பட்டு விடுகின்றன.
பாதுகாப்புப் படையினரும், ராணுவ வீரர்களும் எதிரிகளை நோக்கிச் சுட வேண்டிய துப்பாக்கிகளால் தங்களைத் தாங்களே சுட்டுக்கொள்ளும் அவலத்துக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. குடும்பப் பிரச்னைகள் அவற்றில் முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதுமட்டுமே காரணமல்ல.
பணிச்சுமை, அதிகரித்த வேலை நேரம், மன அழுத்தம், எல்லாவற்றிற்கும் மேலாகக் காரணமில்லாமல் தாங்கள் ஆபத்தான தாக்குதல்களில் ஈடுபடுத்தப்படுகிறோம் என்கிற மனக்குமுறல் ஆகியவையும் காரணம் என்று கூறப்படுகிறது. போரிட்டு மறைவதைவிட அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு அவர்களது மனநிலை பாதிப்புதான் காரணம் என்பதைப் பல அதிகாரிகள் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள்.
தகவல் தொலைத்தொடர்பு பெரும்பாலான படைவீரர்களைத் தங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் தொடர்பில் இருக்க உதவுகிறது. அதேநேரத்தில், குடும்பத்திலும், ஊரிலும் நடக்கும் பிரச்னைகள் உடனடியாகத் தெரிந்துவிடுவது சிலருக்கு அதிகரித்த குடும்ப ஞாபகத்தை ஏற்படுத்துவதாகவும், பிரச்னைகளின் தாக்கத்தால் மன அமைதி குலைவதாகவும் கூறப்படுகிறது.
2014-இல் இந்திய ராணுவ மருத்துவ ஜர்னல் நடத்திய ஆய்வில், 96% ராணுவ வீரர்கள் தங்களது மனநிலை ரீதியிலான பிரச்னைகள் குறித்து ஆலோசனை பெறவோ, பகிர்ந்து கொள்ளவோ விரும்பவில்லை என்று தெரிகிறது. ராணுவ வீரர்களானாலும் சரி, துணை ராணுவ படையினரானாலும் சரி, அவர்களது உடல்நலம் குறித்துத் தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களது உடல்நலம் பேணப்படுகிறது. ஆனால், தேர்ந்த மனநல மருத்துவர்களின் உதவியுடன் ராணுவ வீரர்களுக்கு உடல்நலத்தைப் போலவே மனநலம் குறித்த பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றனவா என்றால் இல்லை. ராணுவ வீரர்கள் மத்தியில் அதிகரித்துவரும் தற்கொலை மனோபாவத்துக்கு இதுகூடக் காரணம்.
இவையெல்லாம், முறையான மனநல மருத்துவர்களின் ஆலோசனையும், "கவுன்சலிங்' என்று சொல்லப்படும் "தீர்வுகாணும்' முறையும் உறுதிப்படுத்தப்பட்டால், தீர்த்து வைக்கப்படக் கூடியவைதான். வீரர்களின் உடல்நலத்துக்குச் செலவிடுவதுபோல, மனநலம் பேணுதலுக்கும் இந்திய ராணுவம் முன்னுரிமை கொடுத்தாக வேண்டும். ஆயிரம் குடிமக்களை தேசம் இழந்தாலும், ஒரு ராணுவ வீரரை இழக்கக்கூடாது!
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/dec/09/அழுத்தம்-அகல-வேண்டும்-2822968.html
2822140 தலையங்கம் சரியான முடிவு தவறான நேரம்! ஆசிரியர் Friday, December 8, 2017 03:59 AM +0530 தனக்கு எதிராக யாருமே வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட இருப்பதில் வியப்பொன்றுமில்லை. காங்கிரஸில் ஏற்பட இருக்கும் மாற்றம் வெறும் தலைமை மாற்றமா அல்லது தலைமுறை மாற்றமா அல்லது வரலாற்றுத் திருப்பமா என்பதை அடுத்து வர இருக்கும் தேர்தல் முடிவுகள்தான் தீர்மானிக்கும்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட இருப்பது மாற்றம் மட்டுமல்ல, சோனியா காந்தியின் தலைமை முடிவுக்கு வருவதன் அடையாளமும் கூட. காங்கிரஸ் கட்சியின் 132 ஆண்டு வரலாற்றில் மிக அதிக காலம், அதாவது 19 ஆண்டுகள், கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த பெருமை சோனியா காந்திக்கு மட்டுமே உண்டு. சோனியா காந்தியின் தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய எழுச்சியையும், மிகப்பெரிய வீழ்ச்சியையும் சந்தித்தது. 
வலுவிழந்து போயிருந்த காங்கிரஸ் கட்சியையும், மனம் சோர்ந்து போயிருந்த காங்கிரஸ் தொண்டர்களையும் சோனியா காந்தியின் தலைமைதான் நம்பிக்கையை ஊட்டிப் புத்துணர்ச்சி அடைய வைத்தது. 1998-1999 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றாலும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிரான வலிமையான எதிர்க்கட்சியாகக் காங்கிரஸால் செயல்பட முடிந்தது. அதற்குக் காரணம் சோனியா காந்தியின் தலைமை.
சோனியா காந்தியின் அரசியல் சாதுர்யத்தால்தான் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி 2004-இல் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. 2004-லிலும் 2009-லிலும் சோனியா காந்தியின் தலைமை தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தியது என்றாலும், அவர் நேரிடை
யாகப் பதவி வகிக்காமல் மன்மோகன் சிங்கை பிரதமராக்கி, மறை
முகமாக ஆட்சி நடத்த முற்பட்டதுதான் காங்கிரஸின் வீழ்ச்சிக்கும் காரணம்.
இதுநாள் வரை கட்சித் தலைமையை ஏற்கத் தயங்கிய ராகுல் காந்தி குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரசாரத்தில் தனக்குக் கூடும் கூட்டத்தை கருத்தில் கொண்டு துணிந்து தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. பேரணிகளுக்குக் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்பதை அவருக்கு 2012-லும் 2017-லும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்கள் உணர்த்தி இருக்கும். 
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகத் தன்னை குஜராத்தில் களமிறக்கிக் கொண்டிருப்பதற்கு சில காரணங்கள் இருக்கக் கூடும். அவரது பாட்டனார் பெரோஸ் காந்தி குஜராத் மாநிலக்காரர். குஜராத்தில் இருந்துதான் நரேந்திர மோடி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிப் பிரதமராகி இருக்கிறார். சிங்கத்தை சிங்கத்தின் குகையிலேயே சந்திப்பது என்றுகூட முடிவெடுத்து நரேந்திர மோடியின் செல்வாக்குக் கேந்திரமான குஜராத்தில் ராகுல் காந்தி பா.ஜ.க.வை எதிர்க்கத் துணிந்திருக்கிறார் என்றுகூடக் கருத இடமிருக்கிறது.
ராகுல் காந்தியின் கடந்தகால அரசியல் செயல்பாடுகள் குறிப்பிடும்படியாக இல்லை. அவரிடம் இருக்கும் ஆற்றலுக்கும், துடிப்புக்கும், பல்வேறு பிரச்னைகள் குறித்த புரிதலுக்கும், அவர் நாடாளுமன்றத்தில் தனது திறமையை நிரூபித்திருக்க வேண்டும். கட்சி அளவிலும்கூட அவரது பிரசாரங்களால் காங்கிரஸ் கட்சி பெரிய அளவு வெற்றியை அடைந்துவிடவில்லை. அமைப்பு ரீதியாகவும், காங்கிரஸ் கட்சியில் பெரிய மாற்றங்களைத் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி ஏற்படுத்தி இருக்கிறாரா என்றால், அதுவும் கிடையாது. இந்த நிலைமையில் அவரது தலைமையில் கட்சியில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடும் என்று காங்கிரஸ்காரர்களே கருதுவதாகத் தெரியவில்லை.
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தியும் அவரது சமூக, ஊடகக் குழுவினரும் களமிறங்கிய பிறகு சலசலப்பு போய் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதென்னவோ உண்மை. ராஜதந்திர ரீதியாக ஜிக்னேஷ் மேவானி, ஹார்திக் படேல், அல்பேஷ் தாக்கூர் ஆகிய மூன்று இளைஞர்களையும் காங்கிரஸ் பக்கம் இழுத்துக் கூட்டணி அமைத்துக் கொண்டிருப்பது ஆளும் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா இருவருடைய சொந்த மாநிலமான குஜராத்தில், தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ராகுல் காந்தியால் காங்கிரûஸ வெற்றிபெறச் செய்ய முடியுமேயானால், தேசிய அளவில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடியும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும் தங்களது முழு கவனத்தையும் செலுத்தி குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்திரா காந்தியோ, ராஜீவ் காந்தியோ, சோனியா காந்தியோ எதிர்கொள்ளாத அளவிலான வலுவான எதிர்க்கட்சியாக மோடி-அமித் ஷா தலைமையிலான பா.ஜ.க.வை ராகுல் காந்தி எதிர்கொள்கிறார். முன்பு போல, தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தியால் மற்றவர்கள் மீது பழியைச் சுமத்திவிட முடியாது. குஜராத், ஹிமாசலப் பிரதேசம் மட்டுமல்ல, 2018-இல் மேலும் பல சட்டப்பேரவைத் தேர்தல்களையும், 2019-இல் மக்களவைத் தேர்தலையும் ராகுல் காந்தியின் தலைமை சந்தித்தாக வேண்டும்.
இதெல்லாம் தெரிந்தும் குஜராத் சட்டப்பேரவை முடிவுகள் வருவதற்கு முன்னால் ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது! இது தன்னம்பிக்கையின்பாற்பட்டதா, அசட்டு தைரியமா என்பதை குஜராத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்.

]]>
http://www.dinamani.com/editorial/2017/dec/08/சரியான-முடிவு-தவறான-நேரம்-2822140.html
2821494 தலையங்கம் தொடரக்கூடாது மோதல்... ஆசிரியர் Thursday, December 7, 2017 01:22 AM +0530 கடந்த வாரம் தேசிய சட்ட தினத்தை முன்னிட்டு நடந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில், நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு மீண்டும் பொதுவெளியில் வெளிப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் மட்டுமல்லாமல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் கலந்து கொண்டனர். இவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் பொது விவாதமாகவே மாறிவிட்டிருக்கிறது.
முதல் நாள் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித்துறை இவை மூன்றின் தனித்தனி அதிகாரங்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசியதுடன் நின்றிருக்கலாம். நிர்வாகத்தின் தவறுகளை நீதித்துறை சுட்டிக்காட்டவும், வழிகாட்டவும் செய்யலாமே தவிர நிர்வாகத்தின் செயல்பாடுகளில் தானே ஈடுபடுவது வரம்புமீறல் என்று குறிப்பிட்டார். இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளிட்ட விளையாட்டு நிறுவனங்களை நெறிப்படுத்துவது, வங்கிகளின் வாராக்கடன் குறித்துத் தானே நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பது போன்றவற்றை சுட்டிக்காட்டினார். 
பெரும்பாலான சட்ட சீர்திருத்தங்களும் விதிமுறைகளும் பொதுநல வழக்குகளின் மூலம் நீதி மன்றங்களால் பரிந்துரைக்கப்பட்டவை என்பதை அருண் ஜேட்லி கவனத்தில் கொள்ளத் தவறி விட்டார். சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்கள் அனைத்துமே நீதித்துறையின் தலையீட்டால்தான் சாத்தியப்பட்டன. நிர்வாகமும், நாடாளுமன்றமும் முறையாகச் செயல்பட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமேயானால், அவர்கள் பொதுநல வழக்கின் மூலம் நீதித்துறையை அணுக வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நீதித்துறைக்கும், நிர்வாகத்துக்கும் இடையேயான சர்ச்சையில் சிக்கிக் கொள்ளாமல் இந்த மூன்றுக்கும் இடையிலான சமநிலை தவறிவிடக்கூடாது என்றும், அவை சுதந்திரமாகச் செயல்படும் அதே வேளையில் ஏனைய இரண்டு அரசியல் சாசன அமைப்புகளின் அதிகார வரம்பில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்றும் பொதுப்படையாகப் பேசி முடித்து விட்டார். நீதித்துறை என்பது நிர்வாகம், நாடாளுமன்றம் இரண்டுக்கும் சமமாக இருந்தாலும்கூட அவற்றில் முன்னுரிமை பெறுவது நீதித்துறைதான் என்பது அடிப்படையில் வழக்குரைஞரான குடியரசுத் தலைவருக்கு தெரியாததல்ல. நிர்வாகமோ, நாடாளுமன்றமோ எடுக்கும் எந்த முடிவையும் பரிசீலனை செய்யும் உரிமையை அரசியல் சாசனம் நீதிமன்றத்துக்குத்தான் வழங்கி இருக்கிறது.
நாடாளுமன்றம் சுதந்திரமாக சட்டம் இயற்றவும், நிர்வாகம் சுதந்திரமாக முடிவுகளை எடுக்கவும் அரசியல் சாசனம் உரிமை வழங்கியிருக்கிறது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி விவாதத்திற்குரிய பிரச்னைகளை எல்லாம் தனது நிதியமைச்சருக்கும் சட்ட அமைச்சருக்கும் விட்டுவிட்டு, மூன்று முக்கிய அரசியல் சாசன அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்கிற அறிவுறுத்தலுடன் நிறுத்திக் கொண்டார்.
அரசியல் சாசனம் பிரதமர் மீது வைத்திருந்த அதே அளவு நம்பிக்கையை இப்போதும் நீதித்துறை வைத்திருக்கிறது என்கிற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் கருத்தும், அரசியல் சாசனம் ஒவ்வோர் அமைப்புக்கும் வழங்கியிருக்கும் சுதந்திரத்தை நீதித்துறை மதிக்கிறது என்கிற கருத்தும் பாராட்டுக்குரியவை.
தேசிய சட்ட தின நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் உரைதான். எப்போது அணு ஆயுதத்தை இயக்கலாம் என்பதுவரை பிரதமர் மீது மக்கள் நம்பிக்கை வைத்து அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றும், அதனால் நீதிபதிகளை நியமிப்பதிலும் அவர் மீது நீதித்துறை நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் சட்ட அமைச்சர் கூறியிருப்பது விசித்திரமான வாதம். 
முதலாவதாக, பிரதமர் நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறாரே தவிர மக்கள் மன்றத்தால் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் அல்ல. அதுமட்டுமல்லாமல் சட்டப் பேரவையோ, நாடாளுமன்றமோ, பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதால் எந்த முடிவையும் எடுக்கவோ சட்டமாக்கவோ முடியாது. இயற்றப்படும் சட்டங்கள் அரசியல் சாசன வரம்புகளுக்கு உட்பட்டதாக இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை நீதித்துறைக்குத்தான் அளிக்கப்பட்டிருக்கிறது.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்கப்படவில்லை என்கிற அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ஆதங்கம் அவரது உரையில் வெளிப்பட்டது. ஆணையம் அமைவதை நிராகரித்து, முந்தைய கொலீஜியம் முறையைப் பின்பற்றுவது என்று உச்சநீதிமன்றம் முடிவெடுத்தது நீதித்துறைக்கும் நிர்வாகத்துக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் பிரச்னையில் நீதிபதிகள் நியமனத்திற்கான செயல்முறை திட்டத்தில் கருத்து வேறுபாடு தொடர்வதுதான் முடிவு எட்டப்படாமல் இருப்பதற்கான காரணம்.
நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்துக் கொள்ளும் இப்போதைய கொலீஜியம் முறை தவறானது என்பதிலும், அதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. நீதிபதிகளை நியமிப்பதில் இதைவிடச் சிறந்த முறை பின்பற்றப்பட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அதைப் பொதுவெளியில் விவாதிக்காமல் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதில் இரு தரப்பினரும் ஏன் தயங்க வேண்டும்?
எல்லாம் சரி, விவாதத்துக்குரிய இந்தப் பிரச்னை, உச்சநீதிமன்ற நீதிபதிகளை வைத்துக்கொண்டு ஒரு பொது நிகழ்ச்சியில் எழுப்பப்பட்டிருக்க வேண்டுமா? நீதித்துறையைத் தேவையில்லாமல் சர்ச்சைக்கு இழுத்து, வலுக்கட்டாயமாக முடிவெடுக்க அழுத்தம் கொடுப்பதுபோல இருக்கிறது சட்ட அமைச்சரின் முனைப்பு.

]]>
http://www.dinamani.com/editorial/2017/dec/07/தொடரக்கூடாது-மோதல்-2821494.html
2820987 தலையங்கம் சீனாவின் சமரச முயற்சி! ஆசிரியர் Wednesday, December 6, 2017 01:27 AM +0530 மியான்மரின் ராக்கைன் பகுதியில் வாழ்பவர்கள் வங்க மொழிபேசும் ரோகிங்கயா முஸ்லிம்கள். இவர்களது பூர்வீகம் வங்கதேசமாக இருந்தாலும் நூற்றாண்டுகளாக மியான்மரில் வாழ்ந்து வருபவர்கள். ஆனாலும்கூட இவர்களுக்குக் குடியுரிமை வழங்காமல் மியான்மர் அரசு இரண்டாம்தர குடிமக்களாகவே இவர்களை வைத்திருக்கிறது.
தங்களது உரிமைக்காகப் போராட அரகன் ரோகிங்கயா பாதுகாப்புப் படை என்கிற தீவிரவாத அமைப்பு முற்பட்டது. அதைக் காரணம் காட்டி ரோகிங்கயாக்களுக்கு எதிராக மியான்மர் ராணுவம் களமிறங்கி இன அழிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக, ஆறு லட்சத்துக்கும் அதிகமான ரோகிங்கயா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்க தேசத்துக்கும் மியான்மரின் எல்லையை ஒட்டியுள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் அகதிகளாக நுழைந்திருக்கிறார்கள். 
ரோகிங்கயா பிரச்னையின் உச்சகட்டத்தின்போது கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி மியான்மருக்கு விஜயம் செய்தார். ஆனால், மியான்மரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் குறித்து அவர் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மியான்மர் அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்கிற இந்தியாவின் பலவீனத்தை சீனா குறிவைத்துக் காயை நகர்த்தத் தொடங்கியிருக்கிறது. 
கடந்த மாதம் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, பெய்ஜிங்கின் சார்பில் ஒரு சமரசத் தீர்வை எடுத்துக்கொண்டு வங்கதேசத்துக்கும் மியான்மருக்கும் பயணித்தார். இரண்டு நாடுகளுமே சீனாவின் சமரசத் தீர்வை ஏற்றுக்கொண்டிருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.
சீனாவின் மூன்று அம்ச சமரசத் தீர்வின் முதலாவது ஆலோசனை, உடனடியாக மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்துக்கு வழிகோலுவது. அடுத்தகட்டமாக மியான்மர் மற்றும் வங்கதேச அரசுகள் சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் அகதிகள் பிரச்னைக்கு முடிவு காண்பது. இவை இரண்டையும் தொடர்ந்து மூன்றாவதாக, சர்வதேச நாடுகளின் உதவியுடன் ராக்கைன் பகுதியின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிகோலுவது. சீனாவின் ஆலோசனை என்னவோ மிகவும் சரியானதாகவும் ஏற்புடையதாகவும்தான் தோன்றுகிறது. ஆனால், இதனடிப்படையில் அவ்வளவு சுலபமாகத் தடைகளும் எதிர்ப்புகளும் அகற்றப்பட்டு, சமாதானத்துக்கு வழிகோலிவிட முடியும் என்று தோன்றவில்லை.
மியான்மரின் ராணுவமும் ரோகிங்கயா தீவிரவாதக் குழுவான அரகன் ரோகிங்கயா பாதுகாப்புப் படையும் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டு வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டாலும் அதைச் செயல்பட விடாமல் தடுக்க வேறு பல சக்திகள் அங்கே உலவுகின்றன. ராக்கைன் பகுதியிலுள்ள ரோகிங்கயா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை இந்த அளவுக்குத் தூண்டிவிட்டு ராணுவத்தின் உதவியுடன் இன அழிப்புக்குக் காரணம், அந்தப் பகுதியிலுள்ள ராக்கைன் பௌத்த மத தீவிரவாதக் குழுக்கள்தான். ராணுவம் அமைதி காத்தாலும் அவர்கள் ரோகிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துவார்களா என்பது சந்தேகம்தான். அவர்களையும் ஒப்பந்தத்தில் உட்படுத்துவது மிகவும் முக்கியம்.
மியான்மர் ராணுவத்தின் தாக்குதல் ராக்கைன் பகுதியிலுள்ள ரோகிங்கயா தீவிரவாதிகள் மீதுதான் என்றாலும், அதனால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது சாமானிய ரோகிங்கயா முஸ்லிம்களே. ஆறு லட்சத்து இருபதாயிரத்துக்கும் அதிகமான பேர் உயிருக்குப் பயந்து அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இந்தியாவிலும் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் தஞ்சமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. 
போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால் அடுத்தகட்டமாக மியான்மர் அரசும் வங்கதேச அரசும் அகதிகள் பிரச்னைக்கு முடிவு கண்டாக வேண்டும். இத்தனை லட்சம் அகதிகளைப் பராமரிப்பது என்பது எந்த ஓர் அரசுக்கும் மிகப்பெரிய சுமை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், மியான்மர் அரசு அண்டைநாடுகளில் தஞ்சம் புகுந்த ரோகிங்கயா முஸ்லிம்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும் என்று தோன்றவில்லை.
முதல் இரண்டு அம்சங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டாலும்கூட மூன்றாவது அம்சமான ராக்கைன் பகுதியின் பொருளாதார வளர்ச்சி அவ்வளவு சுலபமல்ல. ரோகிங்கயாக்களின் பிரச்னை வறுமை மட்டுமே அல்ல. அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதும், மியான்மர் நாட்டின் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதும்தான். நாடில்லா அகதிகளாக ரோகிங்கயாக்கள் இருக்கும் நிலைமைதான் பிரச்னையின் அடிப்படை. அவர்களது உரிமை உறுதிப்படுத்தப்படாதவரை ராக்கைன் பகுதியில் அமைதி ஏற்படுவது சந்தேகம்தான்.
இந்தப் பிரச்னையில் சீனா ஆர்வம் காட்டுவதன் பின்னணியில் பொருளாதாரக் கண்ணோட்டம் இருக்கிறது. சீனா உருவாக்க நினைக்கும் சர்வதேச நெடுஞ்சாலை ராக்கைன் பகுதி வழியாகச் செல்கிறது. அந்தப் பகுதியில் 7.3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.47,085 கோடி) செலவில் துறைமுகம் ஒன்றை சீனா அமைத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், 2.45 பில்லியன் டாலர் (ரூ. 15,802 கோடி) செலவில் சீனாவின் யுன்னான் பகுதியை அந்தத் துறைமுகத்துடன் இணைக்கும் கச்சா எண்ணெய்க் குழாய்களை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறது. ராக்கைன் பகுதியில் நிலவும் அமைதியின்மை சீனாவைப் பொருளாதார ரீதியாகப் பாதிக்கிறது என்பதால்தான் சீனா இந்தப் பிரச்னையில் தலையிட்டு அமைதியை நிலைநாட்ட முற்பட்டிருக்கிறது.
சீனாவைப் போலவே இந்தியாவுக்கும் ராக்கைன் பகுதியில் அமைதி நிலவுவதில் அக்கறை உண்டு. மியான்மர் அரசின் கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு, ரோகிங்கயாக்களைக் குடிமக்களாக அங்கீகரித்து சம உரிமை அளித்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். அதற்கு இந்தியாவும் முயற்சி எடுக்க வேண்டும்.
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/dec/06/சீனாவின்-சமரச-முயற்சி-2820987.html
2820461 தலையங்கம் சமநிலை மாறக் கூடாது! ஆசிரியர் Tuesday, December 5, 2017 02:27 AM +0530 சமநிலை இணையம் (நெட் நியூட்ராலிட்டி) என்கிற கொள்கையைக் கைவிடுவது, அகற்றுவது என்று அமெரிக்கா முடிவெடுக்க இருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவைப் பொருத்தவரை, சமநிலை இணையம் என்கிற கொள்கையில் மாற்றம் செய்யும் உத்தேசம் கிடையாது என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையமும் ஐயத்துக்கு இடமில்லாமல் உறுதி அளித்திருப்பது பாராட்டுக்குரிய முடிவு.
"இணையம் என்பது யாருக்கும் சொந்தமானதல்ல. எந்தவித வேறுபாடுமின்றி அனைவருக்கும் அதை பயன்படுத்தும் உரிமை உண்டு' என்று தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் தலைவர் ஆர்.எஸ். சர்மா திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
சர்மா மட்டுமல்ல, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும், இந்தப் பிரச்னையில் இந்தியா எந்தவித சமரசமும் செய்து கொள்ளாது என்றும், எல்லா விஷயங்களிலும் நாம் அமெரிக்காவைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியிருப்பது பாராட்டுக்குரியது. "சமநிலை இணையம்' என்பது, ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டிருக்கும் எழுத்துரிமை, பேச்சுரிமை போன்றது என்கிற அவரது கருத்து மிகச் சரியான புரிதல்.
"சமநிலை இணையம்' என்றால் என்ன என்று பலரும் குழம்புகிறார்கள். இப்போது, நமக்கு பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல், ரிலையன்ஸ் ஜியோ, வோடோபோன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணையதள சேவையை வழங்கி வருகின்றன. ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி நாம் இணையத் தொடர்புக்கான சேவையைப் பெற்றுவிட்டால், அதன் மூலம் மின்னஞ்சல், குறுஞ்செய்தி அனுப்புவதில் தொடங்கி, சுட்டுரை, கட்செவி அஞ்சல், முகநூல் என்று பல்வேறு பயன்பாடுகளைக் கையாள முடியும்.
சேவைக் கட்டணத்துக்குத் தகுந்தாற்போலக் குறிப்பிட்ட அளவிலான பதிவிறக்கங்களை நாம் செய்து கொள்ளலாம். அந்தப் பதிவிறக்கங்கள் எதுவாக இருந்தாலும், அதன் அளவுதான் நிர்ணயிக்கப்படுகிறதே தவிர, இன்னின்ன பதிவிறக்கத்திற்கு இவ்வளவு கட்டணம் என்று வசூலிக்கப்படுவதில்லை. நாம் மின்சார இணைப்பைப் பெற்றுவிட்டால், மின் விளக்கோ, மின் விசிறியோ, குளிர்சாதனமோ, மின் அடுப்போ எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்படுத்தும் அளவுக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டுமே தவிர, இன்ன பயன்பாட்டுக்கு இவ்வளவு கட்டணம் என்று வரையறுக்கப்படுவதில்லை. அதேபோலத்தான் இப்போது இணைய சேவையும் வழங்கப்படுகிறது. இதைத்தான் "சமநிலை இணையம்' என்கிறோம்.
"கட்செவி அஞ்சல்' வந்த பிறகு, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வருவாய் பெரிதாகப் பாதிக்கப்பட்டது. குறுஞ்செய்தி அனுப்புவதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், வாடிக்கையாளர்கள் "கட்செவி அஞ்சலை'ப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். வெளிநாடுகளுக்குச் செல்லிடப்பேசியில் பேசினால் அதிகமான கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது என்பதால், பெரும்பாலோர் கட்செவி அஞ்சலில் பேசத் தொடங்கிவிட்டனர். அதேபோல, "காயல்' (ஸ்கைப்) வந்த பிறகு வெளிநாட்டுத் தொடர்புகளுக்கு அதைப் பயன்படுத்துகிறார்கள். இதற்கெல்லாம் தனித்தனியாக எந்தவிதக் கட்டணமும் கிடையாது.
மிகப் பெரிய முதலீட்டில் செல்லிடப்பேசி கோபுரங்களையும், தொலைத்தொடர்புக்கான கட்டமைப்பையும் செய்திருப்பதாகவும், அதற்கும் மேலே அரசுக்கும் அலைக்கற்றை அனுமதிக்காகப் பெரும் பணம் தந்திருப்பதாகவும் புலம்புகின்றன தொலைத்தொடர்புச் சேவை வழங்கும் நிறுவனங்கள். தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வருவாயை எல்லாம், புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் கெடுத்து விடுகின்றன என்பதுதான் அவர்களது எதிர்ப்புக்குக் காரணம்.
இணையதள சேவைக்கு என்று மொத்தமாக ஒரு கட்டணம் பெறுவதற்குப் பதிலாக, ஒவ்வொரு சேவைக்கும் அதனதன் பயன்பாட்டுக்குத் தக்கபடி தனித்தனிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதுதான் சேவை நிறுவனங்களின் வாதம். அதாவது, தொலைக்காட்சி அலைவரிசைகளில் சிலவற்றை இலவசமாகவும், சிலவற்றைக் கட்டணம் செலுத்தியும் பார்ப்பதுபோல, மின்னஞ்சல் உள்ளிட்டவை இலவசமாகவும், கட்செவி அஞ்சல், முகநூல், காயல் போன்றவை கட்டணம் செலுத்தியும் பயன்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள்.
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு "இணையம்' ஒரு வரப்பிரசாதம். இதன்மூலம் நிர்வாகத்தின் செயல்பாடுகள் தட்டிக் கேட்கப்படுகின்றன. தகவல் பரிமாற்றம் மூலம் தூர இடைவெளி அகற்றப்பட்டு வளர்ச்சியின் வேகம் அதிகரிக்கிறது.
130 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில் 50 கோடி இணைய இணைப்புகள் இருக்கின்றன. அதாவது, 33 சதவீதம் பேர் மட்டுமே இணையத்தால் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். "சமநிலை இணையம்' மறுக்கப்பட்டால் இந்தியர்கள் அனைவரையும் இணையத்தில் இணைப்பதற்குப் பல ஆண்டுகளாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாமல் பல சிறிய நிறுவனங்கள் அழிக்கப்படுவதற்கும் "சமநிலை இணையம்' இல்லாமல் போவது வசதியாக இருக்கும்.
இன்றைய உலகத்தில் அனைவருக்குமான பொதுவெளி இணையம்தான். இது கட்டணம் வசூலிப்பதற்கான நெடுஞ்சாலையோ, ரயில் தண்டவாளமோ அல்ல. காரணம், அவற்றுக்கு அரசு உரிமை கோருவதுபோல, உலகத்துக்குப் பொதுவான இணையத்துக்கு எந்தவோர் அரசோ, நாடோ சொந்தம் கொண்டாட முடியாது. அடுத்தவருக்கு பாதிப்பு ஏற்படாதவரை அதை யாரும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை உண்டு. இணையச் சேவைக்கான சமநிலை மாறக்கூடாது.

]]>
http://www.dinamani.com/editorial/2017/dec/05/சமநிலை-மாறக்-கூடாது-2820461.html
2819885 தலையங்கம் தரமின்மையும், திறனின்மையும்! ஆசிரியர் Monday, December 4, 2017 02:08 AM +0530 சுதந்திரமடைவதற்கு முன்னால் இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 18 விழுக்காடாக இருந்தது. இப்போது அது 80 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்திருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் நூற்றுக்கு நூறு விழுக்காடு மக்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் என்பது சரி. அவர்கள் எழுதுவதோ, படிப்பதோ குறித்த புரிதல் உள்ளவர்களா என்கிற கேள்வி எழுகிறது. பல்வேறு ஆய்வுகள் நமக்குத் தெரிவிப்பதெல்லாம், இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் புரிதலுடன் படிக்கவோ, தவறில்லாமல் எழுதவோ தெரிந்தவர்களல்ல என்பதுதான்.
உலக வங்கி ஒவ்வோர் ஆண்டும் உலக வளர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிடுகிறது. "கல்வியின் இலக்கை அடைவதற்கான பயிற்சி' என்கிற தலைப்பில் உலக வளர்ச்சி அறிக்கை 2018 வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் கிராமப்புறங்களில் கல்விச்சாலைகள் செயல்படும் விதமும் அவற்றில் கல்வி கற்பிக்கப்படும் விதமும் குறித்து அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றன.
இந்தியாவைப் பொருத்தவரை கல்வி கற்பித்தலின் தரம் மிகவும் குறைந்திருக்கிறது என்றும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்களே தவிர அவர்கள் எதையும் படித்துப் புரிந்துகொள்வதில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2016-இல் கிராமப்புறப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளில் ஏறத்தாழ பாதிப்பேரும், எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினரும் சாதாரண கூட்டல், கழித்தல்கூட செய்யத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
கிராமப்புறங்களில் ஆறாம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளில் 85 விழுக்காடு குழந்தைகள் புரிதலுடன் ஒரு வாக்கியத்தைச் சரியாக எழுதவோ, படிக்கவோ தெரிந்தவர்களாக இல்லை. அதைவிட வேதனை என்னவென்றால், இந்த நிலைமை ஆண்டுக்கு ஆண்டு மோசமாகி வருகிறது என்பதுதான். 
2014-இல் ஊரகப்புற மாணவர்களில் 47.3 விழுக்காடு மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தைப் படிக்க முடிந்தவர்களாக இருந்தார்கள். 2016-இல் இது 42.1 விழுக்காடாகக் குறைந்ததே தவிர, புரிதல் அதிகரிக்கவில்லை. அரசுப் பள்ளிகளில் கல்வி கற்பித்தல் முறையாக இல்லை என்று வசதியுள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளை கிராமப்புறங்களில் தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப முற்படுகிறார்கள். ஆனால், ஊரகப்புறங்களில் தனியார் பள்ளிகளும் எந்தவிதத்திலும் அரசுப் பள்ளிகளைவிட சிறப்பானதாக இல்லை என்பதுதான் ஆய்வுகளின் முடிவு. 
2014-இல் கிராமப்புறப் பள்ளிகளில் படித்த 33.4 விழுக்காடு குழந்தைகள் சாதாரண அரிச்சுவடிக் கணக்குகளைக்கூட போடத் தெரியாமல் தவித்தனர் என்றும், அவர்களுக்குப் பெருக்கல், வகுத்தல் போன்றவற்றில் சரியான புரிதல் இல்லை என்றும் அந்த அறிக்கை தெரியப்படுத்துகிறது. 2014-இல் புரிதலுடன் படிக்கும் மாணவர்களின் விகிதம் 33.4 விழுக்காடாக இருந்தது, 2016-இல் 28.1 விழுக்காடாகக் குறைந்ததே தவிர அதிகரிக்கவில்லை.
கற்பித்தலின் தரத்தை உயர்த்துவதும் மாணவர்களுக்குத் தாங்கள் படிக்கும் பாடங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்துவதும் இயலாத ஒன்று அல்ல. பல்வேறு நாடுகள் அதை சாதித்துக் காட்டியிருக்கின்றன. சொல்லப்போனால் உள்நாட்டுப் போர், உச்சகட்ட வறுமை என்று பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ளும் நாடுகள்கூட கல்வியில் மிகப்பெரிய முன்னேற்றத்தைச் சாதித்துக் காட்டியிருக்கின்றன. இந்தியா அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியும், மனித வளமும் இல்லாமல் இருந்தும்கூட சிறிய பல நாடுகள் ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளின் தரத்துக்கு தங்களது கல்வியின் தரத்தை உயர்த்த முடிந்திருக்கிறது.
வியத்நாமை எடுத்துக்காட்டாகக் கொண்டால், மலைப்பை ஏற்படுத்துகிறது அவர்களது கல்வி வளர்ச்சி. வியத்நாமில் 15 வயதான மாணவர்கள் எழுதுதல், வாசித்தல், கணக்குப் போடுதல் ஆகிய அனைத்திலும் ஜெர்மானியர்களுக்கு நிகரான கல்வித்தரம் பெற்றவர்களாக இருக்கின்றனர். லைபீரியா, பப்புவா நியுகினி, டோங்கா உள்ளிட்ட பல சிறிய நாடுகள் அரசின் முனைப்பாலும், செயல்பாட்டாலும் மிகக் குறுகிய காலத்தில் கல்வியில் சர்வதேசத் தரத்தை எட்டியிருக்கின்றன. இந்த நாடுகளிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.
ஒருபுறம் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்றால், இன்னொருபுறம் பாதியில் படிப்பை நிறுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை சவாலாக இருக்கிறது.
தரமான ஆசிரியர்கள் இல்லாமை மிகப்பெரிய பிரச்னை. அவர்களுக்கு முறையான கற்பித்தல் பயிற்சி இல்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு மாணவர்களை வழிநடத்தும் திறமையும் இல்லாமல் இருக்கிறது. தங்களுக்கே அறிவுச்செறிவு இல்லாததால் மாணவர்கள் கேள்வி கேட்பதை உற்சாகப்படுத்துவது இல்லை. ஆசிரியர்கள் பள்ளிக்கு முறையாக வருவதும்கூட இல்லை என்று கூறப்படுகிறது.
ஆசிரியர்களுக்கு பள்ளிப் பாடத் திட்டங்களிலும் கற்பித்தல் முறையிலும் தொடர்ந்து பயிற்சி அளிப்பதையும், தரமானவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிப்பதையும், கற்பித்தல் முறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதையும் செய்யாமல் போனால், கல்விச்சாலைகளில் குழந்தைகள் செலவழிக்கும் நேரம் வீண் என்றுதான் கொள்ள வேண்டும்.
நூறு விழுக்காடு குழந்தைகளையும் கல்விச் சாலைகளுக்குப் படிக்கக் கொண்டுவந்து விடலாம். ஆனால் அவர்கள் புரிதலுடன் கற்றுத் தேர்வதை எப்படி உறுதிப்படுத்தப் போகிறோம் என்பதுதான் சவால்!

]]>
http://www.dinamani.com/editorial/2017/dec/04/தரமின்மையும்-திறனின்மையும்-2819885.html
2818652 தலையங்கம் திட்டங்களுக்கு மறுவாழ்வு! ஆசிரியர் Saturday, December 2, 2017 01:26 AM +0530 சென்னையில் அண்மையில் நடைபெற்ற நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழகத்தில் பல்வேறு நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளை ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 
ரூ.20 ஆயிரம் கோடியில் சென்னை-பெங்களூரு விரைவு சாலை அமைக்கப்படும், முக்கிய சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும், தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்கள் அதிநவீன பேருந்து நிலையங்களாக மாற்றப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளார். 
ஒரு நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எந்த அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளனவோ, அவற்றைப் பொருத்துத்தான் பொருளாதார வளர்ச்சி அமைகிறது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் சாலைப் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தங்க நாற்கரச் சாலை, நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டிலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளை இணைப்பதிலும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது. அதற்குப் பிறகுதான் துறைமுகங்கள் பெரும் வளர்ச்சி கண்டன என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஏற்றுமதி - இறக்குமதியில் சாலைக் கட்டமைப்பு அத்தியாவசியமானது.
திட்டப் பணிகளை அறிவித்தவுடனேயே, அது செயல்பாட்டுக்கு வந்துவிடாது. நிலம் கையகப்படுத்துதலில் இருந்து தொடங்குகிறது பிரச்னை. தேவையான நிலத்தைக் கையகப்படுத்த முடியாமல், பல்வேறு திட்டப் பணிகள் முடங்கியுள்ளன. இதற்காக திட்ட வரைபடங்களும் மாற்றப்பட்டுள்ளன. நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும், அதற்கே பல வருடங்கள் ஆகின்றன. இவற்றையெல்லாம் மீறி, திட்டப் பணிகளை ஆரம்பித்து, துரிதமாகச் செயல்படுத்தி வந்தாலும்கூட இடையே தடங்கல்கள், குறுக்கீடுகள். மூலப் பொருள்களின் விலை உயர்வு, நிதிப் பற்றாக்குறை, திட்ட மறுமதிப்பீடு என்று பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும்தான் ஒவ்வொரு திட்டமும் நகர்கிறது.
இதுபோன்று தற்போது நாடு முழுவதும் பல்வேறு துறைகளிலும் சுமார் 62,000 திட்டப் பணிகள் முடங்கியும், நடந்து கொண்டும் இருக்கின்றன என்கிறது மத்திய அரசின் புள்ளிவிவரத் துறை. அதாவது தொடக்க நிலையிலும் முடியும் தருவாயிலும் திட்டப் பணிகள் உள்ளன.
தற்போது தார் சாலைகள், நான்கு வழிச் சாலைகள், எக்ஸ்பிரஸ்வே சாலைகள் எனப் பல்வேறு வகையான சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென மத்திய அரசு ரூ.9 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது. அதில் சாலைப் போக்குவரத்துப் பணிகளை மேற்கொள்வதற்கு மட்டும் சுமார் ரூ.7 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளது.
ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 83,000 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலைகளை அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இத் திட்டப் பணிகளில் செய்யப்படும் முதலீடு என்பது, பின்னாளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். இப் பணிகளின் மூலம் அதிகமானோர் வேலைவாய்ப்புப் பெறுவர். இதன்மூலம், அந்நிய முதலீடு மற்றும் தனியார் முதலீடு அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 
ஜி.டி.பி. எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகிதத் தொகையை அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கு ஒதுக்கினால், வரும் ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1 முதல் 1.2 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 
மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சராக நிதின் கட்கரி பதவியேற்றபோது, ஒரு நாளைக்கு 40 கிலோமீட்டர் தூர சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தார். ஆனால், அவரது எண்ணம் பாதியளவுக்குக் கூட ஈடேறவில்லை என்பதுதான் யதார்த்த நிலைமை. கடந்த மார்ச் மாதம் வரை ஒரு நாளைக்கு 23 கிலோமீட்டர் தூர அளவுக்கே சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், எதிர்பார்த்த அளவுக்கு வேலைவாய்ப்புப் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை.
அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் என்னென்ன? அவற்றின் இன்றைய நிலை என்ன? முடங்கிக் கிடந்தால் அதற்கான காரணங்கள் என்ன? தொடர்ந்து நிறைவேற்றும் எண்ணம் இல்லையென்றால், அதை வெளிப்படையாக அறிவித்து முற்றுப்புள்ளி வைப்பதும், நிறைவேற்றும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சியும் முனைப்பும் மேற்கொள்ளப்படுவது குறித்த முழு விவரங்களையும் மக்களுக்குத் தெரியப்படுத்தவும் வேண்டும். முடங்கிக் கிடக்கும் திட்டங்களுக்கு உயிர்ப்பு அளிப்பதன் மூலம்தான், ஆட்சிக்கு மரியாதையும், நல்ல பெயரும் கிடைக்கும். 
மத்திய அரசில் இதற்கென்று புள்ளிவிவரத் துறையின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் மேற்பார்வை செய்ததற்கான துறை என்று பல்வேறு துறைகள் இயங்குகின்றன. இதற்காக தனி அமைச்சகம் செயல்படுகிறது. பிரதமர் அலுவலகத்திலும் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதைக் கவனிப்பதற்காக ஒரு துறை இயங்குகிறது. இவையெல்லாம் இருந்தால்கூட இந்தத் துறைகளுக்கும் பல்வேறு அமைச்சகங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே முறையான தொடர்பு இல்லாமல்இருப்பதுதான் பல திட்டங்கள் முடங்கிக் கிடப்பதற்கு முக்கியமான காரணம்.
திட்டம் போடுவதிலும், அறிவிப்பதிலும் பயனில்லை. நிறைவேற்றுவதுதான் முக்கியம். முடங்கிக் கிடக்கும் திட்டங்களுக்கு எப்போது, எப்படி மறுவாழ்வு அளிப்பது?

]]>
http://www.dinamani.com/editorial/2017/dec/02/திட்டங்களுக்கு-மறுவாழ்வு-2818652.html
2818063 தலையங்கம் வெளிச்சம் போதவில்லை! ஆசிரியர் Friday, December 1, 2017 01:34 AM +0530 'வியாபம்' முறைகேடு வழக்கில் மத்தியப் புலனாய்வு அமைப்பு 592 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. இவ்வளவு பெரிய ஊழல், அரசு மற்றும் நிர்வாகத் தலைமைகளின் ஆசியுடனோ, தொடர்புடனோ அல்லாமல் நடந்திருக்கவே முடியாது என்பது அனைவருக்குமே தெரியும். ஐந்தாண்டுகளாக நடத்தப்படும் விசாரணையின் முடிவில், மத்தியப் புலனாய்வு அமைப்பினரால் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் யாரென்று பார்த்தால், இந்த ஊழலில் வெளிப்படையாகக் கையும் களவுமாகப் பிடிபட்ட சாதாரணமானவர்களே தவிர, பின்னணியில் இருந்தவர்கள் ஒருவர்கூடக் கிடையாது.
மத்தியப் பிரதேசத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையிலும், அரசுப் பணியிடங்களை நிரப்புவதிலும் நடந்த முறைகேடுதான் 'வியாபம்' முறைகேடு என்று பரவலாக அறியப்படுகிறது. 'வ்யவசாயிக் பரிக்ஷô மண்டல்' என்கிற ஹிந்தி வார்த்தையின் சுருக்கம்தான் 'வியாபம்'. தமிழகத்தில் பணியாளர் தேர்வு ஆணையம் இருப்பதுபோல, மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்த அமைப்பு இது. இப்போது இதற்குத் 'தொழில்முறைத் தேர்வு ஆணையம்' என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், 'வியாபம்' ஆணையம் நடத்திய போட்டித் தேர்வுகளில், முறைகேடான வழியில் தகுதியற்றவர்கள் பணம் கொடுத்து, குறுக்கு வழியில் அரசுப் பணி, பொறியாளர் பணி, மருத்துவப் பணிகளில் சேர்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மருத்துவக் கல்லூரிச் சேர்க்கையிலும் இதுபோல முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மத்தியப் பிரதேச நீதிமன்றம், சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து விசாரிக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
2007 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் நடந்திருக்கும் இந்த முறைகேடு குறித்த விசாரணை தொடங்கியது முதல், இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் மரணமடைவது ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. பெரும்பாலானவர்கள் வாகன விபத்திலும், ஏனையோர் சிலர் தற்கொலை செய்து கொண்டும் இறந்திருக்கிறார்கள். மரணமடைந்தவர்களில் 32 பேர், 25-க்கும் 30-க்கும் இடையிலான வயதுடையவர்கள் என்று சிறப்பு விசாரணைக் குழு தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது.
தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நுழைவுத் தேர்வு எழுதாமலேயே, எழுதியதாகப் பதிவு செய்யப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மத்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணை, மாநில அரசின் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையைவிட விரிவாகவும், முறையாகவும் நடந்திருக்கிறது என்றாலும்கூட, இந்த விசாரணை முடிவுகள் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமையவில்லை என்பதுதான் உண்மை.
மத்தியப் புலனாய்வு அமைப்பின் வளையத்துக்குள் 'வியாபம்' ஆணையத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த மூத்த இந்திய அரசுப்பணி அதிகாரிகளோ, அவர்களை வழிநடத்தும் துறைசார்ந்த அமைச்சர்களோ ஏன் வரவில்லை என்று புரியவில்லை. இது குறித்துத் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று அரசியல் தலைமை பதில் சொல்லித் தப்பிக்க முடியாது, கூடாது.
'வியாபம்' முறைகேட்டில் மாநில ஆளுநர் ராம் நரேஷ் யாதவ், மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், அவரது மனைவி சாதனா, மத்திய அமைச்சர் உமாபாரதி உள்ளிட்டோர் தொடர்புடையவர்கள் என்று இடித்துரைப்பாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இவர்களது மனுவை ஏற்றுத்தான், 'வியாபம்' தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்தியப் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கும்படியும், தனது நேரடி மேற்பார்வையில் விசாரணை தொடரும் என்பதால் போபால் உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் உச்சநீதிமன்றம் இரண்டாண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது.
பதவியின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதால், மாநில ஆளுநர் விசாரணை வளையத்திலிருந்து அகற்றி நிறுத்தப்பட்டார். மற்றவர்கள், மத்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணையில் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அகற்றி நிறுத்தப்பட்டனரா, இல்லை அவர்கள் வசதியாக விசாரணையிலிருந்து தவிர்க்கப்பட்டிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
ஏறத்தாழ ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்படும் 'வியாபம்' முறைகேடு குறித்த விசாரணையிலும்கூட முறைகேடு நடக்கிறதோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, மத்தியப் புலனாய்வு அமைப்பின் செயல்பாடு. 
'வியாபம்' முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சுமார் 2,000 பேரில் முன்னாள் மாநிலக் கல்வி அமைச்சர் லட்சுமிகாந்த் சர்மா, இந்தியக் காவல் பணி அதிகாரி ஆர்.கே. ஷிவாரே, மருத்துவர் வினோத் பண்டாரி, சுரங்க அதிபர் சுதீர் சர்மா என்று பல பெருந்தலைகள் இருந்தனர். அவர்கள் குறித்து மத்தியப் புலனாய்வு அமைப்பின் இப்போதைய குற்றப்பத்திரிகையில் எதுவும் கூறப்படவில்லையே ஏன்?
1,087 மாணவர்கள் முறைகேடாக மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது சேர்க்கை ரத்து செய்யப்பட்டு, கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள், சரி. அத்துடன் முடிந்துவிட்டதா? 'வியாபம்' முறைகேட்டில் தொடர்புடைய பலர் வாகன விபத்துகளில் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்களே, அது குறித்து ஏன் விசாரணை இல்லை, குற்றவாளிகள் ஏன் அடையாளம் காணப்படவில்லை? 
இப்படி இன்னும் பல அவிழ்க்காத, அவிழ்க்க முடியாத முடிச்சுகள் இந்த முறைகேட்டில் தொடர்கின்றன. நிஜம்தான் என்ன? 
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானுக்குத்தான் வெளிச்சம்!
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/dec/01/வெளிச்சம்-போதவில்லை-2818063.html
2817527 தலையங்கம் நாய் வால் நிமிராது! ஆசிரியர் Thursday, November 30, 2017 01:35 AM +0530 மும்பையில் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா தலைவர் ஹஃபீஸ் சயீதை வீட்டுக் காவலில் இருந்து விடுவித்து பாகிஸ்தான் நீதிமன்றம், உத்தரவிட்டிருப்பது எந்தவித அதிர்ச்சியையோ, வியப்பையோ ஏற்படுத்தவில்லை. ஆரம்பம் முதலே அவரது கைதும், அவரை வீட்டுக் காவலில் வைத்திருந்ததும் வெறும் கண்துடைப்புதான் என்பது உலகத்துக்கே தெரியும்.
ஹஃபீஸ் சயீது மீது எந்தவொரு பயங்கரவாதக் குற்றச்சாட்டின் அடிப்படையிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. பொது ஒழுங்குக்குப் பங்கம் விளைவிக்க முயன்றார் என்கிற வலுவில்லாத குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவர்மீது குறிப்பிட்ட எந்தவிதக் குற்றச்சாட்டும் அரசால் முன்வைக்க முடியாததைக் காரணம் காட்டி, இப்போது பாகிஸ்தான் நீதிமன்ற நீதிபதிகள் அவரது நான்காண்டு வீட்டுக் காவலை விலக்கி இருக்கின்றனர்.
1990-இல் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பை உருவாக்கியதைத் தொடர்ந்து, பல்வேறு பயங்கரவாதச் செயல்களுக்கான திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுவதிலேயே சயீதின் கவனம் முழுவதும் இருந்தது. 1993 முதல் இந்திய ராணுவத்தின் மீதும், பொதுமக்கள் மீதும் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தியவர் ஹஃபீஸ் சயீது என்று அமெரிக்க உளவுத்துறையின் கோப்புகள் தெரிவிக்கின்றன. 2001 நாடாளுமன்றத் தாக்குதலுக்கும், 2006-இல் மும்பை ரயில் நிலையத்தில் நடந்த தொடர் வெடிகுண்டுத் தாக்குதலுக்கும் லஷ்கர்-ஏ-தொய்பா காரணமாக இருந்திருக்கிறது. 2008 மும்பை தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க உள்துறை இவரை சர்வதேச பயங்கரவாதி என்று அறிவித்தது.
2001 டிசம்பர் 13 இந்திய நாடாளுமன்றத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, டிசம்பர் 21-ஆம் தேதி பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்ட ஹஃபீஸ் சயீது மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார். இந்தியாவின் கடுமையான கண்டனத்தைத் தொடர்ந்து மே மாதம் கைது செய்யப்பட்டு, அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். 2006 மும்பை ரயில் நிலையத் தாக்குதலைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, லாகூர் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 28-ஆம் தேதியே விடுதலை செய்யப்பட்டு விட்டார். அதே நாள் மீண்டும் கைது செய்யப்பட்டாலும், மீண்டும் நீதிமன்ற உத்தரவின்படி அக்டோபரில் வெளியில் வந்துவிட்டார்.
இப்படி ஹஃபீஸ் சயீது பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்படுவதும், நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவிடுவதும் தொடர்கதை. இதன் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவமும், ராணுவத்தை அனுசரித்து நடக்கும் நீதித்துறையும் இயங்குகின்றன என்பதுதான் உண்மை. ஹஃபீஸ் சயீதை நீதிமன்றம் விடுவித்திருப்பதன் பின்னணியில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் கட்டுப்பாட்டில் உள்ள அரசியல் தலைமைக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் அதிகாரப் போட்டிதான் காரணம் என்றுகூடச் சொல்லலாம்.
ஹஃபீஸ் சயீதின் மீது வலுவான ஆதாரங்களுடன் குற்றச்சாட்டைப் பதிவு செய்யவோ, அதனடிப்படையில் அவரைக் கைது செய்யவோ முடியவில்லை என்பது, நவாஸ் ஷெரீபின் கரம் வலுவிழந்திருக்கிறது என்பதன் அறிகுறி. அதேபோல, நீதிமன்றம் சயீதை விடுவித்திருப்பது பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகரித்து வரும் செல்வாக்கை உணர்த்துகிறது.
நவாஸ் ஷெரீபின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சி இரண்டையுமே வலுவிழக்கச் செய்வது என்பதுதான் ராணுவத்தின் திட்டம். இவற்றிற்கு மாற்றாகப் பல சிறிய கட்சிகளை ராணுவம் மறைமுகமாக ஊக்குவித்து வருகிறது. கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் கட்சியும் அதில் ஒன்று. லஷ்கர்-ஏ-தொய்பாவையே ஓர் அரசியல் இயக்கமாக மாற்றும் திட்டத்துக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் ஆசி இருக்கிறது. 
பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவால் விடுதலை செய்யப்பட்டிருக்கும். ஹஃபீஸ் சயீது தனது தீவிரவாத முகத்துக்கு மேல் அரசியல்வாதி முகமூடி அணிந்து கொண்டாலும் வியப்படையத் தேவையில்லை.
ஹஃபீஸ் சயீது தண்டிக்கப்பட்டால், பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது என்று பொருள். ராணுவத்தால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுபவைதான் லஷ்கர்-ஏ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள். இந்த அமைப்புகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதன் மூலம் தனது கட்டுப்பாட்டில் பாகிஸ்தானின் ஆட்சியாளர்களை வைத்துக் கொண்டிருக்கிறது அந்த நாட்டு ராணுவம். அதனால், ஹஃபீஸ் சயீது விடுவிக்கப்பட்டது எதிர்பாராததல்ல.
ஒவ்வொரு முறை ஹஃபீஸ் சயீது விடுவிக்கப்படும்போதும், அடுத்த சில வாரங்களில் எங்கேயாவது தீவிரவாதத் தாக்குதல் நடப்பது என்பது கடந்தகால அனுபவம். ஆப்கானிஸ்தானில் இந்தியாவால் நிறைவேற்றப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும், 
ஈரானில் இந்திய உதவியுடன் அமைக்கப்பட்டிருக்கும் சபாஹர் துறைமுகமும் தாக்குதலுக்கு ஆளாகாமல் பாதுகாப்பதில் நாம் கவனமாக இருந்தாக வேண்டும்.
ஹஃபீஸ் சயீது அரசியல் கட்சி தொடங்கி ஆட்சியையும் கைப்பற்றினால், பாகிஸ்தானில் இதுவரை அரசு ஆதரவுடன் பயங்கரவாதம் இருந்ததுபோய் வருங்காலத்தில் பயங்கரவாதிகளால் அரசு நடத்தப்படும் நிலைமை ஏற்படக்கூடும். அதுதான் கவலையாக இருக்கிறது!
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/30/நாய்-வால்-நிமிராது-2817527.html
2816854 தலையங்கம் தொடரும் தவறு...! ஆசிரியர் Wednesday, November 29, 2017 02:19 AM +0530 நீண்ட தாமதத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் ஜனவரி 5-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இந்த 22 நாள் கூட்டத்தொடரில், அவை 14 அமர்வுகளைக் காண இருக்கிறது. 
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்குவது வழக்கம். உறுப்பினர்கள் முன்கூட்டியே தங்களது கேள்விகளைத் தயார் செய்வதற்கும், தலைநகர் தில்லிக்கு வந்து சேர்வதற்கும் வசதியாக இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்பே அதாவது, அக்டோபர் கடைசி வாரத்திலேயே இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவது வழக்கம்.
இரண்டு கூட்டத்தொடர்களுக்கு இடையேயான கால அளவு ஆறு மாதத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்று அரசியல் சாசனம் வரம்பு விதித்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11-ஆம் தேதிதான் முடிவடைந்தது என்கிற நிலையில், குளிர்காலக் கூட்டத்தொடரை கூட்டாமலேகூட அரசு நேரிடையாக பட்ஜெட் கூட்டத்தொடரைக் கூட்டுவதில் எந்த அரசியல் சாசன முறைகேடும் இல்லை என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியாளர்கள் தெரிவிக்கும் கருத்து விபரீதமானது.
ஆண்டுதோறும் பட்ஜெட், மழைக்காலம், குளிர்காலம் என்று மூன்று பிரிவுகளாகக் கூட்டத்தொடர்களை அமைத்துக்கொள்ளும் முறை 1955 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தொடர்களுக்கு இடையே இடைவெளி அதிகமில்லாமல் இருந்தால்தான், ஆட்சியாளர்களுக்கு சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்தி நிறைவேற்றவும், எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்துக் கேள்விகளை எழுப்பி விவாதத்துக்கு வழிகோலவும் முடியும் என்பதால்தான் இப்படியொரு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரதமரும் ஏனைய மத்திய அமைச்சர்களும் மூத்த பாஜக தலைவர்களும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பல உறுப்பினர்கள் ஒரு மாநிலத்தில் பிரசாரத்திற்காகச் செல்கிறார்கள் என்பதற்காக, நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடரே தள்ளிப்போடப்படுகிறது என்பது எப்படி சரி?
நாடாளுமன்றம்தான் ஜனநாயக அமைப்பின் வெளிப்படையான அடையாளம். கடந்த பத்து, இருபது ஆண்டுகளாகவே பல ஜனநாயக நெறிமுறைகளும் நாடாளுமன்ற நடைமுறைகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வருகை தருவது மிகவும் குறைவாக இருக்கிறது. அவர் விவாதங்களில் கலந்துகொள்ளவில்லை என்றும், கேள்வி
களுக்குப் பதில் அளிப்பதில்லை என்றும் ஏற்கெனவே எதிர்க்கட்சிகளால் குற்றம்சாட்டப்படுகிறது. இதற்கு முந்தைய பிரதமர்கள் அனைவரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்கும்போது தவறாமல் மக்களவையிலோ மாநிலங்களவையிலோ கலந்துகொள்வதையும், விவாதங்களையும் விமர்சனங்களையும் கேட்டுக்கொள்வதையும், எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இந்திய நாடாளுமன்றம் ஏனைய ஜனநாயக நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அமர்வுகள்தான் கூடுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே எல்லாக் கூட்டத்தொடர்களும் முடக்கப்படுவதும் விவாதங்கள் நடைபெறாமல் கூச்சல்குழப்பத்தில் ஆழ்வதும் வழக்கமாகிவிட்டிருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகளைக் குற்றம்சாட்டுவது தவறு. நாடாளுமன்றத்தைக் கூட்டுவதும், நடத்துவதும் மசோதாக்களைத் தாக்கல் செய்து வெற்றிகரமாக நிறைவேற்றுவதும் அரசின், ஆளும் கட்சியின் கடமையே தவிர, எதிர்க்கட்சிகளுடையது அல்ல. முந்தைய மன்மோகன்சிங் ஆட்சியில் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையை முடக்கியபோதும் இதே கருத்தைத்தான் 'தினமணி' தனது தலையங்கத்தில் முன்வைத்தது.
2016-இல் 70 அமர்வுகள் என்றால் இந்த ஆண்டில் நாடாளுமன்றம் 48 அமர்வுகள்தான் கூடியிருக்கிறது. இதையே ஆண்டுக்கு 135 அமர்வுகள் கூடிய முதலாவது மக்களவையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எந்த அளவுக்கு நமது நாடாளுமன்றச் செயல்பாடு வலுவிழந்திருக்கிறது என்பது புரியும். நாடாளுமன்றம் என்பது விவாதிக்கவும் கேள்விகளை எழுப்பவும் அரசின் தவறுகளை வெளிச்சம் போடவும் மட்டுமானதல்ல. சட்டங்களை நிறைவேற்றுவதற்காகவும்கூட நாடாளுமன்றம் கூடியாக வேண்டும். நாடாளுமன்றத்தைக் கூட்டுவதில் அரசுக்கு அக்கறை இல்லை என்று சொன்னால், மசோதாக்களை அறிமுகப்படுத்தவும் சட்டமாக்கவும் அரசிடம் எதுவும் இல்லை என்று கருத நேரிடும்.
குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் நடந்துகொண்டிருக்கும்போது, நாடாளுமன்றம் கூடினால் அதில் ஜி.எஸ்.டி. குறித்தும் அரசின் பல செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படக் கூடும். அவை குஜராத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராகப் பிரதிபலிக்கக்கூடும் என்பதுதான் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரைத் தள்ளி வைத்ததன் காரணம் என்று கூறப்படுமானால் அது மிகவும் வருத்தத்திற்குரியது. 
இதற்கு முன்னால் இந்திரா காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோது இதேபோல தேர்தல் காரணங்களுக்காகக் கூட்டத்தொடரைத் தள்ளி வைத்திருக்கிறார்கள் என்பது உண்மை. காங்கிரஸ் ஆட்சி செய்த தவறுகளுக்காகத்தானே அவர்கள் தண்டிக்கப்பட்டு, மக்கள் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள்? அரசியல் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தின் அட்டவணையில் மாற்றம் கொண்டு வருவது என்பது, நிர்வாகத்தைவிட அதிகாரத்தைக் கைப்பற்றுவதில்தான் ஆளும்கட்சி முனைப்பாக இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/29/தொடரும்-தவறு-2816854.html
2816000 தலையங்கம் அணுகுமுறையை மாற்ற வேண்டும்! ஆசிரியர் Tuesday, November 28, 2017 01:37 AM +0530 அரக்கோணம் அருகே உள்ள பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 வகுப்பில் படித்து வந்த 16 வயதே ஆன நான்கு மாணவிகள் கடந்த வெள்ளிக்கிழமை ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, மாணவிகளின் தற்கொலைக்கான காரணங்களை அறிய, மாவட்ட ஆட்சியரால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளியின் தலைமை ஆசிரியை, வகுப்பு ஆசிரியை, இன்னொரு பள்ளி ஆசிரியை ஆகிய மூவரையும் பள்ளிக் கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட பிறகுதான், மாணவிகளின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு பொதுமக்களால் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியைகள் மீது குற்ற நடவடிக்கை வேண்டும் என்றும்; இறந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டுமென்றும்; அவர்களது குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் நிலமும், குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. 
மாணவிகளின் தற்கொலை வேதனைக்குரியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவர்களது தற்கொலையைத் தொடர்ந்து எழுப்பப்படும் கோரிக்கைகள்தான் விசித்திரமாக இருக்கின்றன. இந்தப் பிரச்னையின் அடிப்படை காரணம், தற்கொலை செய்துகொண்ட மாணவிகள் சரியாகப் படிக்காததால் வகுப்பு ஆசிரியை அவர்களைக் கடிந்துகொண்டார் என்பதுதான். சரியாகப் படிக்காத மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் கடிந்து கொள்ளாமல் பாராட்டவா செய்வார்கள்? இல்லை, அவர்கள் எக்கேடும்கெட்டுப் போகட்டும் என்று பாராமுகமாக இருந்துவிடத்தான் முடியுமா?
கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் சாதாரணமான பிரச்னைகளுக்காக மாணவ, மாணவியர் தற்கொலை செய்துகொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. தேர்வில் தோல்வி அடைந்தாலோ, போதிய மதிப்பெண் பெறாமல் போனாலோ, தாங்கள் விரும்பியதுபோல மேற்படிப்புக்கான வாய்ப்புக் கிடைக்காமல் போனாலோ, பெற்றோரோ, ஆசிரியர்களோ கண்டிக்கவோ, தண்டிக்கவோ செய்தாலோ அதன் எதிர்வினையாகத் தற்கொலை செய்துகொள்வது என்பது அதிகரித்து வருவது ஆபத்தான அறிகுறி. 
வாழ்க்கையை எதிர்கொள்ளவும், எப்படிப்பட்ட சூழலிலும் போராடி வெற்றி அடையவும், அடுத்து வரும் தலைமுறைக்குத் தன்னம்பிக்கையும் துணிவும் இல்லாமல் இருக்கிறது என்பதன் அடையாளம்தான், அதிகரித்து வரும் இதுபோன்ற தற்கொலைகள். ஒருபுறம் தற்கொலைகள் அதிகரித்து வரும் அதேவேளையில், இன்னொருபுறம் மாணவர் சமுதாயத்தில் வன்முறை உணர்வும் அதிகரித்து வருவதை நாம் கவனித்தாக வேண்டும். சக மாணவர்களையும், ஏன் ஆசிரியர், ஆசிரியைகளையேகூடத் தாக்கவும் கொலை செய்யவும் சிலர் தயங்காத சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
ஆசிரியர்கள் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளவில்லை என்றும், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்றும், கண்டிப்பதுடன் நின்றுவிடாமல் தண்டிக்கவும் தலைப்படுகிறார்கள் என்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஐந்தாம் வகுப்புக்குக் கீழே படிக்கும் குழந்தைகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ செய்யாமல் அன்புடன் வழிநடத்திக் கற்பிக்க வேண்டும் என்பது சரி. அதேநேரத்தில், ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்கும் சிறுவர், சிறுமியர்களிடம் கண்டிப்பாக இருந்து ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பதும் அவர்களது கவனம் திசை திரும்பாமல் கல்வியில் நாட்டத்தை ஏற்படுத்துவதும் ஆசிரியர்களின் கடமை என்பதையும் நாம் உணர வேண்டும். 
ஆசிரியர்களின் தரம் குறைந்துவருகிறது என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே இருக்கிறது. அவர்களில் சிலர் ஈடுபாட்டுடன் கல்வி கற்பிப்பதில்லை என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை. இப்படிப்பட்ட சூழலில், மாணவ, மாணவியர் மீதும், அவர்களது வருங்காலத்தின் மீதும், அக்கறையுள்ள ஆசிரிய, ஆசிரியைகள்தான் மாணவ, மாணவியரை கண்டிக்கவும், தண்டிக்கவும் முற்படுகிறார்கள். ஓர் அரசு அதிகாரி தவறான முடிவை எடுத்தாலும்கூட, அவர் நல்லெண்ணம் கருதி அந்த முடிவை எடுத்திருந்தால், அது குற்றமல்ல என்று நிர்வாகச் சட்டம் கூறும்போது, ஓர் ஆசிரியரோ, ஆசிரியையோ மாணவ, மாணவியரின் மீதான அக்கறையின் பேரில் அவர்களை கண்டிக்கவோ, தண்டிக்கவோ முற்பட்டால் அதை மட்டும் குற்றமாகக் கருதுவது சரியல்ல.
இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் இருந்த ஆசிரியர்கள், மாணவர்களைக் கண்டித்ததையும், தண்டித்ததையும் ஒப்பிடும்போது, இன்றைய ஆசிரியர்கள் மிகவும் மென்மையானவர்களாகவே காணப்படுகிறார்கள். அரைநூற்றாண்டு காலத்திற்கு முன்னால் வரை, ஆசிரியரின் பிரம்படிக்குப் பயந்து படித்த மாணவர்கள், மிரளவும் இல்லை, வெகுளவும் இல்லை, அந்த ஆசிரியர்களை வெறுக்கவும் இல்லை. தங்கள் இறுதிக்காலம் வரை, தங்களை செப்பனிட்ட செம்மல்கள் என்று அந்த ஆசிரியர்களை இறைவனுக்கு ஒப்பாக வணங்கி வழிபட்டவர்கள்தான் அன்றைய தலைமுறையினர் அத்தனை பேரும். அதற்குக் காரணம், அன்றையத் தலைமுறைக் குழந்தைகளிடம் காணப்பட்ட தன்னம்பிக்கையும், அன்றைய பெற்றோர் ஆசிரியர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையும்தான்.
இன்றைய மாணவ சமுதாயத்திடம் பிரச்னைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையோ, வாழ்க்கையை எதிர்கொண்டு போராடும் துணிவோ இல்லாத நிலை காணப்படுகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஆசிரியர்களைத் தண்டிப்பதல்ல. பெற்றோர்களும் பள்ளிகளும் பள்ளி மாணவ - மாணவியர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுவதுதான். மதிப்பெண்கள் பெறுவது மட்டும்தான் கல்வி என்கிற எண்ணம் மாற்றப்பட்டு, நல்லொழுக்கம்தான் கல்வியின் குறிக்கோள் என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/28/அணுகுமுறையை-மாற்ற-வேண்டும்-2816000.html
2815524 தலையங்கம் அரசின் குற்றம்! ஆசிரியர் Monday, November 27, 2017 02:01 AM +0530 கடந்த வாரம் பல மாநில சந்தைகளில் வெங்காயத்தின் சில்லறை விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.50-ஐ தாண்டியது. மத்திய - மாநில அரசுகள் இப்போதுதான் விழித்துக்கொண்டு வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன.
வெங்காயத்தின் விலை திடீரென்று இப்படி அதிகரிப்பது ஒன்றும் புதிதல்ல. ஓராண்டு விட்டு மறு ஆண்டு விலைவாசி உயர்வதும், சரிவதும் வழக்கமாகிவிட்டிருக்கிறது. இந்த ஆண்டின் வியப்பென்னவென்றால், கடந்த மே, ஜூன் மாதங்களில் வெங்காயத்தின் விலை கடுமையாகச் சரிந்து கிலோ ஒன்றுக்கு ரூ.2 என்கிற அளவுக்குக் குறைந்துவிட்டதால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு அவர்களது ஆத்திரம் எல்லை கடந்தது. 
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, சிலர் இறக்கும் அளவுக்கு மத்தியப் பிரதேசத்தில் நிலைமை மோசமாகியது. பிரச்னையின் கடுமையைப் புரிந்துகொண்டு மத்தியப் பிரதேச முதல்வர் கிலோ ரூபாய் எட்டு என்று விவசாயிகளிடமிருந்து சுமார் 8.76 லட்சம் டன் வெங்காயத்தை வாங்க உத்தரவிட்டார். அந்த வெங்காயத்தை எல்லாம் சேமித்து வைக்க கிடங்குகள் இல்லாததால் பொது விநியோக நிலையங்கள் மூலம் மிகக் குறைந்த விலைக்கு அவற்றை விற்று அழிக்க உத்தரவிட்டார். இதனால், மத்தியப் பிரதேச அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.785 கோடி.
அடுத்த சில மாதங்களில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவை தேர்தல்கள் நெருங்குவதால் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண விரும்பிய அரசு, வெங்காயத்தை இறக்குமதி செய்வதன் மூலம் அதன் விலையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதுபோல, வெங்
காயத்தை இறக்குமதி செய்வதும், வெங்காய ஏற்றுமதிக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிப்பதும், முற்றிலுமாக ஏற்றுமதிக்குத் தடை செய்வதும், எத்தனையோ முறை தோல்விகரமாக நடத்தப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 217 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகமாக வெங்காயம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான். அதாவது, உலக உற்பத்தியில் சுமார் 20%.
டிசம்பர், ஜனவரியில் பயிரிட்டு, ஏப்ரல், மே மாதத்தில் அறுவடை செய்யப்படும் ராபி பருவத்தில்தான் ஏறத்தாழ 60% வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வெங்காயம்தான் விவசாயிகளாலும் மொத்த வியாபாரிகளாலும் சேமித்து வைக்கப்படுகிறது. காரீப் பருவத்தில் வெங்காயம் வரும் வரை உள்ளூர்த் தேவையையும் ஏற்றுமதியையும் ஈடுகட்டுவது ராபி பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம்தான். 
மே, ஜூன் மாதங்களில் பயிரிடப்பட்டு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படுவது காரீப் பருவ வெங்காயம். ஆகஸ்ட், செப்டம்பரில் பயிரிட்டு ஜனவரி, பிப்ரவரியில் அறுவடை செய்யப்படுவது இரண்டாவது காரீப் பருவ உற்பத்தி. இவை ஒவ்வொன்றும் ஆண்டுக்கான மொத்த உற்பத்தியில் 20%-ஐ பூர்த்தி செய்கிறது. 
காரீப் பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயத்தின் தரம் குறைவு என்பதால், அதிக நாள் சேமித்து வைக்க முடியாது. அக்டோபர், நவம்பர் ராபி பருவ வெங்காயத்தின் சேமிப்பு குறைந்து, காரீப் பருவ வெங்காயம் அறுவடை செய்யப்படாத நிலையில், வெங்காயத்தின் விலை உயர்கிறது. இந்த ஆண்டு காரீப் பருவ வெங்காயம் பெருமளவில் மழையால் அழிந்துவிட்டதால்தான், வெங்காயத்துக்குப் பெருமளவு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவைப் பொருத்தவரை வெங்காயத்தின் விலை அதிகரிப்பதும், தட்டுப்பாடு ஏற்படுவதும் சரியான திட்டமிடல் இருந்தால் நிச்சயமாக தடுக்கப்படக் கூடியவை. நமது வெங்காய உற்பத்திக்கு ஏற்றாற்போல, வெங்காயத்தை சேமித்து வைக்கும் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்படாமல் இருப்பதுதான் வெங்காய விலையின் ஏற்ற இறக்கத்திற்கு மிக முக்கியமான காரணம். நமது பாரம்பரிய முறை வெங்காய சேமிப்பில் ஏறத்தாழ 40% வீணாகி விடுகின்றது என்பதால், நவீன சேமிப்பு முறைக்கு நாம் மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிராவில் 42,282 குறைந்த முதலீட்டு வெங்காய சேமிப்புக் கிடங்குகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றில் 9.65 லட்சம் டன் சேமித்து வைக்கலாம். மத்தியப் பிரதேசத்தில் குறிப்பிடும்படியான சேமிப்புக் கிடங்குகள் இல்லை. இப்போதுதான் அது குறித்து அந்த மாநில அரசு சிந்திக்கவே தொடங்கியிருக்கிறது. ஆந்திரம், கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்கள் ஓரளவுக்கு சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குவதில் வெற்றி அடைந்திருக்கின்றன. ஆனால், இவையெல்லாம் நமது தேவையைப் பூர்த்தி செய்யும் அளவில் இல்லை. 
மேலும், வெங்காயத்திலிருந்து நீர்ச்சத்தை அகற்றும் தொழிற்சாலைகள் குஜராத்தைத் தவிர வேறு மாநிலங்களில் அதிகமாக இல்லை. ஜப்பான், ஐரோப்பா, ரஷியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு நீர்ச்சத்து எடுக்கப்பட்ட வெங்காயம்தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன எனும் நிலையில், இதை ஊக்கப்படுத்தும் முயற்சியில் மத்திய - மாநில அரசுகள் முனைப்பு காட்ட வேண்டும். 
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், வெங்காயம் குறித்த அரசின் வணிகக் கொள்கை விலை கட்டுப்பாட்டுக்கு மிக மிக முக்கியம். அதிக உற்பத்தி இருக்கும்போது ஏற்றுமதியை ஊக்குவிப்பதும், குறைந்த உற்பத்தியின்போது முன் யோசனையுடன் இறக்குமதிக்கு வழிகோலுவதும் அரசின் கடமை.

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/27/அரசின்-குற்றம்-2815524.html
2814318 தலையங்கம் சிந்திக்க வைக்கும் வெற்றி! ஆசிரியர் Saturday, November 25, 2017 02:18 AM +0530 நெதர்லாந்தின் 'தி ஹேக்' நகரில் செயல்பட்டுவரும் சர்வதேச நீதிமன்றத்திலுள்ள 15 நீதிபதிகளில் ஒருவராக கடந்த 2012 முதல் செயல்பட்டு வரும் தல்வீர் பண்டாரி, சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருப்பது, இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் ராஜதந்திர வெற்றி. இதை இந்தியாவின் வெற்றி என்று கூறுவதைவிட, அணிசாரா நாடுகளின் வெற்றி என்றும் கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் சர்வதேச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் மாற்றப்படுவார்கள். ஐ.நா பொதுச்சபையில் உள்ள 193 உறுப்பினர் நாடுகளும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள 15 நாடுகளும் வாக்களித்து அவர்களுக்குப் பதிலாகப் புதிதாக ஐந்து நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பர். ஐ.நா. பொதுச்சபையில் 97 உறுப்பினர் நாடுகளின் ஆதரவையும், பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் பெற்றுள்ள எட்டு உறுப்பு நாடுகளின் ஆதரவையும் பெற்றால்தான் சர்வதேச நீதிமன்றத்திற்கு நீதிபதி போட்டியில் வெற்றிபெற முடியும். 
வழக்கத்திற்கு மாறாக இந்த முறை ஓய்வு பெறும் ஐந்து நீதிபதிகளுக்குப் பதிலாக நியமனம் பெற, போட்டியில் ஆறு வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். முதல் நான்கு வேட்பாளர்களும் பிரச்னை இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட நிலையில், ஐந்தாவது நீதிபதிக்கான போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி தல்வீர் பண்டாரியும், பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கிரீன்வுட்டும் இருந்தனர். இந்திய வேட்பாளர் நீதிபதி தல்வீர் பண்டாரி ஐ.நா. பொதுச்சபையில் பெரும்பான்மை வாக்குகளையும், பிரிட்டனின் கிறிஸ்டோபர் கிரீன்வுட் ஐ.நா.வின் பாதுகாப்புக் கவுன்சிலில் பெரும்பான்மை வாக்குகளையும் பெற்றதால் பிரச்னை எழுந்தது. 11 சுற்று மறுதேர்தல் நடந்தும்கூட நிலைமை மாறவில்லை.
ஐ.நா. பொதுச்சபை உறுப்பினர்களில் மூன்று பேரும், பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர்களில் மூன்று பேரும் கொண்ட குழுவை அமைத்து, அந்தக் குழுவின் முடிவுக்குத் தேர்வை விட்டுவிடலாம் என்பதுதான் பிரிட்டனின் ஆலோசனை. இதற்கு முன்னால் இப்படியொரு வழிமுறை கடைப்பிடிக்கப்பட்டதில்லை என்பதால், இந்தியா அந்த ஆலோசனையைக் கடுமையாக எதிர்த்தது.
இந்தியாவைப் பொருத்தவரை, ஐ.நா.வின் பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள நிரந்தர உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும்கூட நமக்கு எதிராக பிரிட்டனை ஆதரிக்கத் தவறவில்லை. அதற்குக் காரணம், இதுவரை பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள ஒரு நாட்டின் பிரதிநிதி, சர்வதேச நீதிமன்ற நீதிபதிக்கான தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதில்லை. அதனால், வல்லரசு நாடுகள் அனைத்தும் பிரிட்டனுக்கு ஆதரவாக செயல்பட்டதில் வியப்பில்லை.
இந்தியாவைப் பொருத்தவரை, ஐ.நா.வின் பொதுச்சபையில் உள்ள அத்தனை வளர்ச்சி அடையும் சிறிய, பெரிய நாடுகளின் ஆதரவும் கிடைத்தது. இதற்கு இந்தியா அனைத்து நாடுகளிடமும் நேசக்கரம் நீட்டி ஆதரவு கோரியதுதான் காரணம். வல்லரசு நாடுகள் எப்படி ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர் நாட்டின் நீதிபதி வேட்பாளருக்கு தங்கள் ஆதரவை அளிக்க முற்பட்டனவோ, அதேபோல பெரும்பாலான ஐ.நா. பொதுச்சபை நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்க முற்பட்டன.
இந்தியாவுக்கும் சரி, பிரிட்டனுக்கும் சரி, சர்வதேச நீதிமன்றத்தில் இடம் பெறுவது என்பது ஒரு கெளரவப் பிரச்னையாக இருந்ததால், தங்களது அத்தனை ராஜீய தந்திரங்களையும் பயன்படுத்தத் தயங்கவில்லை. குறிப்பாக, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தல்வீர் பண்டாரியின் வெற்றியை இந்தியாவின் கெளரவப் பிரச்னையாகவே கருதிச் செயல்பட்டார்.
வேறு வழியில்லாமல் பிரிட்டன் தனது வேட்பாளரை விலக்கிக்கொண்டு இந்தியாவின் தல்வீர் பண்டாரி சர்வதேச நீதிமன்ற நீதிபதியாகத் தேர்வு பெற வழிகோலியது. முதன்முறையாக, சர்வதேச நீதிமன்றத்தில் பிரிட்டனைச் சார்ந்த ஒருவர் நீதிபதியாக இருக்கப்போவதில்லை. அதுமட்டுமல்ல, முதன்முறையாக ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் நாடு ஒன்று, சர்வதேச நீதிமன்றத்துக்கான தேர்தலில் தனது வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட முடியாததால் பின்வாங்கி இருக்கிறது.
ஏற்கெனவை பிரிட்டன் பிரதமர் தெரஸா மேயின் தலைமைக்கு எதிராக ஆளும் கன்ஸர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், இந்தத் தோல்வி அவரை மேலும் பல
வீனப்படுத்துகிறது. சர்வதேச அளவில் பிரிட்டனின் மதிப்பு குறைந்து வருவதன் அடையாளமாகக்கூட இதை எடுத்துக்கொள்ளலாம். இந்தியாவைப் பொருத்தவரை, அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இடம்பெற முடியாமல் போன பின்னடைவை இந்த வெற்றி சமன் செய்கிறது.
உலக அளவில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட அத்தனை வல்லரசு நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக இருந்ததிலும், ஏனைய வளர்ச்சி அடையும் நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக அணி திரண்டதிலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்று இருக்கிறது. ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோது முன்னுரிமை கொடுத்து இந்தியாவின் தலைமையில் உருவாக்கிய அணிசாரா நாடுகளின் கூட்டமைப்பை நாம் பலப்படுத்த வேண்டும் என்பதுதான் அது. 
ஐ.நா. பொதுச்சபையில் ஒவ்வொரு சுற்று வாக்கெடுப்பிலும் இந்தியா தனது ஆதரவை அதிகரித்து வந்தது ஐ.நா.வின் பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களை நிமிர்ந்து உட்காரச் செய்திருக்கிறது. இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை இந்த வெற்றியின் அடிப்படையில் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/25/சிந்திக்க-வைக்கும்-வெற்றி-2814318.html
2813583 தலையங்கம் ஜிம்பாப்வேயில் மாற்றம்! ஆசிரியர் Friday, November 24, 2017 01:24 AM +0530 ஜிம்பாப்வேயில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தாவிட்டாலும் எதிர்பாராதது என்றுதான் கூற வேண்டும். கடந்த 37 ஆண்டு காலமாக ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் அசைக்க முடியாத தலைவர் என்று கருதப்பட்ட 93 வயது அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலகி ஆட்சி மாற்றத்திற்கு வழிகோலியிருக்கிறார். இது அவர் விரும்பி ஏற்றுக்கொண்ட பதவி விலகல் அல்ல. சூழ்நிலையின் கட்டாயத்தால் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில் ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. நீண்ட நாள் அதிபர்கள் பலரும், அசைக்க முடியாத சக்தி என்று கருதப்பட்டவர்களும் தூக்கியெறியப்பட்டிருக்கின்றனர் அல்லது பதவி விலகி இருக்கிறார்கள். நைஜர் அதிபர் மம்மாடெள தஞ்சா, டுனீசியாவின் சைன் எல் அபிபைன் பென் அலி, எகிப்தின் ஹோஸ்னி முபாரக், ஐவரி கோஸ்டின் லாரண்ட் பேக்போ, லிபியாவின் மும்மார் கடாஃபி, மாலத்தீவின் அம்மாடோ டெளமானி தோரே, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் ஜெனரல் பிரான்கோயிஸ் போஸிúஸ, எகிப்தின் முகம்மது மோர்ஸி, பர்கினா பாய்úஸாவின் பிளேஸ் காம்ப்போரே, ஜாம்பியாவின் யாஹியா ஜமேய் ஆகியோரைத் தொடர்ந்து இப்போது ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேயின் தலையும் உருண்டிருக்கிறது.
ஜிம்பாப்வேயில் அரசியல் நெருக்கடி கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இருந்து வருகிறது. ஜிம்பாப்வே என்கிற நாடு ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் இருக்கிறது. ஆங்கிலமல்லாமல் 16 அதிகாரபூர்வ மொழிகளுடன், ஹராரேயைத் தலைநகரமாகக் கொண்ட ஜிம்பாப்வேயின் மொத்த மக்கள்தொகை 1.6 கோடி. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடி 1965-இல் ரொடீஷியா என்ற பெயரில் தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டாலும்கூட, ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து ஜிம்பாப்வே முழுமையாக விடுபடவில்லை. 15 ஆண்டுகால கொரில்லா யுத்தத்தின் முடிவில் 1980-இல் ஜிம்பாப்வேயில் மக்கள் ஆட்சி மலர்ந்து, ஜிம்பாப்வே குடியரசு உருவானது.
வெள்ளையர்களுக்கு எதிராக கொரில்லா யுத்தம் நடத்தி ஜிம்பாப்வேயை குடியரசாக மாற்றிய பெருமை ராபர்ட் முகாபேவுக்கு உண்டு. 1980-இல் பிரதமராகவும், 1987 முதல் அந்த நாட்டின் அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ராபர்ட் முகாபே, கடந்த 37 ஆண்டு காலமாக ஏறத்தாழ ஒரு சர்வாதிகாரியாகவே செயல்பட்டு வந்தார். ஆனாலும்கூட, மக்கள் மத்தியில் ஜிம்பாப்வேக்கு காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை வாங்கித் தந்தவர் என்பதால் செல்வாக்கு இருந்துவந்தது. 
ஒரு காலத்தில் இரும்புக் கரம் கொண்டு தன்ûன் எதிர்க்க யாரும் இல்லை எனும் அளவிலான சர்வாதிகாரியாகத் திகழ்ந்த முகாபேயின் செல்வாக்கு கடந்த 10 ஆண்டுகளாக சரியத் தொடங்கியது. வயோதிகமும், உபாதைகளும் அவரை உடல்ரீதியாக பலவீனப்படுத்தின என்றால் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்து, வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது. மக்கள் மத்தியில் முகாபேவுக்கு எதிரான மனநிலை அதிகரித்து வந்தது. 
இந்த நிலையில்தான் கடந்த மாதம் அதிபர் முகாபே துணை அதிபர் எமர்சன் நங்கக்வாவை பதவியிலிருந்து அகற்றினார். ஜிம்பாப்வே சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து முகாபேவுக்கு இரண்டாவது இடத்தில் இருந்து வந்த போராளியான நங்கக்வாவை கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலரும் ஆதரிக்க முற்பட்டனர். அதற்குக் காரணம், முகாபேயின் 52 வயது மனைவியான கிரேஸ் முகாபே, அதிபரின் வயோதிகம் காரணமாகத் தன்னை அவரது வாரிசாக நியமிக்க வற்புறுத்தி வருகிறார் என்பதுதான். 
முகாபேயின் பதவி விலகலைத் தொடர்ந்து அதிபராகப் பதவியேற்க இருக்கும் எமர்சன் நங்கக்வா எந்த அளவுக்கு தன்னிச்சையுடன் செயல்பட முடியும் என்று தெரியவில்லை. ஜிம்பாப்வே ராணுவம், வாரிசு அரசியல் உருவாவதை விரும்பாததால்தான் அதிபர் முகாபேவுக்கு எதிராகத் திரும்பியது. ராணுவப் புரட்சி என்று குறிப்பிட்டால் சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்காது என்பதாலும், ஜிம்பாப்வே மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதாலும் ஜெனரல் சிவெங்கா தலைமையிலான ராணுவம் அடக்கி வாசித்திருக்கிறது. விரைவிலேயே தேர்தல் அறிவிக்கப்படும் என்று நம்பலாம்.
முகாபேயின் ஆட்சி ஜிம்பாப்வேக்கு வளமையை ஏற்படுத்தவில்லை என்றாலும்கூட, அவரது சர்வாதிகாரத் தலைமையை மக்கள் முற்றிலுமாக நிராகரித்துவிடவில்லை. ஏனைய ஆப்பிரிக்க நாடுகளைப்போல, அவருக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடவில்லை. புதிய ஆட்சியின் செல்வாக்கு குறித்து தேர்தலுக்குப் பிறகுதான் தெளிவான முடிவை எட்ட முடியும். இப்போதும்கூட கருப்பர் இன பாட்டாளி மக்கள் மத்தியில் முகாபேவுக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கிறது என்பதும், அதுதான் படித்த இளைஞர்கள் மத்தியில் அவரது ஆட்சிக்கு எதிராக ஏற்பட்டிருந்த ஆத்திரத்துக்கு அணை போட்டது என்பதும் மறுக்க முடியாதவை.
இந்தியாவைப் பொருத்தவரை, கி.பி.1500 முதல் ஜிம்பாப்வேயுடன் நமக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. என்றாலும்கூட, இரு நாட்டுக்கு இடையேயான வர்த்தகம் இப்போது வெறும் 250 மில்லியன் டாலர் மட்டுமே. ஆனாலும் ஜிம்பாப்வேயின் மீதும் ஆப்பிரிக்க நாடுகளின் மீதும் இந்தியா அக்கறைக் காட்டாமல் இருக்க முடியாது. இந்த நாடுகளின் விடுதலைப் போராட்டத்திற்கு நாம் பின்துணையாக இருந்திருக்கிறோம். ஜிம்பாப்வேயில் ஜனநாயகம் மலருமானால், அதற்காக மகிழ்ச்சி அடைவதில் இந்தியர்கள் முன்னணியில் இருப்பார்கள்.
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/24/ஜிம்பாப்வேயில்-மாற்றம்-2813583.html
2813030 தலையங்கம் பத்திரம், பத்திரம்! ஆசிரியர் Thursday, November 23, 2017 01:47 AM +0530 நமது அரசியல் கட்சிகள் வெளியுலகுக்குக் கீரியும் பாம்புமாகத் தெரிந்தாலும், அவர்களுக்கு வரும் நன்கொடைகள் குறித்தும், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம், சலுகைகள் குறித்தும் ஒத்த கருத்துடையவையாகத் திகழ்கின்றன. வாக்களிக்கும் மக்கள்தான் ஏமாளிகளாகவே இருக்கிறார்களே தவிர, நமது வாக்குகளைப் பெறும் அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை, ஜனநாயகம் என்பது அவர்களுக்குப் பெரும் பணம் திரட்டும் பொழுதுபோக்காகத்தான் இருக்கிறதோ என்று சிந்திக்க வைக்கிறது அவற்றின் நடவடிக்கை.
தேர்தல் சீர்திருத்தம் குறித்த 255-ஆவது சட்ட ஆணைய அறிக்கை, அரசியல் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது, பெரும் நன்கொடையாளர்களால் அரசைக் கைப்பற்றவும், தங்களுக்குச் சாதகமாகச் செயல்படவும் வைத்துவிடும் என்று தெளிவாகவே கூறியிருக்கிறது. ஜனநாயக சீர்திருத்தக் கூட்டமைப்பு என்கிற தன்னார்வ அமைப்பின் தகவல்படி, அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையில் 69% இன்னாரிடமிருந்து பெறப்பட்டது என்பதே தெரியாதவை. மீதமுள்ள 31% தான் வரிமான வரித்துறைக்கு அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யும் கணக்கிலிருந்து வெளியில் தெரிபவை. அரசியல் கட்சிகளின் உண்மையான வருவாய் அவர்கள் தாக்கல் செய்வதைவிட, இரண்டு மடங்கு அதிகம். அது குறித்து தேர்தல் ஆணையத்திடமோ, வருமான வரித்துறையிடமோ எந்த அதிகாரபூர்வ ஆவணமும் கிடையாது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வருமான வரிச் சட்டம், கம்பெனிகள் சட்டம், வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்காற்றுச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ரூ.20,000-க்கும் மேல் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை அனைத்தும் கணக்கில் காட்டப்பட வேண்டும். அதேபோல, தொழில் நிறுவனங்களும் தங்களது அரசியல் நன்கொடைகளை லாப - நஷ்ட கணக்கு அறிக்கையில், எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை தரப்பட்டது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டாக வேண்டும். நிறுவனத்தின் மூன்று ஆண்டு நிகர சராசரி லாபத்தில் 7.5%-க்கும் அதிகமாக அரசியல் நன்கொடை தரக்கூடாது. அதேபோல, அரசியல் கட்சிகள் வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெற முடியாது. இவையெல்லாம் இனிமேல் கைவிடப்படப் போகின்றன.
இப்போது, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள் குறித்து சில தகவல்களைப் பெற முடிகிறது. ஆனால், அரசு அறிவித்திருக்கும் தேர்தல் நிதிப் பத்திரங்கள், அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை குறித்த கொஞ்சநஞ்ச வெளிப்படைத்தன்மையையும் அகற்றிவிடுகிறது. நிதிச்சட்டம் 2016, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்றுச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, அந்நிய நிறுவனங்களிலிருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை அனுமதித்தது என்றால், நிதிச்சட்டம் 2017-இல் செய்யப்பட்டிருக்கும் திருத்தங்கள் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தில் திருத்தத்தை ஏற்படுத்தி, குறிப்பிட்ட வங்கிகள் மூலம் தேர்தல் நிதிப் பத்திரங்கள் வழங்க வழிகோலியிருக்கிறது. 
தேர்தல் நிதிப் பத்திரங்கள் என்பது நன்கொடையாளர் பெயர் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வழங்கப்படும் பத்திரங்கள். காலாவதி தேதி அறிவிக்கப்பட்ட ரொக்கத்துக்கு நிகரான பத்திரங்கள். ஒரு நிறுவனம் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்க விரும்பினால், ஒவ்வொன்றும் பத்து கோடி மதிப்புள்ள தேர்தல் நிதிப் பத்திரங்களைக் குறிப்பிட்ட வங்கியிலிருந்து பெற்று வழங்கலாம். அந்தப் பத்திரங்களில் வரிசை எண் இருக்குமே தவிர, வாங்கியவரின் பெயர் இருக்காது. அவர் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கில் அந்த பத்திரத்தை போடலாம். அதைப் பெரும் வங்கிக்கு எந்த அரசியல் கட்சிகளின் பெயரில் போடப்பட்டது என்பது தெரியுமே தவிர, யாரால் வழங்கப்பட்டது என்பது குறித்த எந்த ஆவணமும் இருக்காது.
தேர்தல் நிதிப் பத்திரங்கள், நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 7.5% கட்டுப்பாட்டை அகற்றுகிறது. அரசியல் நன்கொடையை வழங்க நிறுவனங்கள் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது செயல்பட்டிருக்க வேண்டும் என்கிற வரம்பும் அகற்றப்படுகிறது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் கூட இனிமேல் இஷ்டத்திற்கு அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க முடியும். இதன் மூலம் நிழல் நிறுவனங்களும், போலி நிறுவனங்களும் தங்களை அடையாளம் காட்டாமல் எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க முடியும். அதுமட்டுமல்ல, கம்பெனிகளின் பங்குதாரர்களுக்கு எந்த கட்சிக்கு நன்கொடை வழங்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் மறுக்கப்படுகிறது.
மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் கட்சிதான் இதனால் பெருமளவு பயன்பெறும் என்பதும், எதிர்க்கட்சிகள் அரசியல் நன்கொடை பெறுவதற்குப் போராட வேண்டி இருக்கும் என்பதும் தெளிவு. இதனால், ஜனநாயகத்துக்கு ஏற்படப்போகும் ஆபத்து என்ன என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 
ஒருபுறம் கருப்புப் பணத்துக்கும், சட்டவிரோதமாக வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணத்துக்கும் எதிராக போர் தொடுக்கப்படும் நிலையில், அதற்கு நேர் எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் தேர்தல் நிதிப் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இது குறித்து இந்தியாவில் எதிர்க்கட்சிகள் கவலைப்படாவிட்டாலும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறையுள்ள வாக்காளர்கள் கவலைப்பட்டாக வேண்டும். அரசியல் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை. என்ன செய்யப்போகிறோம்?
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/23/பத்திரம்-பத்திரம்-2813030.html
2812326 தலையங்கம் ராகுலின் தலைமை...? ஆசிரியர் Wednesday, November 22, 2017 02:14 AM +0530 காங்கிரஸ் செயற்குழு அறிவித்திருக்கும் உள்கட்சித் தேர்தல் அட்டவணைப்படி டிசம்பர் 5-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, டிசம்பர் 19-ஆம் தேதிக்குள் புதிய தலைவர் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். அநேகமாக ராகுல் காந்தியின் வேட்புமனு மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்பதால், அவரது தேர்வு என்பது தீர்மானிக்கப்பட்ட முடிவு!
சமீபகாலமாக ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, அமெரிக்கா சென்றிருந்தபோது பெர்க்கலேயில் தனது உரையில், 'வாரிசு அரசியல்' குறித்து அவர் குறிப்பிட்டது விவாதத்தை எழுப்பியது. பா.ஜ.க. தலைவர்களும், 10-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்களும் அவரது உரைக்கு எதிர்வினை எழுப்பியதால், அவர்கள் அறியாமல் ராகுல் காந்தியை இந்தியாவின் முதன்மை எதிர்க்கட்சித் தலைவராக உயர்த்திவிட்டனர். 
கடந்த 19 ஆண்டுகள் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை வகித்த சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்க முற்பட்டிருப்பதற்கு அவரது உடல்நிலை மட்டுமே காரணமல்ல. 2019-இல் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் கட்சி அமைப்புகளைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், காங்கிரஸின் அனைத்து நிலைகளிலும் இளைய தலைமுறைத் தலைவர்களை நியமிக்கவும் இந்த மாற்றம் தேவைப்படுகிறது. 
இந்தியாவிலுள்ள வாரிசு முறையைக் கடைப்பிடிக்கும் பல்வேறு அரசியல்கட்சிகளில் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் கட்சிப் பொறுப்புக்கு வரத்தொடங்கிவிட்டார்கள். சமாஜவாதி கட்சியில் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவும், தெலுங்கு தேசம் கட்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷூம், தேசிய மாநாட்டுக் கட்சியில் ஒமர் அப்துல்லாவும் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். இன்னும் அதிகாரப்பூர்வமாக தலைமைப் பொறுப்பை ஏற்காமல் இருப்பவர்கள் காங்கிரஸில் ராகுல் காந்தியும், தி.மு.க.வில் மு.க. ஸ்டாலினும் மட்டுமே.
ராகுல் காந்தி அரசியலுக்கு வந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. அரசியல் நீரோட்டத்துக்கு இளைஞர்களைக் கொண்டுவருவது என்கிற 47 வயது ராகுல் காந்தியின் முனைப்பு அவரது பலங்களில் ஒன்று. இளைஞர் காங்கிரஸிலும், மாணவர் காங்கிரஸிலும், உள்கட்சித் தேர்தலை நடத்திப் பல இளைஞர்களுக்கு அவர் கட்சியில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளால், காங்கிரஸுக்குப் புதிய ரத்தம் பாய்ச்சும் அவரது முயற்சி, எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. 
அதேபோல, காங்கிரஸ் கட்சியில் மீனவர் பிரிவு, அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவு, வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு என்று உருவாக்கி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்தும் அவரது முயற்சி அந்தக் கட்சிக்கு வலு சேர்த்திருக்கிறது. பல மாநிலங்களில் இளைய தலைமுறைத் தலைவர்கள் ராகுல் காந்தியால் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கட்சி விவகாரங்களில் மூத்தவர்களானாலும், இளையவர்களானாலும் அனைவருடனும் கலந்து ஆலோசிப்பதும், பொறுமையாக அனைவரது கருத்தையும் கேட்டுத் தெரிந்துகொள்வதும் ராகுல் காந்தியின் பாராட்டுக்குரிய செயல்பாடு. அது கட்சிப் போராட்டங்களாகட்டும், தேர்தல் பிரசாரமாகட்டும் கடுமையாக உழைப்பதற்கும் அவர் தயங்குவதில்லை. இவையெல்லாம் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் புதிய வேகத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை குஜராத் தேர்தல் பிரசாரம் வெளிப்படுத்துகிறது.
மேலே குறிப்பிட்டவை எல்லாம் ராகுல் காந்தியின் பலங்கள் என்று சொன்னால், அவரது மிகப்பெரிய பலவீனமாகக் கருதப்படுவது எந்தவித முடிவையும் எடுக்காமல் தாமதப்படுத்தும் அவரது போக்கு. கடந்த ஆறு மாதங்களாக மத்தியப் பிரதேசத்தில் இருந்தும், ஒடிஸாவிலிருந்தும் பல்வேறு காங்கிரஸ் தலைவர்களுடன் அவர் தொடர்ந்து கலந்தாலோசித்துக்கொண்டும், கருத்துக் கேட்டுக்கொண்டும் இருந்து வருகிறாரே தவிர, இன்னும் அந்த இரண்டு முக்கியமான மாநிலங்களுக்கும் கட்சித் தலைவரை அவரால் தீர்மானிக்க முடியவில்லை. பஞ்சாப் முதல்வராகக் கேப்டன் அமரீந்தர் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிறது. மக்களவை காங்கிரஸ் கட்சித் துணைத்தலைவராக இருந்த அவருக்குப் பதிலாக ஒருவரை ராகுல் காந்தியால் இன்னும்கூட அடையாளம் காண முடியவில்லை. 
பத்தாண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தும் அவர் எந்தப் பதவியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், அவரது நிர்வாகத் திறமை என்பது இன்னும் வெளிப்படாமலேயே இருக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்படுவதில் எந்த தடையோ, சிக்கலோ கிடையாது. ஆனால், தலைவராகக் கட்சித் தொண்டர்களாலும் மக்களாலும் அவர் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தேர்தல்களில் வெற்றியடைவதில்தான் இருக்கிறது. 
குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு சாதகமாக அமையுமானால், ராகுல் காந்தியின் தலைமையில் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வலிமையான சக்தியாக பா.ஜ.க.வை களத்தில் எதிர்கொள்ளும். இல்லையென்றால், பா.ஜ.க.வின் செல்வாக்குச் சரிவைப் பொருத்துத்தான் காங்கிரஸின் எதிர்காலம் அமையுமே தவிர, ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பை ஏற்பதாலேயே எதையும் சாதித்துவிட முடியும் என்றுதோன்றவில்லை.
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/22/ராகுலின்-தலைமை-2812326.html
2811962 தலையங்கம் மூச்சு முட்டுகிறது! ஆசிரியர் Tuesday, November 21, 2017 03:21 AM +0530 தலைநகர் தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் காணப்படும் புகை மூட்டத்தால் ஏற்பட்டிருக்கும் காற்றுமாசு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. இதன் தொடர்விளைவாக இந்தியப் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சர்வதேச அளவில் இந்தியாவுக்கு வடமாநிலங்களில் காணப்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய அவப்பெயரைத் தேடித் தந்திருக்கிறது. இதனால், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது.
 உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்று என்று கருதப்படும் இந்தியா, தலைநகரில் ஏற்பட்டிருக்கும் காற்றுமாசு காரணமாக பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களால் இப்போது தவிர்க்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. தங்களது உடல் நலத்தையும், குடும்பத்தினரின் ஆரோக்கியத்தையும் தில்லியில் பணிபுரிவது பாதிக்கும் என்று வெளிநாட்டு தூதரகங்களில் பணிபுரிபவர்கள்கூடக் கவலைப்படத் தொடங்கியிருக்கிறார்கள்.
 மிகவும் கவலையை ஏற்படுத்தும் இந்த நிலைமைக்குக் காரணம், இந்தியாவின் வாயுமண்டலத்தில் ஸல்ஃபர்-டை-ஆக்ஸைடின் அளவு அதிகரித்து வருவதுதான். "சைன்டிபிக் ரிப்போர்ட்ஸ்' என்கிற அறிவியல் அறிக்கைகளின் இதழ், இதுகுறித்த ஆய்வு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்டிரேஷனும், அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலைக்கழகமும் இந்த ஆய்வை இணைந்து நடத்தின. அதன்படி, உலகில் மிக அதிகமாக ஸல்ஃபர்-டை-ஆக்ஸைட் வாயுவைக் காற்று மண்டலத்தில் கலக்கும் நாடான சீனாவை பின்தள்ளிக்கொண்டு இந்தியா முன்னேறியிருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. சீனாவின் வாயு மண்டல ஸல்ஃபர்-டை-ஆக்ஸைட் அளவு கடந்த பத்தாண்டுகளில் 75% குறைந்திருக்கிறது. அதேநேரத்தில், இந்திய வாயு மண்டலத்தில் ஸல்ஃபர்-டை-ஆக்ஸைடின் அளவு 50% கூடியிருக்கிறது.
 ஸல்ஃபர்-டை-ஆக்ஸைட் வாயு என்பது சுற்றுச்சூழலையும் உயிரினங்களின் உடல்நலத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது. புகைமூட்டம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி காட்சிக் குறைவை ஏற்படுத்துகிறது. மூச்சுக் குழாய்களில் வீக்கத்தை ஏற்படுத்தி, மனிதர்களின் நுரையீரலை பலவீனப்படுத்துகிறது. குறிப்பாக, குழந்தைகள், வயதானவர்கள், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், காற்றில் ஸல்ஃபர்-டை-ஆக்ஸைட் அதிகரிக்கும்போது உடனடியாகப் பாதிக்கப்படுகிறார்கள். இதை வெறும் இருமல், ஜலதோஷம் என்று கருதிப் பலரும் அசட்டையாக இருந்துவிடுகின்றனர். ஸல்ஃபர்-டை-ஆக்ஸைடுக்கு அமிலத்தன்மை இருப்பதால், அது குழந்தைகள், முதியோரின் நுரையீரலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.
 ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களாகவே இருந்தாலும்கூட, தொடர்ந்து ஸல்ஃபர்-டை-ஆக்ஸைட் வாயுவின் தாக்கத்துக்கு ஆளாகும்போது, நுரையீரலின் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்குகிறது. நுரையீரலின் செயல்பாடு முழுமையாக இல்லாமல் போகும்போது, அது ரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறது. குறிப்பாக, இருதயம் தொடர்பான பிரச்னை இருப்பவர்களின் பாதிப்பு அதிகரித்து மாரடைப்பு உள்ளிட்ட தாக்கங்களுக்கு உள்ளாகும் நிர்பந்தம் ஏற்படுகிறது. காற்று மண்டலத்தில் ஸல்ஃபர்-டை-ஆக்ஸைடின் அளவு கணிசமாக அதிகரித்துவிட்டால், செடி-கொடிகளும், மரங்களும்கூட பாதிக்கப்படும் எனும்போது, மனிதர்கள் பாதிக்கப்படுவதில் வியப்பென்ன இருக்கிறது?
 ஸல்ஃபர்-டை-ஆக்ஸைட் வாயுமண்டலத்தில் அளவுக்கதிகமாகக் கலக்கும்போது, காற்றிலிருக்கும் நீர்த்திவிலைகளுடன் கலந்து விடுகிறது. அவ்வாறு ஸல்ஃபர்-டை-ஆக்ஸைட் கலந்த நீர்த்திவிலைகள் ஆவியாகி மேலே சென்று மழையாகத் திரும்பி வரும்போது அது, அமில மழையாகத் பொழிகிறது. அதன்விளைவாக, நீர்நிலைகள் அமிலப்பட்டு அதனால் நீர்வாழ் உயிரினங்கள் கொல்லப்படுகின்றன. இதனால், சூழலியல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. பல்லுயிர்ப் பெருக்கமும் தடைபடுகிறது. ஸல்ஃபர்-டை-ஆக்ஸைடின் அமிலத்தன்மை நினைவுச் சின்னங்களையும், கற்களால் ஆன கட்டடங்களையும்கூட அரித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
 வாயு மண்டலத்தில் இருக்கும் 99% ஸல்ஃபர்-டை-ஆக்ஸைடுக்கு நாம்தான் காரணம். நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றை எரிக்கும்போது அதிக அளவில் ஸல்ஃபர்-டை-ஆக்ஸைட் காற்றுமண்டலத்தில் கலக்கிறது. தலைநகர் தில்லியைச் சுற்றி 300 கி.மீ. சுற்றளவில் 13 அனல் மின்நிலையங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒன்றில்கூட ஸல்ஃபர்-டை-ஆக்ஸைடையும், ஏனைய நச்சு வாயுக்களையும் கட்டுப்படுத்த எந்தவொரு ஏற்பாடும் கிடையாது. இந்தியாவின் மின்உற்பத்தியில் 72% அனல் மின்நிலையங்கள்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
 சீனாவும்கூடச் சுற்றுச்சூழல் குறித்தும், காற்றுமாசு குறித்தும் பிரச்னைகளை எதிர்கொள்கிறது என்றாலும், 95% அனல் மின்நிலையங்களில் மாசு கட்டுப்பாட்டுக்கான அமைப்புகளை நிறுவியிருக்கிறது. இந்தியாவில் 10% அனல் மின்நிலையங்களில்தான் அவை நிறுவப்பட்டிருக்கின்றன.
 வடநாட்டில் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியாத அளவுக்கு காணப்படும் ஸல்ஃபர்-டை-ஆக்ஸைடால் ஏற்பட்டிருக்கும் புகைமூட்டம் குறித்து நாம் உடனடியாக விழித்துக் கொள்ளாவிட்டால், மிகப்பெரிய உடல்நலப் பிரச்னையாக இது மாறப்போகிறது. இது எப்போதோ வரப்போகும் பிரச்னையாக அல்லாமல், இப்போதே வந்துவிட்டிருக்கும் ஆபத்து என்பதை உணர்ந்து நாம் உடனடி நடவடிக்கையில் இறங்கியாக வேண்டும்.
 
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/21/மூச்சு-முட்டுகிறது-2811962.html
2811306 தலையங்கம் "பாரடைஸ் பேப்பர்ஸ்' ஆவணங்கள்! ஆசிரியர் Monday, November 20, 2017 03:42 AM +0530 கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உலகையே உலுக்கிய, "பனாமா பேப்பர்ஸ்' என்று பரவலாக அறியப்பட்ட இணைய பூகம்பத்தின் தொடர்ச்சியாக இப்போது "பாரடைஸ் பேப்பர்ஸ்' வெளியாகியிருக்கிறது.
 2,16,488 தனிநபர்களின் வெளிநாட்டு முதலீடுகள் குறித்த 1.15 கோடி ஆவணங்கள் அவர்களது வழக்குரைஞர்கள், நிதி ஆலோசகர்கள் ஆகியோரிடமிருந்து திருடப்பட்டு இணையத்தில் வெளிக்கொணரப்பட்டதைத்தான் "பனாமா பேப்பர்ஸ்' என்று கூறுகிறார்கள். இந்த ஆவணங்கள் பனாமா என்கிற நாட்டிலுள்ள கார்ப்பரேட் நிதி ஆலோசனை நிறுவனமான மொசக் போனஸ்கா என்ற நிறுவனத்திலிருந்து களவாடப்பட்டவை என்று கூறப்படுகிறது. நிழல் நிறுவனங்களின் பெயரில் லஞ்சமாகவும், தவறானவழியிலும், வரி ஏய்ப்பின் மூலமும், சட்டத்திற்கு விரோதமாகவும் சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்தது குறித்த விவரங்கள்தான் இந்த ஆவணங்கள்.
 உலகின் சில நாடுகள் "வரி சொர்க்கங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. அதற்குக் காரணம், இந்த நாடுகளில் மிகக் குறைந்த அளவில் அல்லது வரியே இல்லாத சூழல் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த நாடுகளில் செய்யப்படும் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் வெளியில் தெரியாமல் பாதுகாக்கப்படுகின்றன. அதனால், உலகெங்கிலுமுள்ள பல பணக்காரர்கள் தவறான முறையில் ஈட்டிய பெரும் பணத்தை அல்லது தங்களது நாடுகளில் வரி ஏய்ப்பு செய்த பணத்தை இங்குள்ள வங்கிகளில் முதலீடு செய்கின்றனர். சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் அல்லாமல், பல தீவு நாடுகளும் வரி ஏய்ப்பு செய்பவர்களின் சொர்க்க பூமியாகக் கருதப்படுகின்றன.
 "பனாமா பேப்பர்ஸ்' கசிவில் 19 வரிச் சொர்க்கங்களில் பதுக்கிவைக்கப்பட்ட 1.34 கோடி ஆவணங்கள் குறித்த விவரங்கள் வெளிப்பட்டன. இப்போது வெளியிடப்பட்டிருக்கும் "பாரடைஸ் பேப்பர்ஸ்' ஆவணங்களில் 714 இந்தியப் பிரமுகர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்கள் காணப்படுகின்றன.
 "பனாமா பேப்பர்ஸ்' கசிவு வெளிப்பட்டவுடன் உடனடியாக அதன் மீது விசாரணை நடத்துவதாக அரசு அறிவித்தது. இப்போது "பாரடைஸ் பேப்பர்ஸ்' ஆவணங்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து, கசிவான ஆவணங்கள் குறித்தும், வரிச் சொர்க்கங்களில் பணத்தை சட்ட விரோதமாக முதலீடு செய்திருக்கும் இந்தியர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருக்கிறார். இதுபோன்ற விசாரணைகள் அறிவிப்புடன் நின்று விடுகின்றனவே தவிர, அவை முடிவுக்குக் கொண்டுவரப்படுவதில்லை என்பதுதான் நமது கடந்த கால அனுபவம்.
 "பனாமா பேப்பர்ஸ்' ஆவணங்களில் 426 நபர்கள் குறித்து கடந்த 18 மாதங்களாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கத்தக்கவை என்று 147 நபர்கள்தான் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். அந்த 147 நபர்களின் மொத்த முதலீடே ரூ.792 கோடி. அதாவது, சராசரி ரூ.5 கோடி. ரூ.5 கோடியை பாதுகாப்பதற்காகவோ, வரி ஏய்ப்பதற்காகவோ வரிச் சொர்க்கங்களை நாடுவார்கள் என்பது நகைப்பை ஏற்படுத்துகிறது.
 வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பணம் அனைத்துமே வரி ஏய்ப்பு மூலம் சம்பாதித்த பணம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. "பனாமா பேப்பர்ஸ்' மற்றும் "பாரடைஸ் பேப்பர்ஸ்' ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பலர் வரி ஏய்ப்பில் சம்பந்தப்பட்டவர்களாகத் தெரியவில்லை. "பனாமா பேப்பர்ஸ்' குறித்து நடத்திய விசாரணையில், 279 பதிவுகள் எந்தவித சட்டமீறலிலும் ஈடுபடவில்லை என்று தெரியவந்திருக்கிறது. ஆகவே, "பாரடைஸ் பேப்பர்'ஸில் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே ஒருவரை வரி ஏய்ப்பவர், பதுக்கல்காரர் என்றெல்லாம் வகைப்படுத்துதல் நியாயமல்ல.
 தனிநபர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் வெளிநாடுகளில் வணிகம் செய்யவும், தொழில் நடத்தவும் சட்டம் அனுமதிக்கிறது. அவர்கள் வெளிநாடுகளில் சம்பாதித்த பணத்தை அங்கே முதலீடு செய்திருக்கலாம். இன்று பல இந்திய நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களாக மாறியிருக்கும் நிலையில், வெளிநாடுகளில் சம்பாதித்த பணத்தை வரிச் சொர்க்கங்களில் முதலீடு செய்திருந்தால், அதை நாம் குற்றமாகக் கருதிவிட முடியாது.
 எந்தவொரு தேசமும் முறையான, திறமையான வரி விதிப்பு அடிப்படையில்தான் செயல்படுகிறது. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் வரி செலுத்துபவர்கள் குறித்த தரவுகளை ஆவணப்படுத்துவது எளிது. குறைந்த வரி விதிப்பும், அதிகமான வரி செலுத்துபவர்களும் என்கிற முறைதான் திறமையான வரிவிதிப்பு முறையாக இருக்கும் என்று உலகம் புரிந்துகொண்டிருக்கிறது.
 ஜி.எஸ்.டி. வரி விதிப்பையே எடுத்துக்கொண்டால் இந்தியாவில் உற்பத்தியாகும் அனைத்துப் பொருள்களுக்கும் 5 சதவீதம்தான் வரி என்று நிர்ணயித்திருந்தால் சிக்கலும் இருந்திருக்காது, வரி வருவாயும் கணிசமாக இருந்திருக்கும். குறைந்த வரி விதிப்பை மேற்கொள்வதும், முறையாக வரி வசூலிப்பதும்தான், வெளிநாடுகளில் பணம் பதுக்குவதை தடுப்பதற்கான அடிப்படையாக இருக்க முடியும்.
 அதேநேரத்தில், வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் அரசியல்வாதிகளின் லஞ்சப் பணமும், தீவிரவாதத்திற்கு பயன்படுத்தப்படும் நிதியுதவியும் முற்றிலுமாக வேரறுக்கப்படுவது என்பதில் அரசு குறியாக இருந்தாக வேண்டும். இதுதான் "பனாமா பேப்பர்ஸ்', "பாரடைஸ் பேப்பர்ஸ்' ஆவணங்கள் நமக்கு உணர்த்தும் பாடம்.
 
 
 
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/20/பாரடைஸ்-பேப்பர்ஸ்-ஆவணங்கள்-2811306.html
2809943 தலையங்கம் ஆசியானில் பிரதமர்! ஆசிரியர் Saturday, November 18, 2017 01:30 AM +0530 பிரதமர் நரேந்திர மோடி பிலிப்பின்ஸ் தலைநகரம் மணிலாவில் நடந்த ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியிருக்கிறார். இதற்கு முன்னால் இந்தியப் பிரதமர்கள் பலர் ஆசியான் மாநாடுகளில் கலந்துகொண்டாலும்கூட, பிரதமர் நரேந்திர மோடியின் இந்த ஆண்டு விஜயம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை விஜயமாக இருக்கக் கூடும். அதற்கு காரணம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவுக்கு ஆசியான் மாநாட்டில் முக்கியத்துவம் அதிகரித்திருப்பதுதான்.
1967, ஆகஸ்ட் 8-ஆம் தேதி இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகள் ஒன்றுகூடி உருவாக்கியதுதான் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு எனப்படும் 'ஆசியான்'. இந்த அமைப்பில் புரூனே, கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியத்நாம் ஆகிய நாடுகளும் இணைந்தபோது, இது 10 நாடுகள் கொண்ட கூட்டமைப்பாக மாறியது. ஏறத்தாழ 44 லட்சம் சதுர கி.மீ. பரப்பும், உலகின் மொத்த நிலப்பரப்பில் மூன்று விழுக்காடும் கொண்ட ஆசியானின் கடற்கரை பரப்பு, நிலப்பரப்பை விட மூன்று மடங்கு அதிகம்.
ஆசியான் உறுப்பினர் நாடுகளின் மொத்த மக்கள்தொகை 64 கோடி. அதாவது உலக மக்கள்தொகையில் 8.8%. ஆசியானை ஐரோப்பியக் கூட்டமைப்பு போல ஒரு பொருளாதார அமைப்பாக எடுத்துக்கொண்டால் உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரம் ஆசியானுடையன. ஆசியான் நாடுகள் இந்தியாவுடன் நில ரீதியாகவும், கடல் ரீதியாகவும் தொடர்புடையவை. இந்தியாவுடைய ஒட்டுமொத்த சர்வதேச வணிகத்தில் 11% ஆசியான் நாடுகளைச் சார்ந்தது. ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் நெருக்கத்தை வலுப்படுத்தும் விதமாக அந்தக் கூட்டமைப்பின் 10 உறுப்பினர் நாடுகளின் தலைவர்களையும் வரவிருக்கும் ஜனவரி 26 குடியரசு தினத்தில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். 
ஆசியான் மாநாட்டுக்கு இடையில், மணிலாவில் நடந்த 15-ஆவது இந்திய - ஆசியான் மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்தியாவின் கிழக்கு நோக்கிய வெளியுறவுக் கொள்கையை வலியுறுத்தியது மட்டுமல்லாமல், ஆசியான் நாடுகளையும் அச்சுறுத்தும் தீவிரவாதம் குறித்தும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிடத் தவறவில்லை. பெரும்பாலான ஆசியான் நாடுகள் பெளத்த மதத்துடன் தொடர்புடையவை என்பதாலும் அவர்களுக்கும் இந்தியாவுக்கும் வரலாற்றுப் பூர்வமான தொடர்புகளும், கலாசார விழுமியங்களும் உள்ளன என்பதாலும் இந்திய - ஆசியான் நெருக்கம் என்பது இயற்கையான ஒன்று என்கிற அவரது கூற்று உணர்வு பூர்வமாக வரவேற்கப்பட்டது.
ஆசியான் மாநாட்டுடன் தொடர்புடைய கிழக்காசிய மாநாடும் மணிலாவில் நடந்தது. ஆசியான் உறுப்பினர்களான 10 நாடுகள் மட்டுமல்லாமல், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளும் இவற்றுடன் உலக வல்லரசுகளான அமெரிக்காவும், ரஷியாவும் இதில் கலந்துகொண்டன. இந்த மாநாட்டிலும் இந்தியாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆசியான் மாநாட்டின்போது, இன்னொரு மிக முக்கியமான நிகழ்வு அரங்கேறியது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு ஜனநாயக நாடுகளும் இணைந்து ஒரு புதிய அமைப்புசாரா கூட்டணியை உருவாக்க ஆசியான் மாநாட்டைப் பயன்படுத்திக்கொண்டன. 10 ஆண்டுகளுக்கு முன்பே இப்படியொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு சீனாவின் கடுமையான எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. இப்போது சீனா, தென்சீனக் கடலில் தன்னுடைய மேலாண்மையை வலியுறுத்த முற்பட்டிருப்பதால், இப்படியொரு கூட்டணி மீண்டும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கருதலாம். 
ஆஸ்திரேலியாவும், ஜப்பானும் ஏற்கெனவே அமெரிக்காவுடன் கடந்த 70 ஆண்டுகளாக ராணுவ ஒப்பந்தத்தில் இருக்கும் நிலையில், இப்போது இந்தியா இணைந்திருப்பது பல ஊகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. அதேநேரத்தில், எல்லை ஓரத்தில் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சீனாவையும், தீவிரவாதத்தின் மூலம் தொடர்ந்து இந்தியாவைத் தொந்தரவு செய்துகொண்டிருக்கும் பாகிஸ்தானையும் எதிர்கொள்ளவும் கட்டுக்குள் வைக்கவும் இந்தக் கூட்டணி தேவை என்று பிரதமர் மோடி கருதுகிறார் என்று தோன்றுகிறது.
ஆசியான் மாநாட்டின்போது, பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்தித்துக்கொண்டதும், அமெரிக்காவுடனான நான்கு நாடுகள் கூட்டணி ஏற்பட்டிருப்பதும், சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அமெரிக்கா, இந்தியாவுக்குத் தரும் முக்கியத்துவம் அதிகரித்திருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. இதுவரை ஆசிய பசிபிக் கூட்டணி என்று கிழக்காசிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவுக்கு பெயரிட்டிருந்த அமெரிக்கா, இப்போது அதை 'இந்தோ - பசிபிக்' என்று பெயர் மாற்றியிருப்பதும், அதிபர் டிரம்ப் தனது உரையில் அவ்வாறே அழைத்ததும், ஆசியாவில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என்று கொள்ளலாம்.
ஆசியான் அமைப்பின் மீது சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதும், கம்போடியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளுடனான அமெரிக்காவின் உறவு தளர்ந்து வருவதும் வெளிப்படை. இந்தியாவைப் பயன்படுத்தி தனது ஆதிக்கத்தை மீட்டெடுக்கவும் நிலைநிறுத்தவும் அமெரிக்கா முயற்சி செய்கிறதோ என்கிற ஐயப்பாடு எழாமல் இல்லை. ஆனால், இந்தியாவுக்கும் அமெரிக்காவின் உதவியும் நட்புறவும் தேவைப்படுகிறதே, என்ன செய்ய?
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/18/ஆசியானில்-பிரதமர்-2809943.html
2809230 தலையங்கம் பாதுகாப்புக்கு முன்னுரிமை! ஆசிரியர் Friday, November 17, 2017 01:31 AM +0530 இந்திய மக்களைப் போலவே, அந்த மக்களால் இயக்கப்படும் ரயில்வேத் துறை மெதுவாகச் செயல்படுவதும், நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்காமல் இருப்பதும் வியப்பை அளிக்கவில்லை. முந்தைய பா.ஜ.க. பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் தங்க நாற்கர சாலைத் திட்டத்தைப்போல, இந்தியாவை அதிவேக ரயில் தொடர்பால் இணைப்பது என்கிற தனது கனவை, 2014-இல் பிரதமரான போது நரேந்திர மோடி தெரிவித்தார். அவரது கனவின் விளைவுதான் ஆமதாபாதுக்கும் மும்பைக்கும் இடையே ஜப்பான் நாட்டு உதவியுடன் செயல்படுத்த இருக்கும் புல்லட் ரயில் திட்டம். 
கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரயில் நிலையங்களை நவீனப்படுத்துதல் நடந்திருக்கிறதே தவிர, பெரிய அளவில் ரயில்களின் செயல்பாட்டிலோ, சமிக்ஞைகள் (சிக்னல்) தொடர்பான தொழில்நுட்ப மேம்பாட்டிலோ, தண்டவாளத்தைப் புதுப்பிப்பதிலோ முனைப்பு காட்டப்பட்டதாகத் தெரியவில்லை. 
பியூஷ் கோயல் ரயில்வே அமைச்சராகப் பதவி ஏற்றது முதல், ரயில்வேயின் செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுடனும், தொழில்நுட்ப வல்லுநர்களுடனும் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார். 2019 மக்களவைத் தேர்தலுக்குள் இந்திய ரயில்வேயில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் ஆளும் பா.ஜ.க.வுக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்த முடியும் என்று பிரதமரும், ரயில்வே அமைச்சரும் கருதுகிறார்கள் போல் தெரிகிறது. 
இந்திய ரயில்களின் சராசரி வேகம், சர்வதேச அளவில் ஒப்பிடும்போது மிகமிக குறைவு. அதை அதிகரிக்காத வரை ரயில்வேத் துறை எடுக்கும் எந்த முயற்சியும் பெரும் அளவில் வெற்றி அளிப்பது சாத்தியமல்ல. 700 ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது, பயண நேரத்தை குறைப்பது என்று இந்திய ரயில்வே முடிவெடுத்திருப்பதற்கு இதுதான் காரணம்.
ஏற்கெனவே சில ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுவிட்டன. சில விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்களாக மாற்றப்பட இருக்கின்றன. தொடர்ந்து தாமதமாக பயணிக்கும் ரயில்களின் புள்ளிவிவரத்தைத் தொடர்ந்து அவை குறித்த நேரத்தில் இலக்கை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
பயண நேரத்தைக் குறைப்பதற்கான முனைப்பில் இறங்கி இருக்கிறது ரயில்வே நிர்வாகம். ரயில் என்ஜின்கள் முன்னுக்குப்பின் மாற்றப்படும் நேரத்தைக் குறைப்பதும், சிறிய ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும் நேரத்தை குறைப்பதும், பயண நேரத்தை குறைப்பதற்கான வழிகள் என்று ரயில்வே நிர்வாகம் கருதுகிறது. பயணிகள் அதிகம் ஏறுவதும், இறங்குவதும் இல்லாத ரயில் நிலையங்களில் விரைவு, அதி விரைவு ரயில்கள் நிற்பது இனிமேல் தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
இவையெல்லாம் இருந்தாலும்கூட, அதனால் ரயில்களின் பயண நேரத்தை பெரிய அளவில் குறைத்துவிட முடியம் என்று தோன்றவில்லை. ரயிலின் வேகத்தை அதிகரிக்காமலும், தொழில்நுட்ப ரீதியாக சமிக்ஞை தொழில்நுட்பத்தை மேம்படுத்தாமலும், தண்டவாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டு புதிதாகப் போடப்படாமலும், ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயண நேரத்தைக் குறைக்க முடியும் என்றும் தோன்றவில்லை. 
ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது என்பது வரவேற்புக்குரிய முடிவாக இருந்தாலும், போதுமான அடிப்படை முன்னேற்பாடுகளைச் செய்யாமல் எடுக்கப்படும் முயற்சியாக இருந்துவிடக் கூடாது. லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ரயில்கள் மேம்படுத்தப்பட்டு வேகம் அதிகரிக்கப்பட்டபோது, ரயில் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது. அதனால், ரயில்வேத் துறையின் வருவாயும் கணிசமாக அதிகரித்தது. சரக்கு ரயில்கள் அதிகரிக்கப்பட்டு, அதன் மூலம் வருவாய் ஈட்டப்பட்டது. ஆனால், அதன் தொடர் விளைவாகத் தண்டவாளங்கள் பழுதுபட்டு, பல ரயில்கள் விபத்துகளை எதிர்கொள்ள வேண்டிய அவலம் ஏற்பட்டது.
ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது என்று திட்டமிடும்போதோ, அதை செயல்படுத்தும்போதோ, ரயில்வே நிர்வாகத்தின் கவனம் பயணிகளின் பாதுகாப்பாகத்தான் இருக்க முடியுமே தவிர, ரயில்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதோ, பயண நேரத்தைக் குறைப்பதோ மட்டுமாக இருக்க முடியாது. இதைப் பல ரயில்வேத் துறை அமைச்சர்களும், ரயில்வே உயர் அதிகாரிகளும் கவனத்தில் கொள்ளாததன் விளைவுதான், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியா மிக அதிகமான ரயில் விபத்துகளைச் சந்தித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய ரயில்வே ஏறத்தாழ 30 பெரிய ரயில் விபத்துகளைச் சந்தித்திருக்கிறது. இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கிறார்கள். 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். கடந்த 2016 - 17 நிதியாண்டில்தான், கடந்த 10 ஆண்டுகளில் ரயில் தடம் புரண்டதால் மிக அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.
சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வேயின் பல்வேறு சேவைகளில் கவனம் செலுத்தி மாற்றங்களைக் கொண்டுவர முற்பட்டார். ஆனால், பயணிகளின் பாதுகாப்பு குறித்து ரயில்வே முனைப்பு காட்டாமல் விட்டுவிட்டது. அதன் விளைவுதான் மிக அதிகமான விபத்துகள். 
இப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அதை நினைவில் நிறுத்தி, பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முற்படுவார் என்று எதிர்பார்க்கிறோம். விரைவு ரயிலும், குறித்த நேரத்தில் விரைந்து சென்றடைவதும் வேண்டும்தான். ஆனால், அதைவிட முக்கியம் உயிருக்குப் பாதுகாப்பு.
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/17/பாதுகாப்புக்கு-முன்னுரிமை-2809230.html
2808534 தலையங்கம் சட்டத்தின் கடமை! ஆசிரியர் Thursday, November 16, 2017 01:30 AM +0530 உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. இப்படியொரு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்றும், வேண்டுமென்றே வதந்தியை கிளப்புவதாக இருக்கிறது என்றும் நீதிபதிகள் ஆர்,கே. அகர்வால், அருண் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வு கருத்துத் தெரிவித்திருக்கிறுது.
காமினி ஜெய்ஸ்வால் என்கிற வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை அமைக்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் மட்டுமல்லாமல், நீதித்துறை சீர்திருத்த கோரிக்கை மையம் சார்பில் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணும் இதேபோன்றதொரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இரண்டு தரப்பினரும் ஒரே கோரிக்கையை முன்வைத்து இருவேறு அமர்வுகளின் முன்னால் சிறப்பு விசாரணைக் குழு அமைப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தது கடந்த வாரம் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை வெளிச்சம் போடுவதற்காக இப்படி ஒரே குறிக்கோளுக்காக இருவேறு அமர்வுகள் முன்னால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன என்கிற விமர்சனம் எழுந்தது.
லக்னௌவைச் சேர்ந்த பிரசாத் கல்வி அறக்கட்டளை, பிரசாத் மருத்துவக் கல்லூரியை நடத்தி வருகிறது. இந்தியாவிலுள்ள 46 கல்லூரிகளில் போதுமான தரமும் கட்டமைப்பு வசதியும் இல்லை என்பதால் இந்திய மருத்துவ கவுன்சிலால் மாணவர் சேர்க்கைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் இதுவும் ஒன்று. 
ஒடிஸா உயர்நீதிமன்றத்தில் 2004 முதல் 2010 வரை நீதிபதியாக இருந்தவர் இஷ்ரத் மஸ்ரூர் குத்துசி என்பவர். இவரும் பாவனா பாண்டே என்பவரும் பிரசாத் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு நெருக்கமானவர்கள். இவர்கள் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கையூட்டுக் கொடுத்து தங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர் பிரசாத் அறக்கட்டளை நிர்வாகிகள். 
இதுதொடர்பாக விசாரணையும் சோதனையும் தில்லி, புவனேசுவரம் உள்ளிட்ட எட்டு இடங்களில் நடந்தன. ஏறத்தாழ ரூ.1.90 கோடி கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. வழக்கு இப்போதும் மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணையில் இருக்கிறது என்பது மட்டுமல்ல, ஒடிஸா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி இஷ்ரத் மஸ்ரூர் குத்துசி உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தங்களது மருத்துவக் கல்லூரியின் மீதான தடையை விலக்கக் கோரி பிரசாத் கல்வி அறக்கட்டளையின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, அது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் அமர்வால் விசாரிக்கப்பட்டு அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு நேரடியான தொடர்பு இல்லை என்றாலும், அவரது தலைமையின் கீழான அமர்வில் வழக்கு விசாரிக்கப்பட்டதால் இந்த வழக்குத் தொடர்பான எந்த ஒரு மனுவின் மீதும் விசாரணையில் தலைமை நீதிபதி பங்குகொள்ளக் கூடாது என்பது வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணின் வாதம். 
அதற்குக் காரணம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது தனக்குச் செல்வாக்கு இருக்கிறது என்று கைது செய்யப்பட்ட ஒடிஸா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கூறியிருக்கும் நிலையில், அந்த அமர்வில் இடம்பெற்றவர்கள் விசாரணையில் இடம்பெறக் கூடாது என்கிறார்கள் மனுதாரர்கள். அவர்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சந்தேகம் எழுப்பவோ, குறை காணவோ இல்லை. அதே நேரத்தில் அவர் தலைமையிலான அமர்வில்தான் பிரசாத் மருத்துவக் கல்லூரி வழக்கு நடைபெற்றது என்பதாலும், அந்த அமர்வில் தொடர்புடைய நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுத்து தீர்ப்புப் பெறும் முயற்சி நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டப்படும் நிலையில், தங்கள் மனுவின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அமர்வால் விசாரிக்கப்படக் கூடாது என்பதுதான் அவர்களது கோரிக்கை.
இந்த வழக்கைப் பொருத்தவரை, நீதிமன்றத்தில் தேவையில்லாமல் சலசலப்பை ஏற்படுத்தவும், நீதித்துறையின் நேர்மையின் மீது சந்தேகத்தை எழுப்பவதும்தான் மனுதாரர்களின் உள்நோக்கம் என்று மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது. இப்படி ஒரே காரணத்திற்காக, ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் இருவேறு மனுக்களை தாக்கல் செய்வது கண்டனத்துக்குரியது என்றும் அந்த அமர்வு கூறியிருக்கிறது. மனுவை நிராகரித்திருக்கும் உச்சநீதிமன்ற அமர்வு மனுதாரர்களான வழக்குரைஞர்கள் காமினி ஜெய்ஸ்வால், பிரசாந்த் பூஷண் இருவரையும் நீதிமன்ற அவமதிப்புக்காக தண்டித்திருக்க முடியும். ஆனால், அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறது. 
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது மக்கள் மன்றத்தில் சந்தேகம் எழுகின்ற விதத்தில் குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், இந்தப் பிரச்னையை இத்துடன் முடித்துக்கொள்வது சரியாக இருக்காது. மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு தவறு செய்தவர்கள், நீதிபதிகளாகவே இருந்தாலும்கூட, சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டாக வேண்டும். இந்தக் குற்றச்சாட்டுகள் நீதித்துறையின் மரியாதையைக் குலைப்பதற்காகவே எழுப்பப்பட்டவை என்று கூறி ஒதுக்கிவிடாமல், நீதித்துறை குற்றச்சாட்டுக்கு அப்பாற்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டாக வேண்டும். இல்லாவிட்டால், எழுப்பப்பட்டிருக்கும் சந்தேகங்கள் நீதித்துறையின் நம்பகத்தன்மையை குலைத்துவிடும்.
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/16/சட்டத்தின்-கடமை-2808534.html
2807886 தலையங்கம் நீதித்துறையில் மோதல் ஆசிரியர் Wednesday, November 15, 2017 01:17 AM +0530 நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால், இப்போது உச்சநீதிமன்றம் சந்தித்துக் கொண்டிருக்கும் வழக்கு, விசித்திரத்திலும் விசித்திரமானது. 
கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் இதுவரை சந்திக்காத சோதனையைச் சந்திக்க நேர்ந்தது. ஏறத்தாழ 75 நிமிடங்கள் உச்ச நீதிமன்றத்தில் காணப்பட்ட பதற்றம், அதன் மரியாதையையும் நம்பகத்தன்மையையும் சிதைப்பதாக அமைந்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இரண்டு அமர்வுகளுக்கு இடையே ஏற்பட்ட வெளிப்படையான மோதல், கூச்சலிலும் வாக்குவாதத்திலும் வெளிப்பட்டது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது பொறுமையை இழக்காமல் அமைதியாக இருந்ததால் பிரச்னை எல்லை மீறிவிடவில்லை.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு, முந்தைய நாள் இரண்டாவது இடத்தில் இருக்கும் நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வின் முடிவை நிராகரித்தது. வழக்குகளை அமர்வுகளுக்கு ஒதுக்கும் உரிமையான ரோஸ்டர் தயாரிப்பு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் தனி உரிமை என்று அறிவித்தது. உச்சநீதிமன்றத்தில் அமர்வுகளைத் தீர்மானிப்பதும், எந்த அமர்வுக்கு எந்த வழக்குகளை ஒதுக்குவது என்பதும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் முடிவில் தவறு காண முடியாது. ஆனால், அவசரமான பிரச்னைகளில்கூட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் என்கிற கருத்து விவாதத்திற்குரியது. 
கடந்த வியாழக்கிழமை வழக்குரைஞர் காமினி ஜெய்ஸ்வாலின் மனு, நீதிபதி செலமேஸ்வரின் அமர்விடம் விசாரணைக்கு வந்தது. வழக்கின் முக்கியத்துவம் கருதி, தலைமை நீதிபதிக்கும், தனக்கும் அடுத்த பதவி மூப்பு அடிப்படையிலான முதல் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த மனுவை திங்கள்கிழமை விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி செலமேஸ்வர் உத்தரவிடுகிறார்.
இதே பிரச்னையில் இன்னொரு மனு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரின் அமர்வுக்கு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த அமர்வு இந்த வழக்கைத் தகுதியான இன்னோர் அமர்விடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் விடுத்தது. அந்த வேண்டுகோள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்விடம் வந்தது. 
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையில் நீதிபதிகள் ஆர்.கே. அகர்வால், அருண் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் முன் அன்று மதியமே உடனடியாக விசாரணைக்கு வந்தபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண். வாதம் செய்வதற்குப் போதுமான அவகாசம் தரப்படவில்லை என்கிற அவரது கூற்றுக்கு வழக்குரைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுகிறது. ஆத்திரப்பட்ட பிரசாந்த் பூஷண், நீதிபதிகள் என்ன முடிவை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறி வெளியேறுகிறார்.
நீதிபதிகள் செலமேஸ்வர், அப்துல்நசீர் ஆகியோரின் அமர்வின் முன் வியாழக்கிழமை வந்த மனுவுக்கும் இப்போது பிரசாந்த் பூஷண் தரப்பால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவுக்கும் வேறுபாடில்லை என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. இரண்டு மனுக்களுமே ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மேற்பார்வையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையுடன் ஒரே காரணத்துக்காக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அது உச்சநீதிமன்ற அமர்வுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளையும் பிரச்னைகளையும் உருவாக்கும் எண்ணத்துடன் தாக்கல் செய்யப்பட்டனவா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.
லக்னௌவைச் சேர்ந்த பிரசாத் கல்வி அறக்கட்டளை, பிரசாத் மருத்துவக் கல்லூரியை நடத்தி வருகிறது. இந்தியாவிலுள்ள 46 கல்லூரிகளில் போதுமான தரமும் கட்டமைப்பு வசதியும் இல்லை என்பதால் இந்திய மருத்துவ கவுன்சிலால் மாணவர் சேர்க்கைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் இதுவும் ஒன்று. 
ஒடிஸா உயர்நீதிமன்றத்தில் 2004 முதல் 2010 வரை நீதிபதியாக இருந்தவர் இஷ்ரத் மஸ்ரூர் குத்துசி என்பவர். இவரும் பாவனா பாண்டே என்பவரும் பிரசாத் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு நெருக்கமானவர்கள். இவர்கள் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கையூட்டுக் கொடுத்து தங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர் பிரசாத் அறக்கட்டளை நிர்வாகிகள். 
இதுதொடர்பாக விசாரணையும் சோதனையும் தில்லி, புவனேசுவரம் உள்ளிட்ட எட்டு இடங்களில் நடந்தன. ஏறத்தாழ ரூ.1.90 கோடி கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. வழக்கு இப்போதும் மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணையில் இருக்கிறது என்பது மட்டுமல்ல, ஒடிஸா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி 
இஷ்ரத் மஸ்ரூர் குத்துசி உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தங்களது மருத்துவக் கல்லூரியின் மீதான தடையை விலக்கக் கோரி பிரசாத் கல்வி அறக்கட்டளையின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, அது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் அமர்வால் விசாரிக்கப்பட்டு அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு நேரடியான தொடர்பு இல்லை என்றாலும், அவரது தலைமையின் கீழான அமர்வில் வழக்கு விசாரிக்கப்பட்டதால் இந்த வழக்குத் தொடர்பான எந்த ஒரு மனுவின் மீதும் விசாரணையில் தலைமை நீதிபதி பங்குகொள்ளக் கூடாது என்பது வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணின் வாதம். அதற்குக் காரணம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது தனக்குச் செல்வாக்கு இருக்கிறது என்று கைது செய்யப்பட்ட ஒடிஸா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கூறியிருக்கும் நிலையில், அந்த அமர்வில் இடம்பெற்றவர்கள் விசாரணையில் இடம்பெறக் கூடாது என்கிறார்கள் மனுதாரர்கள்.
உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது நீதிபதியாக இருக்கும் நீதிபதி செலமேஸ்வர் தனது முடிவை அறிவிப்பதற்கு முன்னால் தலைமை நீதிபதியுடன் கலந்து ஆலோசித்திருந்தால் இந்தப் பிரச்னையே எழுந்திருக்காது. வலுவான ஆதாரங்கள் இல்லாமல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது களங்கம் சுமத்துவதோ, சந்தேகம் ஏற்படுத்துவதோ பொறுபற்றத்தனம். அதேநேரத்தில், தனது அமர்வால் விசாரிக்கப்பட்ட ஒரு வழக்கில், மேல்முறையீட்டு அமர்வின் தலைமைப் பொறுப்பில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர வேண்டிய அவசியமில்லை. அவர் இன்னோர் அமர்வைத் தேர்ந்தெடுத்து அந்த அமர்விடம் விசாரணையை ஒப்படைத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி செலமேஸ்வர், வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகிய மூவருமே நீதித்துறையின் சுதந்திரத்துக்காகவும், ஊழலுக்கு எதிரான கருத்துக்கு ஆதரவாகவும் இருப்பவர்கள். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பது நீதித்துறை என்கிற அரசியல் சாசன அமைப்பை பலவீனப்படுத்துகிறது.
நீதித்துறையில் ஊழல் என்பது மிக முக்கியமான பிரச்னை. அதை நீதித்துறை தனக்குத்தானே தீர்த்துக்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/15/நீதித்துறையில்-மோதல்-2807886.html
2807318 தலையங்கம் தவறு திருத்தப்படுகிறது! ஆசிரியர் Tuesday, November 14, 2017 02:45 AM +0530 சரக்கு மற்றும் சேவை வரிக்கான ஜி.எஸ்.டி. குழு 28% வரிவிதிப்புள்ள பொருள்களின் எண்ணிக்கையை 224-லிருந்து 50-ஆகக் குறைத்திருக்கிறது. 18% வரி உள்ள பொருள்களில் சில 12%-ஆகவும், 5%-ஆகவும் குறைக்கப்பட்டிருக்கின்றன.
 குவஹாட்டியில் கூடிய ஜி.எஸ்.டி. கூட்டத்தின் விளைவாக 200-க்கும் மேற்பட்ட பொருள்களின் சரக்கு மற்றும் சேவை வரியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த கூட்டத்தில் 27 பொருள்களுக்கும், கடந்த மே மாதம் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தியதன் பிறகு 100 பொருள்களுக்கும் இதுவரை வரிவிதிப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த நான்கு மாதங்களில் இதுவரை 180 பொருள்கள் உயர் வரிவிதிப்புப் பிரிவான 28%-லிருந்து குறைக்கப்பட்டிருக்கின்றன.
 அதிக வரிவிதிப்பிலிருந்து குறைந்த விதிப்புக்கு பொருள்களை மாற்றுவதால், வரி வருவாய் இழப்பு என்பது வெறும் மாயத்தோற்றம் மட்டுமே. குறைந்த வரிவிதிப்பின் மூலம் அதிக நிதியாதாரத்தைத் திரட்டுவது என்பதுதான் சரியான பொருளாதாரப் புரிதல் என்பதை அனுபவம் உணர்த்தியிருக்கிறது.
 மதுவிலக்கை அறிமுகப்படுத்துவதால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கு அன்றைய சென்னை ராஜதானியின் பிரதமராக இருந்த ராஜாஜியால் 1939-இல் கொண்டுவரப்பட்டதுதான் வருமான வரி என்கிற திட்டம். ஒவ்வொரு முறை ஒரு பொருள் கைமாறும்போதும் ரூபாய்க்கு ஒரு பைசா, அதாவது 1%, அரசுக்கு வரி செலுத்துவது என்கிற முறையை அறிமுகப்படுத்தியவர் அவர்தான்.
 வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது, மூதறிஞர் ராஜாஜி வரிவிதிப்பு கூறிய கருத்து காலாகாலத்திற்கும் ஆட்சியாளர்கள் மனத்தில் இருத்தத்தக்கது. "வரி வசூலிப்பது என்பது பூவுக்கு சேதமில்லாமல் வண்டு தேனை எடுப்பது போன்றது' என்கிற அவரது கருத்தின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல், பின்னால் வந்த அரசுகள் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக வரி விதிக்கத் தொடங்கிவிட்டன.
 மிக அதிகமான வரி விழுக்காடு பொதுமக்களின் வரி ஏய்ப்புக்குக் காரணமாகிறது. தாங்க முடியாத அளவுக்கு வருமான வரி, ஆக்ட்ராய் வரி, கலால் வரி, சுங்க வரி என்று வரிக்கு மேல் வரி போட்டு உற்பத்தியாளர்களையும் வியாபாரிகளையும் பொதுமக்களையும் மத்திய - மாநில அரசுகள் வருவாய்க்காகப் பிழிந்தெடுக்கத் தொடங்கிய நிலையில்தான், அனைத்து வரிகளையும் அகற்றிவிட்டு "ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே வரி' என்கிற நோக்கத்துடன் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரே வரியாக ஆகாய விமானத்திலிருந்து அடுக்களை சாமான்கள் வரை 5%-மோ, 10%-மோ விதிக்கப்பட்டிருக்குமேயானால், மக்களும் சரி, வியாபாரிகளும் சரி ஜி.எஸ்.டி. முறையை வரவேற்றுக் கொண்டாடி இருப்பார்கள்.
 1,200 பொருள்களும், சேவைகளும் 0%, 5%, 12%, 18%, 28% என்று ஐந்து அடுக்கு வரிவிதிப்புக்கு ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டபோது உட்பட்டன. அறிமுகப்படுத்தப்பட்டபோது இருந்த வரிகள் 28% மேலான பொருள்களுக்கு இப்போது இல்லை. கடந்த ஜூலை மாதம் 28% வரிவிதிப்பில் இருந்த 250 பொருள்கள் இப்போது 50 பொருள்களாகக் குறைந்திருக்கின்றன. அதேபோல ஆரம்பத்தில் ஆண்டொன்றுக்கு ரூ.75 லட்சம் வரவு - செலவுள்ள நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் இருந்தது போய், கடந்த அக்டோபரில் ரூ.ஒரு கோடியாக மாறி, இப்போது ஆண்டு வரவு - செலவு ரூ.1.5 கோடிக்கு மேலேயுள்ள நிறுவனங்கள் மட்டுமே ஜி.எஸ்.டி. வலைக்குள் வருகின்றன.
 இதிலிருந்து, ஜி.எஸ்.டி.யை அறிமுகப்படுத்தியபோது தெளிவான புரிதல் இல்லாமல் அவசரக் கோலத்தில் அறிமுகப்படுத்திய பிறகு இப்போது அரசு அனுபவத்தில் தனது தவறுகளை ஒன்றன் பின் ஒன்றாகத் திருத்திக்கொண்டு வருகிறது என்பது தெரிகிறது.
 ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இன்னும்கூடப் பல சிக்கல்களும் சிரமங்களும் காணப்படுகின்றன. பலமுனை வரிகளை அகற்றுவதும், வரிவிதிப்பை சீரமைப்பதும், வரி செலுத்துவதை சுலபமாக்குவதும்தான் ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பின் அடிப்படை நோக்கம். ஆனால், இதற்கான கணக்குத் தாக்கல் முறைகளிலேயே தேவையில்லாத விதிமுறைகளை நுழைத்து சாமானியர்கள் இந்த முறைக்கு மாறுவது என்பதையே சிக்கலாக்கி இருக்கிறார்கள்.
 ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் நடைமுறைச் சிக்கல்களுக்கு பயந்த பலர் தங்களது நிறுவனங்களை மூடி விட்டார்கள். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல, கணக்குத் தணிக்கையாளர்களும், கணக்கெழுத்தர்களும் வைத்துக்கொள்ள முடியாத சிறு, குறு தொழில்முனைவோரும், வியாபாரிகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், அரசின் மீது வரி செலுத்துவோருக்கு ஆத்திரமும் எரிச்சலும்தான் அதிகரித்திருக்கிறது.
 உதாரணத்துக்கு, முன்பெல்லாம் சேவை வரியை, வாடிக்கையாளர்களிடமிருந்து வரியை வசூல் செய்த பிறகு அடைத்தால் போதும் என்கிற நிலை மாறி, இப்போது சேவைக்கான விலைப்பட்டியலை வாடிக்கையாளருக்கு வழங்கிவிட்டால், அவர் பணம் தந்தாலும், தராவிட்டாலும் ஜி.எஸ்.டி. வரி செலுத்தியேயாக வேண்டும். பணம் கிடைக்காத நிலையில், அதைத் திரும்பப் பெறுவதற்கான வழிமுறைச் சிக்கல்கள் தலைசுற்ற வைக்கின்றன. கணக்குத் தாக்கல் செலுத்துவதற்குத் தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ரூ.100 பிழை செலுத்த வேண்டும் என்கிறது ஜி.எஸ்.டி. சட்டப் பிரிவு 123. இப்படி எத்தனை எத்தனையோ குறைபாடுகள்.
 ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறைக்கு மக்கள் மன்றத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் உணர்ந்து இப்போதாவது மாற்றங்களைச் செய்கிறார்கள் என்பதில் ஆறுதல் அடைவதைத்தவிர, நமக்கு வேறுவழியில்லை.
 
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/14/தவறு-திருத்தப்படுகிறது-2807318.html
2806666 தலையங்கம் இது போதாது! ஆசிரியர் Monday, November 13, 2017 02:37 AM +0530 உலக வங்கியின் தொழில்முனைவோர் சாதக நிலை தரவரிசைப் பட்டியலில், இந்தியா முன்னிலையில் இருப்பது வரவேற்புக்குரிய மாற்றம். உலகின் 190 நாடுகளில் கடந்த ஆண்டு உலக வங்கியின் தரவரிசைப்படி இந்தியா 130-ஆவது இடத்தில் இருந்தது. இப்போது 100-ஆவது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது.
 சுலபமாகத் தொழில் தொடங்குவது, தொழிற்சாலை நிறுவுவதற்கான அசையாச் சொத்தைப் பதிவு செய்வது, கட்டுமானத்திற்கு அனுமதி பெறுவது, மின் இணைப்புப் பெறுவது, சிறுபான்மை முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பு, சுலபமாக வரிகளைச் செலுத்துவது, ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது, நொடிப்பு ஏற்பட்டால் சரி செய்வது உள்ளிட்ட 11 தேவைகள் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான சீர்திருத்தங்களுக்கு அவசியம் என்று உலக வங்கி நிர்ணயித்திருக்கிறது. இவற்றில் புதிய திவால் சட்டத்தின் மூலம் நொடிப்பை சரி செய்வது, வரி செலுத்துவதில் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பது முதலீட்டுக்கான சூழலை உருவாக்கி இருப்பது, சிறுபான்மை முதலீடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பது ஆகியவற்றில் இந்தியா முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருப்பதால் தொழில்முனைவோர் சாதக நிலை தரவரிசைப்பட்டியலில் 30 இடங்கள் முன்னேறி இருப்பதாக உலக வங்கி அறிவித்திருக்கிறது.
 அந்நிய முதலீடுகளை சுலபமாக கொண்டுவரவும், தொழில் தொடங்கவும் சூழலை நாம் உருவாக்கி வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதுபோல், நமது இலக்கு தொழில்முனைவோர் சாதக நிலை தரவரிசைப் பட்டியலில் முதல் 50 இடத்திற்குள் வர வேண்டும் என்பது நனவாகுமேயானால், இந்தியாவை அச்சுறுத்தி வரும் வேலைவாய்ப்பின்மையை நாம் எதிர்கொள்ள முடியும்.
 தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் நிலை உயர்ந்திருந்தாலும்கூட, உலக வங்கி இந்தியாவில் காணப்படும் பல்வேறு முட்டுக்கட்டைகளையும் சுட்டிக்காட்டாமல் இல்லை. தொழில்முனைவோர் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்திச் செயல்பட கட்டுமான அனுமதி, சொத்துப் பதிவு, ஒப்பந்த நடைமுறை ஆகியவற்றை பின்பற்றுவதில் பல்வேறு தொந்தரவுகளைச் சந்திக்க வேண்டியுள்ளதாய் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், உலக வங்கியின் இந்த ஆய்வு, இந்தியாவின் இரண்டு முக்கியமான மும்பை மற்றும் தில்லி பெருநகரங்களை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
 உலகின் ஏனைய நாடுகளில் ஒரு தொழிலைத் தொடங்க அனுமதி பெறுவது, தொழிற்சாலையை நிறுவுவது, ஊழியர்களை ஒப்பந்தம் செய்து கொள்வது, உற்பத்தியில் இறங்குவது, அதற்கான வரிகளைச் செலுத்துவது போன்றவை எந்தவிதத் தடையும் இன்றி சுலபமாகவும் இயல்பாகவும் நடைபெறுகின்றன. இந்தியாவில் இன்னும்கூட, எந்த முதலீட்டாளருக்கும் இவை சுலபமானதாக இல்லை.
 உலக வங்கியின் புள்ளிவிவரத்தின்படி, 55 நாடுகளில் எந்த ஒரு தொழில்முனைவோரும் ஒரு வார காலத்தில் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்து தனது வேலையைத் தொடங்கி விடலாம். நியூஸிலாந்தில் ஒரு தொழில் தொடங்குவதற்கு அரை நாள்தான் ஆகிறது. ஹாங்காங்கில் 30 நிமிடங்களில், மின்அஞ்சலில் அனுமதி பெறப்படுகிறது. மியான்மரில் 14 நாட்கள் என்றால், மலாவி, கோசோவா, இராக் ஆகிய நாடுகளை எல்லாவற்றையும்விட பின்தங்கிய நிலையில் இந்தியா காணப்படுகிறது.
 முதலீட்டாளர்கள் தொழில் தொடங்குவதற்கான முனைப்பில் இறங்கிவிட்டால் ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்கு அவர்கள் தடுமாறும் சூழல்தான் இந்தியாவில் காணப்படுகிறது. பிரிக்ஸ் அமைப்பைச் சேர்ந்த ஐந்து நாடுகளில், இந்தியாவைத் தவிர, ஏனைய நான்கு நாடுகளிலுமே நம்மைவிடத் தொழில்முனைவோருக்கு சாதக நிலை காணப்படுகிறது. இந்த விஷயத்தில் பிரிக்ஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நாடுகளில் சீனா ஐந்தாவது இடத்திலும், ரஷியா 18-ஆவது இடத்திலும், பிரேஸில் 47-ஆவது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 115-ஆவது இடத்திலும், இந்தியா 164-ஆவது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதற்குக் காரணம், நிர்வாகத் தடைகளும், சட்டச் சிக்கல்களும்.
 கட்டுமான அனுமதி பெறுவதிலும் தெற்கு சூடான், கம்போடியா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு ஆகியவற்றை விட, இந்தியா பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. தொழிற்சாலை நிறுவுவதற்காக இடத்தை தேர்வு செய்தாலும்கூட, அதைப் பதிவு செய்வதற்கு ஜாம்பியா, சோமாலியா, டிரைடன் ஆகிய மிகவும் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளைவிட இந்தியாவில் பல்வேறு தடைகள், பல்வேறு பிரச்னைகள் காணப்படுகின்றன.
 இடத்தைப் பதிவு செய்வதற்கு இப்போது உள்ள 53 நாட்களை 9 நாட்களாகவும், கட்டுமான அனுமதிபெறுவதற்கு 143 நாட்களை 97 நாட்களாகவும், ஒப்பந்தங்களை முறைப்படுத்த 1445 நாட்களை 560 நாட்களாகவும், வரி செலுத்துவதற்கான நேரத்தை ஆண்டுக்கு 483 மணி நேரத்திலிருந்து 314 மணி நேரமாகவும் குறைத்தால் ஒழிய, நாம் முதலீட்டாளர்களுக்கும் தொழில் தொடங்குபவர்களுக்கும் சாதகமான சூழலை ஏற்படுத்த முடியாது.
 இந்தியாவில் தொழில்நுட்பத் திறமையில்லாமலோ, மனித வளம் இல்லாமலோ இல்லை. ஆனால், நம்முடைய அரசு நிர்வாகம் அசைந்து கொடுக்காமல் இருப்பது, ஆமை வேகத்தில் செயல்படுவது, திரும்பும் இடமெல்லாம் கையூட்டுத் தர வேண்டிய சூழல் காணப்படுவது ஆகியவைதான் இந்தியாவின் மிகப்பெரிய பலவீனங்களாகக் காணப்படுகின்றன. மத்திய - மாநில அரசுகளுக்கிடையே சுமுகமான தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் மனப்போக்கு காணாமல் இருப்பதும்கூட இதற்குக் காரணம்.
 எல்லாவற்றிற்கும் மேலாக, அரசு முதலீட்டால் மட்டுமே எந்த ஒரு நாடும் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்துவிட முடியாது. தனியார் முதலீடு அதிகரித்தால்தான் தொழில் வளர்ச்சி சாத்தியப்படும். அதற்கான சூழலை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியாக வேண்டும்.
 
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/13/இது-போதாது-2806666.html
2805777 தலையங்கம் யார் குற்றவாளி? ஆசிரியர் Saturday, November 11, 2017 03:49 AM +0530 கடந்த செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி குருகிராம் ரயான் உறைவிடப் பள்ளியில் ஏழு வயது பிரத்யுமன் தாக்கூர் என்கிற சிறுவன் கழிப்பறையில் கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு தழுவிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது பாலியல் இச்சைக்கு உடன்படாத ஏழு வயது சிறுவனைப் பள்ளி வாகனத்தின் நடத்துநர் அசோக் குமார் படுகொலை செய்தார் என்று அன்று இரவே ஹரியாணா காவல்துறையினர் அறிவித்தனர்.
 இப்போது பிரத்யுமன் தாக்கூரின் படுகொலைக்குக் காரணம் அசோக் குமார் அல்ல என்றும், அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பில் படிக்கும் 16 வயது மாணவன் என்றும் மத்திய புலனாய்வுத் துறை தனது விசாரணையில் கண்டறிந்திருக்கிறது. பள்ளியில் நடக்க இருந்த தேர்வுகளையும், பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தையும் தள்ளிப்போட அந்த 11-ஆம் வகுப்பு மாணவன், ஏழு வயது பிரத்யுமன் தாக்கூரை கொலை செய்திருப்பது மத்திய புலனாய்வுத் துறையினரால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
 மத்திய புலனாய்வுத் துறை, கண்காணிப்பு கேமராப் பதிவுகளை நுணுக்கமாக ஆய்வு செய்ததுடன் நின்றுவிடாமல், 125 ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் என்று பரவலாக விசாரணை செய்து பிரத்யுமன் தாக்கூரை படுகொலை செய்தது 11-ஆம் வகுப்பு மாணவன்தான் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறது.
 அந்த மாணவன் உள்ளூரில் உள்ள கடையிலிருந்து கத்தியை வாங்கியது மட்டுமல்லாமல், அதை யாரும் அறியாமல் பள்ளிக்கு எடுத்து வந்திருக்கிறார். அந்த மாணவனின் தந்தை, பொதுவான நபர், பள்ளியின் பொதுநல அலுவலர் ஆகியோர் முன்னிலையில், பிரத்யுமன் தாக்கூரின் கழுத்தை அந்தச் சிறுவன் சற்றும் எதிர்பார்க்காமல் அறுத்துப் படுகொலை செய்ததுடன் அந்தக் கத்தியை கழிப்பறையிலேயே மறைத்து வைத்ததாக இப்போது அந்த மாணவன் வாக்கு மூலம் அளித்திருக்கிறான்.
 இதில், பல கேள்விகள் எழுகின்றன. நடத்துநர் அசோக் குமாரைக் கைது செய்தபோது அவர் கழிப்பறையிலிருந்து வெளியேறியது கண்காணிப்பு கேமராவில் கண்டறியப்பட்டதாக ஹரியாணா காவல்துறை கூறியிருந்தது. மேலும், வாகன நடத்துநர் பள்ளி வாகனத்திலிருந்த கத்தியைக் கழிப்பறையில் கழுவிக்கொண்டிருந்தபோது, ஏழு வயது பிரத்யுமன் தாக்கூர் உள்ளே நுழைந்ததாகவும், அந்தச் சிறுவன் தனது பாலியல் வெறிக்கு உட்படாததால் அவனை அசோக் குமார் கழுத்தை அறுத்துக் கொன்றதாகவும் காவல்துறை கூறியதெல்லாம் பொய்யான தகவலா? கழிப்பறையில் கத்தி கண்டெடுக்கப்பட்டது குறித்து குருகிராம் காவல்துறையினர் ஏன் தெரிவிக்காமல் இருந்தனர்.
 ரயான் உறைவிடப் பள்ளி கொலை வழக்கில் அவசர அவசரமாக விசாரணையை முடித்துக் குற்றவாளி நடத்துநர் அசோக் குமார்தான் என்று கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே அறிவித்த குருகிராம் காவல்துறையினரின் செயல்பாடு விசித்திரமாக இருக்கிறது. நடத்துநர் அசோக் குமார் துன்புறுத்தப்பட்டு வாக்குமூலம் தரக் கட்டாயப்படுத்தப்பட்டாரா என்பது விசாரிக்கப்பட வேண்டும். எந்த ஒரு மனிதரும் தன்னிச்சையாக தான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்வது என்பது சாத்தியமே இல்லை.
 இந்தப் பிரச்னையில் ஊடகங்களின் பங்கு குறித்தும் கூறாமல் இருக்க முடியவில்லை. குறிப்பாக, 24 மணிநேரத் தொலைக்காட்சி சேனல்கள் வந்த பிறகு, ஒன்றுமில்லாத சிறிய விஷயங்களைக்கூடப் பெரிதுபடுத்துவது என்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி ஊடகங்களுடன் போட்டிப் போட்டாக வேண்டிய கட்டாயத்தால் அச்சு ஊடகங்களும் தீர விசாரித்து உண்மையைப் பதிவு செய்வதற்கு காத்திருக்காமல், பரப்பரப்பு செய்தி ஆக்குகின்றன. போதாக்குறைக்கு சமூக வலைதளங்களான சுட்டுரையும், கட்செவி அஞ்சலும், முகநூலும் ஆதாரமில்லாத தகவல்களைக்கூடப் புயல் வேகத்தில் பொதுவெளியில் பரப்புகின்றன. இப்படிப்பட்ட சூழலில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பும் ஆத்திரமும் உருவாக்கப்படுகிறது.
 ஆட்சியாளர்களும் சரி, காவல்துறையினரும் சரி, ரயான் உறைவிடப் பள்ளி படுகொலை உள்ளிட்ட எல்லாப் பிரச்னைகளிலும் உண்மையைக் கண்டறிவதைவிட, ஊர் வாய்க்குப் பூட்டு போடுவதில் அக்கறை செலுத்துகின்றன. பரபரப்பாக்கப்பட்டுவிட்ட வழக்குக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதத்தில் விரைந்து விசாரணையை முடித்துக் குற்றவாளியை அடையாளம் காட்டி, வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று, தங்களது கடமையை முடித்துக்கொள்வதில் குறியாக இருக்கிறது அரசியல் தலைமையின் அழுத்தத்துக்கு ஆளாகும் காவல்துறை.
 நிரபராதியான அசோக் குமார் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். மத்திய புலனாய்வுத் துறை இந்த வழக்கை விசாரிக்காமல் போயிருந்தால், ஒருவேளை தூக்குக் கயிற்றை முத்தமிட்டிருக்கலாம். இந்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஏறத்தாழ 4.20 லட்சம் கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கு பேர் விசாரணைக் கைதிகள். இவர்களில் பலரும் நடத்துநர் அசோக் குமார் போல, காவல்துறையின் வற்புறுத்தலால் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிரபராதிகளாகக்கூட இருக்கலாம்.
 100 குற்றவாளிகள் தப்பித்தாலும்கூட ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான் சட்டத்தின் நோக்கம். ஆனால், இங்கே 100 நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும், குற்றவாளிகள் ஒருசிலர் மட்டுமே பிடிபடுவதும் வாடிக்கையாக இருக்கிறதோ என்கிற அச்சம் மேலிடுகிறது.
 இதிர் யார் குற்றவாளி? பரபரப்பை ஏற்படுத்தும் ஊடகங்களா? ஊர்வாயை மூடுவதற்காக நிரபராதிகளைக் குற்றவாளிகளாக்கும் காவல்துறையினரா?
 
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/11/யார்-குற்றவாளி-2805777.html
2804876 தலையங்கம் இன்றுமா கொத்தடிமைத்தனம்? ஆசிரியர் Friday, November 10, 2017 01:38 AM +0530 கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் பரன் மாவட்டத்தில் குழந்தைகள் உட்பட 25 கொத்தடிமைகள் பல்வேறு தோட்டங்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அப்படி மீட்கப்பட்ட கொத்தடிமைகள் அனைவரும் மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள், ரூ.500 முதல் ரூ.2000 வரை கடனாகக் கொடுக்கப்பட்டு, கொத்தடிமைகளாக ராஜஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள். சம்பளமோ, கூலியோ இல்லாமல் காலவரையின்றி அவர்கள் தோட்ட வேலையிலும், விவசாயத்திலும் பயன்படுத்தப்பட்டனர் என்று தெரிகிறது.
வெள்ளையர்களால் ஆப்பிரிக்காவிலிருந்து படிப்பறிவில்லாத கருப்பின மக்கள் கொத்தடிமைகளாக அழைத்து வரப்பட்டு, உருவாக்கப்பட்டதுதான் அமெரிக்கா எனும் நாடு. தமிழகத்திலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு கொத்தடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பிஜி தீவின் கரும்புத் தோட்டங்களில் கொடுமைப்படுத்தப்பட்ட வரலாற்றை மகாகவி பாரதி 'அவர் விம்மி விம்மி விம்மி விம்மி அழும் குரல் கேட்டிருப்பாய் காற்றே' என்று உருக்கமாகப் பதிவு செய்திருப்பார்.
நமது தமிழகத்திலிருந்து கங்காணிகளால் கொத்தடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டவர்கள்தான் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களையும் ரப்பர் தோட்டங்களையும் உருவாக்கியவர்கள் என்பது வரலாற்று உண்மை. அதேபோல, பர்மாவுக்கும் மலேசியாவுக்கும்கூட இங்கிருந்து தோட்ட வேலை செய்வதற்காக ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொத்தடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட காலம் ஒன்றிருந்தது.
ராஜஸ்தானில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 25 தோட்டத் தொழிலாளர்களின் நிலைமை குறித்து வெளியாகியிருக்கும் தகவல்கள் நூற்றாண்டுகள் கடந்தும்கூட கொத்தடிமை முறையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. நல்ல வேலை வாய்ப்புடன், வசதியான வாழ்க்கை கிடைக்குமென்கிற நம்பிக்கையை ஊட்டி மத்தியப் பிரதேசத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளிகள், கடந்த ஏழு ஆண்டுகளாக தினந்தோறும் 15 மணி நேரம் தோட்ட வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். 
அவர்கள் தங்களது கடனைத் திருப்பி அடைத்துக் கொண்டிருக்கிறோம் என்கிற நம்பிக்கையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தரப்பட்டதெல்லாம் கோதுமையும், சமையலுக்குத் தேவையான சில அடிப்படைப் பொருள்களும் மட்டுமே. ஆண்டுக்கு ஒருமுறை முதலாளிகளின் வீட்டில் உள்ள பழைய துணிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. அவர்கள் உழைப்பது போதாதென்று, அவர்களது குழந்தைகள் தோட்ட உரிமையாளர்களின் வீடுகளில் சம்பளமில்லாமல் வீட்டு வேலைக்குப் பயன்படுத்தப்பட்டனர். 
கொத்தடிமை முறை என்பது உலகின் மிகப்பழமையான அடிமை முறை. 2016 உலக அடிமைத்தனக் குறியீட்டின்படி உலகிலேயே மிக அதிகமாக அடிமைகள் காணப்படுவது இந்தியாவில்தான். உலகளாவிய அளவில் ஏறத்தாழ 4.6 கோடி பேர் கொத்தடிமைகளாக இருப்பதாகவும் அவர்களில் 1.8 கோடி பேர் இந்தியாவில் இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. இந்திய அரசிடம் இதுகுறித்து எந்தவிதப் புள்ளிவிவரமும் இல்லை என்பது துரதிருஷ்டமானது. 
2030க்குள் இந்தியாவிலுள்ள கொத்தடிமைகளை அடையாளம் கண்டு, மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்கான திட்டங்களை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் இப்போதுதான் திட்டமிடவே தொடங்கியிருக்கிறது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து விவாதம் எழுந்தது. இந்தியாவில் கொத்தடிமை முறையை முற்றிலுமாக அகற்றுவதற்கு மத்திய அரசு ஒரு மும்முனை செயல் திட்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்புக்கான இணை அமைச்சர் (தனி பொறுப்பு) பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். அது குறித்தான விவரங்களை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் இன்னும் முறைப்படுத்தி, செயல்படுத்தத் தொடங்கியதாகத் தெரிவில்லை.
இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஊழியர்களோ, தொழிலாளர்களோ கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவதை தடை செய்கிறது. அவசர நிலை சட்டத்தின்போது அன்றைய இந்திரா காந்தி அரசு கொத்தடிமை முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் முழு மூச்சுடன் ஈடுபட்டது. கொத்தடிமை முறை (ஒழிப்பு) சட்டம் 1976, இது தொடர்பான வழங்குகளை மாவட்ட நீதிபதிகளே கையாளும் அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, கொத்தடிமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுக்க வழிவகை செய்யப்பட்டது. 
1978 முதல் மத்திய அரசு கொத்தடிமைகள் மறுவாழ்வுத் திட்டம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்படி மத்திய, மாநில அரசுகள் தலா ரூபாய் 10 ஆயிரம் கொத்தடிமைகளின் மறுவாழ்வுக்காக ஒதுக்க வழிவகை செய்யப்பட்டது. ஆனாலும்கூட கொத்தடிமைகள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்படும்போது, மாநில அரசுகள் அவர்கள் மறுவாழ்வுக்குக் கூடுதல் நிதி ஒதுக்குகின்றன.
கடந்த 40 ஆண்டுகளில் கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதற்கு சமூகப் பொருளார ஏற்றத்தாழ்வுகள் ஒரு முக்கியமான காரணம். கிராமப் புறங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதும், ஆதிவாசிகளின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவதும், ஊரகப்புற வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதும் இதற்கு முக்கியமான மூன்று காரணங்கள். மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயரும் தொழிலாளர்களுக்குப் போதுமான சமூகப் பாதுகாப்பும், வேலை செய்யும் இடங்களில் அவர்கள் நடத்தப்படும் சூழலும் உறுதிப்படுத்தப்படுவது அவசியம். 
இன்னும்கூட கொத்தடிமைகளாக வேலையாட்களை வைத்திருப்பது குற்றமாகக் கருதப்படாமல் அதை சமூக அந்தஸ்தாகக் கருதுவதுதான் மிகப்பெரிய சோகம். கொத்தடிமை முறை இந்தியாவில் இருக்கும் வரை இந்தியா தன்னை வளர்ச்சி அடைந்த நாடாகவோ, வல்லரசாகும் தகுதிபடைத்த நாடாகவோ கருதினால், அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகத்தான் இருக்கும்.
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/10/இன்றுமா-கொத்தடிமைத்தனம்-2804876.html
2804279 தலையங்கம் சாதனை மகளிர் ஆசிரியர் Thursday, November 9, 2017 01:37 AM +0530 இந்திய விளையாட்டின் பொற்காலம் இது. நேற்று ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஆசிய கோப்பையில் தங்கப் பதக்கத்தை வென்றது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையின் இறுதிச்சுற்று வரை சென்று சாதனை படைத்தது. இந்திய பாட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நெவால், சிந்து உள்ளிட்டோர் சர்வதேச அளவில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்து கொண்டிருக்கிறார்கள்.
மகளிர் அணியினர் மட்டுமல்லாமல் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக நியூஸிலாந்துக்கு எதிரான டி-20 தொடரைக் கைப்பற்றி வெற்றிவாகை சூடியிருக்கிறது. இதற்கு முன்பு நியூஸிலாந்துடன் ஐந்து முறை டி-20 தொடர்களில் விளையாடியிருக்கும் இந்தியா, அதில் ஓர் ஆட்டத்தில்கூட வெற்றி பெறவில்லை எனும்போது இந்த வெற்றியின் பெருமை அதிகரிக்கிறது.
ஆசிய கோப்பையில் தங்கப் பதக்கம் பெற்றிருப்பது இந்திய மகளிர் ஹாக்கி விளையாட்டுக்குப் புதியதோர் உத்வேகத்தை அளிக்கும். ஜப்பானில் ககாமிகஹாரா என்கிற இடத்தில் நடைபெற்ற ஆசிய மகளிர் ஹாக்கி பந்தயத்தில் இந்திய அணியும் சீன அணியும் தலா ஒரு கோல் போட்டு டிராவில் முடிந்தது. அதனால் மீண்டும் விளையாடியபோது இந்திய மகளிர் அணி சீனாவை 5 - 4 என்கிற கோல்கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த வெற்றிக்கு மேலும் சில சிறப்புகள் உண்டு. இறுதிச்சுற்றில் இந்தியா வென்றது என்பது மட்டுமல்ல, இந்த முறை ஆசிய ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி ஆரம்பம்முதலே கலந்துகொண்ட அத்தனை போட்டிகளிலும் வெற்றிவாகை சூடியது என்பதுதான் தனிச்சிறப்பு. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய மகளிர் ஹாக்கி அணி குறிப்பிடும்படியான வெற்றிகளை அடையாமல் சற்று தளர்ந்த நிலையிலேயே காணப்பட்டு வந்தது. 1998 முதல் 2006 வரை தொடர்ந்து மூன்று காமன்வெல்த் போட்டிகளில் இந்திய மகளிர் அணி பதக்கம் வென்றது. 2002 காமன்வெல்த் பந்தயத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் சரி, 1982-இல் தங்கப் பதக்கத்தையும் 1998-இல் வெள்ளிப் பதக்கத்தையும் இந்திய மகளிர் அணி வென்றது.
ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த பல அணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து சர்வதேச ஹாக்கியில் தங்களுக்கென்று தனியிடம் பிடித்தன. ஆனால், இந்திய அணி 2006-க்குப் பிறகு காமன்வெல்த் ஹாக்கி போட்டிகளில் ஒரு பதக்கம்கூட வெல்ல முடியவில்லை. ஆசிய அளவில் ஜப்பான், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளின் அணிகள் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தவண்ணம் இருந்தபோது இந்திய மகளிர் அணி எப்போதாவது ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பெறுவதுடன் ஆறுதல் அடையும் நிலையில்தான் இருந்து வந்தது. இந்த ஆண்டு ஆசிய கோப்பையை இந்திய மகளிர் ஹாக்கி அணி வென்றிருப்பதில் இன்னொரு சிறப்பு உண்டு.
இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் அணி சீனாவை ஒருமுறைகூட தோற்கடித்தது இல்லை. இந்தத் தடவை இந்தியாவும் சீனாவும் மோதிய இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. குழுக்கள் அளவில் நடந்த தகுதிச்சுற்றில் முதலாவதாகவும் இறுதிச்சுற்றில் இரண்டாவதாகவும் சீன அணியை இந்திய மகளிர் அணி தோற்கடித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இறுதிக்கு முந்திய சுற்றில் 4-க்கு 2 கோல் என்கிற வகையில் ஜப்பான் அணியையும் இந்திய மகளிர் அணி தோற்கடித்திருக்கிறது.
இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் என்பதைப் பதிவு செய்தாக வேண்டும். கடந்த டிசம்பர் மாதம் அவரை இந்திய மகளிர் ஹாக்கிஅணியின் பயிற்சியாளராக நியமித்தபோதே இந்த முறை எப்படியும் ஆசிய கோப்பையைக் கைப்பற்றுவது என்கிற முனைப்புடன் இந்திய அணியை அவர் தயார் செய்யத் தொடங்கினார். 
அதுமட்டுமல்லாமல், பெனாலிட்டி கார்னர் திறமையாளர் குர்ஜித் கௌரின் வளர்ச்சி இந்திய அணிக்கு வலு சேர்த்தது. 22 வயது குர்ஜித் கௌர் எட்டு கோல்களை அடித்து இந்திய வெற்றியை உறுதிப்படுத்தினார். ஐந்து கோல்கள் அடித்த நவ்ஜோத் கெளரும், கோல்கீப்பரான சவீதா புனியாவும் இந்திய அணியின் சாதனை வெற்றிக்குக் காரணமாக அமைந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிய மகளிர் ஹாக்கி பந்தயத்தின் இறுதி ஆட்டத்தில் 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் சீனாவைத் தோற்கடித்து இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியதற்கு இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் சவீதா புனியாவைப் பாராட்டியாக வேண்டும். ஹரியாணாவைச் சேர்ந்த சுனிதா சமயோசிதமாகவும் திறமையாகவும் கோல்கீப்பராகச் செயல்பட்டதால்தான் இந்தச் சாதனை சாத்தியமானது. ஹாக்கி ஆட்டத்தின் உச்சகட்டமாக அணியின் வெற்றியைத் தீர்மானிக்கும் 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் சீன வீராங்கனையின் கடைசி கோல் முயற்சியைச் சிறப்பாகத் தடுத்து, அணியை வெற்றி பெறச் செய்த சவீதா அந்தப் போட்டியின் சிறந்த கோல்கீப்பர் என்ற பெருமையையும் அடைந்திருக்கிறார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக அரசுப் பணிக்காக முயற்சித்து வரும் சவீதா புனியாவுக்கு 27 வயதாகிறது. தான் இதுவரை தந்தையின் வருமானத்தைத்தான் சார்ந்திருப்பதாகவும் வீராங்கனைகளுக்கு அரசுப் பணி வழங்கும் திட்டத்தின்கீழ் தனக்கும் பணி வழங்கப்படும் என்கிற அதிகாரிகளின் உறுதியை நம்பித்தான் விளையாடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் சவீதா புனியா.
இந்தியாவுக்குப் பெருமை தேடித் தருபவர்களைக் கையேந்தி நிற்க வைக்கிறோமே, இது நியாயமாகப்படுகிறதா?
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/09/சாதனை-மகளிர்-2804279.html
2803605 தலையங்கம் நினைத்ததும்... நடந்ததும்...! ஆசிரியர் Wednesday, November 8, 2017 01:23 AM +0530 கடந்த ஆண்டு இதே நாள் மாலையில், சுனாமி தாக்கியதுபோல பாரதப் பிரதமரின் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாததாக்கப்பட்ட அறிவிப்பு வந்தது. ரூ.500, ரூ.1,000 செலாவணிகள் செல்லாததாக்கப்படுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஊழலை எதிர்கொள்வது, கள்ள நோட்டுகளை அழிப்பது, தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது, ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைப்பது, 
வரி வசூலை அதிகரிப்பது என்று ஐந்து குறிக்கோள்களை முன்வைத்தார். 
செலாவணி மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சரியாக ஓராண்டு கடந்துவிட்டது. இந்த ஓராண்டில் என்னென்ன இலக்குகளை முன்னிட்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அவை எந்த அளவுக்கு வெற்றி அடைந்திருக்கின்றன என்று பார்த்தால், இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட சாதனைகளைவிட வேதனைகள்தான் அதிகமாகக் காணப்படுகின்றன. 
2016 நவம்பர் 8-ஆம் தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை அன்று நள்ளிரவுக்குப் பிறகு செல்லாததாக்கப்பட்டபோது புழக்கத்தில் ரூ.15.44 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் இருந்தன. இவற்றில் ரூ.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.5 லட்சம் கோடி வரை வங்கிகளுக்கு திரும்பி வராது என்பதுதான் அரசின் நம்பிக்கையாக இருந்தது. உச்சநீதிமன்றத்திலேயே அரசின் தலைமை வழக்குரைஞர் இதைத் தெரிவித்தார். இந்தப் பணம் திரும்பி வராமல் போனால், கணக்கில் காட்டப்படாமல் புழக்கத்தில் இருக்கும் அந்த நோட்டுகள் வெற்றுக் காகிதங்களாக மாறும்போது, ரூபாயின் மதிப்பு அதிகரிப்பதுடன், பல்வேறு நலத்திட்டங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கும் என்பதுதான் எதிர்பார்ப்பு. 
ஆனால், கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை இந்திய ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வந்த செல்லாததாக்கப்பட்ட நோட்டுகள் ஏறத்தாழ 99%. அதாவது, அரசு எதிர்பார்த்ததுபோல் கணக்கில் வராமல் பதுக்கிவைக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழந்த வெற்றுத் தாள்களாகிவிடவில்லை. அவை வங்கிக் கணக்குகளுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டன.
இங்கே இன்னொரு கேள்வியும் எழுகிறது. ரூ.500, ரூ.1000 செல்லாததாக்கப்பட்ட நிலையில் 99% பணம் திரும்பி வருவது சாத்தியம்தானா? ஒரு மாத காலத்திற்கு செல்லாததாக்கப்பட்ட நோட்டுகளை வங்கிகள் மீண்டும் திரும்பப் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டால், வங்கிகளில் செலுத்தாமல் பலரும் வைத்திருக்கும் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டிருந்தால், 120% முதல் 130% வரைகூட செல்லாததாக்கப்பட்ட நோட்டுகள் திரும்பி வரக்கூடும். அது எப்படி சாத்தியம்? இதன் பின்னால் இருக்கும் மர்மம்தான் என்ன என்பது புரியவுமில்லை, அதை விளக்க இந்திய ரிசர்வ் வங்கியோ, மத்திய நிதி அமைச்சகமோ தயாராகவும் இல்லை.
வங்கி அட்டைகள் மூலமும், கடன் அட்டைகள் மூலமும் ரொக்கமில்லாப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பது என்கிற அரசின் முயற்சி வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. விவசாய கிராமப்புற நாடான இந்தியாவில் 78% பரிமாற்றங்கள் ரொக்கத்தில் நடைபெறுவதில் வியப்பொன்றும் இல்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே பெரும்பாலான பரிவர்த்தனைகள் ரொக்கத்தில்தான் நடைபெறுகின்றன எனும்போது, இந்தியாவில் அது எப்படி சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியே. 
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய நன்மை என்று சொன்னால், அவை வரி ஏய்ப்பு வசதிக்காக செயல்பட்டுக்கொண்டிருந்த நிழல் நிறுவனங்களை அடையாளம் கண்டதுதான். சுமார் 28,000 நிறுவனங்கள் 49 இந்திய வங்கிகளில் 50,000-க்கும் அதிகமான வங்கிக் கணக்குகளை உருவாக்கி செயல்பட்டு வந்தன. கணக்கில் வராத செல்லாததாக்கப்பட்ட பணம் இந்த வங்கிக் கணக்குகளின் மூலம் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனங்களின் உரிமமும் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டிருக்கின்றன. நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டைவிட இந்தாண்டு வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதும், வரி வருவாய் 18% அதிகரித்து ரூ.17.1 லட்சம் கோடியாகி இருக்கிறது என்பதும் ஆறுதல் என்றாலும், ஜி.டி.பி. வளர்ச்சி குறைந்திருப்பது பின்னடைவு. பல லட்சம் பேர் வேலையிழந்து இருப்பது, பல சிறு - குறு தொழில்கள் அழிந்திருப்பது, வளர்ச்சியின் அடையாளமான மனை வணிகம் முடங்கிக் கிடப்பது ஆகியவற்றை நிச்சயமாக சாதனைகள் என்று பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது.
இந்தியா முழுவதும் பொதுமக்கள் ரூ.2,000 பெறுவதற்காக வங்கிகளின் முன்னால் கால்கடுக்க வரிசையில் நின்றபோது, சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.35 கோடி, மகாராஷ்டிர மாநிலம் தாணேயில் தொழிலதிபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.4 கோடி, அஸ்ஸாம் தொழிலதிபரிடம் இருந்த ரூ.6 கோடி என்று கட்டுக்கட்டாக புதிய ரூ.2,000 நோட்டுகள் இந்தியாவின் பல பாகங்களிலும் பிடிபட்டனவே, அது எப்படி? ஊழலுக்கு எதிரான நடவடிக்கைதான் செலாவணி செல்லாததாக்கப்பட்டது என்பது உண்மையானால், இவர்களுக்கு எல்லாம் புதிய ரூ.2,000 நோட்டுகள் எப்படி, யாரால் கட்டுக்கட்டாக தரப்பட்டன என்பது ஏன் கண்டறியப்பட்டு அவர்கள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை?
நிர்வாக நடவடிக்கைகளால் ஊழலைத் கட்டுப்படுத்துவதையும், கருப்பப் பணத்தைக் கண்டுபிடிப்பதையும் விட்டுவிட்டு, மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டுக்குத் தீ வைத்த கதையாக, ஒட்டுமொத்த இந்தியாவையே இப்படி நிலைகுலைய வைத்திருக்க வேண்டாம். இதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாம் மீள இன்னும் பத்து ஆண்டுகளாகலாம்!

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/08/நினைத்ததும்-நடந்ததும்-2803605.html
2802944 தலையங்கம் ஆத்திரக்காரனுக்கு... ஆசிரியர் Tuesday, November 7, 2017 01:26 AM +0530 மக்களாட்சி நடைபெறும் சுதந்திர நாட்டில் விமர்சனங்கள் எழுவதை தடுத்துவிட முடியாது. சொல்லப்போனால், விவாதங்களும் விமர்சனங்களும்தான் மக்களாட்சி முறையை ஏனைய ஆட்சி முறைகளிலிருந்து வேறுபடுத்துகின்றன. விமர்சனங்களுக்கு வாய்ப்பூட்டுப்போட விழைவது என்பது விமர்சனத்துக்கு வலுசேர்க்குமே அல்லாமல், எதிர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாது என்பதுதான் அனுபவப்பூர்வ உண்மை.
அரசமைப்புச் சட்டப்பிரிவு 19, சுதந்திரமாக எந்தவொரு இந்தியக் குடிமகனும் கருத்துகளைத் தெரிவிக்கவும், வெளியிடவுமான உரிமையை வழங்கியிருக்கிறது. அத்துடன் நின்றுவிடாமல், 19(2) பிரிவில், அப்படி வழங்கப்பட்ட உரிமையை எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்பதற்கான நெறிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவதூறாக எழுதினாலோ, பேசினாலோ, கருத்துகளைப் பதிவு செய்தாலோ, இந்திய தண்டனைச் சட்டத்தில் 500, 501, 502 ஆகிய பிரிவுகளில் வழக்குத் தொடரவும், தண்டிக்கவும் வழிகோலப்பட்டுள்ளது. 
தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தது முதல், உலகிலுள்ள அனைத்துக் குப்பைகளும் வீட்டிற்குள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், செல்லிடப்பேசிகள் மூலமாகவும் வந்து குவிகின்றன. இதைத் தடுப்பதோ, கண்காணித்து முறைப்படுத்துவதோ, நெறிப்படுத்துவதோ சாத்தியமில்லை. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-த்தின் அடிப்படையில், சமூக வலைதளங்களான முகநூல், சுட்டுரை ஆகியவற்றில் தெரிவிக்கப்படும் தரக்குறைவான, ஆபாசமான கருத்துகளைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-த்தில், 2009-ஆம் ஆண்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சட்டத்தின் 66 ஏ பிரிவின்படி, சமூக வலைதளங்களான முகநூல், சுட்டுரை உள்ளிட்டவற்றில் கருத்துகள், விமர்சனங்கள் வெளியிடுவோரை கைது செய்து சிறையில் அடைக்க வழிவகுக்கப்பட்டது.
சட்டப்பிரிவு 66 ஏ, தனிமனித சுதந்திரம், பேச்சுரிமைக்கு எதிராக உள்ளதாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகள் தெளிவாக இல்லை என்றும் உச்சநீதிமன்றம் 2015-இல் அதை ரத்து செய்தது. இதேபோன்ற நோக்கமுள்ள ஏனைய சட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்கிற நடைமுறைப் பாதுகாப்பு சட்டப்பிரிவு 66 ஏ-யின் கீழ் இல்லாமல் இருந்தது அதற்கு மிக முக்கியமான காரணம். தன்னிச்சைப்படி நிர்வாக இயந்திரம் அரசியல் தலைமையின் விருப்பத்திற்கு இணங்க விமர்சனம் செய்பவர்கள் மீது மனம்போன போக்கில் நடவடிக்கை எடுத்துவிடக் கூடாது என்பதால்தான் அந்தச் சட்டம் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 ஏ பிரிவு அகற்றப்பட்டாலும்கூட, 67-ஆவது பிரிவைப் பயன்படுத்தி இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிரிவு 67-இன் நோக்கம் ஒருவரின் அந்தரங்க நிலையை, காமம் மிகுந்த, பாலுணர்வு தூண்டும்படியான, பதிவை பார்ப்பவர்களின் மனத்தை ஆபாசப்படுத்துகிற காட்சி அல்லது படங்களை வெளியிடுவதையும், பரிமாறிக் கொள்வதையும் தடுப்பது என்பதுதான். பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்புத் தரவும், அவர்களை ஆபாசமாக சித்திரிப்பதைத் தடுப்பதும், பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட சட்டப் பிரிவு இது.
குமுதம் வார இதழின் கேலிச்சித்திரக்காரராக முன்பு பணியாற்றிய கார்ட்டூனிஸ்ட் பாலா தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 67-இன் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். கந்துவட்டிக்காரர்களின் கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னால் தீக்குளித்து இறந்த சம்பவம் குறித்து, இவர் வரைந்த கேலிச்சித்திரம்தான் இவரைக் கைது செய்வதற்குக் காரணமாகக் கூறப்பட்டிருக்கிறது. குமுதம் வாசகர்களுக்கு மட்டுமே பரவலாகத் தெரிந்திருந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை இப்போது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தியிருக்கிறது இந்தக் கைது நடவடிக்கை. 
போதாக்குறைக்கு, அவர் தனது கேலிச்சித்திரத்தில் என்ன வரைந்திருந்தார் என்பதை தமிழகத்தின் முன்னணி ஆங்கில இதழ் ஒன்று தனது முதல் பக்கத்திலேயே விரிவாக விளக்கி, கேலிச்சித்திரத்தில் ஏற்படாத தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சிலர் மட்டுமே பார்த்திருந்த கேலிச்சித்திரத்தை அனைவரையும் பார்க்க வைத்த பெருமை புகார் அளித்த நெல்லை ஆட்சியரையும் கைது செய்த காவல்துறையினரையுமே சேரும்.
விமர்சனங்களை இரண்டு வகையாக அணுகலாம். ஒன்று, அவற்றைச் சட்டை செய்யாமல் இருப்பது. இரண்டாவது, உண்மைக்குப் புறம்பான, தவறான விமர்சனமாக இருந்தால், சரியான விளக்கத்தை அளித்து விமர்சனம் செய்தவரின் அறியாமையையோ, உள்நோக்கத்தையோ வெளிச்சம்போடுவது. 
யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் தரக்குறைவாக மேடை போட்டு முழங்க முடியும் என்கிற அரசியல் சூழலில், சட்டப்பிரிவு 67-ஐ பயன்படுத்தி முகநூல் கார்ட்டூன் ஒன்றுக்காக ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது என்பது கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறிவது போன்றது. சட்டை செய்யாமல் இருந்திருக்க வேண்டிய ஒரு சாதாரணப் பதிவின் மீது ஆத்திரமடைந்து, வலியப்போய் வம்பை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். 
அண்ணா ஒருமுறை கூறியதுபோல, 'வசைவாளர்கள் வாழ்க' என்று விமர்சனத்தை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் ஆட்சியில் இருப்பவர்களுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் இருக்க வேண்டும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனங்களை எதிர்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவுமான மனப்பக்குவம் உடையவர்களாக இருப்பது அவசியம்.
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/07/ஆத்திரக்காரனுக்கு-2802944.html
2802336 தலையங்கம் இப்போதே இப்படி என்றால்... ஆசிரியர் Monday, November 6, 2017 01:22 AM +0530 மழை வந்துவிட்டால், சென்னை மாநகரம் ஒரு மாநரகமாக மாறுவது என்பது ஆண்டுதோறும் தொடரும் அவலம். அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலையில், ஆழிப்பேரலை, தானே புயல், வார்தா புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்தால், அதில் நியாயமிருக்கிறது. ஆனால், ஆண்டுதோறும் சந்திக்கும் பருவமழையைக்கூட நம்மால் எதிர்கொள்ள முடியாமல் போவது என்பதை என்னவென்று சொல்வது?
சென்னை ஒரு கடலோர நகரம். இயற்கையாகவே வெள்ளம் வடிந்தோடும்படியான நகரமைப்பு, வங்கக் கடலை ஒட்டியுள்ள சென்னைக்கு உண்டு. போதாக்குறைக்கு சென்னை மாநகரம் வழியாக இரண்டு ஆறுகளும், பக்கிங்ஹாம் கால்வாயும் பாய்ந்தோடி கடலில் கலக்கின்றன. மழைநீர் உடனடியாக வெளியேறாமல் சாலைகளில் தேங்கி நிற்க வேண்டிய அவசியமே இல்லை. பிறகும் மழை வந்துவிட்டால், சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதக்கிறதே, ஏன்? 
முன்பே கூறியதுபோல, கூவம், அடையாறு என இரண்டு ஆறுகள் சென்னை மாநகரின் வழியாகப் பாய்ந்து கடலில் கலக்கின்றன. போதாக்குறைக்கு பக்கிங்ஹாம் கால்வாயும் வேறு இருக்கிறது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 16 கால்வாய்களும் சென்னை பெருநகர மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 30 கால்வாய்களும் இருக்கின்றன. இது போதாதென்று பல கழிவு நீர் ஓடைகளும், திட்டமிட்டு நிறுவப்பட்டிக்கும் மழைநீர், கழிவு நீர் கால்வாய்களும் இருக்கின்றன. 
மழைக்காலம் எப்போது வரும் என்பதும், பருவமழை எப்போது தொடங்கும் என்பதும் திடீர் நிகழ்வுகள் அல்ல. பருவமழைக்கு முன்னால், கால்வாய்களையும், கழிவுநீர் ஓடைகளையும் மழை நீர், கழிவு நீர் வடிகால்களைச் சுத்தம் செய்து அடைப்புகளை அகற்றித் தயார் நிலையில் வைத்திருப்பது என்பது நிர்வாகம் செய்திருக்க வேண்டிய முன்னேற்பாடு.
அடையாறும், கூவம் ஆறும் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் தினம்தோறும் மண் சேர்ந்து விடுகிறது. ஒவ்வொரு நாளும் முகத்துவாரத்திலிருந்து மணலை அகற்றி, கழிவு நீர் கடலில் கலப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒப்பந்தம் எடுப்பதில் மணல் ஒப்பந்ததாரர்களின் போட்டா போட்டியும், அவர்கள் முறையாக தினந்தோறும் மணலை அகற்றுகிறார்களா என்பதைப் பொறுப்புடன் உறுதிப்படுத்தாத அதிகாரவர்க்கத்தின் மெத்தனமும் கூவமும் அடையாறும் கடலில் கலப்பதை தடுத்து விடுகின்றன.
சென்னை பெருநகர மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் 30 கால்வாய்களிலும், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 16 கால்வாய்களிலும், அன்றாடம் தெருக்களில் சேரும் குப்பையை அகற்றுவதுபோல, தூர்வாரி சுத்தமாக பராமரித்திருந்தால், இப்படி தண்ணீர் தேங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. தெருவோர குப்பைகளை அகற்றுவதையேகூட முறையாகச் செய்யாத நிலையில், சாக்கடைக் கால்வாய்களை மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும் மூக்கைப் பொத்திக்கொண்டு செய்துவிடவா போகிறார்கள்?
சென்னையில் குடிநீர் வடிகால் வாரியத்தின் பங்களிப்பாக ஏறத்தாழ இரண்டு லட்சத்துக்கும் அதிமான கழிவு நீர் இணைப்புகள் உள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர், மழைநீர் வடிகால் குழாய்களில் விடப்படுகின்றன. கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் மீது கட்டடங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்பதற்கு இவையெல்லாம்கூடக் காரணம்.
சென்னை பெருநகர மாநகராட்சியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது, அவர்கள் நல்லவர்களோ - கெட்டவர்களோ, மக்களால் அவர்களைச் சந்தித்து முறையிட முடிந்தது. மண்டலக் குழுக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து, குறைந்தபட்சப் பணியையாவது அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். 
இப்போது சென்னை பெருநகர மாநகராட்சி 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஐந்து மண்டலங்களுக்கு ஒருவர் என மூன்று துணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆணையர் பதவியும், சிறப்பு அதிகாரி பதவியும் ஒரே நபரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சென்னைப் பெருநகர மாநகராட்சியின் எல்லை அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், மூன்று அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் செயல்படும்போது, நிர்வாகம் பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்யாமல் இருந்ததில் வியப்பே இல்லை.
1,200 கி.மீ. மழை நீர் வடிகால் குழாய்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இவை முறையாகக் கால்வாய்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதில் ஐயப்பாடு இருக்கிறது. மழை நீர் வடிகால் குழாய்களை அமைப்பது ஒரு துறை. அதை பராமரிப்பது இன்னொரு துறை. மழை நீர் வடிகால் குழாய்களைக் கழிவு நீர் குழாய்களை பராமரிப்பதுபோல, பராமரிக்க நிரந்தர ஊழியர்கள் கிடையாது. இதுபற்றி எல்லாம் முறையான, தெளிவான திட்டமிடல் இல்லாமல் போனதும்கூட, மழை வந்தால் சென்னை பெருநகர மாநகராட்சி மழையில் மிதப்பதற்கு முக்கியமான காரணம்.
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு பெருமழை வந்தபோது, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் ஆட்சியில், அதற்கு முன்னால் 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த 16 கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. அதற்குப் பிறகு கால்வாய்களை முறையாகத் தூர்வாரி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கான எந்த முனைப்பும், எந்த ஆட்சியிலும் எடுக்கப்படாததன் விளைவுதான், மழை வந்தால் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் அவலம். இப்போதுதான் பருவமழையே தொடங்கியிருக்கிறது...
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/06/இப்போதே-இப்படி-என்றால்-2802336.html
2801132 தலையங்கம் சீனாவும் தலாய் லாமாவும்! ஆசிரியர் Saturday, November 4, 2017 01:20 AM +0530 உலக நாடுகளின் தலைவர்கள், பௌத்தமத குருவும் நோபல் விருது பெற்ற சமாதானத் தூதுவருமான தலாய் லாமாவைச் சந்திப்பதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தலாய் லாமாவுடனான சந்திப்புகளைக் கடுமையான குற்றமாகக் கருதுவதாக சீனா தெரிவித்திருக்கிறது. அது தனிப்பட்ட முறையிலான சந்திப்பாக இருந்தாலும்கூட திபெத்திய ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவுடனான எந்த ஒரு சந்திப்பும் தனது நாட்டுக்கு எதிரான செயல் என்று சீன அரசு குறிப்பிடுகிறது.
சீனாவின் அறிவிப்பு புதிதொன்றுமல்ல. பல முறை சீனாவின் இதுபோன்ற அச்சுறுத்தல்களையும் அறிவிப்புகளையும் உலக நாடுகள் சட்டை செய்யாமல் புறக்கணித்திருக்கின்றன. ஆன்மிகத் தலைவர் ஒருவரைச் சந்திக்கக் கூடாது என்று சீனா தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 
யாரைச் சந்திப்பது? எங்கே, எப்போது சந்திப்பது என்பதெல்லாம் அந்தந்த நாட்டின் அரசாங்கங்களுக்கும் தனிப்பட்ட தலைவர்களுக்குமான விருப்பம். பிற நாடுகள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்றெல்லாம் கூறும் அதிகாரமோ, உரிமையோ சீனாவுக்குக் கிடையாது என்று சில நாடுகள் பகிரங்கமாகவே தெரிவித்திருக்கின்றன.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், அங்குள்ள பல்கலைக்கழகங்களிலிருந்தும் தங்களது நாட்டுக்கு வரும்படி தலாய் லாமாவுக்குத் தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு முறை தலாய் லாமா ஏதாவது ஒரு நாட்டிற்கு விஜயம் செய்யும்போதும், அந்த அழைப்புக்கும் தலாய் லாமாவுக்குத் தரப்படும் மரியாதைக்கும் சீனா கடும் கண்டனத்தை வெளிப்படுத்துகிறது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, திபெத்திய தலைவரான தலாய் லாமாவை நான்கு முறை சந்தித்திருக்கிறார். ஒவ்வொரு சந்திப்பின்போதும் சீனாவிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வெளிப்பட்டது. 
அதேபோல, கடந்த ஏப்ரல் மாதம் தலாய் லாமா இந்தியாவின் எல்லைப்புற மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் தவாங் மடாலயத்திற்கு விஜயம் செய்தபோது, இதேபோல சீனா வெகுண்டெழுந்தது. சீனாவால் தனது எல்லைக்குட்பட்ட பகுதி என்று சொந்தம் கொண்டாடப்படும் அருணாசலப் பிரதேசத்துக்கு தலாய் லாமா சென்றபோது, அது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான இரு நாட்டு உறவை கடுமையாகப் பாதிக்கும் என்றும், அதற்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கத் தயங்க மாட்டோம் என்றும் பெய்ஜிங் எச்சரித்தது.
கடந்த டிசம்பர் மாதம் ராஷ்டிரபதி பவனில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நோபல் விருது பெற்றவர்களுக்கு விருந்து ஒன்றை அளித்தார். அந்த விருந்துக்கு நோபல் விருது பெற்ற தலாய் லாமா அழைக்கப்பட்டதில் வியப்பொன்றுமில்லை. இது பொறுக்காத சீனா இந்தியாவுக்குத் தூதரக நிலையில் கண்டனத்தைத் தெரிவித்தது.
சீன எல்லையை ஒட்டியுள்ள நாடு மங்கோலியா. தலாய் லாமா அந்த நாட்டுக்குப் பயணம் செய்வதை மங்கோலிய அரசு அனுமதித்தது. இது சீனாவை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியது. மங்கோலியாவுக்குச் செல்லும் அத்துணை சாலைகளையும் முடக்கி, எந்த ஒரு பொருளையும் மங்கோலியாவுக்கு எடுத்துச்செல்ல முடியாமல் முடக்கிப்போட்டது சீனா. இதனால் மங்கோலியாவின் வர்த்தகம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி, வேறு வழியில்லாமல் சீனாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இனிமேல் தலாய் லாமாவை எந்தக் காரணம் கொண்டும் மங்கோலியாவுக்கு அழைக்கவோ, மங்கோலியாவுக்கு அவர் வருவதை அனுமதிக்கவோ மாட்டோம் என்று உறுதி அளித்த பிறகுதான் மங்கோலியா மீதான தடையை சீனா அகற்றியது.
தலாய் லாமா திபெத்திய மக்களால் தங்களது தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். பௌத்தர்களின் தலையாய மத குரு. திபெத்திய தலைநகரமான லாசாவில் அமைந்த திபெத் அரசுக்குத் தலைமை தாங்கியவர்கள் தலாய் லாமாக்கள்தான். சீனாவின் க்விங் வம்சத்தினரின் ஆட்சியின்போது முழு சுதந்திரத்துடனான நாடாக திபெத் திகழ்ந்தது. மாசே துங் தலைமையிலான மக்கள் புரட்சி வெடித்து, சீன மக்கள் குடியரசு ஆட்சியைக் கைப்பற்றியபோது, திபெத்தைத் தங்களது நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதியாக சீனா அறிவித்தது.
இப்போதைய 14-ஆவது தலாய் லாமா 1939-இல் இவருக்கு முந்தைய 13-ஆவது தலாய் லாமாவால் அடையாளம் காணப்பட்டு 1940-இல் திபெத்தின் தலைநகரமான லாசாவில் வாரிசாக அறிவிக்கப்பட்டார். சீனா திபெத்தை இணைத்துக்கொண்டபோது, 1950 நவம்பர் 17-ஆம் தேதி தனது 15-ஆவது வயதில் திபெத்தின் முழு அதிகாரத்தையும் தானே ஏற்றுக்கொள்வதாக அவர் அறிவித்தார். சீனாவின் தலையீடும் ஆக்கிரமிப்பும் நடந்ததைத் தொடர்ந்து 1959-இல், இப்போதிருக்கும் 14-ஆவது தலாய் லாமா இந்தியாவிடம் சரணடைந்தார். சொல்லப்போனால் 1962-இல் சீனா இந்தியாவின்மீது படையெடுப்பு நடத்துவதற்கு காரணமே இந்தியா தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்ததுதான். இத்தனைக்கும் இந்தியா, திபெத்தை சீனாவின் பகுதியாக அங்கீகரித்திருக்கிறது.
சீன அரசு தலாய் லாமாவை தீவிரவாதி என்றும், திபெத்தை சுதந்திர நாடாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறது. அவரை ஆன்மிகத் தீவிரவாதி என்றும், துறவியின் அங்கிக்குள் ஒளிந்திருக்கும் ஓநாய் என்றும் சீனா வர்ணிக்கிறது. சமாதானத் தூதுவரான தலாய் லாமாவைக் கண்டு சீனா ஏன் பயப்பட வேண்டும்?

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/04/சீனாவும்-தலாய்-லாமாவும்-2801132.html
2800521 தலையங்கம் வரவேற்புக்குரிய வரம்பு மீறல்! ஆசிரியர் Friday, November 3, 2017 01:29 AM +0530 நீதித்துறை எல்லாப் பிரச்னைகளிலும் மூக்கை நுழைத்துத் தலையிடுகிறது. நியாயமாகப் பார்த்தால் நீதித்துறையின் சில தலையீடுகள் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்க வேண்டும். அத்தனை அரசியல் கட்சிகளும் கொதித்தெழுந்து, "நீதித்துறை தனது வரம்பை மீறித் தலையிடுகிறது" என்று கூக்குரல் எழுப்பி இருக்க வேண்டும். ஆனால், அரசியல் கட்சிகளுக்கு நீதித்துறையின் வரம்பு மீறலைச் கூட்டிக்காட்டவோ, எதிர்த்துக் குரலெழுப்பவோ, தார்மிக ரீதியிலான பலம் இல்லாமல் போய்விட்டது என்பதால்தான் மெளனம் காக்கின்றன. 
பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும், ஊடகங்களும் நீதித்துறையின் வரம்புமீறல் குறித்து கருத்துத் தெரிவிக்காமல் இருப்பதற்கும் காரணம் இருக்கிறது. அரசியல்வாதிகளின் தரமற்ற போக்கும், அதிகரித்துவிட்டிருக்கும் அவர்களது ஊழலும், மக்களாட்சித் தத்துவத்தையே கேலிக்கூத்தாக்கும் அரசியல் நடைமுறைகளும் அவர்களை மெளனிகளாக்கி, வேடிக்கை பார்க்க வைத்திருக்கின்றன. தங்களது மனசாட்சியின் குரலாக நீதித்துறை கருத்துத் தெரிவிக்கும்போது, அந்த வரம்பு மீறல்களை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் அவர்களது மெளனத்திற்கான நியாயம்.
கடந்த புதன்கிழமை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா ஆகியோரின் அமர்வு, குற்றப்பின்னணி உள்ள அரசியல்வாதிகளுக்கு எதிராகத் தனது கவனத்தைத் திருப்பியிருக்கிறது. நாடு தழுவிய அளவில், அரசியல்வாதிகள் தொடர்பான கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க திட்டமொன்றை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அந்த அமர்வு குறிப்பிட்டிருக்கிறது. வருகிற டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் அந்தத் திட்டம் குறித்தான விவரங்களையும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தெரிவித்திருக்கிறது.
மாநிலங்களிடம் நிதியாதாரம் இருப்பதைப் பொருத்துத்தான் அதுபோன்ற சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க முடியும் என்கிற மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்ற அமர்வு ஏற்றுக்கொள்ளவில்லை. விரைவு நீதிமன்றங்களைப்போல, மத்திய அரசே தன்னுடைய சொந்தச் செலவில் திட்டத்தை அறிவித்து, சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. மேலும், மாநில அரசுகளுடன் நீதித்துறையே நேரிடையாகத் தொடர்பு கொண்டு அரசியல்வாதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதிகள், அரசு வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், அதற்குத் தேவையான மனிதவளம், கட்டமைப்பு வசதி ஆகியவற்றை தீர்மானிக்கும் என்றும் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா அமர்வு தெரிவித்திருக்கிறது.
2014 பொதுத்தேர்தலின்போது, 1,581 நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் மீது கிரிமினல் வழக்குகள் காணப்பட்டன. 2014 மார்ச் 10-ஆம் தேதி அந்த வழக்குகளின் விசாரணை அனைத்தும் ஓர் ஆண்டுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அந்த வழக்குகளின் நிலை என்ன, எத்தனை வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த விவரங்களை, டிசம்பர் 13-ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும்போது தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.
2013 ஜூலையில், லில்லி தாமஸ் வழக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டால், உடனடியாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு முன்னால், தண்டிக்கப்பட்ட உறுப்பினருக்கு மேல்முறையீடு செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த 90 நாள் அவகாசத்தை அந்த வழக்கில் ரத்து செய்து உத்தரவிட்டது நீதித்துறை. கடந்த மார்ச் 2014-இல் பப்ளிக் இந்தியா பவுன்டேஷன் வழக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளை ஓர் ஆண்டுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் காலவரம்பு நிர்ணயித்தது.
தற்போதைய 16-ஆவது மக்களவையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. 2004-க்குப் பிறகு கிரிமினல் குற்றங்களுக்காக வழக்குகளை எதிர்கொள்ளும் மிக அதிகமான உறுப்பினர்கள் காணப்படுவது இப்போதைய நாடாளுமன்றத்தில்தான். 2013-இல் உச்சநீதிமன்றம், கிரிமினல் குற்றச்சாட்டுள்ளவர்கள் அரசுப் பதவிகளில் தொடருவதோ, சட்டமியற்றும் பொறுப்பில் இருப்பதோ மிகப்பெரிய ஜனநாயக முரண் என்று கூறி, அவர்களுக்கு மேல்முறையீடு செய்யத் தரப்பட்டிருந்த கால அவகாசத்தை மறுத்தது. 
நமது அரசியல் கட்சிகளுக்கு மக்கள் நலமும், நேர்மையும் இருக்குமேயானால், குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்பளித்திருக்க மாட்டார்கள். அரசியல் கட்சிகளின் ஆதரவுடன்தான் ஊழல் பேர்வழிகளும், குற்றப்பின்னணி உள்ளவர்களும் அரசியலில் வலம் வரவும், ஆட்சி அதிகாரத்தில் அமரவும் முடிகிறது என்பது உலகறிந்த உண்மை. 
அரசியல்வாதிகள் தங்களுக்குத் தாங்களே சுய கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டிருந்தாலோ, ஆட்சியில் இருப்பவர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான உறுப்பினர்களின் வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்க சிறப்பு நீதிமன்றங்களோ, விசாரணை ஆணையங்களோ அமைத்திருந்தாலோ அவர்களது அதிகார வரம்பிற்குள் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட வேண்டிய சூழல் எழுந்திருக்காது.
இதற்காகத்தான் லோக் பால், லோக் ஆயுக்தா அமைப்புகள் வேண்டும் என்று நாடு தழுவிய அளவில் மக்கள் கொதித்தெழுந்தார்கள். அப்படியும் அசைந்து கொடுக்காத அரசியல்வாதிகளுக்கு எதிராக நீதிமன்றம் வரம்பு மீறியிருப்பது, வரவேற்புக்குரியது.

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/03/வரவேற்புக்குரிய-வரம்பு-மீறல்-2800521.html
2799924 தலையங்கம் மீண்டும் ஷின்சோ அபே! ஆசிரியர் Thursday, November 2, 2017 01:02 AM +0530 தனது பதவிக்காலம் முடிய இன்னும் ஓர் ஆண்டு இருக்கும்போதே பிரதமர் ஷின்சோ அபே, 'டயட்' எனப்படும் ஜப்பானிய நாடாளுமன்றத்தின் மக்களவையைக் கலைத்துத் தேர்தலைச் சந்திக்க முடிவெடுத்தது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. டோக்கியோ மாநில ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த முதல் பெண்மணியான யூரிகோ கொய்கேயின் அதிகரித்து வரும் மக்கள் செல்வாக்கு ஆளுங்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.
முன்னாள் தொலைக்காட்சித் தொகுப்பாளரான யூரிகோ கொய்கே, 2006-07இல் பிரமதர் ஷின்சோ அபேயின் முதலாவது அமைச்சரவையில் சிறிது காலம் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். கடந்த ஆண்டு உள்ளூர் அரசியல் கட்சி ஒன்றை அறிவித்து, டோக்கியோ மாநாகர சட்டப்பேரவைக்கு ஜூலையில் நடந்த தேர்தலில், ஆளுங்கட்சியைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தவர். 
யூரிகோ கொய்கே தனது வளர்ச்சியின் அடுத்தகட்டமாக, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் புதியதாக 'நம்பிக்கைக் கட்சி'யை அறிவித்து, ஜப்பானின் மக்களவைக்கான அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட முற்பட்டார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 2014 மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் களம் இறங்கியதுபோல...
யூரிகோ கொய்கே, பிரதமர் ஷின்சோ அபேக்கு எதிராகக் களம் இறங்கியபோது, ஷின்சோ அபேயின் லிபரல் டெமாக்ரடிக் கட்சியைவிட அதிகமாக பாதிக்கப்பட்டது, அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான டெமாக்ரடிக் கட்சிதான். ஏற்கெனவே உட்கட்சி குழப்பத்தில் ஆழ்ந்த டெமாக்ரடிக் கட்சி, ஒரு கட்டத்தில் யூரிகோ கொய்கேயின் நம்பிக்கைக் கட்சிச் சின்னத்தில் போட்டியிடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு பலவீனப்பட்டிருந்தது. மும்முனைப் போட்டி உறுதியானபோதே பிரதமர் ஷின்சோ அபேயின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. 
கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி நடந்த ஜப்பான் மக்களவைத் தேர்தலில், ஷின்சோ அபேயின் தலைமையிலான ஆளும் கூட்டணி 465 இடங்களைக் கொண்ட ஜப்பான் மக்களவையில் 313 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. மூன்றாவது முறையாக ஷின்சோ அபே பிரதமராகியுள்ளார். அபேயின் லிபரல் டெமாக்ரடிக் கட்சி 284 இடங்களிலும் கூட்டணி கட்சியான கொமிடோ 29 இடங்களையும் வென்றன.
அதிகாரத்தின் மீதான தனது பிடியை மக்களவை வெற்றியின் மூலம் மேலும் பலப்படுத்திக் கொண்டிருக்கிறார் பிரதமர் ஷின்சோ அபே. அவர் மீதான தனிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அவரது செல்வாக்கை எள்ளளவும் பாதிக்கவில்லை என்பதைத் தேர்தல் வெற்றி நிரூபிக்கிறது. 2018-இல் நடைபெற இருக்கும் லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தலைமைக்கான தேர்தலில், மூன்றாவது முறை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதும், 2021 செப்டம்பரில் தனது தலைமையை உறுதிப்படுத்திக் கொள்வதும் சாத்தியமாகியிருக்கிறது.
பிரதமர் ஷின்சோ அபேயின் அரசு ஜப்பானின் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதில்தான் முனைப்புக் காட்டும். இப்போதைய அரசமைப்புச் சட்டத்தின்படி, ஜப்பான் முழுமையான ராணுவத்தை ஏற்படுத்திக் கொள்வதையோ, இன்னொரு நாட்டுடன் போரில் ஈடுபடுவதையோ தடை செய்கிறது. 
ஜப்பான், இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டதன் விளைவால், ஹிரோஷிமா - நாகசாகியில் அணுகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அது, அந்த தேசத்தையே உலுக்கிவிட்டிருந்தது. இனிவரும் காலத்தில் எந்த ஒரு ஜப்பான் தலைமையும் அதுபோல நாட்டைப் போரில் ஈடுபடுத்திவிடக் கூடாது, வலியப்போய் ஆபத்துகளை விலைக்கு வாங்கக் கூடாது என்பதற்காக, அமெரிக்காவின் வற்புறுத்தலால், ராணுவத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும், போரில் ஈடுபடுவதற்கும் அரசியல் சட்டம் தடையை ஏற்படுத்தியது.
அரசமைப்புச் சட்டத்தின் 9-ஆவது பிரிவில் திருத்தத்தை ஏற்படுத்தி ஜப்பான் தற்காப்புக்கு ராணுவத்தை ஏற்படுத்திக் கொள்வதை அனுமதிப்பது என்பதுதான் பிரதமர் ஷின்சோ அபே நீண்ட நாளாக வலியுறுத்திவரும் வாதம். நாடாளுமன்றத்தில், அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு முந்தைய ஆட்சியில் இருந்தும்கூட, அதை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு வேறு பல தேசிய பிரச்னைகள் காரணமாக அமைந்தன. இரண்டாம் உலகப்போரின் எதிர்மறை மனநிலையிலிருந்து ஜப்பானிய மக்களை மீட்டெடுப்பதும்கூட அவருக்கு அவசியமாக இருந்தது.
தன்னைச் சுற்றி வரலாற்று ரீதியான விரோதம் கொண்டுள்ள சீனாவை எதிர்கொண்டாக வேண்டிய நிலையில், உலகத்தின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றான ஜப்பான் தனக்கென்று ராணுவம் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலவீனம். இதுவரை தனது பாதுகாப்புக்கு அமெரிக்காவை நம்பி இருந்த ஜப்பான், இப்போது அதிபர் டிரம்பின் வரவால் பாதிக்கப்பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு வடகொரியா சமீபகாலமாக அணுஆயுத சோதனையில் இறங்கியிருப்பது ஜப்பானுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. இவையெல்லாம் ஷின்சோ அபே அரசியல் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தத் தூண்டுகின்றன.
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் ஜப்பான் மும்முரமாகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஷின்சோ அபே மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவி ஏற்கிறார். பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட முறையில் மிக நெருக்கமான உறவை வைத்துக்கொண்டிருக்கும் பிரதமர் ஷின்சோ அபேயின் வெற்றி, இந்திய - ஜப்பான் உறவுக்கு மேலும் வலுசேர்க்கும்!
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/02/மீண்டும்-ஷின்சோ-அபே-2799924.html
2799210 தலையங்கம் ஹார்வர்டில் தமிழ் இருக்கை! ஆசிரியர் Wednesday, November 1, 2017 05:24 AM +0530 இன்று தமிழும் தமிழ் இனமும் பூமிப்பந்தில் இல்லாத இடம் இல்லை எனும் அளவுக்கு விரிந்து பரந்து இருக்கிறது. இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக கடந்த நூற்றாண்டில் நடத்தப்பட்ட தாக்குதலால் உலகின் பல்வேறு நாடுகளுக்கு அவர்கள் புலம்பெயர்ந்ததன் விளைவாகத் தமிழும் அங்கெல்லாம் தடம் பதிக்கத் தொடங்கியது. தகவல் தொழில்நுட்பப் புரட்சி, தாய்த் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கில் இளைஞர்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு நீண்ட நாட்களாகவே ஒரு குறை இருந்துவருகிறது. உலகப் புகழ் பெற்ற 380 ஆண்டு வரலாறு உள்ள உலகின் தொன்மையான கல்விச்சாலையில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு என்று ஓர் இருக்கை இல்லையே என்பதுதான் அது. உலகச் செம்மொழிகளான சம்ஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், எபிரேயம் (ஹீப்ரூ), மான்டிரின் (சீனம்), பாரஸீகம், தமிழ் ஆகியவற்றில் தமிழைத் தவிர ஏனைய ஆறு மொழிகளுக்கும் அங்கே இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலம் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டுமென்றால், 60 லட்சம் டாலர், அதாவது ஏறத்தாழ ரூ.39 கோடி அந்தப் பல்கலைக்கழகத்தில் ஆதாரத்தொகையாக கட்ட வேண்டும் என்று அந்தப் பல்கலைக்கழகம் கேட்கிறது. ஏனைய ஆறு உலக செம்மொழிகளுக்கு இதுபோல ஆதாரத்தொகை கோரப்பட்டதா, அது யாரால் வழங்கப்பட்டது என்பது குறித்தெல்லாம் முழுமையான விவரங்கள் தெரியவில்லை. அது குறித்து நாம் கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை. 
தமிழ் மீது தாளாப் பற்றுக்கொண்ட இதய நோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜானகிராமன், புற்றுநோய் சிகிச்சை நிபுணர் திருஞானசம்பந்தம், பேராசிரியர் மு. ஆறுமுகம், தொழிலதிபர் பால்பாண்டியன் உள்ளிட்ட பலர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைக்கப்பட்டாக வேண்டும் என்கிற முயற்சியில் பேராசிரியர் வைதேகி ஹெர்பட்டின் அடிச்சுவட்டில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கிறார்கள். 
கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு என்று தனி இருக்கை ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். வரும் ஜூன் மாதத்திற்குள் இருக்கை தொடங்குவதற்கான ஆதாரத் தொகையைக் கட்டியாக வேண்டும் என்கிற நிலையில், இப்போது தமிழக அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். 
சில பின்னணிகளை நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவிக்கப்பட்டபோது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் வேண்டுமென்றும், அதற்கு அந்த நிறுவனம் ஆவன செய்யும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதுவரை ஓர் இருக்கைகூட அவ்வாறு அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. 
தமிழகத்தில் ஏற்கெனவே இருக்கும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ் வளர்ச்சித்துறை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ்ச் சங்கம், இவை எல்லாவற்றுக்கும் மேலாக, எப்போதாவது ஒருமுறை கூட்டப்படும் உலகத் தமிழ் மாநாடுகள் ஆகியவை எல்லாம் செய்யாத ஆய்வுகளையா ஹார்வர்டு பல்கலைக்கழகம் செய்துவிடப் போகிறது என்கிற கேள்வி எழாமல் இல்லை.
சாதாரணமாக இருக்கைகளை அந்தந்த மொழியைச் சேர்ந்தவர்கள் பல்கலைக்கழகங்களில் அமைப்பதில்லை. மொழியின் சிறப்பையும் பெருமைகளையும் உணர்ந்து வேற்று நாட்டவர்களும் வேற்று மொழியினரும் அந்த மொழிக்கான இருக்கைகளை அவர்களது பல்கலைக்கழகங்களில் அமைப்பதுதான் வழக்கம். இந்தியாவிலேயே எடுத்துக்கொண்டாலும்கூட, அண்டை மாநிலங்களிலுள்ள கேரள, கர்நாடக, ஆந்திர பல்கலைக்கழகங்களிலும், தில்லியிலுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் தமிழுக்கு இருக்கை இருக்கிறது. 
தமிழ் குறித்து நமக்குள்ளே பழம்பெருமை பேசுகிறோமே தவிர, உலகளாவிய அளவில் ஏனைய செம்மொழிகள் குறித்துத் தெரிந்திருப்பதுபோலத் தமிழையும் தெரியவைக்க நாம் தவறிவிட்டதால்தான் இப்போது ஆதாரத்தொகை வழங்கி ஹார்வர்டில் இருக்கை அமைக்க வேண்டிய நிலைக்குத் தமிழ் தள்ளப்பட்டிருக்கிறது.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டிருக்கும் சில ஆய்வுகள் சம்ஸ்கிருதத்திலிருந்து பிறந்த மொழி தமிழ் என்றும், தமிழின் தொன்மை இலக்கண நூலான தொல்காப்பியம், சம்ஸ்கிருதத்தில் பாணினி எழுதியிருக்கும் இலக்கண நூலிலிருந்து உருவானது என்றும் தெரிவிக்கின்றன. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று ஓர் இருக்கை இருந்திருக்குமேயானால், இப்படி ஓர் ஆய்வு அப்போதே, அங்கேயே மறுக்கப்பட்டிருக்கும். எதிர்வினை எழுந்திருக்கும். ஆதாரத் தொகையை வழங்கியாவது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென இருக்கை அமைக்க வேண்டும் என்பதற்கு இதுதான் காரணம்.
தமிழக அரசு ரூ.10 கோடி வழங்கியிருக்கிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இதற்கு நிதி வழங்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ், தமிழ் என்று முழங்கிப் பதவிக்கு வந்து, அரைநூற்றாண்டு காலமாக ஆட்சி அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தின், தமிழ் உணர்வுள்ள முன்னணி கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் ரூ.40 கோடி என்பது சில்லறைப் பணம். தங்கள் கட்சியின் சார்பில் இவர்கள் இதற்குள் முழுப்பணத்தையும் தந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைத்துத் தங்களது தமிழ் உணர்வை மெய்ப்பித்திருக்க வேண்டாமா?
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/nov/01/ஹார்வர்டில்-தமிழ்-இருக்கை-2799210.html
2798875 தலையங்கம் நம்மை குப்பையாக்குகிறது குப்பை! ஆசிரியர் Tuesday, October 31, 2017 02:20 AM +0530 தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், நகர்ப்புற ஊட்டச்சத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வாழும் இந்தியர்களின் உடல் நலம் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையும், என்ன காரணத்தால் நகர்ப்புற இந்தியர்கள் ஆரோக்கியம் இல்லாமல் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் இந்த அறிக்கை வெளிச்சம் போடுகிறது.
 16 மாநிலங்களில் உள்ள வெவ்வேறு நகரங்களில் வாழும் 52,577 குடும்பங்களைச் சேர்ந்த 1,72,000 பேரைக் குறித்த எல்லா புள்ளிவிவரங்களையும், அவர்கள் உடல் ஆரோக்கியம் குறித்த தகவல்களையும் அந்த ஆய்வுக்காகத் துல்லியமாகத் திரட்டியிருக்கிறார்கள். பணக்காரர்கள், உயர் மத்திய வகுப்பினர், நடுத்தர வகுப்பினர், குடிசை அல்லது வீடுகளில் வாழும் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள், சொந்த வீடோ முகவரியோ இல்லாமல் வாழும் தெருவோரவாசிகள் என்று எல்லா தரப்பினரும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
 நடுத்தர வகுப்பினர், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் என்று இரண்டு பிரிவாக அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது. பொருளாதார ரீதியான மேம்பாடு, உலகமயமாக்கலின் தாக்கம் ஆகியவை மத்தியதர வகுப்பினரை மிக அதிகமாக பாதித்திருப்பதால் இவர்களது உணவுப் பழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக, உடல் நலம் பேணல் என்பது புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
 ரத்த அழுத்தம், நீரிழிவு, நுரையீரல் பாதிப்பு, குடல் புண் ஆகியவற்றால் மத்தியதரக் குடும்பத்தினர் பாதிக்கப்படுவது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இதற்கு மிகமுக்கியமான காரணிகளாக ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உடல் நலத்தைப் பாதிக்கும் உணவுப் பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இரவில் நீண்ட நேரம் கண் விழித்து வேலை பார்ப்பது, ஆங்காங்கே கிடைக்கும் குப்பை உணவுகளை அதிகமாக விரும்பி உண்பது, கோக கோலா, பெப்சி உள்ளிட்ட பானங்களை அருந்துவது ஆகியவை நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் அதிகரித்திருப்பதுதான் அதற்குக் காரணம் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
 குப்பை உணவுகள் என்று குறிப்பிடப்படுபவை பரவலாக ஆங்காங்கே விற்பனை செய்யப்படும் பர்கர், பீட்சா, நூடுல்ஸ் உள்ளிட்டவை மட்டுமல்ல, துரித உணவுகள் என்கிற பெயரில் விற்பனையாகும் எல்லா பொருள்களுமே இதில் அடக்கம். அதற்குக் காரணம் அந்த உணவுகளில் எல்லாம் அதிகமானகொழுப்புச் சத்து காணப்படுவதும், உடல் நலத்துக்கு தேவையான புரதச்சத்து குறைவாக இருப்பதும்தான்.
 அதேபோல, துரித உணவுகள் பெரும்பாலும் மாமிச உணவாக இருப்பதாலும், அவை எண்ணெயில் பொறிக்கப்பட்டவையாக இருப்பதாலும், அளவுக்கு அதிகமான உப்பு சேர்க்கப்படுவதாலும், உடல் நலத்துக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதுபோன்ற உணவுடன் அதிகமான சர்க்கரை சேர்க்கப்படும் குளிர்பானங்களையும் அருந்துவதால் உடல் நலத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
 நகர்ப்புற வாழ் இந்தியர்கள் அளவுக்கு அதிகமான எடையுடன் காணப்படுவதற்கு இவையெல்லாம் காரணங்கள் என்கிறது அந்த அறிக்கை. இந்த உணவுகள் அனைத்துமே ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நேரடிக் காரணிகளாக அமைகின்றன. போதுமான உடற்பயிற்சி இருக்குமேயானால், இந்த குப்பை உணவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறைவதற்கு வாய்ப்புண்டு. ஆனால், நகர்ப்புற வாழ் மத்தியதர வகுப்பினர் அதிக தூரம் தங்கள் பணியிடத்துக்கு பயணிக்க வேண்டி இருப்பதால் உடற்பயிற்சிக்கு அவர்கள் விரும்பினாலும்கூட, நேரம் ஒதுக்க முடியாத சூழல் காணப்படுகிறது.
 அந்த அறிக்கையின்படி, இந்தியாவிலேயே மிக அதிகமான அளவில் ரத்த அழுத்தம் (31% - 39%), நீரிழிவு (42%) காணப்படும் மாநிலங்கள் கேரளாவும், புதுச்சேரியும். இந்த இரண்டு மாநிலங்களிலும் மாமிச உணவு அன்றாட உணவுப் பழக்கமாக இருப்பதும், மது அருந்தும் பழக்கம் அதிகமாகக் காணப்படுவதும், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் ரத்த அழுத்தமும், நீரிழிவும் காணப்படுவதற்கு காரணிகளாக இருக்கக்கூடும் என்கிறது அந்த அறிக்கை. புதுச்சேரியை எடுத்துக்கொண்டால் 60% மகளிரும், 42% ஆண்களும் தேவையைவிட மிக அதிகமான எடையுடன் காணப்படுகிறார்கள்.
 மாமிச உணவை தினசரி உணவுப் பழக்கமாக்கிக் கொண்டிருப்பதுடன் குழந்தைகளையும் அதேபோல தினசரி மாமிச பழக்கத்துக்கு பழக்கப்படுத்துவது மிகப்பெரிய உடல்நலக் கேட்டை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்பது குறித்து பெற்றோர் கவலைப்படுவதில்லை. போதாக்குறைக்கு உணவு விடுதிகளுக்கு அவர்களை அழைத்துச்சென்று குப்பை உணவுகளையும் கேக், பாஸ்தா, பீட்சா, ஐஸ்கிரீம் உள்ளிட்டவையும் வாங்கிக் கொடுப்பதை பெற்றோர் பெருமிதமாகக் கருதுகிறார்கள். இதன்விளைவாகக் குழந்தைகள் இளம் வயதிலேயே உடல் பருமனுடனும் ரத்த அழுத்தத்துடனும் காணப்படுகிறார்கள். நடுத்தர வயதை எட்டுவதற்கு முன்னால் இன்றைய பல இளைஞர்களுக்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
 புத்திசாலித்தனமும் திறமையும் உள்ள இளைஞர் கூட்டம் இந்தியாவில் உருவாகிறது என்பதில் மட்டுமே பெருமையில்லை, ஆரோக்கியமானவர்களாகவும் அவர்கள் இருந்தால் மட்டுமே, வீட்டுக்கும் நாட்டுக்கும் அவர்களால் நன்மை!
 
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/31/நம்மை-குப்பையாக்குகிறது-குப்பை-2798875.html
2798214 தலையங்கம் பாரதியத்துக்கு இழுக்கு! ஆசிரியர் Monday, October 30, 2017 03:52 AM +0530 உத்தரப் பிரதேசத்திலுள்ள சர்வதேச கலாசாரச் சின்னமான பதேபூர் சிக்ரிக்கு சுற்றுலா வந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதி தாக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்த அந்த சுவிஸ் தம்பதி ஆக்ராவுக்கு சென்றிருக்கிறார்கள். தாஜ்மஹாலைப் பார்த்துவிட்டு ஆக்ராவை அடுத்துள்ள பதேபூர் சிக்ரி சென்ற அவர்களை சில இளைஞர்கள் புகைப்படம் எடுக்க முற்பட்டனர். தங்களைப் புகைப்படம் எடுப்பதை விரும்பாத சுவிஸ் தம்பதியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள், எலும்புகள் முறியும் அளவுக்கு அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னால், அதை என்னவென்பது?
 பதேபூர் சிக்ரி ஒரு மிக முக்கியமான, வரலாற்றுச் சின்னம். உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டத்தில் அமைந்திருக்கும், மொகலாய சக்கரவர்த்தி அக்பரால் எழுப்பப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னத்துக்கு, தாஜ்மஹாலை பார்க்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தவறாமல் விஜயம் செய்வார்கள்.
 ஆக்ராவிலிருந்து 39 கி.மீ. தொலைவிலுள்ள பதேபூர் சிக்ரி நகரம், 1569-இல் எழுப்பப்பட்டு 1571 முதல் 1585 வரை மொகலாய சாம்ராஜ்யத்தின் தலைநகராகத் திகழ்ந்தது. சித்தூர், ரத்தன்போர் ஆகிய இடங்களைக் கைப்பற்றியதன் வெற்றிச் சின்னமாக ஒரு புதிய தலைநகரை உருவாக்க விரும்பிய அக்பர், ஆக்ராவிலிருந்து பதேபூர் சிக்ரிக்குத் தனது தலைநகரை மாற்றினார். பதேபூர் சிக்ரி என்கிற இடத்தில் அக்பரின் வழிகாட்டியான சுஃபி மகான் சலிம் சிஷ்டியின் நினைவாக அந்தத் தலைநகர் அமைக்கப்பட்டதால், அதற்கு பதேபூர் சிக்ரி என்று பெயர் சூட்டப்பட்டது. அக்பரின் காலத்திற்குப் பிறகு பதேபூர் சிக்ரி புறக்கணிக்கப்பட்டது.
 கடந்த பல ஆண்டுகளாகவே பதேபூர் சிக்ரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வழிகாட்டிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இளைஞர்களும், தெருவோர வியாபாரிகளும் சூழ்ந்து கொள்வதும், அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதும் வழக்கமாக இருந்து வரு
 கிறது. யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக கலாசாரச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பதேபூர் சிக்ரிக்கும் வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் இந்த இளைஞர்களின் இலக்கு.
 பதேபூர் சிக்ரி நகருக்குள் நுழையும்போதே, அங்கே கூட்டம் கூட்டமாக அங்கீகாரம் பெறாத வழிகாட்டிகள் வாகனங்களைச் சூழ்ந்துகொள்கிறார்கள். கையை ஆட்டியும், வாகனங்கள் நிற்காவிட்டால் அதன் முன்னால் போய் நின்று தடுத்தும் நிறுத்துகிறார்கள். தங்கள் உதவி இல்லாமல் பதேபூருக்குள் நுழைந்தால் வாகனங்களை நிறுத்துவதிலும், பதேபூர் சிக்ரியை அடைவதிலும் பிரச்னைகள் உண்டு என்று அச்சுறுத்துகிறார்கள்.
 சமீபத்தில் பதேபூர் சிக்ரிக்கு விஜயம் செய்த அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் தனது முகநூலில், அங்கே தனக்கு நேர்ந்த பிரச்னைகளையும் அச்சுறுத்தல்களையும் விவரமாகப் பதிவு செய்திருக்கிறார். பதேபூர் சிக்ரியில் நுழைந்த சில நிமிடங்களில் தனது வாகனத்தை, மோட்டார் சைக்கிளில் சில இளைஞர்கள் துரத்தி வந்ததாகவும், வாகனத்தின் கண்ணாடியை இறக்கும்படி வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவிக்கிறார். அவர்களிடம் தங்களுக்கு வழிகாட்டி யாரும் தேவையில்லை என்று தெரிவித்தும்கூட விடாப்பிடியாக வற்புறுத்திப் பணம் பிடுங்கிய பிறகுதான் வாகனத்தைத் தொடர்ந்து செல்ல அனுமதித்தாக கூறுகிறது அவரது பதிவு.
 ஆக்ராவில் அதிகாரபூர்வமற்ற வழிகாட்டிகளை "லப்கஸ்' என்று அழைக்கிறார்கள். சுற்றுலாப் பயணி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களுக்குப் பணம் கொடுத்தாக வேண்டும். லப்கஸ் என்பவர்கள் இருபது வயதுக்குக் கீழேயுள்ள இளைஞர்கள். வழிகாட்டுகிறோம் என்கிற பெயரில் அங்கிருக்கும் கடைகளில் அதிக விலைக்குப் பொருள்களை வாங்கப் பயணிகள் இவர்களால் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
 பதேபூர் சிக்ரியில் இருக்கும் ஜாமா மஸ்ஜித்தில் சுற்றுலாப் பயணிகளின் அனுபவம், அதிலும் வெளிநாட்டவராக இருந்தால், இன்னும் மோசம். அங்கிருக்கும் ஷேக் சலிம் சிஷ்டி என்கிற சுஃபியின் தர்காவில் நுழையும்போதே, தங்களை தர்கா ஊழியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் சுற்றிவளைத்துப் பணம் பிடுங்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதில் சில வழிகாட்டிகள் 10 வயது, 11 வயது சிறுவர்கள் என்பதுதான் வேடிக்கை. இவர்களும் தரக்குறைவாகவும், முரட்டுத்தனமாகவும் வெளிநாட்டுப் பயணிகளிடம் நடந்துகொள்வதுதான் வாடிக்கை.
 2016-இல் இந்தியாவுக்கு 88 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்திருக்கிறார்கள். அவர்கள் மூலம் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் அந்நியச் செலாவணி ரூ.1.5 லட்சம் கோடி. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரையாண்டில் 49 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு ரூ.87,096 கோடி அந்நியச் செலாவணியை வழங்கியிருக்கிறார்கள். இது கடந்த ஆண்டின் முதல் அரையாண்டைவிட 22.3% அதிகம்.
 பதேபூர் சிக்ரியில் சுவிஸ் தம்பதிக்கு நடந்ததைப்போல் இந்தியாவின் வேறு பல பாகங்களிலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன, நடந்துவருகின்றன. பாலியல் வன்முறைகூட இதில் அடக்கம். அதனால்தான் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத நாடு என்று வெளிநாட்டினர் பலர் இந்தியாவைக் குறிப்பிடுகின்றனர். விருந்தினர்களை வரவேற்பது இந்தியாவின் பொதுக்கலாசாரமாகக் கூறி பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம், நமது தேசத்தின் பெருமைகளையும் வரலாற்றுச் சுவடு
 களையும் தெரிந்து கொள்ள வரும் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்காக தலைகுனிய வேண்டும்!

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/30/பாரதியத்துக்கு-இழுக்கு-2798214.html
2796997 தலையங்கம் வலியுறுத்துதல் கூடாது! ஆசிரியர் Saturday, October 28, 2017 01:40 AM +0530 ஆதார் எண் இருந்தால் மட்டுமே மானியங்களையும், சலுகைகளையும், சேவைகளையும் மத்திய - மாநில அரசுகள் வழங்கும் என்று ஆதார் சட்டத்தின் 7-ஆவது பிரிவு கூறுகிறது. அதே நேரத்தில் ஆதார் எண் பெறாதவர்கள் வாக்காளர் அடையாள எண், வருமானவரி எண் உள்ளிட்ட அடையாளங்களின் மூலம் ஆதார் எண்ணைப் பெறுவது வரை, மானியங்களையும் சலுகைகளையும் பெறலாம் என்றும் அந்த சட்டம் கூறுகிறது. அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்டிருக்கும் வழக்கு, வருகிற அக்டோபர் 30-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அரசியல்சாசன அமர்வுக்கு முன்னால் விசாரணைக்கு வருகிறது. 
தேவையில்லாமல் ஆதார் எண் எல்லாவற்றுக்கும் வலியுறுத்தப்படுகிறது என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. அதுமட்டுமல்லாமல், ஆதார் எண்ணைக் கட்டாயப்படுத்துவது என்பது குடிமகன் குறித்த தனிப்பட்ட தகவல்கள் பெறப்படுவதால் அடிப்படை உரிமையையும் தனி நபர் ரகசியத்தையும் பாதிக்கிறது என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். 
ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதன் மூலம் சில குறிக்கோள்களை அடைய முடியும் என்று அரசு கருதுகிறது. குறிப்பாக, அனைவரும் ஆதார் எண் பெற்றுவிட்டால் அரசின் மானியங்களையும் சலுகைகளையும் யாரும் போலியான பெயர்களில் பெறுவது தடுக்கப்படும். மானியங்கள் குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதால் இடையில் கசிவதோ, மடைமாற்றுவதோ தடுக்கப்படும். 
மாற்றுத்திறனாளிகள், மகளிர், குழந்தைகள், வறுமைக் கோட்டுக்குக்கீழே உள்ளவர்கள் தொடர்பான ஏறத்தாழ 10 திட்டங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதேநேரத்தில் இந்தப் பிரிவைச் சார்ந்த, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத, ஆதார் எண் பெறமுடியாத பலருக்கும் சலுகைகளும் மானியங்களும் மறுக்கப்படுகின்றன.
பெற்றோர் ஏழைகளாகவும் இடம்பெயர்ந்தவர்களாகவும் இருந்து, ஆதார் எண் பெறுவதற்கான ஆவணங்களோ, முகவரியோ, அடையாளச் சான்றுகளோ இல்லாமல் இருந்தால் அந்தக் குழந்தைகளுக்கு மானியங்கள் மறுக்கப்படுகின்றன. 
மிக அதிகமான அளவில் இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலமும், ஊர் விட்டு ஊரும், கிராமங்களிலிருந்து நகரங்களுக்கும் பிழைப்புத் தேடி இடப்பெயர்வு நடந்துகொண்டிருக்கும் நிலையில், வறுமைக் கோட்டிற்குக் கீழே அன்றாடக் கூலி வேலையில் ஈடுபடும் பலரும், அவர்களது குழந்தைகளும் ஆதார் எண் பெற முடியாத காரணத்தால் அரசின் சமூக பாதுகாப்புத் திட்டங்களிலிருந்து புறந்தள்ளப்படுவது சரியான நடைமுறையாக தோன்றவில்லை. அதுமட்டுமல்லாமல், ஆதார் எண்ணுக்காக பெறப்படும் தகவல்கள் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறதா என்றால், அதுவும் கேள்விக்குறியாக இருக்கிறது. 
3.5 கோடி ஆதார் எண்கள் குறித்த விவரங்கள் அரசின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு அது பொதுவெளியில் கசிந்திருப்பதை அரசே ஒப்புக்கொண்டு இருக்கிறது. 
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயனடையும் 1.35 கோடி பேர்களின் பெயர், முகவரி, ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவை கணினிப் பதிவுத் தவறால், அந்த அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் ஓய்வூதியக்காரரின் கணக்கு குறித்து அதன்மூலம் யார் வேண்டுமானாலும் தகவல் பெறலாம். பெங்களூருவைச் சேர்ந்த இணையதள சமூக மையம் என்கிற அமைப்பு, ஓய்வூதியம், சமூகநல திட்டம், ஊழியர் பாதுகாப்புத் திட்டம் ஆகியவை தொடர்பான ஏறத்தாழ 1.35 கோடி ஆதார் எண்களும் 10 கோடி வங்கிக் கணக்கு எண்களும் அரசு இணையதளங்களின் மூலம் பொதுவெளியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறிந்திருக்கிறது.
ஆதார் எண் பதிவுக்காக ஒப்பந்தம் செய்யப்படும் நிறுவனங்கள் என்னவெல்லாம் தகவல்களைப் பெறலாம் என்று ஆதார் சட்டமும் விதிகளும் வரைமுறை விதிக்கவில்லை. அதேபோல, அரசிடமிருந்து தகவல்களைப் பெறாத மூன்றாவது நபரோ, அமைப்போ ஆதாரை எப்படி, எதற்காக, எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆதார் சட்டத்தில் குறிப்பிடவில்லை. ஆதார் அட்டையிலுள்ள விவரங்களைப் பயன்படுத்த ஆதார் எண்தாரரின் முன் அனுமதி பெறவேண்டிய கட்டாயம் இல்லை. அப்படியே ஆதார் தகவல்கள் கசிந்தாலும் அதுகுறித்து ஆதார் அமைப்பு குடிமக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால் தனது தகவல்கள் கசிந்த விவரம் எண்தாரருக்கு தெரியக்கூட வாய்ப்பில்லை.
இந்தியாவின் உடனடித் தேவை, கடுமையான தகவல் பாதுகாப்புச் சட்டம். ஆதார் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் இந்த சட்டம் இயற்றப்பட்டிருக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் ஆதாருக்காக நாம்பெறும் தகவல்களை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு அப்படி ஒரு சட்டம் மட்டுமே உத்தரவாதம் வழங்கும். 
இதுவரை எட்டு அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்கள் ஆதார் தொடர்பான சேவைகளை வழங்குவதாகவும், சட்டத்துக்குப் புறம்பாக பொதுமக்களிடமிருந்து ஆதார் எண்ணையும் தகவல்களையும் சேகரிப்பதாகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது எனும்போது ஆதார் திட்டத்தில் எந்த அளவுக்கு தகவல் பாதுகாப்பு இல்லை என்பது வெளிப்படுகிறது.
ஆதார் கட்டாயப்படுத்தப்படுவது சரியா - தவறா என்பதே கேள்விக்குறியாக இருக்கும்போது, உச்சநீதிமன்றத்தில் அதுகுறித்த வழக்கில் முடிவு எட்டப்படாத நிலையில் வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி இணைப்பு என்று எதற்கெடுத்தாலும் ஆதாரை கட்டாயப்படுத்துவது வியப்பாக இருக்கிறது.
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/28/வலியுறுத்துதல்-கூடாது-2796997.html
2796450 தலையங்கம் இது அடிமை நாடா என்ன? ஆசிரியர் Friday, October 27, 2017 02:27 AM +0530 ஒரு விசித்திரமான அவசரச் சட்டத்தை முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான ராஜஸ்தான் அரசு கொண்டுவந்திருக்கிறது. இந்த அவசரச் சட்டம் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டும் கூட, கடந்த ஒன்றரை மாதமாக அப்படி ஓர் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது வெளியில் கசியாமல் ரகசியமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது எனும்போது, அரசின் நோக்கத்தை மேலும் சந்தேகிக்கத் தூண்டுகிறது.
செப்டம்பர் 7-ஆம் தேதி ராஜஸ்தான் அரசு, "குற்றவியல் சட்டங்கள் (ராஜஸ்தான் மாநில திருத்தம்) அவசரச் சட்டம் 2017' என்ற அவசரச் சட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள், முன்னாள் - இன்னாள் நீதிபதிகள் உள்ளிட்டோர் மீது, மாநில அரசின் உரிய முன் அனுமதி இல்லாமல், எந்தவித விசாரணையும் மேற்கொள்ள முடியாது. அதேபோல, அரசு ஊழியர் மீது லஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு எழுந்தாலோ வேறு எந்த ஒரு குற்றம் சாட்டப்பட்டாலோ அவரது குற்றம் உறுதி செய்யப்படும்வரை அவரது பெயர், புகைப்படம், முகவரி, குடும்ப உறுப்பினர்களின் விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பத்திரிகைகளோ, தொலைக்காட்சி ஊடகங்களோ வெளியிடக் கூடாது. மீறி வெளியிட்டால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கும், இந்த அவசரச் சட்டம் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எந்தவித அடிப்படை ஆதாரமுமின்றி தனிநபர்கள் (அமைச்சர்கள், சட்டப்
பேரவை உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சிகள்), அமைப்புகள் மீதான குற்றச்சாட்டுகளையோ, கருத்துகளையோ ஊடகங்களில் அல்லது சமூக வலைதளங்களில் தெரிவிக்கக் கூடாது. குறிப்பாக, மாநில அரசின் கொள்கைகள், திட்டங்களை எந்த இடத்திலும் அரசுப் பணியாளர்கள் விமர்சிக்கக் கூடாது. இதனை மீறி எவரேனும் நடந்தால் அவர்கள் மீது துறைரீதியாக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அரசின் அனுமதி இல்லாமல் பணியிலோ, பொறுப்பிலோ உள்ள அரசு ஊழியர்கள் மீதோ, பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகள் மீதோ, அவர்கள் பணிக்கால நடவடிக்கை குறித்த எந்தவித விசாரணையையும் அரசின் முன் அனுமதி பெறாமல் மேற்கொள்ள முடியாது என்கிறது இந்த அவசரச் சட்டம். இதற்கு முன்னால் மகாராஷ்டிர மாநிலத்தில் இதேபோல ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்றாலும்கூட, அந்தச் சட்டத்தில் விசாரணைக்கு எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்குத்தான் அரசின் முன் அனுமதியை அந்தச் சட்டம் வழிவகுக்கிறது. அந்தச் சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
வசுந்தரா ராஜே சிந்தியா அரசின் அவசரச் சட்டம், மகாராஷ்டிர அரசின் அவசரச் சட்டத்தை ஒன்றுமில்லாததாக்கி இருக்கிறது. விசாரணைக்கு அரசு அனுமதி வழங்குவது வரை, ஊடகங்கள் அதுகுறித்த எந்தவித செய்தியையும் வெளியிடக் கூடாது என்று தடை பிறப்பிக்கப்பட்டதுடன் நில்லாமல், அதை மீறினால் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் வழங்க முற்பட்டிருக்கிறது.
அரசு ஊழியர்கள் என்கிற வளையத்துக்குள் முதலமைச்சரும், அவரது அமைச்சரவை சகாக்களும் வருகிறார்கள். ஏதாவது ஊழல் குறித்த ஆதாரங்கள் கிடைத்தாலும்கூட, அதை வெளியிடவோ, அது குறித்து தகவல்களை மக்கள் மன்றத்தில் பதிவு செய்யவோ, ஊடகங்களுக்கு இந்த அவசரச் சட்டத்தின் மூலம் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. 
கடந்த 70 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் குறித்து விசாரிக்கவோ, வழக்கு தொடரவோ, தண்டிக்கவோ பகீரதப்பிரயத்தனத்தை மேற்கொண்டும்கூட மிகக் குறைவான வழக்குகளில்தான் அவர்கள் சிக்கி தண்டனை பெற்றிருக்கிறார்கள். துணைச் செயலர் பதவிக்கு மேலே உள்ள அரசு ஊழியர்களின் தவறுகள் குறித்து, விசாரணை நடத்த அரசின் முன் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இருப்பதுதான் அதற்குக் காரணம். இதனால், குறிப்பிட்ட அதிகாரி பணி ஓய்வு பெறும்வரை விசாரணையை தொடங்க முடிவதில்லை. காரணம், அரசு காலவரம்பில்லாமல் அனுமதி வழங்குவதை ஒத்திப்போட்டு விடுகிறது. 
உச்சநீதிமன்றம் இதற்கு முன்னால் இரண்டு முறை இதுபோல முன் அனுமதி பெற வேண்டிய கட்டாயத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மத்திய புலனாய்வுத் துறை அரசின் முன் அனுமதி பெற வேண்டிய கட்டாயத்தால் பல ஊழல் அரசு ஊழியர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும், ஒருவருடைய பதவியின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு விசாரணையிலிருந்து வெவ்வேறு விதமான பாதுகாப்பு வழங்குவது தவறு என்றும் 2014-இல் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 
அதேபோல, 2016-இல், எந்த வழக்காக இருந்தாலும் காவல்துறையினருக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. நீதிமன்ற வழக்கு விசாரணைக்குத்தான் அரசின் முன் அனுமதி தேவையே தவிர, காவல்துறையினரின் விசாரிக்கும் உரிமைக்கோ, முதல் தகவல் பதிவுக்கோ எந்தவிதத் தடையும் கூடாது என்று உச்சநீதிமன்றம் அந்த வழக்கில் தெளிவுபடுத்தியிருக்கிறது.
ராஜஸ்தான் அரசின் அவசரச் சட்டம், முன் அனுமதி வழங்குவதற்கு 180 நாட்கள், அதாவது, ஆறு மாத அவகாசத்தை அரசுக்கு வழங்குகிறது. இந்த ஆறு மாதத்தில் தடயங்களை அழிக்கவும், விசாரணையை திசை திருப்பவும் ஊழல்வாதிகளால் முடியும் என்பது ஊரறிந்த ரகசியம். 
ஊடகங்களுக்கும் இடித்துரைப்பாளர்களுக்கும் விசாரணை அமைப்புகளுக்கும் வாய்ப்பூட்டுப் போட்டு ஊழலுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவே இப்படியொரு சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. பேச்சுரிமை வழங்கப்பட்டிருக்கும் சுதந்திர இந்தியாவில் இப்படியொரு சட்டமா?

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/27/இது-அடிமை-நாடா-என்ன-2796450.html
2795837 தலையங்கம் சீனாவில் மாற்றம்! ஆசிரியர் Thursday, October 26, 2017 01:25 AM +0530 சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது மாநாடு அதிபர் ஜீ ஜின்பிங் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் கட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது எழுப்பப்பட்ட ஐயப்பாடுகளைபொய்யாக்கி இருக்கிறது. 2,287 உறுப்பினர்கள் கூடியிருந்த, தியானென்மென் சதுக்கத்தை எதிர்நோக்கியிருக்கும் 'கிரேட் ஹால்' என்கிற அரங்கத்தில் தனக்கு முன்னால் சீனாவையும் சீன கம்யூனிஸ்ட் கட்சியையும் வழிநடத்திய டெங்ஜியோ பிங், ஹூ ஜின்டோ ஆகியோருடன் அதிபர் ஜீ ஜின்பிங் நுழைந்தபோது பல்வேறு ஊகபோகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 
சீனாவைக் கடுமையாக பாதித்திருக்கும் புரையோடிப்போன ஊழலுக்கு எதிராக அதிபர் ஜீ ஜின்பிங் நடத்திவரும் போராட்டம் அந்த மூத்த தலைவர்கள் இருவரையும் அதிருப்திக்குள்ளாகியிருக்கிறது என்பது பரவலான வதந்தி. அவர்களது ஆதரவாளர்கள் பலர் ஊழல் புகாரில் சிக்கியிருப்பதால், அந்த இரு தலைவர்களும் அதிபர் ஜீ ஜின்பிங்குக்கு எதிராக இருப்பதாக கூறப்பட்டு வந்ததை பொய்ப்பித்திருக்கிறது 19-ஆவது கட்சி மாநாடு.
தியானென்மென் சதுக்கத்தை எதிர்நோக்கியிருக்கும் கிரேட் ஹால் என்கிற அரங்கத்துக்கு மிகப்பெரிய வரலாற்றுப் பின்னணி உண்டு. சீன மக்கள் குடியரசின் 10-ஆவது ஆண்டு விழா 1959-இல் நடந்தபோது, அதை நினைவுகூரும் விதமாக இப்படியொரு அரங்கம் எழுப்பப்பட வேண்டும் என்று கட்டளை இட்டவர் மாசே துங். சீனாவின் முதல் பிரதமரான சூயென்லாயிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 10 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்ட 'கிரேட் ஹால்' அரங்கத்தில் 3,293 பேர் அமரலாம். இது போதாதென்று மாடத்தில் (பால்கனி) அதே எண்ணிக்கையிலானவர்கள் அமர முடியும். அதற்கு மேலே, கேலரியில் 2,518 பேர் இடம் பெறவும் வழி செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 9,000 பேர் ஒரே நேரத்தில் அமரக்கூடிய மாபெரும் அரங்கம் அது. அரங்க மேடையில் மட்டும் 300 முதல் 500 பேர் உட்காரலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 
அரங்கத்தின் பிரம்மாண்டத்தைப் போலவே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்து வருடத்திற்கு ஒருமுறையிலான மாநாடும் பிரம்மாண்டமானது. அதிபர்களை மாற்றுவதும், அதிபர்கள் தங்களது செல்வாக்கை பலப்படுத்திக் கொள்வதும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகளில்தான்.
கடந்த 18-ஆம் தேதி தொடங்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது மாநாடு அதிபர் ஜீ ஜின்பிங்கை முந்தைய அதிபர்களான மாசே துங், டெங் ஜியாவோபிங் ஆகியோருக்கு நிகரான நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. அவரது அரசியல் தத்துவம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை சாசனத்தில் மாசே துங், டெங் ஜியாவோபிங் ஆகியோருடைய பதிவுகளைத் தொடர்ந்து இப்போது புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. 
அதிபர் ஜீ ஜின்பிங் இரண்டாவது முறையாக கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை சாசனம் என்பது சீனாவின் தேசிய அரசமைப்புச் சட்டத்திலிருந்து வேறுபட்டது. கட்சியின் கொள்கை சாசனம்தான் உறுப்பினர்களுக்கான கொள்கை விளக்கத்தையும் நடத்தை விதிகளையும் தீர்மானிக்கிறது. அதுமட்டுமல்லாமல், கட்சியின் வரலாறு குறித்த பார்வை, கட்சியின் இன்றைய - நேற்றைய தலைவர்களின் பங்களிப்புகள் ஆகியவற்றையும் கொள்கை சாசனம் உள்ளடக்குகிறது. கட்சியின் எந்தவொரு முடிவையும் கட்சி மாநாட்டில் கொள்கை சாசனத்தில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே செய்ய முடியும்.
'சீனாவுக்கான சிறப்புத்தன்மையின் அடிப்படையில் ஜீ ஜின்பிங்கின் புதிய சோஷலிசக் கொள்கை' என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல் விளக்கமாக கட்சிக் கொள்கை சாசனத்தில் திருத்தம் ஏற்படுத்தி, 19-ஆவது கட்சி மாநாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது. மாறிவிட்டிருக்கும் சூழ்நிலைக்கேற்ப சோஷலிசத்துக்கான விளக்கத்தை அதிபர் ஜீ ஜின்பிங் அதில் எடுத்துரைத்திருக்கிறார். இதன் மூலம் கட்சி உறுப்பினர்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் சீனாவின் புதிய சோஷலிசக் கண்ணோட்டம் தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது.
அதிபர் ஜீ ஜின்பிங், பிரதமர் லீ கெகியாங் ஆகிய இருவர் மட்டுமல்லாமல், லீ ஷான்ஸு (67), துணைப் பிரதமர் ஜாங் யாங் (62), வாங் ஹுனிங் (62), ஷாவ் லெஜி (60), ஹான் ஹெங் (62) ஆகியோர் பொலிட்பியூரோ உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 68 வயதைக் கடந்தவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்கிற விதி இருப்பதால் இவர்களில் எவரும் ஜீ ஜின்பிங்கின் இடத்திற்கு 2022 கட்சி மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இல்லை.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 2,287 உறுப்பினர்களில் பலர் அதிபர் ஜீ ஜின்பிங்கின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், அவரது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையுடன் தொடர்பு உள்ளவர்களாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் பிராங் செங்ராய், ஜியாங் யாங், சாங் வென்குவான், ஊ செங்குலி உள்ளிட்ட பலரும் ஓரம் கட்டப்பட்டிருக்கிறார்கள். தனது நம்பிக்கைக்கு உரியவர்களும், நிர்வாகத்திறமை உள்ளவர்களும், ராணுவ பின்னணி உள்ளவர்களும் அதிபர் ஜீ ஜின்பிங்கால் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். 72% உறுப்பினர்கள் 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள். 99% பேர் கல்லூரியில் பட்டப்படிப்பும் அதற்கும் மேலும் படித்தவர்கள்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது மாநாடு அதிபர் ஜீ ஜின்பிங்கின் கரத்தை வலுப்படுத்தி இருக்கிறது. இது சீனாவில் மேலிருந்து கீழ்வரை புரையோடிப் போயிருக்கும் ஊழல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா, வைக்காதா என்பதைப் பொருத்துத்தான் சீனாவின் வருங்காலம் அமையும்!

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/26/சீனாவில்-மாற்றம்-2795837.html
2795279 தலையங்கம் யவத்மால் எச்சரிக்கை! ஆசிரியர் Wednesday, October 25, 2017 01:17 AM +0530 மரபணு மாற்றப் பயிர்களால் ஏற்படும் பாதிப்புக்கு சமீபத்திய எடுத்துக்காட்டு மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மரணங்கள். யவத்மால் பகுதியைச் சார்ந்த விவசாயிகள் பெரும்பாலும் பருத்தி உற்பத்தியாளர்கள். கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான யவத்மால் விவசாயிகள் தங்களது பருத்திப் பயிருக்குப் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும்போது அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 23-க்கும் அதிகமான விவசாயிகள் பூச்சிமருந்தில் உள்ள விஷவாயுத் தாக்குதலால் மரணமடைந்திருக்கிறார்கள்.
மரபணு மாற்றப்பட்ட பருத்தியும் ஏனைய பயிர்களும் பல்வேறு வகையான பூச்சிகளால் தாக்கப்படாது என்பதுதான் மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தரும் உறுதிமொழி. விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு மாறினால் பல மடங்கு அதிகரித்த விளைச்சல் கிடைக்கும் என்பதும், அந்தப் பயிர்களைப் பூச்சிகள் தாக்காது என்பதும் மரபணு மாற்றப் பயிர்களுக்கு விவசாயிகளைக் கவர்ந்திழுக்க அவர்கள் போடும் தூண்டில்.
கடந்த சில வருடங்களாகவே கிழக்கு மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த யவத்மால் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட பருத்தியைப் பயிரிடத் தொடங்கிவிட்டிருக்கிறார்கள். முதல் மூன்று, நான்கு ஆண்டுகள் விளைச்சல் அதிகமாகக் கிடைத்தது என்பதும் உண்மை. ஆனால், சமீபகாலமாகப் பருத்தியின் விளைச்சல் குறைந்துவருவதும் அதிகமான உரம் தேவைப்படுவதும் கண்டறியப்பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலமான பயிர்களைப் பூச்சிகள் தாக்காது என்பதும் பொய்த்துவிட்டிருக்கிறது.
வழக்கத்துக்கு விரோதமாக இந்த ஆண்டு பருத்திச் செடிகள் அதிக உயரம் வளரத் தொடங்கிவிட்டன. ஏறத்தாழ ஆறடி உயரம் வரை வளர்ந்துவிட்டிருக்கின்றன. ஏன் இந்த திடீர் உயரம் என்பதற்கு காரணம் தெரியவில்லை. இந்தப் பயிர்களை வழக்கத்தைவிட அதிகமாகப் பூச்சிகள் தாக்கவும் செய்திருக்கின்றன. அதனால், பூச்சிக்கொல்லி மருந்தைத் தங்கள் தலைக்கு மேலே தூக்கிப்பிடித்துத் தெளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் பல விவசாயிகள் மருந்தின் நெடியைச் சுவாசிக்க நேர்ந்திருக்கிறது. இத்தனைக்கும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பவர்கள், முகமூடி அணிந்தோ, மூக்குப்பகுதியைத் துணியால் பாதுகாத்தபடியோதான் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட அல்லது மரணமடைந்த அத்தனை விவசாயிகளுமே பருத்திப் பயிர்களின் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும்போது அதன் விஷவாயுவைச் சுவாசித்ததால் பாதிக்கப்பட்டவர்கள். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின்படி, மரணமடைந்த அனைவருமே பூச்சிக்கொல்லி மருந்தில் பயன்படுத்தப்படும் ஆர்கனோ பாஸ்பரஸ் என்கிற ரசாயனக் கலவையால் தாக்கப்பட்டு நுரையீரல் பாதிப்புக்கு ஆளானவர்கள். சிலருக்குக் கண் பார்வை மங்கிப்போய் சில நாள்களுக்குப் பிறகு தான் பார்வை திரும்பியிருக்கிறது.
இந்த ஆண்டு தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் கடந்த ஆண்டிலிருந்து மாறுபட்டவையா என்று விசாரித்தபோது அந்த பூச்சிக்கொல்லி மருந்துகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று விற்பனையாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் விவசாயிகள் தங்களது பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது என்பது புதிதொன்றுமல்ல. அதனால் அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்த வேண்டிய அவசியம் கிடையாது. வழக்கத்துக்கு மாறாக திடீரென்று இந்த ஆண்டு பயிர்களின் உயரம் அதிகரித்ததுதான் பிரச்னைக்குக் காரணமாக இருக்க வேண்டும் என்கிறது அரசின் விவசாயத் துறை.
2001 முதல் இதுவரை யவத்மால் பகுதியில் 3,920 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய விவசாயிகளின் தற்கொலைத் தலைநகரம் என்று வேடிக்கையாக யவத்மாலை அழைப்பது உண்டு. இப்போது பூச்சிக்கொல்லி விஷத்தால் தாக்கப்பட்டும் விவசாயிகள் மரணமடைந்து பிரச்னையை மேலும் தீவிரமாக்கி இருக்கிறார்கள்.
அமெரிக்க சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பயன்படுத்துவதால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்று அறிக்கையே வெளியிட்டிருக்கிறார்கள். மரபணு மாற்றப் பயிர்களால் அதிக விளைச்சல் கிடைக்கும் என்கிற வாதமும் பொய்யானது என்று பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல், அவற்றால் விளைநிலம் தரிசாவதுடன் பல்வேறு பக்க விளைவுகளும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டிருக்கின்றன. 
மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிரான விவாதம் கடந்த பல ஆண்டுகளாகவே இருந்தாலும், தனது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனைப்போல, மான்சாட்டோ உள்ளிட்ட மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளுக்குத் தரும் அழுத்தம் இன்னும்கூடக் குறைந்தபாடில்லை. 
மரபணுமாற்ற விதைகள் விற்பனையாளர்கள் மிகவும் சாமர்த்தியமாக மக்கள் கருத்தை உருவாக்குவதில் சமர்த்தர்கள். ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதிலும், ஊடகங்களை நம்ப வைப்பதிலும் தேர்ந்தவர்கள். மரபணு மாற்ற விதைகளைப் பயன்படுத்தத் தொடங்கினால் சொந்தமாக விதை சேகரித்து வைத்துக்கொள்ள முடியாது. அதனால், நாம் நிரந்தரமாக விதைகளுக்கு அவர்களை நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்திய விவசாயமே அவர்களது கட்டுப்பாட்டில் அடிமைப்படும் நிலைக்குத் தள்ளப்படும்.
யவத்மால் விவசாயிகளின் நிலைமை, இந்தியாவுக்கு எழுப்பப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி!
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/25/யவத்மால்-எச்சரிக்கை-2795279.html
2794921 தலையங்கம் இனியாவது... ஆசிரியர் Tuesday, October 24, 2017 02:09 AM +0530 குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது முதல் அரசுமுறைப் பயணத்திற்கு ஜிபூட்டி நாட்டைத் தேர்ந்தெடுத்து விஜயம் செய்தது பலரின் புருவங்களை உயர வைத்தது. ஜிபூட்டி என்றொரு நாடு இருக்கிறது என்பதேகூடப் பலருக்கும் தெரியாத நிலையில், இந்தியா போன்ற ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர் அந்த நாட்டைத் தனது முதல் அரசுமுறைப் பயணத்துக்குத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இருக்கிறது.
ஜிபூட்டிக்கு விஜயம் செய்யும் முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தான். 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட இந்த நாட்டுக்கு இதற்கு முன் இந்தியப் பிரதமர் மட்டுமல்ல, வேறு எந்த முக்கியமான நாட்டின் அதிபரோ, பிரதமரோ அரசுமுறைப் பயணமாக விஜயம் செய்ததில்லை. ஆனாலும் ஜிபூட்டியின் ராணுவ ரீதியிலான புவியியல் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதி என்று கருதப்படும் செங்கடலையும் ஏமன் வளைகுடாவையும் ஒட்டிய பகுதியில் அமைந்திருக்கிறது இந்த நாடு. வடக்கே ஏன்ட்ரியா, தெற்கிலும் மேற்கிலும் எத்தியோப்பியா, தென்கிழக்கில் சோமாலியா ஆகிய நாடுகள் சூழ்ந்திருக்க ஏனைய பகுதிகள் செங்கடலை ஒட்டி அமைந்திருக்கின்றன. தென்கடலும் இந்துமகா சமுத்திரமும் இணையும் இடத்தில் அமைந்திருப்பதால் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆசியா, ஆசியா என்று பல்வேறு பகுதிகளுடனும் தொடர்பு கொள்ளும் புவியியல் முக்கியத்துவம் ஜிபூட்டிக்கு உண்டு.
நாடு என்று எடுத்துக்கொண்டால் கடற்கரையைத் தவிர பெரிய அளவில் எந்தவித வளமும் இங்கே கிடையாது. தரிசு பூமிதான் பெரும்பாலும். ஜிபூட்டியின் அதிபர் இஸ்மாயில் ஒமர்கொயில்லே பலவீனங்களை பலமாக மாற்றி ஜிபூட்டியைப் பொருளாதார ரீதியாக பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தனது நாட்டின் புவியியல் முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி, அனைத்து வல்லரசுகளுக்கும் ஜிபூட்டியில் ராணுவத் தளம் அமைத்துக்கொள்ள அவர் அனுமதித்திருப்பது இதனால்தான். துபாய், சிங்கப்பூர், இலங்கை போன்று கடல் வணிக முக்கியத்துவம் பெறும் நாடாக ஜிபூட்டியை உருவாக்குவதுதான் அவரது குறிக்கோள்.
ஜிபூட்டியின் முக்கியத்துவத்தை இந்தியாவுக்கு முன்னால் சீனா புரிந்துகொண்டு தன்னுடைய முதல் வெளிநாட்டு ராணுவத் தளத்தை இங்கே அமைத்திருக்கிறது. சீனா மட்டுமல்ல, நெடுங்காலமாக ஜிபூட்டியைத் தனது காலனியாக அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரான்ஸ் மிகப்பெரிய ராணுவ தளத்தை இங்கே எப்போதோ ஏற்படுத்தி விட்டிருக்கிறது. ஸ்பெயின், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கும் ஜிபூட்டியில் ராணுவ தளங்கள் இருக்கின்றன. அமெரிக்காவும் சரி, பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்காக ஜிபூட்டியில் மிகப்பெரிய ராணுவ தளம் வைத்திருக்கிறது. 2011 முதல் ஜப்பானுக்கும் ஜிபூட்டியில் ராணுவ தளம் இருக்கிறது.
ஜிபூட்டியிடம் சீனா கடந்த ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 2026 வரையில் 10,000 வீரர்களுடனான ராணுவ தளத்தை அங்கே நிறுவி செயல்படலாம். ஆப்பிரிக்கக் கண்டத்தில் தனது மனிதாபிமான சேவைக்காகவும், கடல் கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவும் இங்கே கடற்படைத் தளம் அமைக்க இருப்பதாக சீனா தெரிவிக்கிறது. இந்துமகா சமுத்திரம் வழியாக தனக்கு வரும் கச்சா எண்ணெய், ஏனைய தயாரிப்பு மூலப்பொருள்கள் ஆகியவற்றின் பாதுகாப்புக்காகத்தான் ஜிபூட்டி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக சீனா கூறினாலும், அது முழு உண்மையல்ல.
பாகிஸ்தானிலுள்ள "க்வாடர்' துறைமுகத்தைத் தனது கடற்படைத் தளமாக்குவதற்கு சீனா முழுமூச்சில் இறங்கியிருப்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல, ஜிபூட்டியையும் எல்லா வசதிகளும் கொண்ட மிகப்பெரிய தளமாக மாற்றுவது சீனாவின் குறிக்கோளாக இருக்கக்கூடும். முன்பு மியான்மர், வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், இப்போது ஜிபூட்டி என்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்திலும் தனது கடற்படைத் தளத்தை அமைக்கும் சீனாவின் முயற்சியில் இதுவும் ஒன்று. சமீப காலமாக சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள், வேவு பார்க்கும் கப்பல்கள் ஆகியவை இந்துமகா சமுத்திரத்தில் தொடர்ந்து தென்படுவதாக இந்திய கடற்படை அரசுக்கு தெரிவித்திருக்கிறது.
உலகத்தின் கச்சா எண்ணெயை ஏற்றிச்செல்லும் 80% கப்பல்கள் இந்துமகா சமுத்திரத்தின் வழியாகத்தான் பயணிக்கின்றன. அதேபோல உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு சரக்கும் இந்துமகா சமுத்திரத்தின் வழியாகத்தான் கப்பல்களில் கொண்டு செல்லப்படுகிறது. அரைநூற்றாண்டு காலத்திற்கு முன்பு இந்துமகா சமுத்திரத்தின்மீது அமெரிக்காவுக்கு எந்த அளவுக்கு கண் இருந்ததோ, அதே அளவுக்கு இப்போது சீனாவுக்கு இந்துமகா சமுத்திரத்தைத் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் ஆசை இருக்கிறது. அதனால்தான் இந்துமகா சமுத்திரத்தில் உள்ள நாடுகளில் எல்லாம் தனது முதலீட்டில் துறைமுகங்கள், சாலைகள், ரயில்பாதைகள் ஆகியவற்றை அமைப்பதில் சீனா முனைப்புகாட்டி வருகிறது.
சுதந்திர இந்தியா, உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் காட்டிய முனைப்பை, புவியியல் ரீதியில் ராணுவ, வணிக நோக்குடனான வெளியுலக தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படாமல் இருந்துவிட்டது. ஆப்பிரிக்காவுடனான நமது நெருக்கமும் படிப்படியாகக் குறைந்து வந்தது. இப்போதுதான் நாம் மீண்டும் விழித்துக்கொண்டு 2015-இல் இந்திய - ஆப்பிரிக்க மாநாட்டை தில்லியில் கூட்டினோம்.
இந்தியக் குடியரசுத் தலைவரின் ஜிபூட்டி விஜயம் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இன்னும்கூட ஜிபூட்டியில் இந்தியத் தூதரகம் அமைக்கப்படவில்லை. இனிமேலாவது விழித்துக்கொள்வோம்.

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/24/இனியாவது-2794921.html
2794373 தலையங்கம் அடிபணிகிறதா ஆணையம்? ஆசிரியர் Monday, October 23, 2017 02:34 AM +0530 ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 9-ஆம் தேதி நடைபெற இருக்கும் வாக்குப்பதிவின் முடிவுகளை அந்த மாநில மக்கள் உடனடியாக தெரிந்துகொண்டுவிட முடியாது. முடிவுக்காக டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி வரை அவர்கள் காத்திருக்க வேண்டிவரும். ஏனென்றால், சட்டப்பேரவை தேர்தல் காணும் இன்னொரு மாநிலமான குஜராத் வாக்காளர்கள் அப்பொழுதுதான் வாக்களித்திருப்பார்கள்.
ஹிமாசலப் பிரதேசத்துக்கான வாக்களிப்பு தேதியை அறிவித்துவிட்டு குஜராத்துக்கான தேர்தல் தேதியை அறிவிக்காமல் விட்டிருப்பதால் இந்திய தேர்தல் ஆணையம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. இதற்குப் பின்னால் அரசியலும் மத்திய அரசின் தலையீடும் இருக்கிறது என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் அர்த்தமில்லை என்று ஒதுக்கிவிட்டுவிட முடியாது. 
ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடையும் இரண்டாவது வாரத்திலேயே, அதாவது 2018 ஜனவரி 28-இல், குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது. சாதாரணமாக அடுத்தடுத்து சட்டப்பேரவைப் பதவிக்காலம் முடிவடையும் மாநிலங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. அப்படியிருக்கும்போது மிக நீண்ட இடைவெளியில் ஹிமாசலப் பிரதேசத்திலும், குஜராத்திலும் வாக்கெடுப்பு நடத்தி ஒரே நேரத்தில் தேர்தல் முடிவுகளை அறிவிப்பது எதற்காக என்கிற தார்மிக ரீதியான கேள்வி எழுகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக ஹிமாசலப் பிரதேசமும், குஜராத்தும் ஒரே நேரத்தில்தான் வாக்கெடுப்பை சந்தித்திருக்கின்றன. இதற்கு முன்னால் 2002-இல் குஜராத் கலவரம் ஏற்பட்டபோது மட்டும், இரண்டு மாநிலங்களிலும் வெவ்வேறு தேதிகளில் வாக்கெடுப்பை நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டது.
குஜராத் மாநிலத்தில் கடந்த மூன்று முறையாக ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதா கட்சி இந்த முறை கடுமையான எதிர்ப்பை சந்திக்கிறது. அம்மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் பா.ஜ.க. பலவீனப்பட்டு இருக்கிறது. பா.ஜ.க.வின் நிரந்தர ஆதரவாளர்களான படேல்கள், பட்டிதார் சமூகத்தினர் தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரி ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். அதேபோல, சத்ரியர்கள், தலித்துகள், விவசாயிகள் ஆகியோர் மத்தியிலும் பா.ஜ.க.வுக்கு எதிரான மனோநிலை வலுத்துவருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது செல்வாக்குச் சரிவை தடுத்து நிறுத்த ஆளும் பா.ஜ.க. எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ஆட்சியின் மீதான அதிருப்தியைப் போக்குவதற்காக அரசு பல திட்டங்களையும் பல்வேறு பிரிவினருக்கு சலுகைகளையும் அறிவித்தவண்ணம் இருக்கிறது. தேர்தல் ஆணையம் ஹிமாசலப் பிரதேசத்துக்கு மட்டும் தேர்தல் அறிவித்துவிட்டு குஜராத்துக்கு தேர்தல் தேதியை அறிவிக்காமல் விட்ட 10-ஆவது நிமிடத்தில் குஜராத் முதல்வர் பல நூறு கோடி ரூபாய்க்கான சலுகைகளை அறிவித்ததை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி விமர்சிக்கின்றன.
நேற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக குஜராத்தில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி பாவ்நகர், வதோதரா மாவட்டங்களில் பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்திருக்கிறார். பிரதமர் மோடியின் குஜராத் சுற்றுப்பயணத்திற்காகவும் அறிவிப்புகளுக்காகவும்தான் தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பை தள்ளிப் போட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டை இது உறுதிப்படுத்துகிறது. ஹிமாசலப் பிரதேசத்துடன் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தால் நன்னடத்தை விதி அமலுக்கு வந்து முதலமைச்சர், பிரதமர் ஆகியோர் எந்தவித அறிவிப்பையும் வெளியிட முடியாமல் போயிருக்கும்.
குஜராத்தில் பெய்த பெருமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஹிமாசலப் பிரதேசத்துடன் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தால் அங்கெல்லாம் நிவாரணப் பணிகள் தடைபட்டிருக்கும் என்பதும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதியின் வாதம். அரசு ஊழியர்களைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டி வரும் என்றும் அவர் விளக்கம் தருகிறார்.
தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர்களான டி.எஸ். கிருஷ்ணமூர்த்தியும், எஸ்.ஒய். குரேஷியும் இதுகுறித்து வேறுவிதமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் அரசியல்வாதிகளின் பங்களிப்பு இல்லாமல் நிவாரணப் பணிகளை தொடர்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லை' என்று டி.எஸ். கிருஷ்ணமூர்த்தியும், "தேர்தல் நேரத்திலான பிரதமர் மோடியின் குஜராத் விஜயம் பல சந்தேகங்களை எழுப்புகிறது. இது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும் தன்னிச்சையான செயல்பாட்டையும் குலைக்கிறது' என்று எஸ்.ஒய். குரேஷியும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
2012 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அன்று மத்தியில் ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸின் வற்புறுத்தலுக்கு இணங்கி, குஜராத்தின் அன்றைய முதல்வர் நரேந்திர மோடியை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவிடாமலும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவிடாமலும் தேர்தல் ஆணையம் நீண்ட நாட்களுக்கு தேர்தல் நன்னடத்தை விதிகளை குஜராத்தில் அமல்படுத்தியது என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்திருப்பதிலிருந்து, இப்போது காங்கிரஸின் அடிச்சுவட்டில் பா.ஜ.க.வும் பயணிக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவு, அரசியல் சட்ட அமைப்புக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை!

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/23/அடிபணிகிறதா-ஆணையம்-2794373.html
2792982 தலையங்கம் கமலுக்கு உரிமை உண்டு! ஆசிரியர் Saturday, October 21, 2017 01:59 AM +0530 தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் டெங்கு வைரஸ் காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மழைக்காலம் வரும்போதெல்லாம் இது போல வைரஸ் காய்ச்சலும், விஷக்காய்ச்சலும், மலேரியா, காலரா உள்ளிட்ட நோய்த் தொற்றுகளும் பரவுவது புதிதொன்றும் அல்ல. ஆனால், அவற்றைக் கட்டுப்படுத்த தரப்படும் மருந்து குறித்த விவாதம், இப்போது போல முன்னெப்போதும் எழுந்ததில்லை. 
டெங்கு என்கிற வைரஸ் காய்ச்சலின் விளைவால் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டணுக்கள் (பிளேட்லட்ஸ்) எண்ணிக்கை குறையத் தொடங்குகின்றன. அவை மிக அதிகமாக குறைந்துவிடும்போது உடலில் பல பாகங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு நோயாளி மரணத்தைத் தழுவ நேர்கிறது. 
வைரஸ் காய்ச்சல் வந்தவுடன் நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் உடனடியாக ரத்தப் பரிசோதனையில் டெங்கு வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வெள்ளை அணுக்களும் தட்டணுக்களும் குறையாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மருத்துவர்களால் எடுக்கப்படுகிறது. அப்படியில்லாமல் போகும்போதுதான் டெங்கு மரணம் ஏற்படுகிறது என்பதை மருத்துவர்கள் தெளிவுபடுத்துகின்றனர். பெரும்பாலான வைரஸ் காய்ச்சல் நோயாளிகள் குணமடைகிறார்கள் என்றாலும்கூட, ஒரு சிலர் மரணமடைகிறார்கள் என்பதையும் வைரஸின் பாதிப்பால் சிலர் மூட்டு வலியுடன் சில காலம் தொடர்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. 
டெங்கு வைரஸ் காய்ச்சலுக்கு அலோபதி மருத்துவத்தில் எந்த மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும்கூட, அது மருத்துவ சிகிச்சையால் குணப்படுத்த முடியாதது அல்ல. அதேநேரத்தில் சித்தா, ஆயுர்வேதா மருத்துவமுறைகளில் இதற்குத் தீர்வாக நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச் சாறு போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன. இவைதான் இப்போது பரவலான சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்றன.
நிலவேம்பு என்பது சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை. இது பெரும்பாலும் கிழக்காசிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த மூலிகை குறித்து நடத்தப்பட்ட தாவர வேதியியல் ஆய்வுகளின்படி இதில் உள்ள பிளோவோனாய்ட்ஸ், ஆன்ரோகிராபோலய்ட், பென்செனாய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வேதிப்பொருள்கள் ஒவ்வாமை, நுண்ணுயிரிகள், வைரஸ்கள் ஆகியவற்றை எதிர்த்து அழிக்கும் தன்மை கொண்டவை. நிலவேம்பில் உள்ள பிளோவோனாய்ட்ஸ் என்கிற வேதிப்பொருள் வைரஸ், தொற்றுநோய், ஒவ்வாமை, காய்ச்சல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது என்கிறது சீன மருத்துவம்.
டெங்கு காய்ச்சலுக்குத் தரப்படும் நிலவேம்புக் குடிநீர் என்பது இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தாலும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தாலும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. நிலவேம்புக் குடிநீரில் கோரைக்கிழங்கு, வெட்டி வேர், விலாமிச்சு வேர், சந்தனம், பற்படாகம், பேய்புடல், சுக்கு, மிளகு, நிலவேம்பு உள்ளிட்ட ஒன்பது மூலிகைகள் அடங்கியிருக்கின்றன. இந்த மூலிகைகள், மாற்று மருத்துவத்தினர் பரிந்துரைப்பதுபோல டெங்கு வைரûஸ குணப்படுத்தாமல் போனாலும்கூட, இவற்றால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.
மாற்று மருத்துவ முறையில் வழங்கப்படும் மருத்துவத் தீர்வுகள், அலோபதி மருந்துகளைப்போல, பெரும்பாலும் பக்க விளைவுகளை உருவாக்குவதில்லை. இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இயற்கையின் அடிப்படையில் மிக உயர்ந்த மருத்துவ சிகிச்சை முறைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்து வந்திருப்பது வரலாற்று உண்மை. ஆனால், இந்த மாற்று மருத்துவ சிகிச்சைகள் குறித்து போதுமான அளவு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றின் மருத்துவ குணங்கள் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. ஐரோப்பியர்களின் படையெடுப்பால் காலனிகளாக மாற்றப்பட்ட காரணத்தால் ஆசியாவின் மேம்பட்ட மருத்துவ முறைகள் புறக்கணக்கப்பட்டுவிட்டன என்பதுதான் உண்மை. 
கடந்த அரைநூற்றாண்டு காலமாகத்தான் இந்த மருத்துவ முறைகள் குறித்த மீள்பார்வைக்கு வழிகோலப்பட்டிருக்கிறது. பழைய ஓலைச்சுவடிகள், பாரம்பரிய செவிவழி மருத்துவ முறைகள் ஆகியவை குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு புத்துயிர் தரப்பட்டு வருகிறது. இவையெல்லாம் இன்னும் மேலை நாட்டவரின் அலோபதி மருத்துவ முறைக்கு இணையான அளவில் பெரும் பொருட்செலவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு உறுதிப்படுத்தப்படவில்லை.
மருந்தால் மட்டுமே நோய் குணமாவதில்லை. மருத்துவர் மீதான மற்றும் மருந்தின் மீதான நம்பிக்கையும் சிகிச்சையில் பெரும்பங்கு வகிக்கிறது. அதனால் ஒரேயடியாக டெங்கு காய்ச்சலுக்கு தரப்படும் நிலவேம்புக் குடிநீர் என்கிற மாற்று மருத்துவ முறையின் பரிந்துரையை ஒதுக்கிவிட வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில், அதுமட்டுமே சிகிச்சை என்று கருதி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையை அணுகாமல் இருப்பது என்பது பகுத்தறிவின் பாற்பட்டதாக தோன்றவில்லை.
தனது ரசிகர்களை, பொதுமக்களுக்கு பரவலாக நிலவேம்புக் குடிநீர் வழங்க வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருப்பதில் எந்தவித தவறும் காண முடியவில்லை. ஆய்வு முடிவுகள் வெளிவரும் வரை தனது ரசிகர்கள் பொது மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்க வேண்டாம் என்று கூறும் உரிமை கமல்ஹாசனுக்கு இருக்கிறது. வேறொரு நடிகர், அரசியல் கட்சித் தலைவர் தனது ரசிகர்களையோ தொண்டர்களையோ நிலவேம்புக் குடிநீர் வழங்கும்படி கூறினால் அதை எப்படி குறைகாண முடியாதோ, அதேபோல கமல்ஹாசனின் கருத்தை விமர்சிப்பதும் தவறு!

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/21/கமலுக்கு-உரிமை-உண்டு-2792982.html
2792505 தலையங்கம் என்ன செய்யப் போகிறோம்? ஆசிரியர் Friday, October 20, 2017 03:26 AM +0530 இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வீணான மின்னணு, மின்சாதனக் கழிவுகளின் அளவு ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே போகிறது. இ-வேஸ்ட் என்று பரவலாக அறியப்படும் மின்னணு, மின்சாதனக் கழிவுகள் உலகம் முழுமைக்கும் அச்சுறுத்தலாக இருந்தாலும்கூட, பெரும்பாலான மேலைநாடுகளும் வளர்ச்சியடைந்த நாடுகளும் முறையான செயல்திட்டத்தின் மூலம் இதுகுறித்த நடவடிகைகளை முடுக்கிவிட்டிருக்கின்றன. இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் செயல்படாமல் இருப்பதும் இந்தியாவை பேராபத்துக்கு தள்ள இருக்கிறது. 
"மின்னணு - மின்சாதனக் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2011'-இல் சில திருத்தங்களை ஏற்படுத்தி, கடந்த ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 
இ-வேஸ்ட் மேலாண்மை விதிகள் 2016-ஐ அறிவித்தது. அரசு இந்தப் பிரச்னையில் முழு மூச்சுடன் இறங்கி ஏனைய உலக நாடுகளைப்போல மின்னணு, மின்சாதனக் கழிவுகளை கையாள, தகுந்த நடவடிக்கைகளை என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.
2011 இ-வேஸ்ட் மேலாண்மை விதிகளில் காணப்பட்ட மின்னணு, மின்சாதனக் கழிவுகள் மட்டுமல்லாமல் இது தொடர்பான கருவிகள், உதிரிபாகங்கள் அனைத்தையும் 2016-இல் கொண்டு வரப்பட்ட திருத்தம் உள்ளடக்கியது. மேலும், சி.எஃப்.எல். எனப்படும் புளோரஸன்ட் விளக்குகள் உள்ளிட்ட பாதரசத்தை பயன்படுத்தும் அனைத்து மின்சாதனங்களும் இ-கழிவுகளாக அந்தத் திருத்தத்தில் இணைக்கப்பட்டது. 
2016-இல் திருத்தம் செய்யப்பட்ட இ-வேஸ்ட் மேலாண்மை விதிகளின்படி மின்னணு, மின்சாதனக் கழிவுகளை சேகரிக்கும் பொறுப்பு அதன் உற்பத்தியாளர்களுக்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் விற்பனை செய்த மின்னணு, மின்சாதனங்களின் கழிவுகளை அரசு கண்காணித்து உறுதிப்படுத்தவில்லை.
வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய பழுதான மின்னணு, மின்சாதனப் பொருள்களைத் திரும்பப் பெற்று மறுசுழற்சிக்கு அல்லது அழித்தொழிப்புக்கு தயாரிப்பாளர்கள் வழிகோல வேண்டும் என்பதைத் திருத்தப்பட்ட விதிமுறை விரிவாகவே விளக்கியது. உற்பத்தியாளர்கள் தங்களது விற்பனை முகவர்கள் அல்லது நியமிக்கப்பட்ட சேகரிப்பாளர்கள் மூலம் தங்கள் நிறுவனத்தின் மின்னணு, மின்சாதனக் கழிவுகளை திரும்பப் பெற வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறதே தவிர, அது நடைமுறைப்படுத்தப்படாமல் தொடர்கிறது. 
சட்டத்திருத்தத்தின்படி ஏழு ஆண்டுகளில் விற்பனை செய்த மின்னணு, மின்சாதனப் பொருள்கள் 30% முதல் 70% வரை தயாரிப்பாளர்களால் திரும்பப் பெறப்பட வேண்டும் என்பது விதி. இதற்கு விற்பனையாளர்கள் குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்று கழிவுகளை பொருள்களை தரும்போது திருப்பித் தரலாம் அல்லது வாடிக்கையாளர் புதிதாக வாங்கும் மின்னணு, மின்சாதனங்களின் விலையில் ஒரு குறிப்பிட்டத் தொகை கழித்துக் கொள்ளப்
படலாம் என்றெல்லாம் அந்த சட்டத்திருத்தத்தில் பரிந்துரைகள் தரப்பட்டிருக்கின்றன. 
ஆண்டொன்றுக்கு இந்தியாவில் ஏறத்தாழ 17 லட்சம் டன் மின்னணு, மின்சாதனக் கழிவுகள் உருவாகின்றன. ஆசியாவில், சீனாவுக்கும் ஜப்பானுக்கும் அடுத்தபடியாக மிக அதிகமான மின்னணு, மின்சாதனக் கழிவுகள் உருவாகும் நாடு இந்தியா. ஆனால், நமது நாட்டில் உருவாகும் மொத்த மின்கழிவுகளில் 1.5% மட்டுமே மறுசுழற்சிக்கோ அல்லது அழித்தொழிப்புக்கோ உட்படுகின்றன. மின்கழிவுகளின் அளவு ஆண்டுக்கு 10 விழுக்காடு என்ற அளவில் அதிகரிக்குமானால், இந்தக் கழிவுகளிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு ஒட்டுமொத்த இந்தியர்களையும் மிக மோசமான பாதிப்புகளுக்கு ஆளாக்கக்கூடும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் பழைய செல்லிடப்பேசிகள் (1800%), கணினிகள் (500%), ஏனைய மின்னணு சாதனங்களின் கழிவுகள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கக்கூடும். அவற்றில் 98% ஏனைய சாதாரணக் கழிவுகளுடன் கலந்து குப்பைகளாகச் சேர்க்கப்படும்போது, அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பும், சுகாதாரக் கேடும் மிகவும் கடுமையானதாக இருக்கும். 
இந்த மின்னணு, மின்சாதனக் கழிவுகளில் காணப்படும் பாதரசம், ஈயம் உள்ளிட்ட நச்சு உலோகங்கள் மிகவும் ஆபத்தானவை. பாதுகாப்பில்லாத இ-கழிவுகளின் மறுசுழற்சி அல்லது குப்பைக் கூளங்களில் சேர்க்கப்படுதல் மூலமாக நிலத்தடி நீர், வாயு மண்டலம் ஆகியவற்றில் இவற்றின் கதிர்வீச்சு கலந்துவிடுகிறது. இ-கழிவுகளைக் கையாளும் தொழிலாளர்களில் 80% பேர் கடுமையான நுரையீரல் நோய்களுக்கு ஆளாகிறார்கள் எனும்போது தண்ணீரிலும், காற்றிலும் ஏற்படுத்தும் நச்சு எந்த அளவுக்கு பொதுமக்களின் உடல் நலனை பாதிக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.
குழல் விளக்குகள், கணினி மதர்போர்டு உள்ளிட்ட உதிரிபாகங்கள், கணினி பிரிண்டர்களின் டோனர் கார்ட்ரிட்ஜ்கள் ஆகியவை பாதரசம், காட்மியம் ஆகியவற்றை காற்று மண்டலத்தில் பரப்புகின்றன. இது தெரிந்தும்கூட தயாரிப்பாளர்கள் அவர்கள் விற்பனை செய்யும் பொருள்களில் 10% கூட கழிவுகளாக திரும்பப் பெற்று அவற்றை அழித்தொழிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. 
ஜப்பானில் 50% முதல் 60%, தென்கொரியாவில் 55% முதல் 70%, பிரிட்டனில் 50% முதல் 80%, நெதர்லாந்தில் 45% முதல் 75% கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அல்லது ஒழித்தலுக்கு அனுப்பப்படும்போது இந்தியாவில் ஏன் இன்னும் 1.5% மட்டுமே திரும்பப் பெறப்படுகிறது? மின்னணு, மின்சாதனப் பொருள்கள் வளர்ச்சியின் அடையாளம் மட்டுமல்ல, பேராபத்தின் அடையாளங்களும்கூட என்பதை எப்போதுதான் நாம் உணரப்போகிறோமோ?

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/20/என்ன-செய்யப்-போகிறோம்-2792505.html
2792207 தலையங்கம் காவல் சவால்! ஆசிரியர் Wednesday, October 18, 2017 02:34 AM +0530 காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக மத்திய அமைச்சரவை ரூ.25,000 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்க முடிவு; காலத்தின் கட்டாயமும்கூட. அதிகரித்து வரும் கிரிமினல் குற்றங்கள், ஊடுருவல்கள், தீவிரவாதப் போக்கு இவற்றையெல்லாம் எதிர்கொள்ளக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி இணையவழிக் குற்றங்களை எதிர்கொள்ளப் போதிய தகவல் தொழில்நுட்ப மேம்பாடு காவல்துறைக்கு இப்போது அவசியமாகிறது.
மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கும் ரூ.25,000 கோடி காவல்துறையை நவீனமயப்படுத்தப் போதுமானதாக இருக்காது என்றாலும்கூட, காவல்துறையின் அடிப்படைத் தேவைகளை ஓரளவுக்கு இந்த ஒதுக்கீடு ஈடுகட்டக்கூடும். இதனால், காவல்துறை நவீனமயமாக்கலுக்கு 75% மத்திய உதவி தரப்படும் நிலையில் மாநில அரசுகள் நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி நவீனமயமாக்கலை இனியும் தள்ளிப்போட முடியாது.
இந்த ஒதுக்கீட்டில் பெரும்பகுதி காவல்துறை கட்டமைப்பை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும். புதிய ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் வாங்குதல், தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்துதல், குற்றப்புலனாய்வை தொழில்நுட்ப ரீதியில் நவீனப்படுத்துதல் ஆகியவை இந்த நிதி ஒதுக்கீட்டின்கீழ் வரும். அதுமட்டுமல்லாமல், அனைத்து காவல் நிலையங்களும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்துடன் இணைக்கப்பட்டு அதன் மூலம் குற்றப் புலன் விசாரணை மேம்படுத்தப்படும். காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலை என்று அனைத்துமே இணைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணை விரைந்து நடைபெற வழிகோலப்படும்.
பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியிருக்கும் ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கீட்டில், ரூ.10,132 கோடி ஜம்மு - காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், நக்ஸல் பாதிப்புள்ள பகுதிகள் ஆகியவற்றின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதிகளிலுள்ள மாநில காவல்துறை நவீனமயப்படுத்தப்பட்டு தொழில்நுட்ப ரீதியாகவும் பலப்படுத்தப்பட்டால் மட்டுமே அங்கே நிலவும் பதற்றமான சூழலை எதிர்கொள்ள முடியும். மாநில நிர்வாகத்துடன் இணைந்து உள்ளூர் மக்களின் நம்பிக்கையையும் பெற்று செயல்பட்டால்தான் அந்தப் பகுதிகளில் தீவிரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
பத்தாண்டுக்கு முந்தைய, கைவிடப்பட்ட ஆயுதங்களை இந்தியாவில் காவல்துறையினர் பயன்படுத்தும்போது, கிரிமினல்களும், தீவிரவாதிகளும் அதிநவீன ஆயுதங்களுடன் வலம் வரும் அவலம் காணப்படுகிறது. காவல்துறையினரின் அன்றாட உபயோகத்திற்கான ஆயுதங்களை நவீனப்படுத்தாத வரை மாஃபியாக்களையும், தேர்ந்த கிரிமினல் கூட்டத்தினரையும் காவல்துறையினர் எதிர்கொள்வது என்பது இயலாது. மத்திய, மாநில அரசுகள் காவல்துறையைத் தொழில்நுட்ப ரீதியாகப் பலப்படுத்துவதில் அக்கறை காட்டாமல் இருந்து வந்த நிலையில், இந்த ஒதுக்கீடு, அந்தக் குறையைப் போக்கும்.
இப்போதைய நிலையில் அனுமதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கையில், ஏறத்தாழ 24% நிரப்பப்படாமல் இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு காவல்துறையில் உள்ள 6,000-க்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்களை விரைவில் நிரப்ப முடிவெடுத்திருப்பது வரவேற்புக்குரிய ஒன்று.
ஒரு லட்சம் பேருக்கு 222 காவல்துறையினர் இருக்க வேண்டும் என்பது ஐ.நா.வின் பரிந்துரை. ஆனால், இந்தியாவில் 131 பேர்தான் இருக்கிறார்கள். காவலர் பற்றாக்குறை இருப்பதால் புலன் விசாரணைக்கும், ரோந்து போவதற்கும்கூடப் போதுமான காவலர்கள் இல்லை. அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்கும் காவலர்கள் அழைக்கப்பட்டு விடுவதால் அவர்களது அடிப்படைக் கடமையான, சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதும், குற்றச்செயல்களைத் தடுப்பதும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன.
போதிய காவலர்கள் இல்லாத காரணத்தால் காவல்துறையினரின் பணிச்சுமை அதிகரித்து அவர்களது அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவதாக உளவியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பெரும்பாலான காவல்துறையினர் நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்திற்குப் பதிலாக குறைந்தபட்சம் பதினோரு மணி நேரம் வேலை பார்க்கிறார்கள். சில நாள்களில் பதினான்கு மணி நேரம்கூட அவர்கள் பணியில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஏறத்தாழ 75% காவல்துறையினர் அவர்களது வாராந்திர விடுப்புகளை எடுப்பதில்லை. அப்படியே எடுத்தாலும்கூட ஏதாவது சட்டம் - ஒழுங்கு பிரச்னையோ, குற்றச்சம்பவமோ ஏற்பட்டு அவர்கள் பணிக்கு அழைக்கப்பட்டு விடுகிறார்கள்.
மத்திய - மாநில அரசுகள் காவல்துறையினரின் செயல்பாடு, நியமனம், இடமாற்றம் குறித்து தெளிவான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று 2006-இல் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு வற்புறுத்துகிறது. அதேபோல, தவறிழைக்கும் காவல்துறையினர் குறித்த புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது. ஆனால் மத்திய - மாநில அரசுகள் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
கட்டமைப்பு வசதிகளையும், ஆயுதங்களையும் மேம்படுத்தும் வேளையில், 2006-இல் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவல்துறையினரின் செயல்பாட்டிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டால்தான் காவல்துறை மேம்படும். அதுமட்டுமல்லாமல், அரசியல் தலையீடு இல்லாத காவல்துறை செயல்பாடு உறுதிப்படுத்தப்படாமல் குற்றங்களைத் தடுக்கவோ, தீவிரவாதத்தை எதிர்கொள்ளவோ இப்போதிருக்கும் காவல்துறையால் இயலுமா என்பது சந்தேகம்தான்.

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/18/காவல்-சவால்-2792207.html
2791449 தலையங்கம் பாதுகாப்பே இல்லாத நாடு! ஆசிரியர் Tuesday, October 17, 2017 01:15 AM +0530 அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிக் கலாசாரம் ஒட்டுமொத்த உலகையும் பீதியில் ஆழ்த்தியிருக்கிறது. இது ஏனைய நாடுகளுக்கும் பரவிவிடுமோ என்கிற அச்சம் எழுகிறது. 
2012-இல் சான்டி ஹூக் தொடக்கப் பள்ளியில் 26 குழந்தைகளும், ஆசிரியர்களும் சுட்டுத் தள்ளப்பட்டனர். கடந்த ஆண்டு ஃபுளோரிடாவிலுள்ள இரவு விடுதியில் 49 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாயினர். அவற்றையெல்லாம் விஞ்சும் விதத்தில் அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான துப்பாக்கிச் சூடாக அமைந்திருக்கிறது இரு வாரங்களுக்கு முன்பு 64 வயது ஸ்டீபன் பேட்டாக் என்பவர் மிருக வெறியுடன் லாஸ் வேகாஸில் நடத்தியிருக்கும் துப்பாக்கிச்சூடு. இதில் 59 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். 
ஸ்டீபன் பேட்டாக் தான் தங்கியிருந்த விடுதியின் 23-ஆவது மாடியில் அமர்ந்தபடி அங்கே நடந்துகொண்டிருந்த இசை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்துக்கொண்டிருந்தவர்கள் மீது குண்டு மழை பொழியத் தொடங்கினார். அவரிடம் 23 வெவ்வேறு விதமான துப்பாக்கிகள் இருந்திருக்கின்றன. சாதாரணமாக ஒரு சுற்றில் 40 முதல் 60 குண்டுகள் பொழியும் துப்பாக்கியை சில இணைப்புகளின் மூலம் 400 முதல் 800 குண்டுகள் பொழியும் விதத்தில் தரம் உயர்த்தி இருந்தார் அவர். அவரை அடையாளம் கண்டு சுற்றி வளைக்க முற்பட்டபோது தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்திருந்தார் ஸ்டீபன் பேட்டாக். 
ஸ்டீபன் பேட்டாக் ஒரு இஸ்லாமியராகவோ, வெளிநாட்டவராகவோ இருந்திருந்தால் அவரது செயல்பாட்டுக்கு தீவிரவாத முத்திரை குத்தியிருப்பார்கள். அவர் உள்ளூர்க்காரர் என்பது மட்டுமல்ல, எந்தவிதமான குற்றப் பின்னணியும் இல்லாத கோடீஸ்வரர், பட்டயக் கணக்காளர். பணி ஓய்வு பெற்றவர். லாஸ் வேகாஸ் சூதாட்ட மையங்களில் தொடர்ந்து பங்கு பெறுபவர். அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
1982-லிருந்து இதுவரை அமெரிக்காவில் இதுவரை 90 பெருந்திரள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்படுகிறார்கள். 2014-இல் 12,571, 2015-இல் 13,500, 2016-இல் 15,079, 2017-இல் சமீபத்திய லாஸ்வேகாஸ் சம்பவத்தையும் சேர்த்து 11,652 உயிர்கள் துப்பாக்கி தொடர்பான வன்முறைக்கும் நான்கு பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்படும் பெருந்திரள் துப்பாக்கிச் சூட்டுக்கும் பலியாகியிருப்பதாக அமெரிக்காவில் வெளியான துப்பாக்கி வன்முறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. வேடிக்கை என்னவென்றால் மிக அதிகமான ஊடக வெளிச்சத்தையும் முக்கியத்துவத்தையும் பெறும் தீவிரவாத தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகளைவிட இவை மிக மிக அதிகம் என்பதுதான். 
அமெரிக்காவில் துப்பாக்கிச் சட்டத்தை கடுமையாக்குவதற்கான முயற்சிகள் பலமுறை எடுக்கப்பட்டும் அவையெல்லாம் முறியடிக்கப்பட்டிருக்கின்றன. பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது துப்பாக்கிக் கலாசாரத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும் கட்டுப்படுத்த வேண்டியதாவது அவசியம் என்று முனைப்புடன் சில விதிமுறைகளைக் கொண்டுவர முற்பட்டார். 15 முறை அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கொண்டுவர பராக் ஒபாமா எடுத்த எல்லா முயற்சிகளும் உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டன. தனது பதவிக்காலத்தின் கடைசி நாள்களில் துப்பாக்கிச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை நிர்வாக அறிவிப்பின் மூலம் அடைப்பதற்கான அவரது கடைசி முயற்சியும் வெற்றி பெறவில்லை. 
ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களின் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை பறிக்கப்பட்டுவிடும் என்பதேகூட, குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்திய ஆயுதங்களில் ஒன்று. குடியரசுக் கட்சியைப் பொருத்தவரை தனிநபர் துப்பாக்கி வைத்துக்கொள்வது என்பது அமெரிக்க அரசியல் சட்டம் ஒவ்வொருவருக்கும் தந்திருக்கும் தனியுரிமையாகும். டொனால்ட் டிரம்புக்கு வாக்களித்து அதிபராகிய அமெரிக்காவின் அடித்தட்டு உழைக்கும் வெள்ளையர்களைப் பொருத்தவரை துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை மிகவும் முக்கியமானது. துப்பாக்கி உரிமத்தின் மீது கடுமையான விதிமுறைகளை ஏற்படுத்துவது என்பது, ஏற்கெனவே வெளிநாட்டுக் குடியேறிகளால் ஓரங்கட்டப்பட்டிருக்கும் தங்களை மேலும் பலவீனப்படுத்தும் முயற்சி என்று அவர்கள் கருதுகிறார்கள். 
அமெரிக்காவின் இரண்டாவது அரசியல் சாசனத் திருத்தம் ஒவ்வோர் அமெரிக்கருக்கும் தற்காப்புக்கு ஆயுதம் வைத்திருக்கும் உரிமையை வழங்குகிறது. ஏறத்தாழ 5.5 கோடி அமெரிக்கர்கள் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். உலகின் மொத்த மக்கள்தொகையில் 5% மட்டுமே உள்ள அமெரிக்கர்கள், உலகில் பொதுமக்கள் பயன்படுத்தும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களில் 35% முதல் 40% ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். இந்த ஆண்டில் நடைபெற்றிருக்கும் துப்பாக்கிச்சூடுகளில் லாஸ் வேகாஸில் நடந்தது 273-ஆவது துப்பாக்கிச் சூடு. 
துப்பாக்கிக் கலாசாரம் என்பது அமெரிக்கர்களின் மரபணுவிலேயே உள்ள ஒன்று. கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் தண்டிக்கப்பட்ட, நாடு கடத்தப்பட்ட ஐரோப்பியர்கள்தான் அமெரிக்காவில் குடியேறி அங்குள்ள பூர்வகுடிமக்களான செவ்விந்தியர்களை ஈவிரக்கமில்லாமல் கொன்றழித்து இப்போதைய அமெரிக்க தேசத்தை உருவாக்கினார்கள் எனும்போது அங்கே பரவலாக துப்பாக்கிக் கலாசாரம் காணப்படுவதில் வியப்பே இல்லை.
துப்பாக்கிக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பாத அமெரிக்கா, உலகிலுள்ள பிற நாடுகளை 'பாதுகாப்பில்லாத நாடுகள்' என்று முத்திரை குத்துவதுதான் மிகப்பெரிய நகைமுரண்!

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/17/பாதுகாப்பே-இல்லாத-நாடு-2791449.html
2790799 தலையங்கம் கருப்பு ஆடுகள்! ஆசிரியர் Monday, October 16, 2017 02:27 AM +0530 ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்னை மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் வெளியிட்டிருக்கும் துணிச்சலான கருத்து நீதியின் குரலாக ஒலிக்கிறது. கருப்பு வெள்ளை அங்கி அணிந்த சிலர் வழக்குரைஞர்கள் என்ற போர்வையில் மாஃபியாக்களாகவும், ஆள்கடத்தல், பயமுறுத்திப் பணம் பறித்தல் உள்ளிட்ட கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்று தயங்காமல் கூறியிருக்கும் நீதிபதி என். கிருபாகரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அன்னை மருத்துவக் கல்லூரி விவகாரத்தில், அறக்கட்டளை உறுப்பினர்கள் சிலரின் சார்பில் ஆக்கிரமிப்பதற்கு வழக்குரைஞர்கள் சிலர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்குரைஞர்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறையினர் தயங்குகிறார்கள் என்றும், சட்ட ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு வழக்குரைஞர் தொழிலை நெறிப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.
"வலுக்கட்டாயமாக ஏதாவது இடத்தைத் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்ளவோ அல்லது தக்கவைத்துக் கொள்ளவோ, கருப்பு வெள்ளை அங்கி அணிந்துகொண்டு தங்களை வழக்குரைஞர்கள் என்று கூறிக்கொள்ளும் சமூக விரோதிகளை ஒப்பந்தம் செய்துகொள்வது வழக்கமாக மாறிவிட்டிருக்கிறது. அவர்கள் காவல்துறையினரைத் தடுக்கவும், தங்கள் செயலை தடுக்க முற்படுபவர்களை அச்சுறுத்தவும் தயங்குவதில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இப்படியொரு நிலை தமிழகத்தில் காணப்படுகிறது. சொத்துப் பிரச்னைகளில் நீதித்துறையின் மீதும் காவல்துறையின் மீதும் மக்களின் நம்பிக்கை குறைந்து வருவதற்கு இதுதான் காரணம்' என்று நீதிபதி கிருபாகரன் பொட்டில் அடித்தாற்போல கூறிவிட்டிருக்கிறார்.
கிரிமினல் பின்னணி உள்ள பலர் ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் செயல்படும் சில "லெட்டர் பேட்' சட்டக் கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்று வழக்குரைஞர் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தக் கல்லூரிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகளோ, தரமான ஆசிரியர்களோ இருக்கிறார்களா என்பதைக்கூட உறுதிப்படுத்தாமல் இந்திய பார் கவுன்சில் அந்தக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குகிறது. இதுவும் அனைவருக்குமே தெரியும் என்றாலும் இதுவரை இதுகுறித்து கவலை தெரிவிக்கவோ குரலெழுப்பவோ யாருக்கும் துணிச்சல் வரவில்லை. 
ஆந்திராவில் 200-க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரிகளும் கர்நாடகத்தில் 125-க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரிகளும் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில், வகுப்புக்குச் செல்லாமலேயே ஒருவர் பட்டம் பெற்றுவிட முடியும். தேவைக்கு அதிகமான அளவுக்கு சட்டக் கல்லூரிகள் அந்த மாநிலங்களில் ஏன் இருக்கின்றன என்று மத்திய - மாநில அரசுகளோ, இந்திய பார் கவுன்சிலோ சிந்தித்துப் பார்க்காமல் இருந்திருப்பதுதான் வினோதமாக இருக்கிறது. 
இந்தக் கல்லூரிகளில் பட்டம் பெற்று தங்களது கிரிமினல் நடவடிக்கைகளுக்கு வலுசேர்க்க வழக்குரைஞர்களாக பலர் களம் இறங்குகிறார்கள். இந்தக் கல்லூரிகளில் முறையான மாணவர் வருகைப்பதிவு காணப்படுகிறதா, தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா என்பன குறித்து ஆராய பார் கவுன்சில் ஆஃப் இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி என். கிருபாகரன் கூறியிருக்கிறார்.
2010-ஆம் ஆண்டில் இந்தியாவில் 800 சட்டக் கல்லூரிகள்தான் இருந்தன. அப்போது பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவராக இருந்த கோபால் சுப்பிரமணியம் இந்த அளவுக்கு சட்டக் கல்லூரிகள் இந்தியாவில் தேவையில்லை என்றும், நமது தேவைக்கு 175 சட்டக் கல்லூரிகளே போதும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 175-ஆகக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார் அவர். 
ஆனால், அவருக்குப் பிறகு பார் கவுன்சில் தலைமைக்கு வந்தவர்கள் அடுத்த இரண்டே ஆண்டுகளில் 800-ஆக இருந்த சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 1200-ஆக அதிகரிக்க அனுமதித்தனர். 2016-இல் மூன்று நாள்களுக்கு ஒரு சட்டக் கல்லூரிக்கு என்கிற அளவில் அனுமதிகள் வாரி வழங்கப்பட்டன. இதன் விளைவாகதான் வழக்குரைஞர்களின் தரம் குறைந்துவிட்டிருக்கிறது என்கிற நீதிபதி என். கிருபாகரனின் கருத்து மிக மிகச் சரி.
பல மாநிலங்களில் சட்டப் படிப்பில் சேர்வதற்கு எந்தவித மதிப்பெண் தகுதியும் தேவையில்லை என்கிற நிலை தொடர்கிறது. பல தனியார் "லெட்டர் பேட்' சட்டக் கல்லூரிகள் பணத்தை வாங்கிக்கொண்டு பட்டம் வழங்குவதும், எந்தவித தகுதிகாண் தேர்வும் இல்லாமல் பார் கவுன்சில்கள் அவர்களை வழக்குரைஞர்களாக பதிவு செய்து கொள்வதும் தொடரும் வரையில் வழக்குரைஞர்களின் தரம் குறித்து கவலைப்படுவதில் பயனில்லை. 
இதுபோல பட்டம் பெற்று வழக்குரைஞர்களாக பதிவு செய்து கொள்பவர்கள், தங்களது அரசியல் செல்வாக்கு மூலம் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்கப்படும் வாய்ப்பும் உண்டு. அவர்கள் உயர்நீதிமன்றங்களுக்கும் உயர்த்தப்படமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? 
முறையாக வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பலரும், நீதித்துறையின் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறையுள்ள பலரும் வெளியில் தெரிவிக்க முடியாமல் மனப்புழுக்கத்துடன் அடக்கிவைத்துக் கொண்டிருந்த "போலி' வழக்குரைஞர்கள் பிரச்னையைத் துணிந்து கையிலெடுத்து சாட்டையை சுழற்றியிருக்கிறார் நீதிபதி என். கிருபாகரன். இதன் மூலமாவது இந்திய பார் கவுன்சிலும் மத்திய - மாநில அரசுகளும் விழித்துக்கொண்டு நீதித்துறையின் தரத்தை தூக்கி நிறுத்த துணியும் என்று எதிர்பார்ப்போமாக!

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/16/கருப்பு-ஆடுகள்-2790799.html
2789967 தலையங்கம் நீதித்துறையா தீர்மானிப்பது? ஆசிரியர் Saturday, October 14, 2017 02:23 AM +0530 வரும் நவம்பர் 1-ஆம் தேதிவரை தில்லியில் பட்டாசுகள் விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை தடை விதித்திருக்கிறது. கடந்த ஆண்டும் இதேபோல தீபாவளியையொட்டிய வாரங்களில் பட்டாசுகள் விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை பிறப்பித்திருந்தது. இந்த ஆண்டும் அதேபோல தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தீபாவளி அன்று தில்லி உலகிலேயே மிக மோசமான அளவுக்கு காற்றுமாசால் பாதிக்கப்படுவது புதிதொன்றும் அல்ல. சுற்றியுள்ள ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலப் பகுதிகளில் விவசாயிகள் அறுவடைக்குப் பிறகு எஞ்சியிருக்கும் வைக்கோலை எரிப்பதால் ஏற்படும் காற்றுமாசு போதாது என்று தீபாவளி பட்டாசு வெடிப்புகையும் சேர்ந்து கொள்ளும்போது உலகிலேயே மிக மோசமான நிலைமைக்கு தில்லி தள்ளப்படுகிறது. இதனால், தில்லியிலுள்ள பலர் நுரையீரல் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். ஏற்கெனவே ஆஸ்துமா, காசநோய் உள்ள நோயாளிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
நவம்பர் 1-ஆம் தேதி வரை தலைநகர் தில்லி பகுதியில் பட்டாசுகள் விற்பனை தடை செய்யப்பட்டிருப்பதால் எந்த அளவுக்கு காற்றின் தரம் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பது உச்சநீதிமன்றத்தின் கருத்து. இந்தக் கருத்து உடன்பாடானதுதான். 
ஆனாலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, தில்லியிலும் தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முற்றிலுமாக பட்டாசு விற்பனையை தடுத்துவிடுமா என்பது சந்தேகம்தான். உச்சநீதிமன்றம் நல்லெண்ணத்துடன் எடுத்திருக்கும் இந்த முடிவு நடைமுறை சாத்தியமாகத் தெரியவில்லை.
பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுவது என்பது காலங்காலமாக இருந்து வரும் வழக்கம். எந்த ஒரு பண்டிகையோ, விழாவோ, கொண்டாட்டமோ தில்லியில் பட்டாசு இல்லாமல் கொண்டாடப்படுவது இல்லை என்கிற நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளித்து மக்கள் உடனடியாக பட்டாசு வெடிப்பதை குறைப்பதோ, முற்றிலுமாகக் கைவிடுவதோ ஏட்டளவில் மட்டுமே சாத்தியம். பட்டாசுக்கான தடையைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களிடம் பட்டாசுக்கெதிரான மனநிலையை உருவாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறுகிறது. இதெல்லாம் நடக்கக்கூடிய காரியம் அல்ல என்பதை நீதிபதிகள் உணராதது வியப்பாக இருக்கிறது.
தடை என்பது எப்போதுமே எதிர்பார்த்த பலனை அளிப்பதில்லை. சொல்லப்போனால், எப்போது தடைவிதிக்கப்படுகிறோ அப்போதெல்லாம் மக்களில் பெரும்பாலோருக்கு அந்தத் தடையை மீறும் மனோபாவம் வருவதுதான் வழக்கம். தடை விதிக்கப்படாமல் விழிப்புணர்வுப் பிரசாரம் முடுக்கிவிடப்பட்டிருந்தால், காலப்போக்கில் பட்டாசு வெடிப்பதை குறைக்கவும் கைவிடவும் மக்கள் தயாராகக்கூடும். இப்போது தீபாவளி நெருங்கும் வேளையில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அது மக்களை வெறுப்படையச் செய்யுமே தவிர, நீதிமன்ற ஆணையை ஏற்கச் செய்யாது.
நீதிமன்றத் தடையால் உடனடியாக நேரப்போவது, அதிகரித்த விலையில் கள்ளச்சந்தையில் பட்டாசு விற்பனை கொடிகட்டிப் பறக்கும் என்பதுதான். தில்லியின் தெருக்களில் எல்லாம் காவல்துறையினர் ரோந்து போய் தடையை மீறிப் பட்டாசு வெடிக்கும் சிறுவர்களைக் கைது செய்யப் போகிறார்களா? ஆங்காங்கே தடையை மீறியோ அல்லது திருட்டுத்தனமாகவோ பட்டாசுகள் விற்கும் சில்லறை விற்பனையாளர்களையும் வணிகர்களையும் கைது செய்வார்களா? அல்லது அவர்களிடமிருந்து கையூட்டுப் பெற்று தங்களது பைகளை நிரப்பிக் கொள்வார்களா? இதையெல்லாம் உச்சநீதிமன்றம் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தபோது ஏன் சிந்தித்துப் பார்க்கவில்லை என்பது புரியவில்லை.
தில்லியின் காற்றுமாசுக்கு மிகமுக்கியமான காரணம், முன்பே கூறியதுபோல அண்டை மாநிலங்களில் அறுவடைக்குப் பிறகு வயலில் இருக்கும் எஞ்சிய வைக்கோலை தீயிடுவதால் ஏற்படும் புகைதான். அப்படி வைக்கோலுக்குத் தீ மூட்டுவதற்கு தடை இருந்தும்கூட, விவசாயிகள் அதைக் கைவிடுவதாக இல்லை. வைக்கோல் எரிப்பதால் ஏற்படும் புகை மட்டுமல்லாமல், தில்லி சாலைகளில் காணப்படும் தூசியும் (38%), வாகனங்களால் ஏற்படும் புகையும் (20%) கூட முக்கியமான காரணங்கள். 
அருகிலுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் பாலைவனப் பகுதிகளிலிருந்து மிகவும் நுண்ணிய தூசு, காற்றால் அடித்துவரப்பட்டு தில்லியின் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. தூசால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்த நடைமேடை அமைத்து தினமும் சாலைகளை சுத்தப்படுத்த உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருக்கிறது. 
தில்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கும் சேர்த்து மொத்தமாக 19 சாலை துப்புரவு இயந்திரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அதேபோல, தனியார் வாகனங்களைக் குறைப்பதற்கு பொதுப்போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும் என்கிற திட்டமும் வெற்றியடைந்ததாகத் தெரியவில்லை. மெட்ரோ ரயில் வந்தபின்னும்கூட தில்லியில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை குறையவில்லை. 
நிர்வாகத்தின் பொறுப்புகளில் நீதித்துறை தலையிடுவது ஏற்புடையதல்ல. இதுபோன்ற கொள்கை முடிவுகள் எடுப்பதும், அவற்றை நடைமுறைப்படுத்துவதும் ஆட்சியாளர்களின் வேலையே தவிர, நீதிமன்றங்களின் வேலையல்ல. உச்சநீதிமன்றம் மத்திய - மாநில அரசுகளுக்கு இதுகுறித்து கவலை தெரிவிக்கலாம். ஆனால், பொதுமக்கள் எப்படி விழாக்களைக் கொண்டாடுவது என்பதை நீதித்துறையா தீர்மானிப்பது?

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/14/நீதித்துறையா-தீர்மானிப்பது-2789967.html
2789242 தலையங்கம் அரைகுறை அக்கறை! ஆசிரியர் Friday, October 13, 2017 02:33 AM +0530 மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், 2017-32 ஆண்டுக்கான, 15 ஆண்டு கால தேசிய வனங்கள் செயல்திட்டத்தை வெளியிட்டிருக்கிறது. இதன்மூலம், சில திட்டங்களையும் ஏனைய அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறித்த இலக்குகளையும் நிர்ணயித்திருக்கிறது. வனவிலங்குகள், வனம், வனத்தில் வாழும் மக்கள், வனப் பாதுகாப்பு தொடர்புடைய அரசுத் துறைகள் என்று வனத்துடன் தொடர்பான அனைத்துத் தரப்பின் ஒத்துழைப்பையும் ஒருங்கிணைத்து புதிய தேசிய வனங்கள் செயல்திட்டத்தை முன்மொழிந்திருக்கிறது.
இப்படியொரு செயல்திட்டத்தை முன்மொழிவது இது மூன்றாவது முறை. அடுத்த 15 ஆண்டுகளுக்கான சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் ஆகியவை குறித்த செயல்திட்டமும் இதன் முக்கியமான நோக்கம். வனங்களில் வாழும் சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் வனவிலங்குகளைப் பாதுகாப்பது, வனவிலங்கு சரணாலயப் பகுதிகளில் அதிகரித்திருக்கும் வனச் சுற்றுலாவை நெறிப்படுத்துவது ஆகியவையும் இந்த செயல்திட்டத்தின் குறிக்கோள்கள்.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் கானுயிர்ச் சுற்றுலாவுக்கு வரவேற்பு அதிகரித்திருப்பதோடு, தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் ஆகியவையும் மக்களின் கவனத்தை அதிகமாகக் கவர்ந்திருக்கின்றன. வெளிநாடுகளுக்கு சுற்றுலா போக முடியாத நடுத்தரக் குடும்பத்தினரின் கவனத்தை, இந்தியாவில் இருக்கும் பல வனவிலங்கு சரணாலயங்கள் ஈர்த்திருக்கின்றன. 
சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்தை ஈடுகட்டும் அதேநேரத்தில், வனவிலங்குகளின் நடமாட்டத்துக்கான பகுதிகள் சிதைந்து
விடாமல் பாதுகாப்பது என்பது மிக முக்கியம். ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வனவிலங்கு சரணாலயங்கள் மிகவும் அடர்த்தியான காடுகளில் எந்தவித இடையூறும் இல்லாமல் திரியும் வனவிலங்குகளை உள்ளடக்கியவை. ஆனால் இந்தியாவில் அப்படியல்ல. வனவிலங்கு சரணாலயங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் வளர்ச்சி அடைந்துவிட்ட நிலையில், வனவிலங்குகள் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்கின்றன.
"வனப்பாதுகாப்பு இந்தியா' என்கிற தலைப்பில் ஓர் ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி 72% சுற்றுலா உறைவிடங்களும், உணவகங்களும் தேசிய வனவிலங்கு சரணாலயங்களை ஒட்டி அமைந்திருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை கடந்த 17 ஆண்டுகளில் அமைக்கப்பட்டவை. 
ஏறத்தாழ 85% சுற்றுலா விடுதிகள் தேசிய வனவிலங்கு பூங்காக்களின் எல்லைக்கு வெளியே ஐந்து கி.மீ. சுற்றளவுக்குள் அமைந்திருக்கின்றன. இந்த தங்கும் விடுதிகள், உள்ளூரில் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்துகின்றன என்பது மட்டுமல்ல, வனவிலங்கு சரணாலயங்களைச் சுற்றியுள்ள பகுதிகளின் தண்ணீரையும், சரணாலயப் பகுதிகளில் உள்ள மரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் விறகுகளையும் பயன்படுத்துகின்றன. சுற்றுச்சூழலைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் கழிவுகளையும் குப்பைகளையும் சரணாலயங்களில் கொட்டுகிறார்கள். 
தேசிய வனங்கள் செயல்திட்டத்தின்படி கூறப்பட்டிருக்கும் பரிந்துரைகள் புதியவையல்ல. வழக்கம்போல கானுயிர்ச் சுற்றுலா, வனத்தையும் வனவிலங்குகளையும் வனவிலங்கு சரணாலயங்களையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்கிற குறிக்கோளை முன்வைக்கிறதே தவிர, தெளிவான வழிமுறைகளைக் குறிப்பிட்டு வனவிலங்கு சரணாலயங்களைச் சுற்றியுள்ள விடுதிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதாக இல்லை. செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு பரிந்துரையும் பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்பும் பல அமைச்சகங்கள், தனியார் ஆகியோரின் ஆதரவும் இருந்தால் மட்டுமே நடைமுறை சாத்தியம். 
வனவிலங்கு சரணாலயத்துக்குள் சுற்றுலாப் பயணிகளின் செயல்பாடு உள்ளிட்ட பல விதிமுறைகள் ஏற்கெனவே காணப்படுகின்றன. ஆனால், அவை செயல்படுத்தப்படுவதில்லை என்பதுதான் உண்மை. இதற்குக் காரணம், கானுயிர்ச் சுற்றுலா என்பது வணிக ரீதியில் மட்டுமே பார்க்கப்படுகிறதே தவிர, வனவிலங்குகளின் பாதுகாப்புக் குறித்த கவலையை கருத்தில் கொள்வதில்லை. இதுகுறித்து நாம் முடிவெடுப்பதற்கு முன்னால், நம்மைவிட வளர்ச்சியில் பின் தங்கி இருக்கும் ஆப்பிரிக்க நாடுகள் எந்த அளவுக்கு கானுயிர்ச் சுற்றுலா குறித்த தெளிவான சிந்தனையுடன் இருக்கின்றன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
போபாலில் உள்ள இந்திய வனப்பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் 1998 தேசிய வனக்கொள்கையின் அடிப்படையிலான 2016-க்கான வனக்கொள்கை வரைவு, கருத்தில் கொள்ளத்தக்கது. ஆனால், எந்தவித காரண காரியமுமில்லாமல் அந்த வரைவு திரும்பப் பெறப்பட்டது என்பது மட்டுமல்ல, அதுகுறித்து இப்போது யாருமே பேசுவதுகூட கிடையாது. 
இந்த இடைவெளியில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இரண்டு வனவாழ்வுத் திட்டங்களை அறிவித்துவிட்டது. 2002-லும், கடந்த வாரத்திலும் என்று 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய வனங்கள் திட்டத்தை அறிவிக்கும் மத்திய அரசு, 30 ஆண்டுகளாகியும் ஏன் இன்னும் மத்திய வனக்கொள்கையை அறிவிக்கவில்லை என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. செயல்திட்டம் என்பது வேறு கொள்கை என்பது வேறு.
சர்வதேச அளவில் அணுகும்போது இந்தியாவில் அடர்த்தியான காடுகளின் அளவு மிகமிக சரிந்திருக்கிறது. நாம் மிக அதிக அளவில் மர இறக்குமதி செய்கிறோம். அதற்காக, இருக்கும் வனங்களை அழித்து நமது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாது. ஆங்காங்கே மரக்கன்றுகள் நடுவதால் மட்டுமே பல ஆண்டுகளாகக் குறைந்துவரும் வனப்பகுதிகளை ஈடுகட்டிவிட முடியாது. தேசிய வனக்கொள்கையுடன் இணையாத தேசிய வனங்கள் செயல்திட்டம் என்பது அர்த்தமற்றது!

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/13/அரைகுறை-அக்கறை-2789242.html
2788615 தலையங்கம் பாதுகாப்பில்லாத பயணங்கள்! ஆசிரியர் Thursday, October 12, 2017 01:40 AM +0530 மும்பையின் புறநகர் ரயில்நிலையங்களில் ஒன்றான எல்பின்ஸ்டன் சாலை ரயில்நிலையத்தின் பயணிகள் மேம்பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் 23 பேர் மரணமடைந்ததும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும்கூட அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. சம்பவம் நடந்து முடிந்த பிறகு ரயில்வே காவல்துறையினரும், மும்பை மாநகர காவல்துறையினரும் அந்தப் பயணிகள் மேம்பாலம் யாருடைய அதிகார வரம்பிற்குள் வருகிறது என்பது குறித்து விவாதம் செய்து கொண்டிருந்ததுதான் அதிர்ச்சி அளிக்கிறது. காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவதிலும், நெரிசலைக் கட்டுப்படுத்துவதிலும் அக்கறை காட்ட வேண்டியவர்கள் மனிதாபிமானமே இல்லாமல் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்திக்கொண்டு பொறுப்பைத் தட்டிக்கழித்த அவலம் இந்தியா தவிர வேறு எந்த ஒரு நாட்டிலும் காணக் கிடைக்காது.
இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கும் மும்பையில் ஏற்பட்ட அவலம் அதிக வேறுபாடு இல்லாமல் பொருந்தும். ஒன்று, ஒன்றுக்கும் மேற்பட்ட துறையினர் ஒரே வேலையில் ஈடுபடுவார்கள். அல்லது ஒரு வேலைக்காக ஒதுக்கப்பட்டிருப்பவர்கள் தங்கள் கடமையைச் செய்யாமல் தட்டிக்கழிப்பார்கள். எப்படி இருந்தாலும் எந்தவொரு தவறுக்கும் யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள். இந்த நிலைமையின் பிரதிபலிப்புதான் மும்பை எல்பின்ஸ்டன் சாலை பயணிகள் மேம்பால நெரிசல் விபத்து.
மும்பை மாநகரத்தின் ஒன்றரைக்கோடி மக்கள்தொகையில் 78% மக்கள் மின்சார ரயில்களையும் 'பெஸ்ட்' போக்குவரத்து ஊர்திகளையும்தான் நம்பியிருக்கிறார்கள். மும்பையில் 75 லட்சம் பேர் தினந்தோறும் புறநகர் மின்சார ரயில்களை பயன்படுத்துகிறார்கள். 2016 - 17இல் மட்டும் மும்பை புறநகர் மின்சார ரயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 270 கோடி. இத்தனை பேர் பயணிக்கும் ரயில் சேவைக்கு எந்த அளவுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அதன் கட்டமைப்பு வசதிகளும் பாதுகாப்பும் மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும்? ஆனால் அப்படி செய்யப்படவில்லை.
கடந்த 2016-இல் மட்டும் மும்பையில் 3200-க்கும் மேற்பட்டவர்கள் ரயில் விபத்தில் இறந்திருக்கிறார்கள். அதாவது, தினந்தோறும் சராசரியாக 9 பேர் இறந்திருக்கிறார்கள். 136 ரயில் நிலையங்களுடன் இயங்கும் மும்பை புறநகர் மின்சார ரயில் சேவை 40 ஆண்டுகளுக்கு முந்தைய வசதிகளுடன்தான் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் வர்த்தக நகரம் என்று போற்றப்படும் மும்பை புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்னும் குளிர்பதன வசதியுள்ள பெட்டிகள் கிடையாது. 
மேற்கிந்திய ரயில்வேயின் புறநகர் ரயில் சேவைக்காக பயணிகளின் தேவையை ஈடுகட்ட உயரடுக்கு (எலிலேடட்) ரயில் சேவை தொடங்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இரண்டாவது மும்பை மாநகர போக்குவரத்துத் திட்டத்தின்படி கூடுதல் தண்டவாளங்களை அமைத்துப் பயணிகள் ரயில் சேவையின் அளவை அதிகரிப்பது, ரயில் பாதைகளை அதிகரிப்பது, பழைய தண்டவாளங்களையும் அடிக்கட்டைகளையும் (ஸ்லீப்பர்) மாற்றுவது ஆகிய திட்டங்கள் அனைத்துமே தாமதப்பட்டிருக்கின்றன. அதனால் முதலீட்டுச் செலவுகள் அதிகரித்து கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. 
எல்பின்ஸ்டன் சாலை விபத்தைப் பொருத்தவரை ரயில்வே நிர்வாகத்தைதான் முற்றிலுமாகக் குற்றப்படுத்த வேண்டும். இந்த பயணிகள் மேம்பாலத்தில் விபத்து ஏற்படும் என்று பயணிகள் பலரால் தொடர்ந்து புகார்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கூடுதலாக ஒரு பயணிகள் ரயில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்கிற திட்டம் ஏட்டளவில் மட்டுமே நெடுங்காலமாகக் காணப்படுகிறது. இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய மேம்பாலம் அமைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி இருக்கிறார்கள். இவ்வளவெல்லாம் இருந்தும்கூட இது குறித்து மேற்கிந்திய ரயில்வே நிர்
வாகம் கவலைப்படாமல் இருந்திருக்கிறது எனும்போது எந்த அளவுக்கு பயணிகளின் பாதுகாப்பு குறித்து அது கவலைப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ஆண்டுதோறும் 3,200-க்கும் மேற்பட்டவர்கள் ரயில் விபத்தில் இறக்கிறார்கள் என்றாலும்கூட, அதுகுறித்துக் கவலைப்படாமல் ரயில்வே துறை இயங்கிவருவது குறித்து, எல்பின்ஸ்டன் சாலை விபத்துக்குப் பிறகுதான் விழிப்புணர்வே ஏற்படுகிறது என்பது மிகப்பெரிய சோகம். கடந்த 20 ஆண்டுகளாக சாலைகள் அமைப்பதிலும், ரயில் பெட்டிகளை நவீனப்படுத்துவதிலும், அதிநவீன புல்லட் ரயில் விடுவதிலும் செலுத்தும் கவனத்தை, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் நலனிலோ, பாதுகாப்பிலோ அரசு செலுத்தவில்லை என்பதைத்தான் இந்த மரணங்கள் வெளிப்படுத்துகின்றன. 
மழை, வெயிலிலிருந்து பாதுகாக்கும் வகையில் மின் தூக்கிகள் (லிப்ட்), மின் படிகள் (எஸ்கலேட்டர்) அமைத்தல், ரயில்பெட்டியிலிருந்து இரண்டு புறமும் இறங்கும் வசதி, தடையில்லாமல் ரயில் நிலையத்திலிருந்து சாலைக்கு வெளியேறும் பாதை போன்றவை ரயில் நிலையங்களில் நெரிசல் ஏற்படாமல் பயணிகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தித் தருபவை. அவை குறித்து கவலைப்படாமல் ரயில்வே நிர்வாகம் தொடர்வது கண்டனத்துக்குரியது.
இந்திய ரயில்வேயைப் பொருத்தவரை தண்டவாளங்கள் தொடர்பான பிரச்னைகள் மட்டும் 2016 - 17இல் 3,544. சமிக்ஞை உபகரணங்கள் (சிக்னல்கள்) இயங்காத சம்பவங்கள் 1,30,200. இந்தியாவில் ரயில்கள் தடம்புரள்வதால் 53% ரயில் விபத்துகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் ஆண்டுதோறும் 860 கோடி பேர் ரயில்களை நம்பி பயணிக்கின்றனர். பிரபா தேவி என்று பெயர் மாற்றப்பட்டிருக்கும் எல்பின்ஸ்டன் சாலை ரயில்நிலைய மேம்பால நெரிசல் விபத்து ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/12/பாதுகாப்பில்லாத-பயணங்கள்-2788615.html
2787948 தலையங்கம் திருத்துங்கள் தீர்ப்பை! ஆசிரியர் Wednesday, October 11, 2017 01:14 AM +0530 சட்டத்தால் மட்டுமே சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டுவந்துவிட முடியாது என்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் சமூகத்தின் தவறான கண்ணோட்டத்தையும் நாகரிக சமுதாயத்திற்கு ஏற்புடையதல்லாத பழக்க வழக்கங்களையும் மாற்றுவதில் சட்டம் நிச்சயமாக உதவுகிறது. 
ஆண் - பெண் உறவில் இருபாலரும் அன்பினால் பிணைக்கப்பட்டு பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொள்வது என்பது சமுதாயத்தாலும் சட்டத்தாலும் அங்கீகரிக்கப்படுகிறது. அவர்களில் ஒருவருடைய விருப்பத்திற்கு மாறாக மற்றவர் செயல்படுவதோ, வற்புறுத்துவதோ இயற்கை தனக்குத் தந்திருக்கும் பலத்தைப் பிரயோகித்து ஒரு பெண்ணை ஆண் தனது இச்சைக்கு உடன்பட கட்டுப்படுத்துவதோ பாலியல் வன்கொடுமை என்று கருதப்படுகிறது. இரண்டு வெவ்வேறு உயர்நீதிமன்றங்களில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்புகள் அதிர்ச்சி அளிப்பவையாகவும், பாலியல் வன்கொடுமையின் அடிப்படையையே தகர்ப்பவையாகவும் அமைந்திருக்கின்றன.
திரைப்படத் தயாரிப்பாளர் மொஹம்மூத் பரூக்கியைத் தனது நண்பராக கருதிய அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் பாலியல் கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்டார். பாலியல் கொடுமைக்கு ஆளான அந்த அமெரிக்கப் பெண் தொடுத்த வழக்கில் கீழமை நீதிமன்றம் மொஹம்மூத் பரூக்கியை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் மேல்முறையீட்டில், தில்லி உச்சநீதிமன்றம் மொஹம்மூத் பரூக்கியை விடுதலை செய்து தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சி அளிப்பது மட்டுமல்ல, பாலியல் வன்கொடுமை சட்டத்தின் அடிப்படையையே தகர்ப்பதாகவும் அமைந்திருக்கிறது. 
தயாரிப்பாளர் மொஹம்மூத் பரூக்கியுடன் பல ஆண்டுகளாக அந்த அமெரிக்கப் பெண்மணி நட்புப் பாராட்டி வந்தார் என்பது உண்மையாக இருக்கலாம். அதற்காக அந்தப் பெண்மணியின் முழு சம்மதம் பெறாமல், உறவு கொள்ள முற்பட்டதை எந்தவொரு காரணத்தாலும் நியாயப்படுத்திவிட முடியாது. அந்த அமெரிக்கப் பெண் தன்னுடைய எதிர்ப்பை வன்மையாக தெரிவிக்கவில்லை என்றும், மிகவும் தயக்கத்துடன்தான் மொஹம்மூத் பரூக்கியின் பாலியல் ஆர்வத்துக்கு மறுப்புத் தெரிவித்தார் என்றும் உயர்நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்படுகிறது. 
'மனித மனநிலை சிலவேளை தயக்கத்துடனான மறுத்தலை, வெளிப்படுத்தாத சம்மதம் என்று எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும், உறவில் ஈடுபடுபவர்கள் அறிமுகமில்லாதவர்களாக இருந்தால் மட்டுமே தயக்கத்துடனான மறுத்தலை பாலியல் வன்கொடுமைக்குக் காரணமாக்க முடியும்' என்றும் நீதிமன்றம் தெரிவித்திருப்பது விசித்திரமாக இருக்கிறது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பாலியல் வன்கொடுமை குறித்த சமூகத்தின் பார்வையை நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னால் கொண்டுபோய் நிறுத்துகிறது. இரண்டு காவல்துறையினரின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் மதுரா என்கிற ஆதிவாசிப் பெண். அந்த இரண்டு காவல்துறையினரும் நீதிமன்றத்தால் நிரபராதி என்று அப்போது விடுவிக்கப்பட்டனர். 
மதுரா என்கிற அந்த ஆதிவாசிப் பெண் அதற்கு முன்னால் வேறு சிலருடன் பாலியல் உறவு கொண்டிருந்தவர் என்பதும், காவல்துறையினரால் வன்கொடுமைக்கு ஆளானபோது உதவி கேட்டு குரலெழுப்பவோ, அந்த காவல்துறையினரின் பலவந்தத்தை எதிர்த்துப் போராடவோ முயலவில்லை என்றும் அப்போது அந்தத் தீர்ப்பில் காரணங்கள் கூறப்பட்டன. மதுரா என்கிற ஆதிவாசிப் பெண்ணுக்கு அநீதி வழங்கப்பட்டது. அந்த அநீதிக்கு எதிராக இந்தியா முழுவதும் எழுந்த எதிர்ப்பின் விளைவுதான் கடுமையான பாலியல் வன்கொடுமைச் சட்டம்.
அமெரிக்க ஆராய்ச்சியாளர் பெண்மணிக்கும், மதுரா என்கிற ஆதிவாசிப் பெண்ணுக்கும் இழைக்கப்பட்ட அநீதிக்கும், அவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கும் தரப்பட்டிருக்கும் தீர்ப்புகளுக்கும் அதிக அளவிலான மாற்றம் காணப்படவில்லை. 'முடியாது, மாட்டேன், வேண்டாம்' என்பவை ஒரு பெண்ணால் முணுமுணுப்பாகவோ, செய்கையாலோ, உடல் மொழியாலோ மென்மையாகக் கூறப்பட்டாலும், வன்மையாகக் கூறப்பட்டாலும் அதன் பொருள் ஒன்றாகத்தான் இருக்க முடியுமே தவிர, அது 'ஏற்றுக்கொள்கிறேன்' என்பதாக இருக்க முடியாது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் ஆணின் புரிதலின் அடிப்படையில் பெண்ணின் சம்மதம் கருதப்படுமேயானால், இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்தனை பாலியல் வன்கொடுமை வழக்குகளிலும் குற்றவாளிகள் நிரபராதிகளாகவும், பாதிக்கப்பட்டவர்கள் நீதி கிடைக்காதவர்களாகவும் மாறும் அவலம் ஏற்படும்.
இன்னொரு வழக்கில் பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை குற்றத்துக்காக தண்டிக்கப்பட்ட மூன்று பேரின் 20 ஆண்டு தண்டனையை ரத்து செய்து அவர்களை நிரபராதிகள் என்று விடுவித்திருக்கிறது. காரணம், பாதிக்கப்பட்ட பெண் அதற்கு முன்னால் பலருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதும், பாலியல் உறவு கொள்வது அவருக்கு புதிதல்ல என்பதும். 
இது என்ன வேடிக்கை? ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டவராகவே இருந்தாலும்கூட, அவரது விருப்பத்துக்கு மாறாகக் கட்டாயப்படுத்தப்பட்டால், அது பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்பட வேண்டும் என்பதுதானே நியாயம்? இப்படியொரு தீர்ப்பை பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்ற நீதிபதிகளால் எப்படி தரமுடிந்தது என்பது வியப்பாக இருக்கிறது.
உச்சநீதிமன்றம் இந்த இரண்டு தீர்ப்புகளையும் மீள்பார்வை செய்து உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் திருத்தி எழுதியாக வேண்டும். இல்லையென்றால், பாலியல் வன்கொடுமைச் சட்டத்துக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும்.
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/11/திருத்துங்கள்-தீர்ப்பை-2787948.html
2787347 தலையங்கம் கலாசாரம் மாறுகிறது! ஆசிரியர் Tuesday, October 10, 2017 01:10 AM +0530 இந்தியாவில் பரவலாகக் காணப்படும் 'மிகமிக முக்கியப் பிரமுகர்கள்' கலாசாரத்துக்கு ரயில்வே அமைச்சகம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. ரயில்வே ஆணையத்தின் தலைவரும், ஆணைய உறுப்பினர்களும் எங்கே போனாலும் அவர்களை வரவேற்க மண்டல பொது மேலாளர்களும், மூத்த அதிகாரிகளும் காத்திருக்கும் நடைமுறைக்கு விடை கொடுக்கப்பட்டிருக்கிறது. 
இந்த முடிவுக்கு, இந்திய ரயில்வே ஆணையத்தின் தற்போதைய தலைவர் அஸ்வினி லோஹானிக்கு நாம் நன்றி கூற வேண்டும். சமீபத்தில் அவர் மும்பைக்குச் சென்றபோது அவரை வரவேற்க மும்பை விமான நிலையத்தில் மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே மண்டலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் காத்திருந்தனர். இதைப் பார்த்து எரிச்சலடைந்த இந்திய ரயில்வே ஆணையத்தின் தலைவர் அஸ்வினி லோஹானி, இதுபோல மேலதிகாரிகளை வரவேற்கும் மரபுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பணித்தார். 
தாம் சொன்னதை செயல்படுத்தும் முயற்சியிலும் அவர் இறங்குவார் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவரது பரிந்துரையை உடனடியாக ஏற்று, ரயில்வே அமைச்சர் ஒட்டுமொத்த ரயில்வே நிர்வாகத்திற்கும வழக்கத்திலிருக்கும் தேவையில்லாத நெறிமுறைகள் பலவற்றை அகற்றுவதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.
1981-இல் ரயில்வே ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில்தான் இதுபோல மேலதிகாரிகள் வரும்போது, அந்த ரயில்வே மண்டலத்திலுள்ள மூத்த அதிகாரிகள் வரவேற்கும் கலாசாரம் ஆரம்பமானது. கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி ரயில்வே அமைச்சகத்தால் பிறப்பிக்கப்பட்டிருக்கும் புதிய உத்தரவின்படி, ரயில்வே நிர்வாகம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
ரயில்வே ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வரும்போது விமான, ரயில் நிலையங்களில் அவர்களை வரவேற்க அதிகாரிகள் செல்ல வேண்டும் என்கிற வழக்கம் கைவிடப்படுகிறது. அதுமட்டுமல்ல, எந்த ஒரு அதிகாரியும் பூங்கொத்து, அன்பளிப்பு உள்ளிட்டவைகளை எந்தக் காரணத்துக்காகவும் பெறுவது கூடாது என்றும் அந்த உத்தரவின் மூலம் தடை செய்யப்பட்டிருக்கிறது.
ரயில்வே அமைச்சகத்தின் உத்தரவு மூத்த அதிகாரிகளுக்கு மட்டுமோ, அவர்களது அலுவலக நிர்வாகச் செயல்பாடுகள் குறித்தது மட்டுமானதோ அல்ல, அவர்களுடைய தனிப்பட்ட முறை
யிலான இப்போதைய வாழ்க்கை முறைக்கும் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. எல்லா உயர் அதிகாரிகளும், பரவலாக ரயில்வேயின் கடைநிலை ஊழியர்களை, தங்கள் வீட்டு வேலைக்குப் பயன்படுத்திக் கொள்வது என்பது பிரிட்டிஷார் காலத்திலிருந்து தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படும் நடைமுறை. இனிமேல் ரயில்வே ஊழியர்களைத் தங்கள் தனிப்பட்ட பணிக்காகவோ, தங்களது வீடுகளில் வேலைக்காகவோ பயன்படுத்துவது ரயில்வே அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டிருக்கிறது.
ஏறத்தாழ 30,000 கலாசி என்றழைக்கப்படும் கடைநிலை ஊழியர்கள் மூத்த ரயில்வே அதிகாரிகளின் இல்லங்களில் வீட்டு வேலைக்குப் பயன்படுத்தப்படுகிறார்கள். பலர் சமையல்காரர்களாகவும், தோட்டக்காரர்களாகவும், வீட்டை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் உடனடியாக அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றுவதற்கு விடை கொடுத்துவிட்டு அன்றாட ரயில்வே பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது ரயில்வே நிர்வாகம். 
கடந்த ஒரு மாதத்தில் 7,000-க்கும் அதிகமான கடைநிலை ஊழியர்கள், அதிகாரிகளின் வீடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு அன்றாட ரயில்வே பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். தவிர்க்க முடியாத மிக முக்கியமான சூழலில் மட்டுமே ரயில்வே ஊழியர்கள் இனிமேல் அதிகாரிகளின் அன்றாட வீட்டுப் பணிக்குப் பயன்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். 
அதேபோல, ரயில்வேயின் உயர் அதிகாரிகளுக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்னொரு வேண்டுகோளையும் விடுத்திருக்கிறார். உயர் அதிகாரிகள் பயணிப்பதற்காக எல்லா வசதிகளும் அடங்கிய 'சலூன்' என்றழைக்கப்படும் தனி ரயில் பெட்டிகளில் அல்லது முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் பயணிக்கும் தங்களது சலுகைகளைத் துறந்து, சாதாரணப் பயணிகளைப்போல இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதி அல்லது மூன்றாம் வகுப்பு ஏசி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அந்த வேண்டுகோள். இந்த உயரதிகாரிகளின் பட்டியலில் ரயில்வே ஆணையத்தின் உறுப்பினர்கள், ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்கள், ரயில்வே கோட்ட மேலாளர்கள் உள்ளிட்ட அனைவருமே அடங்குவர்.
இதற்கு முன் மிகமிக முக்கியப் பிரமுகர்களின் சிறப்புச் சலுகைகள் பலவற்றை அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை எதுவுமே இந்தியாவில் வெற்றி பெற்றதில்லை. உலகிலேயே அதிகமான மிகமிக முக்கியப் பிரமுகர்களைக் கொண்ட நாடு என்கிற பெருமை இந்தியாவிற்கு மட்டுமே உரித்தானது. பிரிட்டன் (85), பிரான்ஸ் (109), ஜப்பான் (125), ஜெர்மனி (142), ஆஸ்திரேலியா (205), அமெரிக்கா (252), ரஷியா (112), சீனா (345) ஆகிய நாடுகளை எல்லாம் மிக மிக பின்னுக்குத் தள்ளியபடி ஏறத்தாழ 5,80,000 மிகமிக முக்கியப் பிரமுகர்களைக் கொண்ட நாடாக இந்தியா காட்சியளிக்கிறது. 
மக்களாட்சி முறையில் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் மிகமிக முக்கியப் பிரமுகர்களின் பட்டியல் குறைந்தபாடில்லை. அவர்களது சலுகைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரயில்வே அமைச்சகத்தின் முன்மாதிரி நடவடிக்கையை ஏனைய அமைச்சகங்களும், அரசியல் தலைவர்களும் பின்பற்றினால் இந்திய ஜனநாயகம் புதியதொரு பாதையில் பயணிக்கும் வாய்ப்பு இனியாவது ஏற்படும்!
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/10/கலாசாரம்-மாறுகிறது-2787347.html
2786848 தலையங்கம் வங்கதேசத்திலும் மோதல்! ஆசிரியர் Monday, October 9, 2017 02:57 AM +0530 நாடாளுமன்றத்துக்கும் நீதித்துறைக்கும் இடையேயான மோதல் இந்தியாவையும் பாகிஸ்தானையும் மட்டுமல்ல, வங்கதேசத்தையும் விட்டுவைக்கவில்லை. வங்கதேசத்தின் உச்சநீதிமன்றம் 16-ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தை ரத்து செய்துவிட்ட நிலையில், தகுந்த சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வங்கதேச நாடாளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்திருத்தத்தை ரத்து செய்யும் உரிமை உச்சநீதிமன்றத்துக்குக் கிடையாது என்று அரசியல் தலைமையும், அரசியல் சாசனம் தொடர்பான நாடாளுமன்றத்தின் அனைத்து முடிவுகளும் தனது ஆய்வுக்குட்பட்டது என்று உச்சநீதிமன்றமும் பிடிவாதம் பிடிக்கின்றன.
2014-இல் வங்கதேச நாடாளுமன்றம் ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, திறமையின்மை, முறைகேடான நடத்தை உள்ளிட்ட காரணங்களுக்காக உச்சநீதிமன்றத்தின் எந்த ஒரு நீதிபதியையும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அகற்றும் உரிமை நாடாளுமன்றத்துக்கு தரப்பட்டுள்ளது. சொல்லப்போனால் நீதிபதிகளை அகற்றும் நாடாளுமன்றத்தின் உரிமை 1972-இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட வங்கதேச அரசமைப்புச் சட்டத்திலேயே இடம்பெற்ற ஒன்றுதான்.
நாடாளுமன்றம் கொண்டு வந்த சட்டத்திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்தையும் தன்னிச்சையான செயல்பாடுகளையும் பாதிப்பதாக இருக்கிறது என்று கூறி கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதற்குப் பதிலாக தலைமை நீதிபதியின் தலைமையில் உயர்மட்ட நீதித்துறைக் குழு ஒன்றை ஏற்படுத்தி தவறிழைக்கும் நீதிபதிகளை பதவி விலக்கம் செய்யும் அதிகாரத்தை அதற்கு வழங்கியது. இதன்மூலம், ஏற்கெனவே இருந்து பின்பு கலைக்கப்பட்ட உயர்மட்ட நீதித்துறைக் குழுவுக்கு புத்துயிர் அளித்தது வங்கதேச உச்சநீதிமன்றம்.
வங்கதேச நாடாளுமன்றத்தில் ஆளும் அவாமி லீக் கட்சி அசுரப் பெரும்பான்மையுடன் திகழ்கிறது. அதனால் உச்சநீதிமன்றத்தின் முடிவை மாற்றுவது என்பதில் ஆளும்கட்சி பிடிவாதமாக இருக்கிறது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. சின்ஹா இந்தத் தீர்ப்பை வழங்கும்போது வெளியிட்ட சில கருத்துகள் அவாமி லீக் கட்சியின் கடும் கண்டனத்துக்கு உள்ளாயின. வங்கதேசத்தின் அரசியல் சாசனம் என்பது மக்களுடைய எண்ணத்தின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டுமே தவிர, எந்தத் தனிமனிதரின் விருப்பமாகவும் இருக்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்திருந்தார் தலைமை நீதிபதி எஸ்.கே. சின்ஹா. இது அவாமி லீக் கட்சியின் நிறுவனரான "வங்கபந்து' ஷேக் முஜிபுர் ரகுமானை மறைமுகமாகத் தாக்குவதாக ஆளும் கட்சி கருதுகிறது.
வங்கதேசத்தின் மிகப்பெரிய கட்சியான வங்கதேச தேசியக்கட்சி 2014-இல் நாடாளுமன்றத்துக்கு நடந்த பொதுத் தேர்தலை புறக்கணித்ததால் இப்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கவில்லை. எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக்கட்சி வழக்கம்போல உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றிருக்கிறது. அதற்குக் காரணம், நீதித்துறையின் சுதந்திரம் குறித்தான அக்கறையல்ல. எதிர்க்கட்சி என்ற முறையில் ஆளும் அவாமி லீக் கட்சியை எதிர்ப்பதற்கு தனக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு வாய்ப்பாக இதனை அந்தக் கட்சி கருதுகிறதே தவிர, நாடாளுமன்றத்துக்கும் நீதித்துறைக்கும் இடையே நடக்கும் பிரச்னையில் தனது தெளிவான நிலைப்பாட்டை இதுவரை அந்தக் கட்சி வெளிப்படுத்தவில்லை.
பிளவுபட்டுக் கிடக்கும் வங்கதேச அரசியலில், எந்த ஒரு பிரச்னையையும் அரசியல் சாராமல் கொள்கை ரீதியாக அணுகுவது இயலாது. அப்படியிருக்கும்போது நீதித்துறைக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையேயான அதிகார வரம்பு குறித்த சர்ச்சையிலும் அரசியல் கலந்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை. வங்கதேச தேசியக்கட்சி மட்டுமல்லாமல், ஏனைய சிறுசிறு கட்சிகளும் ஆளும் அவாமி லீக் கட்சிக்கு எதிராக அல்லது ஆதரவாகத் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றனவே தவிர, தொலைநோக்குப் பார்வையுடன் இந்தப் பிரச்னையை அணுகுவதாகத் தெரியவில்லை.
நாடாளுமன்ற ஜனநாயகம் நடைமுறையில் இருக்கும் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைப் போன்றதல்ல வங்கதேசத்தின் அரசு முறையும் அரசியல் சாசனமும் என்பது உச்சநீதிமன்றத்தின் கருத்து. இந்தியா உள்ளிட்ட நாடாளுமன்ற ஜனநாயகம் நடைமுறையில் உள்ள பெரும்பாலான நாடுகளில், தவறிழைக்கும் நீதிபதிகளை நாடாளுமன்றத்தின் முன் நிறுத்தி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்குமானால், அவர்களின் பதவியைப் பறித்துவிட முடியும். இந்த முறையை மீண்டும் கொண்டுவரத்தான் ஆளும் அவாமி லீக் கட்சி வங்கதேசத்தில் அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொண்டது.
உச்சநீதிமன்றத்தின் கருத்தில் ஒரு நியாயம் இருக்கிறது. வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவொரு தீர்மானத்திலும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது. கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக உறுப்பினர்கள் வாக்களிப்பதை 70-ஆவது அரசியல் சாசனப் பிரிவு தடுக்கிறது. இந்த நிலையில், பதவி நீக்கம் செய்யும் உரிமை நாடாளுமன்றத்துக்கு தரப்படு
மானால், ஆளும் கட்சி விரும்பாத எந்தவொரு நீதிபதியையும் பதவியிலிருந்து ஆளும்கட்சி அகற்றிவிடும் ஆபத்து இருக்கிறது. இதுதான் வங்கதேச நீதித்துறையின் எதிர்ப்புக்குக் காரணம்.
வங்கதேசத்தில் முன்பு தொடர்ந்து நிலவிய சர்வாதிகார ஆட்சியை எதிர்கொள்ள உயர்மட்ட நீதித்துறைக் குழு தேவைப்பட்டது. இன்றைய சூழலில் மோதல் போக்கை விடுத்து நீதித்துறையும் நாடாளுமன்றமும் இந்தப் பிரச்னைக்கு சுமுகமாக நிரந்தரத் தீர்வை காண்பதுதான் வங்கதேசத்தின் நலனைப் பேணுவதாக இருக்கும்.

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/09/வங்கதேசத்திலும்-மோதல்-2786848.html
2785609 தலையங்கம் ஜனநாயக முரண்! ஆசிரியர் Saturday, October 7, 2017 01:08 AM +0530 பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகிய இருவரும் மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து முன்பு தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து இப்போது தேர்தல் ஆணையமும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் தயார் நிலையில் இருப்பதாக அறிவித்திருக்கிறது. செப்டம்பர் 2018-இல் ஒரே நேரத்தில் மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தத் தயார் நிலையில் தாங்கள் இருப்பதாகத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையம் தயார் நிலையில் இருந்தாலும்கூட ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது நடைமுறை சாத்தியமாகத் தோன்றவில்லை.
இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது புதிதொன்றும் அல்ல. 1967 வரை நடந்த பொதுத் தேர்தல்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் மக்களவைக்கும் அனைத்து சட்டப்பேரவைகளுக்கும் சேர்த்தே நடத்தப்பட்டன. கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருந்தாலும்கூட, அவை பொதுத் தேர்தலாகவே நடத்தப்பட்டன. 1967-க்குப் பிறகு காங்கிரஸ் கட்சி வலுவிழந்து, காங்கிரஸ் அல்லாத பல கட்சிகளும் கூட்டணிகளும் வெவ்வேறு மாநிலங்களில பதவி ஏற்றதைத் தொடர்ந்து பல மாநிலங்களில் நிலையற்றதன்மை ஏற்பட்டதன் விளைவாக, ஆட்சி கவிழ்வதும் சட்டப்பேரவைக்குத் தனியாக தேர்தல் நடத்தப்படுவதும் வழக்கமாயின. 1977-க்குப் பிறகு பல மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுடன் இணையாமல் தனியாக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தும் போக்கு நிலைத்து விட்டது.
ஒரே நேரத்தில் மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்துவது என்பது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைவர்களால் நீண்டகாலமாகவே வற்புறுத்தப்பட்டு வந்திருக்கிறது. துணைப் பிரதமராக வாஜ்பாயி அரசில் இருந்தபோது, எல்.கே. அத்வானி இதுகுறித்துப் பலமுறை ஆதரித்து கருத்துத் தெரிவித்திருக்கிறார். 
1999-இல் வாஜ்பாய் அரசால் பணிக்கப்பட்ட சட்டக் கமிஷன் அறிக்கை, ஒரே நேரத் தேர்தலைப் பரிந்துரைத்திருந்தது. 
ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை உறுதிப்படுத்த, அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்போது, கூடவே மாற்று அரசுக்கான நம்பிக்கைத் தீர்மானத்தையும் சேர்த்து நிறைவேற்றியாக வேண்டும் என்று சட்டக் கமிஷன் பரிந்துரைத்திருந்தது. இதன் மூலம் மாற்று அரசுக்கான பெரும்பான்மை உறுதிப்படுத்தப்படாமல் ஆட்சிக் கவிழ்ப்பு சாத்தியமல்லாத நிலைமை உறுதிப்படுத்தப்பட்டது. அதனால், ஆட்சி மாறினாலும் ஐந்து ஆண்டுகள் அவை கலைக்கப்படாமல் தனது பதவிக்காலத்தை உறுதி செய்யும்.
2015 டிசம்பர் மாதம் காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவும், மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதைப் பரிந்துரைத்திருந்தது. அதற்கு அந்தக் குழு சில காரணங்களைப் பட்டியலிட்டிருந்தது. 
அதில் முக்கியமான காரணமாகத் தேர்தலுக்காக மிகப்பெரிய அளவில் பணம் செலவழிக்கப்படுவது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு முறை தேர்தல் நடைபெறும்போதும் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருவதால் அரசின் கொள்கைத் திட்டங்கள் முடக்கப்படுகின்றன என்பதும், அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படுகின்றன என்பதும் அந்தக் குழுவால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
சுதர்சன நாச்சியப்பன் குழு இன்னொன்றையும் சுட்டிக்காட்டியிருந்தது. இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட 16 மக்களவைகளில் 7 அவைகள் பதவிக்காலத்திற்கு முன்பே கலைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் பெரும்பாலான சட்டப்பேரவைகள் தங்களது பதவிக்காலத்தை முழுமையாக கடந்திருக்கின்றன என்பதையும் பதிவு செய்திருந்தது. மேலும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் தங்களது அன்றாட அலுவல்களை விட்டுவிட்டு அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவது கணிசமாக குறைக்கப்படும் என்பதையும் காரணம் காட்டியிருந்தது. தேர்தல் நன்னடத்தை விதிகளால் மக்கள்நலத் திட்டங்கள் முடக்கப்படுவதற்கும் ஒரே நேரத் தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் என்று அந்தக் குழு தெரிவித்திருந்தது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்கிற கோரிக்கை கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நடைமுறை சாத்தியமாக இருக்குமென்று தோன்றவில்லை. 2014-இல் தேர்தல் நடந்த ஆந்திரம், அருணாசலப் பிரதேசம், ஒடிஸா, சிக்கிம், ஹரியாணா, மகாராஷ்டிரம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை 2019 மக்களவைத் தேர்தலுடன் நடத்துவது வேண்டுமானால் சாத்தியமாக இருக்கும். ஏனைய சட்டப்பேரவைகளை அவற்றின் பதவிக்காலத்தை முடக்கித் தேர்தலுக்கு வழிகோலுவது என்பது சரியாக இருக்காது. 
பா.ஜ.க. ஆட்சியிலிருக்கும் மாநில அரசுகள் இதற்கு சம்மதம் அளித்தாலும் ஏனைய கட்சிகள் இதை ஏற்றுக் கொள்ள வாய்ப்பில்லை. அதுமட்டுமல்ல, 2019 மக்களவைத் தேர்தலுடன் அனைத்து சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டாக வேண்டும். அதுவும் சாத்தியமல்ல.
ஒரே நேரத்தில் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்துவதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி பெரும் வெற்றி பெற்று
விடலாம் என்று பா.ஜ.க. கருதினால் அது எதிர்பார்த்த பலனை அளிக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மாநில அரசுகள் மீதான அதிருப்தி மக்களவைத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் ஆபத்தும் அதில் இருக்கிறது. 
தேர்தல் என்பது அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமைதான். ஆனால், மக்களாட்சியில் அதைத் தவிர்க்க இயலாது. ஒரே நேரத்தில தேர்தல் என்பது ஜனநாயக முரணாகத்தான் இருக்கும்.
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/07/ஜனநாயக-முரண்-2785609.html
2785129 தலையங்கம் ஆளுநருக்கு வாழ்த்துகள்! ஆசிரியர் Friday, October 6, 2017 02:43 AM +0530 தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும், அந்தமான் - நிகோபார் யூனியன் பிரதேசத்திற்கும் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் புதிய ஆளுநராக 77 வயது பன்வாரிலால் புரோஹித் இன்று பதவி ஏற்கிறார். கடந்த 13 மாதங்களாக முழுநேர ஆளுநர் இல்லாமல் தவித்த தமிழகத்துக்கு ஒருவழியாக ஆளுநர் நியமிக்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஏழரைக்கோடி மக்களுடன் இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழகம், முழுநேர ஆளுநர் இல்லாமல் ஓராண்டுக்கு மேல் தொடர்ந்தது என்பது சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய களங்கம். 
குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காலியான பிகார் ஆளுநர் பதவிக்கு பா.ஜ.க.வின் தேசிய துணைத் தலைவர் சத்யபால் மாலிக் நியமிக்கப்பட்டிருக்கிறார். பன்வாரிலால் புரோஹித் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதால் அஸ்ஸாமில் ஏற்பட்டிருக்கும் காலியிடத்தை நிரப்புகிறார் ஜெகதீஷ் முகி. இந்த மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப, ஓய்வு பெற்ற கடற்படை அட்மிரல் தேவேந்திரகுமார் ஜோஷி அந்தமான் - நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநராகிறார். பிகாரைச் சேர்ந்த கங்கா பிரசாத் மேகாலயா ஆளுநராகவும், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா அருணாசலப் பிரதேச ஆளுநராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 
தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் பன்வாரிலால் புரோஹித் நீண்டகால அரசியல் அனுபவசாலி. மூன்று முறை நாகபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரண்டு முறை காங்கிரஸ் உறுப்பினராகவும் ஒரு முறை பா.ஜ.க. உறுப்பினராகவும் மக்களவையில் பதவி வகித்த பன்வாரிலால் புரோஹித், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தவர்.
1969 காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு இந்திரா காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்ட பன்வாரிலால் புரோஹித், 1978-இல் நாகபுரி கிழக்குத் தொகுதியிலிருந்து முதன்முதலில் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980-இல் நாகபுரி தெற்கு தொகுதியிலிருந்து மகாராஷ்டிர சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், மாநிலத்தின் துணை அமைச்சராகவும் பணியாற்றியவர்.
1984-இல் எட்டாவது மக்களவையிலும், 1989-இல் ஒன்பதாவது மக்களவையிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாகபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், பாரதிய ஜனதா கட்சியால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான இயக்கம் தொடங்கப்பட்டபோது காங்கிரஸில் இருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணைந்தார். 1991-இல் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். 1996-இல் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்று 11-ஆவது மக்களவையில் உறுப்பினரானார் பன்வாரிலால் புரோஹித்.
1999-இல் பா.ஜ.க.வுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பன்வாரிலால் புரோஹித், அதே ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ராம்டேக் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டபோது தோல்வியைத் தழுவினார். 2003-இல் சொந்தமாக 'விதர்பா ராஜ்ய கட்சி'யைத் தொடங்கி, 2004-இல் மக்களவைக்குப் போட்டியிட்டபோதும், 2009-இல் மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்து போட்டியிட்டபோதும் அவரால் தோல்வியைத்தான் தழுவ முடிந்தது.
நரேந்திர மோடி அரசு மத்தியில் பதவியேற்ற பிறகு 2016-இல் பன்வாரிலால் புரோஹித் அஸ்ஸாம் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இப்போது அஸ்ஸாமிலிருந்து தமிழகத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார். ஏறத்தாழ 35 ஆண்டு அரசியல் வாழ்வில் பன்வாரிலால் புரோஹித் சந்தித்த உயர்வுகளும் அதிகம், வீழ்ச்சிகளும் அதிகம். ஆனாலும்கூட, மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பகுதியில் குறிப்பிடத்தக்க அரசியல் பிரமுகராகத் தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவரால் முடிந்திருக்கிறது. 
ஆளுநர் மாளிகைகள் அரசியல் பிரமுகர்களின் பணி ஓய்வு இருப்பிடங்களாக மாற்றப்படும் வழக்கம் நரேந்திர மோடி அரசிலும் தொடர்கிறது என்பதைத்தான் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் ஆளுநர் நியமன அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது. ஆளுநர்களை நியமிக்கும் மிகமுக்கியமான கடமையை ஒத்திப்போட்டுக்கொண்டே வந்த உள்துறை அமைச்சகம், இப்போதாவது தனது கடமையை ஆற்றியிருக்கிறது என்பதற்காக ஆறுதல் அடையலாம். 
அதேநேரத்தில், தேவையில்லாமல் வதந்திகளை உலவவிடும் வகையில் ஆளுநர் நியமனங்கள் குறித்த தெளிவின்மை இருப்பது தவறு என்பதை உள்துறை அமைச்சகம் உணர வேண்டும். குறிப்பாக, கடந்த சில நாட்களாகவே ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் என்.என். வோரா மீது மத்திய அரசு நம்பிக்கை இழந்திருக்கிறது என்பது போன்ற தோற்றமும் வதந்தியும் காணப்படுகிறது. அதற்கு உள்துறை அமைச்சகம் முற்றுப்புள்ளி வைக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது.
கோபால கிருஷ்ண கோகலேவால் தொடங்கப்பட்டு நாகபுரியிலிருந்து வெளிவரும் 'தி ஹிதவாடா' நாளிதழின் உரிமையாளரும் ஆசிரியருமாக இருந்து தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்க இருக்கும் பன்வாரிலால் புரோஹித் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் மிக அதிகம். ஆளுநர் மாளிகை அரசியல் மாளிகையாக மாறிவிடாமல், அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் விதத்தில் அவரது பதவிக்காலம் அமைய வேண்டும் என்கிற தமிழக மக்களின் உணர்வுகளை 'தினமணி' வெளிப்படுத்தி புதிய ஆளுநரை வாழ்த்தி வரவேற்கிறது.

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/06/ஆளுநருக்கு-வாழ்த்துகள்-2785129.html
2784420 தலையங்கம் முதன்மையில் பெருமையில்லை! ஆசிரியர் Thursday, October 5, 2017 01:22 AM +0530 உலகில் மிக அதிகமாகக் குழந்தைகள் மரணமடையும் நாடு என்று இந்தியா அடைந்திருக்கும் 'பெருமை' குறித்து நாம் மகிழ்ச்சி அடையவா முடியும்? 2000 முதல் 2015 வரையிலான 15 வருடங்களில் மரணமடைந்திருக்கும் ஐந்து வயதிற்கும் கீழேயான குழந்தைகளின் எண்ணிக்கை 2 கோடி 90 லட்சம். ஒட்டுமொத்த உலக எண்ணிக்கையில் இது 20%. 
தெற்காசியாவில், பிறந்த 28 நாட்களில் மரணமடைந்த 10 லட்சம் சிசுக்களில், ஏழு லட்சம் சிசுக்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்கிறது யுனிசெஃப் அறிக்கை. அதன்படி 2015 வரையிலான உலக சிசு மரணங்களில் 26% இந்தியாவைச் சேர்ந்தவை. 
வேடிக்கை என்னவென்றால், நம்மைவிட நேபாளம், வங்க தேசம், பூடான் ஆகியவை சிசு மரண விகிதத்தில் குறைவாக இருக்கின்றன. பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும்தான் இந்தியாவைவிட மோசமானதாக காணப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தாய் - சேய் நலம் சரியாகப் பேணப்படுவதில்லை என்பதும், நோய்த் தடுப்புத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதும்தான் முக்கியமான காரணங்கள்.
இந்தியாவிலுள்ள பேறுகால மகளிர் பெரும்பாலானோருக்கு பொது சுகாதார அமைப்புகள்தான் ஒரே நம்பிக்கை. இவற்றின் மூலம்தான் கர்ப்பிணிப் பெண்களும், பால் வழங்கும் நிலையில் உள்ள தாய்மார்களும் மகப்பேறுக்கும் சிசுப் பாதுகாப்புக்கும் மருத்துவ வசதி பெற முடியும். குறிப்பாக, 'டிப்தீரியா', 'டெட்டனஸ்' உள்ளிட்ட தடுப்பூசிகள் போட வேண்டிய நிலையிலுள்ள அடித்தட்டு மக்களின் தேவைகளைப் பொது சுகாதார மையங்கள்தான் பூர்த்தி செய்கின்றன. போலியோவைப் பொருத்தவரை, இந்தியா மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்திருப்பதற்கும், ஏனைய வளர்ச்சி பெறும் நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதற்கும் பொது சுகாதார மையங்கள் மிக முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன.
இந்தியாவில் ஐந்து வயதுக்கு கீழேயுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 12 கோடிக்கும் மேல். அதனால்தானோ என்னவோ, உலகிலேயே மிக அதிக அளவிலான - ஏறத்தாழ 15 லட்சம் குழந்தைகள் - குளிர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு பலியாகின்றன. இவையெல்லாம் அரசின் கவனத்துக்கு வராததல்ல. 
இதுகுறித்த விழிப்புணர்வும் செயல்திட்டங்களும் பலனளிக்கத் தொடங்கி இருக்கின்றன. ஐந்து வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகளின் மரண எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தாலும்கூட, அதேநேரத்தில் சில குறிப்பிட்ட காரணிகளால் ஏற்படும் குழந்தை மரண விகிதம் இந்தியாவில் குறைந்திருப்பதாக 'லான்செட்' மருத்துவ இதழ் சமீபத்தில் தெரிவித்திருக்கிறது.
பிரசவ கால மரணங்கள் சராசரியாக ஆண்டுக்கு 3.3% குறைந்திருக்கிறது. ஒன்று முதல் 59 மாதங்களுக்கு உள்ளேயுள்ள குழந்தைகள் மரண விகிதம் 5.4% குறைந்திருக்கிறது. தேசிய சுகாதாரத் திட்டம், பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றில் ஊழலும் முனைப்பின்மையும் காணப்பட்டாலும்கூட, இந்தியாவில் கிராமப்புறத்திலுள்ள அடித்தட்டு மக்களின் தேவைகளை எதிர்கொள்வதில் ஓரளவுக்கு அவை வெற்றியடைந்திருக்கின்றன என்பதைத்தான் இது காட்டுகிறது.
ஆனால், 'லான்செட்' அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் ஒரு கருத்து வேதனை அளிக்கிறது. அந்த அறிக்கையின்படி தேசிய அளவிலான குழந்தை நலத் திட்டங்களுக்கு இணையாக மாநில அரசுகளும் முனைப்புடன் செயல்பட்டிருந்தால் இப்போதைய குழந்தைகள் மரணத்தில் மூன்றில் ஒரு பங்கு மரணம் தடுக்கப்பட்டிருக்கும். சுகாதாரம் என்பது மாநில அரசு சார்ந்தது என்பதால், மக்களுக்குத் தரமான மருத்துவ சேவை வழங்கும் அடிப்படைப் பொறுப்பு அதனைச் சார்ந்தது. இந்தியாவில் பல மாநிலங்கள் இதுகுறித்து கவலைப்படுவதோ, கவனம் செலுத்துவதோ இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய ஒன்று.
பெரும்பாலான மாநிலங்களில் ஏனைய துறைகளுக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு குறைந்து கொண்டுவரும் அவலம் காணப்படுகிறது. 2013-14இல் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தனி நபருக்கான அரசின் ஓராண்டு சராசரி ஒதுக்கீடு வெறும் ரூ.452 தான். இப்படி இருக்கும்போது, தங்களது முதல் பிறந்த நாளுக்கு முன்பு நாளொன்றுக்கு 981 குழந்தைகள் அந்த மாநிலத்தில் மரணமடைகின்றன என்கிற புள்ளிவிவரம் வியப்பை ஏற்படுத்தவில்லை.
அதேபோல சுகாதாரத்துக்கான அரசின் செலவினங்களில் மருத்துவமனைகளின் மூலம் தரப்படும் சிகிச்சைக்கு முன்னுரிமை தருவதுபோல, நோய்கள் வராமல் தடுப்பதற்கான முயற்சிகளில் மாநில அரசுகள் போதிய கவனமும் நிதி ஒதுக்கீடும் செய்வதில்லை. சுத்தமான குடிநீர் வழங்கப்படுவது என்பது சுகாதாரப் பாதுகாப்பில் மிக முக்கியமானது. இதன்மூலம் பல தொற்று நோய்கள் பரவுவது தடுக்கப்படுகிறது. ஆனால், அரசுகள் சுத்தமான குடிநீர் வழங்குவதில் கவனம் செலுத்துவதில்லை.
இந்தியாவில் குழந்தைகள் மரணத்திற்கு மிக முக்கியமான காரணமாக கூறப்படுபவை, பெண்கள் மிகச்சிறிய வயதிலேயே திருமணம் செய்துகொள்வது, இளம் பெண்கள் கர்ப்பகாலத்தில் எடைக் குறைவுடன் இருத்தல், பிரசவத்திற்கு முன்னால் போதுமான கவனிப்பும் ஊட்டச்சத்துள்ள உணவும் கிடைக்காமல் இருத்தல் ஆகியவை. இதனால் அவர்கள் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுகிறது. 
தென்னிந்திய மாநிலங்களைப்போல இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் கர்ப்பிணிகளுக்கும், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும், மூன்று வயதுக்குட்பட்ட சிசுக்களுக்கும் முறையான சுகாதாரப் பாதுகாப்பு வழங்கப்படுமேயானால் இந்தியாவை இந்த அவப்பெயரிலிலிருந்து காப்பாற்றிவிட முடியும்.
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/05/முதன்மையில்-பெருமையில்லை-2784420.html
2783817 தலையங்கம் தேவைதானா நதிநீர் இணைப்பு? ஆசிரியர் Wednesday, October 4, 2017 01:26 AM +0530 நீண்டகால தாமதத்திற்குப் பிறகு இந்தியாவின் பெரிய நதிகளை இணைக்கும் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கையும், வறட்சியையும் எதிர்கொள்ள இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மட்டுமே தீர்வு என்கிற முடிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்துவிட்டிருப்பதாகத் தெரிகிறது. 87 பில்லியன் டாலர் (ரூ. சுமார் 5.6 லட்சம் கோடி) செலவிலான இந்தத் திட்டத்தின் பயனால் இந்தியாவின் முக்கிய நதிகள் பல இணைக்கப்பட இருக்கின்றன. 
இந்த பிரம்மாண்டத் திட்டத்தின் மூலம் கங்கை உள்ளிட்ட இந்தியாவின் 60 நதிகள் இணைக்கப்பட இருக்கின்றன. இதனால் பருவமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தும் சேதம் கணிசமாகக் குறையுமென்று அரசு எதிர்பார்க்கிறது. அதுமட்டுமல்லாமல், பருவமழையை மட்டுமே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான ஹெக்டேர் விளைநிலங்களுக்குப் பாசன வசதி தர முடியும் என்பதும் அரசின் எதிர்பார்ப்பு.
கடந்த மாதம் இந்தியாவின் பல பாகங்கள், அண்டை நாடுகளாள வங்கதேசம், நேபாளம் ஆகியவை பருவமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பேரழிவை எதிர்கொண்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் இந்தியாவின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன என்றால், இந்த ஆண்டு கூடுதலாக பெய்த பருவமழையினால் பல பகுதிகள் பெரும் சேதத்தை சந்திக்க நேர்ந்தது.
இந்த பிரம்மாண்டத் திட்டத்தின் முதல்கட்ட நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி முனைப்புடன் நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார். இந்தத் திட்டத்தால் கால்வாய்கள் மூலம் நதிகள் இணைக்கப்படுவது மட்டுமல்ல, பெரிய அணைகள் கட்டப்பட்டு ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சார உற்பத்திக்கும் வழிகோலப்படுகிறது. 
மத்திய இந்தியாவில் ஓடும் கர்ணாவதி என்கிற கென் நதியில் ஓர் அணை கட்டப்பட இருக்கிறது. சுமார் 425 கி.மீ. நீளமுள்ள கென் நதியிலிருந்து 22 கி.மீ. நீளமுள்ள கால்வாய் வெட்டப்பட்டு பெட்வா என்கிற நதியுடன் இணைக்கப்படுகிறது. இந்த இரு நதிகளுமே பா.ஜ.க ஆட்சியிலுள்ள உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாய்வதால் நதிநீர் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. இந்த கென் - பெட்வா திட்டம் பிரதமர் செயல்படுத்த விரும்பும் ஏனைய நதி இணைப்புத் திட்டங்களுக்கு முன்னோடியாக இருக்கும். 
கென் - பெட்வா திட்டத்தைத் தொடர்ந்து அரசின் கவனம் கங்கை, கோதாவரி, மகாநதி ஆகிய நதிகளை நோக்கி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நதிகளில் ஆங்காங்கே அணைகளும், தடுப்பணைகளும் கட்டப்படுவதுடன் கால்வாய் வலைப்பின்னல்களும் உருவாக்கப்படும்போது அது வெள்ளப்பெருக்கு, வறட்சி ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இப்போதைக்கு கென் - பெட்வா நதி இணைப்புத் திட்டம் அரசின் முன்னுரிமை பெற்றிருப்பதால் இதற்கான எல்லா அனுமதிகளும் அவசர கதியில் தரப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து மேற்கிந்தியாவில் பாயும் பார் - தாபி நதியை நர்மதாவுடனும், தாமன் கங்கா நதியை பிஞ்சல் நதியுடனும் இணைப்பதற்கான திட்டப் பணிகளின் அடிப்படை வேலைகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மற்றும் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்படுவதால் அந்தந்த மாநில அரசுகளின் முழு ஒத்துழைப்பும் கிடைத்திருப்பதில் வியப்பில்லை. 
நதிகளை இணைக்கும் திட்டம் 2002-இல் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான முந்தைய பா.ஜ.க. அரசால் முதலில் முன்மொழியப்பட்டது. மாநில அரசுகளின் ஒத்துழைப்பில்லாததாலும் மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பங்கீட்டுப் பிரச்னைகளாலும் அது முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.
ஒருபுறம், நதிகளை இணைக்கும் திட்டத்தில் அரசு முனைப்பு காட்டும்போது, மற்றொருபுறம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் இந்தத் திட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்பும் எழுந்திருக்கிறது. கென் நதி, பன்னா புலிகள் சரணாலயத்தின் வழியாகப் பாய்வதால் அந்த நதியில் ஏற்படுத்தப்படும் செயற்கை மாற்றங்கள் புலிகள் சரணாலயத்தை பெரும் அளவில் பாதிக்கும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். கென் நதியில் அணை கட்டுவதற்காக அந்த நதி பாயும் வழியிலுள்ள காடுகளில் 6.5% அழிக்கப்பட்டாக வேண்டும். நீர்த்தேக்கத்தால் பாதிக்கப்படும் 10 மலைவாழ் கிராமங்களும், 2,000-த்துக்கும் அதிகமான குடும்பங்களும் இடம் பெயர்ந்தாக வேண்டும். இதற்கெல்லாம் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை. 
கென் நதியின் மீது எழுப்பப்படும் 250 அடி உயரமும் இரண்டு கி.மீ. நீளமுள்ள உள்ள அணையால் 9,000 ஹெக்டேர் காடுகள் நீரில் மூழ்கும். நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெரும்பாலான பகுதி பன்னா புலிகள் சரணாலயத்தை ஆக்கிரமிக்கும் என்பது மட்டுமல்ல, மத்தியப் பிரதேசத்திலுள்ள உலக கலாசார சின்னமான கஜுராஹோ ஆயத்துக்கு வெகு அருகில் அமையும். இதனால் அந்த வரலாற்றுச் சின்னம் பாதிக்கப்படலாம். 
உலகளாவிய அளவில் பெரிய அணைகள் கட்டுவது தவிர்க்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக அணைகள் கட்டும் முயற்சியில் அரசு இறங்கியிருப்பதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் நதிகளை இணைப்பது என்பது பயனுள்ளதாகத் தோன்றினாலும் அது சுற்றுச்சூழலுக்கும் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் இயற்கை நடைமுறைக்கும் எதிரானதாக அமையக்கூடும் என்பதுதான் உண்மை!
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/04/தேவைதானா-நதிநீர்-இணைப்பு-2783817.html
2783264 தலையங்கம் அவசரப்படுவது ஆபத்து! ஆசிரியர் Tuesday, October 3, 2017 01:10 AM +0530 அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வின் காரணமாகக் காற்றை மாசுபடுத்தாத இயற்கை எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றில் இயங்கும் வாகனங்களை நோக்கி உலகத்தின் கவனம் திரும்பியிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் சர்வதேச வாகனத் தயாரிப்பாளர்கள் மின்சார வாகனங்களைத் தயாரிப்பதில் முனைப்புக் காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்களான டெஸ்லா, மின்சார வாகன உற்பத்திக்கான முயற்சியில் முழுமூச்சாக இறங்கிவிட்டிருக்கிறது. டெஸ்லாவைத் தொடர்ந்து ஏனைய பன்னாட்டு வாகனத் தயாரிப்பு நிறுவனங்களான பி.எம்.டபிள்யூ., டேம்லர், ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், டயோட்டா ஆகியவையும் மின்சார வாகன உற்பத்திக்கான திட்டங்களுடன் களமிறங்கிவிட்டிருக்கின்றன. சீனாவில் கீலி நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வோல்வோ வாகனத் தயாரிப்பு நிறுவனம் 2019-க்குள் மின்சார வாகனத் தயாரிப்புக்கு முழுமையாக மாறிவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறது. 
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களைத் தயாரிப்பது என்கிற இலக்கை நிர்ணயித்துக் கொள்வது எளிது. ஆனால், அதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மின் ஏற்றத்துக்குமான (சார்ஜ்) வாகன பயண தூரம், போக்குவரத்து பாதைகளில் தங்குதடையில்லாமல் மின்னேற்றத்துக்கான இடங்கள் போன்றவற்றை உறுதிப்படுத்துவது சுலபமாக இருக்கப்போவதில்லை. ஆனாலும்கூட, முதலீட்டாளர்கள் மத்தியில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள்களிலிருந்து (பாசில் ப்யூயல்ஸ்) இருந்து மின்சாரம் சார்ந்த பொருளாதாரத்துக்கு மாறுவது குறித்துப் பெருத்த வரவேற்பு காணப்படுகிறது.
இன்றைய நிலையில் உலகளாவிய அளவில் மின்சார வாகனங்களின் பங்கு 0.2 சதவீதம் மட்டுமே. அவையும்கூட குறைந்த திறன் உள்ள வாகனங்களின் காரணமாக உள்ளவையே தவிர, வியாபார ரீதியாக அன்றாடப் போக்குவரத்துக்கு பயன்படுபவையாக இல்லை. மின்சார வாகனங்களின் விலை தற்போதைய பெட்ரோல், டீசல் வாகனங்களைவிடக் குறைவாக இருப்பதும், ஒவ்வொரு மின் ஏற்றத்தின் மூலமும் வாகனம் பயணிக்கும் தூரம் கணிசமாக இருப்பதும் மட்டும்தான் மின்சார வாகனங்களைத் தற்போதைய பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களைவிட வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற ஊக்குவிக்கும். 
டெஸ்லா நிறுவனம் பெரிய அளவில் விற்பனைக்கு கொண்டுவர விழையும் மின்சார வாகனங்கள் ஒவ்வொரு மின் ஏற்றத்திலும் குறைந்தது 340 கி.மீ. பயணிக்கும் விதத்தில் அமைய இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியானால், ஒருவேளை அந்த வாகனங்கள் வரவேற்பு பெறக்கூடும்.
இந்தியாவைப் பொருத்தவரை பல ஆண்டுகளுக்கு முன்பே இப்போது மகேந்திரா குழுமத்தில் அங்கமாகிவிட்டிருக்கும், பெங்களூருவைச் சேர்ந்த ரேவா மோட்டார் கார் நிறுவனம் மின்சார வாகன உற்பத்திக்கு ஆரம்பம் குறித்துவிட்டிருக்கிறது. டாடா மோட்டார்ஸ். மாருதி சுசூகி ஆகிய இந்தியாவின் இரண்டு முக்கியமான மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் விரைவிலேயே மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் வாகனங்களைத் தயாரிக்கும் திட்டத்தை அறிவித்து விட்டிருக்கிறார்கள். 
உலகளாவிய அளவிலும் மின்சார வாகனத்துக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. 2016-இன் முதல் காலாண்டை விட, 2017-இன் முதல் காலாண்டு மின்சார வாகனங்களின் விற்பனை 40 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இப்போது உலகில் இயங்கும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 1,90,700. பிரான்ஸ், 2015-லேயே 7,000 யூரோக்களுக்கு குறைவான விலையில் மின்சார வாகனம் தயாரிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு முனைப்புடன் அதை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது. 2040-க்குள் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்று பிரான்ஸ் அறிவித்து விட்டிருக்கிறது. ஐரோப்பிய கூட்டமைப்பிலுள்ள ஏனைய நாடுகளும் இதுகுறித்த தீவிரமான சிந்தனையில் ஈடுபட்டிருக்கின்றன.
மின்சார வாகனத் தயாரிப்பின் மிகப்பெரிய சவாலாக இருக்கப்போவது மின்கல (பேட்டரி) தயாரிப்பாகத்தான் இருக்கும். வாகனத்தின் விலையும் குறைவாக இருக்கவேண்டும். வாகனம் பயணிக்கும் தூரமும் அதிகமாக இருக்கவேண்டும் என்று சொன்னால் மின்சாரத்தை தேக்கி வைக்கும் மின்கலம் மிகவும் திறனுள்ளதாகவும், அதேநேரத்தில் சிறியதாகவும் அமைய வேண்டும். கோடிக்கணக்கான மின்கலங்களை தயாரிப்பதற்குத் தேவையான லிதியம், கோபால்ட், நிக்கல் ஆகிய கனிமங்கள் தேவைப்படும் என்பது மட்டுமல்ல, அவற்றை மறுசுழற்சி செய்வது எப்படி என்பது குறித்தும், அவற்றின் விலை குறித்தும் சிந்தித்தாக வேண்டும்.
நரேந்திர மோடி அரசு 2030-க்குள் இந்தியாவை முற்றிலுமாக மின்சார வாகனத்துக்கு மாற்றுவது என்று திட்டமிடுகிறது. மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். அதன் மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட புதைவடிவ எரிபொருள்களுக்கான அந்நியச் செலாவணியை (சுமார் ரூ.5 லட்சம் கோடி) மிச்சப்படுத்த முடியும் என்று கருதுகிறது அரசு. 
அதெல்லாம் சரி, இப்போது அரசுக்கு கிடைக்கும் நிதி வருவாயில் கணிசமான அளவு பெட்ரோல், டீசலில் இருந்துதான் பெறப்படுகிறது. அதை இழக்க அரசு தயாரா? பல லட்சம் கோடி ரூபாய் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலும், பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. அவசரப்பட்டு மின்சார வாகனங்களுக்கு மாறினால், பொருளாதாரம் தடம்புரண்டு விடாதா?
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/03/அவசரப்படுவது-ஆபத்து-2783264.html
2782802 தலையங்கம் குற்றவாளியே சட்டமியற்றினால்... ஆசிரியர் Monday, October 2, 2017 02:28 AM +0530 நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றபோது, தனது அமைச்சரவையில் 75 வயதைக் கடந்தவர்களுக்கு இடமளிப்பதில்லை என்றும், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே அமைச்சரவையில் இடமளிப்பது என்றும் துணிந்து முடிவெடுத்தார். இதேபோல, 70 வயதானவர்களுக்கு நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பளிப்பதில்லை என்றும் அவர் முடிவெடுத்தால், அது சிறந்த முன்மாதிரியாக இருக்கும். 
அகவை 70-ஐக் கடந்தவர்கள் அதிகாரப் பொறுப்புகளில் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறுவதால், அவர்கள் அரசியலிலிருந்து விலகிவிட வேண்டும் என்பது பொருளல்ல. கட்சிப் பொறுப்புகளில் இருந்தபடி, அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை ஏற்றுகொள்ள வேண்டும் என்பதுதான் நமது கருத்து. இதைவிட முக்கியமான பிரச்னை ஒன்று இப்போது எழுந்திருக்கிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டாலும்கூட நமது அரசியல்வாதிகள் பதவியைத் துறக்க விரும்புவதில்லை. இந்த அவலத்துக்கு உச்சநீதிமன்றம் 2013-இல் முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டது. கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகள் உடனடியாகத் தங்கள் பதவியைத் துறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனடிப்படையில்தான், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட சிலர் அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேர்ந்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, கிரிமினல் குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் தொடர்வதில் தவறில்லை என்று கருதுவது வியப்பை அளிக்கிறது. அரசியல் தர்மங்களைத் தூக்கிப்பிடிக்க வேண்டும் என்பதில் ஏனைய கட்சிகளை விடவும் அதிகமாக அக்கறை காட்டும், குரலெழுப்பும் பாரதிய ஜனதா கட்சி இப்படியொரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
2004-க்குப் பிறகு, கிரிமினல் குற்றங்களுக்காக வழக்குகளை எதிர்கொள்ளும் மிக அதிகமான உறுப்பினர்கள் காணப்படுவது இப்போதைய 16-ஆவது நாடாளுமன்றத்தில்தான். கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளவர்கள் அரசுப் பதவிகளில் இருப்பதோ, சட்டம் இயற்றும் பொறுப்பில் இருப்பதோ மிகப்பெரிய ஜனநாயக முரண் என்று உச்சநீதிமன்றம் கூறியது வரவேற்புக்குரிய தீர்ப்பு. அதன் மூலம் மட்டுமே, குற்றப்பின்னணி உள்ளவர்களை அரசியலில் இருந்து சிறிதளவேனும் அகற்றி நிறுத்த முடியும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.
உச்சநீதிமன்றத்தின் 2013-ஆம் ஆண்டு தீர்ப்பை எதிர்த்து இப்போது மத்திய அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. கிரிமினல் குற்றங்களில் தவறிழைத்தவர்கள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு, தண்டிக்கப்பட்டாலும், உடனடியாக அந்த உறுப்பினர்கள் பதவியைத் துறக்க வேண்டிய அவசியமில்லை என்பது மத்திய அரசின் வாதம். அந்த உறுப்பினர்களுக்கு, மேல்முறையீடு செய்யவும், தங்களுக்குத் தரப்பட்டிருக்கும் தண்டனைக்குத் தடை உத்தரவு பெறவும் உரிமை இருப்பதால், அவர்கள் பதவி விலக வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறது மத்திய அரசின் சட்ட அமைச்சகம்.
மத்திய அரசு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருப்பதாக மட்டுமே இதை எடுத்துக் கொள்ளக்கூடாது. குற்றப்பின்னணி உள்ளவர்கள் பதவியில் தொடர்வதை அரசும், பாரதிய ஜனதா கட்சியும் ஏற்றுக் கொள்வதாகத்தான் இந்த மேல்முறையீட்டை நாம் பார்க்க வேண்டும். 
இப்போதைய 16-ஆவது மக்களவையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் மீது கிரிமினல் வழக்கு நடைபெற்று வருகிறது. ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் மீதும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. சிவசேனையின் 18 உறுப்பினர்களில் 15 பேரும், தேசியவாத காங்கிரஸின் 5 உறுப்பினர்களில் 4 பேரும் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கிறார்கள். பா.ஜ.க. உறுப்பினர்
களில் மூன்றில் ஒரு உறுப்பினர் மீதும், காங்கிரஸ் உறுப்பினர்களில் 18% பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களை எல்லாம் பாதுகாப்பதற்காகத்தான் மத்திய அரசு இந்த மேல்முறையீட்டை செய்திருக்கக்கூடும்.
எந்தவொரு இந்தியக் குடிமகனுக்கும் மேல்முறையீடு செய்யும் உரிமை உண்டு. மேல்முறையீட்டின் தீர்ப்புப் பெறக் கால தாமதம் ஏற்படும் என்பது உண்மைதான். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு மேல்முறையீட்டுத் தடை பெறவும், தீர்ப்புப் பெறவும் காலதாமதம் ஏற்படுவதால், ஊதியம் தடைபடும் என்பதும் உண்மைதான். அதனால் மேல்முறையீட்டுக் காலத்தில் அவர்கள் பணிக்குச் செல்வது தடைபடக் கூடாது என்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அரசியல்வாதிகள் நிலைமை அதுவல்லவே.
எல்லா குடிமக்களுக்கும் தரப்படும் மேல்முறையீட்டு உரிமையும், அந்த இடைப்பட்ட காலத்தில் பதவிப் பொறுப்புகளில் தொடரும் உரிமையும் அரசியல்வாதிகளுக்கும் தரப்பட வேண்டும் என்கிற அரசின் கோரிக்கையில் அர்த்தமில்லை. இதை அனுமதிப்பது என்பது, தேசத்தைக் குற்றப்பின்னணி உள்ளவர்கள் வழிநடத்துவதை நாம் அனுமதிப்பதாக அமைந்துவிடும்.
குற்றப்பின்னணி உள்ள உறுப்பினர்கள் பதவியில் தொடர்ந்தே தீர வேண்டும் என்று அரசு பிடிவாதம் பிடிக்குமானால், அரசுக்கு நாம் முன்வைக்கும் ஆலோசனை ஒன்று உண்டு. மேல்முறையீட்டில் தண்டனைக்குத் தடை பெறும்வரை, அந்த உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கோ, முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தில் தொடர்
வதற்கோ அனுமதிக்கப்படக் கூடாது. ஒருவேளை அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்டாலும், இதைத் தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்!

]]>
http://www.dinamani.com/editorial/2017/oct/02/குற்றவாளியே-சட்டமியற்றினால்-2782802.html
2781459 தலையங்கம் ஒளி விளக்கு! ஆசிரியர் Friday, September 29, 2017 01:26 AM +0530 இதுவரை மின்சார இணைப்புத் தராத 18,000 கிராமங்களுக்கு, 2019 மக்களவைத் தேர்தலுக்குள் மின்சாரம் தரப்படும் என்று கடந்த 2015-இல் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார். இப்போது மின்சார இணைப்பு இல்லாத கிராமங்களின் எண்ணிக்கை 3,000-ஆகக் குறைந்திருக்கிறது என்றும் அந்த கிராமங்களும் வரும் டிசம்பர் 2018-க்குள் மின் இணைப்பு பெற்றுவிடும் என்றும் அறிவித்திருக்கிறார். இதற்காக ரூ.16,320 கோடி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அரசு கூறியிருப்பதுபோல 18,000 கிராமங்களில் 15,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு தரப்பட்டிருக்கிறது என்றாலும்கூட அந்த கிராமங்களிலுள்ள அத்தனை வீடுகளும் மின் இணைப்புப் பெற்றவையாக மாறியிருக்கிறதா என்றால் கிடையாது. அதுமட்டுமல்ல, மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைக்கப்பட்டால், அரசு ஆவணப்படி அதைச்சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்துக்கும் மின் இணைப்பு தரப்பட்டதாக கருதப்படும். பிரதமர் கடந்த திங்கட்கிழமை அறிவித்திருக்கும் 'செளபாக்கியா' என்கிற இல்லந்தோறும் மின் இணைப்புத் திட்டம் மேலே குறிப்பிட்ட வகைப்பட்டதாக அமைந்துவிடலாகாது. 
பிரதமரின் 'செளபாக்கியா' என்கிற இல்லந்தோறும் மின் இணைப்புத் திட்டம் என்பது 1978-இல் 'ஒரு விளக்குத் திட்டம்' என்று அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரால் தமிழகத்தில் நடைமுறைபடுத்தப்பட்ட திட்டத்தை நினைவுபடுத்துகிறது. தமிழகத்திலுள்ள 20 அடிக்கு 10 அடி அளவிலான அனைத்துக் குடிசைகளுக்கும் மின் இணைப்பு தரப்படுவதுடன் அரசின் செலவிலேயே ஒரு மின் விளக்கும் பொருத்தித் தருவது என்பதுதான் ஒரு விளக்குத் திட்டம். இந்தத் திட்டத்துக்காகக் குடிசை ஒன்றுக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின்கீழ் தமிழகத்திலுள்ள அனைத்து குடிசைகளிலும் மின் விளக்கு எரிந்தது என்பது மட்டுமல்ல, மின்சாரம் இலவசமாகவும் வழங்கப்பட்டது.
பெரும்பாலான கிராமங்களிலும் மின் இணைப்பு தரப்பட்டிருந்தாலும்கூட, பல கிராமங்களில் மின் இணைப்பு பெற்றிருக்கும் வீடுகள் 10% மட்டும்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மின் இணைப்பு குறித்து அரசு தரும் புள்ளிவிவரங்கள் முழுமையான நிலவரத்தை பிரதிபலிப்பதாக இல்லை. அதிகாரபூர்வமாக மின் கட்டணம் செலுத்தும் வசதிவாய்ப்பில்லாத பலர் முறைகேடாக மின் இணைப்பு பெறுகிறார்கள் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் இதுவரை மின் இணைப்பு இல்லாத எல்லா ஏழை குடும்பங்களுக்கும் இப்போது நரேந்திர மோடி அரசால் இலவசமாக 'செளபாக்கியா' திட்டத்தின் கீழ் ரூ.16,320 கோடி செலவில் மின் இணைப்பு வழங்கப்பட இருக்கிறது. மின் இணைப்பு தரப்படுவதாலேயே பிரச்னை முடிந்துவிடுவதில்லை. 
மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்துவது என்பது வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு இயலாது என்பதை உணர்ந்து கொண்டதால்தான் 1978-இல் அன்றைய எம்.ஜி.ஆர். அரசு தமிழ்நாட்டில் ஒரு விளக்குத் திட்டத்தின்கீழ் அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கியது. இன்று அகில இந்திய அளவில் இலவச மின்சாரம் வழங்க முடியாவிட்டாலும் மின்சார உற்பத்தியை அதிகரிப்
பதன் மூலமும் உற்பத்திச் செலவைக் குறைப்பதன் மூலமும் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்பட்டால் மட்டும்தான் அனைவருக்கும் மின்சாரம் என்கிற 'செளபாக்கியா' திட்டம் வெற்றி பெறும். 
அனைவருக்கும் மின்சாரம் என்பது புதிய கருத்தாக்கம் அல்ல. இதற்கு தமிழ்நாடு 40 ஆண்டுகளுக்கு முன்பே முன்மாதிரியாக இருந்திருக்கிறது. 2005-இல் அன்றைய மன்மோகன் சிங் அரசு 'ராஜீவ் காந்தி கிராமின் வித்யூதிகரன் யோஜனா' என்கிற திட்டத்தையும், 2015-இல் நரேந்திர மோடி அரசு 'தீன்தயாள் உபாத்யாய கிராம் ஜோதி யோஜனா' என்கிற திட்டத்தையும் அறிவித்து நிறைவேற்றி வந்ததன் நீட்சிதான் 'பிரதான் மந்திரி சகஜ் பிஜ்லி ஹர்கர் யோஜனா' என்கிற இந்த 'செளபாக்கியா' திட்டம். முந்தைய திட்டங்கள் போட்டிருக்கும் அடித்தளத்தில் 2018-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் மின் இணைப்பு இல்லாத வீடுகளே இல்லை என்கிற நிலைமையை ஏற்படுத்த முடியாவிட்டாலும், மின் இணைப்பே இல்லாத பகுதியே இல்லை என்கிற நிலைமை ஏற்படுமேயானால், அதுவே மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாக இருக்கும்.
இந்தியா மிகை மின் தேசமாக விளங்குகிறது என்று அரசு பெருமிதப்பட்டுக் கொண்டாலும், இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் முழுமையாக பயன்படுத்தப்படாமல் தொடர்கிறது. மத்திய மின்சார ஆணையம் தரும் தகவலின்படி இந்தியாவிலுள்ள அனல்மின் நிலையங்களின் மின் உற்பத்தி தொடர்ந்து குறைந்தவண்ணம் இருக்கிறது. இதற்குக் காரணம் மின் உற்பத்தி நிலையங்களின் முழுமையான திறன் பயன்படுத்தப்படுவதில்லை என்பதுதான். 2009-10இல் 77.5%-ஆக இருந்த அனல்மின் நிலைய உற்பத்தி 2016-17இல் 59.88%-ஆக குறைந்துவிட்டிருக்கிறது. மாநில மின் பகிர்மானக் கழகங்களின் நிதிநிலைமை சரிந்து வருவதால் அவர்களது வாங்கும் திறன் குறைந்துவிட்டிருப்பது இதற்கு முக்கியமான காரணம்.
இரண்டாண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட 'உதய்' திட்டம், மாநில மின் பகிர்மான நிறுவனங்களின் நிலைமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. மின் உற்பத்திக்குப் போதுமான விலை கிடைக்காததால் மின் உற்பத்தியில் தனியார் முதலீடு எதிர்பார்த்த அளவில் இல்லை. அதிகரித்த மின் உற்பத்தியும், குறைவான விலையும், கசிவில்லாத மின் பகிர்மானமும் உறுதிப்படுத்தப்படுவது மட்டும்தான் இந்தியாவின் எரிசக்தி பிரச்னைக்கு முழுமையான தீர்வாக இருக்கும்.

]]>
http://www.dinamani.com/editorial/2017/sep/29/ஒளி-விளக்கு-2781459.html
2780796 தலையங்கம் தட்டிக் கழிப்பு! ஆசிரியர் Thursday, September 28, 2017 01:17 AM +0530 விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவோம் என்று கடந்த மக்களவைத் தேர்தலின்போது பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது. விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை எனும்போது அந்தத் திட்டங்கள் குறித்த ஆய்வுகளும் மறுபரிசீலனைகளும் செய்வதை விட்டுவிட்டு, இப்பொழுது அந்தப் பொறுப்பை மாநிலங்களின் மீது சுமத்த முற்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் திட்டம் எதுவுமே விவசாயத்தில் ஈடுபட்டிருப்போரின் பிரச்னைகளை தீர்க்கவில்லை என்பதுடன் அவர்களது உற்பத்திக்கு உத்தரவாதமோ விளைபொருள்களுக்கு லாபகரமான விலையையோ தரமுடியவில்லை. இப்பொழுது மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் விவசாயிகளின் நலனைப் பேணும் பொறுப்பை மாநிலங்களின் மீது சுமத்தி, விவசாயிகளின் உற்பத்திக்கு லாபகரமான விலை கிடைக்கப் பெறுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மத்திய வேளாண்துறை அமைச்சரின் அறிவுரையை மாநில அரசுகள் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகின்றன, எப்படி நடைமுறைப்படுத்தப் போகின்றன என்று புரியவில்லை.
பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்த, விவசாயிகளுக்கு அவர்களது வேளாண் உற்பத்திச் செலவைக் காட்டிலும் 50% லாபம் ஈட்டும் வகையில் விலை தரப்பட வேண்டும் என்கிற எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு கைகழுவி விட்டது என்பதைத்தான் வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கின் அறிவுறுத்தல் வெளிப்படுத்துகிறது. மாநில அரசுகள், எந்த அளவுக்கு விவசாயிகள் குறித்து கவலைப்படுகின்றன என்பதும், விவசாயத்துக்கு போதுமான பாசன வசதியை உறுதிப்படுத்துவதில் முனைப்புக் காட்டுகின்றன என்பதும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், மத்திய அரசும் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் சூழல் ஒட்டுமொத்த இந்திய விவசாய பெருங்குடிமக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மத்திய அரசின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்கும் இழப்பீட்டைவிட பல மடங்கு அதிகமான காப்பீட்டுத் தொகையை அரசிடமிருந்து பெறுகின்றன. உர மானியம் போல இந்தத் திட்டமும் காப்பீட்டு நிறுவனங்கள் லாபம் ஈட்ட பயன்படுகிறதே தவிர, விவசாயிகளுக்கு பயன் அளிப்பதாகத் தெரியவில்லை.
இந்த ஆண்டு இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பருவமழை எதிர்பார்த்ததைவிட நன்றாக இருந்தும்கூட விவசாயிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அவர்களது வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்பது ஒருபுறமிருக்க, அன்றாட விவசாயத்துக்கான அடிப்படைத் தேவைகளைக்கூட எதிர்கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. தொடரும் விவசாயிகள் தற்கொலை, சர்வதேச அரங்கில் இந்தியாவைத் தலைகுனிய வைக்கிறது. நமது உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன என்று ஒருபுறம் பெருமை பேசிக்கொள்ளும்போது மற்றொருபுறம், விவசாயிகளின் வயிறு காய்கிற முரணை என்னவென்று சொல்ல?
உத்தரப் பிரதேசத்திலும் பஞ்சாபிலும் மாநில அரசுகள் தந்திருக்கும் விவசாயக் கடன் தள்ளுபடி என்கிற தீர்வு, விவசாயிகளின் வாக்குகளைக் குறிவைத்து செய்யப்பட்டிருக்கிறதே தவிர, அவர்களது துயரைத் துடைக்கவோ, தேங்கிவிட்ட உற்பத்தியுடன் தவிக்கும் விவசாயப் பிரச்னைக்கு தீர்வாகவோ அமையாது. மத்திய, மாநில அரசுகளுக்கு வேளாண் ஆராய்ச்சி என்பது முக்கியமான ஒன்றாகக் கருதப்படாத நிலையில் உற்பத்தியைப் பெருக்குவதிலும் பயிர்களைக் காப்பதிலும் விவசாயிகள் செய்வதறியாது குழம்பிப் போயிருக்கிறார்கள்.
ஹரியாணா, குஜராத் மாநிலங்களில் விவசாயப் பெருங்குடி மக்களான ஜாட்டுகளும், படேல்களும் வேறு வழியில்லாமல் இடஒதுக்கீட்டிற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாசன நீருக்காகப் போராடுகிறார்கள். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடியில் திருப்தி அடையும் மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளும் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்திருப்பதைப் போலத் தங்களது விளைபொருள்களுக்கான முதலீட்டைவிட 50% கூடுதலான லாபத்தைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு ஒரு வழி காணாமல் குறுகிய தேர்தல் ஆதாயத்துக்காக அரசியல்வாதிகள் உடனடித் தீர்வுகளை வழங்கி விவசாயிகளை திருப்திபடுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாய விளைபொருள்களுக்கு தரப்படும் குறைந்தபட்ச ஆதார விலை அதிகரித்து தரப்பட்டிருக்கிறது என்றாலும்கூட, விவசாயிகளின் முதலீடு அதிகரித்து வரும் நிலையில் அதை ஈடுகட்டுவதாக இல்லை. செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவு விவசாய விளைபொருள்களுக்கான தேவையைக் கடுமையாக பாதித்து அதனால் விலைகள் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. இதனால் ஏற்பட்ட இழப்பை மத்திய அரசு விவசாயிகளுக்கு ஈடுகட்டவில்லை. அதனால் விவசாயிகள் அடைந்திருக்கும் பாதிப்பு சொல்லிமாளாது.
விவசாயம் என்பது மாநிலங்களின் பட்டியலில் வந்தாலும்கூட, மாநில அரசுகளின் நிதி வருவாய் இந்தப் பிரச்னையை எதிர்கொள்வதற்கு போதுமானதாக இல்லை. மத்திய அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் பொறுப்பை மாநில அரசுகளின் மீது சுமத்துவது குருவியின் தலையில் பனங்காயை வைப்பது போன்றதாக இருக்குமே தவிர, பிரச்னைக்கு தீர்வாக இருக்காது.
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/sep/28/தட்டிக்-கழிப்பு-2780796.html
2780315 தலையங்கம் வேதனையான உண்மை! ஆசிரியர் Wednesday, September 27, 2017 01:28 AM +0530 பெங்களூருவில் 'லங்கேஷ்' பத்திரிகை ஆசிரியர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது திரிபுரா மாநிலம் ஜிரானியா என்கிற ஊரில் சாந்தனு பௌமிக் என்கிற தொலைக்காட்சி நிருபர் ஒருவர், உறைவிடத்திலிருந்து இழுத்து வரப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். சாந்தனு பௌமிக்கோடு சேர்த்து, இந்தியாவில் இந்த ஆண்டில் மட்டும் கொல்லப்பட்டிருக்கும் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்திருக்கிறது.
28 வயது சாந்தனு பௌமிக், மேற்கு திரிபுராவிலுள்ள மாண்டாய் மாவட்டத்தில் இரண்டு அரசியல் இயக்கங்களுக்கு இடையேயான மோதல்களை தொலைக்காட்சியில் பதிவு செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. அவர் வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக திரிபுரா உள்ளூர் மக்கள் முன்னணியை (இண்டிஜீனஸ் பியூப்பிள்ஸ் பிரண்ட் ஆஃப் திரிபுரா) சேர்ந்த நான்கு தொண்டர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஊடகத் தகவல்களின்படி அவர் பணியாற்றும் 'தின்ராத்' தொலைக்காட்சி ஊடகம், திரிபுரா ராஜ்ய உபஜாதி கணமுக்தி பரிஷத் என்கிற அமைப்பின் பின்னணியுடன் செயல்படுகிறது. இந்த ஆதிவாசி அமைப்பு திரிபுராவில் ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் இயங்குகிறது. இந்த அமைப்பு 'திரிபுரா உள்ளூர் மக்கள் முன்னணி' என்கிற பா.ஜ.க. ஆதரவு ஆதிவாசிகள் அமைப்புடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறது. தான் பணியாற்றும் தொலைக்காட்சி நிறுவனம், திரிபுரா ராஜ்ய உபஜாதி கணமுக்தி பரிஷத்தின் ஆதரவுடன் இயங்குவதால், திரிபுரா உள்ளூர் மக்கள் முன்னணிக்கு எதிரான செய்திகளைச் சாந்தனு பௌமிக் தொடர்ந்து வெளியிட்டு வந்ததில் வியப்பொன்றுமில்லை.
திரிபுரா உள்ளூர் மக்கள் முன்னணி கடந்த சில மாதங்களாகவே ஆதிவாசிகளுக்குத் தனி மாநிலம் கேட்டுப் போராடி வருகிறது. இந்த அமைப்பு வலிமையுடன் விளங்கும் மாவட்டங்களில், தனி மாநிலக் கோரிக்கை பல இடங்களில் வன்முறையாக மாறியும் இருக்கிறது. திரிபுரா உள்ளூர் மக்கள் முன்னணி, கடந்த வாரம் திரிபுரா மாநிலம் முழுவதும் போராட்டம் அறிவித்திருந்ததால் பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டி வந்தது. சாந்தனு பெளமிக், திரிபுரா உள்ளூர் மக்கள் முன்னணித் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பான காட்சிகள் பலவற்றைப் படம்பிடித்தார் என்பதுதான் அவர்மீது கொலையாளிகளுக்கு ஆத்திரம் ஏற்படக் காரணம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரிபுராவில் ஆட்சியில் இருப்பதால், பாஜகவின் ஆதரவுடன் நடத்தப்பட்டிருக்கும் மதவாத சக்திகளின் கொள்கை ரீதியிலான கொலைத் தாக்குதல் இது என்று குற்றம்சாட்டுகிறார்கள் இடதுசாரிகள். பாரதிய ஜனதா கட்சியோ, மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறுவதால், இது முழுக்க முழுக்க சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றும், மாநில அரசு சாந்தனு பௌமிக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டது என்றும் குற்றம்சாட்டுகிறது.
திரிபுரா மாநிலத்திற்கு அடுத்த ஆறு மாதத்தில் தேர்தல் வர இருக்கிறது. அதனால், பாரதிய ஜனதா கட்சி இந்தப் பிரச்னையை மாணிக் சர்க்கார் ஆட்சிக்கு எதிராக உயர்த்தியிருப்பதைத் தொடர்ந்து இடதுசாரிகளுக்கும் பாஜகவுக்கும் இடையிலான கலவரங்கள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்கிற அச்சம் பரவியிருக்கிறது. 
சாந்தனு பௌமிக்கும் அவர் பணியாற்றும் தொலைக்காட்சி ஊடகமும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக இருந்ததற்கும், இந்தப் பிரச்னையில் சட்டம் தனது கடமையைச் செய்வதற்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. கொலையைக் கொலையாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர, கொலையாளியின் அரசியல் தொடர்புடன் கொலையைத் தொடர்புபடுத்த வேண்டிய அவசியமில்லை.
சாந்தனு பௌமிக்கின் கொலை மார்க்சிஸ்ட் ஆட்சியிலிருக்கும் திரிபுராவிலும், கெளரி லங்கேஷின் படுகொலை காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும் கர்நாடகத்திலும்தான் நடைபெற்றிருக்கின்றன. ஆட்சி அதிகாரம் கையிலிருப்பதால் கொலையாளிகளை அடையாளம் கண்டு சட்டத்தின் முன்னிறுத்த வேண்டுமே தவிர, பா.ஜ.க.வின் மீது பழி சுமத்தித் தப்பித்துக் கொள்ளக் கூடாது.
சாந்தனு பௌமிக்கின் படுகொலை, பத்திரிகையாளர்கள் எந்த அளவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு இடையில் இந்தியாவின் பல மாநிலங்களில் பணியாற்றுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. பத்திரிகையாளர்கள் மீதான தொடர் தாக்குதலும், அவர்கள் கொலை செய்யப்படுவதும் சமூக அரசியல் சூழலில் எந்த அளவுக்குப் பாதுகாப்பின்மை காணப்படுகிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.
சர்வதேசப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டின்படி பாதுகாப்பின்மையில் 2016-இல் 133-ஆக இருந்த இந்தியா இப்போது சாந்தனு பௌமிக்கின் மரணத்துடன் 136-ஆக அதிகரித்து பாகிஸ்தானுக்கு நிகரான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. 1992 முதல் இதுவரை 36 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொலையாளிகளில் 96% பேர் தண்டிக்கப்படாமல் தப்பியிருக்கிறார்கள். இவையெல்லாம் சட்டம் எந்த அளவுக்குச் செயல்படாமல் இருந்து குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறது என்பதைத்தான் காட்டுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது எப்படி சாத்தியம்? காவல்துறை, அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம், நீதித்துறை என்று அனைத்துத் தரப்பினரும் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்வந்தால் மட்டுமே பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க முடியும். ஆனால், அதற்கான முனைப்பு எந்த ஒரு தரப்பிலும் காணப்படவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/sep/27/வேதனையான-உண்மை-2780315.html
2779691 தலையங்கம் மீண்டும் மெர்க்கெல்! ஆசிரியர் Tuesday, September 26, 2017 01:18 AM +0530 மிகவும் ஆர்வமாகவும் கூர்மையாகவும் கவனிக்கப்பட்ட ஜெர்மனியின் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சி, 33 சதவீத வாக்குகளுடன் அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது. அந்த நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் 4-ஆவது முறையாக மீண்டும் பதவியேற்க இருக்கிறார். ஜெர்மனியின் நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெற்ற 678 இடங்களில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
கடந்த முறையைவிட வாக்கு விகிதமும் இடங்களும் குறைவாகவே அதிபர் ஏஞ்சலா மெர்க்கெலின் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சி பெற்றது அதிர்ச்சி அளிப்பதாக இல்லை. தேர்தலில் முக்கியப் பிரச்னையாக அகதிகள் பிரச்னை எழுப்பப்பட்டதால் ஏஞ்சலா மெர்க்கெல் தோல்வி அடைவார் என்று எதிர்பார்த்தவர்கள்தான் அதிகம். 
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பது அகதிகள் குடியேற்றத்திற்கு எதிரான வலதுசாரி ஆல்டர்னேடிவ் ஃபார் ஜெர்மனி என்கிற கட்சி 13 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதுதான். இரண்டாவது உலகப்போருக்குப் பிறகு தேசியவாதம் பேசுகிற வலதுசாரிக் கட்சி முதல்முறையாக ஜெர்மன் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்திருப்பது யாருமே எதிர்பாராத திருப்பம்.
ஏஞ்சலா மெர்க்கெலின் ஆளும் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் கட்சிக்குப் பிரதான எதிரியான சோஷியல் டெமாக்ரடிக் (சோசலிச ஜனநாயகக் கட்சி) இரண்டாவது உலகப்போருக்குப் பிறகு மிக மோசமான தோல்வியைத் தழுவியிருக்கிறது. அதிபர் ஏஞ்சலா மெர்க்கெலுக்கு எதிராகக் களம் இளங்கியிருந்த சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஏஞ்சலா மெர்க்கெலின் கூட்டணியிலிருந்து விலகுவதாகவும் எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போவதாவும் அறிவித்திருக்கிறார். கடந்த தேர்தலிலும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சியும், சோஷியல் டெமாக்ரடிக் கட்சியும் வேறுவழியில்லாமல் கூட்டணி ஆட்சி அமைத்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. 
கடந்த தேர்தல் 41.5 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்த கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சி மிக அதிகமான இடங்களைப் பெற்ற கட்சியாக வெற்றி பெற்றிருந்தாலும்கூட அந்தக் கட்சி எதிர்கொண்டிருக்கும் வாக்குச் சரிவு கணிசமானது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இந்தளவுக்கு மோசமான வாக்குகளை அந்தக் கட்சி பெற்றதில்லை. சோஷியல் டெமாக்ரடிக் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போவதாகத் தெரிவித்திருக்கும் நிலையில் அதிபர் மெர்க்கெல் எப்படி யாருடன் கூட்டு சேரப்போகிறார் என்பது குறித்து சர்ச்சையும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த மூன்று தேர்தல்களாக ஏஞ்சலா மெர்க்கெல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தநிலையில், இந்தத் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றிருப்பது வியப்பளிக்கவில்லை. சவால்களை எல்லாம் சாதனைகளாக மாற்றும் தனித்திறமை அவருக்கு இருக்கிறது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மெர்க்கெலின் மிகப்பெரிய பலம் நிலையான ஆட்சியை அளிப்பவர் என்கிற மக்களின் நம்பிக்கை. ஐரோப்பிய யூனியனில் உள்ள ஏனைய நாடுகள் தடுமாற்றம் காணும்நிலையில், ஜெர்மனிய மக்கள் அந்த நிலை தங்கள் நாட்டுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால்கூட ஏஞ்சலா மெர்க்கெலுக்கு நான்காவது முறை அதிபராகத் தொடர வாய்ப்பளித்திருக்கிறார்கள் என்று கருத இடமுண்டு.
2015-இல் சிரியாவில் தொடங்கிய உள்நாட்டுப் போரின் விளைவாக லட்சக்கணக்கான அகதிகள் ஐரோப்பாவை தஞ்சமடைந்தபோது பல நாடுகளும் தங்கள் எல்லைகளில் அவர்களுக்கு அனுமதி மறுத்தனர். அப்போது ஏஞ்சலா மெர்க்கெல் துணிவுடனும் அனுதாபத்துடனும் 10 லட்சத்துக்கும் அதிகமான சிரியாவைச் சேர்ந்த அகதிகளுக்கு ஜெர்மனியில் ஆதரவு அளிக்க முற்பட்டார். ஒருபுறம் அவரது முடிவு ஜெர்மானியர்கள் சிலருக்கு ஏற்புடையதாக இல்லை என்றாலும் அவரது கடந்த 12 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக மிகப்பெரிய அளவில் செல்வாக்குச் சரிவை அகதிகள் பிரச்னை ஏற்படுத்திவிடவில்லை.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் மார்ட்டின் ஷுல்ட்ஸ், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவராக இருந்தவர். அந்தக் கட்சி ஏஞ்சலா மெர்க்கெலின் கூட்டணியில் அங்கம் வகித்திருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் அந்தக் கட்சியின் மக்கள் நலக்கொள்கைகளை எல்லாம் ஏஞ்சலா மெர்க்கெல் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சியின் கொள்கைகளாக ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், சோஷியல் டெமாக்ரடிக் கட்சி தனது வாக்கு வங்கியை இழந்ததில் வியப்பொன்றும் இல்லை. 
பிற நாட்டினர் குடியேற்றத்திற்கு எதிரான வலதுசாரி ஆல்டர்நேடிவ் ஃபார் ஜெர்மன் கட்சி வலிமையான கட்சியாக நாடாளுமன்றத்தில் நுழைந்திருப்பது அதிபர் ஏஞ்சலா மெர்க்கெலுக்கு மிகப்பெரிய தலைவலியாகவும் பின்னடைவாகவும் இருக்கக்கூடும். உக்ரைன் உடனான போர், கிரேக்க நாட்டு பொருளாதார வீழ்ச்சி, இங்கிலாந்தின் 'பிரெக்சிட்'என்று ஒன்றன்பின் ஒன்றாகப் பல வெளிநாட்டு சவால்களை இதுவரை சந்தித்த ஏஞ்சலா மெர்க்கெலுக்கு இனிமேல் காத்திருப்பது மிகப்பெரிய உள்நாட்டு சவால்கள்.
மேற்கு - கிழக்கு ஜெர்மனிகளை இணைத்த தனது அரசியல் வழிகாட்டி ஹெல்மட் கோல், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஜெர்மனி புது அவதாரம் எடுக்க காரணமான கொனார்டு அடினார் ஆகியோர் வரிசையில் நான்காவது முறை அதிபராகி இருக்கிறார் ஏஞ்சலா மெர்க்கெல். இந்தத் தேர்தல் வெற்றி அவரது வெற்றி மட்டுமல்ல, ஐரோப்பியக் கூட்டமைப்பின் வெற்றியும்கூட!
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/sep/26/மீண்டும்-மெர்க்கெல்-2779691.html
2779127 தலையங்கம் கைதிகளும் மனிதர்கள்தான்! ஆசிரியர் Monday, September 25, 2017 02:49 AM +0530 இதுவரை ஊடக வெளிச்சம் மட்டுமே பெற்றிருந்த சிறைச்சாலைகள் மீது நீதித் துறையின் பார்வை விழுந்திருப்பது வரவேற்புக்குரிய மாற்றம். 2012 முதல் நடந்தேறியிருக்கும் இயற்கையான முறையில் அல்லாத சிறைச்சாலை மரணங்களுக்குத் தகுந்த இழப்பீடு சம்பந்தப்பட்ட கைதிகளின் உறவினர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கைதிகளும் மனிதர்கள்தான் என்றும், அவர்களுக்கும் அடிப்படை சுகாதாரம், உடல்நலம் பேணுதல் ஆகியவற்றுக்கான உரிமை உண்டென்றும் அந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது. 
சிறைச்சாலைச் சட்டங்கள், நிர்வாகம், அணுகுமுறை ஆகியவற்றில் சீர்திருத்தம் ஏற்படுத்தி இந்திய சிறைச்சாலைகளின் சூழலை ஒட்டுமொத்தமாக மாற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள். கைதிகள் நியாயமாகவும் மனிதாபிமானத்துடனும் நடத்தப்படுவதை அரசுகள் உறுதிப்படுத்துவதையும், கைதிகளுக்கு அநீதி இழைப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதையும் அந்தந்த மாநிலத்திலுள்ள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் கண்காணித்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் பரிந்துரைத்திருக்கிறது.
தகுந்த சீர்திருத்தங்களின் மூலம் சிறைச்சாலைகளில் கைதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதற்குத் தேவையான மாற்றங்
களையும், சீர்திருத்தங்களையும் நடைமுறைப்படுத்துவது குறித்து உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னால் பல உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சிறைச்சாலை சீர்திருத்தம் குறித்து வலியுறுத்தியிருக்கின்றன. 
சிறைச்சாலை நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கைதிகளின் உரிமைகள் குறித்து அரசால் தெளிவாக வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம். சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர முடியாவிட்டால் தேவையில்லாமல் விசாரணை என்கிற பெயரில் கைது செய்வதை அரசுகள் தவிர்க்க வேண்டும் என்றும், சிறைச்சாலையில் தவறுகள் நடப்பது தெரியவந்தால் உயர்நீதிமன்றங்கள் சிறைச்சாலைகளை நெறிப்படுத்த தன்னிச்சையாக விசாரணைக்கு உத்தரவிடவும், நடவடிக்கை எடுக்கவும் தயங்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
பெரிதும் சிறிதுமாக இந்தியாவில் செயல்படும் 1,387 சிறைச்சாலைகளில் ஏறத்தாழ 4 லட்சத்து 20 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இது சிறைச்சாலையில் அங்கீகரிக்கப்பட்ட கைதிகளுக்கான எண்ணிக்கையைவிட மிகவும் அதிகம். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் விசாரணைக் கைதிகள். நீண்ட நாட்களாக விசாரணை தொடர்வதால் அவர்களில் சிலர் பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் கழிக்கிறார்கள். கடுமையான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டிருப்பவர்களுடன் இந்த விசாரணைக் கைதிகள் சிறையில் நீண்டநாள் கழிப்பதால், சிறைச்சாலைகள் குற்றவாளிகளின் நாற்றுப் பண்ணைகளாக மாறிவிடுகின்றன.
தங்களது வாழ்க்கையில் நல்ல பகுதிகளையெல்லாம் சிறைச்சாலையில் கழித்துவிட்டு குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் விசாரணைக் கைதிகளில் பலர், வெளியில் வரும்போது சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. எந்தத் தவறும் செய்யாதவர்களை விசாரணை என்கிற பெயரில் அடைத்து வைப்பதால் அவர்களை சிறைச்சாலைகள் மனரீதியாக குற்ற உணர்வு படைத்தவர்களாக மாற்றிவிடுகின்றன. விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு எத்தனையோ பரிந்துரைகள் செய்யப்பட்டும்கூட அவர்களது எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது என்பது வேதனையிலும் வேதனை.
மிக அதிகமான இயற்கை அல்லாத மரணங்கள் சிறைச்சாலைகளில் காணப்படுவதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இதற்கு சிறைச்சாலை வன்முறை, போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் இருப்பது, சிறை நிர்வாகத்தின் கவனக்குறைவு, கைதிகளுக்கு இடையே ஏற்படும் தனிப்பட்ட மோதல்கள், தற்கொலைகள் ஆகியவைதான் காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. பொதுமக்கள் மத்தியில் காணப்படுவதைவிட சிறைச்சாலைகளில் நடைபெறும் தற்கொலைகள் 50% அதிகம். 
சிறைச்சாலை மரணங்கள் தடுக்கப்பட்டே ஆக வேண்டுமென்றும், சிறைச்சாலைகளில் இயற்கையாக அல்லாத மரணம் ஏற்பட்டால் கைதிகளின் உறவினர்களுக்குத் தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 2013-இல் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கொன்றில், இப்போது தரப்பட்டிருக்கும் தீர்ப்பில், கைதிகளின் குடும்பத்தினர்கள் கைதிகளை வந்து சந்திப்பதை ஊக்குவிக்க வேண்டுமென்றும், அவர்களுடன் தொலைபேசி, காணொலி காட்சி ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொள்வதை அனுமதிக்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.
சிறைச்சாலைகள் மேம்படுத்தப்பட்டு, கைதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதற்கு சிறைச்சாலைகள் குறித்த அடிப்படை புரிதல் மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். சிறைச்சாலைகள் என்பது சட்டத்தின் பார்வையில் தவறிழைத்தவர்களை திருத்துவதற்காகத்தானே தவிர, அவர்களை மனிதாபிமானமற்றவர்களாக மாற்றுவதற்கோ, விலங்குகளைப்போல நடத்தப்படுவதற்கோ அல்ல என்பதைப் பொதுமக்களும், சிறைச்சாலை நிர்வாகத்தினரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தப் பிரச்னையில் அரசுக்கு மட்டுமல்லாமல், நீதித் துறைக்கும் கூடப் பங்கு உண்டு. தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு தொடர் வாய்தா வாங்குவதை அனுமதிக்காமல், விரைந்து முடிவுக்கு கொண்டு வர முடியுமேயானால், சிறைச்சாலைகளில் காணப்படும் சீரழிவு பெரிதும் தவிர்க்கப்படும்.

]]>
http://www.dinamani.com/editorial/2017/sep/25/கைதிகளும்-மனிதர்கள்தான்-2779127.html
2777919 தலையங்கம் பணம் தீர்வல்ல! ஆசிரியர் Saturday, September 23, 2017 01:14 AM +0530 பேறுகால மகளிருக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், மூன்று வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகளுக்கும் அங்கன்வாடிகள் மூலமாக ஊட்டச்சத்துக்கான உணவுப் பொருள்கள் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் உணவுப் பொருள்கள் வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாகத் தாய்மார்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் போடுவது என்கிற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. உணவுப் பொருள்கள் வழங்குவதன் அடிப்படை நோக்கத்தையே இந்த முடிவு சிதைத்துவிடுகிறது.
ஊரகப்புறங்களில் லட்சக்கணக்கான சிசுக்களும், குழந்தைகளும் ஊட்டச்சத்து இன்மையால் பாதிக்கப்பட்டு இருப்பதால்தான் இப்படியொரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் தங்களது அன்றாட உணவில் கிடைக்கப்பெறாத போதுமான அளவு ஊட்டச்சத்தை பேறுகால மகளிரும், குழந்தைகளும் பெறவேண்டும் என்பதை உறுதிப்படுத்தப்படுவதற்காகத்தான் இந்தத் திட்டமே கொண்டு வரப்பட்டது. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைவை எதிர்கொள்வதுதான் அதன் நோக்கம்.
இதுமட்டுமல்லாமல், அங்கன்வாடிகள் மூலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவுக்குப் பயன்படும் உப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவை அடிப்படை ஊட்டச்சத்துகள் சேர்க்கப்பட்டதாக இருப்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது. தற்போது 12 மாநிலங்களில் மேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களில் இரண்டிலாவது அடிப்படை ஊட்டச்சத்து சேர்க்கப்படுகிறது. அயோடின் மற்றும் இரும்புச் சத்து உப்பிலும், இரும்புச் சத்து, ஒலிக் அமிலம், பி12 ஆகியவை கோதுமை மாவிலும், வைட்டமின் ஏ மற்றும் பி சமையல் எண்ணெயிலும் இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இது கட்டாயமல்ல என்றாலும்கூட, மாநில அரசுகள் இந்த முயற்சிக்கு ஆதரவளித்து வருகின்றன.
தேசிய அளவிலான ஆய்வு நடத்தப்பட்டபோது கிடைத்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில்தான் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவில் மேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களிலும் ஊட்டச்சத்து சேர்க்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
தற்போது 84 நாடுகளில் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கு இதுபோன்ற ஊட்டச்சத்து, உணவுப் பொருள்களில் கலந்து தரப்படுகிறது. இந்தியாவில் ஐந்து வயதுக்கு கீழேயுள்ள குழந்தைகளில் 70% இரும்புச் சத்து குறைவுடன் காணப்படுகின்றன. 57% பேர் வைட்டமின் ஏ குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவிலும் 85% குழந்தைகள் அயோடின் குறைபாடு உள்ளவர்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை ஒரு குழுவை அமைத்து தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவில் எந்த அளவுக்கு உப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவற்றில் ஊட்டச்சத்து சேர்க்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய உத்தரவிட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இதற்காக அமைச்சக செயலர்கள் அடங்கிய குழுவொன்றை அமைத்து குழந்தைகளிடம் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைவை எதிர்கொள்ள ஆலோசனை வழங்கும்படி பணித்திருக்கிறார். அதேபோல, சமையல் எண்ணெய், கோதுமை, உப்பு ஆகியவை இரும்புச் சத்து, வைட்டமின்கள் போன்றவை சேர்க்கப்பட்டதாக மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதன்மூலம் குழந்தைகளிடம் காணப்படும் ஊட்டச்சத்து குறைவு முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டுமென்றும் பணித்திருக்கிறார். 
ஒருபுறம் ஊட்டச்சத்து குறைவுக்கு எதிராக முனைப்புடன் முயற்சிகளை மேற்கொள்ளும் நரேந்திர மோடி அரசு, இன்னொருபுறம் பேறுகால மகளிருக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், மூன்று வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கும் நேரடியாக வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டிருப்பது, அரசின் அணுகுமுறையில் காணப்படும் தெளிவின்மை என்றுதான் கூறவேண்டும். அன்றாட உணவில் பேறுகால மகளிருக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் போதிய ஊட்டச்சத்து இல்லை எனும்போது அவர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்காமல் பணமாக கொடுப்பது எதிர்பார்த்த பலனை வழங்காது.
பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் குடும்ப வரவு செலவில் ஈடுபடுவதில்லை. அதனால் அவர்களது வங்கிக் கணக்கில் போடப்படும் பணம் ஊட்டச்சத்து வாங்குவதற்குத்தான் பயன்படுத்தப்படும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அரசிடம் ஊட்டச்சத்துள்ள பொருள்களை அங்கன்வாடிகளின் மூலம் பெறும் பேறுகால மகளிரும், பாலூட்டும் தாய்மார்களும் நிச்சயமாக வசதி படைத்தவர்களாக இருக்க வழியில்லை, அவர்களது அன்றாட உணவுக்கே வழியில்லாதவர்கள். வங்கிக் கணக்கில் அரசு வழங்கும் பணத்தை வீட்டுச் செலவுக்கு பயன்படுத்துவார்களே தவிர, ஊட்டச்சத்து உணவு வாங்க பயன்படுத்த மாட்டார்கள் என்கிற அடிப்படை புரிதல்கூட அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
வசதி படைத்த குடும்பங்களிலேயேகூட பேறுகால மகளிரின் ஊட்டச்சத்து குறித்து கவலைப்படாதபோது, ஊரகப்புறங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களில் இதுகுறித்து விழிப்புணர்வு இருக்க வாய்ப்பே இல்லை. இந்தச் சூழலில் அங்கன்வாடிகளின் மூலம் பேறுகால மகளிருக்கும் குழந்தைகளுக்கும் நேரடியாக ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்களை வழங்குவது மட்டும்தான் இதற்கான தீர்வாக இருக்கும். 
நேரடியாக ஊட்டச்சத்துள்ள உணவை வழங்குவதில் குறைபாடு இருக்கலாம். அந்த குறைபாடுகளைக் களைந்து திட்டத்தை முறைப்படுத்துவதுதான் புத்திசாலித்தனமே தவிர, பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் போட்டு தனது பொறுப்பை அரசு தட்டிக் கழிப்பது எந்தவிதத்திலும் சரியல்ல!
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/sep/23/பணம்-தீர்வல்ல-2777919.html
2777252 தலையங்கம் பொறுப்பற்ற பேச்சு! ஆசிரியர் Friday, September 22, 2017 01:18 AM +0530 ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு ஆண்டுதோறும் நியூயார்க்கில் கூடும்போது, அந்த நகரமே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் நியூயார்க்கில் குவிந்திருப்பார்கள். பெரிய நாடு, சிறிய நாடு என்கிற வேறுபாடு இல்லாமல் பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், வெளியுறவுத் துறை அமைச்சர்கள் என்று ஐ.நா. சபையின் உறுப்பினர் நாடுகள் அனைத்திலிருந்தும் பிரதிநிதிகள் நியூயார்க்கிலுள்ள ஐ.நா. சபையில் கூடுவார்கள்.
ஐ.நா. சபையின் பொதுக்குழுவில் உரையாற்றுவது என்பது எந்த ஒரு தலைவருக்கும் பெருமிதம் கொள்ளத்தக்க தருணம். உலக நாடுகளின் பிரதிநிதிகளின் முன்பாக, தங்களது நாட்டின் வெளியுறவுக் கொள்கையைப் பதிவு செய்யவும், சர்வதேசப் பிரச்னைகளில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தவும் ஒரு நாட்டின் அதிபருக்கோ, பிரதமருக்கோ கிடைக்கும் அரிய வாய்ப்பு. அதனால் ஐ.நா. சபையின் பொதுக் குழுவில் உரையாற்றக் கிடைக்கும் வாய்ப்பை முறையாகவும், முழுமையாகவும் பயன்படுத்தி தனது ஆளுமையையும் தனது நாட்டின் கௌரவத்தையும் நிலைநாட்ட எந்த ஒரு தலைவரும் தவற விடுவதில்லை.
ஐ.நா. சபையின் பொதுக்குழுவில் சில தலைவர்கள் தங்களது மதிப்பை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். வேறு சிலர் உலக நாடுகளின் பார்வையில் தங்களது செயல்பாட்டால் தங்களைத் தரம் தாழ்த்திக் கொண்ட நிகழ்வுகளும் உண்டு. 
1960-இல் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய அன்றைய சோவியத் யூனியனின் பிரதமர் நிகிடா குருச்சேவ் தனது காலணியைக் கழற்றி மேசையில் ஆவேசமாக ஓங்கித் தட்டியபோது, கூடியிருந்த உலக நாட்டுத் தலைவர்களின் நகைப்புக்கு உள்ளானார். 2009-இல் லிபியா அதிபர் முகமது கடாஃபி தனது முதலாவது ஐ.நா. உரையின்போது, ஐ.நா.வின் கொள்கை ஆவணத்தைக் கிழித்து எறிந்தார். கூடியிருந்த அத்தனை பேரும் அருவருப்புடன் முகம் சுளித்தனர். இதுபோல எத்தனை எத்தனையோ சம்பவங்கள் ஐ.நா. சபையின் பொதுக்குழு கூட்டத்தின்போது அரங்கேறியிருக்கின்றன. அந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முதலாவது உரையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
உலகத்தின் சர்வ வல்லமையுள்ள ஒரு நாட்டின் தலைவர் பொறுப்பில்லாமல் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதை உலகமே வியந்து பார்த்தது. 1960-இல் ஏகாதிபத்திய அடிமைத்தனத்தை குழிதோண்டிப் புதைப்பேன் என்று அன்றைய சோவியத் பிரதமர் நிகிடா குருச்சேவ் வீராவேசமாக முழங்கியதற்கும், இப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியாவை அழித்துக் காட்டுகிறேன் என்று முழங்குவதற்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை. இரண்டுமே அவர்கள் வகிக்கும் பதவிக்கு, அவர்களது நாட்டின் கௌரவத்துக்கு ஏற்றதாக இல்லை.
அதிபர் டிரம்பின் உரை பல காரணங்களுக்காக குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அமெரிக்க நாட்டின் நிர்வாகம் எந்த ஒரு பிரச்னையையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும் என்கிற கொள்கையைக் கடைப்பிடிக்கும்போது, அமெரிக்க அதிபர் ஒரு நாட்டை அழித்து விடுவேன் என்று வீராவேசமாக சபதமெடுப்பது வேடிக்கையாக இருக்கிறது. உறுப்பினர் நாடுகள் என்ன கருதுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் ஐ.நா. சபையின் பொதுக்குழு கூடுகின்றதே தவிர, தனி நபர்களின் கருத்துகளைக் கேட்பதற்காக அல்ல என்பதைக்கூட அமெரிக்க நாட்டின் அதிபர் தெரிந்துகொள்ளாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.
வருங்காலக் கூட்டணிகள் இரண்டு நாடுகளுக்கு இடையேயுள்ள பரஸ்பரத் தேவைகளின் அடிப்படையில்தான் அமையும் என்று குறிப்பிட்டதுடன் அனைத்து நாடுகளின் வருங்காலமும், அவரவர் நிலையில் சுதந்திரமாகவும், பொருளாதார வளத்துடனும், பாதுகாப்புடனும் இருப்பதில்தான் அமையும் என்றும் அதிபர் டிரம்ப் தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் 1920-க்கு முன்னால் 'லீக் ஆஃப் நேஷன்ஸ்' என்கிற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சர்வதேசப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முறைக்குத் திரும்ப வேண்டும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கருதுகிறாரா? 
அதிபர் டிரம்பின் உரைக்குப் பிறகு சீனாவும், ரஷியாவும், வடகொரியாவுக்கு எதிரான எந்தவொரு தடையையும் ஆதரிக்காது என்பது மட்டுமல்ல, அந்த நாட்டுக்கு மறைமுக ஆதரவு அளித்தாலும் வியப்படையத் தேவையில்லை. அமெரிக்காவின் ஆதரவு நாடுகளேகூட வடகொரியாவுக்கு எதிரான அணுஆயுதத் தாக்குதலை ஆதரிக்காது. இது கொரிய தீபகற்பத்தில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் என்பதுடன் வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் தற்காப்புத் தாக்குதல் நடத்த முற்பட்டால் அதனால் அமெரிக்காவின் தோழமை நாடுகளான தென்கொரியாவும் ஜப்பானும் கடுமையாகப் பாதிக்கப்படும்.
ஜப்பான் வழியாக வடகொரியா ஏவுகணைகளைச் சோதனை செய்தது எந்த அளவுக்கு கண்டனத்துக்குரியதும் அபாயத்துக்குரியதுமான செயலோ, அதற்கு எள்ளளவும் குறையாதது அதிபர் டிரம்பின் மிரட்டல்கள். கொரியா மீது அணுஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்திருப்பது வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் கரங்களை உள்நாட்டில் பலப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் புதிய பல தடைகளை எதிர்கொள்ள அரசியல் ரீதியாக வடகொரிய மக்களின் மனநிலையை அதிபர் கிம் ஜோங்-உன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் வற்புறுத்தலால் அமெரிக்கா பின்வாங்குமேயானால், சர்வதேசப் பிரச்னைகளில் சீனாவும், ரஷியாவும் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதைத் தவிர்க்கும். அதன் விளைவாக அமெரிக்கா பல தர்மசங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். இதுகூடவா தெரியாது அமெரிக்க அதிபர் டிரம்புக்கு?
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/sep/22/பொறுப்பற்ற-பேச்சு-2777252.html
2776721 தலையங்கம் வெள்ளத்தில் வாழ்வாதாரம்! ஆசிரியர் Thursday, September 21, 2017 01:30 AM +0530 அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு சர்தார் சரோவர் அணைக்கு 1961-இல் அடிக்கல் நாட்டியபோது, இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 11 வயதுச் சிறுவன். 56 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 67-ஆவது பிறந்த நாளில், சர்தார் சரோவர் அணையைத் தேசத்துக்கு அர்ப்பணித்திருக்கிறார் பிரதமர் மோடி. இத்தனை ஆண்டுகளாக இந்த அணை விவாதப் பொருளாகத் தொடர்ந்ததற்குக் காரணம், வளர்ச்சிக்கும், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் இடையிலான போராட்டம்தான்.
1979-இல் நர்மதை நதிநீர் பங்கீட்டு ஆணையம் 3,000 சிறிய, 135 நடுத்தர, 30 பெரிய அணைகளை நர்மதை நதியில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது. அவற்றில் நர்மதா சாகர், சர்தார் சரோவர் இரண்டு அணைகளும் அடங்கும். மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிர மாநிலங்கள் வழியே 1,312 கி.மீ. பாய்ந்து கடைசியில் அரபிக்கடலில் கலக்கிறது நர்மதை நதி. இதன் நடுவே எழுப்பப்பட்டிருக்கும் சர்தார் சரோவர் அணையின் மூலம் குஜராத் மாநிலத்திலுள்ள 21 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதியும், அந்த மாநிலத்திலுள்ள 18,144 கிராமங்களில் பாதிக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குக் குடிநீர் வசதியும் கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு.
எந்தவொரு வளர்ச்சித் திட்டமும், அதனுடன் சில அழிவுகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. அந்தத் திட்டம் ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தொலைநோக்குப் பார்வையில் கருத்தில் கொண்டுதான், வளர்ச்சித் திட்டத்தைத் திட்டமிட வேண்டும் என்பதுதான் பகுத்தறிவின்பாற்பட்ட செயல்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, பெரிய அணைகள் வளர்ச்சியின் அடையாளமாகக் கருதப்பட்டன. அந்தக் கருத்து இப்போது தலைகீழாக மாறிவிட்டிருக்கிறது. 1950-இல் பண்டித ஜவாஹர்லால் நேரு, அணைகளை 'இந்தியாவின் ஆலயங்கள்' என்று வர்ணித்தார். காற்றை மாசுபடுத்தாத நீர்மின் நிலையங்களின் மூலம் மின்சாரம் கிடைப்பதுடன், விவசாயத்துக்குத் தொடர்ந்து பாசன வசதியும் இதன் மூலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பண்டித நேருவே, தனது கருத்தைப் பிறகு மாற்றிக் கொண்டார் என்பதுதான் உண்மை. 1958-இல் பெரிய அணைகள் மீதான இந்தியர்களின் பிரமிப்பு அர்த்தமற்றது என்று கூறிய அவர், சிறிய தடுப்பணைகள் அமைப்பதை ஆதரிக்கத் தொடங்கினார். 1957-இல் மாநில முதல்வர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், சுற்றுச் சூழலையும், பல்லுயிர் பெருக்கத்தையும் பாதிக்காத வகையில் மட்டுமே வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சர்வதேச அளவிலும்கூட, பெரிய அணைகள் கட்டுவது முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது என்பதுதான் அதற்குக் காரணம். அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான அணைகள் அகற்றப்பட்டுவிட்டன என்பது பலருக்கும் தெரியாது. சிறிய அணைகளாகவே இருந்தாலும்கூட அதனால் தண்ணீரின் தரம் குறைகிறது என்றும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்றும், 'அமெரிக்கன் ரிவர்ஸ்' என்கிற அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது.
அணைகள் அட்லாண்டிக் சாலமன், ஸ்டர்ஜியல்ஸ் உள்ளிட்ட மீன்களின் வழித்தடத்தில் குறுக்கிட்டதால், அந்த மீன் இனங்கள் அழிந்து விட்டிருக்கின்றன. எகிப்தில் கட்டப்பட்ட அஸ்வான் அணையால் நைல் நதி பாயும் பூமியில் விளைச்சல் குறைந்திருப்பதுடன், தொற்றுநோய்கள் உருவாகி இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக, இதுபோன்ற பெரிய அணைகள் கட்டப்படுவதால், பல்லாயிரம் பேர் தங்களது இருப்பிடத்திலிருந்து இடம்பெயர்வதுடன் அவர்களது வாழ்வாதாரமும் சிதைகிறது. வனப்பகுதிகள் அழிகின்றன. பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் ஆதிவாசிகளின் குடியிருப்புகளைப் போலவே அவர்களது வாழ்க்கையும் அணைநீரில் மூழ்கடிக்கப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை இதுபோல் வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை ஐந்து கோடிக்கும் அதிகம். அவர்களில் பலருக்கு இன்னும் மறுவாழ்வோ, இழப்பீடோ வழங்கப்படவில்லை.
அவர்கள் இழந்த இடங்களின் மதிப்பை சதுர அடிகளின் விலையால் மட்டுமே நிர்ணயித்துவிட முடியாது. அந்த மண்ணுக்குப் பின்னால் இருக்கும் வரலாற்றையும், உணர்வுபூர்வமான பிணைப்பையும் இழப்பீடு கொடுத்து ஈடுகட்டிவிடவா முடியும்? 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி கட்டிமுடிக்கப்பட்ட பக்ராநங்கல் திட்டத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்கு இன்னும்கூட இழப்பீடு முழுமையாக வழங்கப்படாத நிலையில், சர்தார் சரோவரால் இடம்பெயர்ந்தவர்கள் எப்போது இழப்பீடும், மறுவாழ்வாதாரமும் பெறப் போகிறார்கள்?
குஜராத் சட்டப்பேரவைக்குத் தேர்தல் வர இருப்பதால்தான், இப்போது அவசர அவசரமாக சர்தார் சரோவர் அணைக்குத் திறப்பு விழா நடத்தப்பட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. குஜராத்திலுள்ள சுமார் 18,144 கிராமங்களுக்குப் பாசன வசதி அளிக்கப்போகும் சர்தார் சரோவர் அணைத் தண்ணீரைக் கொண்டு செல்ல இன்னும் 20% வாய்க்கால் வெட்டும் பணிகள்கூட முடிந்தபாடில்லை. ஆனால், நம்பிக்கை விதைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் தேர்தலில் வாக்குகள் அறுவடை செய்யப்படலாம்.
13,385 ஹெக்டேர் வனப்பகுதியும், வளமான விவசாய நிலங்களும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டு சர்தார் சரோவர் அணை தேசத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது!
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/sep/21/வெள்ளத்தில்-வாழ்வாதாரம்-2776721.html
2776028 தலையங்கம் வானமே கூரையாய்... ஆசிரியர் Wednesday, September 20, 2017 01:02 AM +0530 இந்தியாவின் நகர்ப்புறங்கள் மக்கள்தொகைப் பெருக்கத்தால் விரிவடைந்தவண்ணம் இருக்கின்றன. பார்க்கும் இடமெல்லாம் பெருகிவரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும், அதிகரித்துவிட்ட வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களும் மட்டும்தான் நமது கண்களுக்கு தென்படுகின்றன. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் பெருகிவிட்டிருக்கும் குடிசைப் பகுதிகளும், இருப்பதற்கு இடமில்லாமல் தெருவோரங்களில் தஞ்சமடைந்திருக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது குறித்து யாரும் கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை. 
நகர்ப்புற ஏழைகளின் வறுமையைக் குறைக்கவும், அவர்களது பிரச்னைகளைத் தீர்க்கவும் 2013-ஆம் ஆண்டு தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் அடிப்படைக் குறிக்கோள், நகர்ப்புறங்களில் வீடில்லாமலும் அடிப்படை வசதிகள் இல்லாமலும் வாழும் ஏழை, எளியோரின் நலனைப் பேணுதல். வீடில்லாதவர்களுக்கு குறைந்தக் கட்டணத்தில் இரவு நேரத் தங்கும் விடுதிகள் அமைத்துக் கொடுப்பது, புறம்போக்குப் பகுதி குடிசைகளில் வாழ்பவர்களின் அடிப்படை சுகாதாரத்தையும், தேவைகளையும், மருத்துவ வசதிகளையும் உறுதிப்படுத்துவது என்று தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் பல இலக்குகளை நிர்ணயித்து செயல்படும் என்று கூறப்பட்டது.
தெருவோரம் வசிப்போர், வெட்டவெளியில் வசிப்பவர்கள், மேம்பாலங்கள், ஆறு மற்றும் சாக்கடை ஓரங்களில் வசிப்பவர்கள், வழிபாட்டுத் தலங்கள், மண்டபங்கள், ரயில் மற்றும் போக்குவரத்து நிலையங்கள் ஆகியவற்றைத் தங்குதலுக்காகத் தஞ்சமடைபவர்கள் என்று வீடில்லாதவர்களுக்கு விளக்கம் அளிக்கிறது அரசின் குறிப்பு. இவர்களுக்கெல்லாம் குடியிருக்க வீடுகள் அமைத்துக் கொடுக்க முடியாமல் போனாலும், தங்கும் விடுதிகளாவது அமைத்துத் தர வேண்டும் என்கிற கோரிக்கையைப் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும்கூட இதுவரை ஆக்கபூர்வமாக எந்தவொரு முயற்சியும் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால், வீடில்லாமல் தெருவோரங்களையும், பொது இடங்களையும் தஞ்சமடைந்து வானமே கூரையாக வாழுகின்ற மக்கள் குறித்து கணக்கெடுப்பு ஒன்று அரசால் நடத்தப்பட்டது. அதன்படி இந்தியாவில் ஏறத்தாழ 17.7 லட்சம் பேர் தங்க இடம் இல்லாதவர்கள் என்கிற புள்ளிவிவரம் சேகரிக்கப்பட்டது. உண்மை நிலை இதைவிட சில மடங்குகள் அதிகமாக இருக்கும் என்றாலும், தெருவோர வாசிகள் குறித்த அதிகாரபூர்வக் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது என்கிற அளவில் அரசின் முயற்சி வரவேற்புக்குரியது. 
2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கும், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கும் இடையிலான பத்து ஆண்டுகளில், குடியிருக்க வழியில்லாதவர்களின் எண்ணிக்கை கிராமப்புறங்களில் குறைந்திருக்கிறது என்பது ஆறுதலுக்குரியது. ஊரகப்புறங்களில் வீடில்லாமல் தெருவோரங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 28 விழுக்காடு குறைந்திருக்கிறது என்றால், நகர்ப்புறத் தெருவோர மற்றும் குடிசைவாசிகளின் எண்ணிக்கை 20 விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்பதிலிருந்து, கிராமப்புறங்களில் வீடில்லாதோரின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணத்தை ஊகித்துக் கொள்ளலாம். வேளாண்மை நடைபெறாததால் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறையும்போது மக்கள் கூலிவேலை செய்து பிழைப்பதற்காக நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்கிறார்கள் என்பதைதான் இது தெளிவுபடுத்துகிறது.
கடந்த ஆண்டு இந்தப் பிரச்னை பொதுநல வழக்காக உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது மத்திய - மாநில அரசுகளின் அக்கறையின்மையை நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்தது. போதிய நிதி ஒதுக்கீடு இருந்தும்கூட நகர்ப்புற ஏழைகளுக்குப் பாதுகாப்பான இரவு நேர உறைவிடங்களை ஏற்படுத்திக் கொடுக்காததை நீதிமன்றம் கண்டித்தபோதுதான் மாநில அரசுகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியை பயன்படுத்தாமல் மடைமாற்றம் செய்வது வெளிச்சத்துக்கு வந்தது.
மத்திய அரசின் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தில் இந்தியாவிலுள்ள 790 நகரங்கள் இடம் பெறுகின்றன. இதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ரூபாய் ஆயிரம் கோடியும் முழுமையாக செலவிடப்படாமல் வேறுவேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஒதுக்கீடு நகர்ப்புற வீடில்லாதவர்களுக்கானது மட்டுமல்லாமல் ஏனைய செயல்பாடுகளுக்குக்கும்கூட என்கிற மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. 
நீதிபதிகள் மதன் லோக்கூர், தீபக் குப்தா ஆகியோர் முன் இந்த பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசின் மெத்தனம் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. 2016 - 17இல் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.412 கோடி செலவிடப்படாத நிலையில், 2017-18 நிதியாண்டில் மீண்டும் ரூ.228 கோடி வழங்கப்பட்டிருப்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் நிதி மாநில அரசுகளால் எப்படி செலவிடப்படுகிறது என்பது குறித்துக் கணக்குத் தணிக்கைக் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், நிதி ஒதுக்கீடு முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். 
நிதி ஒதுக்கீடு செய்வதால் மட்டுமே தீர்வு கிடைத்துவிடாது. தெருவோர வாசிகளும் இந்தியக் குடிமக்கள்தான் என்பதை நினைவில் நிறுத்தி ஆட்சியாளர்கள் செயல்பட்டால் மட்டுமே, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்; தெருவோரம் வசிக்கும் அடித்தட்டு மக்களுக்கும் நியாயம் கிடைக்கும்.
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/sep/20/வானமே-கூரையாய்-2776028.html
2775416 தலையங்கம் சொன்னால் போதாது ஆசிரியர் Tuesday, September 19, 2017 01:26 AM +0530 பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விரைவிலேயே ஜி.எஸ்.டி.யில் இணைப்பது குறித்து மத்திய அரசு சிந்திக்கத் தொடங்கியிருப்பது வரவேற்புக்குரிய மாற்றம். இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே சீரான விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவதும் உறுதிப்படுத்தப்பட்டால் அதனால் நுகர்வோர் பயன் அடைவார்கள். மாநில அரசுகள் எந்த அளவுக்கு இதற்கு ஆதரவு தெரிவிக்கும் என்பதும், மத்திய அரசு முழு மனதுடன் இதை அமல்படுத்த முற்படுமா என்பதும் கேள்விக்குரியது.
2012-இல் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 120 டாலர் கொடுத்து இறக்குமதி செய்து கொண்டிருந்தபோது இந்தியாவிலுள்ள பெட்ரோல் பங்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று சர்வதேச கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 50 டாலராகக் குறைந்திருக்கும் நிலையில், பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை ரூ.70-க்கும் அதிகம். 
இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.51, டீசல் விலை லிட்டருக்கு ரூ.58.91 என்கிற நிலையில் தில்லியிலும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.09, டீசல் விலை லிட்டருக்கு ரூ.62.05 என்கிற நிலையில் சென்னையிலும் சில்லறையில் விற்கப்படுகிறது. நரேந்திர மோடி அரசு பதவியேற்ற மே 26, 2014 அன்று, தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.41, டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.71 என்கிற நிலையிலும், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.60, டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.50 என்கிற நிலையிலும் காணப்பட்டது. இதே காலகட்டத்தில் இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 108.02 டாலரிலிருந்து 53.83 டாலராகக் குறைந்தும்கூட அந்த வீழ்ச்சியின் பயன் நுகர்வோருக்குக் கிட்டவில்லை.
பெட்ரோல், டீசலின் விலையை சர்வதேச விலையுடன் இணைத்து நாள்தோறும் நிர்ணயிப்பது என்கிற வழக்கம் கடந்த ஜூன் 16-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை சுமார் 5% அதிகரித்திருக்கிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 7.89 டாலர் அதிகரித்திருக்கிறது என்று இந்த விலை உயர்வை பெட்ரோலிய நிறுவனங்கள் நியாயப்படுத்த முற்பட்டாலும்கூட, தளர்த்தப்பட்ட விலைக் கட்டுப்பாட்டின் பயன் பொதுமக்களை முழுமையாகச் சென்றடையவில்லை என்பதை மறுப்பதற்கில்லை.
சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலைச் சரிவின் பயன் பொதுமக்களை போய்ச் சேராததற்கு முக்கியமான காரணம் மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு கச்சா எண்ணெய் விலை குறைப்புக்கும் ஏற்ப கலால் வரி, விற்பனை வரி ஆகியவற்றை அதிகரித்ததுதான். பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூ.9.48-லிருந்து ரூ.21.48 ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.56-லிருந்து ரூ.17.33 ஆகவும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு வகையில் சொல்லப் போனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைச் சரிவின் பயனை எல்லாம் அரசு தனது நிதி வருவாயை பெருக்கிக் கொள்ள பயன்படுத்திக் கொண்டதே தவிர, பொதுமக்களுக்கு அதன் பயனைத் தரவில்லை. 
அரசின் கலால் வரி வருவாய் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.99,184 கோடியிலிருந்து ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 691 கோடியாக அதிகரித்திருக்கிறது என்பதிலிருந்து பெட்ரோல், டீசல் பயனீட்டாளர்களைவிட அரசுதான் இதனால் பயன் அடைந்திருக்கிறது என்பது தெளிவு. ஆண்டொன்றுக்கு 3.2 கோடி கிலோ லிட்டர் பெட்ரோலும், 9 கோடி கிலோ லிட்டர் டீசலும் விற்பனையாவதால் இதிலிருந்து கிடைக்கும் பல்வேறு வரிகளின் மூலம் மத்திய, மாநில அரசுகள் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டுகின்றன என்பது எந்தவிதத்தில் நியாயம் என்பதை ஆட்சியாளர்கள்தான் விளக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு உலகிலேயே மிக அதிகமாக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் பயனீட்டாளர்கள் பெட்ரோல், டீசலுக்காக தரும் விலை பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட தென் ஆசிய நாடுகளின் விலையைவிட 60% அதிகம்.
தினசரி விலை நிர்ணயம் என்கிற முறை அறிமுகப்படுத்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்டிருக்கும் விலையேற்றம் குறித்தோ, மிக அதிகமான அளவு வரி விதிப்பு செய்யப்படுகிறது என்பது குறித்தோ மக்கள் மத்தியில் பெரிய அளவில் எழுச்சி எழாமல் தடுக்கப்பட்டிருக்கிறது என்பது அரசின் ராஜதந்திரம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான மானியம் 86% குறைந்திருக்கிறது. மத்திய, மாநில வரிகள் பெட்ரோல் மீது 112%-ம், டீசல் மீது 300%-ம் அதிகரித்திருக்கிறது. இதற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் கூறும் காரணங்கள் இரண்டு. முதலாவது, கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்காகவும், வளர்ச்சிப் பணிகளுக்காகவும் மத்திய அரசுக்கு நிதி ஆதாரம் தேவைப்படுகிறது என்பது. இரண்டாவது, இதன் மூலம் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைப்பதும், தனியார் வாகனப் பயன்பாடு குறைக்கப்பட்டு காற்று மாசு கட்டுப்படுத்தப்படும் என்பதும். இவை இரண்டுமே வலுவான காரணிகள் அல்ல.
பெட்ரோல், டீசலுக்கு அதிகப்பட்ச 28% ஜி.எஸ்.டி. வரி விதிப்பை அறிமுகப்படுத்தி சர்வதேச கச்சா எண்ணெய் விலைக் குறைவின் பயனை பயனீட்டாளர்களுக்கும் வழங்க அரசு முற்படுவதுதான் பாராட்டுக்குரிய முடிவு!
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/sep/19/சொன்னால்-போதாது-2775416.html
2774865 தலையங்கம் காலத்தின் கட்டாயம்! ஆசிரியர் Monday, September 18, 2017 02:49 AM +0530 ஜப்பான் பிரதமர் ஷின் ஸோ அபேயின் அரசுமுறைப் பயணம் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது. ஜப்பான் பிரதமரின் இப்போதைய இந்திய விஜயம் குறித்து காந்தி நகருக்கும் மும்பைக்கும் இடையே அதிவிரைவு புல்லட் ரயில் இயக்கப்படுவது குறித்த ஒப்பந்தம் பற்றி மட்டும்தான் அதிகமாக பேசப்படுகிறது. ஆனால், இந்த விஜயத்தின் பின்னணியில் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய பொருளாதார, ராஜதந்திர முடிவுகள் பல இருக்கின்றன.
இதற்கு முன்னால் பலமுறை ஜப்பானிய பிரதமர் ஷின் ஸோ அபே இந்திய பிரதமர் மோடியை சந்தித்திருந்தாலும்கூட டோக்கா லாம் பிரச்னைக்குப் பிறகு நடைபெற்றிருக்கும் சந்திப்பு என்பதால் இருதரப்பு விவாதத்தில் சீனாதான் முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. டோக்கா லாம் பிரச்னையில் இந்தியாவும் சீனாவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்த நேரத்தில் அந்த இரண்டு மாதங்களும் இந்தியாவுக்கு வெளிப்படையான ஆதரவை அளித்த நாடு ஜப்பான் மட்டுமே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 
டோக்கா லாம் பிரச்னையில் ஜப்பான் இந்தியாவை முழுமையாக ஆதரிப்பதற்கு காரணம் இருக்கிறது. ஜப்பானின் பகுதியான சென்காகூ தீவுகளை டோக்கா லாம் போலவே சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இந்தியா, ஜப்பான் மட்டுமல்லாமல் தென் சீனக் கடலிலுள்ள வேறு சில பகுதிகளையும் சீனா சொந்தம் கொண்டாடும் நிலையில், அந்த நாட்டின் ஏகாதிபத்திய எண்ணத்துக்கு முட்டுக்கட்டைபோட ஜப்பானுக்கு இந்தியாவின் துணை தேவைப்படுகிறது. 
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவைத் தனது பாதுகாப்புக்கு முழுமையாக நம்பி வந்த ஜப்பான், இப்போது தன்னிச்சையான முடிவுகளை எடுக்கும் நாடாக பிரதமர் ஷின் ஸோ அபேயின் தலைமையில் புதியதொரு பாதையை வகுக்க முற்பட்டிருக்கிறது. அமெரிக்காவும், அதிபர் டிரம்பின் தலைமைக்குப் பிறகு பிற நாடுகளுக்கு உதவுவது என்கின்ற தனது கொள்கையை மாற்றிக் கொண்டு விட்டிருக்கிறது. இந்த சூழலில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள ஆசியாவின் வளர்ந்து வரும் இன்னொரு பெரிய பொருளாதாரமான இந்தியாவின் நெருக்கம் ஜப்பானுக்கு தேவைப்படுகிறது. 
காந்தி நகரில் பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் ஷின் ஸோ அபேயும் வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கை நிச்சயமாக சீனாவை நிமிர்ந்து உட்கார்ந்து கூர்ந்து கவனிக்கத் தூண்டியிருக்கும். இந்தியா, ஜப்பான் இரண்டு நாடுகளுக்குமே வட கொரியா மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும், வட கொரியாவின் அணு ஆயுத முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்குக் கண்டனம் தெரிவித்திருப்பதும் சீனாவுக்கு எதிரான மறைமுகத் தாக்குதல். அதேபோல, தீவிரவாதக் குழுக்கள் பட்டியலில் ஜெய்ஷ் இ முகமதுவை சேர்ப்பதை நிராகரிக்கும் சீனாவை மறைமுகமாக தாக்குகிறது வன்முறைக்கு எதிரான தீர்மானம். தென் சீனக் கடல் பகுதியை யாரும் சொந்தம் கொண்டாடுவதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் கூட்டறிக்கை சீனாவைத்தான் கண்டிக்கிறது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 
இந்தியாவை ஜப்பான் ஒரு பொருட்டாக மதிக்க தொடங்கியது அமெரிக்கா இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதற்கு பிறகுதான். அமெரிக்கா, இந்தியாவுடன் நெருங்குகிறது என்பதைப் புரிந்து கொண்ட ஜப்பான் அதன் பின்னால் இருக்கும் ராஜதந்திரத்தையும் புரிந்து கொள்ளத் தவறவில்லை. சர்வதேச உறவுகளில் அமெரிக்காவைப் பின்பற்றும் ஜப்பான், இந்தியாவுடன் தானும் நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டதில் வியப்பொன்றுமில்லை. 
அமெரிக்காவிலிருந்து தயாரிப்பு நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதையும் தங்களது தொழிற்சாலைகளை அமெரிக்காவுக்கு வெளியே நிறுவுவதையும் விரும்பாத டொனால்டு டிரம்ப் நிர்வாகம், போயிங், லாக்ஹீட் மார்ட்டின் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் ஜெட் போர் விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவ அனுமதி வழங்கியிருக்கிறது எனும்போது எந்த அளவுக்கு அமெரிக்கா இந்தியாவை தனது நட்பு நாடாகக் கருதுகிறது என்பதை ஜப்பான் தெரிந்து கொண்டது.
இந்திய - ஜப்பான் உறவில் மிகப்பெரிய தடையாக இருந்தது இரண்டு நாடுகளுக்குமிடையேயான அணுசக்தி ஒப்பந்தம்தான். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத எந்தவொரு நாட்டுடனும் ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வதில்லை. அதனால் பல ஆண்டுகளாக இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் இழுபறியாகவே இருந்து வந்தது. இப்போது ஜப்பான் தனது நிபந்தனைகளையெல்லாம் தளர்த்திக் கொண்டு இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்திருக்கிறது. 
இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீட்டில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜப்பான்தான் இந்தியாவுக்கு மிக அதிகமான நிதி உதவி அளிக்கும் நாடாகத் திகழ்கிறது. அதேநேரத்தில் இரண்டு நாடுகளுக்குமிடையேயான வர்த்தகம் குறைந்து வருவது கவனத்துக்குரியது. ஜப்பான் பிரதமரின் இந்திய விஜயத்தின் விளைவாக வர்த்தக உறவு மேம்படுவதுடன் ஆசியாவில் சீனாவுக்கு நிகரான சக்தியாக இந்தக் கூட்டணி உயருமேயானால் அது நிச்சயமாக இந்தியாவுக்குப் பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் பயன் அளிக்கும்.
அதேநேரத்தில் இரண்டு நாடுகளுமே வர்த்தக உறவு காரணமாக சீனாவைப் பகைத்துக் கொள்ள முடியாத இக்கட்டில் சிக்கியிருக்கின்றன என்பதையும், சீனா தவிர்க்க முடியாத சக்தியாக உலகில் உயர்ந்திருக்கிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

]]>
http://www.dinamani.com/editorial/2017/sep/18/காலத்தின்-கட்டாயம்-2774865.html
2774050 தலையங்கம் வேண்டும்தான், ஆனால்... ஆசிரியர் Saturday, September 16, 2017 02:57 AM +0530 ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயின் இந்திய விஜயத்தின் முடிவில், விமானப் போக்குவரத்து, அணுசக்தி, வர்த்தகம், அறிவியல் தொழில்நுட்பம் என்று 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன என்றாலும்கூட, ஆமதாபாத் -மும்பைக்கு இடையே அதிவிரைவு புல்லட் ரயில் ஒப்பந்தம்தான் பரவலான எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த அதிவிரைவு ரயில் திட்டத்தின் மூலம் இந்தியாவின் ரயில்வே துறை நவீனப்படுத்தப்படுவதுடன் இந்தியாவின் மேற்கு பகுதியில் தொழில் வளர்ச்சியும் கட்டமைப்பு வளர்ச்சியும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் ரயில் 1853-இல் மும்பைக்கும் தாணேக்கும் இடையே உள்ள 34 கி.மீ. தூரத்தை ஒரு மணி நேரத்தில் கடந்தது. 160 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும்கூட இந்திய ரயில்வேயின் சராசரி வேகம் இரட்டிப்பாகி இருக்கிறது, அவ்வளவே. இந்தியாவின் மிக அதிவிரைவு ரயிலான தேஜஸ் ஒரு மணி நேரத்துக்கு 160 கி.மீ. வேகத்தில் விரைகிறது. அரசின் இப்போதைய அதிவிரைவு ரயில்வே திட்டம் முழுமை பெற்றால், 2022-இல் அதைவிட இரட்டிப்பு வேகத்தில் புல்லட் ரயில் பயணிக்கும்.
மும்பைக்கும் ஆமதாபாத்துக்கும் இடையேயான 508 கி.மீ. தூரத்தை 2 அல்லது 3 மணி நேரத்தில் புல்லட் ரயில் கடக்கும். ஷினாகாசென் டெக்னாலஜிஸ் நிறுவனம் நம்பிக்கைக்கும் தொழில்நுட்பத்துக்கும் பெயர் போனது. 1964-இல் தொடங்கப்பட்ட அந்த நிறுவனத்தின் புல்லட் ரயில் திட்டம் இதுவரை ஒரு விபத்தைக் கூட சந்தித்ததில்லை என்பதும், அதன் சராசரி காலதாமத நேரம் ஒரு நிமிடத்திற்கும் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் எதிர்பார்ப்பின்படி மும்பை - ஆமதாபாத் அதிவிரைவு புல்லட் ரயில் நாளொன்றுக்கு 35 ஆயிரம் பயணிகளுக்கும் அதிகமானோரை 2023-இல் ஈர்க்கும். ரயிலில் பயணிப்பதை விட்டுவிட்டு விமானத்தில் பயணிக்கத் தொடங்கியிருப்போரை மட்டுமல்லாமல், சாலை போக்குவரத்து பயணிகளையும் இந்த புல்லட் ரயில் ஈர்க்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது. விமானப் பயணத்தை போல் அல்லாமல் மும்பைக்கும் ஆமதாபாத்துக்கும் இடையே உள்ள பல சிறு நகரங்களை இந்த ரயில் இணைப்பதால், வழிநெடுக உள்ள பகுதிகளின் பொருளாதாரம் மேம்படும் என்றும், ஏறத்தாழ 40 ஆயிரம் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் இந்த அதிவிரைவு புல்லட் ரயில் திட்டம் குறித்து அரசு எதிர்பார்க்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் "இந்தியாவை உருவாக்குவோம்' திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த நவீன புல்லட் ரயில் திட்ட தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள ஜப்பான் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஏனைய பல துறைகளிலும் ஜப்பானின் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு கிடைக்கக் கூடும் என்பது இந்த ஒப்பந்தத்தினால் கிடைக்கும் நன்மை.
புல்லட் ரயில் திட்டத்தைப் பொருத்தவரை இந்தியாவுடன் இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஜப்பானுக்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இந்தோனேசியாவும் தாய்லாந்தும், ஜப்பானை நாடாமல் சீனாவுடன் புல்லட் ரயிலுக்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டிருக்கும் நிலையில், வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரமான இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலம் புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் தனது முக்கியத்துவத்தை ஜப்பான் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.
புல்லட் ரயில் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சனங்களை முன்வைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய இரண்டு முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் பவன் பன்சல், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ரயில்வே அமைச்சர்களாக தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்தது என்பதை அந்தக் கட்சி மறந்திருக்க முடியாது.
அதேநேரத்தில் இந்திய ரயில்வே தொடர்பான வேறு சில நடைமுறை உண்மைகளை நாம் சிந்திக்காமலும் இருக்க முடியவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக நடந்த இரண்டு விபத்துகள் காரணமாக முந்தைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தார்மிக பொறுப்பேற்று பதவி விலகினார். கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி மத்திய ரயில்வே அமைச்சராக பியூஷ் கோயல் பதவியேற்று இரண்டு வாரங்கள் கூட ஆகவில்லை. மூன்று ரயில் விபத்துகள் நடந்தேறி விட்டிருக்கின்றன.
தண்டவாளங்களை மேம்படுத்துதல், பாலங்களை உறுதிப்படுத்துதல், சேவை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், தொடர்ந்த செப்பனிடல், மேம்படுத்துதல் என்று ரயில்வேத் துறையை நவீனப்படுத்த மிகப்பெரிய முதலீடு தேவைப்படுகிறது. இதற்கெல்லாம் எந்த நாடும் உதவ முன்வராது. ஒருபுறம் புல்லட் ரயில் இயக்க ஆசைப்படும் ரயில்வே துறை ஏற்கெனவே இருக்கும் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த என்ன செய்யப் போகிறது என்கிற கேள்வியை நாம் எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
ஜப்பானைப் பொருத்தவரை அதிலும் குறிப்பாக, இப்போதைய பிரதமர் ஷின்úஸா அபேயை பொருத்தவரை இந்தியாவுடன் அவருக்கு உணர்வுபூர்வமான நெருக்கம் உண்டு. 1950-இல் ஜப்பான் பிரதமராக இருந்த அவரது தாத்தா நோபுசுக்கே கிஷி, இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு சர்வதேச அளவில் ஒதுக்கி வைக்கப்பட்ட ஜப்பானை அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு தனிமைப்படுத்த மறுத்ததை நன்றியுடன் அடிக்கடி நினைவுகூறுவார் என்பதுதான் அதற்குக் காரணம். புல்லட் ரயில் வேகத்தில்
இல்லாவிட்டாலும் இந்திய ரயில்வேயின் வேகத்திலாவது இந்திய - ஜப்பான் உறவு மேம்படுகிறது என்பதுவரை மகிழ்ச்சி.

]]>
http://www.dinamani.com/editorial/2017/sep/16/வேண்டும்தான்-ஆனால்-2774050.html
2773376 தலையங்கம் நெஞ்சு பொறுக்குதில்லையே... ஆசிரியர் Friday, September 15, 2017 01:14 AM +0530 இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி பெறுவது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்று கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை உருவாக்கிய அரசு, அந்த குழந்தைகளின் பாதுகாப்பை ஏனோ பள்ளி நிர்வாகங்களுக்கே வழங்கிவிட்டிருக்கிறது. பள்ளி நிர்வாகம் தங்கள் கல்விச்சாலையில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்கிற நம்பிக்கையில்தான் பெற்றோர்களும் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புகிறார்கள். ஆனால், பள்ளிக்கூடங்கள் சட்டத்தின் உணர்வையோ, பெற்றோர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையோ குறித்துக் கவலைப்படாமல் செயல்படுகின்றன என்பதைத்தான் தில்லியை அடுத்த குருகிராமில் இயங்கும் ரயான் உறைவிடப் பள்ளியில் அரங்கேறியிருக்கும் கோர சம்பவம் உணர்த்துகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ரயான் உறைவிடப் பள்ளியில் பயிலும் பிரத்யுமன் தாக்கூர் என்கிற ஏழு வயதுச் சிறுவன், அந்தப் பள்ளியில் பணிபுரியும் வாகன நடத்துநரான அசோக்குமார் என்பவரால் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிவிட்டிருக்கிறது. தனது பாலியல் இச்சைக்கு உடன்பட மறுத்த அந்தச் சிறுவன் கழிப்பறையில் பேருந்து நடத்துநரால் கொல்லப்பட்டிருப்பது ரத்தத்தை உறையவைக்கும் கொடூர நிகழ்வு.
குருகிராமில் செயல்படும் ரயான் உறைவிடப் பள்ளியில் பல பாதுகாப்புக் குறைபாடுகள் காணப்படுகின்றன. கழிப்பறையை பயன்படுத்தும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கக் காவலாளிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. மாணவர்கள் மட்டுமல்லாமல், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களும் அதே கழிப்பறைகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதனால் குழந்தைகள் பாலியல் இச்சைக்கு உட்படுத்தப்படுவதற்கான சூழல் காணப்பட்டது.
ஏழு வயது பிரத்யுமன் தாக்கூரின் கொலையாளி எந்தவித சோதனையோ கண்காணிப்போ இல்லாமல் கத்தியுடன் பள்ளிக்கூடத்திற்குள் வளைய வருவது தங்கு தடையில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்தது. ரயான் உறைவிடப் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்களின் பின்னணி குறித்து, காவல்துறையிலிருந்து விவரங்கள் பெறப்படவில்லை. கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்தும்கூட அவை செயல்படுகின்றனவா என்பது கண்காணிக்கப்படவில்லை.
அசோக்குமார் என்கிற பேருந்து நடத்துநரான அந்தக் கொலையாளி, மாணவர்கள் பயன்படுத்தும் அதே கழிப்பறையை பயன்படுத்தியதும், அதில் நுழைந்ததும் பள்ளி சிறார்களின் பாதுகாப்பு குறித்த குருகிராம் காவல்துறையினரின் வழிகாட்டுதலை மீறிய செயல். காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி பள்ளிகளில் வேலைபார்க்கும் அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் வாகன ஓட்டுநர்களும், நடத்துநர்களும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நுழைய முடியும். அப்படியிருக்கும்போது ரயான் உறைவிடப் பள்ளியில் அசோக்குமார் என்கிற அந்த வாகன நடத்துநர் எப்படி மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் நுழைந்தார் என்பது குறித்தும், கத்தியுடன் அந்தப் பள்ளிக்குள் அவரால் எப்படி வளைய வரமுடிந்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டாக வேண்டும். இதற்கு முன்னால் இதுபோல எத்தனை மாணவர்கள் அசோக்குமார் போன்ற ஊழியர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது.
ரயான் உறைவிடப் பள்ளி என்பது மிகப்பெரிய கல்வி நிறுவனம். இந்தியாவில் மட்டும் 304 பள்ளிக்கூடங்களையும், இந்தியாவுக்கு வெளியில் 43 பள்ளிக்கூடங்களையும் நடத்துகிறது என்பதிலிருந்து அது எவ்வளவு பெரிய நிறுவனம் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். சாதாரண தனியார் பள்ளிகளைவிடப் பல மடங்கு அதிகக் கட்டணம் வசூலிக்கும் இந்தக் குழுமத்தின் குருகிராம் பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து கிடப்பதும், தீயணைப்புக் கருவிகள் செயல்படாமல் இருப்பதும், கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் அவை கண்காணிக்கப்படாமல் இருப்பதும், ஊழியர்களின் பின்னணி குறித்த விவரங்கள் அறியப்படாமல் இருப்பதும், சிறார்களுக்குப் பாதுகாப்பில்லாத கழிப்பறைகள் காணப்படுவதும், இதுபோன்ற பள்ளிகளில் எந்த அளவுக்கு நிர்வாகம் செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
ரயான் உறைவிடப் பள்ளி போன்ற அதிகக் கட்டணம் பெறும் தனியார் பள்ளிகளிலேயே இதுதான் நிலைமை என்றால், இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பயிலும் கோடிக்கணக்கான குழந்தைகளின் நிலைமை என்ன என்பது குறித்து சிந்திக்கும்போது அச்சம் மேலிடுகிறது. தனியார் பள்ளிகள் புற்றீசலாய் பெருகிவிட்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர்களுக்கேகூட ஊழியர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லாத நிலை. கல்வித்துறையும் அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அக்கறை காட்டாத போக்கு - இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை எப்படி, யார்தான் உறுதிப்படுத்துவது?
பள்ளிச் சிறார்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மகிழ்ச்சி. ஜூலை 16, 2004-இல் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மற்றும் சரஸ்வதி மழலையர் பள்ளியில் நடந்த தீ விபத்தில் பலியான 94 குழந்தைகள் குறித்த வழக்கில், ஜூலை 30, 2014-இல் விசாரணை நீதிமன்றம் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் அனைத்துக் குற்றவாளிகளையும் விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது. ரயான் உறைவிடப் பள்ளி வழக்கிலும் இதுபோல நடக்காது என்பது என்ன நிச்சயம்? பாவம் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகள்!

]]>
http://www.dinamani.com/editorial/2017/sep/15/நெஞ்சு-பொறுக்குதில்லையே-2773376.html
2772716 தலையங்கம் வெட்கித் தலைகுனிவோம்! ஆசிரியர் Thursday, September 14, 2017 01:26 AM +0530 ஒருபுறம் உலகக் கோடீஸ்வரர்களின் வரிசையில் இந்தியர்கள் பலர். இன்னொருபுறம் வறுமையின் பிடியில் சிக்கி, இருக்க இடமில்லாமல் தெருவோரங்களில் அகதிகளாய் லட்சக்கணக்கானோர். ஒருபுறம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறோம். இன்னொருபுறம் விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். அப்படியானால், இந்தியாவின் வளர்ச்சி என்பது நிஜமா அல்லது தோற்றமா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
எந்தவொரு நாகரிக சமுதாயத்திலும் மனித மலத்தை அகற்றும் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவது கிடையாது. பொலிவுறு நகரங்கள் குறித்தும், தூய்மை இந்தியா குறித்தும் நாம் திட்டங்கள் தீட்டிக்கொண்டிருக்கும்போது, இந்தியாவின் பல பாகங்களில் மலம் அள்ளும் பணியில் இன்னும் பலர் ஈடுபடுகின்றனர் என்கிற வெட்கத்துக்குரிய செய்தி பலருக்கும் அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருக்கக்கூடும். ஆனால் அதுதான் உண்மை.
மனித மலம் அள்ளும் தொழிலாளர்களை நாம் இன்னும் முழுமையாக அகற்றிவிடவில்லை. 2011 மக்கள்தொகைக் கணக்கின்படி, குறைந்தது 1,82,505 பேர் மலம் அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 7,40,078 வீடுகளில் இன்னும்கூட மனிதர்கள் மலம் அள்ளும் விதத்திலான 'உலர் கழிப்பறை' கழிப்பறைகள்தான் காணப்படுகின்றன. 1993-இல் உலர் கழிப்பறைகளில் மலத்தை மனிதர்கள் சுத்தம் செய்யும் வழக்கத்துக்குத் தடைவிதிக்கும் சட்டம் இயற்றப்பட்டும்கூட, இந்த அநாகரிகத்துக்கு இன்னும் முடிவு கட்டப்படவில்லை என்பது வேதனையிலும் வேதனை. 
1993-இல் இயற்றப்பட்ட சட்டம், 2013-இல் சாக்கடைகளில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்யும் பழக்கத்துக்கும் தடை பிறப்பிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. அப்படியிருந்தும்கூட பல மாநிலங்கள் இந்தச் சட்டத்தை பின்பற்றுவதில்லை என்பதற்கு வன்மையான கண்டனத்தை மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்திருக்கிறார். 
இதுகுறித்து திடீர் விழிப்புணர்வு வருவதற்கு, கடந்த மாதம் தில்லியில் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 10 பேர் விஷவாயு தாக்கி மரணப்பட்டதுதான் காரணம். ஊராட்சி, நகராட்சி அமைப்புகளின் அக்கறையின்மையும் சமுதாயத்தில் ஆழமாக பதிந்துவிட்டிருக்கும் சமூக வழிமுறைகளும் இதுபோன்ற மரணங்களுக்கு வழிகோலுகின்றன. மனிதாபிமானமற்ற முறையில் சக மனிதனை நடத்துகிறோம் என்கிற குற்ற உணர்வே இல்லாமல் நாம் இருப்பதன் அடையாளம் இது என்றும் கூற வேண்டும்.
ஊராட்சி, நகராட்சி அமைப்புகள் சாக்கடை துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களை முறையாக அடையாளம் காணவில்லை என்பதும், சாக்கடைத் துப்புரவுப் பணியின்போது இறந்தவர்கள் குறித்த விவரங்களை வெளிப்படுத்துவதில்லை என்பதும், மத்திய - மாநில அரசுகள் இதுகுறித்து முனைப்பு காட்டாமல் இருப்பதால்தான் தவிர்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, 22 மாநிலங்கள் மனித மலம் அள்ளுபவர்கள், சாக்கடையில் இறங்கி பணியாற்றுபவர்கள் குறித்த எல்லா தகவல்களையும் மறைத்துவிட்டிருக்கின்றன. அதனால் அந்தத் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் இழப்பீடு உதவி தரவோ, வேறு உதவிகளைச் செய்யவோ முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
மலக்கழிவை அகற்றும் பணியாளர்களுக்கும் சாக்கடையில் இறங்கி பணியாற்றுபவர்களுக்கும் மறுவாழ்வு அளிப்பதற்கான திட்டமொன்றை மத்திய அரசு அறிவித்தது. மாநில அரசுகளிடம் அழுத்தம் கொடுத்து அவர்களிடமிருந்து இவர்கள் குறித்த தகவல்களை கேட்டு வாங்காதது மட்டுமே மத்திய அரசின் தவறு என்று கருதிவிட வேண்டாம். மனிதகுலத்துக்கே இழிவை ஏற்படுத்தும் இந்த வழிமுறையை அகற்றுவதில் மத்திய அரசும் முனைப்புக் காட்டாமல் இருந்துவருகிறது என்பதுதான் உண்மை.
இவர்களின் மறுவாழ்வுக்காக 2013-14 நிதியாண்டில் ரூ.557 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிதியாண்டில் அது வெறும் ஐந்து கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறதே, அப்படியானால் இந்தியாவில் மனித மலம் அள்ளுபவர்களும், சாக்கடைகளில் இறங்கி பணியாற்றுபவர்களும் இல்லாமல் போய்விட்டார்கள் என்று பொருளா? எந்தளவுக்கு ஆட்சியாளர்கள் இந்த சமுதாய இழிவை அகற்றுவதில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதைத்தான் துப்புரவுப் பணியாளர்களின் மறுவாழ்வுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது எடுத்துக்காட்டுகிறது.
தூய்மை இந்தியா திட்டம், மனித மலம் அள்ளுபவர்கள் குறித்தோ, சாக்கடையில் இறங்கிப் பணியாற்றுபவர்கள் குறித்தோ எந்தவித அக்கறையும் காட்டவில்லை. தூய்மை இந்தியா திட்ட முனைப்பு முழுக்க முழுக்க வெட்டவெளியில் மலம் கழிப்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாகத்தான் இருக்கிறது. எங்கெல்லாம் கழிப்பறைகள் இல்லையோ அங்கெல்லாம் நவீனக் கழிப்பறைகள் கட்டுவது என்பதிலும், மக்கள் கழிப்பறைகளை பயன்படுத்துவதை பழக்கப்படுத்துவது என்பதிலும்தான் முனைப்பு காட்டுகிறது. மனிதர்கள் மூலம் அள்ளப்படும் ஏறத்தாழ 26 லட்சம் உலர் கழிப்பறைகள் குறித்து தூய்மை இந்தியா திட்டம் கவலைப்படவில்லை. முதலில் அந்தக் கழிப்பறைகளை, நவீனக் கழிப்பறைகளாக மாற்றுவதற்கான திட்டத்தை அல்லவா அரசு முன்னெடுத்திருக்க வேண்டும்.
காலங்காலமாக இருந்துவரும் இந்தக் கொடுமைக்கு சட்டத்தின் மூலம் மட்டுமே முடிவு கட்டிவிட முடியாதுதான். ஆனால், அதுகுறித்த விழிப்புணர்வும் ஒட்டுமொத்த மனித இனத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தும் இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என்கிற உறுதியும் இருந்தால் மட்டும்தான் இந்தக் கொடுமை தீரும். அது தீராதவரை இந்தியா உலகின் வல்லரசே ஆனாலும் அதில் பெருமையில்லை!

]]>
http://www.dinamani.com/editorial/2017/sep/14/வெட்கித்-தலைகுனிவோம்-2772716.html
2772028 தலையங்கம் மனசாட்சியின் குரல்! ஆசிரியர் Wednesday, September 13, 2017 02:42 AM +0530 தனது வெளிப்படையான பேச்சாலும், ஊழலுக்கு எதிரான கருத்துகளாலும் தனது மாமனாரான அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியவர் என்கின்ற குற்றச்சாட்டு(?) இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்திக்கு உண்டு. ஆளும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்தாலும்கூட, ஆட்சியில் நடக்கும் தவறுகளையும் முறைகேடுகளையும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பெரோஸ் காந்தி தட்டிக்கேட்கத் தவறியதில்லை.
இந்தியக் காப்பீட்டுக் கழகத்துடன் தொடர்புடைய முந்த்ரா முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்னையை எழுப்பியவர் அவர்தான். அதன் விளைவாக பண்டித நேருவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான டி.டி. கிருஷ்ணமாச்சாரி தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 
ஆளும்கட்சி உறுப்பினராக இருந்தாலும்கூட அரசு தவறிழைக்குமேயானால் அதை தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவருக்கு உண்டு என்று ஆணித்தரமாக உரைத்தவர் பெரோஸ் காந்தி. இப்போது, பெரோஸ் காந்தியின் மரபணுவில் உதித்த அவரது பேரனும், சஞ்சய் காந்தியின் மகனுமான உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் வருண் காந்தி தனது தாத்தாவின் அடிச்சுவட்டை பின்பற்றுகிறார்.
மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தியின் மகனான அவர், மத்திய அரசின் கொள்கை முடிவுகளையும் நாடாளுமன்ற நடைமுறைகளையும் விமர்சிக்க முற்பட்டிருப்பது ஆளும்கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், அவரது நியாயமான விமர்சனங்களை யாராலும் புறந்தள்ளிவிட முடியவில்லை. வருண் காந்தி பேசியிருக்கும் சில கருத்துகள் நாடு தழுவிய அளவில் விவாதிக்கப்பட வேண்டிய, அரசால் நடைமுறைப்படுத்த வேண்டியவை. இந்திய குடிமகனின் மனசாட்சியின் குரலாக வருண் காந்தியின் குரல் ஒலிக்கிறது. 
ஆளும்கட்சி, நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவையிலும் எல்லா விவாதங்களுக்கும் கொறடா மூலம் உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் செயலுக்குக் கண்டனம் எழுப்பியிருக்கிறார் வருண் காந்தி. குறிப்பிட்ட கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற ஒரே காரணத்துக்காக, அந்தக் கட்சியின் எல்லா முடிவுகளுக்கும் அந்த உறுப்பினர் கட்டுப்பட வேண்டுமென்பது மக்களாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் கருத்துக்கு வாய்ப்பூட்டு போடுவதாக அமைகிறது என்கிற வருண் காந்தியின் கருத்தை ஆமோதிக்கத் தோன்றுகிறது. 
'அரசியல் கட்சிகளால் 90% பிரச்னைகளிலும் கொறடா உத்தரவு தரப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் கருத்தை வெளிப்படுத்த முடியாமல் வாய்ப்பூட்டு போடப்படுகிறது. ஆட்சிக்கு எதிரான தீர்மானங்கள் வரும்போதும், முக்கியமான பிரச்னைகளிலும் கொறடா கட்டளை இடுவதன் மூலம் ஆட்சி கவிழாமல் பார்த்துக் கொள்வதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளும்கட்சிக்கு சாதகமாக கருத்துத் தெரிவிக்காமல் தடுப்பதிலும் தவறில்லை. ஆனால், எல்லா பிரச்னைகளிலும் கொறடாவின் மூலம் உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டுப் போடுவது என்பது ஜனநாயக விரோதம். 
குறைந்தது 50% பிரச்னைகளில் அரசியல் கட்சிகள் தங்களது உறுப்பினர்களின் ஆக்கபூர்வமான கருத்துகளை - அவர்கள் சார்ந்த கட்சிக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்தாலும்கூட- வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். ஒவ்வோர் உறுப்பினரும் கருத்துகளை வெளிப்படுத்த விரும்புவதை கொறடா உத்தரவு கட்டுப்படுத்துகிறது. அதன்மூலம் உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. விவாதக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது' என்று வருண் காந்தி வெளியிட்டிருக்கும் கருத்தை கரவொலி எழுப்பிப் பாராட்டத் தோன்றுகிறது.
வருண் காந்தி இன்னொரு முக்கியமான கருத்தையும் முன்மொழிந்திருக்கிறார். இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள அரசியல் சட்டத்திருத்தம் தேவைப்படும் என்றாலும்கூட, ஆளும் கூட்டணியும் எதிர்க்கட்சிகளும் இதுகுறித்துத் தீவிரமாக சிந்திக்க வேண்டியது அவசியம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இணையக் கோரிக்கை என்கிற வழிமுறை பின்பற்றப்படுகிறது. இந்த வழிமுறை இந்தியாவிலும் பின்பற்றப்படுமானால் நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளின் கதவுகள் உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாமல், சாமானியர்களுக்கும் திறக்கப்படும். சரியான நேரத்தில் அதை எடுத்துரைக்க முற்பட்டிருக்கிறார் வருண் காந்தி. 
இந்த வழிமுறையின்படி 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பிரதமருக்கோ, முதலமைச்சருக்கோ, துறை தொடர்பான அமைச்சர்களுக்கோ, இணையத்தின் மூலம் மனு அனுப்பினால், அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கக் கடமைப்படுகிறார்கள். அப்படிப்பட்ட மனு, லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களால் அனுப்பப்படுமேயானால், அந்தக் கோரிக்கை நாடாளுமன்றத்தாலோ, சட்டப்பேரவைகளாலோ விவாதிக்கப்பட்டே தீர வேண்டும். 
அனைவருக்கும் வாக்காளர் அடையாள எண்ணும், ஆதார் எண்ணும் அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்தியாவிலுள்ள குடிமக்கள், தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு வாய்ப்பூட்டு இடப்படுகின்ற கொறடா முறையால் கட்டுப்படுத்தப்படும்போது, தங்களது கருத்தை வெளிப்படுத்தும் ஜனநாயக உரிமையை இந்த வழிமுறை வழங்குகிறது என்கிற வருண் காந்தியின் கருத்தை ஆமோதிக்காமல் இருக்க முடியவில்லை.
ஒவ்வோர் இந்திய குடிமகனின் மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறது வருண் காந்தியின் குரல். பாட்டன் பெரோஸ் காந்தியின் அறச்சீற்றமும், தந்தை சஞ்சய் காந்தியின் செயல் துடிப்பும், பாட்டி இந்திரா காந்தியின் துணிவும் வருண் காந்தியிடம் காணப்படுவதில் வியப்பென்ன இருக்கிறது?
 

]]>
http://www.dinamani.com/editorial/2017/sep/13/மனசாட்சியின்-குரல்-2772028.html
2771085 தலையங்கம் மனிதநேயத்துக்கு சோதனை! ஆசிரியர் Tuesday, September 12, 2017 11:58 PM +0530 ஜனநாயகத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கும் மியான்மர், இப்போதுதான் ராணுவத்தின் இரும்புத் திரை சற்றே விலக்கப்பட்டு வெளியுலகுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டிருக்கிறது. இந்த சூழலில்தான் பிரதமர் நரேந்திர மோடி மியான்மருக்கு விஜயம் செய்து திரும்பியிருக்கிறார். பிரதமரின் இந்த விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையே 11 ஒப்பந்தங்கள் கையொப்பம் இடப்பட்டிருக்கின்றன. கடல்வழி பாதுகாப்பு, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை மட்டுமல்லாமல் மியான்மரில் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்துவது வரை ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டிருக்கின்றன.
மியான்மருடன் நெருக்கமான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நெருக்கத்தை இந்தியா பலப்படுத்திக் கொள்ளாவிட்டால், மியான்மர் சீனாவின் நட்பு வளையத்துக்குள் சென்றுவிடும். மியான்மர் சீனாவுடன் அணி சேர்ந்துவிட்டால் வடகிழக்கு மாநிலங்கள் மீதான இந்தியாவின் உரிமை பறிபோகும் ஆபத்து காத்திருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் நாகர்கள் உள்ளிட்ட தீவிரவாத குழுக்கள் மியான்மரிலிருந்துதான் இயங்கி வருகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு மியான்மர் அரசு மற்றும் ராணுவத்தின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அதனால்தான் கடந்த பல ஆண்டுகளாகவே மத்தியில் ஆட்சிபுரிந்த எல்லா அரசுகளும் மியான்மரின் பிரச்னைகளில் தலையிடாமல் தவிர்த்து வந்திருக்கின்றன.
இந்திய - மியான்மர் உறவில் மிக சிக்கலான தர்மசங்கடமாக உயர்ந்திருப்பது ரோஹிங்கயா அகதிகள் பிரச்னை. மியான்மரைப் பொருத்தவரை அந்த நாட்டின் பெரும்பான்மையினரான பர்மியர்கள் தங்களது உள்நாட்டு விவகாரத்தில் எந்த ஒரு வெளிநாடும் தலையிடுவதை விரும்புவதில்லை. ஏனைய தென்கிழக்காசிய நாடுகளைப்போல் அல்லாமல் பெளத்த இனவெறி மிக அதிகமாக காணப்படும் நாடாக மியான்மர் திகழ்கிறது. மியான்மரின் சரித்திரத்தை சற்று திரும்பிப் பார்த்தால், அங்கே பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வந்த தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றி விட்டிருக்கிறார்கள். அதேபோல சீனர்களையும் வெளியேற்றி விட்டிருக்கிறார்கள். இந்த பின்னணியில் அவர்கள் ரோஹிங்கயாக்களையும் வெளியேற்ற முற்படுகிறார்கள்.
ஆயிரக்கணக்கான ரோஹிங்கயாக்கள் கடந்த இரண்டு மூன்று வாரங்களில் மியான்மரிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் 25 முதல் இதுவரை 75 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மியான்மரின் ராக்கைன் பகுதியிலிருந்து அகதிகளாக வெளியேறி இருப்பதாக ஐ.நா. சபை அறிவித்திருக்கிறது. அரசு படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெறும் போராட்டத்தில் பல ரோஹிங்கயா கிராமங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன.
ரோஹிங்கயாக்கள் என்பவர்கள் வங்கதேசத்தை ஒட்டிய மியான்மரின் மேற்கிலுள்ள ராக்கைன் பகுதியில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள். இவர்கள் பெரும்பான்மை பெளத்த மதத்தினரைப்போல் அல்லாமல் இன, மொழி, மத ரீதியாக வித்தியாசமானவர்கள். 78% குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் பகுதிதான் ரோஹிங்கயாக்கள் காணப்படும் மியான்மரிலேயே மிகவும் பின்தங்கிய ராக்கைன்.
1824-26இல் அன்றைய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ராக்கைன் பகுதியை கைப்பற்றியபோது இந்தியாவிலிருந்து பலரையும் அங்கே குடியேற ஊக்குவித்தது. அன்றைய ஒன்றுபட்ட வங்காளத்திலிருந்து முஸ்லிம்கள் பலர் ராக்கைன் பகுதியில் குடியேறினர். அவர்கள்தான் ரோஹிங்கயாக்கள் என்றழைக்கப்படுகின்றனர். பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்ற பர்மிய அரசு, ரோஹிங்கயாக்களை தங்கள் நாட்டிலுள்ள 135 இனக் குழுக்களில் ஒன்றாக அங்கீகரிக்க மறுத்துவிட்டது. ரோஹிங்கயாக்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டிருப்பதால் அவர்கள் நாடில்லா அகதிகளாக அலைய வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறது.
ஏறத்தாழ 34 ஆயிரம் ரோஹிங்கயா அகதிகள் வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். சுமார் 40 ஆயிரம் பேர் இந்தியாவுக்கும் அகதிகளாக வந்திருக்கிறார்கள். மியான்மரின் அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகியவை ரோஹிங்கயா முஸ்லிம்களுக்க