Dinamani - ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் - http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2691411 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் குமட்டல், வாய்க் கசப்புக்கு எளிய வைத்தியம்! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Friday, April 28, 2017 10:57 AM +0530 எனக்கு காலையில் எழுந்ததும் வாயில் அதிக உமிழ் நீர் ஊறுகிறது. குமட்டிக் கொண்டு வாந்தியாகிறது. வாய் கசக்கிறது. ஆனால் செரிமான குறைவோ தூக்க குறைவோ கிடையாது. இது எதனால்? இதை எப்படிக் குணப்படுத்துவது?

 -ராஜேந்திரன், சென்னை.

இரவில் தேங்காய், கொத்தவரங்காய், காராமணி, மொச்சைக் கொட்டை, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்யில் தயாரித்த நேந்திரங்காய் வறுவல் போன்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இவை அனைத்தும் வயிற்றில் பித்த ஊறலை அதிகப்படுத்துபவை. உணவைச் செரிமானம் செய்யும் வயிற்றுப்பகுதியில் ஊறும் பித்தம், தன்குணங்களாகிய சிறு நெய்ப்பு, ஊடுருவும் தன்மை, சூடு, லேசு, துர்நாற்றம், கழிச்சல், நீர்த்தன்மை ஆகியவை அதிகமாகும் நிலையில், பித்தத்தை வெளியே வாய் வழியாகத் தள்ளுகிறது. புளிப்புத் தன்மை வாயில் அதிகம் தென்பட்டால் அது கட்டாயமாக ஜீரணக் குறைவுதான் என்று சொல்லிவிடலாம். கசப்புத்தன்மை தோன்றினால் பித்தம் - ரத்தத்துடன் கலந்து சுற்றிவருவதால் ஏற்படும் நிலை என்று அறியலாம்.

 சுமார் 150 கிராம் இஞ்சியை தோல் சீவி, அரைத்து, 600 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு வடிகட்டிக் கொள்ளவும். வடிக்கட்டியதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது நேரம் வைத்திருக்கவும். பாத்திரத்தின் அடியில் சுண்ணாம்பு போன்று தங்கும் பகுதியை நீக்குவதற்கு மேலேயுள்ள தெளிவான நீரை வடிகட்டி (சுமார் 400 மி.லி. இருந்தால் போதும்) அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு 800 மி.லி. கலந்து, 600 கிராம் சர்க்கரை சேர்த்துக் கரைத்து வடிகட்டவும். அதை அடுப்பிலேற்றி சிறுதீயில் காய்ச்சினால் அது சுண்டி ஒரு சிரப் போல ஆகிவிடும். காலையில் எழுந்தவுடன் ஏற்படும் பித்தக் குமட்டல், வாய்க் கசப்பு உள்ள போது, ஒன்றிரண்டு டீ ஸ்பூன் (சுமார் 10 மி.லி. அளவு) நாக்கில் விட்டுக் கொண்டு மெதுவாகச் சுவைத்து விழுங்கினால், பித்தத்தைக் குறைத்து வாந்தியை நிறுத்தும். வாய் கொப்பளித்து அழுக்கை அகற்றிய பிறகு, இதைச் சாப்பிடுவது நல்லது. ஐந்து மில்லி லிட்டர் சிரப்பை (1ஸ்பூன்), 30 மி.லி. தண்ணீரில் கரைத்துச் சாப்பிட்டால் , உணவின் குணக் கெடுதியால் ஏற்படும் பித்த சீற்றம் நன்றாகக் குறைந்துவிடும். அஜீரணமோ வாந்தியோ வரவே வராது.

கிராமங்களில் அந்தக் காலங்களில் செய்யும் எளிய  வேறு ஒருவகை கை வைத்திய முறை: 

 60 கிராம் சீரகத்தை ஒரு பீங்கான் கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். சீரகம் நன்றாக மூழ்குமளவு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு வெய்யிலில் காய வைக்கவும். ஒன்றிரண்டு நாட்களில் சாறு நன்றாகச் சுண்டிவிடும். வேண்டுமானால் மறுபடியும் சாறு பிழிந்து வெய்யிலில் காய வைத்து நன்றாக காய்ந்து போன சீரகத்தை, கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தவும். பலமான கல்யாணச் சாப்பாட்டிற்குப் பிறகும் சாப்பிட்டது செரிக்காமல்  நெடுநேரம் வரையில் நெஞ்சைக்குத்தியும்- எதுக்களித்துக் கொண்டும் இருக்கும் நிலையிலும், நீங்கள் குறிப்பிடும் குமட்டல், வாந்தியிலும் இந்த சீரகத்தை ஒன்றிரண்டு சிட்டிகை வாயிலிட்டுக் கொண்டு சிறிது சிறிதாக நெடுநேரம் சுவைத்தபடி கடித்து விழுங்கினால் நல்ல பலனை அளிக்கும். 

ஆயுர்வேத மருந்துகளாகிய தாளீசபத்ராதி சூரணம் அல்லது கற்பூராதி சூரணத்தையோ பத்து கிராம் எடுத்து 20 மில்லி லிட்டர் தேன் குழைத்து சிறிது சிறிதாக விரலால் தொட்டு நாக்கில் தடவிக் கொண்டு இருந்தால், மருந்தின் சுவையும் மணமும் தொடர்ந்து நாக்கிலும், தொண்டையிலும் இருக்கும். வாந்தி நின்றுவிடும். செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு, செரிமானமும் விரைவில் நன்றாக ஏற்படும்.

நெல்பொரியைத் துணியில் கட்டி, தண்ணீருடன் கொதிக்கவிட்டு, துணியை நடு நடுவே தண்ணீரில் ஆட்டிக் கொண்டே வர, பொரியின் பெரும் பகுதி கரைந்து கஞ்சி போல ஆகிவிடும். துணி மூட்டையை எடுத்துவிட்டு, கஞ்சியுடன் ருசிக்க நெல்லிமுள்ளி அல்லது புளிப்பு மாதுளைச் சாறு சிறிது கலந்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து சிறிதாக காலையில் சாப்பிட்டால், வாந்தியுள்ளவருக்கு மருந்துமாகவும், சிறந்த உணவுமாகவும் பயன்படும்.  
 
(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/29/w600X390/Ayurvedic_massage_pune_ayurvedic_massage_in_pune_koregaon_park.jpg http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/apr/27/ayul-kaakum-ayurvedham-2691411.html
2687880 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் குடற்புழுக்களை வெளியேற்ற...! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, April 20, 2017 05:43 PM +0530 என் வயது 73. எனது குடலில் கொக்கிப் புழுக்கள் இருக்குமோ? என்ற சந்தேகம் உள்ளது. குடற்புழுக்களை வெளியேற்ற ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா? ஆங்கில மாத்திரைகள் மூலம் வயிற்றில் உள்ள பூச்சிகளையும், புழுக்களையும் வெளியேற்றச் செய்யும் சிகிச்சை காரணமாக, மனித உடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிர்களும் அழிக்கப்படுகின்றன என்று பிரபல இருதய சிகிச்சை நிபுணர் ஈழ்.ஆ.ங. ஹெக்டே  எழுதிய கட்டுரைகளில் படித்துள்ளேன்.      

    
  - எம். ஜே.ஸ்வாமிநாதன், 
விருகம்பாக்கம், சென்னை-92.

வயிற்றில் கிருமிகள் உள்ளவருக்கு முதலில் குடலில் எண்ணெய்ப் பசையை உருவாக்கும் வகையில் 4-5 நாட்கள் நல்லெண்ணெய்யை சுமார் 15-20 மி.லி. காலை, மாலை பருகச் செய்த பின், உடலில் நன்கு வியர்வை வரும்படியான சிகிச்சையை பிரயோகம் செய்வார்கள். பிறகு வெல்லம், பால், மீன் முதலியவற்றை உணவாக அதிக அளவில் ஏற்க, குடலில் கிருமிகளையும் கபத்தையும் கிளர்ச்சியுறச் செய்து அன்று இரவு சுகமாகச் சென்ற பின், மறுநாள் பகலில் துளசி, வெண்துளசி, கருந்துளசி, காட்டுதுளசி, வாய்விடங்கம், நாயுருவி, எலிச்செவி, சிறுகுமிழ், தூதுவளை, பெரியநாயுருவி, தகரை, சிறுதேக்கு, முல்லைவல்லி, மணத்தக்காளி, கொட்டைக்கரந்தை, எட்டிக்கொட்டை, புல், ஜடாமாஞ்சி ஆகியவற்றை பாதி அளவு நீர் கொண்ட பசு மூத்திரத்தில் போட்டு கஷாயம் செய்து அதனுடன் திப்பிலி, மலங்காரக்காய், வாய்விடங்கம் இவற்றின் கல்கமும், எண்ணெய், ஸர்ஜசஷாரம் ஆகியவற்றையும் கலந்து எனிமா எனப்படும் வஸ்தி செய்வார்கள். அன்றைய தினமே சிவதைக் கல்கத்தை, மலங்காரக்காய், திப்பிலி இவற்றின் கஷாயத்தில் கலந்து உள்ளுக்குக் கொடுத்து வாந்தியும், பேதியும் ஏற்படுமாறு குடலை சுத்தம் செய்துவிடுவர். அதன் பிறகு பஞ்சகோலம் எனப்படும்- திப்பிலி, கண்டந்திப்பிலி, செவ்வியம், கொடிவேலி, சுக்கு ஆகியவை சேர்த்த கஞ்சி முதலிய வரிசையில் உணவு உட்கொள்ள வேண்டும். காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவை உள்ள கஷாயங்களால் உடலை நனைக்க வேண்டும். பசித் தீ நன்றாக உள்ள நிலையில் வாய்விடங்கத் தைலத்தால் வஸ்தி (எனிமா) செய்வது நம் பண்டைய ஆயுர்வேத வைத்ய முறையாகும்.

மோர் சேர்த்து பக்குவம் செய்யப்பட்ட கஞ்சியில் வாய் விடங்கம், திப்பிலி, மிளகு, கண்டந்திப்பிலி, முருங்கை இவற்றின் சூர்ணமும், ஸர்ஜசஷாரமும் கலந்து பருக வேண்டும் அல்லது வாகை, நாயுருவி, மலைவேம்பு, கேமுகப்புல், புரசைவிதை, பொன்னாங்கண்ணி, ஆவில்புங்கு இவற்றுள் ஒன்றின் சாற்றை தேனுடன் கலந்து லேகியமாக உபயோகிக்கலாம். கிருமி நோயாளி, குதிரையின் சாணித்தூளை வாய்விடங்க கஷாயத்திலாவது திரிபலைக் கஷாயத்திலாவது 100 தடவை ஊறவைத்து, தேன் கலந்து லேகியமாக உட்கொள்ள வேண்டும்.

எலிச்செவியனும் செடியின் இலைத் துளிரை நன்கு அரைத்து சிவப்பு அரிசி மாவுடன் கலந்து வடைப் பக்குவம் செய்து உண்டு, முன்குறிப்பிட்ட பஞ்ச கோலம், பஞ்ச லவணம் எனப்படும்- இந்துப்பு, ùஸவர்ச்சல உப்பு, வளையுப்பு, கறியுப்பு, வெடியுப்பு ஆகியவை கலந்த நீர்மோரை உணவிற்குப் பிறகு பருக வேண்டும். கடம்பு, கரிசாலை, நொச்சி இவற்றின் துளிரையும் இவ்வாறே உபயோகிக்கலாம் அல்லது வாய்விடங்கச் சூரணம் கலந்த மாவினால் பணியாரங்கள் தயாரித்து உண்ணலாம்.

குடல்கிருமி நோயாளிகள் பால் வகை, மாமிசவகை, நெய், வெல்லம், தயிர், இலைக்கீரை வகை, புளிப்பு, இனிப்பு ஆகிய சுவையுள்ள பொருட்களை விலக்க வேண்டும்.

தயாரித்து விற்கக்கூடிய மருந்துகளாகிய விழால்வேராதி கஷாயம், திக்தகம் கஷாயம், ஆரக்வதாதி கஷாயம், வில்வாதி குளிகை, மாணிபத்ரம் லேஹ்யம், கிருமிக்னவடி, கிருமிசோதினி மாத்திரை போன்றவை மருந்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட உகந்தவை.

இன்றும் கிராமங்களில் குப்பைமேனி இலைச்சாறு 100 மி.லி. வேப்பெண்ணெய் 5 மி.லி. கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு குடல் கிருமிகளை  அழித்து வெளியேற்றும் சிகிச்சை முறை மிகவும் பிரபலமானது. வேப்பம் இலைக் கொழுந்துடன் ஓமம் அரைத்து காலையில் உணவிற்கு முன் சாப்பிடுவதும் தேவையற்ற கிருமிகளை வெளியேற்றும். 

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2012/9/20/17/w600X390/stomach.jpg http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/apr/20/ayurvedha-dr-swaminathan-2687880.html
2683327 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் வாதரக்தம் எனும் உபாதை! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, April 13, 2017 12:00 AM +0530 என்னுடைய முழங்கால் மூட்டில் வீக்கமும் எரிச்சலும் உள்ளது. தொட்டால் சூடாகவும் வலியும் ஏற்படுகிறது. தாங்கி தாங்கித்தான் நடக்க முடிகிறது. இது எதனால்? இதற்கு மருந்து உள்ளதா?

-தங்கமணி, ஓசூர்.

உணவில் உப்பு, புளிப்பு, காரம் சேர்ந்தவற்றை அதிகம் உண்பதாலும், வினிகர், எண்ணெய் மற்றும் மிகவும் சூடான வீர்யம் கொண்ட ஊறுகாயை அதிக அளவில் சாப்பிடுவதாலும், முன் உண்ட உணவு முழுவதும் செரித்திருக்காத நிலையில், அடுத்த உணவை உண்பதாலும், உட்புற நொதநொதப்பை ஏற்படுத்துவதும், மிகவும் வறண்டதுமாகிய நீர்வாழ் பிராணிகள், எள், புண்ணாக்கு, முள்ளங்கி, கொள்ளு,  உளுந்து, பட்டாணி, இலைக்கறிகாய்கள், மாமிசச்சூப்பு, கரும்புச்சாறு கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகள், தயிர், மிகவும் புளித்துப்போன கள், சாராயம், மோர், ஒவ்வாமை உணவுகள், தன் அளவிற்கு மீறிய உணவு, அடிக்கடி கோபம், பகல் தூக்கம், இரவில் கண்விழித்தல், மிக மென்மையான உடல் அமைப்பு, நேரம் தவறி உண்ணுதல், இயற்கையை மீறிய வாழ்க்கை முறை, உடல் பருமன், சுகமான வாழ்க்கை  போன்ற காரணங்களால் நீங்கள் குறிப்பிடும் வாதரக்தம் எனும் உபாதை, மனிதர்களைத் தாக்கக் கூடும் என்று சரகர் என்ற முனிவரும்,  ஸுஸ்ருதர் எனும் முனிவரும் கூறுகின்றனர்.

மேற்குறிப்பிட்ட உணவு வகைகளால், வயிற்றில் உணவானது புளிப்புடன் கூடிய பதனழிந்த நிலையை அடைந்து, இரத்தத்துடன் அதன் சத்து கலக்கும் போது, இரத்தமும் புளிப்புடன் கூடிய காந்தல் போன்ற நிலையை அடைந்துவிடுகிறது. வாகனங்களில் ஏறி, நின்று கொண்டோ, முட்டியை மடக்கிக் கொண்டோ, வெகுதூரம் பயணம் செய்கையில் இரத்தம் கால் பகுதியில் அதிலும் முக்கியமாக மூட்டுப் பகுதியில் சஞ்சரிக்கும் போது வாயுவுடன் சேர்ந்து, வீக்கம், எரிச்சல், வலி போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. 

வியர்வை அல்லது வியர்வையின்மை, கருமையடைந்த தோல்நிறம், தொடு உணர்ச்சியின்மை, சிறிய அடிபட்டாலும் கடுமையான வலி, பூட்டுகள் கலகலத்துவிடுதல், அலுப்பு, சலிப்பு, நீர்க்கொப்புளம், முட்டி, முட்டியின் கீழ் கெண்டை சதை, தொடை, இடுப்பு, கை-முதுகுப்பகுதி இணைப்பு, பாதம், மூட்டுகள் ஆகிய பகுதிகளில் ஊசியால் குத்துவது போன்ற வலி, துடிப்பு, பிளப்பது போன்ற வலி, கனம், மரத்துப்போகுதல், அரிப்பு, பூட்டுகளில் வலி திடீரென்று தோன்றுவதும், மறைவதும், கருப்பு நிறத்தில் உடலில் வட்ட வட்டமான தடிப்புகள் தோன்றுவதும் இந்த உபாதைக்கான முன் அறிகுறிகளாகும்.

இரத்தம் கெட்டுப்போய் ஏற்பட்ட உபாதை என்பதால், உடலில் நெய்ப்பு தரும் சிகிச்சை முறைகளை முதலில் செய்து, பிறகு சிறிது சிறிதாக, கெட்ட ரத்தத்தை அட்டைப் பூச்சி வைத்து கடிக்க வைத்து வெளியேற்றும் சிகிச்சை முறையை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.   வாயுவின் சீற்றம் அதிகரிக்காத வகையில், இந்த சிகிச்சையைக் கையாள வேண்டும்.

தசமூலம் கஷாயம், பிருகத்யாதி கஷாயம், பலாகுடூச்யாதி கஷாயம், கோகிலாக்ஷம் கஷாயம் போன்றவை, இந்த உபாதைக்கு நல்ல பலன்களைத் தரக்கூடிய மருந்துகளாகும்.

ஜடாமயாதி எனும் பற்றுபோடும் மருந்தை, வடித்த கஞ்சியுடன் குழைத்து முட்டியில் பற்றுப் போடுவதால் எரிச்சலும், வீக்கமும் வலியும் பெருமளவு குறையும்.

சதகுப்பையை பாலில் அரைத்து இளஞ்சூடாகப் பற்று இடுவதும் நல்லதே. பிண்ட தைலம், இந்த உபாதைக்கு பயன்படுத்தும் சிறந்த தைலமாகும். வெதுவெதுப்பாக முட்டியில் வைத்து கட்டிக் கொள்வதால், வீக்கம், எரிச்சல், வலி ஆகியவை குறையும்.

நீர்முள்ளியின் இலையைச் சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாதரக்தம் எனும் உபாதையை நாம் வென்று விட முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

(தொடரும்)

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/7/22/11/w600X390/healthy-skin-fashiondivasonline.jpg http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/apr/13/வாதரக்தம்-எனும்-உபாதை-2683327.html
2678640 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் புண் விரைவில் குணமாக...! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, April 6, 2017 05:57 PM +0530 என் வயது 46. காலில் புண் ஏற்பட்டு புரையோடிப் போனதால் மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சையின் மூலம் சீழ் மற்றும் கெட்டுப்போன ரத்தம், சதை எல்லாம் அகற்றி, கட்டுப் போட்டுள்ளனர். ஆனாலும் எனக்கு அவ்விடத்தில் வலியும் எரிச்சலும் அடங்கவில்லை. அறுவை சிகிச்சை செய்த பின் புண் புரையோடாதிருக்க ஆயுர்வேத மருத்துவத்தில் வழிகள் உள்ளனவா?

-கனகசபாபதி, கோவை.

அறுவை சிகிச்சைக்குப் பின், மறுபடியும் புண் மற்றும் சீழ்கட்டாதிருக்க, ஓரிலைத்தாமரை, ஓரிலை மூவிலை, ஜடாமாஞ்சி, பிராம்மி, வசம்பு, சதகுப்பை, காட்டு சதகுப்பை, அருகம்புல், வெண்கடுகு ஆகியவற்றை தலையில் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு விநோதமான அறிவுரையை ஆயுர்வேதம் கூறுகிறது. இதன் மூலம் அணுக்கிருமிகளின் தாக்கம் உடலில் ஏற்படாது. தற்காலத்திய நவீன ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு மாற்றாக இதுபோன்ற சிகிச்சை முறைகள் அந்தக் காலத்தில் பிரசித்தமாக இருந்தது என்பது தெளிவாவதுடன் இவை அனைத்தும் நம் பாரம்பரிய மருத்துவத்தின் மிகச் சிறந்த ஆன்டிபயாடிக் மருந்துகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

மேலும் அறுவை சிகிச்சைக்குப் பின் நீர்த்ததும், சூடானதும், கபத்தை இளக்காததும், அதிக எண்ணெய் சேர்க்காததும், ஒவ்வாமை உணவு சேராததுமான உணவு வகைகளைக் குறைந்த அளவே உண்ண வேண்டும். வெந்நீரையே எல்லாவற்றிற்கும் பயன்படுத்த வேண்டும். பெண் சேர்க்கை கூடாது. இரவில் உரிய நேரத்தில் உறங்க வேண்டும். இயற்கை உந்துதல்களாகிய மலம், சிறுநீர், பசி, தாகம், உறக்கம், கொட்டாவி, வாந்தி, ஏப்பம், கீழ்க்காற்று போன்றவற்றை அடக்கக் கூடாது. உடற்பயிற்சி, கோபம், வருத்தம், பனி, வெயில், பெருங்காற்றுக்கு எதிரில் செல்லுதல், வாகன சவாரி, அதிக நடை, பேச்சு, அதிகம் அமர்ந்திருத்தல், நிற்பது, மிகவும் உயர்ந்த அல்லது தாழ்ந்த தலையணையை உபயோகிப்பது, பகல் தூக்கம், புகை, புழுதி போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். பகல் தூக்கத்தினால், புண்ணில் அரிப்பு, சிவப்பு நிறம், வலி, வீக்கம், சீழ் ஆகியவை உண்டாகும் என்கிறார் வாக்படர் எனும் முனிவர்.

புண் விரைவில் ஆற பார்லி, கோதுமை, அறுபதாங்குறுவை, காராமணி, பயறு, துவரை, ஊசிப்பாலைக்கீரை, ஆரைக்கீரை, இளம் முள்ளங்கி, கத்திரிக் காய், சிறுகீரை, வாஸ்துக்கீரை, பாகல், புடல், சுரை, இந்துப்பு, மாதுளை, நெல்லிக்காய், நெய், காய்ச்சி குளிராக்கப்பட்ட நீர், பழைய அரிசி, நெய்ப்பசையுடன் கூடிய சிறிது சூடான உணவு வகைகளைக் குறைந்த அளவில் உபயோகிக்கவேண்டும். அதிக அளவில் குடிநீர் அருந்த வேண்டும். முயல், கோழி, கிளி, மாடப்புறா, கெüதாரி போன்றவற்றின் மாமிசத்தை உணவாக்க விரைவில் புண் ஆறிவிடும். ஏதேனும் காரணத்தினால் அறுவை சிகிச்சைக்குப் பின் அஜீரணம் உண்டானால் வாயு முதலிய தோஷங்களின் கலக்கம் அதிகமாகும். அதனால் வீக்கம், வலி, அழற்சி, எரிச்சல், ஆகியவை உண்டாகும். அதனால் உரியநேரத்தில் அளவுடன் பத்தியமான உணவை உட்கொண்டால், சுகமாக ஜீரணமாகும்.

புண் உள்ளவர் - புதிய தானியம், எள், உளுந்து, மதுபானம், மேற்குறிப்பிட்ட மாமிசத்தைத் தவிர மற்ற மாமிசங்கள், பால் மற்றும் கரும்புச்சாற்றினால் தயாரிக்கப்பட்டவை, புளிப்பு, உப்பு, காரம் ஆகியவற்றை விலக்க வேண்டும். வயிற்றுப் பொருமல் உண்டாக்குவதும், புளித்த ஏப்பத்துடன் காந்தல் செய்வதும் எளிதில் செரிக்காததும், குளிர்ந்ததுமான உணவு கூடாது. இவை அனைத்தும் உடலிலுள்ள எல்லா தோஷங்களையும் கோபமடையச் செய்யும்.

விலாமிச்சை வேர் விசிறியால் புண் உள்ள இடத்தை வீசி காற்றுபடும்படி செய்ய வேண்டும். புண்ணைத் தட்டுவது, குத்துவது, சொறிவதோ கூடாது. வேலை செய்யும் போது அதிர்ச்சியுண்டாகாவண்ணம் பாதுகாக்க வேண்டும். நண்பர், வயோதிகர், மறையோர் ஆகியோர் கூறும் மனதிற்கு பிரியமான கதையைக் கேட்பதுடன் புண் விரைவில் குணமாகும் என்ற நம்பிக்கையுடனும் இருந்தால் விரைவில் புண் குணமாகிவிடும்.

(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/7/27/11/w600X390/Operation-008.jpg http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/apr/06/புண்-விரைவில்-குணமாக-2678640.html
2674392 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் மரத்துப் போவதைக் குறைக்க..! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, March 30, 2017 10:19 AM +0530 என் வயது 74. எனக்கு சுமார் 5 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருந்து வருகிறது. சுமார்  3 மாதங்களுக்கு முன் எனக்கு சுகர் 500க்கு மேல் போய்விட்டது. நமஎஅத SUGAR Specialist இடம் காண்பித்து எனக்கு SUGAR தற்போது NORMAL ஆக உள்ளது. எனக்கு கை, காலில் மரத்துப் போகும் தன்மை அதிகம் உள்ளது. அதற்கு என்ன காரணம்?  நான் ஆயுர்வேதம் காட்டும் முறையான வழிமுறைகளைப் பின்பற்ற நினைக்கிறேன். உணவு முறைகள் மற்றும் மருத்துவ முறைகளையும் கூறவும்.

-ப.ச. சுவாமிநாதன், கோவை-10.

 தோலினுடைய தொடு உணர்ச்சிக்காக வேலை செய்யும் நரம்புகளில் வறட்சியும், குளிர்ச்சியும் ஆதிக்கம் செலுத்தும் தறுவாயில், அவற்றிலுள்ள உணர்ச்சித் தன்மையானது குறைந்து, நீங்கள் குறிப்பிடும் மரத்துப் போகும் தன்மைக்குக் காரணமாகி விடுகின்றது. சமையல் தொழிலை முக்கியமாகக் கொண்டுள்ள உங்களுக்கு, சமையல் செய்யும் பாத்திரங்களுடைய குளிர்ச்சியாலும், நெடுநேரம் நின்று தரமான சமையலுக்கான முயற்சியால் ஏற்படும் உடல் வறட்சியாலும், நீங்கள் இதுபோன்ற பாதிப்புக்கு ஆளாகியிருக்கக் கூடும். உடலில் சிறிதும் எண்ணெய்ப் பசையின்றி, விடியற்காலையிலேயே எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, நெற்றியில் திருநீர் அணிந்து, இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கும்  சமையல் விற்பன்னர்களுக்கு, காலைக் குளிரும், தண்ணீரும் வறட்சியையும், குளிர்ச்சியையும் இயற்கையாகவே தோலில் ஏற்படுத்தக் கூடும்.  அதனால் நீங்கள் குளிப்பதற்கு முன், ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய மஹாநாராயண தைலத்தையோ, பலாஅஸ்வகந்தாதி தைலத்தையோ சூடாக்கி, உடலெங்கும் தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பிறகு, வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதை பழக்கிக் கொண்டால், மரத்துப் போகும் தன்மையைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது. நரம்பு மண்டலங்களில் ஆதிக்க இருப்பிடமாகிய மூளையையும் நாம் இவ்விஷயத்தில் உதாசீனப்படுத்த இயலாது. அதனால் மூளை நரம்புகளை வலுப்படுத்தும் க்ஷீரபலா தைலத்தையோ கார்ப்பாஸôஸ்த்யாதி தைலத்தையோ, வெதுவெதுப்பாக தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறிய பிறகு இளஞ்சூடான வெந்நீரில் குளிப்பதும் நல்லதே.

நரம்புக் கூட்டத்தை பலவீனப்படுத்தும் காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையைத் தவிர்த்து இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையை சற்று அதிகம் சேர்ப்பதும் நலமே.

நரம்புகளுக்கு உணர்வும், ஊட்டமும் தரும் ஆயுர்வேத மூலிகை நெய்மருந்துகளாகிய இந்துகாந்தம், விதார்யாதி, க்ஷீரபலா 101 போன்றவற்றில் ஒன்றை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட, மரத்துப் போகும் தன்மையைப் பெருமளவு குறைக்கலாம். சர்க்கரை உபாதையினுடைய அதிக அளவு தாக்கம் மூலமாக, பலரும் தொடு உணர்ச்சியை இழந்து போகிறார்கள். அவர்களும் இதுபோன்ற சிகிச்சை முறையால் பலனடையலாம்.

ஆயுர்வேத மருந்துவமனைகளில் நரம்பினுடைய உணர்வற்ற தன்மையை மேம்படுத்த உதவும் சிகிச்சை முறைகளாகிய உடலெங்கும் ஊற்றப்படும் எண்ணெய்க் குளியல், வியர்வையை உருவாக்கும் மூலிகை இலை ஒத்தடம், நவரக்கிழி, ஆஸனவாய் வழியாக செலுத்தப்படும் மூலிகைத் தைலம், தலையில் எண்ணெய் கட்டும் சிரோவஸ்தி மூக்கினுள்விடும் நஸ்ய சிகிச்சை போன்றவற்றை நீங்கள் செய்து கொள்ளலாம்.

குடலில் வாயுவினுடைய ஆதிக்கத்தால் ஏற்படும் வறட்சியும் குளிர்ச்சியும், தோல் நரம்புகளை வலுவிழக்கச் செய்யும் என்பதால், நீங்கள் உணவில் வாயுவை அதிகப்படுத்தும் சூடு ஆறிப்போன கொண்டைக் கடலை சுண்டல், பட்டாணி, வேர்க்கடலை, பருப்பு வகைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான வெந்நீரைக் குடிக்கப் பயன்படுத்துவதும், புளித்த மோரை உணவின் இறுதியில் குடிப்பதும், குடல் வாயுவைக் குறைக்க உதவும் எளிய வழிகளாகும். 

(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை-  600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/25/w600X390/A8.jpg http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/mar/30/மரத்துப்-போவதைக்-குறைக்க-2674392.html
2670709 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் ஒலியால் வரும் தலைவலி! டாக்டர் எஸ். சுவாமிநாதன் Thursday, March 23, 2017 01:23 PM +0530 என் திருமணமாகாத 30 வயது மகனுக்கு பிறர் தண்ணீர் குடிக்கும் போது தொண்டையிலிருந்து வரும் ஒலி மற்றும் பிறர் சாப்பிடும் உணவை மெல்லும் ஒலி இவற்றினால், அவருக்கு அடுத்த விநாடியே பின் மண்டையில் ஒரு வலி ஏற்படுகிறது. அவருடைய உடல் எடை 94 கிலோ. இந்த பிரச்சனைக்கு ஆயுர்வேத மருத்துவம் ஏதேனும் உள்ளதா?

-நா. நிஷ்களானந்தன்,
கும்பகோணம்.

தலையை தன் முக்கிய இருப்பிடமாகக் கொண்டு செயல்படுகிற பிராண வாயுவின் கதி முடக்கத்தால் நீங்கள் குறிப்பிடும் உபாதை தலைதூக்கலாம். மனிதர்களுடைய உடலில் உணவுச்சத்தின் கதி முடங்கினால் உணவுச்சத்து வறண்டுபோகும், சிறு செயல்களைச் செய்வதிலும் பெரும் சிரமம், உட்புற சத்துகள் வறண்டு போதல், சோம்பல், சிறு ஒலியினுடைய சத்தமும் சகிக்க  முடியாத தன்மை போன்றவை ஏற்படும் என்கிறார் வாக்படர் எனும் முனிவர், தான் இயற்றிய அஷ்டாங்கஹிருதயம் எனும் ஆயுர்வேத நூலில். மூளையினுடைய வலுவைக் கூட்ட வேண்டிய உணவுச் சத்து, அப்பகுதியில் குறைந்து போனால் பிராண வாயுவும் தன் செயல்களில் பலஹீனத்தை உணரத் தொடங்கும். உங்களுடைய மகனுக்கு, உண்ணும் உணவானது, பெருமளவில் அவை கொழுப்பினுடைய  உடல் பகுதியில் ஊட்டம் பெற்று, மற்ற பகுதிகளில் போதுமான அளவிற்கு ஊட்டம் கிடைக்காமலேயே போவதாகத் தோன்றுகிறது. கொழுப்பாக மாற்றும் நெருப்பானது கொழுந்துவிட்டு எரியும் நிலையில், மற்ற தாதுக்களின் நெருப்பானது மந்தமாகி, வரக்கூடிய  சத்தை உடலெங்கும் பரவவிடாமல் செய்துவிடுகிறது.

அதனால் உடல் பருமனைக் குறைக்க வேண்டும்.  அதற்கு அங்குள்ள நெருப்பை மட்டுப்படுத்த வேண்டும். மற்ற பகுதிகளிலுள்ள தாது பரிணாமம் எனும் தாது வளர்ச்சி தூண்டப்பட வேண்டும். மூளைக்குத் தேவையான ஊட்டத்தை ஏற்படுத்தி, அங்குள்ள நரம்பு மண்டலங்களைக் கோர்த்திருக்கும் அணுக்களின் வலுவைக் கூட்ட வேண்டும் என்ற பல பரிணாமங்களில் மருந்துகளைப் பிரயோகிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

வரணாதி கஷாயம் 15 மி.லி. எடுத்து 60 மி.லி. சூடு ஆறிய தண்ணீர் கலந்து 5 மி.லி. தேனுடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, உடல் பருமன் குறையலாம். தலைவலியைக் குறைக்கும், பசியைத் தூண்டும் இந்த மருந்தில், குளிர்ச்சியும் வறட்சியும் நிறைந்த தேன் சேர்ப்பதால், பசித்தீயை மட்டுப்படுத்தும். உட்புறக் குழாய்களைச் சுரண்டிச் சுத்தப்படுத்தும். அதனால் வாயுவிற்கு ஏற்பட்ட  தடை நீங்குவதால், அதன் சஞ்சாரமானது, தலையில் எளிதில் நடைபெறத் தொடங்கும். 

 ராஸ்னாதி சூரணத்தை இஞ்சி சாறு கலந்து சூடாக்கி நெற்றியில் பத்து போடுவதன் மூலமாகவும் தலை வலி நிவாரணம் பெறலாம். கார்ப்பாஸôஸ்தியாதி தைலத்தை மூக்கினுள் 2-4 சொட்டுகள் விட்டு உறிஞ்சித் துப்பிவிடவும். அது மூளை நரம்புகளை வலுவூட்டச் செய்யும். வாயினுள் அரிமேதஸ் தைலம் 5 மி.லி. அளவில் எடுத்து வாயினுள் விட்டு 5-10 நிமிடங்கள் கொப்பளித்துத் துப்பவும். மூளை நரம்புகளை வலுப்படுத்தும். தலைக்கு பலாஹடாதி தைலத்தை தேய்த்துக் குளிக்கலாம். 

 காது வாயு தோஷத்தினுடைய ஒரு முக்கிய இருப்பிடமாகக் கொண்டு சப்தத்தை உள்வாங்கி மூளைக்கு எடுத்துச் சென்று வந்துள்ள செய்தியை உணர்த்துவதால் காதினுள் விடப்படும் சில மூலிகைத் தைலங்களால், மூளை நரம்புகளை வலுவுறச் செய்து, தலைவலியை ஏற்படுத்தாமல் தடுக்க முடியும். அந்த வகையில், வசாலசுனாதி எனும்  தைலத்தை இளஞ்சூடாக காதில் நிரப்பும் சிகிச்சை முறையையும் ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.

 கண்களில் மூலிகை நெய் மருந்தாகிய ஜீவந்த்யாதி க்ருதம் அல்லது த்ரைபல க்ருதம் உருக்கி, கண்களின் உள்ளே ஊற்றி நிரப்பிவைக்கும் தர்ப்பணம் எனும் சிகிச்சை முறை மூலமாகவும், மூளையிலுள்ள நரம்பு மண்டலங்களை வலுப்படுத்தி, தலைவலி உபாதையைத் தவிர்க்கலாம். இவை அனைத்தும் ஆயுர்வேத மருத்துவமனைகளில் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

]]>
தலைவலி, உடல் பருமனை, மூலிகை, மருத்து http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2013/2/23/14/w600X390/headache.jpg http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/mar/23/ஒலியால்-வரும்-தலைவலி-2670709.html
2666515 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அடிக்கடி ஏப்பம் வந்தால்..! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, March 16, 2017 12:00 AM +0530 எனது வயது 42. எனக்கு அடிக்கடி ஏப்பம் வருகிறது. மருத்துவரிடம் சென்றேன். செரிமானம் இல்லை அதனால் வரும் என்கிறார். தண்ணீர் குடித்தால் கூட ஏப்பம் வருகிறது. இரண்டு மாதமாக உள்ளது. இந்த உபாதை தீர வழி என்ன? எதை சாப்பிடலாம் 

- ஒ. ஜெயா, கிருஷ்ணகிரி.

இரைப்பையில் அதிகம் வாய்வழியாக விழுங்கப்பட்ட காற்று இரைப்பையை விரிவாக்குவதனால் அந்தக் காற்றை வாய்வழியாகவே வெளியேற்றுவதுதான் ஏப்பம். இதனால் இரைப்பையில் காற்றின் அழுத்தம் குறைகிறது. காற்று எப்படி அதிகம் இரைப்பையில் சேருகிறது என்றால் உணவையோ அல்லது குடிக்கும் பானத்தையோ விரைவாக உண்பது அல்லது குடிப்பது, காற்றடைத்த குளிர்பானம் அருந்துதல், மனக்கவலையில் சிலர் இரைப்பையில் காற்று நிறைந்திருக்காத நிலையிலும் ஏப்பம் விடுவர். இதை ஒரு பழக்கமாக அவர்கள் கொண்டிருப்பதாலோ அல்லது வயிற்றுப் பகுதியிலுள்ள சுகமற்ற தன்மையை போக்கவோ அவர்கள் அவ்வாறு செய்யக்கூடும். அறிந்தோ அறியாமலோ சிலர் காற்றை விழுங்குவதுண்டு பேசிக்கொண்டே சாப்பிடுவதாலும், சுவிங்கம் சுவைத்துக் கொண்டே இருப்பதாலும், கெட்டியான சாக்லெட்டை உறிஞ்சிச் சாப்பிடுவதாலும், ஸ்ட்ரா எனும் குழல் வழியாக நீர்ப் பொருட்களான பழரஸம், இளநீர் போன்றவற்றை உறிஞ்சுவதாலோ, புகைப்பழக்கத்தினாலோ வாய்வழியாக சுவாசிப்பதாலோ, காற்றின் அளவு அதிகமாக வயிற்றினுள்ளே செல்லக்கூடும்.

பீன்ஸ், பருப்புவகைகள், ப்ரக்கோலி, பட்டாணி, வெங்காயம், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வாழைப்பழங்கள், திராட்சை, கோதுமை ரொட்டிகள் போன்றவை, அதிக ஏப்பத்தை செரிமான நிலையில் ஏற்படுத்துபவை. Type 2 சர்க்கரை உபாதைக்கான சில மருந்துகள், மலமிளக்கிகள், சில வலி நிவாரணிகள் போன்றவையும் வயிற்றில் புண்ணை ஏற்படுத்தி வாயுவை உற்பத்தி செய்யக்கூடும்.

இரைப்பையிலிருந்து மேலே கிளம்பி உணவுக் குழாயினுள் பரவும் அமிலத்தன்மையினாலும் இரைப்பையினுடைய தசைகள் வலுவிழப்பதனாலும், இரைப்பை உட்புற சவ்வுப் பகுதியில் ஏற்படும் தொற்று உபாதைகளாலும், உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல் பகுதிகளில் ஏற்படும் புண்களாலும், பாலிலுள்ள சில புரதங்களைச் செரிமானம் செய்யும் சக்தி இல்லாதிருப்பதாலும், சர்க்கரைச்சத்து செரிமானக் குறைப்பாட்டாலும், H. pylori நுண் உயிரிகளாலும் ஏப்பம் ஏற்படக்கூடும்.

மேலும் gluten எனும் வேதிப்பொருள் நிறைந்துள்ள ப்ரட் வகையறாக்களை செரிக்க முடியாமலாவதும், முழுவதும் செரிமானமாகாத நிலையில், இரைப்பை, உணவை அடுத்தபகுதிக்குத் தள்ளிவிடுவதாலும், செரிமானத்திற்கான சில சுரப்பிகள் pancreas பகுதியிலிருந்து சுரக்காமலிருந்தாலும் தொடர் ஏப்பம் வரக்கூடும். குடல் நழுவி வெளிப்படுதல், IBS எனும் மலம் நொத நொதப்புடன் அடிக்கடி வெளியேறுதல், பித்தப்பை கற்கள், சிறு குடலில் ஏற்படும் Giardia நுண்உயிரிகள் தொற்று, பித்தப்பை அழற்சி, வேகமாக மூச்சுக்காற்றை வெளியேற்றி, உள் மூச்சுக்காற்றை குறைவாக இழுப்பதனால் ஏற்படும் கரிமில வாயுவின் அளவுகுறைதல், குடல் ஒன்றோடு ஒன்று சொருகிக் கொள்ளுதல், உணவுக்குழாய் மற்றும் இரைப்பை கான்சர் உபாதை ஆகியவற்றிலும் தொடர் ஏப்பம் ஏற்படவாய்ப்பிருப்பதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதனால் நீங்கள் இரைப்பைப் பகுதியை குழாய் பரிசோதனை மூலம் ஏதேனும் பிரச்னை உள்ளதா? என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்றாற்போன்று மருந்து சாப்பிடுவது நலம். வெறும் காற்று மட்டுமே வெளியேறுகிறது என்று அறிந்தால், ஆயுர்வேத மருந்தாகிய வாயுகுளிகையோ, தான்வந்திரம் குளிகையோ ஒன்றிரண்டு, உணவிற்குப் பிறகு சீரகம் போட்டுக் காய்ச்சிய வெந்நீருடன் காலை, இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடுவது நலம். அஜீரணக்கோளாறும் ஏற்பட்டுள்ள நிலையில் அஷ்ட சூரணம் 1/2-1 ஸ்பூன் (5 கிராம்) சூடான சாதத்துடன் சிறிது நெய்யும் விட்டுக்கலந்து காலை-இரவு அந்த சாதத்தின் முதல் உருளையைச் சாப்பிடவும் மற்ற உபாதைகளுக்கு தனிப்பட்ட மருந்தை பயன்படுத்த வேண்டும்.

(தொடரும்)

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/15/w600X390/ashtachurnam.jpg http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/mar/16/ஆயுள்-காக்கும்-ஆயுர்வேதம்-அடிக்கடி-ஏப்பம்-வந்தால்-2666515.html
2662457 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் தசை, எலும்பு நோய்களுக்கு என்ன தீர்வு? டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, March 9, 2017 12:00 AM +0530 MSD எனப்படும் Musculo Skeletal Disorder சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இதற்கான காரணங்களை ஆயுர்வேதம் எடுத்துக் கூறியுள்ளதா? சிகிச்சை முறைகள் எவை?

-தேசிகன், சென்னை.

குணம் மற்றும் செயல்கள் வாயிலாகத்தான் நாம் நம் உடலை நன்கு பேணிக்காக்கவும் முடியும். அழித்துக் கொள்ளவும் முடியும். இந்த இரு விஷயங்களும் உணவு, செயல் மற்றும் மருந்துகள் மூலமாக, உடலில் ஏற்படும் குணங்களின் ஏற்ற இறக்கத்தைச் சமன் செய்து ஆரோக்கியத்தை நிலை நிறுத்த முயற்சிப்பதே, நோயாளிகளுக்கு மருந்துவர் செய்ய வேண்டிய கடமையாகும். ஒரு சில குணங்களின் ஆதிக்க வரவினால், நீங்கள் குறிப்பிடும் MSD எனப்படும் தசை மற்றும் எலும்புகளை குறி வைத்துத் தாக்கும் நோய்கள் மனிதர்களைப் பெரிதும் பாதிக்கும். அந்த குணங்களுக்கு எதிரிடையான உணவு - செயல் மருந்துகள் ஆகியவைகளைத் தரும் போது, அந்த உபாதைகள் அனைத்தும் குணமாகி விடுகின்றன. அவை பற்றிய ஒரு சிறிய விவரம்: 

காரணம்

1) வறட்சி - எலும்புகளிலுள்ளே அமைந்துள்ள மஜ்ஜை, நீர்ப் பசையான வில்லைகள், முதுகுத் தண்டுவடம் பகுதியில் வறண்டு விடுதல். 

பிரச்னை -  தண்டுவட வலி, எலும்புகள் வலுவிழத்தல், தசைநார்கள் சுருங்குதல்

தவிர்க்கவும்: சுவை -  கசப்பு, துவர்ப்பு, காரம்

செயல் - அடிதடி, உடற்பயிற்சி, உடலுறவு, நீச்சல்

மருந்துகள் -  நீர்ப்பசை, கொழுப்பு மருந்துகள்

2)   லேசானது-  எலும்பு, தசை, தசைநார்கள் அடர்த்தியை தளர்த்தி வலுவிழக்கச்
செய்தல்

பிரச்னை -  நடக்கும் போது தன்னிச்சையாக கால் மூட்டுகள் மடங்குதல்; சோம்பல் முறிக்கும் போது தசைகள் விரைத்துக் கொள்ளுதல்

தவிர்க்கவும்:  சுவை -  அதிகக் காரம், துவர்ப்பு, எளிதில் செரிக்கும் உணவு

செயல் - பட்டினி, சைக்கிள் சவாரி, பளுதூக்குதல், ஓடுதல்

மருந்து- சர்க்கரை உபாதைக்கான மருந்து, இருமல் மருந்து

3) குளிர்ச்சி-விரைப்பை ஏற்படுத்தும்

பிரச்னை- தசைகள், பூட்டுகள் இறுகி விரைத்து உறுப்புகளை அசைக்க முடியாமல் போதல்

தவிர்க்கவும்-சுவை - கசப்புச் சுவை, குளிர்ந்த நீர், கரும்புச் சாறு, பருப்புகள்

செயல்  குளிர்ந்தநீரில் குளித்தல், நீந்துதல், குடித்தல்

மருந்து-உடல்சூட்டைக் குறைக்கும் சந்தனம், வெட்டிவேர் போன்றவை

4)சுரண்டி காயச் செய்தல்- உட்புற நெய்ப்பைச் சுரண்டி தசை, எலும்புகள் காய்ந்து போகுதல்

பிரச்னை - நடக்கும்போது  பூட்டுகளிலிருந்து சத்தம் வருதல், வலி ஏற்படுதல்

தவிர்க்கவும்- சுவை- கசப்பு, துவர்ப்பு, சிறிதும் எண்ணெய்ப்பசை இல்லாத வறண்ட உணவு

செயல்- வறண்ட காற்றுக்கு எதிராகப் பயணித்தல், நெய்ப்பின்றி வாழ்தல்

மருந்து- இளைக்கச் செய்யும் மருந்துகள்

5)நகருதல்-தசை, எலும்பு மஜ்ஜை தம் இடத்தை விட்டு விலகுதல்

தவிர்க்கவும்- சுவை-கசப்பு, துவர்ப்பு,கொடிக்காய்கள்

மருந்து- நரம்பு ஊக்கிகள்

சிகிச்சை

1) நெய்ப்பு-  எண்ணெய்ப்பசை, நீர்ப்பசை உருவாக்குதல்

அறிவுரை:
சுவை  இனிப்பு, புளிப்பு, உப்பு சேர்க்கவும் 
செயல் - ஓய்வு, எண்ணெய் கட்டுதல்
மருந்து - க்ஷீரபலா கேப்ஸ்யூல், விதாரியாதி நெய்மருந்து, மகாமாஷ தைலம், எனிமா மற்றும் வெளிப்புறம் தடவுதல்

2) கனமானது -  அடர்த்தியை மறுபடியும் ஏற்படுத்துதல்

அறிவுரை
சுவை - இனிப்பு, புளிப்பு, உப்பு, நெய், மாமிச சூப்பு, மஜ்ஜை சேர்க்கவும்
செயல்  பகல் தூக்கம், படுக்கையில் ஓய்வு
மருந்து அஜஅஸ்வகந்தாதி லேகியம், பிருகச்சாகலாதி கிருதம் (நெய்)

3) சூடு-வியர்வையை வரவழைத்தல்

அறிவுரை:
சுவை - காரம், புளி, உப்பு சேர்க்கவும்
செயல்-  உடலை கனமான போர்வையால் போர்த்துதல், வெந்நீர் ஒத்தடம்
மருந்து-யோகராஜ குக்குலு, கைசோர குக்குலு மாத்திரை,அஷ்டவர்க்கம் கஷாயம்

4 )வழுவழுப்பு -  நெய்ப்பை ஏற்படுத்துதல்

அறிவுரை:
சுவை-இனிப்பு, புளிப்பு, நெய், பால் வெண்ணெய் மாமிசசூப்பு சேர்க்கவும்
செயல்-குஷன்படுக்கை, நெய்தடவி வெயிலில் சிறிது நேரம் அமருதல்
மருந்து-கந்த் தைலம், தான்வந்திரம் 101

5)நிலைத்தல்-ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல்

சுவை-இனிப்பு,பால்,நெய்,வெண்ணெய்,பழஜாம், பழங்கள் சேர்க்கவும்
மருந்து-அஷ்வகந்தாசூரணம், சியவனப்பிராசம் லேகியம்
 

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,  
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2014/2/6/12/w600X390/bones1.jpg http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/mar/09/தசை-எலும்பு-நோய்களுக்கு-என்ன-தீர்வு-2662457.html
2658290 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் கபத்தின் சீற்றமும் தோலில் ஊரலும்...! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, March 2, 2017 12:00 AM +0530 எனக்கு வயது 51 ஆகிறது. மூன்று மாதங்களாக பின்பக்கம் ஊரல் இருந்து வருகிறது. இது எப்படி வரும் என்றால் இரவில் படுக்கும் போது ஊரல் இருக்கும், பகலில் இருக்காது. இந்த ஊரல் கொசு கடித்தால் அரிக்குமே அதுபோல் இருக்கிறது. இந்த நோய்க்கு ஆயுர்வேத மருத்துவம் ஏதேனும் உள்ளதா?

 -கா.திருமாவளவன்,
திருவெண்ணெய்நல்லூர்.


இரவின் குளிர்ச்சியால் கபதோஷத்தினுடைய சில குணங்களாகிய நெய்ப்பு, கனம், மந்தம், வழவழப்பு போன்றவை உடலில் ஏற்றமடைந்து, இரத்தத்தின் வழியே தோலைச் சென்றடைவதால், நீங்கள் குறிப்பிடுவது போல் ஊரல் ஏற்படக்கூடும். கபம் சீற்றமடைவதற்கான காரணங்களை ஸுஸ்ருதர் எனும் முனிவர், தான் இயற்றிய ஸுஸ்ருத ஸம்ஹிதை எனும் ஆயுர்வேத நூலில் குறிப்பிடுகிறார். 

பகல் தூக்கம், உடற்பயிற்சியே இல்லாத சோம்பலான வாழ்க்கை, சோம்பலுடன் படுத்திருப்பதில் ஆர்வம், இனிப்பு, புளிப்பு, உப்பு, குளிர்ச்சி, நெய்ப்பு, எளிதில் செரிக்காதவை, வழவழப்பு, கொசகொசப்பு நிறைந்த உணவு வகைகளில் நாட்டம், பார்லி, உளுந்து, கோதுமை, எள்ளு, மாவுப்பொருட்கள், தயிர், பால், பாயசம், கரும்புச்சாறிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள், நீரில் வாழும் பிராணிகளின் மாமிசம், தாமரைத்தண்டு, இனிப்பான பழங்கள், கொடியினத்தைச் சார்ந்த பழங்கள், ஒன்றோடு ஒன்று பொருந்தாத உணவு வகைகள், முன் உண்ட உணவு செரிக்காத நிலையில் அடுத்த உணவைச் சாப்பிடுதல் ஆகியவை கபம் சீற்றமடைவதற்கான காரணங்களாகக் குறிப்பிடுகிறார்.

சீற்றமுறும் குணங்களே செயல் வடிவமாக உருமாறி மனிதர்களை நிலைகுலையச் செய்கின்றன. அதனால் அவற்றை உடல் உட்புறங்களிலிருந்து பிரித்தெடுத்து வாந்தி சிகிச்சையின் மூலம் வெளியேற்றும் போது, தோல் உபாதைக்கான தீர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

உபாதையை அழுத்தி அமர வைக்கும் மாத்திரை மருந்துகளால் பக்கவிளைவுகளே அதிகம் ஏற்படும். மேலும் தகுந்த காரணங்கள் கிடைத்ததும் அவை மறுபடியும் தூண்டப்படுகின்றன. 

சரக்கொன்றைப் பட்டையை சுமார் 15 கிராம் எடுத்து சிராத்தூள் போல் சீவி, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு 500 மி.லி. ஆகக் குறுகியதும் வடிகட்டி தயாராக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு நாளில் 2-3 வேளை சிறிது சிறிதாகக் குடித்து வரவும். ஆரக்வதாதி கஷாயம் சுமார் 15 மிலி எடுத்து 60 மி.லி.  வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து ஒரு வில்வாதி குளிகையை அரைத்துச் சேர்த்து காலை, மாலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலமாக, உங்களுக்கு ஏற்பட்டுள்ள உபாதை குறைய வாய்ப்பிருக்கிறது. தினவு ஏற்படாத வண்ணம் இந்த கஷாயம் உதவிடக்கூடும்.

மத்திய வயதுடைய உங்களுக்கு, குடலை அப்பழுக்கற்றதாக வைத்திருக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், திருவிருத்லேஹ்யம் மற்றும் மாணிபத்ரம் எனும் லேகிய மருந்தை, பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை காலையில் வடித்த கஞ்சி செரித்து, மதியம் பசி எடுத்துள்ள நிலையில், இரண்டு மருந்தையும் ஒன்றாகக் கலந்து சுமார் 20-25 கிராம் அளவில் நக்கிச் சாப்பிடவும். நன்றாக பேதி ஆன பிறகு, மதியம் மிளகு, சீரகம், பூண்டு போட்டு தயாரித்த ரசம், சூடான புழுங்கலரிசிச் சாதத்துடன் கலந்து, சுட்ட அப்பளத்துடன் சாப்பிடவும். அதிக அளவில் பேதியானால், கெட்டியான தயிர்சாதம் சாப்பிட்டால் பேதி நின்றுவிடும்.

தோல் உபாதைகளைத் தவிர்க்க நீங்கள் பயன்படுத்தும் படுக்கை, துணி விரிப்புகள், தலையணை உறை, உள்ளாடைகள் அனைத்தும் நன்றாக தோய்த்து வெயிலில் காயபோட்டு பயன்படுத்தவும். குளிக்கக்கூடிய தண்ணீரில் வேப்பிலை, அருகம்புல் போட்டுக் காய்ச்சி, உடலெங்கும் தூர்வாதி கேரதைலம் எனும் மூலிகைத் தேங்காய் எண்ணெய் தேய்த்து 12 மணி நேரம் ஊறிய பிறகு காலையில் குளிக்கவும். கொசுத் தொல்லையைத் தவிர்க்க கொசு வலையைப் பயன்படுத்தவும்.
(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/7/22/11/w600X390/healthy-skin-fashiondivasonline.jpg http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/mar/02/கபத்தின்-சீற்றமும்-தோலில்-ஊரலும்-2658290.html
2653615 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் ரத்தத்தைச் சுத்தம் செய்தால்...! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, February 23, 2017 12:00 AM +0530 ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

என் வயது 34. அடிக்கடி வாய்ப்புண், தண்ணீர் தாகம், கசப்புடன் கூடிய புளிப்பு ஏப்பம், பசியின்மை, வியர்வை துர்நாற்றம், முகப்பருக்கள் போன்ற உபாதைகளால் அவதியுறுகிறேன். உத்தியோகம் காரணமாக பல ஊர்களுக்குச் செல்ல வேண்டி இருப்பதால் ஓட்டல் சாப்பாடுதான். இவை எதனால் ஏற்படுகின்றன? இவற்றுக்கு ஆயுர்வேத மருந்துகள் எவை?

தனஞ்செழியன்,
சேலம்.

சரகஸம்ஹிதை எனும் ஆயுர்வேத நூலில் மனிதர்களுடைய இரத்தம் கெட்டுவிட்டால் கீழ்காணும் உபாதைகளைத் தோன்றச் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது:

வாய்ப்புண், கண் விழிப்படல பாதிப்பு, மூக்கிலிருந்து நீராக ஒழுகுதல், வாய் துர்நாற்றம், வயிற்றில் கட்டி, அக்கி, நுண்ணிய தோல் ஓட்டைகளிலிருந்து ரத்தம் கசிதல், தலைசுற்றல், மூட்டு வீக்கத்துடன் வலி, உடல் வெளுத்து சோகை அடைதல், பசியின்மை, தண்ணீர் தாகம், உடல் கனம், உடல் எரிச்சல், தாங்க முடியாத சோர்வு, ருசியின்மை, தலைவலி, கசப்பும் புளிப்புமாக கெட்டநீர் ஏப்பத்தில் வருதல், கடுங் கோபம், வாயில் உப்புச்சுவை, அதிக வியர்வையில் துர்நாற்றம், மதம்பிடித்தது போல தள்ளாட்டம், நடுக்கம், குரல் கம்மல், அதிக உறக்கம், சோம்பல், அடிக்கடி மூர்ச்சையாகி விழுதல், அரிப்பு, காணாக்கடி, பருக்கள், சரும உபாதைகள்.

மேற்குறிப்பிட்ட உபாதைகளில், நீங்கள் குறிப்பிடும் உபாதைகளும் அடங்கியிருப்பதால், உங்களுக்கு இரத்தம் தன் சுத்தமான தன்மையைவிட்டு, கெட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இரத்தம் கெடுவதற்கான காரணங்களையும் அந்நூல் எடுத்துக் கூறுகிறது:

ஒவ்வாமை உணவுகள், குடலில் துளைத்துக் கொண்டு செல்லும் சூடான வீரியம் கொண்ட மதுபானங்களை அருந்துதல், அதிக அளவில் உணவைச் சாப்பிடுதல், காரம், புளி, உப்பு சேர்த்த உணவுகள், கொள்ளு, உளுந்து, நல்லெண்ணெய் சார்ந்த உணவுகள், பச்சைமுள்ளங்கி, உப்பு நீரிலும், பொந்துகளிலும், நீர்ப்பாங்கான நிலங்களிலும் வாழும் மிருகங்களின் மாமிசத்தை உணவாக ஏற்றல், தயிர், புளித்த தயிர்த்தண்ணீர், வினிகர், பதனழிந்த கெட்டுப் போன உணவு ஆகியவை.
எண்ணெய், நெய் கலந்து எளிதில் செரிக்காத திரவ உணவு வகைகளைச் சாப்பிட்டு பகலில் படுத்து உறங்குதல், கடும் கோபம், வெயில் மற்றும் நெருப்பினருகில் வேலை, வாந்தியை வலுக்கட்டாயமாக அடக்குதல், அடிபடுதல், உடற்சூடு அதிகரித்தல், முன் உண்ட உணவு செரிமானம் ஆகாத நிலையிலேயே அடுத்த உணவைச் சாப்பிடுதல், இலை உதிர் காலத்தின் இயற்கையான தன்மையாலும் மனிதர்களுடைய இரத்தம் கெட்டுவிடக்கூடும்.

கெட்டுப்போன நிலையில் இரத்தத்தை உடலில் வைத்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் அதைச் சிறுகச் சிறுக வெளியேற்றும் அட்டைப்பூச்சிகள், கொத்தி எடுத்தல் போன்ற முறைகளால் வெளியேற்றி, சுத்த ரத்தத்தை உடல் பெறும் வண்ணம் முயற்சிக்க வேண்டும். திக்தகம் என்றும் மஹாதிக்தகம் என்ற பெயரிலும் பயன்படுத்தக் கூடிய மூலிகை நெய் மருந்துகளை காலை,மாலை என இருவேளை வெறும் வயிற்றில் சுமார் 21 நாட்கள் வரை உருக்கிச் சாப்பிட்டு வர, உங்களுடைய உபாதைகள் பல, இரத்தம் சுத்தமாவதால் குணமடைய வாய்ப்புள்ளது. மாணிபத்ரம் எனும் லேகிய மருந்தை அதன் பின்னர் சுமார் 20-25 கிராம் வரை சாப்பிட, நீர்பேதியாகி குடல் சுத்தமடையும். இரத்தத்தில் கலந்துள்ள பல விஷப்பொருட்களையும், மேற்குறிப்பிட்ட நெய் மருந்துகள், குடலுக்குக் கொண்டுவந்து, லேகிய மருந்தின் மூலம் வெளியேற்றுவதால், இரத்தம் சுத்தமடைகிறது.

இரத்தத்தினுடைய சுகாதார மேம்பாட்டினால், உடல்நிறத்திற்குத் தெளிவு, புலன்கள் அனைத்தும் தத்தம் செயல்களில் மேம்படுதல், புலப்பொருட்களின் மீது இயற்கையான மோகம் அதிகரித்தல், சீரான இடைவேளையில் பசி எடுத்தல், உட்புறக்கழிவுகள் எவ்வித கஷ்டமுமில்லாமல் எளிதாக வெளியேறுதல், மனதில் நிறைவான மகிழ்ச்சி, உடல்வனப்பு கூடுதல், உடல் மற்றும் மனதில் வலுகூடுதல் போன்றவை ஏற்படும். ஆயுர்வேத மருந்துகளாகிய சோணிதாமிருதம், நிம்பாதி கஷாயம், ஜீவந்தியாதி கஷாயம் போன்றவை இரத்தத்தை சுத்தப்படுத்தக் கூடியவை. மேற்குறிப்பிட்ட இரத்தம் கெட்டுப் போவதற்கான காரணங்களைத் தவிர்த்து தக்க சிகிச்சை முறைகளை மேற்கொள்வதால், உங்களுடைய உபாதைகள் அனைத்தும் நீங்கிவிடும்.

(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை -  600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/30/w600X390/BLOOD-DONATION.jpg http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/feb/23/ரத்தத்தைச்-சுத்தம்-செய்தால்-2653615.html
2650072 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் அவசரமாகச் சிறுநீர் பிரிவதைக் குணப்படுத்தலாம்! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, February 16, 2017 12:00 AM +0530 ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
எனக்கு வயது 70. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. அவசரமாக சிறுநீர் கழிக்கும் போது சில சொட்டுகள் ஆடையில் பட்டுவிடுகிறது. மேலும் அந்த நேரத்தில் பாதத்தில் எரிச்சல் ஏற்படுகிறது. உடன் சரியாகி விடுகிறது. இதற்கு ஆயுர்வேத மருத்துவம் ஏதேனும் உள்ளதா?

சுகுமாறன்,
மன்னார்குடி.

 சிறுநீரைத் தேக்கி வைக்கும் சிறுநீர்ப்பை, நரம்பு மண்டலத்தின் இயக்கத்தின் மூலமாக, சிறுநீரின் அளவு கூடாத வண்ணம் வெளியேற்றுகிறது. இந்த நரம்பு மண்டலத்தின் செயல்திறன் வயோதிகத்தில் மந்தமாவதற்கு ஏற்ப, சிறுநீரின் வெளியேற்றம் வேகமாகவோ, மந்தமாகவோ நிகழக்கூடும். இடுப்பினுடைய கீழ்பகுதியில் அமைந்துள்ள முதுகுத்தண்டு வடப்பகுதியிலிருந்து வெளிக்கிளம்பும் நரம்புகளே, சிறுநீர்ப்பையைத் தம் ஆளுமையின் கீழ்வைத்துள்ளது. அவற்றின் செயல்களைச் சீராக்கினால், உங்களுக்கு ஏற்படும் சிறுநீர்ச் சொட்டானது குணமடைய வாய்ப்பிருக்கிறது. 

அந்த வகையில், கடிவஸ்தி அதாவது இடுப்பைச் சுற்றி உளுந்து மாவினால் வரம்பு கட்டி அதனுள்ளே, மஹாமாஷம், பலா அஸ்வகந்தாதி எனும் பெயர்களிலுள்ள மூலிகைத் தைலங்களை, வெது வெதுப்பாக  ஊற்றி, அரைமணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை ஊறவிடுதல், சூடு ஆற ஆற, மறுபடியும் பிழிந்தெடுத்துச் சூடாக்கி, மறுபடியும் ஊற்றி வைக்கும் சிகிச்சை முறை மிகவும் சிறப்பானது. இதைச் செய்து கொள்ளும் தறுவாயில், வயிறு காலியாக இருத்தலும், மலங்கழித்திருத்தலும் அவசியமாகும். சிறுநீரும் கழித்திருக்க வேண்டும்.

நொச்சி, ஆமணக்கு, புங்கை, வாதநாராயணன், கல்யாண முருங்கை, கற்பூரவல்லி செடி ஆகியவற்றின் வேர்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, குக்கரில் தண்ணீருடன் கலந்து கொதிக்கவிட்டு, குக்கரின் மூடியிலுள்ள குழலில் ஒரு ரப்பர் டியூபைப் பொருத்தி, அதிலிருந்து வரும் மூலிகை நீராவியை இடுப்பு பகுதியில், முன் குறிப்பிட்ட வரம்பு மற்றும் எண்ணெய்களை வழித்தெடுத்த பிறகு காண்பிப்பதும், இடுப்பு நரம்புகளின் செயல் ஊக்கிகளை மேம்படுத்தும் சிகிச்சை முறையாகும்.

உணவை உண்ட உடனேயே, ஆசனவாய் வழியாக மூலிகைத் தைலங்களைக் கொண்டு ஒரு பையில் நிரப்பி உட்செலுத்துதல் மூலம், இடுப்பிற்குக் கீழ்ப் பகுதிகள் அனைத்தும் நெய்ப்பைப் பெறுகின்றன. இரு தினங்கள் இந்த சிகிச்சை முறை செய்த பிறகு, மூன்றாவது நாள், காலையில் வெறும் வயிற்றில் உள்ளபோதே, தசமூலம், ஆமணக்கு ஆகியவற்றின் வேரைக் கொண்டு காய்ச்சப்படும் கஷாயத்தில், தேன், இந்துப்பு, நல்லெண்ணெய், சதகுப்பை சூரணம் ஆகியவற்றைக் கலந்து, நன்றாகக் கடைந்து ஒரு பையில் ஊற்றி, ஆசனவாயினுள் செலுத்தி, சுமார் 25-30 நிமிடங்களுக்குள் கழிவறையில், அக்கஷாயத்தை கழித்து விடுவதால், பல வகையில் துன்புறுத்தும் வாத நோய்களைப் போக்கும் திறன் கொண்ட இந்த சிகிச்சை முறையும் உத்தமமானதே.

நீர்த்தொட்டி நீராட்டம் எனும் சிகிச்சை முறையும் தங்களுக்கு நல்ல பலனை அளிக்கலாம். மூலிகைகளைக் கொண்டு கஷாயமிட்டு,  ஓர் அண்டாவினுள் வெது வெதுப்பாக ஊற்றி, அதனுள்ளே இடுப்பு வரை மூழ்குமாறு அமர்ந்து கொள்ளும் இந்த சிகிச்சை முறை மூலம், உடலின் கீழ்ப்புறம் அமைந்துள்ள உறுப்புகளை வலுப்படுத்தலாம்.

இடுப்பு முதல் பாதம் வரை, மூலிகைத் தைலங்களைச் சூடாக்கி, பஞ்சினால் பிழிந்து ஊற்றும் தைல தாரா சிகிச்சையின் மூலமாகவும், சிறுநீர்ப்பையைச் சார்ந்த நரம்பு மண்டலத்தை வலுவாக்கலாம். 

நரம்புகளை வலுப்படுத்தும் யூகலிப்டஸ், முடக்கத்தான், எருக்கு, நொச்சி, ஏழிலம் பாலை, ஆமணக்கு ஆகியவற்றின் இலைகளை நறுக்கி, பந்துபோல் துணியில் கட்டி, சூடாக்கி, இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் ஒத்தடமிட, வாயுவை கீழடக்கி, நரம்புகளை வலுவடையச் செய்யும்.

விதார்யாதி, தசமூலம், சுகுமாரம், இந்துகாந்தம் போன்ற கஷாய மருந்துகளில் ஒன்றிரண்டை மருந்துவர் ஆலோசனைப்படி, தான்வந்திரம் அல்லது வாயு குளிகையுடன் பால் கஷாயமாக அருந்துவதன் மூலமாக, நரம்பு மண்டலங்களை வலுவூட்டலாம்.

உணவில் நரம்புகளை வலுவிழக்கச் செய்யும் காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் குறைத்து இனிப்பு, புளிப்பு மற்றும் உப்புச் சுவைகளை மிதமாகச் சேர்க்கலாம்.

(தொடரும்)

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/30/w600X390/ayurveda.jpg http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/feb/16/அவசரமாகச்-சிறுநீர்-பிரிவதைக்-குணப்படுத்தலாம்-2650072.html
2646017 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் தோல் உபாதைக்கான காரணம்..! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, February 9, 2017 12:00 AM +0530 ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

என் வயது 37. உடலில் ஆங்காங்கே அத்திப்பழம் போன்று சிவந்த நிறத்தில் சருமமும் அதைச் சுற்றியுள்ள முடிகளும் இருக்கின்றன. அந்தப் பகுதிகள் தடித்தும், நீர்க்கசிவும் ஏற்பட்டு, வெடித்தும், எரிச்சலும் ஏற்படுகின்றன. அதிகமான வலியும் உள்ளது. இதைக் குணப்படுத்த ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?

- முருகன்,
ஆலந்தூர், சென்னை.

பதினெட்டு வகையான தோல் உபாதைகள் மனிதர்களைத் தாக்கக் கூடும் என்று அஷ்டாங்க ஹிருதயம் எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது. தாங்கள் குறிப்பிடும் உபாதையானது ஒதும்பரம் அதாவது அத்திக்காய் பெருநோய் எனும் வகையைச் சார்ந்ததாகத் தெரிகிறது. பித்ததோஷத்தின் சீற்றம் காரணமாக இந்த உபாதை ஏற்படுவதாகவும் அந்நூல் கூறுகிறது.

தோல் உபாதைக்கான காரணங்கள் - முறைகேடான உணவு, செயல் ஆகியவற்றாலும், முக்கியமாக ஒன்றோடு ஒன்று பொருந்தாத உணவு வகைகளாலும் தூண்டப்பட்ட வாத- பித்த- கப தோஷங்கள், உடலில் குறுக்காகச் செல்லும் ரத்தக் குழாய்களை அடைந்து, சருமம், நீர், ரத்தம், மாமிசம் ஆகியவற்றைக் கெடுக்கின்றன.

மேலும் கேடுற்ற தோஷங்கள் சருமம் முதலியவற்றைத் தளரச் செய்து பிறகு வெளிப்புறம் வந்து, சருமத்தில் நிற மாற்றத்தை உண்டாக்குகின்றன. தக்கவாறு சிகிச்சை செய்யாவிடில், இந்த உபாதை நாளடைவில் உடல் முழுவதையும் சிதைக்கும் தன்மை உள்ளது.

திக்தகம் என்றும் மஹாதிக்தகம் என்றும் தயாரிக்கப்படும் மூலிகை நெய் மருந்துகளில் ஒன்றை உடலின் தன்மைக்கு ஏற்ப, சில காலம் பருகச் செய்வார்கள். இம்மருந்து உடலில் நன்கு பரவி, வாயுவைக் கீழ் நோக்கிச் செலுத்துதல், பசி நன்றாக ஏற்படுதல், மலத்தில் இம் மருந்தின் நெய்ப்பினை உணருதல், மேலும் இம் மருந்தைச் சாப்பிடுவதில் ஏற்படும் வெறுப்பு, மருந்தினால் ஏற்படும் களைப்பு ஆகியவை, மருந்தினுடைய செயல்பாடு நன்றாக வந்தடைந்து விட்டது என்பதை அறிந்தவுடன், இந்த நெய் மருந்தை மேலும் அருந்துவதற்குத் தரமாட்டார்கள்.

பதினைந்து கிராம் கருங்காலிக் கட்டையை ஒருலிட்டர் தண்ணீரில் காய்ச்சி, அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி, ஒரு நாளில் பலதடவை சிறுகச், சிறுகப் பருகுவதற்குப் பயன்படுத்துவதற்கான உகந்த நேரமும் இதுவேயாகும்.

நெற்றி, கை, பாதம் போன்ற பகுதிகளிலுள்ள காரி ரத்தக் குழாய்களில் ஏதேனும் ஒரு பகுதியிலிருந்து கெட்ட ரத்தத்தைக் கீறி வெளிப்படுத்துவார்கள். இதனால் உடலில் வாயு குவிந்துவிடாமல் தடுப்பதற்காக, மேலும் சில மூலிகை நெய் மருந்துகளைப் பருகச் செய்வார்கள்.

உணவில் புளி, உப்பு, காரம், தயிர், பால், வெல்லம், நீர் மற்றும் கடல் நீர்வாழ் பிராணிகள், எள்ளு, உளுந்து ஆகியவை தடை செய்யப்பட்டு, பழைய புழுங்கலரிசி, பார்லி, கோதுமை, பச்சைப்பயறு, கொண்டைக் கடலை, துவரம் பருப்பு, கசப்பான இலைக்கறிகள், வறண்ட நிலத்தில் வாழும் ஆடு, கோழி, முயல் போன்றவை, புடலை, கருங்காலிக்கட்டைக் குடிநீர், மோர் ஆகியவற்றைக் கொண்டே உணவைத் தயாரித்து வழங்குவார்கள்.

குடலைச் சுத்தம் செய்யும் பொருட்டு, படோலமூலாதி கஷாயம், மாணிபத்ரம் லேஹ்யம் போன்றவற்றைப் பயன்படுத்தி, கெட்டுப் போன ரத்தத்தை சுத்தப்படுத்தி, சருமத்தைப் பாதுகாத்தனர். உட்புற சுத்தத்தை நன்கு ஏற்படுத்திய பிறகே, வெளிப்புறப் பூச்சு மருந்துகளாகிய நால்பாமராதி தைலம், சததௌதக்ருதம் போன்றவற்றைப் பயன்படுத்தி தோல் உபாதைகளை பண்டைய ஆயுர்வேத மருந்துவர்கள் குணப்படுத்தினார்கள்.

(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/7/22/11/w600X390/healthy-skin-fashiondivasonline.jpg http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/feb/09/தோல்-உபாதைக்கான-காரணம்-2646017.html
2640950 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் திரிபலா சூரணத்தின் பயன்கள்! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Saturday, February 4, 2017 04:46 PM +0530 என் வயது 70. நான் கடந்த 25 வருடங்களாக நீரிழிவு நோயினால் அவதியுறுகிறேன். இன்சுலின் எடுத்துக் கொள்கிறேன். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் எனக்கு அறுவைச் சிகிச்சை இரத்த அடைப்புக்காக இருதயத்தில் பைபாஸ் செய்யப்பட்டது. அதுமுதல் clopilet என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். ரத்தம் உறைதலைத் தடுக்க நான் 5 வருடங்களாக திரிபலா சூரணம் தினமும் அரை தேக்கரண்டி சாப்பிடுகிறேன். இதில் உள்ள கடுக்காய் ரத்தம் உறைதலை ஏற்படுத்துமா? நான் இதனைத் தொடர்ந்து சாப்பிடலாமா? ஏதும் பக்கவிளைவுகள் உண்டா?

பி.நடராஜன், சென்னை-23.

துவர்ப்புச் சுவையுடைய கடுக்காய், லேசானது, அதனால் செரிப்பதற்கு எளிதானது, பசித்தீயை வளர்க்கும். சீரணத்தை அளிக்கும். உஷ்ணம் எனும் சூடான வீர்யமுடையது. இளகச் செய்யும் தன்மையுடையது. இதனாலேயே நீரிழிவு நோயினால் ஏற்படும் இதய நோய்களுக்கு அருமருந்தாகும். உடலிலுள்ள பல உறுப்புகளின் உட்பகுதிகளில் சென்று செயலாற்றக் கூடிய கடுக்காயின் பெருமைகளை அறிந்திருந்த நம் முன்னோர், கடுக்காய்த் தோலை நெய்யில் வதக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு இளமையைத் தக்க வைத்துக் கொண்டனர்.

கல்லீரலைப் பாதிக்கும் காமாலை, இரைப்பை மற்றும் சிறு குடல் இணையும் பகுதியில் அமைந்துள்ள க்ரஹணி எனும் வால்வுப் பகுதியில் ஏற்படும் தொய்வு, நீரிழிவு நோயினால் ஏற்படும் உடல் இளைப்பு, சிறுநீரின் உட்புறத் தேக்கத்தினால் ஏற்படும் உடல் வீக்கம், குடலில் ஏற்படும் நீரோட்டத்தினால் உண்டாகும் பேதி, மண்ணீரல் உபாதைகள் போன்றவை, கடுக்காயின் உட்புற உபயோகத்தினால் குணமடையக் கூடியவை. உஷ்ணம் மற்றும் இளக்கும் தன்மையுடையதால் ரத்த உறைதலை கடுக்காய் ஏற்படுத்துவதில்லை. கப, வாத நோய்களைக் குணப்படுத்தும்.

துவர்ப்புச் சுவையுடைய எந்த உணவும் மருந்தும் கபம், பித்தம், ரத்தம் இவற்றினால் ஏற்படும் தீமைகளை அழிக்கின்றன. கடுக்காய் தோலைத் தண்ணீரில் வேக வைத்து நன்கு உலர்ந்ததும் பொடித்து, தேன் குழைத்துச் சாப்பிட்டால் பேதி நிற்கும். அதே கடுக்காய்த் தோலை வெறுமனே பொடித்து வெந்நீருடன் சாப்பிட, மலச்சிக்கலை நீக்குகிறது. துவர்ப்புச் சுவை உடலில் நீர்ப்பசையின் ஏற்றத்தைத் தடுத்து வறட்சியைத் தருகிறது. ரத்தத்திலுள்ள ஈரத்தை உலர்த்தி அதன் ஓட்டத்தைச் சீராக்குகிறது. புண்களை ஆற்றக் கூடியது. அங்குமிங்கும் கட்டிக் கிடக்கக் கூடிய உட்புற குழாயிலுள்ள மலங்களைச் சுரண்டி வெளிப்படுத்தும் தன்மை கொண்டது.

கடுக்காயுடன் சேர்க்கப்படும் நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காயின் கூட்டிற்கே திரிபலை என்று பெயர். நெல்லிக்காயும் கடுக்காய் போன்றே குணமுள்ளது. ஆனால் குளிர்ச்சியான வீரிய முடையது. இனிப்புச் சுவையும் அதிலுள்ளதால் குறிப்பாக, பித்தத்தைப் போக்குவதில் சிறந்தது. சீரணமான பின் உவர்ப்பு குணம் கொண்டதால் கபத்தையும், புளிப்பினால் வாயுவையும் குணப்படுத்துகிறது. இதயத்திற்கு இதமானது. நல்ல பார்வையை அளிக்கும். குரலைச் சீர்படுத்தும். கடுமையான காய்ச்சலைத் தணிக்கும்.

தான்றிக்காய், நெல்லிக்கனியைக் காட்டிலும் குறைவான குணமுள்ளது. துவர்ப்பு, இனிப்புச் சுவையுமுடையது. குளிர்ச்சியான வீர்யமுடையது. இருமல், மூச்சுத்திணறல், தொண்டை நோய், கபம், பித்தம், கண்நோய் போக்கும். கூந்தலை வளர்க்கும். இந்தக் காயின் விதையினுள்ளே இருக்கும் பருப்பைக் கொண்டு கண்ணிற்கு மை தீட்டினால். கண்ணில் பூ (கேட்டராக்ட்) விழுதலைத் தவிர்க்கலாம்.

இவை மூன்றும் சம அளவு எடுத்துத் தூள் செய்துச் சாப்பிட- கண்நோய்களை அகற்றும். காயத்தை ஆற்றும். தோல் வியாதியைத் தூக்கி எறியும். பிசுபிசுப்பு, கொழுப்பு, நீரிழிவு, கபம் இவற்றைப் போக்கும் இரத்தம் தொடர்பான நோயை அகற்றும்.

இம்மூன்று மருந்துகளையும் தனித்தனியாகச் சாப்பிடுவதை விட, அவற்றின் சேர்க்கை மிகவும் விசேஷமானது என்பதை நம் முன்னோர் கண்டறிந்தனர். தனியாகச் செய்ய முடியாத சிறப்பான செயல்களை, மருந்துகளின் சேர்க்கையானது அவற்றின் தனித்தன்மையை விட்டு விட்டு, அவற்றின் சேர்க்கையினால் செய்கின்றன. அதனால் நீங்கள் தைரியமாகவும் நம்பிக்கையுடனும் திரிபலையைச் சாப்பிடலாம். இந்த சூரண மருந்தை ஐந்து கிராம் எடுத்து இருநூற்றைம்பது மி.லி. தண்ணீருடன் கொதிக்க வைத்து அறுபது மி.லி.யாக குறுக்கி வடிகட்டி காலை உணவிற்குப் பிறகு சாப்பிடுவது மிகவும் நல்லது.


(தொடரும்)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/30/w600X390/tripala.jpg http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/feb/02/திரிபலா-சூரணத்தின்-பயன்கள்-2640950.html
2637514 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் உடல் பருமன், சோம்பேறித்தனம் நீங்க...! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, January 26, 2017 12:00 AM +0530 ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

எனது மகனுக்கு வயது 39. எடை 110 கிலோ. நடைப்பயிற்சி முதலிய எந்தவித உடற்பயிற்சிகளும் இல்லாமல் எப்போதும் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளையும், டீவி சீரியல்களையும் பார்த்துப் பொழுது போக்கி வருகிறான். எப்போதும் சப்பாத்தி மட்டுமேதான் சாப்பிடுகிறான். அரிசி சாதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வந்துவிடும் என்கிறான். இது உண்மையா?    

                                                            எம். எஸ். நளினி, சென்னை-33.

ஒரு வகையில் அவருடைய நினைப்பு சரியாகத்தான் உள்ளது. அஷ்டாங்க சங்க்ரஹம் எனும் ஆயுர்வேத நூலில் பல வகையான சம்பா நெல்கள் மற்றும் அரிசி பற்றிய வர்ணனையில் இனிப்புச் சுவையுள்ளவை; உணவின் செரிமான இறுதியில் இனிப்பாகவே இருப்பவை; பசையுள்ளவை; வீரியத்தை வளர்ப்பவை; மலத்தைக் கட்டுபவை; மலத்தைக் குறைப்பவை; குளிர்ச்சியானவை என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. கோதுமையைக் மட்டுமே மாவாக்கி, சப்பாத்தி சாப்பிடும் நிலையில், கோதுமையைப் பற்றிய விவரமும் நாம் அந்நூலிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது - வீரியத்தை வளர்ப்பது; குளிர்ச்சியானது; எளிதில் செரிக்காத குணமுடையது; பசையுள்ளது; உயிரையளிப்பது; வாதம் மற்றும் பித்த தோஷங்களைப் போக்குவது; முறிந்த உறுப்புகளை சேர்க்க வல்லது; இனிப்பானது; உடலை நிலை நிறுத்துவது; மலமிளக்கி. மெல்லிய நீண்ட கோதுமை உடலுக்கு உகந்தது. குளிர்ச்சி, துவர்ப்பு, இனிப்புச் சுவையுடன் லேசான தன்மையுடையது.

உங்களுடைய மகனுடைய பிரச்னையே சோம்பேறித்தனமான வாழ்க்கை முறைதான். அதில்தான் ஆபத்து அதிகமுள்ளது. சிறு வயதிலிருந்தே அதிக செல்லம் கொடுத்து நீங்கள் வளர்த்திருந்தாலோ அல்லது தாய்-தந்தையரின் நேர்ப்பார்வையில் கண்டிப்பும், நல்உபதேசமும் இல்லாமல் வளரும் பிள்ளையாக இருந்திருந்தால், இது போன்ற வாழ்க்கையை அவர் இத்தனை வயது வந்திருந்தாலும் எதிர்கால சிந்தனை பற்றிய கவலை இல்லாமல் இருக்கலாம். 39 வயதில் உபதேசம் தலைக்கு ஏறாது. அதனால் கீழ் காணும் சில ஆயுர்வேத சிகிச்சைகள் மூலம் அவர் உடல் பருமனையும், சோம்பேறித்தனத்தையும் மாற்ற முயற்சிக்கலாம்.

உடலையும் தலையையும் விரேசனம் என்ற முறைப்படி சுத்தப்படுத்துதல். விரேசனம் என்றால் வாந்தி மற்றும் பேதி மருந்து கொடுத்து குடலை சுத்தப்படுத்துவதுடன், மூக்கினுள் விடும் மூலிகைத் தைலங்களால் தலைப்பகுதியைச் சுத்தப்படுத்துவதுமாகும். இதனால் தலையைச் சார்ந்த தமஸ் எனும் மனோ தோஷம் விலகுவதால், மனமும் மூளையும் சுறுசுறுப்படையும்.

இரத்தத்தை வெளியேற்றுதல்  ரத்தக் குழாயைக் கீறி இரத்தத்தை வெளியேற்றும் சிகிச்சை முறையால் இரத்தத்தில் தேங்கியுள்ள அழுக்குகளைக் களையலாம் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. இதன் மூலம் அவருடைய சோம்பலினால் ஏற்பட்ட இரத்த அழுக்குகள் நீங்கும்.

மூலிகைப்புகை பிடித்தல் -  ஊமத்தம் இலையை காய வைத்து நெருப்பில் போட்டு வரும் புகையை முகர்வதால் மூளையிலுள்ள சோர்வையும் சோம்பலையும் மாற்றலாம்.

பசி, தாகம் ஏற்படும் வகையில் உபவாசமிருத்தல் -  இதனால் தேவையற்ற கொழுப்பு அம்சங்கள் தவிர்க்கச் செய்து வறண்டதாக்கலாம். சிந்தனையைத் தூண்டச் செய்யும் வகையில்  வேலைகளைத் தரலாம். இதனாலும் மூளையைச் சுறுசுறுப்பாக்கலாம். அவருக்கு பிடித்தமான விஷயங்களைச் சிந்தனை செய்து நன்மை பெறும் வகையில் இந்த சிகிச்சை முறையைக் கையாள வேண்டும். உதாரணமாக பாட்டிலும், வாத்தியம் இசைப்பதிலும் ஆர்வமுள்ளவராக இருந்தால் அவற்றையே பயிற்சி செய்து அவை மேலும் மெருகுற செய்யும் சிந்தனைகளைத் தூண்டி  மகிழ்ச்சியுறலாம். இன்பம் தராத படுக்கையைப் பயன் படுத்தல் ஒரு சிகிச்சை முறையாகும். இதனால் அதிக தூக்கமின்றி சோம்பலை நீக்கலாம்.

ஸத்துவம் எனும் நற்குணத்தின் ஏற்றம், பெருந்தன்மை, தமோகுண மின்மை, வறண்ட உணவு ஆகியவற்றின் மூலம் அவருடைய சோம்பலான வாழ்க்கை முறையை மாற்றி வாழ்க்கையை பயனுறும் வகையில் அமைக்கலாம். ஆயுர்வேத மருந்துகளாகிய வரணாதி கஷாயம் மற்றும் லோத்ராஸவம் போன்ற மருந்துகள் உடல் பருமனைக் குறைப்பவை. சிலாசத்து எனும் பற்பம் உடலைக் குறைப்பதுடன் ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் தரக் கூடியது. அணு தைலத்தை மூக்கினுள் விட்டு உறிஞ்சுவதால் தமோ குணம் எனும் மனோ தோஷமானது மூளையில் இருந்து நீங்கி விடும். குடல் சுத்தி முறைகளை ஆயுர்வேத மருத்துவ மனையில் தங்கி செய்து கொள்ள வேண்டியது அவசியமானது. 
(தொடரும்)

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/21/12/w600X390/rice.jpg http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/jan/26/உடல்-பருமன்-சோம்பேறித்தனம்-நீங்க-2637514.html
2631628 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் வறட்சியை ஏற்படுத்தி வலுவைச் சேர்த்தல்! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, January 12, 2017 06:13 PM +0530 ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
வயது 54. கடந்த ஏழுவருடங்களாக கழுத்து வலியால் அவதிப்படுகிறேன். கடந்த ஒரு வருடமாக கழுத்தை திருப்பக் கூட முடியவில்லை. MRI SCAN Report-இல் கழுத்து எலும்பு வில்லைகள் முழுவதுமாக தேய்ந்து விட்டது எனத் தெரிகிறது. அதிக நேரம் உட்காரவோ, படுக்கையில் மல்லாந்து படுக்கவோ இயலவில்லை. தலை படுக்கையில் படுவதில்லை. விரைப்பாக உள்ளது. பஸ்ஸில் கழுத்துப்பட்டை போட்டுக் கொண்டால் தான் போக முடிகிறது. உட்கார்ந்த நிலையில் இருகைகளும், இருகால்களும் மரத்துப் போகின்றன. கழுத்தை மெதுவாகத் திருப்பினாலும் எலும்புகள் உரசும் சத்தம் வருகிறது. இதற்கு ஆயுர்வேத சிகிச்சை உள்ளதா?

அ.சோமசுந்தரம், பவானி.

இளைத்துப்போன ஒரு நபரை, புஷ்டியாக்க  பயன்படுத்தும் மருந்துகளை முதலில் பயன்படுத்தாமல், அவர் மேலும் இளைப்பதற்கான சிகிச்சை முறைகளை சிறிது காலம் செய்வதால் நல்ல பலன்களைப் பெறலாம் எனும் ஓர் ஆயுர்வேத சித்தாந்தம் தங்களுக்குப் பயன்படலாம். அந்தவகையில் Ankylosing spondylitis, loss of joint space at C2,C3 and C4 facet joint. Small hyperintense cyst at right C7 neural foramina Guß MRI SCAN Report இல் வந்திருக்கும் தங்களுக்கு, சில நாட்கள் மூலிகைகளால் கட்டப்பட்ட பொடி ஒத்தடம் சூடாகக் கொடுப்பதும் அதன் பிறகு வறட்சி ஏற்படுத்தும் மூலிகைப் பற்று இடுவதும் அவசியம். 

காலையில் உணவிற்கு முன், கொட்டஞ்சுக்காதி, ஏலாதி, ராஸ்னாதி என்று பெயரில் விற்கப்படும் சூரண மருந்துகளைப் பொடி ஒத்தடமாக சூடாகக் கொடுப்பதும், இஞ்சி சாற்றுடன் கலந்து ராஸ்னாதி சூரணத்தைச் சூடாக்கி மாலையில் பற்று இடுவதன் மூலமாக வறட்சி ஏற்பட்டு, கழுத்து எலும்பு தேய்மானம் ஏற்பட்டுள்ள பகுதிகளை வறட்சியுறச் செய்ய வேண்டும்.

அதன் பிறகு, அதே கழுத்தினுடைய பகுதியில் கார்ப்பாஸூஸ்தியாதி தைலத்தை சூடாக்கி துணியில் நனைத்து இடுவதும், ஆமணக்கு, நொச்சி, கற்பூரம், புங்கம், கல்யாண முருங்கை, சித்தரத்தை இலை ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீர் போட்டுக் காய்ச்சி, அதிலிருந்து வெளியேறும் நீராவியை, கழுத்தில் நன்கு படும்படியாகக் காட்டுவதும் நலமே. இதனால் விரைப்பான தன்மையைப் போக்கிக் கொள்ளலாம். இதற்கு ஸ்நேஹ-ஸ்வேதம் என்று பெயர்.

உட்புற வறட்சியை முதலில் ஏற்படுத்திய பிறகு எலும்பு வில்லைகளை வலுப்படுத்துவதே சிறப்பு. அந்த வகையில்-  பசியைத் தூண்டி செரிமானத்தைக் கூட்டும் வகையில் உள்ள அஷ்டசூரணம், வைஷ்வானரம் சூரணம் போன்ற மருந்துகளைச் சாப்பிடச் செய்து குடலில் வாயுவின் ஓட்டத்தை அடக்க வேண்டும். எனிமா முறையும் செய்ய வேண்டும். 

அதன் பிறகு உட்புற நெய்ப்பைத் தரும் ஷீரபலா101, விதார்யாதி கிருதம், அஸ்வகந்தாதி லேஹ்யம் போன்ற மருந்துகளைப் பிரயோகிப்பதன் மூலம், வில்லைகளை வலுப்படுத்தி, அவற்றிற்குத் தேவையான நெய்ப்பும், வலுவையும் சேர்க்கலாம். இவை யாவும் சிறப்பான  முயற்சிகளே. இதையும் மீறி வில்லைகளின் தேய்மானம் சரியாகாதிருந்தால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம். மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் அனைத்தும் ஆயுர்வேத மருத்துவமனைகளில் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

]]>
http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/jan/12/வறட்சியை-ஏற்படுத்தி-வலுவைச்-சேர்த்தல்-2631628.html
2627719 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் நரம்புகளை வலுப் பெறச் செய்ய... டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Thursday, January 5, 2017 05:40 PM +0530 ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

என் வயது 81. கொட்டாவி விடும் போது காது அருகில் நரம்பு பிடித்துக் கொள்கிறது. சில சமயம் கை குரக்கலிபிடித்துக் கொள்கிறது. வலது கால் விரைத்து நீட்டினால் நரம்பு பிடித்துக் கொள்கிறது. நீவினால் சரியாகிவிடுகிறது. இவை எதனால் ஏற்படுகிறது.


- சு.உலகநாதன்,  திருநெல்வேலி - 7

வயோதிகத்தில் வாயுவின் ஆதிக்க குணங்களாகிய வறட்சி, லேசானதன்மை, குளிர்ச்சி, சொரசொரப்பு, ஊடுருவும்தன்மை மற்றும்  நகரும் தன்மை ஆகியவை மனித உடலில் இயற்கையாகவே அதிகரிக்கின்றன. இக்குணங்களுக்கு நேர் எதிராகிய நெய்ப்பு, கனம், சூடு, வழுவழுப்பு, மந்தத்தன்மை, நகராத நிலைத்தன்மை போன்ற குணங்களை உணவாகவும் மருந்தாகவும் செயலாகவும் பயன்படுத்தினால் உங்களுடைய நரம்பு பிரச்னைக்கு அதுவே தீர்வாகலாம். அந்த வகையில்    உடலுக்கு நெய்ப்பு தரும் உட்புற மருந்தாகிய விதார்யாதி க்ருதம் எனும் நெய்மருந்தை சுமார் பத்து மி.லி. காலை, மாலை உருக்கி, வெறும் வயிற்றில் 3-6 மாதங்கள் சாப்பிடவும். தோலுக்கு பதமளித்து நெய்ப்புத் தரும் மஹாமாஷ தைலத்தை காலையில் வெதுவெதுப்பாக உடலெங்கும் தடவி அரை மணிநேரம் ஊறிய பிறகு, வெந்நீரில் குளிக்கவும். உடலை வருத்தும் உழைப்பை நிறுத்தி, நிறைய ஓய்வெடுப்பதன் மூலமாக, செயல்வடிவமாக நீங்கள் நெய்ப்பைப் பெறலாம். உணவில் வறட்சியளிக்காத இனிப்பு, புளிப்பு மற்றும் உப்புச்சுவை ஆகியவற்றைச் சிறிது தூக்கலாகச் சாப்பிடுவதால் உணவின் மூலம் நெய்ப்பைக் குடலில் சம்பாதித்துக் கொள்ளலாம்.

 பூவன் வாழைப்பழம் அல்லது நேந்திரன் வாழைப் பழத்தை அரிந்து தயிர் மற்றும் தேன் கலந்து மதியம் சாப்பிடுவதன் மூலமாகவும், இரண்டு க்ஷீரபலா 101 எனும் கேப்ஸ்யூல் மருந்தை இரவு படுக்கும் முன் சிறிது சூடான பாலுடன் சாப்பிடுவதாலும், மதியம் படுத்து உறங்குவதன் மூலமாகவும் கனம் எனும் குணத்தை உடலில் நிரப்பி, வாயுவினுடைய லேசானதன்மை எனும் குணத்தை நீக்கலாம்.

சுக்கு, சித்தரத்தை போன்றவற்றை வகைக்கு 5 கிராம் வீதம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீருடன் வேக வைத்து அரை லிட்டராகச் சுண்டியதும் வடிகட்டி, தாகம் எடுக்கும் போதெல்லாம் சிறிது சிறிதாகப் பருகுவதாலும் வைஷ்வாநரம் எனும் சூரணத்தை அரை ஸ்பூன் காலை, இரவு உணவிற்கு அரை மணி முன் 75 மி.லி. வெந்நீருடன் பருகுவதாலும் கதகதப்பான அறையில் படுத்து உறங்குவதாலும் வாயுவினுடைய குளிர்ச்சி எனும் குணம் நரம்புகளிலிருந்து விடுபட்டு, சூடேற்றப்
படுவதால் அதுவே உங்களுக்கு நரம்பு இழுப்பைக் குறைத்துவிடும்.

மற்ற மூன்றாகிய வழுவழுப்பு, மந்தகத்தன்மை, நிலைத்ததன்மை ஆகிய குணங்களை உணவில் சுமார் பத்து முதல் பதினைந்து மி.லி. வரை உருக்கிய பசு நெய்யை சூடான புழுங்கலரிசி சாதத்துடன் காலை, இரவு முதல் இரு கவளங்களைச் சாப்பிடுவதன் மூலமாகவும் அப்ரக பஸ்மம் மற்றும் சங்க பஸ்மம்  எனும் பஸ்ம மருந்துகளைச் சிறிது நெய் மற்றும் தேன் குழைத்து மதிய உணவிற்கு 1 மணிநேரம் முன்பாக நக்கிச் சாப்பிடுவதாலும், மனதில் கோபதாபங்களுக்கு இடம் தராமல், மகிழ்ச்சியுடன் கூடிய குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாலும் பெறலாம்.

ஆயுர்வேத மருத்துவமனைகளில் செய்யப்படும் தைலதாரா சிகிச்சை, நவரக்கிழி சிகிச்சை தலைப்பொதிச்சல் சிகிச்சை, சிரோவஸ்தி சிகிச்சை முறைகள் மூலமாகவும் நம் உடலிலுள்ள நாடி நரம்புகளை வலுப் பெறச் செய்யலாம்.

(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/7/13/17/w600X390/stock-photo-of-banana-closeup-boutique-142922.jpg http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2017/jan/05/நரம்புகளை-வலுப்-பெறச்-செய்ய-2627719.html
2559959 தொடர்கள் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் அரிப்புக்குக் காரணம்... உட்புறக் கழிவுகள்! டாக்டர் எஸ். சுவாமிநாதன் DIN Monday, September 26, 2016 04:07 PM +0530 என் வயது 71. ஓய்வூதியர். இரண்டு கை மணிக்கட்டு, புறங்கைப் பகுதிகளில் அரிப்பு அதிகமாக இருக்கிறது. பிடறியிலும் அதே அறிகுறி உள்ளது. இதற்கான சிகிச்சைமுறையைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
 த.நாகராஜன், சிவகாசி.

வயோதிகத்தில் உப்புசத்து உடலில் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. சிறுநீரகங்களின் வழியாக வெளியேற வேண்டிய தேவையற்ற உப்பு மற்றும் தாதுப்பொருட்கள் தேக்கமடைந்தால் அது உடலில் எந்த பகுதி தளர்ந்திருக்கிறதோ, அந்தப் பகுதியில் குடிகொண்டு அரிப்பை ஏற்படுத்தும். அதனால் வெளிப்புறப்பூச்சுகள் மட்டும் இதில் பயன்பெறுவதில்லை. திரிதோஷங்களாகிய வாத, பித்த, கபங்களின் சமச்சீரான நிலையில் நோய்கள் ஏதும் தோன்றுவதில்லை என்றும், அவற்றில் ஏற்படும் ஏற்றமும் இறக்கமுமே நோயாக மாறுவதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அந்தவகையில் வாயு அதிகரிக்கக் கூடிய வயதில் தங்களுக்கு கபத்தினுடைய சேர்க்கையும் சேருமானால் அதுவே தோலில் அரிப்பை ஏற்படுத்தக் கூடும். இவ்விரு தோஷங்களையும் சமநிலைப்படுத்தக் கூடிய ஏலாதி என்ற பெயரிலுள்ள தைல மருந்தை காலை, மாலை இருவேளை வெளிப்புறப் பூச்சாகப் பயன்படுத்தி சுமார் அரை  மணிநேரம் ஊற வைத்து ஏலாதி சூரணம் என்ற மருந்துடன் கடலை மாவு கலந்து தயிர் மேலில் நிற்கக் கூடிய தண்ணீருடன் குழைத்து அந்த எண்ணெய்ப் பசையை அகற்றுவதற்காக நீங்கள் பயன்படுத்தலாம்.

உட்புற உறுப்புகளின் செயல்திறன்பாடானது குறையும் பட்சத்தில் இந்த உபாதை தோல்புறத்தில் பிரதிபலிக்கலாம். அதிலும் முக்கியமாக குடலின் உட்புற சவ்வுகளில் தேங்கும் அழுக்கினால் தோல் அரிப்பு ஏற்படும் என்றும் ஒரு வினோதமான குறிப்பை ஆயுர்வேதம் வெளிப்படுத்துகிறது. அதனால் குடல் சுத்தம் தாதுக்களில் படிந்துள்ள கண்ணுக்குத் தெரியாத அழுக்குகள், மலம், சிறுநீர், வியர்வை ஆகிய பகுதிகளைத் தாங்கக் கூடிய பை மற்றும் குழாய்களில் படியும் படிவங்களையும் நீக்கினால் வெளிப்புறத்தில் ஏற்பட்டுள்ள தோல் அரிப்பானது மறைந்துவிடும். குடல் சுத்தத்தை நேரடியாகச் செய்யக்கூடாது என்ற நியமம் இருப்பதால் ஆயுர்வேத மூலிகை நெய் மருந்தாகிய திக்தம் அல்லது மஹாதிக்தகம் ஆகியவற்றில் ஒன்றை சுமார் பதினைந்து மில்லி லிட்டர் காலை, மாலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட உட்புறபடிவங்களை நெகிழ வைத்து அவற்றைக் குடலுக்குக் கொண்டு வரக்கூடிய அளவிற்கு இந்த நெய் மருந்துகள் மாற்றித் தரும். நெருப்பினுடைய சம்பந்தமில்லாமல் வியர்வையை வரவழைக்கக் கூடிய கம்பளியைப் போர்த்திக் கொள்ளுதல், வேகமான நடைப் பயிற்சி, சிலம்பாட்டம் போன்றவற்றின் மூலமாக நன்றாக வியர்வையை உடலில் ஏற்படுத்தி அதன்மூலம் உட்புறக் கழிவுகளை திரவமாக்கி குடல் உட்புறப் பகுதிகளில் விரைவாக எடுத்துச் செல்லும் வழியை இந்த வியர்வையின் மூலமாகப் பெறலாம். குடல் பகுதியில் குவிந்துள்ள அழுக்குகளை ஆசனவாய் வழியாக நீர்பேதியாக வெளியேற்றும் த்ரிவிருத் லேஹ்யம், அவிபத்தி சூரணம், மிஸ்ரகஸ்நேஹம், மாணிபத்ரம் குடம் போன்றவற்றில் ஒன்றை மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிட்டு அதன் மூலம் பெறும் குடல் சுத்தமானது தோலில் ஏற்பட்டுள்ள அரிப்பை நீக்குவதற்கான சிறந்த சிகிச்சை முறையாகும். அரிப்பு குறைந்தாலும், வேப்பெண்ணெய்யைச் சிறிதுகாலம் இளஞ்சூடாக அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் பூசி அரை முக்கால் மணிநேரம் ஊறிய பிறகு குளிக்கலாம்.

 உணவில் புளித்த தயிர், கத்தரிக்காய், நல்லெண்ணெய், கடுகு, உளுந்து சேர்க்கக் கூடிய இட்லி, தோசை, வடை, புலால் உணவு, பகல் தூக்கம், கனமான பொருட்களாகிய மைதா, பன்-பட்டர்-ஜாம், பிஸ்கட்டுகள், இனிப்பு வகைகள் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டியவை. குடிக்கக்கூடிய தண்ணீரையும் ஒரு மூலிகைத் தண்ணீராக மாற்றினால் சிறப்பாக அமையும். அந்தவகையில் கருங்காலிக் கட்டை, சரக்கொன்றைப்பட்டை, நன்னாரிவேர்ப்பட்டை ஆகியவற்றை வகைக்கு ஐந்து கிராம் வீதம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அரை லிட்டராகக் குறுக்கி வடிகட்டி ஒருநாளில் பலதடவை சிறுகச் சிறுகப் பருகுவதால் குடல் உட்புற சுத்தம் பெறுவதுடன் இரத்தமும் சுத்தமாகும். அங்குமிங்கும் ஒட்டியிருக்கக் கூடிய கபதோஷத்தின் குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம் போன்ற குணங்களுக்கு நேரெதிராகச் செயல்பட்டு அவற்றை நீர்க்கச் செய்து சிறுநீர் மலம் மற்றும் வியர்வையின் மூலமாக இந்த தண்ணீரே வெளியேற்றிவிடும் சிறப்பு வாய்ந்தது. நால்பாமரப்பட்டை எனப்படும் ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இத்திப்பட்டை மற்றும் வேப்பம்பட்டை, புங்கம்பட்டை, ஏழிலம்பாலைப்பட்டை, வில்வமரப்பட்டை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தண்ணீரை, குளிப்பதற்காக பயன்படுத்தினால் அரிப்பு குறைவது திண்ணம்.
 (தொடரும்)

 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/30/w600X390/ayurveda1.jpg http://www.dinamani.com/health/health-serials/ayurvadham/2016/sep/06/அரிப்புக்குக்-காரணம்-உட்புறக்-கழிவுகள்-2559959.html