தேசிய வேளாண் விற்பனைச் சந்தை: திண்டுக்கல்லில் தொடக்கம்

தமிழகத்தின் 2 -ஆவது தேசிய வேளாண் விற்பனைச் சந்தை திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தின் 2 -ஆவது தேசிய வேளாண் விற்பனைச் சந்தை திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், திண்டுக்கல் விற்பனைக் குழு செயலர் ரா.சுரேஷ் பேசியதாவது:
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப் பொருள்களுக்கு அதிகபட்ச விலை கிடைக்கும் வகையிலும், இடைத் தரகர்களின் தலையீடு இல்லாமல் வியாபாரிகளிடம் விற்பனை செய்வதற்கு வசதியாகவும் 585 தேசிய வேளாண்மை விற்பனைச் சந்தைகள் தொடங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி கடந்த ஜூலை வரையிலும் 13 மாநிலங்களில், 455 சந்தைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 278 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 15 விற்பனைக் கூடங்கள், தேசிய வேளாண்மை விற்பனைச் சந்தை திட்டத்தின்கீழ் இணைக்கப்பட உள்ளன. தமிழகத்தின் முதல் வேளாண்மை விற்பனைச் சந்தை வேலூர் மாவட்டம், அம்மூரில் செயல்பட்டு வரும் நிலையில், 2 -ஆவது சந்தை திண்டுக்கல்லில் தொடங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைச் சந்தையை பொருத்தவரை, நெல், நிலக்கடலை மற்றும் பருத்தி ஆகிய பயிர்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் விரும்பினால் பிற பயிர்களையும் இணைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
விவசாயிகளிடம் ஆர்வம் இல்லை
இடைத் தரகர்களின் பாதிப்பிலிருந்து விவசாயிகள் விடுபட்டு, அதிகபட்ச விலையை பெற வேண்டும் என்பதற்காகவே தேசிய வேளாண் விற்பனைச் சந்தைகள் தொடங்கப்படுகின்றன. ஆனால், திண்டுக்கல்லில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் சுமார் 10 விவசாயிகள் மட்டுமே கலந்து கொண்டனர். இதுகுறித்து வேளாண் துறை அலுவலர்கள் கூறுகையில், 'திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால், வருவதாக ஒப்புக்கொண்ட விவசாயிகளும் கூட்டத்திற்கு வரவில்லை' என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com