மேட்டூர் அணையைத் தூர்வாரும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மேட்டூர் அணையைத் தூர்வாரும் பணி அடுத்த வாரத்தில் தொடங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உதகை செல்லும் வழியில் கோவைக்கு வியாழக்கிழமை வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்கும் எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன்
உதகை செல்லும் வழியில் கோவைக்கு வியாழக்கிழமை வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்கும் எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன்

மேட்டூர் அணையைத் தூர்வாரும் பணி அடுத்த வாரத்தில் தொடங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உதகையில் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள மலர்க் கண்காட்சியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக கோவைக்கு விமானம் மூலம் வியாழக்கிழமை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் மழை நீரைச் சேமிப்பதற்காக முதல் கட்டமாக ரூ. 100 கோடி ஒதுக்கி, குடிமராமத்துத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 1,519 ஏரிகளில் குடிமராமத்துப் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், ரூ. 300 கோடி நிதி ஒதுக்கி சுமார் 2,200 ஏரிகளைத் தூர்வார அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், அடுத்த வாரத்தில் மேட்டூர் அணையைத் தூர்வாரும் பணியைத் தொடங்க உள்ளோம். இதையடுத்து, மாநிலத்தில் உள்ள பல்வேறு அணைகளிலும் கூடுதல் நீரைச் சேமித்து வைக்கும் வகையில் தூர்வாரும் பணி தொடங்கப்பட உள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகள் மூலமாக நிவாரணம் அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிதி பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
சுமார் ரூ. 6 ஆயிரம் கோடி முதல் ரூ. 7 ஆயிரம் கோடி வரை காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு நிதியுதவி பெறுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகத்தையும் ஆய்வு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக கோவை, மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வின்போது, மாவட்டங்களில் குடிநீர்த் திட்டப் பணிகள் எந்த அளவில் நடந்து வருகின்றன என்பது அறியப்பட்டதுடன், பிரச்னை உள்ள இடங்களில் விரைவில் தீர்வு காண உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் யாரேனும் நிவாரணம் பெறாமல் இருந்தால் அவர்களைப் பட்டியலில் சேர்த்து நிவாரணம் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமைச்சர் ஜெயகுமார் குறித்து மதுசூதனன் தெரிவித்துள்ள கருத்துகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார்.
பேட்டியின்போது, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com