தானியங்களைத் தாக்கும் அந்துப் பூச்சியை கட்டுப்படுத்தும் மேலாண்மை

கிடங்குகளில் சேமிக்கப்படும் தானியங்களை அந்துப் பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாக்க பூச்சி மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும்

திருவள்ளூர்: கிடங்குகளில் சேமிக்கப்படும் தானியங்களை அந்துப் பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாக்க பூச்சி மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும் என திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
 இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய பூச்சியல் துறை உதவி பேராசிரியர் சுமதி கூறியதாவது:
 திருவள்ளூரை அடுத்த கொளுந்தலூரில் இயங்கி வரும் விதைப்பண்ணையில் ஆய்வு மேற்கொண்டதில் அங்குள்ள தானியங்களில் அந்துப் பூச்சியின் தாக்குதல் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
 இப்பூச்சிகள் நெல், சோளம், பார்லி, கோதுமை ஆகிய தானியங்களை குடைந்து, கடைசியில் உமி மட்டுமே மிஞ்சும். இவை 19 நாள்களில் நன்கு வளர்ச்சியடைந்து, தானியத்தின் உள்ளேயே கூட்டுப் புழுவாக மாறுகின்றன. இக்கூட்டுப்புழுவிலிருந்து 5 நாள்களில்
தாய்ப்பூச்சிகள் தானியத்திலிருந்து சிறிய துவாரத்தின் மூலம் வெளிவரும்.
  சேமிப்புக் கிடங்குகளில் பூச்சி மேலாண்மை: சேமிப்புக் கிடங்கின் சுவர் வெடிப்புகள், துவாரங்கள் மற்றும் மூலைகள் போன்ற இடங்களை பிரஷ் மூலம்
நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். தானியத்தின் ஈரப்பதத்தை 10 சதவீதத்துக்கு குறைவாக பராமரிக்க வேண்டும்.
 சேமிக்க பயன்படுத்தும் அனைத்தையும் வெயிலில் நன்கு உலர்த்த வேண்டும். மூட்டைகளை மரத்தாங்கிகள் மீது இருவரிசைகளுக்கிடையே 0.75-1.00 மீட்டர் இடைவெளியிலும் சுவர்கள் மீது மோதாமலும் அடுக்க வேணடும்.
 சேமிப்புக்கிடங்கின் சுவர், நடைபாதைகள், மரத்தாங்கி, சாக்குகள் மீது ஒரு லிட்டருக்கு 10 மில்லி லிட்டர் என்ற அளவில் மாலத்தியான்-50 தெளிக்க வேண்டும்.
 வாயூ நச்சு: ஒரு டன் தானியத்துக்கு 3 செல்பாஸ் மாத்திரை வீதம் பயன்படுத்தலாம். 28 கன மீட்டர் அளவுள்ள சேமிப்புக் கிடங்குக்கு 21 செல்பாஸ் மாத்திரைகளை பயன்படுத்தலாம். இவற்றை தார்ப்பாய் கொண்டு மூட வேண்டும்.
 தார்ப்பாயின் முனைகளை களிமண்னைக் கொண்டு பூசி, காற்றோட்டமில்லாதவாறு பாதுகாக்க வேண்டும். 5-6 நாள்களுக்கு பிறகு தார்ப்பாயின் முனைகளை பிரித்து காற்றேட்டம் ஏற்பட்ட சில மணி நேரத்துக்கு பிறகே கிடங்கின் உள்ளே செல்ல வேண்டும்.
 இந்த முறைகளைப் பயன்படுத்தி அந்துப் பூச்சி மேலாண்மையை கடைப்பிடித்து தானியங்களை பாதுகாக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com