நெற்பயிரைத் தாக்கும் ஆனைக் கொம்பன் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

நெல் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் ஆனைக் கொம்பன் பூச்சித் தாக்குதலில் இருந்து பயிரைப் பாதுகாப்பது குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், பையூரில் உள்ள மண்டல
நெற்பயிரைத் தாக்கும் ஆனைக் கொம்பன் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

கிருஷ்ணகிரி: நெல் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் ஆனைக் கொம்பன் பூச்சித் தாக்குதலில் இருந்து பயிரைப் பாதுகாப்பது குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், பையூரில் உள்ள மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் என்.தமிழ்ச்செல்வன் அறிவுறுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் ஆனைக் கொம்பன் ஈக்களின் தாக்குதல்தான் பரவலாகக் காணப்படுகிறது.
கால் இல்லாத புழுக்களான இவை, வளரும் நெற்பயிரில் தூர்களைத் தாக்குகிறது. தூர்களின் வழியே நுழைந்து, வளரும் பகுதிகளை உண்கிறது. இவை தாக்கப்பட்ட பயிர்களில் நெற்கதிர்கள் பிடிப்பது இல்லை. மேலும், பயிர் வளர்ச்சிக் குன்றிவிடும். தாக்குதலுக்கு உள்ளான தூர்கள் வெள்ளித்தண்டு போல் அல்லது வெங்காய இலைப்போல் காணப்படும்.
பூச்சி தனது முட்டைகளை இலைப் பகுதியின் கீழ் 2 முதல் 6 முட்டைகளை இடுகிறது. இந்த முட்டைகள் நீளமாகவோ அல்லது உருளை வடிவத்திலோ இருக்கும். மேலும், வெள்ளை அல்லது சிவப்பு (அ) இளம்சிவப்பு நிறத்தில் மின்னுவது போல் தோற்றமளிக்கும். முட்டையிலிருந்து வெளியேறும் கால் இல்லாத புழுக்கள் ஊர்ந்து சென்று, பூ மொட்டுகளுக்குள் செல்கிறது. பின் அதில் கூட்டுப் புழுவாக வெளியே வருகிறது. முதிர்ச்சியடைந்த பூச்சிகள், மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் கொசு போன்று சிறிதாகக் காணப்படும்.
இலையில் உள்ள பனித் துளிகளை இவை உள்கொள்ளும். ஆனைக் கொம்பன் பூச்சியின் தாக்குதல் அதாவது, வெங்காய இலைகள் அல்லது வெள்ளித் தண்டுகள்போல 10 சதவீதத்துக்கு மேல் இருந்தால், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் பரிந்துரைக்கப்படும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு உத்திகளைச் செயல்படுத்தி பூச்சியை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு உத்திகள்:
பிளாஸ்டிகேஸ்டரை 10 சதுர மீட்டருக்கு ஒன்று என்ற வீதத்தில் நாற்று நட்ட 10-ஆவது நாளில் இட வேண்டும். அறுவடையை உடனே செய்து, நிலத்தை உழவு செய்ய வேண்டும்.
வயல்களில் இருக்கும் மாற்றுப் பயிர்களை அகற்றி, முன்கூட்டியே நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
பூச்சிக்கொல்லி மருந்துகளான பாசலோன் 35 சத ஈசி 1,500 மில்லி- ஹெக்டேர் அல்லது கார்போசல்பான் 25 சத ஈசி 800 முதல் 1000 மில்லி - ஹெக்டேர் அல்லது குளோரிபயிரிபாஸ் 20 சதம், ஈசி 1,250 மில்லி - (ஹெக்டேருக்கு) போன்ற மருந்துகளைப் பயன்படுத்தலாம்.
நாற்றங்காலில் இருந்து நாற்றுக்களைப் பிடுங்கி வேர்களை 0.5 சத குளோரிபயிரிபாஸ் கரைசலில் நனைத்து நடவு செய்வதன் மூலம் ஆனைக் கொம்பன் தாக்குதலிலிருந்து பயிர்களை எதிர்காலத்தில் பாதுகாக்கலாம் எனத் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com