இதயத்தைப் பாதுகாக்கும் சிறுதானிய உணவுகள்

சிறுதானிய உணவுகள் ரத்த அழுத்தத்தைச் சீராக்குவதால், இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.சிறுதானிய பயிர் சாகுபடி
இதயத்தைப் பாதுகாக்கும் சிறுதானிய உணவுகள்

நாமக்கல்: சிறுதானிய உணவுகள் ரத்த அழுத்தத்தைச் சீராக்குவதால், இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.சிறுதானிய பயிர் சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் வழங்குகிறது.
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என்.அகிலா, பேராசிரியர் அழகுதுரை ஆகியோர் தெரிவித்தது:
சிறு தானியங்களில் சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, பனிவரகு மற்றும் குதிரைவாலி போன்றவை மிக முக்கியமானவை.
மனிதர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதில் சிறு தானியங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சிறு தானியங்கள் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் நுண் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுத்து, பெருங்குடலின் செயல்பாட்டைச் சீராக்குகின்றன.
சிறு தானியங்களில் மக்னீசியம் சத்து அதிக அளவில் உள்ளதால், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி வராமல் தடுக்கின்றன. ரத்த அழுத்தத்தைச் சீராக்குவதால், இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.
தினமும் சிறு தானியங்களைப் பயன்படுத்துவோருக்கு இரண்டாம் வகை சர்க்கரை நோய் வருவதில்லை. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. ஊட்டச்சத்துக் குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்க உதவுகின்றன.
சிறு தானிய உணவுகள் பெண்களுக்கு பித்தப் பையில் கற்கள் உருவாவதைத் தடுக்கின்றன. அதிக அளவு நார்ச்சத்து நிறைந்த சிறு தானியங்கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கின்றன. உடல் பருமன் மற்றும் எடையினைச் சீராக வைத்திருக்கவும் உதவுகின்றன.
சாகுபடி முறைகள்:
சிறு தானியங்கள் சாகுபடிக்கு குறைந்த அளவு நீரே தேவைப்படுகிறது. இறவை மற்றும் மானாவாரி நீர்நிலைகளில், நன்கு வளரக் கூடியவை. சிறு தானியங்களின் வயது குறைவு (75-90 நாள்கள்). மேலும், பூச்சி நோய் தாக்குதல் மற்று பயிர்களை விட குறைவு. அறுவடைக்குப் பின் தட்டைகளை, கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தலாம்.
மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் மற்றும் பொருள்கள்: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சிறு தானிய பயிர்களில் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்த திட்டமானது கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இத் திட்டத்தின் மூலம் சிறு தானியப் பயிர்கள் சாகுபடி செய்யும் 5 விவசாயக் குழுக்களுக்கு கல் நீக்குதல், தரம் பிரித்தல், உமி நீக்குதல், மாவு அரைத்தல், சளித்தல் மற்றும் சிப்பம் இடும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இக் குழுக்கள் நாமக்கல் மாவட்டத்தில், முத்துக்காப்பட்டி, சின்னப்பள்ளம்பாறை, ஆர்.புதுப்பட்டி, ராமநாயக்கன்பட்டி மற்றும் சின்னமணலி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. சிறு தானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த இயந்திரங்களை குறைந்த வாடகைக்குப் பயன்படுத்தி பயன் பெறலாம்.
சிறு தானிய உணவுகள்: இத் திட்டத்தின் மூலம், ருசி மற்றும் ஆரைக்கால் சிறுதானிய உணவு என்ற பெயரில் சிறுதானிய அரிசி, மாவு, சத்துமாவு, அதிரசம், ரவை, லட்டு, மிக்சர், முறுக்கு, சிறுதானிய இட்லி பொடி மற்றும் நவதானிய பருப்புப் பொடி போன்ற பொருள்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது சிறு தானியங்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் சிறு தானியப்பயிர்கள் சாகுபடியை மேற்கொண்டு கூடுதல் வருவாய் பெறலாம்.
மேலும், சிறுதானியப் பயிர்கள் சாகுபடி, உயர் விளைச்சல் ரகங்கள் மற்றும் மதிப்புக் கூட்டுதல் தொடர்பாக வேளாண் அறிவியல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com