நடவுமுறை துவரை சாகுபடி தொழில்நுட்பங்கள்

பயறு வகை பயிர்களில் துவரை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. துவரையில் 22 சத புரதச் சத்து உள்ளது. இந்த புரதச் சத்து தானிய பயறுகளின் புரதச் சத்தைக்
நடவுமுறை துவரை சாகுபடி தொழில்நுட்பங்கள்

பயறு வகை பயிர்களில் துவரை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. துவரையில் 22 சத புரதச் சத்து உள்ளது. இந்த புரதச் சத்து தானிய பயறுகளின் புரதச் சத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம்.

நடவு முறையில் துவரை சாகுபடி தொழில்நுட்பங்களை, டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தராஜ் கூறியதாவது:

நடவு முறை:
துவரை மானாவாரியில் சாகுபடி செய்யப்படுவதால், வறட்சியால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. துவரையில் நாற்றுகள் தயார் செய்து நடும் முறை பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது.

நடவு முறையில் மழை தாமதமானாலும், குறித்த பருவத்தில் பயிர் செய்ய முடியும். துவரை நடவு அதிக ஆழத்தில் செய்யப்படுவதால், வேர் வளர்ச்சி காணப்பட்டு, பயிர் வறட்சியைத் தாங்கி வளர வழி ஏற்படுகிறது.
வைகாசிப் பட்டம் (மே - ஜூன் மாதம்), ஆடிப் பட்டம் (ஜூலை) போன்ற பருவக் காலங்களில் துவரையைப் பயிரிட வேண்டும்.

ரகங்கள்:
எல்.ஆர்.ஜி-41 என்ற ரகம் 200 நாள்கள் வயதுடையது. ஒரு ஹெக்டேருக்கு 2,500 கிலோ மகசூல் கிடைக்கும். காய்ப்புழு எதிர்ப்பு சக்தி கொண்டது. பி.ஆர்.ஜி-1 என்ற ரகம் 180 நாள்கள் வயதுடையது. ஒரு ஹெக்டேருக்கு 1,400 கிலோ மகசூல் கிடைக்கும். பச்சை காய் ஒரு செடிக்கு 3 கிலோ வரை மகசூல் கிடைக்கும். பி.ஆர்.ஜி-2 என்ற ரகம் 150 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 1,500 கிலோ வரையில் மகசூல் கிடைக்கும். காய்ப்புழு எதிர்ப்பு சக்தி கொண்டது. கோ-6 என்ற ரகம் 180 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு ஆயிரம் கிலோ வரையில் மகசூல் கிடைக்கும். கோ-7 130 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 1,200 கிலோ மகசூல் கிடைக்கும்.
விபிஎன்-3 என்ற ரகம் 105 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 1,550 கிலோ மகசூல் கிடைக்கும்.

விதை:
விதைப்பதற்கு சான்றிதழ் பெற்ற சுமார் 90 சத முளைப்புத் திறன் உள்ள விதைகளையே பயன்படுத்த வேண்டும். ஹெக்டேர் நடவு முறையில் சாகுபடி செய்ய சுமார் 2.5 கிலோ விதை போதுமானது. சாதாரண முறையில் விதைக்க ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ விதை தேவைப்படும்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் கால்சியம் குளோரைடை கலந்த பின் விதைகளை அந்தக் கலவையில் ஒருமணி நேரம் ஊற வைத்து, பின் ஏழு மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். இவ்வாறு விதைகளைக் கடினப்படுத்துவதன் மூலம் செல்லின் புரோட்டோபிளாசம் கடினப்படுத்தப்பட்டு, நீரை கிரகிக்கும் தன்மை அதிகரிக்கும்.
இதனால், விதைகளின் முளைப்புத் திறனும், பயிர் வளர்ச்சி பெற்று அதிக விளைச்சல் பெற வழிவகுக்கும்.

பூஞ்சண விதை நேர்த்தி:
கடினப்படுத்தப்பட்ட விதையை 100 கிராம் ரைசோபியம் நுண்ணுயிர் கலவை மற்றும் 100 மி.லி. சூடில்லாத அரிசிக் கஞ்சியுடன் நன்கு கலந்து 15 நிமிடம் நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும். நுண்ணுயிர் கலந்த விதைகளை உடனே விதைக்க வேண்டும்.

நாற்றங்கால் தயாரித்தல்:
குழித்தட்டு முறை: 98 குழி கொண்ட குழித்தட்டில் தென்னை நார் கழிவு நிரப்பி, விதை நேர்த்தி செய்த விதைகளை ஒரு குழிக்கு ஒரு விதை என்ற அளவில் 1 செ.மீ. ஆழத்தில் விதைத்து, பின் தென்னை நார் கழிவு மூலம் விதைகளை மூட வேண்டும். இவ்வாறு விதைப்பு செய்யப்பட்ட குழித்தட்டுகளை நிழலான இடங்களில் வைத்து தண்ணீர் தெளித்து பாதுகாக்க வேண்டும். நன்கு பராமரிக்கப்பட்ட செடிகளை 15 - 20- ஆம் நாளில் நடவுக்குப் பயன்படுத்த வேண்டும். நடுவதற்கு நில நாள்களுக்கு முன்பு இளம்வெயிலில் நாற்றுகளை வைத்து கடினப்படுத்திய பின்பு நடவு செய்ய வேண்டும்.

பாலிதீன் பை முறை:
மணல், மண், எரு ஆகியவற்றை சம அளவில் கலந்து 6-க்கு 4 அளவுள்ள 200 மைக்ரான் பாலிதீன் பைகளில் நிரப்பி விதைக்கப் பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு பைக்கு ஒரு விதை என்ற அளவில் 1 செ.மீ. ஆழத்தில் விதைத்து, ஒவ்வொரு நாளும் தண்ணீர் தெளித்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, விதைப்பு செய்யப்பட்ட பைகளை நிழலான இடங்களில் வைத்து 30-40 நாள்களுக்கு முன்பு இளம்வெயிலில் நாற்றுகளை வைத்துக் கடினப்படுத்தி, பின்பு நடவு செய்ய வேண்டும்.

நடவு நிலம் தயாரித்தல்:
வடிகால் வசதி கொண்ட செம்மண் அல்லது வண்டல் மண் நிலங்கள் துவரை சாகுபடி செய்ய மிகவும் ஏற்றது.

நடவு முறை:
துவரை நடவு செய்வதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே குறையாமல் நன்கு மக்கிய எருவை ஹெக்டேருக்கு 12.5 டன் அல்லது மண்புழு உரம் ஹெக்டேருக்கு 5 டன் என்ற அளவில் இட வேண்டும். மானாவாரியில் தனிப்பயிர் சாகுபடிக்கு 15 சதுர செ.மீ. அளவுள்ள குழிகளை 5-க்கு 3 இடைவெளியிலும் (ஹெக்டேருக்கு 7,260 பயிர்கள்), ஊடுபயிர்ச் சாகுபடி செய்யும் இடங்களில் 6 க்கு 3 (ஹெக்டேருக்கு 6,060 பயிர்கள்) என்ற இடைவெளியிலும் குழிகள் எடுக்க வேண்டும்.

நடவு செய்த 30-ஆம் நாளில் மண் அணைக்கும்போது களைகளை ஒரு முறை எடுத்த பின் நீர்ப் பாய்ச்ச வேண்டும் அல்லது நடவு செய்த 20-ஆம் நாளில் இமாஜந்திபிர் எனும் களைக் கொல்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மி.லி. கலந்து தெளிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை:
மானாவாரி பயிராக இருந்தால் 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச் சத்து அடியுரமாக இட வேண்டும்.  இறவைப் பயிராக இருந்தால் அடியுரமாக 12.5 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச் சத்து இட வேண்டும்.

மேலும், நடவு செய்த 30-ஆம் நாளில் மண் அணைக்கும்போது மீதமுள்ள 12.5 கிலோ தழைச்சத்து மற்றும் 12.5 கிலோ சாம்பல் சத்து கலந்து மண்ணில் இட்ட பின் நீர் பாய்ச்ச வேண்டும்.

நடவு நட்ட 40 - 45 நாளில் 2 சத டிஏபி கரைசல் தெளிக்க வேண்டும். ஒரு வார இடைவெளியில் ஹெக்டேருக்கு 2.5 - 5 சத ஹெக்டேர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

ஊடுபயிர்:
ஊடு பயிர் செய்யும் இடங்களில் நடவுக்கு முன் உளுந்து, பாசிப் பயறு, அவரை மற்றும் மொச்சை போன்ற பயிர்களை விதைத்து, பிறகு துவரை நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். சோளத்தை ஊடு பயிராகச் செய்யும்போது காய்ப்புழுவின் பாதிப்பு குறைவாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
மேற்கூறிய தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் மானாவாரியில் சாகுபடி செய்யும் துவரையில் அதிக மகசூல், லாபம் பெற முடியும் எனத் தெரிவித்தார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com