வாழப்பாடி பகுதியில் கடும் வறட்சி: 500 ஹெக்டேர் பாக்கு மரங்கள் கருகின

வாழப்பாடி பகுதியில் பருவ மழை பொய்த்து கடும் வறட்சி நிலவுவதால், 500 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள நீண்டகால பலன் தரும் பாக்கு மரங்கள் காய்ந்து கருகின. இதனால், விவசாயிகள் வேதனை
வாழப்பாடியை அடுத்த இடையப்பட்டி புதூர் கிராமத்தில் பாசனத்துக்கு வழியின்றி கருகி நிற்கும் பாக்கு மரங்கள்.
வாழப்பாடியை அடுத்த இடையப்பட்டி புதூர் கிராமத்தில் பாசனத்துக்கு வழியின்றி கருகி நிற்கும் பாக்கு மரங்கள்.

வாழப்பாடி பகுதியில் பருவ மழை பொய்த்து கடும் வறட்சி நிலவுவதால், 500 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள நீண்டகால பலன் தரும் பாக்கு மரங்கள் காய்ந்து கருகின. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பாப்பநாயக்கன்பட்டி கரியகோயில் அணை பாசன வசதி பெறும் கிராமங்கள், வசிஷ்டநதி மற்றும் வெள்ளாற்றுப் படுகை கிராமங்கள் உள்ளிட்ட 200 கிராமங்களில், 3,000 ஹெக்டேர் பரப்பளவில், நீண்டகால பலன் தரும் பாக்கு மரங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
தொடர்ந்து 30 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும் என்பதால், பாக்கு மரங்களுக்கு முறையாக நீர்ப்பாசனம் செய்து, இயற்கை உரமிட்டு தொடர்ந்து விவசாயிகள் பராமரிக்கின்றனர். பெரும்பாலான விவசாயிகள், மகசூல் தரும் மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டுதோறும் மகசூல் உரிமையை, வியாபாரிகளுக்கு குத்தகைக்கு விடுகின்றனர்.
மகசூல் உரிமம் பெறும் வியாபாரிகளும், மகசூல் உரிமத்தை குத்தகைக்கு விடாத விவசாயிகளும், மரமேறும் கூலித் தொழிலாளர்களைக் கொண்டு, முதிர்ந்த பாக்குக் காய்களை அறுவடை செய்து தோலுரித்து வேக வைத்து, பதப்படுத்தி ஆப்பி என குறிப்பிடப்படும் கொட்டைப்பாக்கு உற்பத்தி செய்கின்றனர்.
குறிப்பாக, வாழப்பாடி, சிங்கிபுரம், பழனியாபுரம், பொன்னாரம்பட்டி, கொட்டவாடி, படையாச்சூர், பெத்தநாயக்கன்பாளையம் கிராமங்களில் கொட்டைப்பாக்கு உற்பத்தி தொழில் பெருமளவில் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஆடியில் துவங்கி தை மாதம் வரையிலான 6 மாதங்களுக்கு, மரமேறும் கூலித்தொழிலாளர்கள், பாக்குக் காய்களை உரிக்கும் பெண் தொழிலாளர்கள், வேக வைத்து பதப்படுத்துவோர், லாரிகளில் லோடு ஏற்றுவோர் உள்ளிட்ட 30,000 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
வாழப்பாடி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கொட்டைப்பாக்கு, தமிழகத்தில் கும்பகோணம், சிதம்பரம், சீர்காழி, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் பிரபல பாக்கு தயாரிக்கும் கம்பெனிகளுக்கு மட்டுமின்றி, கர்நாடகம், குஜராத், பிகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநில பான் பராக், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பாக்கு பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் ஏற்றுமதியாகிறது.
வாழப்பாடி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில், ஆண்டுக்கு 200 கோடிரூபாய் அளவுக்கு பாக்கு வர்த்தகம் நடக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வறட்சி நிலவி வருவதால், பாசனத்துக்கு வழியின்றி, 500 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள பாக்கு மரங்கள் காய்ந்து கருகிப் போயின. எஞ்சி நிற்கும் பாக்கு மரங்களிலும் எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் இல்லாததால், பாக்கு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாக்கு விலையும் வீழ்ச்சியடைந்து, ஒரு கிலோ கொட்டைப்பாக்கு, 245 ரூபாய்க்கு மட்டுமே விலை போகிறது. அதனால், விவசாயிகள், பாக்குத் தொழிலை நம்பி பிழைப்பு நடத்தி வந்த வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். வாழப்பாடி பகுதியில் கொட்டைப்பாக்கு உற்பத்தித் தொழில் நலிவடைந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com