நெற்பயிரில் இலைக் கருகல் நோய்த் தாக்குதல்

சம்பா மற்றும் தாளடி நெல் வயல்களில் இலைக் கருகல் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல்துறை உதவிப் பேராசிரியர் ராஜா. ரமேஷ்
நெற்பயிரில் இலைக் கருகல் நோய்த் தாக்குதல்

சம்பா மற்றும் தாளடி நெல் வயல்களில் இலைக் கருகல் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல்துறை உதவிப் பேராசிரியர் ராஜா. ரமேஷ் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன் விவரம்: 
பூஞ்சாணத்தால் உண்டாகும் இலையுறைக் கருகல் நோய்த் தாக்குதல் நெற் பயிரின் தூர்க் கட்டும் பருவத்திலேயே தொடங்கினாலும், பூக்கும் பருவத்திலும், பயிர் அறுவடைக்கு நெருங்கும் நேரத்திலும் அறிகுறிகள் அதிகமாகவும், தெளிவாகவும் காணப்படும். இதன் தாக்குதலால் 16 முதல் 49 சதவீத மகசூல் இழப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நோய் பரவுவதற்கு 95 சதவீதத்துக்கும் அதிகமான ஈரப்பதம், மிதமான வெப்ப நிலை (30 முதல் 32 சென்டி கிரேடு) மிகவும் ஏற்றதாகும். திடீரென உயரும், குறையும் வெப்ப நிலையும் நோய் பரவுவதற்கு உகந்ததாகும். அதிக தழைச்சத்து உரமிடுதல், நாற்றுகளை நெருக்கமாக நடுதல், நிழற்பகுதிகளில் வளரும் பயிர்களில் இந்நோயின் தாக்குதல் காணப்படும்.
இந்நோயானது முதலில் நீர் மட்டத்துக்கு அருகிலுள்ள இலையுறையில் முட்டை வடிவ அல்லது நீண்ட உருளை வடிவத்துடன் கூடிய பழுப்பு கலந்த பச்சை நிற புள்ளிகள் உண்டாகும். இப்புள்ளிகள் பிறகு, பெரியதாகி அருகிலிருக்கும் புள்ளிகளுடன் ஒன்றோடு ஒன்றாக இணைந்து விடும். 
அப்போது, அந்த இடத்திலுள்ள திசுக்கள் அழிக்கப்படுவதால், இலை இறந்து விடும். தாக்குதல் மிகுந்து காணப்படும்போது தூர்களிலுள்ள அனைத்து இலைகளும் கருகியதுபோல் காட்சியளிக்கும். கதிர் உருவாகும் சமயங்களில் தாக்குதல் காணப்பட்டால் பயிரின் கீழ் பகுதிகளிலுள்ள கதிர்களில் மணிகள் முழுவதும் உருவாகாமல் இருப்பதைக் காணலாம்.
இதைக் கட்டுப்படுத்த நோய் தாக்கப்பட்ட பயிரின் பாகங்களை பறித்து அழித்துவிட வேண்டும். 
நெருக்கமாக நடவு செய்யாமல் போதிய இடைவெளி இட்டு நடவு செய்ய வேண்டும். தழைச்சத்து உரங்களை பிரித்து இட வேண்டும். நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் பசுந்தாள் உரப் பயிர்களை கடைசி உழவில் மடக்கி உழுவதனால் மண்ணிலுள்ள பூஞ்சாண வித்துக்களை அழிக்கலாம்.
வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 400 கிலோ என்ற அளவில் இடுவதினால் இந்நோயின் பாதிப்பை தடுக்க இயலும். சூடோமோனாஸ் புளோரசன்ஸ் உயிரியல் கொல்லி மருந்து ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் நாற்று நட்ட 45-ஆவது நாள் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். 
இதற்கு 10 நாள்களுக்குப் பிறகு தாக்குதலைப் பொருத்து இதே அளவு மீண்டும் தெளிக்க வேண்டும். யூரியா, ஜிப்சம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு இவற்றை 5 : 4 : 1 என்ற அளவில் கலந்து பயன்படுத்த வேண்டும். அதிக அளவிலான சாம்பல் சத்து இந்நோயின் தாக்குதலைக் குறைக்கும் என்றார் அவர்.
இலை சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள்
பெருந்துறை: நெற்பயிரில் இலை சுருட்டுப் புழுவின் தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. இதைக் கட்டுபடுத்த கீழ்கண்ட முறைகளைப் பின்பற்றலாம் என பெருந்துறை வேளாண்மை உதவி இயக்குநர் ரங்கநாயகி தெரிவித்துள்ளார்.
இலை சுருட்டுப் புழுவின் தாக்குதலுக்கான அறிகுறிகள்: இலைகள் நீள்வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். பச்சை நிற புழுக்கள், அதன் கழிவுகள் மடிப்புக்குள் இருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களைச் சுரண்டுவதால், இலைகள் வெண்மையாக மாறி காய்ந்திருக்கும். தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும், வெண்மையான நிறத்தில் காய்ந்திருக்கும். இலை சுருட்டுப் புழுவின் அந்துப் பூச்சியானது, மஞ்சளான பழுப்பு நிற இறக்கைகளுடன் காணப்படும். அவற்றின் முன், பின் இறக்கைகளில் அடர்ந்த நிறத்துடன் அலை அலையாய் கோடுகள் காணப்படும். 
கட்டுப்படுத்தும் முறைகள்: தேவைக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதைத் தவிர்க்கவும். வயல் வரப்புகளைச் சுத்தமாகவும், வயலில் களைகள் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த இனக் கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு 5 என்ற அளவில் பயன்படுத்தலாம் அல்லது விளக்குப் பொறிகளை இரவு நேரங்களில் 2 ஏக்கருக்கு ஒன்று என்கிற அளவில் வைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் - முட்டை ஒட்டுண்ணிகளை நடவு செய்த 37 அல்லது 44, 51-ஆவது நாள்களில் மொத்தம் 3 முறை என்கிற அளவில் விட வேண்டும். வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் அல்லது வேப்பெண்ணெய் 3 சதவீதம் (1 லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி.) அல்லது அசார்டிராக்டின் 0.03 சதவீதம், 400 மி.லி. மருந்தை ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
மேலும், தாக்குதல் பொருளாதார சேத நிலையைத் தாண்டும்போது புரபினோபாஸ் 50 ஈ.சி-400 மி.லி., இகுளோட்ல்பைட்ல்பாஸ் 20 ஈ.சி - 500 மி.லி., இகார்டாப் ஹைட்ரோகுளோரைடு - 50 எஸ்.பி - 400 கிராம், குளோரன் ட்ரான்லிபுரோல் 18.5 எஸ்.சி - 60 மி.லி. ஆகிய ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒன்றை ஓர் ஏக்கருக்கு 200 லி தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்: பயிருக்குத் தேவையான சரியான மருந்துகளை சரியான அளவில் தெளிக்க வேண்டும். பயிர் பாதுகாப்பு மருந்துகளை காலை 10 மணிக்குள்ளும், மாலை 4 மணிக்குப் பிறகும் தெளிக்க வேண்டும். மருந்து கலக்கும்போது பரிந்துரைக்கப்பட்ட தண்ணீர் அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மருந்து தெளிப்பவர் கையுறை, காலுறை, மூக்கு, வாய் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். காற்றுவீசும் திசையிலேயே மருந்து தெளிக்க வேண்டும். 
காற்று அடிக்கும் திசைக்கு எதிர் திசையில் மருந்து அடிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
தரமற்ற, தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை உபயோகிக்கக் கூடாது. பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும்போது, விசைத் தெளிப்பான் எனில் அதிக பட்சம் 10 டேங்க், கை தெளிப்பான் எனில் 16 டேங்க் மட்டுமே ஒருவர் தெளிக்க வேண்டும். அதற்கு, அதிகமாக தெளிக்கும்போது உடல் நலக்குறைவு ஏற்பட வாய்புள்ளது.
எனவே, மனிதர்கள், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பாக பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்தலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com