Dinamani - சிறப்புக் கட்டுரைகள் - http://www.dinamani.com/tholliyalmani/special-articles/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2981143 தொல்லியல்மணி சிறப்புக் கட்டுரைகள் தொல்லியல் சிறப்புக் கட்டுரை: காவேரிப்பட்டிணம் நாட்டியத்தாரகை சதிக்கல் த. பார்த்திபன் Wednesday, August 15, 2018 01:03 PM +0530  

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணத்தில் தேர்ப்பட்டி (தபோவனம்) என்ற இடத்தில் செயல்பட்டு வரும் இராஜராஜேசுவரி மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் ஒரு மரத்தடியில் சாய்த்து வைக்கப்பட்டுள்ள நடுகல் இது. இந்த நடுகல் படம் மண்ணில் சாய்ந்துள்ள நிலையில் ஓராண்டுக்கு முன்னரே சமூக வலைதளங்களில் பதிவேற்றம் கண்டது. இதனை முதலில் பதிவேற்றியவர் யாரெனத் தெரியவில்லை. அண்மையில் திரு. எஸ். விஸ்வபாரதி, உதவிப் பேராசிரியர், அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி அவர்களின் துணையுடன் இக்கல்லைப் பார்க்க நேர்ந்தது.

காவேரிப்பட்டணம், நாட்டியத்தாரகை சதிக்கல்

நடுகல் சிற்பங்களில் இந்நாள்வரை அறிந்த காட்சிகளில் இருந்து மாறுபட்ட உடை, பொருள்கள், சதிமுத்திரைச் சித்தரிப்புகளால் இக்கல் தனித்துவம் பெற்றுள்ளது. இத்தனித்துவத்தை அடையாளப்படுத்தும் முகமாக ‘‘காவேரிப்பட்டிணம் நாட்டியத்தாரகை சதிக்கல்’’ எனப் பெயர் சூட்டி அழைக்கின்றேன். இக்கல்லின் காலம் 17-ஆம் நூற்றாண்டின் மத்தியக் காலம். இக்காலகட்டத்துக்கு முன்னும் பின்னுமாக சுமார் 175 ஆண்டுகாலம் பாராமகாலில் ஏற்பட்ட சமூக, அரசியல் மாற்றங்களை நாம் கணக்கில் கொள்ளத் தவறினால், கல்வெட்டுப் பொறிப்பு இல்லாத இக்கல்லின் சித்தரிப்பின் உள்ளார்ந்த பொருளை உள்வாங்கிக்கொள்வதில் தடைகளும் தவறுகளும் நேரலாம். ஏனெனில் இக்காலகட்டத்தில் இப்பகுதி ஜெகதேவராயர்கள், மைசூர் உடையார்கள், மராட்டியர்கள், டெக்கான் சுல்தான்கள், கடப்பா நவாப்புகள் எனப் பலரது ஆட்சிக்கு ஆட்பட்டு அரசியல் அலைக்கலைப்புகளுக்கு உட்பட்டது மட்டுமல்லாது, பண்பாட்டுத்தளத்திலும் பெரும் மாற்றங்களை அடைந்தது. (பார்க்க அடிக்குறிப்பு 1: 16-17-ஆம் நூற்றாண்டுகளில் ஜெகதேவிபாளையம்சென்னப்பட்னா - பாராமகால்).

நாட்டியத்தாரகை சதிக்கல்

நடுகல்லின் பலகைக் கல்லில் கரடு கட்டப்பட்ட பகுதிக்கு உள்ளடங்கியவாறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கரடின் இடது, வலது மேல் மூலைகளில் மலர்க்கொத்து தொங்குகிறது. வலமிருந்து இடமாக நாட்டியத்தாரகை, மதுக்குடம், தலைவன், ஹூக்கா ஆகிய உருவங்கள் செதுக்கிக் காட்டப்பட்டுள்ளன.

நாட்டியத்தாரகையின் உருவம், உடை அணிமணிகள் ஒரு முழுமையான தமிழகப் பண்பாட்டினை வெளிப்படுத்துகிறது. ஆனால் அவளது கணவனின் உருவம் ஒரு மராட்டிய, அரேபிய மணத்தை அணிந்துகொண்டுள்ளது. மேலோட்டமான அல்லது கவனக்குறைவான அணுகல் இவனை ஒரு ஐரோப்பியன், அல்லது முகமதியன் என்று கூறவைக்கும். இவனது தலையலங்காரத் தொப்பி, நீண்ட அங்கி உடை அலங்காரம் இந்த மயக்கத்தைத் தந்துவிடும். இவனுக்கு அருகில் இடதுபுறத்தில் காட்டப்படும் ஹூக்கா என்ற புகைக்கும் கருவி இதற்கு வலு சேர்ப்பதாகவும் அமையும்.

ஒரு பண்பாட்டுச் செய்தியை மட்டும் நினைவில் இருத்திக் கொள்வோம். ஐரோப்பியர்களுக்கும், முகமதியர்களுக்கும் நடுகற்கள் எழுப்பும் மரபு இருந்ததில்லை. அவர்கள் பெண்டீர் சதிக்கு தங்களை உட்படுத்தி மரணத்தை தழுவிக்கொண்டதில்லை.

ஹூக்காவும் சமூக உயர்மதிப்பும்

ஹூக்கா புகைக்கும் கருவி

ஐரோப்பியர்கள் புகையிலை புகைப்பதை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஹூக்கா வழக்குக்கு வந்தது எனக் கருதப்படுகிறது. தண்ணீரால் கடத்தப்பட்டு குளிரான புகையிலைப் புகையைப் புகைக்க உதவும் கருவியே ஹூக்கா. பீஜப்பூரின் தூதர் ஹூக்காவை அக்பர் (பொ.ஆ.1542-1605 / ஆ.யா.1556-1605) பயன்படுத்த ஊக்குவித்தார் என படித்த குறிப்பு நினைவு வருகிறது. இக்காலகட்டத்தைத் தொடர்ந்து ஹூக்கா புகைப்பது, இந்திய மேல்தட்டு மக்களிடையே பிரபலமைடையத் துவங்கியது. மரியாதைக்குரியவர்கள் பயன்படுத்தியதால் பிரபலமடைந்த இக்கருவி, இந்தியாவின் உயர்மட்டக்குடியினர், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரம்மிக்க அரசியலாளர்களால் புகைப்பதற்கான சின்னம் என்ற அடையாளத்தை வெகுவிரைவில் அடைந்தது.

மதுக்குடம்

நடுகற்களில் மதுக்குடம் இடம்பெறுவது பற்றி பல கருத்துகள் உண்டு. படையல் பொருள் என்பதும் உயிர்க்குறியீடு என்பதும் பரவலாக அறியப்படும் கருத்துகள். பிற கருத்துகளைக் கவனத்தில் கொள்வதால் பெருகும் என்பதால் தொடராமல் விடப்படுகிறது.

தலைவன்

சிற்பக்காட்சியில் தலைவனின் வலது கரம் உயர்த்திப்பிடித்தபடி உள்ளது. இடது கரம் கேடயத்தை பிடித்தபடி உள்ளது. கேடயத்தின் வடிவமைப்பை சிறப்பிக்கும் விதமாக கேடயத்தின் அடிப்புறம் காட்டப்பட்டுள்ளது. இதில் இரு பிடி வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் பிடி வழியாக கையின் மணிக்கட்டுவரை நுழைத்து இரண்டாவதாக உள்ள பிடியை விரல்களால் பிடித்துக்கொள்ளும்படி அமைப்பட்டுள்ளது. இவ்வமைப்பு, விரல்களில் இருந்து கேடயம் விடுபட்டாலும் கரத்தில் இருந்து நழுவுவதை தவிர்க்கிறது.

தலைவனின் தலையில் தொப்பி அணிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தலையலங்காரச் சிறப்பை அறியமுடியவில்லை. கழுத்தில் இருந்து கணுக்காலுக்குச் சற்று மேல்வரை இறக்கமாக உள்ள அங்கியை அணிந்துள்ளான். இது அரேபியர் உடையின் வடிவமைப்பில் உள்ளது. மராட்டியர் உடையலங்காரத்திலும் இவ்வடிவமைப்பைக் காண முடியும். ஆனால் இது பாதிரியார்களின் நீளூடையில் (cassock) இருந்து வடிவமைப்பில் மாறுபட்டது. பட்டையான இடைவார்களால் அங்கி இடுப்புப் பகுதியில் இறுக்கிக் கட்டப்பட்டுள்ளது. அதில் குத்துவாள் செருகப்பட்டுள்ளது. முழுக்கையுடன் நேர்த்தியான எடுப்பான கழுத்துப்பட்டையுடன் வடிவமைக்கப்பட்ட உடை அதன் உயர் மதிப்பைக் காட்டுகிறது. கால்களில் காலணி காட்டப்பட்டுள்ளது. அது குதிகால்பட்டை கொண்டுள்ளது. காதுகளில் தொங்கும் குண்டலங்கள்தாம் இவன் அரேபியனோ, ஐரோப்பியனோ, மராட்டியனோ அல்லன் என்பதை தெளிவிக்கிறது. இவனது பிற அணிமணி அலங்கரங்களை அறியமுடியவில்லை. இவை அங்கியின் உள்ளே மறைந்தன போலும்.

இவன் இப்பகுதியின் தலைவனாகவோ, செல்வமும் அதிகாரமும் மிக்க மேல்மட்டக்குடியில் பிறந்தவனாகவோ இருந்துள்ளான். அந்நியப் பண்பாட்டிலும் மோகம் கொண்டிருந்தவனாகவும் இருந்துள்ளான். உடையும், ஹூக்காவும் இதனை உறுதி செய்கின்றன. இதனுடன் இந்தியாவின், உயர்மட்டக்குடி, மற்றும் அதிகாரம்மிக்க அரசியலாளர்களால் பகட்டான வாழ்க்கையின் அடையாளங்களை உடனுக்குடன் பெறும் வசதிகளைக் கொண்டவனாகவும் இருந்துள்ளான். (அடிக்குறிப்பு 1-ல் கண்டுள்ள காலகட்டத்தோடு பொருத்திக் காணவும்).

நாட்டியத்தாரகை

இவனது மரணத்துடன், தன்னை சதிக்கு உட்படுத்திக்கொண்ட மனைவியாக செதுக்கிக் காட்டப்பட்டுள்ளவள் சிறந்த நாட்டியத்தாரகையாக காட்டப்பட்டுள்ளாள். நாட்டிய மகளிர் அணியும் பட்டாடை உடையலங்காரமும், கணுக்கால் வரை தொங்கும் நீண்ட பின்னல் வேலைப்பாடு உடைய சடைமுடி அலங்காரமும் புனைந்துள்ளாள். நாட்டிய அடவுகளோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளாள். நீண்டு தொங்கும் காதுகளில் விருத்தக் குண்டலங்களை அணிந்துள்ளாள். காதுக்கு மேல் செவிப்பூவும் காட்டப்பட்டுள்ளது. கழுத்தில் கண்டிகை, சரப்பளியுடன் மார்பில் தொங்கிப்புரளும் பெரிய ஹாரமும் அணிந்துள்ளாள். இரு கைகளிலும், முட்டியில் இருந்து, முழங்கை வரை பலவகையான வளைகள் அடுக்கடுக்காய் அணிந்துள்ளாள். நாட்டிய முத்திரை அசைவுகொண்ட வலத்து கரத்தில் கிலுகட்டை போன்ற ஒரு இசைக்கருவியை ஏந்தியுள்ளாள். இடது கரம் மடங்கி உயர்ந்து விரிந்த கரத்தைக் கட்டுகிறது. விரிந்த உள்ளங்கையில் வட்டமான சிறுஇதழ்களால் ஆன மலரைக் கொண்டுள்ளாள். இம்மலர் தங்கம் போன்ற உயர் மதிப்புடைய உலோகத்தில் செய்யப்பட்டதுபோல் உள்ளது. பொதுவில், சதிப் பெண்கள் சதி முத்திரையாக கையை விரித்துக் காட்டுவது, அல்லது கரத்தில் பூங்கொத்து, பூச்செண்டு, பூபந்து, எலுமிச்சை பழம் ஆகியவற்றில் ஒன்றினை கொண்டிருப்பர். இங்கு விரித்த கரத்தில் உள்ளங்கைக்கு அடக்கமாக மலரின் உருவத்தை காட்சிப்படுத்துகிறாள். இவ்வாறான சதி முத்திரையை இந்த ஆசிரியர் அறிவது முதல்முறையாகும். போலவே, அடவுகளில் இசைக்கருவி உள்ள காட்சியும் முதல்முறையாகப் பார்க்கமுடிகிறது. இசைக்கருவியை இசைத்தபடி நாட்டியமாடுவது இவளது தனிச்சிறப்பாக இருந்துள்ளது எனலாம்.

இசைக் கருவியும், சதி முத்திரையும்

சதிக்கல் செய்தி

‘‘காவேரிப்பட்டணம் நாட்டியத்தாரகை சதிக்கல்’’ என்று பெயரிடப்பட்டுள்ள கல்வெட்டுப் பொறிப்பற்ற இச்சதிகல்லின் சிற்ப நுணுக்கங்கள் கொண்டு பின்வரும் செய்தியை அடையமுடிகிறது. காவேரிப்பட்டிணத்தின் தலைவனாகவோ, உயர்மட்டக்குடியில் பிறந்தவனாகவோ, அதிகாரம்மிக்க அரசியலாளாகவோ இருந்த ஒரு வீரனுக்கு எடுக்கப்பட்ட சதியோடு கூடிய நடுகல் இது. இவன் இவனது சமகாலத்தில் நாட்டின் பிறபகுதிகளில் கிட்டும் பகட்டான வாழ்க்கையின் அடையாளங்களை உடனுக்குடன் பெறும் வசதிகளைக் கொண்டவனாகவும் இருந்துள்ளான். மேலும், அரேபிய, மராட்டிய அரசர்கள், மேல்மட்டத்தினரின் ஆடை முதலான பண்பாட்டைப் பின்பற்றியவனாகவும் இருந்துள்ளான். அவனது மேலாடையும், ஹூக்கா புகைக்கும் கருவியும் அவனது உயர்மட்ட, செழுமியான வாழ்வியலை அடையாளப்படுத்துவதாக உள்ளது.

இவன் இறந்தவுடன் புகழுடைய நாட்டியத்தாரகையாக இருந்த இவன் மனைவி தன்னை சதிக்கு உட்படுத்திக்கொண்டு அவனோடே தன் உயிரையும் மாய்த்துக்கொண்டிருக்கிறாள். இவள் சிறந்ததொரு நாட்டியத்தாரகையாக இருந்துள்ளதை சதி உருவத்திலும் நாட்டிய உடை அணிமணி அலங்காரம், அடவுகளைக் வெளிப்படுத்தும் உருவம் ஆகியவை கொண்டு வடிக்கப்பட்டதிலிருந்து அறியலாம். இன்று பரதநாட்டிய உடை என்ற அலங்காரமான பட்டாடையை நேர்த்தியாக அணிந்துள்ளமை கவனிக்கத்தக்க வடிவமைப்பாக உள்ளது. அக்காலத்தில் இந்நாட்டியம் சதிர் என்று அறியப்பட்டது. 17-ஆம் நூற்றாண்டின் மத்தியக் காலத்தில் இருந்து இக்காலம் வரை ஏறத்தாழ 350 ஆண்டுகளாக இந்த நாட்டிய உடையின் வடிவில் மாற்றமில்லை என்பதை இது உணர்த்துகிறது, நாட்டிய மரபில் உடை மற்றும் சடை மரபின் தொடர்ச்சி அறுபடாது பின்பற்றப்படுகிறது என்பதற்குச் சான்றாகவும் இக்கல் விளங்குகிறது.

16-17-ஆம் நூற்றாண்டுகளில் ஜெகதேவிபாளையம் - பாராமகால் பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் - சமூக மாற்றங்களைப் பிரதிபலிப்பவனாக இவன் உள்ளான். இவ்வாறான மாற்றங்களுக்கும் இக்கல் சாட்சியாகிறது. இக்கல் வெளிப்படுத்துவது குறிப்பாக மராட்டியர் பண்பாடா, முகமதியர் பண்பாடா என்ற கேள்வி எழுந்தால், உடையாலும், மேட்டுக்குடி வெளிப்பாட்டிலும் முகமதியர் பண்பாட்டை ஆணும், வாழ்வியலில் சதிக்கு உட்படுத்திக்கொள்ளும் சிந்தனை கொண்ட தமிழக, மராட்டியர் பண்பாட்டை இருவரும் கொண்டிருந்தனர் என்ற முடிவை அடையலாம்.

காவேரிப்பட்டிணம் - கலைகளின் உறைவிடம்

காவேரிப்பட்டிணம் சோழப் பேரரசுக் காலம் முதலே செல்வச் செழிப்புமிக்க இடமாக இருந்துள்ளது. பெண்ணையாறும், நல்ல விளைநிலங்களும் இதன் செழுமைக்குக் காரணமாக இருந்திருக்கும். உள்நாட்டு வணிகத்தலம் என்ற பொருளைத் தரும் பட்டணம் என்ற ஊர்ப்பெயரில் பெற்றுள்ள பின்னொட்டு, காவேரிப்பட்டிணம் சிறந்த வணிகத்தலமாக இருந்துள்ளது என்பதையும் காட்டுகிறது. காவேரிப்பட்டணம் மற்றும் காவேரிப்பட்டணத்தை அடுத்த பெண்ணேசுவரமடம் கலைகளின் உறைவிடமாக இருந்துள்ளன. கோயின் முகப்பில் நடப்பட்டுள்ள 10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வீணை வாசிக்கும் பெண்ணின் நினைவுக்கல்லும், பெண்ணையாற்றங்கரையில் இருந்து எடுத்துவரப்பட்டு தருமபுரி அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள 13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மத்தளம் வாசிக்கும் கலைஞனின் நினைவுக் கல்லும் கலைகளின் உறைவிடமாக காவேரிப்பட்டணம் இருந்துள்ளதைக் காட்டும். இப்பின்னணியில் நாயக்கர் காலம் வரை காவேரிப்பட்டிணத்தில் கலைஞர்கள் சிறப்பிடம் பெற்று இருந்துள்ளனர் என்பதை ‘‘காவேரிப்பட்டணம் நாட்டியத்தாரகை சதிகல்’’ உரத்துச் சொல்கிறது.

*

அடிக்குறிப்பு 1

16-17-ஆம் நூற்றாண்டுகளில் ஜெகதேவி பாளையம்சென்னப்பட்னா - பாராமகால்

ஜெகதேவிபாளையம் விஜயநகரப் பேரரசின் அதன் பட்டத்து இளவரசர்களால் ஆளப்பட்ட முளுபாகல் ராஜ்ஜியத்தின் சில பகுதிகள் கொண்டு 16-ஆம் நூற்றாண்டில் இறுதிக்காலங்களில் உருவான நாட்டுப்பிரிவாகும். இந்நாட்டுப் பகுதி உருவாக்கத்தில் ஜெகதேவராயர்களின் தீரத்துக்குப் பெரும் பங்கு உண்டு. டெக்கான் சுல்தான்களின் ஒருவரான பீஜப்பூர் சுல்தானை எதிர்த்த சந்திரகிரிப் போரில் விஜயநகரப் பேரரசுக்கு ஆதரவாக தீரம் காட்டியவர் முதலாம் ஜெகதேவராயர். இதற்காக பொ.ஆ.1578-ல் விஜயநகரப் பேரரசர் சீரங்கராயர் முதலாம் ஜெகதேவராயருக்குத் தன்மகளை மணமுடித்துத் தந்ததுடன், இப்பகுதி ஆளப் பரிசளிக்கப்பட்டது. பொ.ஆ.1589-ல் கோல்கொண்டாவின் குத்ஷா பேனுகொண்டா மீது படையெடுத்தபொழுது, ஜெகதேவிப்பாளையத்தை உருவாக்கிய ஜெகதேவராயரின் மகன் இரண்டாம் ஜெகதேவராயன் குத்ஷாவின் முற்றுகையை வீரத்துடன் எதிர்த்து முறியடித்ததால் இதற்குப் பரிசாகப் பெற்றதே சென்னப்பட்டனா ஜாகீர். இந்த ஜாகீர், அன்றைய மைசூர் மாநிலத்தின் பெங்களூரின் சில பகுதிகள், மைசூர், தும்கூர், ஹாசன், கோலார் மாவட்டங்களைக்  கொண்ட பகுதி ஆகும். ஜெகதேவராயர்கள் காலத்தில் இந்நாட்டுப் பிரிவு ஜெகதேவிபாளையம் என்றே அழைக்கப்பட்டது. சென்னப்பட்னா ஜாகீர் இப்பெயரிலேயே நீடித்தது. ஜெகதேவிபாளையம் தோன்றிய 91 ஆண்டுகளுக்குப் பிறகு 1669-இல் பீஜப்பூரின் தளபதியான முஸ்தபாகானுடன் இம்மரபின் கடைசி மன்னன் போரிட்டு மாய்ந்ததுடன் ஜெகதேவராயர் குடும்பத்தினரின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இப்போர் இப்பகுதியிலேயே நடந்திருக்க வேண்டும். ஏனெனில், இப்போருக்குப் பிறகு முஸ்தபாகானின் ஐந்து ஆண்டு கால குறுகிய கால ஆட்சி இங்கே நடந்தது.

இந்நிகழ்வுகளுக்கு முன்னரே சென்னப்பட்னா ஜாகீர், மைசூர் உடையார்களால் வெள்ளப்பட்டு ஜெகதேவிபாளையத்துக்குள் சுருக்கப்பட்டிருந்தனர். இதே காலகட்டத்தில் ஜெகதேவிபாளையத்தின் டென்கனிக்கோட்டை, ரத்னகிரிப் பகுதிகள் இடிபல் ராவ் என்பவரால் ஆளப்பட்டிருந்தது. இவ்வாறு சிறுசிறு பகுதிகளாகப் பிரிந்து ஜெகதேவிபாளையம் மேலும் சுருங்கியதை இடிபல் ராவ் காட்டுகிறார். மைசூர் உடையார் அரசரான கண்டீரவ நரச ராஜ 1647 மற்றும் 1652-ஆம் ஆண்டுகளில் இடிபல் ராவிடமிருந்து வெற்றிகொண்டார்.

முஸ்தபாகானுக்குப் பின்னர் இப்பகுதி 40 ஆண்டுகாலம் மராட்டிய மன்னர்களின் அதிகாரத்துக்கு உட்பட்டது. சத்ரபதி சிவாஜியின் தந்தை சாஜியின் பெங்களூர் ஜாகீரின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக இதனைக் கருதலாம். பீஜப்பூர் சுல்தான்கள் தென்பகுதியில் அதிகாரத்தை விரிவடைச் செய்ய விரும்பிய போரில் பீஜப்பூர் சார்பில் சாஜி போரிட்டார். போ.ஆ.1638-ல் மூன்றாம் கெம்பேகவுடாவை வீழ்த்தியதன் பரிசாகப் பெங்களூர் ஜாகீரை பெற்றார் சாஜி. இங்கு தம் முதல் மற்றும் இரண்டாம் மனைவியருடன் தங்கியிருக்க; மூன்றாம் மனைவியின் மகனான சிவாஜியை தனது பூர்வீக ஜாகீரான பூனா ஜாகிரைக் பரிபாலனம் செய்ய அமர்த்தினார். பெங்களூர் மராட்டியரே பின்னர் தஞ்சையை அடைந்து தஞ்சை மராட்டிய அரசை அமைத்தனர். மகாராஜ கடை கோட்டையை சிவாஜி அமைத்தால், மகாராஜ கடை அப்பேர் பெற்றது என்ற வழக்குச் செய்தியும் உண்டு. இங்கு சிவாஜியின் மோடி எழுத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் உள்ளது. மராட்டியர்களுக்குப் பின்னர் சுல்பிர்கான் என்ற முகலாயர் வசமான இப்பகுதி, அவனது எட்டு ஆண்டு ஆட்சியைக் கண்டது. அதன்பின் ஆலம்கீரின் ஆட்சிக்கு வந்தது, அவனால் இப்பகுதி கடப்பா நவாப் அப்துல் நபிக்கு சொத்தாக கொடுக்கப்பட்டது. அவன் இப்பகுதியை 30 ஆண்டுகள் ஏறத்தாழ 1754 வரை ஆட்சிபுரிந்தான். இக்காலத்தில்தான் பாராமகால் என்ற பெயர் உருவானது. பாராமகால் என்பது பன்னிரெண்டு கோடை நாடு என்ற பொருள் படும் ஒரு நாட்டுப்பிரிவாகும். இது இன்றைய தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பெரும்பகுதி மற்றும் வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் வட்டம் ஆகிய பகுதிகள் கொண்ட பகுதி. காவேரிப்பட்டிணம், பாராமகால் கோட்டைகளில் ஒன்றாக, குறிப்பாக தரைக்கோட்டைகளில் ஒன்றாக இருந்தது. ஐதர்-திப்பு காலத்தில் பாராமகால் பெயர் தொடரப்பட்டது. ஆங்கிலேயர்களும் தொடர்ந்தனர்.

இவ்வாறு காவேரிப்பட்டிணம் நாட்டியத்தாரகை சதிகல் ஜெகதேவராயர், மைசூர் அரசர்கள், மராட்டியர்கள், டெக்கான் சுல்தான்கள், கடப்பா நவாப்புகள் எனப் பலரது ஆட்சிக்கு ஆட்பட்டு அரசியல் அலைக்கழைப்புகளுக்கு உட்பட்ட பண்பாட்டுத்தளத்தில் பெரும் மாற்றங்களை அடைச் செய்த காலகட்ட வரலாற்றுக்குச் சான்றாகிறது

*

குறிப்பு

பள்ளி நிர்வாகம், சிறப்பு வாய்ந்த இந்தச் சதிக்கல்லை மரத்தடியில் பாதுகாப்பற்ற வகையில் சாய்த்து வைத்துள்ளது. இதன் சிறப்பை உணர்ந்து ஒரு மேடை அமைத்து இதனைப் பாதுகாக்க முன்வருவார்களா? இதன்மூலம் தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அப்பள்ளி மாணவர்களிடையே பெருகும். வரலாற்று மூலங்களை வழங்கும் தொல்லியல் சார்ந்த அறிவும் மாணவர்களுக்கு வசப்படும்.

- கட்டுரையாளர் . பார்த்திபன் தொடர்புக்கு thagadoorparthiban@gmail.com

]]>
தொல்லியல், நடுகல், தொல்பொருள், நாட்டியத்தாரகை, காவேரிப்பட்டணம், ஹூக்கா, அரேபியர், முகலாயர், மராட்டியர், பேரரசு, சோழர்கள், நூற்றாண்டு http://www.dinamani.com/tholliyalmani/special-articles/2018/aug/15/தொல்லியல்-சிறப்புக்-கட்டுரை-காவேரிப்பட்டிணம்-நாட்டியத்தாரகை-சதிக்கல்-2981143.html
2966856 தொல்லியல்மணி சிறப்புக் கட்டுரைகள் மண்டபத்தில் குடியேற இருக்கும் ஒசூர் நாயகி: ஒசூர் நாயகி நடுகல் புதிய விவரங்கள் த. பார்த்திபன் Tuesday, July 24, 2018 03:03 PM +0530  

தினமணி இணையத்தளத்தின் தொல்லியல்மணி பகுதியில், சிறப்புக் கட்டுரைகள் பிரிவில் கடந்த 19.7.2018 அன்று ஒசூர் நாயகி: சிற்பத்தில் நிலைத்த தலைப்பலியில் முடிந்த ஈசனின் காதல் என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடப்பட்டது.

அக்கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து சில ஆரோக்கியமான, போற்றுதலுக்குரிய செயல்கள் நடைபெற்று வருகின்றன. தெருவோரத்தில் அநாதையாக நிற்கும் இந்த அரிய தொல்லியல் முக்கியத்துவமுடைய நடுகல்லை முறைப்படி பாதுகாக்கும் முயற்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையத்தின் தலைவரும், கே.ஏ.பி. அறக்கட்டளை நிறுவனரும், முன்னாள் ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. கே.ஏ. மனோகரன் அவர்கள் முன்வந்துள்ளார்.

இதன் முதற்படியாக, 23.7.2018 அன்று மதியம் அவரது முன்னிலையில் தெரு ஓரத்தில் இருந்த ஒசூர் நாயகி நடுகல் முழுமையாக வெளியே எடுக்கப்பட்டது. அப்போது, அந்நடுகல்லில் மேலும் ஒரு சிற்ப அடுக்கு உள்ளது அறியப்பட்டுள்ளது.

நடுகல் புதிய காட்சிகளும் செய்திகளும்

நடுகல் வெளியே எடுக்கப்பட்ட பிறகு அது, இந்நாள்வரை கருதப்பட்டதுபோல் ஈரடுக்கு கொண்டதன்று, மூவடுக்கு கொண்டது என்பது புலனானது. இதனால் கீழடுக்கு என்று நம்பப்பட்ட நாயகியின் காட்சி இடம்பெறும் அடுக்கு மத்திய இரண்டாம் அடுக்காக அமைகிறது. தற்பொழுது அறியவந்த மண்ணுக்குள் புதைந்திருந்த கீழடுக்கில், வளமை வழிபாட்டுக்கு உரிய சின்னங்களான குத்துவிளக்கு, பூர்ணகும்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கீழடுக்கின் மத்தியில் ஒரு நல்ல வேலைப்பாடுகூடிய முக்காலி மீது பூர்ணகும்பம் ஒன்று நிரைந்து விரிந்துத் தொங்கும் மலர்ச்செடி, கொடிகளுடன் அதாவது கொடிக்கருக்கு இணைந்து காட்டப்பட்டுள்ளது. இதனை “கும்பலதா” என்று சிற்ப நூல்கள் குறிப்பிடும் பூர்ணகும்பத்தின் இருபுறமும் சிறப்பான வேலைப்பாடு அமைந்த குத்துவிளக்குகள் பக்கத்துக்கு ஒன்றாக வைக்கப்பட்ட காட்சி செதுக்கப்பட்டுள்ளது.  பூர்ணகும்பம் என்பது தாய்மை, வளமையை, செழிப்பைக் குறிக்கும் சின்னமாகும். அது தாயின் கருப்பையின் குறியீடு என்றும் குறிக்கப்படும். மேலும் சந்ததிப் பெருக்கத்துக்கும், செல்வ வளத்துக்கும் வணங்கப்படும் சின்னமாகவும் விளங்குவதாகும். பூர்ணகும்பம், சிற்பக் கலையில் சோழர் காலத்தில் இருந்து கோயில் கருவறையின் சுவர்களை அலங்கரிக்கச் செதுக்கப்படும் சின்னமாவும், விஜயநகர நாயக்கர் காலத்தில் சிறப்பான வடிவமைப்போடும், பல மடிப்புகள் கொண்டதாகவும், அழகான வேலைப்பாடுகள் கொண்டதாகவும், பஞ்சார அமைப்போடு இணைந்து கும்ப பஞ்சாரமாகவும் அமைக்கப்படும் சின்னமாகும். இங்கு நடுகல்லில் தனித்த கும்பம் முக்காலியில் காட்சிப்படுத்தியிருப்பது அரிதான சித்தரிப்பாகும்.    

ஒசூர் நாயகி நடுகல்: இதுநாள் வரை அறியாத மூவடுக்குக் காட்சி

திரு. கே.ஏ. மனோகரன்

இந்நடுகல்லை பாதுகாக்கும் முயற்சியை கையில் எடுத்துக்கொண்ட திரு. கே.ஏ, மனோகரன் அவர்கள் இது குறித்து கூறும்பொழுது, ஒசூர் நாயகி நடுகல்லின் சிறப்பு அறிந்து, அதனைப் பாதுகாக்கும் முகமாக கிருஷ்ணகிரி வரலாற்று மையம் மூலம் ஒசூர் நாயகிக்கு சிறப்பான மண்டபம் ஒன்றை அமைத்து அதில் நாயகியின் நடுகல்லை பாதுகாத்து வழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் பொருட்டு, தெரு ஓரத்தில் அநாதையாக இருக்கும் நடுகல்லை பாதுகாக்கும் வகையிலும், வழிபாட்டுக்குக் கொண்டுவருவதற்கும் அந்நடுகல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. முழுமையாகச் சேதமின்றி வெளியே எடுக்கப்பட்ட கல், மேலும் சில சிறப்பான செய்திகளை சிற்பங்கள் வழி தெரிவிக்கின்றது. முதலில் அது இவ்வளவு காலம் நம்பப்பட்டதுபோல் ஈரடுக்கு சிற்பத்தொகுப்பு நடுகல் அன்று; அது மூன்று அடுக்கு சிற்பத்தொகுப்பு என்பது இதன்மூலம் அறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி வரலாற்று மையத்தின் மூலமாகவும், அதன் தாய் நிறுவனமான ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை மூலமாகவும், கிருஷ்ணகிரி மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களின் வரலாற்றை முழுமையாக வெளிக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போதுவரை கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களின் வரலாற்றுச் சிறப்புகளை வெளிப்படுத்தும் 15-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிடுள்ளது. தேசிய, மாநில அளவிலான 6 பெரிய வரலாற்றுக் கருத்தரங்கங்களையும் நடத்தியுள்ளது. தற்பொழுது தொல்லியல் முக்கியத்துவமுடைய அரிய நடுகற்கள், பாறை ஓவியங்கள், மேலும் பலவகையான வரலாற்றுக்கு முற்பட்ட, வரலாற்றுக்கால பண்பாட்டினை வெளிப்படுத்தும் தொல்பொருட்களை அறியும் பொருட்டு களஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை ஆவணப்படுத்தியும் வருகிறது.

கே.ஏ. மனோகரன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் (ஒசூர்)

இப்பொழுது கண்டறியப்பட்டுள்ள 15-ம் நூற்றாண்டின் சிற்பக்கலைக்கு சிறந்த உதாரணமாகவும், வளமை வழிபாட்டில் சிறப்பிடம் பெற்ற நடுகல்லை பாதுகாக்க மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இறைவன் மீது கொண்ட காதலால், தன் தலையை அரிந்து காணிக்கையாகிய பெண்ணின் அரிய நடுகல் இது. நடுகல் வழிபாடே மூதாதையர் வழிபாட்டுடன் வளமை வேண்டி மேற்கொள்ளப்படுவதாகும். இந்த வகையில் நாயகியின் கல்லில் பூர்ணகும்பமும் இடம்பெற்றுள்ளது. இது மக்கள் செல்வம் வேண்டி வழிபட எடுக்கப்பட்ட நடுகல்லாகவும் விளங்கியுள்ளது. இக்கல் போற்றப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. விரைவில் மண்டப வேலைகள் முடிந்து அதில் ஒசூர் நாயகி நடுகல் வைத்து பாதுகாப்பு செய்யப்படுவதுடன், வழிபாட்டுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்கிறார். 

கட்டுரை ஆசிரியர் தொடர்புக்கு: த. பார்த்திபன் - thagadoorparthiban@gmail.com

]]>
தொல்லியல், நடுகல், ஒசூர் நாயகி, தருமபுரி, சிற்பக்கலை http://www.dinamani.com/tholliyalmani/special-articles/2018/jul/24/மண்டபத்தில்-குடியேற-இருக்கும்-ஓசூர்-நாயகி-ஓசூர்-நாயகி-நடுகல்-புதிய-விவரங்கள்-2966856.html
2963436 தொல்லியல்மணி சிறப்புக் கட்டுரைகள் ‘ஒசூர் நாயகி’ - சிற்பத்தில் நிலைத்த தலைப்பலியில் முடிந்த ஒசூர் நாயகியின் ஈசன் காதல் த. பார்த்திபன் Thursday, July 19, 2018 11:23 AM +0530  

ஈசன் மேல் தீரக் காதல் கொண்ட மதுரை மீனாட்சியோ; கோவிந்தனை வரித்துக்கொண்ட வில்லிப்புத்தூர் ஆண்டாளோ இல்லை இவள். இவள் ‘ஒசூரின் நாயகி’. சந்திரசூடனை உடலும் உயிருமாகக் கொண்டவள். சந்திரசூடேசுவரன், ஒசூர் மலைக்கோயில் மூலவரின் பெயர். மீனாட்சியின் திருமண நற்பேறு ஆண்டாளுக்கு வாய்க்கவில்லை; ஒசூரின் நாயகியைப் போலவே. ஆண்டாள், ஈசனின் சந்நிதியில் கரைந்து ஐக்கியமானாள்; ஒசூரின் நாயகியோ தலைஈந்து தன்னை வழங்கினாள். இவள் செயல் ஆண்டாள் புரியாதது. நிபந்தனையற்ற காதலுடன் கோபாலனை மோகித்த மீராவும் நினையாதது.

சுந்தரின் நெஞ்சில் உறைபவாளான மதுரை நாயகிக்கோ பெருங்கோயில் குடியிருப்பு. நாராயணனில் கரைத்தவளோ அவனின் பூமாலையிலும், புகழ் மாலையிலும் நித்திய வாசம். கோபாலன் இருக்குமிடங்களில் மீராவின் சுவாசம் சுற்றும். சந்திரனைச் சூடியவனைச் சேர நினைத்தவளின் வாசம் பச்சைக்குளம் தெருவோரம். நடுகல்லாய்ச் சமைந்தவளுக்கு கருவறை ஒரு வெற்று அறை; ‘கருவறை மூலவி’யாய் இருத்தல் ஒரு வேண்டாப் பதவி.

மீனாட்சியைப் பாட ஆயிரம் பேர் உண்டென்றால், ஆண்டாளோ தானே பெருங்கவியாய் உயிர்த்திருப்பவள். இவ்விரு பெரும்பேறும் ஒசூர் நாயகி அடையாதது. கல்லெடுத்தவர்களும் பெயர் சூட்டிப் புகழ் பாடவில்லை. கல் தொழுதவர்களும் புனையாதொழிந்தனர். மகளின் போக்கில் பெற்றோர் மனம் வெதும்பிக் கைவிட்டனரோ, சுற்றமும் தள்ளி வைத்ததோ நாயகி பெற்ற இந்நிலை. தலைமுறை மாறவே, நகரமயமாதலின் பண்பாட்டுத் தடுமாற்றமோ தொழுகவும் மறந்த கல்லெடுத்த ஊரைக் காண்கிறோம்.

ஒசூர் நாயகியின் இயற்பெயர் தெரியாது, தாய் தந்தையர் தெரியாது, ஊரும் மண்ணும் தெரியாது. ஆனால் அவர்கள் செல்வச்செழிப்புடன் ஆட்சி புரிந்தவர்கள். ‘ஓசூர் நாயகி’, இக்கட்டுரை ஆசிரியர் வைத்த பெயர். ஓசூரில் நடுகல்லாய் சமைந்திருப்பதால் நாயகிக்கு இந்த ஊர் அடை. சித்திர வெளிப்பாடுகள் கொண்டு இவள் தன் பெற்றோராலும், சுற்றத்தாலும் போற்றி வழிபடப்படவில்லை என்பதை ஊகித்து அறியலாம். நட்பும் ஊரும் அக்கரையுடன் கல்லெடுத்துப் போற்றியுள்ளனர். மகள் தலைஈந்து இறைவனைச் சேர்ந்ததை பெற்றொரும் சுற்றமும் விரும்பியிருந்தால், தலை ஈந்ததைப் போற்றியிருந்தால் கோயிலெடுத்து வணங்கியிருப்பர். தாங்களும் சுற்றமும் வணங்குவதையும் புடைப்பாகச் செதுக்கிக் காட்டியிருப்பர். இன்னும் பெண்ணின் காதலையும் தீரத்தையும் புகழ்வார்த்தைகளையும் கல்லெழுத்துக்களால் என்னென்றும் நிலைத்திருக்க வடித்திருப்பர். இவையாவும் இல்லை என்பதால் புறக்கணித்தனர் என்ற முடிவுக்கு வர வாய்ப்பு ஏற்படுகிறது.

ஒசூர் நாயகி நடுகல்: அண்மையில் இளங்காலைப்பொழுதில் எடுத்தது.

நடுகல்லான ஒசூர் நாயகி

ஒசூரின் பேரடையாளமாக விளங்கும் சந்திரசூடேசுவரர் மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதையில் இந்நடுகல் வீற்றிருக்கிறது. இந்நடுகல்லை ஈரடுக்கு நடுகல்லுக்கும் 15-ஆம் நூற்றாண்டின் நடுகல் சிற்பக்கலைக்கும் சிறந்த உதாரணமாகக் காட்டலாம். நடுகல்லில் சிற்ப நூல் கூறும் சிற்ப செந்நுற்பங்கள் வெளிப்படும் அரிய கலைப்படைப்பாகவும் உள்ளது இது.

ஒசூர் நாயகி செல்வச் செழிப்பு மிகுந்த அரச மரபில் வந்தவளாகவோ இருக்க வேண்டும். சிற்பத்தில் வெளிப்பட்டுள்ள கம்பீரமும், ஒய்யாரமும், சிறப்பான அணிமணிகளும் அவளது செல்வச் செழிப்பையும், அரச போகத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளன. நல்ல அழங்காரம் கூடிய இரு சேடிப்பெண்களின் இருப்பும் இதனை உறுதி செய்யும்.

சிற்பக்கலை

கீழடுக்குக் காட்சி

நாயகியின் செல்வச் செழிப்பான அரசபோகம் ‘பேரரசு அமர்வு என்ற மகாராஜ லீலாசன’க் கோலத்தில் மையத்தில் சித்தரிப்பதன் மூலமும் சொல்லப்படுகிறது.

பேரரசு அமர்வு என்ற மகாராஜ லீலாசனக் கோலம் என்பது ‘பீடத்தில் இரண்டு கால்களையும் வைத்து அமர்ந்து, ஒருகாலைப் பீடத்தின் மீது மடக்கியபடி படுக்கையாக வைத்தும் மற்றொரு காலை மடக்கி நிறுத்தியமைத்தும், வலது கையினை மடித்துத் தூக்கி நிறுத்திய அல்லது மார்பை நோக்கியமைத்து இடதுகையைப் பக்கவாட்டில் ஒய்யாரமாய் ஊன்றி உடலை சுகமாய் வளைத்து அமர்ந்திருக்கும் கோலம்’ ஆகும்.

கீழடுக்கில் நான்கு கால்கள் கொண்ட மேடையிருக்கையில், ஒசூர் நாயகி மடக்கி தூக்கி உயர்த்திய காலில் வலது கைமுட்டியை அமர்த்தி ஒய்யாரமாய்க் கரத்தை டோல முத்திரை காட்டி தொங்கும்படி வீசியிருக்கிறாள். தொங்கும் இடது கரம் முட்டியில் இருந்து மேல்நோக்கி உயர்ந்து பக்கவாட்டில் சாய்வாக நீளும் உள்ளங்கையில் கிளியை அமர்த்திக்கொண்டுள்ளாள். கிளி, நாயகியின் விரலில் இருந்து உள்ளங்கை வரை படர்ந்திருக்கும்படி தம் முன்னங்கால்களை முழுவதும் அழுத்தமாக மடக்கி அமர்ந்திருக்கிறது. சிந்தனை முழுவதும் வீசிக்கிடக்கும் ஈசன் காதலைப் பகிரும் தோழியாய் கிளியை வளர்த்தனளோ ஒசூர் நாயகி அறிகிலோம். தன்னை ஈசனின் அங்கமான மீனாட்சியாகவே கருதிக்கொண்டனள் அல்லது மீனாட்சிக்கு மாற்று தானே என இருந்தனள் என்பதற்குச் சான்றாகவும் கிளி வடிக்கப்பட்டுள்ளதை அறியலாம். குறியியலில் கிளி வளமையின் குறியீடு; சிருங்கார சரசலீலைச் சக்திக் குறியீடு.

நாயகி கொண்டையை இடதுபுறம் முடித்திருக்கிறாள். காதுமடல்களை மறைக்கும் அளவு வட்டக்குழையான தட்டையான பெரிய கடிப்பைப் பூட்டியுள்ளாள். (கடிப்பு = அளவில் பெரிய தோடு). கழுத்திலிருந்து சற்று கீழாகக் கண்டிகையும், கண்டிகையை ஒட்டியவாறு நெஞ்சுக்குழியில் பதிந்த முகப்புவைத்த பட்டையான சரப்பளியையும் அணிவிக்கப்பட்டுள்ளது. மார்புக்கச்சை அணிவிக்கப்படவில்லை. இருகரங்களிலும் மணிக்கட்டையடுத்து சூடகமும் முழங்கைக்கு மேலும் கீழும் கடக வளைகளும் அலங்கரிக்கின்றன. இடது கையில் தோள் வளை காட்டப்பட்டுள்ளது. வலது கரத்தில் இது தெளிவாகவில்லை அல்லது அணிவிக்கப்படவில்லை. குதிகால்வரை உடலை ஒட்டி மடிப்புகள் கூடிய பட்டாடை அணிந்துள்ளாள். இடுப்பில் இடையணிகளும், விரித்து சிறுதிரைபோல் முன்கொசுவம் எடுப்பாகக் காட்டப்பட்டுள்ளது. காலில் பாதசாலம் போன்று கொலுசு அணிவிக்கப்பட்டுள்ளது.

நாயகியின் இருபுறமும் சிறிய உருவில் இரு சேடிப்பெண்கள் நாயகிக்கு உதவியாய் நிற்கின்றார். இவர்களின் உடைகளும், அணிமணிகளும் மிக்கச் செழிப்பைக் காட்டுகின்றன. ஏறத்தாழ நாயகியை நிகர்த்தவர்கள். இவர்கள் தம் கரங்களில் கிண்ணம் அல்லது மலர்க் கொத்தை ஏந்தியவர்களாக உள்ளனர்.

ஒசூர் நாயகி நடுகல்: 10 ஆண்டுகளுக்கு முன் பகல்பொழுதில் எடுத்தது.

தலை ஈந்த நாயகி

கீழடுக்கில் வலதுபுறமாக நாயகி இருபங்கமாக ஒய்யாரமாக நின்றகோலத்தில் காட்சியளிக்கிறார். பேரரசு அமர்வில் பூண்டிருந்த அதே அணிமணி அலங்காரம் கொண்டுள்ளாள். இடது கரம் தோளிலிருந்து தொங்கி டேலமுத்திரையுடன் காட்சியளிக்கிறது. வலது கரமானது மேல் நோக்கியுயர்ந்து தன்னை ஈசனுக்கு தலைப்பலியாக்கி அர்ப்பணிக்கும் முகமாக கழுத்தைச் அரியும் நீண்ட வாளை உறுதியுடன் பிடித்துள்ளது.

வெண்சாமரம் ஏந்திய தேவலோகப் பெண்

கீழடுக்கின் வலது ஓரத்தில் ஒரு பெண் உருவம் இடது கரத்தால் வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. நின்ற கோலத்து நாயகியைப் போலவே காட்சியளிக்கிறாள். வெண்சாமரம் இவள் தேவலோகப் பெண் என்பதை குறிப்பிடுகிறது. இது நாயகி ஈசனின் கையிலாயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாள் என்பதன் குறியீடு.

மேலடுக்குக் காட்சி

மேலடுக்கில் மையத்தில் ஈசனின் அருஉருவான லிங்கத் திருமேனி பிரபாவளியுடன் காட்சியளிக்கிறது. நடுகற்களில் லிங்கத்தைக் காட்சிப்படுத்துவது நடுகல்லுக்குரியோர் ஈசனடி சேர்ந்தனர் அல்லது சிவலோகத்தில் வாழ்கின்றனர் என்பதன் குறியீடாகும். நடுகல்லில் ஈசனை வழிபடுவது என்பது ஈசனடி சேர்ந்த நடுகலுக்குரியோரை வணங்குதல் என்பதாகும். இங்கு வணங்கப்படுபவர் ஒசூர் நாயகி என்போம். ஈசனுக்கு வலதுபுறம் ஒரு அலங்காரமான முக்காலியில் பெரிய சங்கு வைக்கப்பட்டுள்ளது (வலம்புரி?). அடுத்ததாக மேலடுக்கின் இடது ஓரமாக மிகப்பெரிய மணியை இடது கையில் தொடக்கவிட்ட நிலையில் ஒலித்துக்கொண்டும், வலது கரத்தில் பெரிய தீபக்காலால் ஒளியூட்டி பூசைபுரியும் பூசாரி காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். ஈசனுக்கு இடது புறம் மிகப்பெரிய நந்தி வடிக்கப்பட்டுள்ளது. நந்திக்கு அடுத்து நான்கு பெண்கள் காட்டப்பட்டுள்ளனர். முதல் பெண் இரு கரங்களையும் தலைக்கு மேல் குவித்து வணங்கிய நிலையில் உள்ளார் அடுத்த மூவரும் தம்முறைக்காக வரிசையில் காத்துள்ளனர்போல் காட்டப்பட்டுள்ளனர். மூலவரைவிடவும் உயர்ந்த, பெரிதான நந்தி காட்டப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. சுட்டும் பொருள் விளங்கா நிலையில் உள்ளது.

தலைப்பலி அல்லது நவகண்ட வரலாற்றின் பக்கங்களைத் திருத்தி எழுதும் நாயகி.

இந்நடுகல் வழிபாட்டுப் பண்பாட்டில் தலைப்பலி, நவகண்ட, தூக்குதலை ஆகிய செயல்களுக்கு அறிந்த விளக்கங்களைத் தரும் வரலாற்றின் பக்கங்களைத் திருத்தி எழுதுகிறது.

தென்னிந்தியா முழுவதும் சாக்தம் அல்லது சக்தி வழிபாட்டில் காணப்படும் ஒரு வழிபாட்டு முறையே ‘அரிகண்டம்’, ‘தலைபலி’, ‘நவகண்ட பலி’, ‘தூக்குதலை பலி’ என்பர். தன் தலையை தானே ஈவது, தன் உடலை தானே ஒன்பது துண்டங்களாக அறிந்து படைப்பது, தன் தலையை அறுக்கும்பொழுது கீழே விழாது இருக்க தன் தலையை பிடித்துகொண்டு மரக்கிளை, மூங்கில் போன்றவற்றில் கட்டிவிட்டு அறுப்பது என்பன முறையே இவற்றின் பொருளாகும். அரிகண்டம் தலைப்பலி ஆகலாம். ‘சாவாரப்பலி’யை இதனை ஒத்ததாகக் குறிப்பிடப்படுவது உண்டு. ஆனால், இதன் நோக்கமும், செயலும் வேறு என்பதால் இங்கு கவனத்தில் கொள்ளப்படவில்லை.

போர் வெற்றி, அரசின் நலம், தெய்வத்தின் கோபத்தால் விளைந்த கொள்ளை நோய் தாக்கி சமுதாயம் அழியாமல் இருக்க, தெய்வத்தை சாந்தப்படுத்த, அல்லது எதிர்பாரா பேராபத்திலிருந்து காக்க போன்ற சமூகக் காரணங்களுக்காகவும், தம் வேண்டுதல் நிறைவேற்றிய தெய்வத்துக்கு நன்றியாகவும் இச்செயல் புரியப்படுகிறது. இவ்வாறு பலி தந்தவர்கள் தெய்வமாகப் போற்றப்பட்டனர். கல்லெடுத்தும் வணங்கப்பட்டனர்.

ஈசனிடம் காதல் கொண்ட பெண்ணுக்கு எடுக்கப்பட்ட கல் என்ற தனிச்சிறப்பு மட்டுமல்லாமல், ஒசூர் நாயகியின் கல் நடுகல் மரபில் பல புதியனவற்றைப் புகுத்துகிறது. அவற்றை கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.

1. ஒரு பெண் தன்னை தலையை இறைவனுக்கு ஈவது.

2. இறைவனை மணாளனாக அடைய விரும்பிய பெண் செய்த தீரச் செயலைப் போற்றுவது.

3. பெண்கள் தவிர வேறு வகையில் மரணமடைந்த பெண்களுக்குக்கு கல் எடுக்கும் மரபு இல்லை என்ற வழக்கத்தை மீறிய புரட்சிகரமான கல்லெடுப்பாக இருப்பது.

4. வழிபாட்டில் பெண்கள் மட்டுமே இடம் பெற்றதைச் சுட்டும் கல். (பூசாரி தவிர).

5. பெற்றோர் மகளின் போக்கை புறக்கணித்த பொழுதும், நண்பிகளாலும், ஊர்ப்பெண்களாலும் சிறப்பித்து போற்றப்பட தீரம்.

6. வரையறுக்கும் சிற்பக்கலையை பின்பற்றி வடிக்கப்பட்ட கல்.

நடுகல் சிற்பவழிச் செய்தி

ஒசூரில் செல்வச் செழிப்பு மிகுந்த அரச குடும்பத்தில் பிறந்த பெண் – ‘ஒசூர் நாயகி’ - ஈசனான சந்திரசூடேசுவரன்பால் மையல் கொண்டு, இறைவனையே அடைய விரும்பி, தன்னை கிளியேந்தி சிருங்காரம் புரியும் மீனாட்சியாகவே கருதி வாழ்ந்தனள். தாய் தந்தை சுற்றம் நாயகியின் காதலை ஏற்கவில்லைபோலும், நாயகி இறைவனோடு உடலும் உயிருமாய் கலக்கத்தீர்மானித்தாள். அதற்கு அவள் தேர்ந்த நல்வழி தனக்குத்தானே தலைபலி தந்து தம் உடலையும் இன்னுயிரையும் படையலாக்கி ஈசனடி சேர்வது. பெற்றோர், உற்றார் உறவினர் புறக்கணித்த போதிலும், நண்பிகளும், ஊர்ப்பெண்டிரும் அவளைச் சிறப்பித்து கல்லெடுத்து வணங்கினர்.

நடுகல்லின் சிறப்பு

நான் அறிந்த முதல் பெண்தலைப் பலிக்கல் இது. இறைவனை அடைய ஒரு பெண் புரிந்த தீரமான செயல். அரிகண்டம், தலைபலி, நவகண்டம் அல்லது தூக்குதலை கொடுத்தல் ஆகிய செயல்கள் வீரத்தின் வெளிப்பாடாகவும் கொள்ளப்படும். ஓசூர் நாயகியின் செயலும் தெய்வீகமும் வீரமும் ததும்பியதே. தலைப்பலி அல்லது நவகண்டம் ஆகிய செயல்களுக்கு அன்று வரை இருந்த மரபார்ந்த பொருளை விடுத்துப் புதிய பொருளை வழங்கியப் புரட்சிகரமானப் பெண்.

குறிப்பு

தெரு ஓரத்தில் அநாதையாகக் கிடக்கும், சந்திரசூடனை நாடிய நாயகியின் கல்லை அழிவிலிருந்து பாதுகாக்க ஒசூர் மக்கள் முன்வருவார்களா? குறைந்தது ஒருமேடை அமைத்தேனும் பாதுகாத்து வழிபாட்டுக்கு மீட்பார்களா?

கட்டுரையாசிரியர் தொடர்புக்கு: thagadoorparthiban@gmail.com

]]>
hosur, ஒசூர், ஒசூர் நாயகி, நடுகல், சந்திரசூடேஸ்வரர், monument, chandrachoodeswarar http://www.dinamani.com/tholliyalmani/special-articles/2018/jul/19/ஒசூர்-நாயகி---சிற்பத்தில்-நிலைத்த-தலைப்பலியில்-முடிந்த-ஒசூர்-நாயகியின்-ஈசன்-காதல்-2963436.html
2942850 தொல்லியல்மணி சிறப்புக் கட்டுரைகள் தருமபுரி, குமாரசாமிப்பேட்டை மாந்திரீகர் மாரிமுத்து நடுகல்: அறிந்த நடுகல் வரலாற்றைப் புரட்டிப்போடும் நடுகல்! த. பார்த்திபன் Tuesday, June 19, 2018 02:43 PM +0530  

சங்க காலம் முதல், நடுகற்கள் எழுப்பப்படுவதில் இடமும் பொழுதும் சார்ந்து அடைந்துள்ள மாற்றங்கள் பலப்பல. இம்மாற்றங்கள், தொல்காப்பியம் அடையாளப்படுத்தும் தமிழர்ப் பண்பாட்டுக் காட்சிகளில் இருந்து பாரதூரமாய் வேறுபட்டுக் கிளைத்தமையின் விளைவுகளாகக் காட்சியளிக்கின்றன. தொல்காப்பியம் முற்றிலும் ஆநிரை தொடர்பாக வெட்சி, கரந்தைப் பூசல்களில் மாய்ந்த வீரர்களை வணங்கும் வீரவழிபாடாக நடுகல்லை அடையாளப்படுத்தும். கல்வெட்டுச் சான்றுகளும், சிற்பக்காட்சி வெளிப்பாடுகளும் பலதிறமாகக் கிளைத்த முன்னோர் வழிபாட்டுக்குச் சான்றுகளாகின்றன.

சதி, நவகண்டம், தலைப்பலி, உள்பட, விலங்குகளுடன் சண்டை, பெண், ஊர், மானம் காத்தல் ஈராகவும் ஏதோ ஒருவகையில் வீரம் வெளிப்படுத்தி மரணத்தைச் சந்தித்தவர்களுக்கு நடுகற்கள் எழுப்பப்பட்டன. பிற்காலத்தில், அகாலமாக மரணமடைந்தவர் நினைவாகவும் நடுகற்கள் எழுப்பட்டிருக்கின்றன. நிசிதிகை போன்று சமயம் சார்ந்த பெரியோர்கள் உண்ணாநோம்பிருந்து மாய்ந்தவர் நினைவுக்கற்களும் நடுகல் வகைப்பாட்டில் ஒன்றாகின்றன. அண்மையில் கொலை செய்யப்பட்டவர் நடுகல் ஆன வரலாறும் பர்கூர் – நெல்லூர் கொலையுண்டு தெய்வமானவர் நடுகற்கள் (நடுகல் மரபில் நாட்டார் தெய்வ உருவாகம் பற்றிய முதல் ஆய்வு) தலைப்பிலான என் கட்டுரை மூலம் வெளிப்படுத்தப்பட்டது (படிக்க: தினமணி, தொல்லியல்மணி, சிறப்புக்கட்டுரைப் பகுதிக்குச் செல்க).

நடுகற்களை யார் யார் எடுத்தனர் என்ற விவரத்தைச் சில கல்வெட்டுகள் காட்டுகின்றன. ஊரார், தலைவன், தனயன், அம்மா, தந்தை போன்று உறவுடையோர் ஊர்மக்கள் என்ற விவரங்களை அவை தரும்.

இப்படி இந்நாள் வரை யாருக்கு எதற்கு யாரால் எடுக்கப்பட்டது என்று அறியப்பட்ட வரலாற்றைப் புரட்டிப்போடும் நடுகல் ஒன்றை, இன்றைக்கு ஏறத்தாழ  ஓராண்டுக்கு முன் நேர்கொண்டேன். தருமபுரி, குமாரசாமிப்பேட்டை இடுகாட்டில் உள்ள இந்நடுகல், மேற்குறிப்பிட்ட இன்றுவரை அறியப்பட்ட எல்லா நடுகல் வரலாற்றையும், நடுகல் மரபு பற்றி பொதுப்புத்தியில் உறைந்த செய்திகளையும், அறிந்த காலட்ட வரலாற்றையும் புரட்டிப்போடுவதாக உள்ளது.

நடுகல் - மாந்திரீகர் மாரிமுத்து

பலமுறை இந்த நடுகல்லைக் கண்டிருக்கிறேன். சிலவேளை இதனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என நினைப்பேன். சிறப்பான, கலையலங்காரம் கொண்டதில்லை என்றாலும், முதலில் அதன் தற்காலத்திய சிற்பக்கலை வெளிப்பாடுதான் என்னை ஈர்த்தது. நன்கு அறிந்த 18-ம் நூற்றாண்டு வரை நீடித்த நாயக்கர் கால சிற்பக்கலையின் எந்தக்  கூறுகளையும் கொண்டிராத அது, அதனிலிருந்து வேறுபட்ட அண்மைக்கால சிற்பக்கலைக் கூறுகளைக் கொண்டிருந்தது. மயானத்தில் நடுகல்லின் கீழ்ப்பகுதி பெரும்பாலும் சிற்பத்தின் குதிகால் உயரத்துக்கு மண்மேடால் மறைந்திருக்கும் என்பதால், கல்வெட்டை அறியமுடியாதிருந்தது. மேலும், வசதி குறைவு காரணமாக கடந்த 10-15 ஆண்டுகளாக ஊர் மயானம் எம்மூர் மக்களால் குறைவாகவே பயன்படுத்தப்பட்டதால், இந்த இடைவெளிக் காலங்களில் நான் இம்மயானத்துக்கு செல்லும் அவசியம் அமையவில்லை. ஓராண்டுக்கு முன்னர்தான், நிர்ப்பந்தம் வந்தது.    

நடுகற்கள், பெருங்கற்படைப் பண்பாட்டின் தொடர்ச்சியாக முன்னோர் வழிபாட்டின் நீட்சியாக எழுப்பப்படுபவை. நடுகற்கள் எழுப்பும் பண்பாடு, 17-18-ம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது என்றும், பின்னர் அது மறைந்தொழிந்தது என்று வரலாற்று ஆசிரியர்களும், தொல்லியலாளர்களும் தெரிவிப்பர். இது, 1980-90-களில் வரையப்பட்ட கருத்து. நாயக்கர் காலச் சிற்பங்கலைப் பண்புகளுடன் கூடிய நடுகற்களுக்குப் பின் எழுந்த சிற்பக்கலைக் கூறுகள் கொண்ட நடுகற்கள் அறியப்படாமையும், பிற்கால கல்வெட்டுப் பொறிப்பு கொண்ட நடுகற்கள் வெளிப்படாமையும் 17-18-ம் நூற்றாண்டில் நடுகல் மரபு முடிவுக்கு வந்தமைக்குச் சான்றுகளாயின. ஆனால், அண்மைக்காலத்தில் 18-19-ம் நூற்றாண்டைச் சார்ந்த துப்பாக்கி ஏந்தியவர்களாக உள்ள நடுகற்கள் சில அறியப்பட்டு வருகின்றன. அரிதாக, 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில், 1910-ம் ஆண்டில் எழுப்பப்பட்ட கன்னட மொழி கல்வெட்டுப் பொறிப்புடன் உள்ள நடுகல், கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மாளாபுரத்தில் உள்ளது. (அடிக்குறிப்பு 1). இது ஆங்கிலேய - கிழக்கிந்திய ஆட்சி உருவாக்கத்தைத் தொடர்ந்து நடுகல் எழுப்பும் மரபு அரிதாக மாறிப்போன காலகட்டத்தைக் காட்டுகிறது.  

கல்வெட்டுப் பகுதி - 1951 மாரிமுத்து

1951 - கல்வெட்டு ஆண்டுக்குறிப்பு

குமாரசாமிப்பேட்டை நடுகல் கல்வெட்டு, ஒரு வரிச் செய்தியாக, 1951 மாரிமுத்து என்பதைத் தெரிவிக்கிறது. அதாவது, இது 1951-ம் ஆண்டு மறைந்த மாரிமுத்து என்பவருக்காக எழுப்பட்டது என்பதைத் தெரிவிக்கிறது. இதனால் இக்கல்வெட்டுடன் கூடிய இவ்வெளிப்பாடு, 20-ம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்திலும் நடுகல் எழுப்பப்பட்டமைக்குச் சான்றாகவும் வரலாற்று முக்கியத்துவமும் உடையதாகிறது. (அடிக்குறிப்பு 2). நடுகல் மரபின் இருபதாம் நூற்றாண்டு எச்சமாகவும் இதனைக் கருதலாம்.

{pagination-pagination}

மாரிமுத்து வரலாறு

நடுகல் கல்வெட்டு குறிப்பிடும் மாரிமுத்து என்பவர் வாணிய செட்டியார் வகுப்பைச் சார்ந்தவர். காய்கறி வியாபாரம் செய்துவந்தார். அவரது சொந்தங்கள், இன்றும் தருமபுரி கடைவீதியைச் சுற்றிய பகுதியில் குடியுள்ளனர். ஆனால், அவருக்கும் அவரது சொந்தபந்தங்களுக்கும் தொடர்பு அறுந்துவிட்டது. தொடர்பறுப்புக்கு அவர் வேறு வகுப்பைச் சார்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதே காரணம். தன் திருமணத்துக்குச் சில காலத்துக்குப் பிறகு அவர், குமாரசாமிப்பேட்டையில் உள்ள செங்குந்தர்குல நண்பர்களின் உதவியுடன் குமாரசாமிப்பேட்டைக்குக் குடியேறி தன் இறுதிக்காலம் வரை வாழ்ந்துள்ளார். அவரது ஒரே மகன் அரசுப்பணி காரணமாக வெவ்வேறு ஊர்களில் குடியிருந்து, பணிக்காலத்தியேயே காலமாகியிருக்கிறார். அதனால், இந்நடுகல் வழிபாட்டில் இருந்து நீங்கியுள்ளது. நீங்கியது 30-35 ஆண்டுகளுக்கு முன்னர்தான் என்று தகவலாளி ஒருவர் கருதுகிறார். (அடிக்குறிப்பு 3).

இந்நடுகல்லுடன், நடுகல்லுக்கு எதிரில் 5 அடி இடைவெளியில் ஒரு பெரிய வேல் நடப்பட்டதாகவும், வழிபாடு நீங்கிய சிறிது காலத்திலேயே அது திருடப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.  

தனக்குத் தானே கல்வடித்துக் கொண்டுவந்தவர்

தன் மரணத்தை முன்கூட்டியே கணித்திருந்த மாந்திரீகர், இந்த நடுகல்லைப் பென்னாகரத்துக்குப் பக்கத்தில் இருந்து செய்வித்துக் கொண்டுவந்தார் என்கின்றனர். தன் சமாதியின் மீது நாள் குறித்து நடப்பட வேண்டும் என தன் நண்பர்களிடம் விருப்பத்தைத் தெரிவித்திருந்ததார். சில மாதங்களிலேயே அவர் இறப்பு நிகழ்ந்தது. அவர் இறப்புக்குப் பின் நண்பர்களும், ஊர்க்காரர்களும் மாந்திரீகரின் விருப்பப்படியே கல்வெட்டுப் பொறித்து நட்டுள்ளனர்.  

இந்த நடுகல்லில் இருக்கும் உருவம் அவரது மெய்யான உருவமா என்ற கேள்விக்கு, தலை அலங்காரம். கைகளில் ஈட்டி, குண்டாந்தடி இல்லை என்றால் நேரில் இப்படித்தான் இருப்பார் என்கின்றனர். மேலும், அவர் நகை அணிந்து பார்த்ததில்லை என்கின்றனர். கல்லில், முகம் முட்டைவடிவத்தில் உள்ளது; மெய்ப்படி அப்படி இருந்ததில்லை என்று ஒருவர் மறுக்கிறார். இது உருவ ஒற்றுமையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. சிற்பம், மாரிமுத்து விரும்பிய மனத்தோற்றமாக இருக்கலாம், அல்லது சிற்பி மாரிமுத்துவை ஒரு ஊர்க்காவலனாக சிறப்பிக்க ஆயுதங்களுடன் வடித்த சிற்பமாக இருக்கலாம்.        

மாரிமுத்துவின் சிறப்புகள்

மாரிமுத்துவின் நினைவு, ஊர் முதியவர்கள் சிலரிடமும், அவர் சார்ந்த கதைகள் சிலரிடமும் பதிந்துள்ளன. அவர் பற்றிய செய்திகளில் இரண்டு செய்திகள் பொதுக்கருத்தாக உள்ளன. 1. அவர் மந்திர தந்திரங்களில் வித்தகர். மாந்திரீகம், மருத்துவம் அறிந்தவர். குழந்தைகளுக்கு வரும் நோய்களை தன் மாந்திரீகம் மூலம் நிவர்த்தி செய்திருக்கிறார். அவர் பிறரால் செய்த மாந்திரீகக் கட்டுகளை நீக்கி, படுக்கையாக இருந்த சிலரை நடக்கும்படி செய்திருக்கிறார். மாந்திரீகம் தொடர்பாக அவர் மயானத்தில் நள்ளிரவு பூசைகள், குறிப்பாக அமாவாசை நாள்களில் செய்துவருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். 2. அவர் பல வித்தைகள் கற்றிருந்தார். அதில் ஒன்று சிலம்பாட்டம். ஆனால் போட்டிகளில் அவர் கலந்துகொண்டது பற்றியோ, விருதுகள் பெற்றது பற்றியோ ஒன்றும் விவரம் இல்லை. அப்படி ஏதும் நடக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். அவர் தன் சிலம்பாட்ட வித்தையை நண்பர்கள் உள்பட யாருக்கும் கற்றுத்தரவில்லை. தான் கற்ற மாந்திரீகத்தை யாருக்கும் கற்றுத்தராதது போலவே.

நடுகல் சிற்பக்கலை     

கிழக்கு நோக்கி நடப்பட்டுள்ள நடுகல்லில், மாரிமுத்து கரண்டமகுடத் தலை அலங்காரம் கொண்டுள்ளார், இருபுறமும் பின்பக்கமிருந்து பக்கவாட்டில் நேராக விரைத்து, குறுகியதாய் நீண்டு பிறகு தொங்கும் சடைமுடியும் கொண்டுள்ளார். முத்துவைத்த நெற்றிப்பட்டம் அணிந்துள்ளார். காதுகளில் தொங்குகுண்டு காதணி அலங்கரிக்கிறது. கழுத்தில் முகப்பு வைத்த கண்டசரமும், தொப்பூள்வரை தொங்கும் பதக்கமுள்ள ஆரமும் அணிவிக்கப்பட்டுள்ளன. கையிலும், காலிலும் சற்று தடித்த காப்பு பூட்டப்பட்டுள்ளது. வலது கரத்தில் தரையில் ஊன்றி செங்குத்தாக நிற்கும் ஈட்டியும், இடது கரத்தை பக்கவாட்டில் மடக்கி மூட்டியை மேல்நோக்கி தூக்கி, மணிக்கட்டை மட்டும் கீழாக இறக்கி குண்டாந்தடி போன்ற குறுந்தடியை குறுக்காகப் பிடித்தபடி உள்ளார். தொடைவரை ஆடை காட்டப்பட்டுள்ளது. முன்புறம், தொடைகளுக்கு நடுவில் அலங்காரத்துக்காகக் கட்டப்படும் தொங்கும் விறிசி மடிப்பு ஆடைக்கட்டு, இடைவாரில் இருந்து தொங்குகிறது. கால் பாதங்கள் தெற்கு நோக்கியதாகக் காட்டப்பட்டுள்ளன. நடுகல்லை வண்டி வாகனங்களில் ஏற்றி இறக்க வசதியாக, இரு தோளுக்கும்  மேல் இரு துளைகளும், இடுப்பின் இருபுறம் இரு துளைகளும் போடப்பட்டுள்ளன.

கள செய்திக்குப் பின்

கல்வெட்டும், கள ஆய்வுத் தகவல்கள் இல்லையென்றால், இந்நடுகல்லை சிற்ப அமைதிகொண்டு, மாந்திரீகர் மாரிமுத்து நடுகல்லை ஈட்டியும், குறுந்தடியும் கொண்டு ஊரைக்காத்த வீரனுக்கு 19-20-ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கல் என்றே வகைப்படுத்தியிருப்பேன்; காலத்தை, ஒரு நூற்றாண்டேனும் பழமைகொண்டதாகக் கணித்திருப்பேன். மெய்யில் மாந்திரீகரான அவருக்கும் காட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதை நினைவில் கொள்வோம். அண்மைக்கால நடுகற்களின் சிற்பக்கலை நம்மை உண்மைக்கு அருகில் கொண்டுசெல்லாமல் திசை தடுமாறவே செய்யும் என்ற தேவையான விழிப்புணர்வையும் இக்கல் தருகிறது.    

இப்படி நடுகல் மரபில், தொல்காப்பியம் முதல் இந்நாள் வரை அறியப்பட்ட எல்லா செய்திகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட வரலாற்றைப் புரட்டிப்போடுகிறது இக்கல். வீரம் வித்தாமலும், அகால மரணம் இன்றியும் நடுகல் எழுப்பப்பட்ட நிகழ்வுக்குச் சான்றாகி, நடுகல் வரலாற்றில் புதிய பக்கங்களை எழுதிச் செல்கிறார், 1951-ல் தனக்குத்தானே கல்லெழுதி நண்பர்களைக் கொண்டு எழுப்பிவித்த மாந்திரீகர் மாரிமுத்து.

*

அடிக்குறிப்பு 1

B.R. Gopal, H.S. Gopal Rao & P.V. Krishnamurthy, Kannada Inscription  of Tamil Nadu, Kannada University, Hambi, Vidyanya, (2000), No.62.

அடிக்குறிப்பு 2

1951 ஆண்டுக்குறிப்பில், இறுதி எண் 1 லேசாகச் சிதைந்துள்ளது. அவ்வெண் 2-டோ என தோற்றமயக்கம் தருகிறது. 1 என்பதே சரி என்று தகவலாளிகள் தெரிவிக்கின்றனர்.

அடிக்குறிப்பு 3

தகவலாளிகள், குப்புசாமி, வயது 86; குப்பன் வயது 81; தங்கவேலு வயது 89; சண்முகம் வயது 66. நால்வரும் தருமபுரி, குமாரசாமிப்பேட்டையில் வசிப்பவர்கள். முதல் மூவர், இக்கல்லெடுப்பை  அறிந்தவர்கள். இரண்டாமவர், தன் 14-15 வயதில் கல்லெடுப்பில் பங்குகெடுத்தவர். மாரிமுத்துவின் கரிசனத்துக்கு உரிய குழந்தையாக இருந்தவர். நான்காமவர், தன் மூத்தோர்களிடம் இருந்து பெற்ற தகவல்களைக் கதைகளாகக் கொண்டிருந்தவர், இரண்டு மாதங்களுக்கு முன் இயற்கை எய்தினார்.

- த. பார்த்திபன்

கட்டுரையாசிரியர் தொடர்புக்கு: thagadoorparthiban@gmail.com

]]>
தொல்லியல், மாந்திரீகம், யுத்தபூமி, கட்டுரைகள், நடுகற்கள், கல்வெட்டு, தொல்காப்பியம், தொல்லியல்மணி http://www.dinamani.com/tholliyalmani/special-articles/2018/jun/19/தருமபுரி-குமாரசாமிப்பேட்டை-மாந்திரீகர்-மாரிமுத்து-நடுகல்-அறிந்த-நடுகல்-வரலாற்றைப்-புரட்டிப்போடும்-2942850.html
2924083 தொல்லியல்மணி சிறப்புக் கட்டுரைகள் பர்கூர் - நெல்லூர் கொலையுண்டு தெய்வமானவர் நடுகற்கள் த. பார்த்திபன் Monday, May 21, 2018 12:31 PM +0530  

குறிப்பு

நடுகல் மரபில், நாட்டார் தெய்வ மரபுகளின் தாக்கத்தை வெளிப்படுத்தும் முதல் ஆய்வு இது. தகடூர்ப் பகுதியில் நான் அறிந்த இவ்வகையான நடுகல் வடிவமெடுத்த நாட்டார் தெய்வங்கள் குறித்து தனியாக எழுதத் திட்டமிட்டிருந்தேன். ஈரோடு மாவட்டம், பர்கூர் - நெல்லூர்ப் பகுதியில் இருக்கும் இத்தெய்வங்கள் முந்திக்கொண்டனர். நடுகல் மரபே நாட்டார் மரபுதானே, அது என்ன தனிதாக்கம் என்று கேள்விகள் எழலாம். இது குறித்து, கட்டுரையின் பகுதியாக சில செய்திகளை விளக்கியுள்ளேன். ‘‘நடுகல் மரபும் நடுகல்மரபில் நாட்டர் தெய்வ மரபும்’’ என்று அடுத்து எழுத இருக்கும் கட்டுரை, இவ்விரண்டின் வேறுபட்ட பரிமாணங்களை விளக்குவதாக அமையும். 

*

அண்மையில், முகநூலில் கவனம் பெற்று பலவிதமான கருத்துகளை எழுதச் செய்த ஈரோடு மாவட்டம், பர்கூர் பகுதியில் நெல்லூரில் உள்ள நடுகல் இது. இதனைப் பதிவேற்றியவர், பழங்குடிமகன் என்ற மீனாட்சிசுந்தரம் குறும்பன். 

(நெல்லூர் முதல் நடுகல்)

இந்நடுகல்லில், கல்வெட்டுப் பொறிப்பு இல்லை என்பதால், இக்கல் எழுப்பப்பட்டதற்கான காரணங்களை நேரடியாக அறியமுடியாது உள்ளது. இதன் காரணமாக, இந்நடுகல் பற்றி எழுந்த கருத்துப் பதிவுகள் பெரும்பாலும் தவறான புரிதலுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றன. உதாரணமாக, 

•    போர் அல்லது பூசலில் ஆண்-பெண் இருவரும் ஒரே வாளால் வீழ்த்தப்படும் காட்சி.

•    இறந்தவர்கள், தேவகன்னியரால் தேவலோகம் அழைத்துச் செல்லப்பட்ட காட்சி. 

•    இறந்தவர்கள், ஐந்து தேவலோகப் பெண்களால் சுவர்க்கம் அழைத்துச் செல்லப்பட்ட காட்சி. 

•    தூக்குதலை, அரிகண்டம், நவகண்டம் போன்ற தலைப்பலிக்கல் வகையில் ஒன்று. 

•    சிடிகல் வகை தலைப்பலிக்கல். 

•    போரில் ஈடுபட்டு மாய்ந்த ஐவரும் தேவலோகத்தில் உள்ளனர். 

•    போரில் மாய்ந்த ஐவரையும் தேவலோகத்துக்கு அழைத்துச் செல்ல ஐந்து தேவலோகப் பெண்கள் உள்ளனர்.

இக்கருத்துப் பதிவுகள் நிகழ்ந்துவருகையில், இடையில் மற்றொரு நடுகல் படம் வெளியிடப்படுகிறது. இவ்விரண்டு கற்களும் அருகருகே அமைந்துள்ளன. இரண்டும் ஒரே நிகழ்ச்சி தொடர்பானவை. 

இந்நடுகற்கள் குறித்து எழுந்துள்ள மேற்குறித்த கருத்துகள் யாவும், இந்நடுகற்களின் உள்ளார்ந்த பொருளை அடைவதை நோக்கி நகராமல் இருக்கின்றன. சிற்பக்கலை வெளிப்படுத்தும் நுணுக்கமான, அதேசமயத்தில் நேரடியான விவரச் சித்தரிப்புகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் சொல்லப்பட்டவையாக இருக்கின்றன. 

இந்நடுகற்களின் சிற்பச் சித்தரிப்புகளில் இருந்து பெறமுடியும் செய்திகளைப் பார்ப்போம். 

முதல் நடுகல் 

இது இரண்டு அடுக்கால் ஆனது. கீழடுக்கில் நான்கு ஆண் உருவங்களும் ஒரு பெண் உருவமும்; மேல் அடுக்கில் ஐந்து ஆண் உருவங்களும் இடம்பெற்றுள்ளன. கீழடுக்கில் உள்ள ஆண் உருவங்களில், வலதுபுறத்திலிருந்து இடமாக முதல் மூவரது தலை அலங்காரம் கொண்டையோடு ஏறத்தாழ ஒரே தோற்றத்தில் உள்ளது. நீண்டு தொங்கும் காதுகளில் வட்டகுலை அலங்கரிக்கிறது. மார்புகளில் பலவித அணிமணிகள் பூண்டுள்ளனர். இதில் ஒவ்வொருவரின் அணிமணிகளும் மாறுபடுகின்றன. மூவரின் காலசைவுகள் ஒரு திசை நோக்கி – வலதிலிருந்து இடதுபுறம் - விரைவதாகக் காட்டப்பட்டுள்ளது. இம்மூவரும் ஆயுதம் ஏந்தியுள்ளனர். முதலாமவர் வலது கரம், குறுவாள் ஏந்தி குத்துவதற்கு ஆயத்தமான நிலையில் பிடித்தபடி உள்ளது. இடது கரம், மற்றொரு அளவில் சற்று பெரிய குறுவாளை பக்கவாட்டில் இருக்குமாறு மணிக்கரத்தில் இருந்து பக்கவாட்டில் மடக்கிக் காட்டப்பட்டுள்ளது. இரண்டாமவர் வலது கரம், வாளை உயர்த்திப் பிடித்தவாறும், இடது கரம் தொங்குகரத்தில் குறுவாளைத் தொங்கிவிட்டவாறும் காட்டப்பட்டுள்ளது. மூன்றாமவர் தன் வலது கரத்தில் இருக்கும் மிக நீண்ட வாளை, நான்காவதாக உள்ள ஆண் மற்றும் ஐந்தாவதாக உள்ள பெண் ஆகியோரது இடையில் பக்கவாட்டில் சொருவி அவர்களை வீழ்த்துவதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்நாள் வரை நாம் அறிந்த வாள்களிலேயே மீக நீண்ட வாள் எனக் கருதத்தகும் அக்கொலைவாள், இருவரின் உடலிலும் பாய்ந்து வாளின் கூர்முனை பெண்ணின் உடலில் இருந்து நீட்டமாக வெளிவந்துள்ள நிலையில் காட்டப்பட்டுள்ளது. வலது கரம் நான்காமவரின் தலைமுடியைப் பிடித்திழுப்பதுபோல் காட்டப்பட்டுள்ளது. நான்காமவர் முதல் மூவரிடமிருந்து வேறுபடும் நீண்ட சடைபின்னல் அலங்காரம் கொண்ட தலையுடன், நிறைய அணிமணி அலங்காரங்களுடன் உள்ளார். ஐந்தாவதாக உள்ள பெண் உயர்வகை ஆடை, அணிமணி அலங்காரமும் கொண்டை முடித்த தலையுமாகக் காட்டப்பட்டுள்ளனர். கடைசி இருவரின் சிற்ப விவரிப்புகள் ஆழ்ந்த கவனத்தை வேண்டுகின்றன. இவர்கள் கைகளில் ஆயுதங்கள் காட்டப்படவில்லை. ஆணின் வலது கரம் தன் தலைமுடியைப் பிடித்திழுக்கும் மூன்றாவது ஆணின் இடது கரத்தின் மணிக்கட்டுப் பகுதியைப் பிடித்துள்ளது. இடது கை பெண்ணின் வலது கையுடன் கோத்த நிலையில் காட்டப்படுள்ளது. ஆணின் கால் திசை - இடதிலிருந்து வலமாக மாறியுள்ளது; இது தங்களைத் தாக்க வருபவர்களின் திசையை, அதாவது எதிர்திசையை, அதாவது வந்த திசையை நோக்கியவாறு உள்ளது. பெண்ணின் வலது கரம் ஆண் கரத்தோடு கைகோத்திருக்க, இடது கரம் இயல்பாக நடந்துசெல்லும் தொங்குகர அசைவுடன் உள்ளது. இவளது கால் அசைவுகள், முதல் மூவரின் திசை போன்றே காட்டப்பட்டுள்ளது. இப்பெண்ணின் ஆடை அலங்காரம் சிறப்பாக உள்ளது. இன்று கூடைவிரிப்புப்பாவாடை என்று குறிப்பிடும் வடிவமைப்பு கொண்ட பாவாடையை இப்பெண் அணிந்துள்ளாள். சிறந்த அணிமணி அலங்காரங்கள் கொண்டுள்ளாள். சமூகத்தில் உயர்ந்த மதிப்பு பெற்ற, அல்லது செல்வச்செழிப்பு மிகுந்தவர்கள் என்று காட்டும்விதமாக இவ்விருவரின் தோற்றமும் உள்ளது. 

மேல் அடுக்கில் ஐந்து உருவங்கள் ஒரே முக, ஆடை, அலங்கார பாவனையில் ஒரு நீண்ட கல்மேடை போன்ற ஆசனத்தில் ஐவரும் ஒரே பாவனையில் வலது காலை தொங்கவிட்ட நிலையிலும், இடதுகாலை மடக்கியும் சுகாசன அமைதியில் காட்டப்பட்டுள்ளனர். கீழ் அடுக்கில் நான்காம் ஆணின் தலை அலங்காரமான நீண்ட தலை அலங்காரத்தில் இந்த ஐவரும் உள்ளனர். இவர்களது வலது கரமானது கிலுக்கட்டை இசைக்கருவியை இசைக்கும் லாகவத்தில் காட்டப்பட்டுள்ளது. இடது கரம், அமர்ந்துள்ள காலின் தொடையில் பதிந்தவாறு காட்டப்பட்டுள்ளது.

(கிலுக்கட்டை வாசிக்கும் மேல் வரிசை ஐவரில் ஒருவர். நிறமாற்றம் சிற்பத்தின் சில சித்தரிப்புகளை நன்கு புலப்படுத்துவதாக உள்ளது. முதல் நடுகல்)

இக்காட்சிகள் நான்கு முக்கியச் செய்திகளை நமக்கு வழங்குகின்றன.

1.    இதில் போர்க்காட்சி இல்லை. 

2.    இதில் இடம் பெற்றவர்கள், இரு வேறுபட்ட குழுவினைச் சார்ந்தவர்கள். தலையலங்காரத்தில் உள்ள வேறுபாடு இதனை வெளிச்சமாக்குகிறது.

3.    ஒரு குழுவினைச் சேர்ந்த முதல் மூவர், வேறு குழுவைச் சேர்ந்த ஆண்-பெண் இணையை அவர்கள் அறியாதவாறு பின்தொடர்ந்து குத்திச் சாய்க்கின்றனர்.

4.    தாங்கள் தாக்கப்படுவத்தை ஆண் மட்டுமே அறிகிறான் உடன் இருக்கும் பெண் அறிவதில்லை. 

அடுத்து, இரண்டாவது நடுகல் சித்தரிப்புகளைப் பார்ப்போம்.

(இரண்டாம் நடுகல் - கிலுகட்டை வாசிக்கும் மூதாதையர்) 

இந்நடுகல்லும், முதல் நடுகல் போலவே இரு அடுக்குச் சித்தரிப்புகள் கொண்டது. இந்நடுகல் நிலத்தில் புதைந்தும், மண்மேடிட்டும் இருப்பதால், கீழடுக்கின் சிற்பச் சித்தரிப்புகளின் முழுமையைக் கண்டுணரமுடியாது உள்ளது. கீழ் அடுக்கில் உள்ள வலதுபுற உருவத்தின் (கொலையாளி) தொடைப்பகுதி வரையிலும், இடதுபுற உருவத்தில் (கொலையுண்டவர்) இடுப்புவரையிலும்தான் காணமுடிகிறது. இது முதலாமவரின் கால் அசைவுகளையும், இரண்டாமவரின் கால் அசைவுகளுடன், ஆடைச் சித்தரிப்புகளையும் அறியமுடியாமல் செய்துவிடுகிறது. 

மேலடுக்கில், முதல் நடுகல் சிற்பச் சித்தரிப்பு போலவே, நீண்ட சடை தரித்த இருவர் கல்மேடை ஒன்றில் சுகாசனத்தில் அமர்ந்து, இடது கரத்தை தம்தம் தொடை மீது அமர்த்தியும், வலது கரத்தில் கிலுக்கட்டை இசைக்கருவியை இசைப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளனர். கீழடுக்கில் இரு உருவங்கள் உள்ளன. இடதுபுற ஆண் முதல் நடுகல்லின் முதல் மூவரைப் போலவே, தோற்றம் ஆடை அணிமணி அலங்காரத்தில் காட்டப்பட்டுள்ளார். எனில், இவர் முதல் நடுகல் சித்தரிக்கும் கொலை செய்த குழுவைச் சார்ந்தவராகிறார். இவரது இடது கரம் இரண்டாமவரின் கொண்டையைப் பிடித்திழுப்பது போலவும், தன் வலது கரத்தில் உள்ள வாளை இரண்டாவது உருவத்தின் பக்கவாட்டில் இருந்து சொருகுவது போலும் காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது உருவம் தன் வலது கரத்தை தன் கொண்டையை இழுக்கும் முதல் உருவத்தின் கையின் மணிக்கட்டுப் பகுதியை பிடித்துள்ளது. இடது கரம் தொங்கும் கரமாக உள்ளது. இரண்டாம் உருவத்திடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை. இரண்டாவதாக இடம் பெற்றுள்ள உருவம் ஆணா பெண்ணா என்ற ஐயம் எழுகிறது. முதல் நடுகல்லின் சிற்பச் சித்தரிப்போடு ஒப்பிட்டும், தலை மற்றும் இடுப்பு வரையிலான அலங்காரத்தைக் கொண்டும் இது பெண் என்றே கருதலாம். மேடிட்ட மண்ணை முழுமையாக அகற்றி உடை அலங்காரத்தை வெளிக்கொணர்த்தால், இச்சித்திரத்தின் உண்மைத்தன்மை விளக்கமாகும். இங்கு அனுமானிக்கப்பட்ட கருத்து நிலைத் தகவலாகலாம். 

இக்காட்சிச் சித்தரிப்பு, முதல் நடுகல்லின் செய்திகளையே வழங்குகிறது. அதனை இவ்வாறு வரிசைப்படுத்திக்கொள்ளலாம்:

1.    இது போர்க்காட்சி இல்லை. 

2.    இடம் பெற்றவர்கள் இரு வேறுபட்ட குழுவினைச் சார்ந்தவர்கள். தலையலங்காரத்தில் உள்ள வேறுபாடு இதனை வெளிச்சமாக்குகிறது.

3.    ஒரு குழுவினைச் சேர்ந்த ஒருவர், வேறு குழுவைச் சேர்ந்த பெண் (?) ஒருவரை அவர் அறியாதவாறு பின்தொடர்ந்து குத்திச் சாய்க்கின்றார்.

இரண்டு கற்களிலும் மேலடுக்கில் உள்ளவர்கள், கொலை செய்யப்பட்டவர்களின் குழுவினைச் சார்ந்த தலைவர்களாகவோ, மூத்த குடிமக்களாகவோ இருக்க வேண்டும். இவர்கள் கிலுக்கட்டை இசைக்கருவியை இசைத்தவாறு காட்டப்படுவது, குறும்பர் இனத்தவரின் பண்பாட்டில் பிறப்பிலும், இறப்பிலும் இன்றியமையாது இடம்பெறும் இசைச் சடங்கின் பகுதியைப் பிரதிபலிப்பதாகும். 

இக்கற்களில் போர் இல்லை, இருப்பது கொலைதான் என்பதைத் தெளிந்தபின், கள ஆய்வில் மேலும் வலிமையான தகவல்களைத் திரட்ட முடியும் என்பதில் உறுதியானேன். மேலும், கள ஆய்வுகளில் சில பிற்கால நடுகற்களில் நாட்டார்த் தெய்வ உருவாக்கத்தின் தாக்கம் உள்ளதை அவற்றின் சித்தரிப்புகள் நேர்காணல்கள் வழியாக அறிந்துள்ளேன். ஏனெனில், அவை வீரம் வித்துதல் என்ற நடுகல்லின் மையமான கோட்பாட்டுக் குணத்தை எவ்வகையிலும் வெளிப்படுத்துவதில்லை. மேலும், பழங்குடிமகன் பதிவில் மழை வேண்டியும், பஞ்ச காலத்திலும் வழிபடும் எங்கள் குல தெய்வம் என்று கூடுதல் செய்தியை குறிப்பிட்டதும் கள ஆய்வின் அவசியத்தை உணர்த்தியது. உற்சாகமும், தன் பண்பாட்டின் ஆழங்களைத் தேடும் துடிப்புள்ள இளைஞன் பழங்குடிமகன் (வயது 31) மற்றும் அவரது தாத்தா பத்ரே கவுடா (வயது 76) இருவரும் எனக்குத் தேவையான தகவல்களை அளித்துள்ளனர். 

நாட்டார் தெய்வங்களின், குறிப்பாக குலதெய்வங்களின் உருவாக்கத்தில் சில இறப்புக் காரணங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அவற்றுள் வீரம் வித்தி மாய்ந்த மற்றும் சதி கற்கள் உட்பட நடுகல் தெய்வங்கள் தவிர பிற காரணங்களில், 1. கன்னியாக இறந்தவர்கள்; 2. குறை ஆயுளில் இறந்தவர்கள்; 3. பிறரால் கொலை செய்யப்பட்டவர்கள்; 4. பலி கொடுக்கப்பட்டவர்கள்; 5. அகால மரணங்களைச் சந்தித்தவர்கள்; 6. விபத்தில் இறந்தவர்கள்; 7. தற்கொலை செய்துகொண்டவர்கள்; 8. விலங்குகளால் தாக்கப்பட்டு இறந்தவர்கள் போன்வை முக்கியக் காரணங்களாக உள்ளன. பேறுகாலத்தில் இறந்தவர்களுக்கு எழுப்பப்படும் சுமைதாங்கிக் கற்களும் வழிபாட்டுக்கு உரிய வீட்டுத்தெய்வங்களாகவோ, குலதெய்வங்களாகவோ ஆவது உண்டு.

இவ்விருவரிடமிருந்தும் பெற்ற தகவல்கள், இக்கற்களில் உள்ள நாட்டார் தெய்வ உருவாக்கத்தின் தாக்கத்தை உறுதிசெய்தது. இக்கற்கள் குறித்து பெரியவர் பத்ரே கவுடா அவர்கள் கூறும்போது, ‘‘தங்கள் சமூகத்தின் இரு கூட்டத்தாரிடையே இருந்த பகை காரணமாக, ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரில் சிலரை அவர்கள் எதிர்பாராதபொழுது குத்திச் சாய்க்கின்றனர். இதனைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்டவர்கள் நினைவுக்கு கல்லெழுப்பி அவர்களை ஊரார் வணங்கி வருகின்றனர்’’ என்கிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த இந்நிகழ்வு குறித்து வழிவழியாகச் சொல்லப்பட்டவற்றை நினைவிலிருந்து மீட்டிச் சொல்கிறார். இக்குழுக்களை தற்பொழுது அடையாளம் காண முடியவில்லை. போலவே, நீண்ட சடைமுடி தரிப்பது யார்? ஒரு குழுவா, சமூகத்தில் குறிப்பிட்ட அந்தஸ்து பெற்றவர்களா என்ற கேள்விகளுக்கு திருப்திகரமான விவரங்கள் இல்லை. இந்நிகழ்வைத் தொடர்ந்து ஊரில் பஞ்சம், மழையின்மை போன்றவற்றை இம்மக்கள் சந்திருக்க வேண்டும்; கொலையுண்டவர்களின் ஆவிகளே காரணம் என்ற அச்சமும் எழுந்திருக்க வேண்டும். இதன்காரணமாக, இவர்களின் ஆவிகளைச் சாந்தப்படுத்தவும், தீமைகள் அண்டாதிருக்கவும் இவர்களை வழிபாடு செய்கின்றனர். 

நாட்டார் மரபில், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் அவரை வழிபடுவர்; அவரது ஆன்மா அமைதிகொள்ளவும், பிறவகைகளில் தீமை வழங்காதிருக்கவும் இவ்வழிபாடு அமையும். பின்னர், கொலை செய்தவர்களும் அவரை வழிபடுவர். இப்படி வழிபாடு பெறும் தெய்வம்/தெய்வங்கள், படிப்படியாக பிற குழுவினர் சாதியினர், பிற குடும்பத்தினர் ஆகியோரும் வழிபடுவதற்கு உரியதாகும். இதற்கு அந்தத் தெய்வம் பற்றிய நம்பிக்கை, பயம் ஆகியவை முக்கியக் காரணிகளாகும். அத்தெய்வம் பற்றி பரவும் செய்திகள், அதன் நிலைபெறுதலுக்கு காரணமாகும். இதற்கேற்ப, ‘‘இந்நடுகல் வழிபாட்டில் குறும்பர்களோடு, ஒக்கலிக்க சமூகத்தினரும் தவறாது பங்கேற்கின்றனர்’’ என்பது இங்கு பெறப்பட்ட கூடுதல் செய்தி. இது, பலசமூகங்கள் வணங்கும் தெய்வமாக இத்தெய்வங்கள் நிலை பெற்றதைக் காட்டுகிறது. 

தென் தமிழகத்தில் இவ்வாறு உருவாகும் நாட்டார் வகைத் தெய்வங்கள், பெண் தெய்வமாயின் இசக்கி அம்மன் ஆகிறார். ஆண் தெய்வமாயின், மாடன், பாட்டன், சாமி முதலிய பின்னொட்டுகள் கொண்ட பெயர்களுடன் வழிபடப்படுகிறார். தமிழகத்தின் வடபகுதியில் இவ்வகைத் தெய்வங்கள் நடுகல் தெய்வங்களாக வெளிப்படுகின்றன. இவர்களில் சில தனிப்பெயர்களைக் கொண்டுள்ளனர். வேடியப்பன் என்பது பொதுப்பெயராக உள்ளது. நடுகல் பெண் தெய்வங்கள் தனிப்பெயர் கொண்டுள்ளதை அறியமுடியவில்லை. சதி தெய்வங்கள் சூட்டிக்கொள்ளும் பெயர்களான வீராயி, வீரமாத்தி பெயர்களைச் சிலர் குறிப்பிட்டனர். இது இப்பகுதியில் பரவலாக வழக்கிலுள்ள, விரும்பப்படும் பெயர்களாகும். இப்பெயர்கள் பண்புப் பெயர்கள் நிலையில் இருந்து பெண் தெய்வம் என்ற சுட்டுப்பொருளாகி இருப்பதை இவ்விடங்களில் காண்கிறேன். 

நெல்லூர் – (பர்கூர்) கொலையுண்டு நடுகலான தெய்வங்களுக்கு தனிப்பெயர் இல்லை. விஜயநகர கலைப்பாணியில் அமைந்துள்ள இதன் காலத்தை பொ.ஆ. 1500 அளவில் கணிக்கலாம். அதாவது, இக்கல் இன்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகலாம்.

சடைசாமி 

இவ்விரு சிற்பங்களில் மேலடுக்கில் உள்ளவர்கள் மற்றும் முதல் நடுகல்லில் கீழடுக்கில் கொல்லப்படுபவரின் நீண்ட சடைமுடி தலையலங்காரம் எதன் அடையாளம் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது. ‘‘அந்தியூர், மூலக்கடையில் உள்ள ஒரு கோயிலை சடைசாமி கோயில் என்று அழைக்கிறோம் என்றும் அக்கோயிலின் நடுகல் சிற்பம் இம்மாதரியான நீண்ட சடைமுடி கொண்டவரது உருவமே’’ என்ற தகவலைத் தந்தார் மீனாட்சி. இது, இம்மக்களின் மூதாதையரின் ஒரு உருவம் இவ்வாறு காட்டப்படுகிறது என்பதற்குச் சான்றாக விளங்குகிறது. 

தகடூர்ப் பகுதியில் இம்மாதிரியான நீண்ட சடை அலங்காரம் கொண்டவர்களின் பல கற்களைக் காணமுடிகிறது. இங்கு இவ்வலங்காரம் கொண்டவர்கள் வெவ்வேறான சித்தரிப்புகளில் காட்டப்பட்டுள்ளனர். பாரூரில் மகுடத்தை நெஞ்சில் அணைத்து வாசிப்பவர் போல் ஒருவரும்; நீண்ட தடியை இடது கையிலும் வாளை வலது கையில் கொண்டவராக மற்றொருவரும் உள்ளனர். காரியமங்கலத்தில் உள்ள ஒருவர் சாட்டையை கொண்டவராகவும், மற்றொருவர் இரு கைகளிலும் நீண்ட குச்சி அல்லது மூங்கில்களைக் கொண்டவராகவும், தோளில் புரளும் சாட்டையைக் கொண்டவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதை இங்கு குறிப்பிடலாம். 

மகுடம், இம்மக்களின் பண்பாட்டில் தவிர்க்கமுடியாத இசைக்கருவி. மகுடம் பெரும்பான்மையோரால் ‘‘தப்பு’’, ‘‘தப்பட்டை’’ என்ற பெயர்களால் தவறாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. மகுடம் என்பது மார்போடு அணைத்து இரு கைவிரல்களாலும் தட்டி இசை ஒலிக்கச்செய்யும் கருவியாகும். தப்பு, தப்பட்டை என்பது இரு குச்சிகள் கொண்டு கருவியில் தட்டி இசை எழுப்பும் கருவியாகும். பேய், பிசாசு பிடிக்காதிருக்கவும், நோய் நீங்கவும் சாட்டை அடிக்கும் சடக்கு இம்மக்களால் மேற்கொள்ளப்படுகிறது. விழாக்களின்பொழுது இச்சாட்டையடி சடங்கு நிகழ்த்தப்படுகிறது. குலத்தலைவர்களே சாட்டையை எடுத்து அடிப்பர். இச்சாட்டைகளை வேறு யாரும் தொடுவதில்லை. சாட்டையடிக்க உரிமையுடைவர் மட்டுமே கையாள்வர். இந்த விலக்கு (taboo) நம்பிக்கை எழுதப்படாத சட்டமாக இம்மக்களிடையே உள்ளது. இதனால், இசைக்கருவிகள், சாட்டை போன்ற புனிதப் பொருட்கள் கொண்டவர்கள், அல்லது குலத்தலைவர்கள் இவ்வாறான நீண்ட தலைமுடி அலங்காரத்தில் காட்டப்படுவர் என்ற முடிவுக்கு வர இயலாது. இக்குழுவினரில் ஒரு பிரிவினர் நீண்ட தலையலங்காரம் தரித்தவர்களாக இருந்திருக்க வேண்டும். அவர்களின் மூதாதையர் ஒருவரின் கோயிலே அந்தியூர் மூலக்கடையில் உள்ளதாகும். தகடூர்ப் பகுதியில் காண்படும் கற்கள், அவர்களுள் பலவித பண்பாட்டு அடையாளங்களை விளக்குவதாக அமையும் கற்கள் எனலாம். 

இந்நடுகற்கள் தரும் செய்தி

இந்த இரு நடுகற்களும் ஒரே செய்தியை வழங்குகின்றன. பகை, விரோதம் காரணமாக ஒரு குழுவைச் சார்ந்தவர்கள் (கொண்டை தரித்தவர்கள்) மற்றொரு குழுவைச் சார்ந்தவர்களை (நீண்ட சடை தரித்தவர்கள்) ஆண்-பெண் பாரபட்சம் பார்க்காமல் குத்திச் சாய்க்கின்றனர். முதல் கல்லில் மூவர் சேர்ந்து ஒரு ஆண்-பெண் இணையை குத்திச் சாய்க்கின்றனர். இரண்டாவது கல்லில், ஒருவர் மற்றொரு குழுவைச் சார்ந்த பெண் (?) ஒருவரை குத்திச் சாய்க்கிறார். இவர்களது மரணம், இவர்களது குல மூதாதையரால் ஆசிர்வதிக்கப்படும்விதமான கிலுக்கட்டை இசைத்து வணங்கப்படுகிறது. 

துவக்கத்தில், இக்கல் கொலையுண்டவர்களின் சந்ததிகளாலும், அவர்களது குழுவினராலும் வணங்கப்பட்டது. பின்னர் கொலையுண்டவர்களின் மீதான அச்சத்தால், கொலை செய்தவரின் குழுவினரும் வணங்கத் தலைப்பட்டனர். இக்கல் தெய்வங்களை வணங்குவதால், பஞ்சம், வறட்சி நீங்குகிறது என்ற நம்பிக்கை உருவானது. நாளடைவில், இந்நடுகல் குறும்பர் குடியினர் மட்டுமல்லாது ஒக்கலிக்கர் சமூகமும் வணங்கும் ஊர்த்தெய்வமானது. 

- த. பார்த்திபன் (தொடர்புக்கு: thagadoorparthiban@gmail.com)

]]>
நடுகல், நாட்டார் மரபு, பர்கூர் - நெல்லூர், தகடூர் http://www.dinamani.com/tholliyalmani/special-articles/2018/may/21/பர்கூர்---நெல்லூர்-கொலையுண்டு-தெய்வமானவர்-நடுகற்கள்-2924083.html
2912569 தொல்லியல்மணி சிறப்புக் கட்டுரைகள் வீரவழிபாடும் இசையும்: நடுகல் பண்பாட்டுக்குப் புதிய வெளிச்சம் தரும் புலிக்குத்திப்பட்டான் நடுகல் த. பார்த்திபன் Thursday, May 3, 2018 01:12 PM +0530  

ஆலுக்குறும்பா (=தமிழில்: பால் குறும்பா) என்ற முகநூல் பக்கத்தில், கடந்த 2018 மார்ச் 24-ம் தேதி பதிவேற்றியிருந்த புலிக்குத்திப்பட்டான் நடுகல் பற்றிய குறிப்புகள், வீர வழிபாட்டுக்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுவதாக உள்ளது. இது மூதாதையரை வழிபடும் பண்பாட்டில் இசை பெற்றிருந்த முக்கியத்துவத்தையும், அவ்வழிபாட்டின் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் முதல் சான்றாகவும் விளங்குகிறது. இது குறும்பர் சமூகத்தினருக்கு மட்டும் உரிய பண்பாடா அல்லது பிற சமூகங்களும் இவ்வகை வழிபாட்டு மரபுகளைக் கொண்டிருந்தனவா என்ற முடிவுக்கு வர மேலும் சான்றுகள் தேவை. அதேசமயத்தில், இக்குறிப்பிட்ட சான்று குறும்பர் சமூகத்தினருக்கு உரியது. இன்றைய நிலையிலும் அவர்களது வழிபாட்டில் இருப்பது.

(புலிக்குத்திப்பட்டான் நடுகல் முழுத்தோற்றம் (புகைப்படம் நன்றி: ஆலுக்குறும்பா முகநூல் பக்கம்)

உடனடி கவனத்தை ஈர்த்த இந்நடுகல் குறித்து கடந்த சிலநாட்களாக சில செய்திகளையும், கருத்துப்பதிவுகளையும் காண நேர்ந்தது. குறிப்பாக, வீரன் தேவலோகம் செல்லும் காட்சி; தேவலோகத்துக்கு அழைத்துச்செல்லும் பெண்கள்; காட்சியில் உள்ள அனைவரும் தேவலோகப் பெண்கள் போன்ற சில பதிவுகளை மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இப்பதிவுகள் எதுவும் இந்நடுகல்லின் சிற்ப வெளிப்பாடுகளையும், நுணுக்க விவரங்களையும் கருத்தில் கொள்ளவில்லை. ஆகையால், மூதாதையர் வழிபாட்டில் குறும்பர் பண்பாட்டின் பின்னணிகளைக் கண்டடைய வேண்டிய இடம் அடையமுடியாமல் தவறவிடப்பட்டுள்ளது. மேலும், இதில் கல்வெட்டுப்பொறிப்பு இல்லை என்பதால், நடுகல் தெரிவிக்கும் செய்தி மற்றும் காலம் குறித்த விவரங்களை நேரடியாக அறியமுடியாது உள்ளது. இதன் காரணமாக, சிற்ப வெளிப்பாட்டையும், சிற்ப அமைதியைக்கொண்டே நடுகல்லின் உள்ளார்ந்த பொருள் மற்றும் காலம் பற்றிய முடிவுகளுக்கு வரவேண்டி உள்ளது. இப்பின்னணியில், இந்நடுகல்லை விரிவாகவும் நுணுக்கமாகவும் பார்க்கவேண்டி உள்ளது.

புலிக்குத்திப்பட்டான் / விண்ணுலகம் / தேவலோகப் பெண்கள் பொது சிற்பக்காட்சி

புலிக்குத்திப்பட்டான் வகை நடுகற்களின் பொதுவான சிற்பக்காட்சிக்கும், தேவலோகப் பெண்கள், சுவர்க்கம், கைலாயம், சமயச் சின்னங்கள் முதலியவை இடம்பெறும் சிற்பக்காட்சிகளுக்கும், இந்நடுகல்லின் சிற்பக்காட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம்தான் இந்த நடுகல்லை அரிய ஒன்றாக்கியுள்ளது. நடுகல் வழிபாட்டில் இசை பெற்றிருந்த சிறப்பான இடத்தை அறியச்செய்யும் தொல்பொருள் சான்றாகவுள்ள இது, அக்காலப் பண்பாட்டின் நிகழ்வுகளை எழுதிச்செல்கிறது. நடுகல் வழிபாட்டில் புதிய வெளிச்சம் பாய்ச்சி, இலக்கியங்கள் இலக்கணங்கள் வழி அறியப்படாத செய்திகளைப் புலப்படுத்துகிறது.

புலிக்குத்திப்பட்டான் வகை நடுகல்லின் பொது சிற்ப அமைதியாக, கீழ்க்கண்ட ஐந்து வகைகளில் காணலாம்.

சிற்ப அமைதி 1

புலியுடன் வீரன் போரிடும் காட்சி - வீரன் கைகளில் வில் அல்லது வாள், குறுவாள் அல்லது ஈட்டி போன்ற ஆயுதங்கள் கொண்டிருக்கும். பொதுவாக, வீரனின் ஒரு கரம் ஈட்டி அல்லது வில்லை கொண்டிருக்க, மற்றொரு கரம் குறுவாளை உயர்த்தியபடி விலங்கினைத் தாக்கும் வாக்கில் இருக்கும். சமயங்களில், வீரன் குறுவாளை விலங்கின் வாயிலோ, மார்பிலோ, கழுத்திலோ ஆழமாகப் பாய்ச்சிய காட்சியாகவும் சித்தரிக்கப்படும். போலவே, ஈட்டி அல்லது அம்பு விலங்கின் உடலில் தைத்திருக்க, அந்த விலங்கின் முன்னங்கால் அல்லது வாய்ப்பகுதி வீரனை தாக்கிய காட்சி இடம்பெறும். இக்காட்சிகளுடன் மதுக்குடம், மற்றும் மங்களச் சின்னங்கள் காட்டப்படும்.

சிற்ப அமைதி 2

வீரனுடன், மேலே குறிப்பிட்ட காட்சிகளுடன் வீரனின் மனைவி அல்லது மனைவியர், மதுக்குடம் அல்லது பானைகள் சுமந்து வருவது போன்று காட்டப்படுவர். இது அவனது மனைவி/மனைவியர் வீரனுக்கு கல்லெழுப்பி படையல் செய்து வணங்கிய காட்சியைச் சித்தரிப்பதாகும். மதுக்குடம், பானையைச் சுமந்துவரும் பெண்களைச் சதிக்கு ஆட்படுத்திக் கொண்டவர்களாகக் கருதும் போக்கு நிலவுகிறது. சதி முத்திரைகளோ; சின்னங்களோ, சதி குறியீட்டுப் பொருட்களோ காட்டப்படவில்லை எனில், அது சதியாக இருக்க வாய்ப்பில்லை. அது பொது வரையறையும் இல்லை.

சிற்ப அமைதி 3

சதியோடு இணைந்த நடுகல் ஆயின், மேற்கண்ட காட்சிகளோடு ஒரு பெண் சதியைக் குறிப்பிடும் பொருட்களை ஏந்தியும் அல்லது குறிகளை சுட்டும் முத்திரைகளைக் காட்டியும் சித்தரிக்கப்படுவாள்.

சிற்ப அமைதி 4

வீரனுக்குத் துணையாக, வேட்டைக்கு உதவும் விலங்கு குறிப்பாக நாய் காட்சிப்படுத்தப்படும். காட்டு விலங்கு மீது நாய் பாய்வது போன்றோ, அதனை தாக்கி கடித்து இழுப்பது போன்றோ அல்லது வீரனுக்கு அருகில் இருப்பது போன்றோ காட்டப்படும்.

சிற்ப அமைதி 5

வீரன், வீர சுவர்க்கம் அல்லது தேவலோகம் அல்லது சிவலோகம் அல்லது வைகுந்தம் அடைந்தான் என்பதனைச் சுட்டும் விதமாக, ஒன்று அல்லது இரு தேவலோகப் பெண்கள் அல்லது, இந்திரலோகப் பெண்கள் அல்லது தேவதைகள் வீரனை, சதிக்கு உட்பட்ட பெண்ணை அழைத்துச்செல்வது போன்றோ, அந்தரத்தில் நிற்பது போன்றோ, பறந்து செல்வது போன்றே காட்சிப்படுத்தப்படுவர். அந்நிலையில் லிங்கம், நந்தி, நாமம், வேல், சூலம், விஷ்ணு போன்ற சமயச் சின்னங்கள் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோ இடம் பெறும். இவற்றுடன், சமயங்களில் சூரியன், பிறைசந்திரன் உருவங்களும் இடம் பெறும்.

இக்காட்சிகள், வீரனைச் சுற்றியோ அல்லது அடுக்குக் காட்சியாகவோ அமைக்கப்படும். அடுக்குக்காட்சி எனில், கீழ் அடுக்கில் வீரன் விலங்குடன் போர் புரியும் காட்சியும், வேட்டைக்கு நாய் உதவியிருப்பின் அதன் காட்சியும், சதி பெண்ணும் காட்டப்படுவர். இதற்கு மேலே அமைக்கப்படும் இரண்டாம் அடுக்கில், வீரனை தேவலோகப் பெண்கள் அல்லது தேவதைகள் அழைத்துச்செல்லும் காட்சி இடம் பெறும். இதற்கு மேல் அமையும் மூன்றாம் அடுக்கில் சமயச் சின்னங்கள் இடம் பெறும். இது, வீரன் அவன் சார்ந்த சமயம் அல்லது மேலுலகு சென்று இறைவனடி சேர்ந்தான் என்பதை மறைபொருளாக உணர்த்துவதாக அமையும். இதே வரிசையில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறிப்பாக, இரண்டாம் மூன்றாம் அடுக்குக் காட்சிகள் மாறியும் கூடுதல் விவரங்களுடனும் அமையலாம். சில நடுகற்கள் 5 அடுக்கு வரை சிற்பக் காட்சிகள் விவரிக்கப்பட்டுக் கிடைக்கின்றன. மேலும் கூடுதலான அடுக்குக் கொண்ட கற்களும் அரிதாகக் கிடைத்துவருகின்றன.

மேலே விவரிக்கப்பட்ட சிற்ப அமைதிகள் புலிக்குத்திப்பட்டான் கல்லுக்கு மட்டும் பொருந்துபவை அல்ல. வீரன் எவ்வகையில் மாய்ந்திருந்தாலும், அவன் சார்ந்த சமூகத்தின் நம்பிக்கையின் அடிப்படையில் தேவலோகம், சுவர்க்கம், வைகுந்தம், கைலாயம் சென்றடைந்தான் என்ற காட்சியை விவரிக்கும் எந்த ஒரு நடுகல்லுக்கும் இது பொருந்தும். 

நீலகிரி - குன்னூர் புலிக்குத்திப்பட்டான் கல்

இந்த நடுகல் இருக்கும் இடம் பற்றி அறியமுடியவில்லை. புகைப்படத்தைப் பதிவேற்றிய ஆலுக்குறும்பா, இதன் இடம் நீலகிரி - குன்னூருக்கு அருகில் என்ற விவரத்தை மட்டும் தந்துள்ளனர். குறிப்பான இடம் பற்றி மெளனம் காப்பதாகத் தெரிகிறது. இந்த நடுகல்லில் வீரன் ஒருவன், ஆடு ஒன்று, புலி ஒன்று, இரு பெண்கள் மற்றும் ஆறு ஆண் உருவங்கள் என 11 உருவங்கள் இடம்பெற்றுள்ளன. வீரன், நடுநாயகமாக மிகப் பெரியதாக காட்டப்பட்டுள்ளான். வீரன், புலியின் மார்பில் ஈட்டி போன்ற ஒரு நீண்ட ஆயுதத்தைப் பாய்ச்சியுள்ளான். வீரனின் ஈட்டியின் மேல் பகுதியும் கூர்முனை கொண்டுள்ளது. வீரனின் இடது தொடையில் புலியில் கால் ஆழப் பதிந்துள்ளது. வீரனுக்கு வலதுபுறம் ஆடு ஒன்று காட்டப்பட்டுள்ளது. இம்மூன்று சிற்பங்களும், ஆட்டைத் தாக்கவந்த புலியைத் தாக்கி தானும் மாய்ந்த வீரன் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் என்ற செய்தியை வழங்குகிறது. சுற்றிலும் காட்டப்பட்டுள்ள ஆண் பெண் உருவங்கள், திருச் சின்னம், கோயில் பூசைமணி, சங்கு, கிலுக்கட்டை, கிணைப்பறை போன்ற இசைக் கருவிகளைக் கொண்டவர்களாக உள்ளனர். இக்காட்சிகளைக் கொண்டு பார்க்கும்பொழுது, புலியைக் கொன்று தானும் மாய்ந்த வீரனுக்கு அவனது குடும்பத்தினர் அல்லது ஊரார் வழிபாடு செய்யும் நிகழ்வைப் பதிவுசெய்த அரிய நடுகல்லாக இது விளங்குகிறது.

இங்குக் குறிப்பிட்டுள்ள கருவிகளின் வரிசையில் “திருச்சின்னம்” மற்றும் “கிணைப்பறை” குறித்து சில விளக்கங்களைக் கண்ட பிறகு இந்நடுகல்லின் சித்தரிப்புக்கு வருவோம்.

திருச்சின்னம்

திருச்சின்னம் இசைக் கருவி, தமிழர் பண்பாட்டில் கோவில் வழிபாடு, உற்சவ நிகழ்ச்சிகளில் முக்கிய இடம் பெறும் ஒன்றாகும். அரிய வகை இந்த இசைக் கருவி எக்காளம், தாரை போன்ற இசைக் கருவிகளின் வரிசையில் இடம் பெறும் ஒன்றாகும். தோற்றத்தில் எக்காளமோ, தாரையோ என்று மயக்கம் தருவதாகும். “ஓம்…” என்று ஒலி முகிழும் இசைக் கருவியாகவும், கோவில்களில் வாசிக்கப்படும் 18 வகை இசைக் கருவிகளில் ஒன்றாகவும், வழிபாட்டுச் சடங்கோடு தொடர்புடைய ஒரு இசைக் கருவி என்றும் திருச்சின்னம் விளக்கப்பெறும். நுட்பமான இந்த ஊதுகருவி உருவம் அனசு மற்றும் உலவுடன் கூடிய இரண்டு நீளமான பித்தளைக் குழல்களால் ஆனது. இது, குவிந்து கூர்ந்து இருக்கும் அனசுமுகப்பு இரண்டையும் ஒரு சேர வாயில் வைத்து ஊதும் கருவியாகும். மிகுந்த பயிற்சியும் வலுவும் உள்ளவர்கள் மட்டுமே இதனை இசைக்கமுடியும். இறைவன் திருவீதியுலாப் புறப்பாடு, மங்கள ஆரத்தியை அறிவிப்பதற்காக திருச்சின்னம் இசைக்கப்படுவது மரபாகும். மது எடுப்பு, குதிரை எடுப்பு ஊர்வலங்களிலும் இக்கருவி இசைக்கப்படும். “திருச்சீரணம்”, “திருச்சூரணம்” என்ற பெயர்களாலும் இது அழைக்கப்பெறுவது உண்டு. “தாரை”, “தப்பட்டை”, ‘‘நமரி”, ‘‘எக்காளம்” ஆகியவற்றுடன் திருச்சின்னம் சேர்த்து கிராமிய பஞ்ச இசைக் கருவிகள் எனக் குறிக்கப்பெறும். (P. Sambamurthy, Catalogue of Musical Instruments Exhibited in the Government Museum, Chennai, 1998 & வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள், பிளாக்ஹோல் மீடியா, சென்னை, 2011).

நீலகிரி நடுகல்லில் உள்ள இந்த இசைக்கருவி திருச்சின்னம் என்ற முடிவுக்கு வரும்முன், “ஆயர் குழல்” (Shepherd Flute or cowherd Flute) வகையினமாக இருக்குமோ என ஐயம் கொண்டேன். ஆயர் குழல் ஒன்று சென்னை அரும்பொருட்காட்சியகத்தில் உள்ளது. (P. Sambamurthy, Ibid.,) ஆயர் குழலானது புல்லாங்குழலின் நீளத்தைவிட அளவு சிறுத்தது. ஆனால், குழலின் விட்டத்திலும் தடிமனில் பெரியது. ஊதும் அனசு முகப்பும், காற்று வெளியேறும் உலவு முகப்பும் சம விட்டம் கொண்டவை. ஆனால், இந்நடுகல்லில் உள்ள கருவியில் அனசு முகப்பு சிறுத்தும் உலவு முகப்பு பெருத்தும் உள்ளது. மேலும் புல்லாங்குழல் அல்லது ஆயர் குழல் கருவியை ஒரு குழல் கொண்டு மட்டும்தான் வாசிப்பர். திருச்சின்னம் மட்டுமே இரண்டு கருவிகளை ஒரு சேர வாயில் வைத்து வாசிக்கப்படும் சின்னமாகும். இங்கு இக்கருவி வாசிக்கும் தோற்றத்தில் இல்லை என்றாலும், இரு கருவிகளும் மத்தியில் அவற்றை பிணைக்கும் தாம்புகளும், அதனை அலங்கரிக்கும் குஞ்சங்களும் காட்டப்பட்டுள்ளன. திருச்சின்னம் கருவியோடு நான் பார்க்கும் இரண்டாம் நடுகல் இது. இரண்டையும் ஒப்பிடும்பொழுது, திருச்சின்னமும் பலவகை தடிமன் கொண்ட கருவியாகவும் மரம், உலோகம் ஆகியவை கொண்டும் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன என முடிவுக்கு வரமுடிகிறது.

கிணைப்பறை

இக்கருவியை “சிறுபறை” வகையினமாக முதலில் கருதினேன். ஆனால், திருச்சின்னத்தோடு இணைத்து வாசிக்கும் கருவிகளில் ஒன்றாக கிணைப்பறையைச் சுட்டுவார் மு. அருணாசலம். அதே சமயத்தில், இலக்கியங்களில் சுட்டப்படும் கிணைப்பறையின் உருவம் எப்படி இருக்கும் எனத் தெரியாது என்பார். (தமிழ் இசை இலக்கண வரலாறு, 2009, கடவு பதிப்பகம், சென்னை, ப.164) கிணைப்பறையும் தடாரிப்பறையும் ஒன்றா அல்லது வேறுவேறானதா என கேள்விக்கு, இரு கருவிகளில் இருந்தும் கிடைக்கும் ஒலி ஒன்றாக இருப்பதால் வேற்றுமையினைக் காண முடியவில்லை என்கிறார் மு. வளர்மதி. இவர். தடாரி மற்றும் கிணைப்பறைகளின் வரைபடத்தை அளித்துள்ளார். (பறை இசைக்கருவி – ஓர் ஆய்வு, திருமகள் நிலையம், சென்னை, 1999, பக். 42-47). கிணைப்பறை சிறு குச்சியைக்கொண்டு அடிக்கும் கருவியாகும். நடுகல்லில் இக்கருவியை வாசிப்பதாகச் சித்தரிக்கப்படும் ஆண் உருவம் கையில் சிறு குச்சியை பிடித்திருப்பது கவனிக்கத்தக்கது. பறை இசைக்கருவியை எந்த லாகவத்திலும் பிடித்தும் உடல் பிடிமானத்தில் வைத்தும் அடித்து இசை எழுப்பலாம். இந்த வகையில், அமர்ந்த நிலை வாசிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ள உருவம், தனது இடது கையில் கருவியை ஏந்தி தன் தொடையை பிடிமானமாகக் கொண்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.

நீலகிரி புலிகுத்திப்பட்டான் நடுகல் சித்தரிப்புகள்

இந்நடுகல்லில் மையமாக உள்ள வீரன், எளிமையான இடையாடையுடன் கைகளிலும் காலிலும் காப்பு பூட்டியுள்ளான். வட்டமான முகத்தில் நீண்டு தொங்கும் காதுகளில் வட்டக் குண்டலமும் (விருத்த குண்டலம்) மார்பில் சவடி போன்ற தட்டையான ஆபரணமும் அலங்கரிக்கிறது. தலையைச் சுற்றி வட்டமாகவும், வலது புற வளைவும் முடிவில் குண்டுமுடிச்சும் கொண்ட தலைப்பாகை அணிந்துள்ளான். இடையில் இடைவாள் உறையோடு காட்டப்பட்டுள்ளது. வீரன் இடதுகாலை மடக்கி இடதுபுறமாக சாய்ந்து தன் முழு உடல்வலுவோடு ஈட்டியை புலியின் மார்பில் மேலிருந்து கீழாகச் சொருகுவதாக காட்டப்பட்டுள்ளான்.

(வீரனின் வலது புறக்காட்சி)

வீரனின் வலது புறக்காட்சியில், இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் காட்டப்பட்டுள்ளனர். வலது புறத்தில் உள்ள முதல் ஆண் திருச்சின்னம் என்ற இசைக்கருவியை பிடித்தபடி உள்ளான். வலது புற நடுவில் உள்ள ஆண், வலது கரத்தில் பூசைமணியூம், இடது கரத்தில் சங்கும் ஏந்தியுள்ளான். மூன்றாவதாக உள்ள பெண், வலது கரத்தில் கிலுக்கடையும் பூசைமணியும், இடது கரத்தில் கிலுக்கட்டையும் பிடித்தபடி காட்டப்பட்டுள்ளாள்.

(வீரனுக்கு வலது புற மேற்புற காட்சிகள்)

வீரனுக்கு மேலே மூன்று ஆண் உருவங்கள் இடம் பெற்றுள்ளன. நடுவில் உள்ள ஆண் சம்மணம் இட்டு அமர்ந்துள்ளான். இச்சித்தரிப்பு, தலைவன் அல்லது குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற நிலையினைச் சுட்டுவதாக உள்ளது. பக்கத்துக்கு ஒருவராக ஒரு காலை மடக்கியும், ஒரு காலை தொங்கவிட்டும் உள்ளவர்களாக இருவர் காட்டப்படுள்ளனர். நடுவில் உள்ளவர் கிணைப்பறை என்ற சிறிய வகை பறைக்கருவியை இடது வலதுகரத்தில் ஏந்தியும், அதை இசைக்கும் சிறு குச்சியை வலதுகரத்தில் பிடித்தவாறும் காட்டப்படுள்ளார். இருபுறமும் உள்ளவர்கள், ஒரு கையில் கிலுக்கட்டையை உயர்த்திப்பிடித்து இசைப்பவர்களாகக் சுட்டப்பட்டுள்ளனர். மற்றொரு கரத்தில் இன்னதென்று அறியமுடியாத இசைக்கருவியைக் கொண்டுள்ளனர்.

வீரனின் வலது புறத்தில் ஆண் உருவம் ஒன்றும் பெண் உருவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளன. இவ்விரு உருவங்களின் கரங்களும், இன்னதென்று விளங்கிக்கொள்ள முடியாத பொருட்களைக் கொண்டுள்ளன. அவை சிறியதாகவும், பிற சித்தரிப்புகளில் மறைந்துள்ளதாகத் தோன்றுகிறது. இவையும் இசைக் கருவிகளாக இருக்க வாய்ப்பு உண்டு. எல்லா ஆண், பெண் உருவங்களும் தலைப்பாகை அணிந்துள்ளனர். பெண் உருவங்கள் இரண்டிலும் கொண்டை பெரியதாகக் காட்டப்பட்டுள்ளது. நீண்டு தொங்கும் காதுகளில் வட்டக் குண்டலங்கள் பூட்டப்பட்டுள்ளன. எல்லா உருவங்களின் உடலசைவும், அவரவர் இசையின் இலயத்தோடு இணைந்ததாக உள்ளது.

இச்சிற்பத்தில் தேவமாதர்களோ, தேவலோகமோ, சுவர்க்கமோ, வைகுந்தமே, கைலாயமோ, மதச் சின்னங்களோ, இறையுருக்களோ, இறையுருக்களின் குறியீடுகளோ என்று குறிப்பிடும்படி ஏதுவும் இடம் பெறவில்லை. ஆகையால், முகநூலில் பதிவான வீரன் தேவலோகம் செல்லும் காட்சி, தேவதைப் பெண்கள் போன்ற செய்திகளுக்குப் போதிய சான்று இச்சிற்பங்களின் வெளிப்பாட்டில் இல்லை.

காலம்

சிற்பங்களின் உருவ அமைதியும், சிறிதே பருத்த உடல்வாகும், அணிமணிகளின் அலங்காரமும், இதனை 13-ஆம் நூற்றாண்டுக்கு உரியதாகவும், வட்டமுகமும் தலைப்பாகை அலங்காரமும் பேசளர்களின் கலைநயத்தின் சாயலை ஏற்றுக்கொண்டுள்ளன எனக் கருத இடமளிக்கின்றன.

நடுகல் காட்சிகளின் பொருள்

ஆடுகளைத் தாக்க வந்த புலியைக் கொன்று தானும் வீழ்ந்த வீரனை, சுற்றமும் ஊராரும் பல்வகை இசைக்கருவிகள் முழக்கி வழிபடுகின்றனர்.

(அதே நடுகல், வண்ணம் மாற்றப்பட்டது. இசைக்கருவிகள் நன்கு துலக்கமாகின்றன).

- த. பார்த்திபன்

(தொடர்புக்கு - thagadoorparthiban@gmail.com)

]]>
http://www.dinamani.com/tholliyalmani/special-articles/2018/may/03/வீரவழிபாடும்-இசையும்-நடுகல்-பண்பாட்டுக்குப்-புதிய-வெளிச்சம்-தரும்-புலிக்குத்திப்பட்டான்-நடுகல்-2912569.html