உளுந்தில் லாபம் பெறும் வழிமுறைகள்...

பயறு வகைப் பயிர்களில் உளுந்து அதிக புரதம் மற்றும் பயன்பாடு, கலோரிச் சத்து உள்ள பயிராகும் . குறுகிய காலப் பயிராதலால்,
உளுந்தில் லாபம் பெறும் வழிமுறைகள்...

தருமபுரி: பயறு வகைப் பயிர்களில் உளுந்து அதிக புரதம் மற்றும் பயன்பாடு, கலோரிச் சத்து உள்ள பயிராகும் . குறுகிய காலப் பயிராதலால், இதனை தனிப் பயிராகவும் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். தரமான உளுந்து, நல்ல விலைக்கு விற்கப்படுவதால், வேளாண்மைத் துறையில் விதைப் பண்ணையாக பதிவு செய்து, விதைச் சான்று நடைமுறைகளைக் கையாண்டு, நல்ல லாபம் ஈட்டலாம் என்று தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வேளாண் உதவி இயக்குநர் வி. குணசேகரன் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மு.சிவசங்கரி ஆகியோர் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறும் வழிமுறைகளாவன:
தரமான விதை: இனத் தூய்மை மிக்க, பிற ரகங்கள் மற்றும் பயிர் விதைகள் கலவாத தரமான விதைகள், அதிக முளைப்புத் திறனுடன் கூடிய விதைகளைப் பயன்படுத்த வேண்டும்.
நிலத் தேர்வு: உளுந்து விதைப் பண்ணை அமைக்க உள்ள வயலில் ஏற்கெனவே உளுந்து சாகுபடி செய்திருக்கக் கூடாது. ஏனெனில், முந்தைய பயிரின் விதை இப்போது சாகுபடி செய்ய உள்ள பயிரின் விதையுடன் கலக்க வாய்ப்பு உள்ளது. வடிகால் வசதியுள்ள நல்ல நிலமாக இருப்பது அவசியம்.
பருவம்: விதைகள் முற்றும் போது, அதிக மழை மற்றும் வெயில் இல்லாமல் இருத்தல் வேண்டும். எனவே, ஆடி மற்றும் மாசிப் பட்டம் மிகவும் உகந்தது. நிலத்தினை நன்கு உழவு செய்ய வேண்டும். முதலில் உளிக் கலப்பை கொண்டு உழவு செய்தால், மண்ணின் அடியில் உள்ள கெட்டியான படுக்கை உடையும். இதனால் மண்ணின் நீர் கொள்ளும் திறன் அதிகரிக்கும்,. மேலும், வேர்கள் நன்கு வளரும். பின் 5 கலப்பையில் ஒரு சாலும், 12 கலப்பையில் ஒரு சாலும் உழவு செய்தால் மண் பொல பொலவென்று இருக்கும். நிலத்தில் ஓர் அடி இடைவெளியில் பார்கள் அமைத்து நடவு மேற்கொள்ளலாம். ஏக்கருக்கு 10 வண்டி தொழு உரம் இடுவது அவசியமாகிறது. பின்னர், 20 கிலோ யூரியா சூப்பர் 50 கிலோ அடியுரமாக பார்களின் பக்கவாட்டில் இடுதல் வேண்டும். விதைத்தவுடன் 5 கிலோ பயறு வகைகளுக்கான நுண்ணூட்டச் சத்தினை 20 கிலோ மணலுடன் கலந்து சீராகத் தூவ வேண்டும். இதனால் நுண்ணூட்டச் சத்துப் பற்றாக்குறை ஏற்படாமல் பயிர் மகசூல் கூடும்.
விதைத் தேர்வு: விதைப் பண்ணை அமைக்க தரமான சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். வேளாண்மை விரிவாக்க மையங்களில வம்பன் 4, வம்பன 5, எம்டியு 1 போன்ற ரகங்கள் தற்போது விவசாயிகளிடையே பிரபலம். மற்ற ரகங்களும் மாவட்டத்திற்கேற்ப, பயிரிடும் பருவத்திற்கேற்ப பயன்படுத்தப்படுகிறது. சராசரியாக அனைத்து ரகங்களும் விதைக்க 30-35 ஆவது நாளில் பூக்க ஆரம்பிக்கிறது. 70 முதல் 75 நாளில் அறுவடைக்கு வரும். அதிகபட்சமாக ஹெக்டேருக்கு 800 முதல் 1000 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
விதையளவு மற்றும் விதைப்பு: ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவைப்படும் சரியான பருவத்தில் சரியான ஆழத்தில் சரியான இடைவெளியில் விதைப்பு செய்வது அவசியம். வரிசைக்கு வரிசை 30 செ.மீ. (ஓர் அடி) செடிக்கு செடி 10 செ.மீ. அளவு இடைவெளி மற்றும் 2 செ.மீ. ஆழத்தில் இரண்டு விதைகளாக விதைப்பு செய்ய வேண்டும். இதனால் விதைகள் நன்கு முளைத்து பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க முடியும். விதைத்த ஒரு வாரத்தில் அதிகமாக உள்ள செடிகளைக் களைந்து சரியான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்: விதைக்கும் போது, ஒருமுறை தண்ணீர், மூன்றாம் நாள் உயிர் தண்ணீர், பின்னர் 10-15 நாள்களுக்கு ஒரு முறை மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும். பூப் பருவம் மற்றும் காய்பிடிக்கும் தருணத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கக் கூடாது.
இலைவழி உரம்: அடியுரம் இடும்போது பயிரின் உடனடித் தேவை பூர்த்தி செய்யப்பட்டாலும், தொடர்ந்து சீரான வளர்ச்சிக்கு இலைவழி உரமிடல் அவசியம். இதற்கு, யூரியா 4 கிலோ, டிஏபி 1 கிலோ, பொட்டாஷ் 600 கிராம், டீபால் 20 மி.லி.யுடன் 100 லிட்டர் தண்ணீரில் கலந்து 25-35-ஆம் நாள் ஒருமுறையும் கலந்து தெளித்தால், காய்கள் திரட்சியாக இருக்கும். இதற்கு, பதிலாக 2 கிலோ டிஏபியை 100 லிட்டர் தண்ணீரில் முந்தைய நாள் இரவே ஊற வைத்து அடுத்த நாள் காலையில் தெளிந்த தண்ணீரை 15 நாள்களுக்கு ஒருமுறையாக மொத்தம் இருமுறை தெளிக்க வேண்டும். தற்போது 17:17:17: அல்லது 19:19:19 என்ற கரையும் உரங்கள் இரண்டு கிலோவினை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து இருமுறை தெளித்து நல்ல பலனை விவசாயிகள் பெற்றுள்ளனர்.
பயிர்ப் பாதுகாப்பு: தண்டு ஈயின் தாக்குதலால் செடிகள் காய்ந்து விடும். இதற்கு, மருந்தினை விதைத்த 7-ஆம் நாள் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். வளர்ச்சிப் பருவத்தின் போது காணப்படும் அசுவிணி, தத்துப் பூச்சி, வெள்ளை ஈ போன்றவற்றை கட்டுப்படுத்த, மித்தைல் டெமட்டான் அல்லது டைமெத்தேயேட் மருந்து 2 மி.லி.யை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். வளர்ச்சிப் பருவத்தில் தேமல் நோய் தென்பட்டால், உடனே பயிரை பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். அசுவிணிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும்போது, டைக்குளார்வாஸ் மருந்து 2 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். நோய்களைப் பொருத்தவரை, வாடல் நோய், வேர் அழுகல் நோய் தாக்கக் கூடும். தாக்கப்பட்ட செடிகளை அகற்றி, அந்த இடத்தில் பெவிஸ்டின் 10 கிராம் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து நீரை ஊற்ற வேண்டும். இதனால் நோய் பரவாமல் தடுக்கலாம். சாம்பல் நோய் தென்படும்போது ஒரு லிட்டர் நீரில் 10 கிராம் நனையும் கந்தகத்தூளைத் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
அறுவடை: விதைத்த 55-60 நாளில் காய்கள் அறுவடைக்குத் தயாராகும். காய்கள் பழுப்பு நிறடைந்தால், காய்களை அறுவடை செய்யலாம். 70 சத காய்கள் கருமை நிறடைந்தால் செடிகளை முழுவதும் பிடுங்கலாம். தாமதித்தால் காய்கள் வெடித்து சிதறி வீணாகும்.
வேளாண் துறையால் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் அனைத்து விதைகளும் விதைச் சான்றளிப்புத் துறையினால் பரிசோதிக்கப்பட்டு, தரமான விதைகள் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள், ஆதார விதைகளை வாங்கும் போதே, சான்றட்டை எண்ணுடன் பட்டியலிடப்பட்டு, உரிய படிவத்தில் உற்பத்தியாளர் பெயருக்கு விதைப் பண்ணை பதிவு செய்யப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட விதைப் பண்ணையினை அந்த பகுதியைச் சார்ந்த விதைச் சான்று அலுவலர் கள ஆய்வு மேற்கொண்டு, விதையின் ஆதாரம், தனிமைப்படுத்தும் தூரம், கலவன் நீக்குதல், அறுவடை சமயம், விதை சுத்திகரிப்பு மற்றும் கொள்முதல் செய்த விதைகளின் முளைப்புத் திறன் மற்றும் சான்றட்டை பொருத்தி சிப்பமிடுதல் வரை விதைச்சான்றளிப்பு துறை செயல்பட்டு, தரமான விதைகளுக்கு மட்டும் விதைச் சான்றளிப்பு செய்யப்படுகிறது.
சான்றளிப்பு செய்த விதைகள் மட்டும் வேளாண்மைத் துறையால் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. சான்று பெற்ற விதையில் 98 சதம் சுத்தமான விதைகள் இருக்கும்.
விதைப் பண்ணை அமைத்து, தரமான விதை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு சந்தை விலையுடன் ஊக்கத்தொகை மற்றும் உற்பத்தி மானியம் கிடைப்பதால், விவசாயிக்கு அதிக லாபம் கிடைப்பதுடன், பயன்படுத்தும் பல விவசாயிகளுக்கு உற்பத்தி பெருகுவதால், அதிய லாபம் கிடைக்கிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com