செம்மறியாடுகள் வளர்ப்பில் அதிக லாபம் ஈட்ட உதவும் மேய்ச்சல் தரை

மேய்ச்சல் தரை அமைத்து செம்மறியாடுகளை வளர்க்கும் போது செலவு குறைவதுடன், தரமான பசுந்தீவனமும் ஆடுகளுக்குக் கிடைக்கிறது.
செம்மறியாடுகள் வளர்ப்பில் அதிக லாபம் ஈட்ட உதவும் மேய்ச்சல் தரை

நாமக்கல்: மேய்ச்சல் தரை அமைத்து செம்மறியாடுகளை வளர்க்கும் போது செலவு குறைவதுடன், தரமான பசுந்தீவனமும் ஆடுகளுக்குக் கிடைக்கிறது. அதன் மூலம் துரித வளர்ச்சியை ஆடுகள் எட்டுவதால், அதிக லாபத்துக்கு ஆடுகள் விற்பனையாகும் என நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என்.அகிலா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது: ஆடு வளர்ப்பைப் பொறுத்தவரை மேய்ச்சல் நிலம் இருந்தால் மட்டுமே சாத்தியம். ஆடுகளில் பல்வேறு வகை இருந்தாலும், செம்மறி ஆடுகளின் தீவன மேலாண்மையில் மேய்ச்சல் நிலம் பெரும் பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் மிகக் குறைந்த அளவிலேயே மேய்ச்சல் நிலம் உள்ளது.
மேலும், அவற்றில் இருந்து 4 முதல் 6 மாதம் வரைதான் பசுந்தீவனம் கிடைக்கிறது. எனவே, செம்மறியாடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்த்து பயன்பெறும் வகையில், தரமான மேய்ச்சல் நிலங்களை உருவாக்கி, அவற்றைப் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மரம் சார்ந்த மேய்ச்சல் நிலம் உருவாக்கும் போது, ஆண்டு முழுவதும் பசுந்தீவனம் கிடைக்க வாய்ப்புள்ளது. நீலம், கருப்பு மற்றும் வெள்ளை, கொழுக்கட்டைப்புல், மார்வெல்புல், ஊசிப்புல் போன்ற தீவனப்புல் வகைகளும், முயல் மசால், சிராட்ரோ, நரிபயறு, வேலி மசால், சங்கு புஷ்பம் போன்ற பயறு வகை தீவனப் பயிர்களும், மேய்ச்சல் நிலத்துக்கு ஏற்றவை.
மேய்ச்சல் நிலம் தயாரிக்கும் முறை: பருவ மழை தொடங்கியவுடன், நிலத்தை நன்கு உழுது ஹெக்டேருக்கு 750 கிலோ தொழு உரம் அல்லது 10 டன் குப்பை எரு, 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 10 பாக்கெட் ரைசோபியம் இடவேண்டும்.
மேலும், 55 கிலோ பாக்டீரியா, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 23 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். தொடர்ந்து, நீல கொழுக்கட்டைப்புல் 6 கிலோ, முயல் மசால் 3 கிலோ, சிராட்ரோ 2 கிலோ, சங்குப்பூ 2 கிலோ என்ற அளவில் ஒரு ஹெக்டேருக்கு விதைகளைக் கலந்து பரவலாகத் தூவி விதைக்க வேண்டும்.
அதே நிலத்தில், வரிசைக்கு வரிசை ஒரு மீட்டர் இடைவெளியில், சூபாபுல், அகத்தி, சித்தகத்தி போன்ற மரங்களையும் கருவேல், வெள்வேல், கொடுக்காப்புலி போன்ற மரக்கன்றுகளையும் 6 மீட்டர் இடைவெளியில் குழி எடுத்து நட வேண்டும்.
மேய்ச்சல் நிலத்தைச் சுற்றி நான்கு புறங்களிலும் 5 மீட்டர் இடைவெளியில், அனைத்து வகை தீவன மரங்களையும் மாற்றி மாற்றி நட வேண்டும். விதைத்த மூன்றாம் மாதத்தில் இருந்து கொழுக்கட்டைப் புல், சிரோட்ரோ, முயல் மசால் போன்றவை நன்கு வளர்ந்து மேய்ச்சலுக்குப் பயன்படும்.
ஹெக்டேருக்கு 40 டன் பசுந்தீவனம்: இரண்டாம் ஆண்டில் இருந்து தீவன மரங்களில் இருந்து பசுந்தீவனம் கிடைக்கும். ஒரு ஹெக்டேருக்கு மேய்ச்சல் நிலத்திலிருந்து மானாவாரியில் 35 முதல் 40 டன்கள் பசுந்தீவனம் பெறலாம்.
இதுபோன்ற மரம் சார்ந்த ஒரு ஹெக்டேர் மேய்ச்சல் நிலத்தில் 20 செம்மறியாடுகளை சிறந்த முறையில் பராமரிக்கலாம்.
மா, பலா, கொய்யா, புளி, நாவல், இலந்தை போன்ற நன்கு வளர்ந்த மரங்கள் கொண்ட பழத்தோட்டத்திலும், மரங்களுக்கு இடையில் தீவனப்பயிர்கள் சாகுபடி செய்து செம்மறியாடுகளை நேரடியாக மேய்ச்சலில் வளர்க்கலாம். ஆடுகளுக்கு மரத்திலிருந்து உதிர்ந்த இலைகளும், கூடுதல் தீவனமாகக் கிடைக்கும்.
ஆகவே, மேய்ச்சல் தரை அமைத்து செம்மறியாடுகளை வளர்க்கும் போது செலவு குறைவதுடன், தரமான பசுந்தீவனமும் ஆடுகளுக்குக் கிடைக்கிறது. அதன் மூலம் துரித வளர்ச்சியை ஆடுகள் எட்டுவதால், அதிக லாபத்துக்கு விற்பனையாவதற்கு வாய்ப்பு உள்ளது. மேய்ச்சல் தரை அமைப்பது செம்மறியாடுகளுக்கு இன்றியமையாத ஒன்று என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com