மானிய உதவியோடு பழம் பழுக்க வைக்கும் அறை அமைக்கலாம்!

வேளாண் துறையில் பழங்கள் சாகுபடிக்கு ஆண்டுதோறும் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. மக்களின் கல்வியறிவு, வாங்கும் சக்தி ஆகியவை அதிகரித்த பின்பு மின்னணு சாதனங்கள்
மானிய உதவியோடு பழம் பழுக்க வைக்கும் அறை அமைக்கலாம்!

திருநெல்வேலி: வேளாண் துறையில் பழங்கள் சாகுபடிக்கு ஆண்டுதோறும் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. மக்களின் கல்வியறிவு, வாங்கும் சக்தி ஆகியவை அதிகரித்த பின்பு மின்னணு சாதனங்கள், மருத்துவப் பொருள்களுக்கு அடுத்தப்படியாக பழங்களின் பயன்பாடு கடந்த 30 ஆண்டுகளைக் காட்டிலும் இப்போது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மொத்த வியாபாரம், சில்லறை விற்பனையோடு நின்று விடாமல் ஏற்றுமதி துறையிலும் பழங்கள் சாகுபடிக்கு தனியிடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து பல்வேறு வகையான பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. 
திருநெல்வேலி மாவட்டத்தில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட சாகுபடிக்கு மத்தியில் மலர் சாகுபடியும், பழங்கள் சாகுபடியும் குறிப்பிடும்படியாக உள்ளன. பழங்கள் சாகுபடியை அதிகரிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் புதிய பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. பழங்கள் சாகுபடியில் பழுக்க வைக்கும் சிக்கலால் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. கார்பைடு கல் கொண்டு சிலர் பழுக்க வைக்க முயற்சிக்கும்போது தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படுவதோடு, அதிகாரிகள் சோதனை நடத்தி விற்பனையைத் தடுத்து பறிமுதல் செய்யும் சூழலும் ஏற்படுகிறது. இத்தகைய சூழலைத் தடுக்கும் வகையில் பழம் பழுக்க வைக்கும் அறைகள் அமைத்து வணிகத்தைப் பெருக்க விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்காக மானியத்துடன் புதிய சலுகை திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) எம்.அசோக் மேக்ரின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 689 ஹெக்டேர் பரப்பளவில் மா, பலா, வாழை, சப்போட்டா, பப்பாளி உள்ளிட்ட பழப் பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இதனை முறையாக பழுக்க வைத்து விற்பனை செய்து பயன்பெறுவதற்கான முறையான வசதிகள் இல்லை. பழங்கள் பழுக்க வைக்கும் அறைகள் அமைக்க 35 சதவிகித மானியம் அளிக்கப்பட உள்ளது. இம் மாவட்டத்தில் 40 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பழங்கள் பழுக்கும் வைக்கும் அறை அமைக்கும் வகையில் ரூ.17 லட்சம் நிதி தோட்டக்கலை துறையால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பழம் பழுக்க வைக்கும் அறையில் மா, பலா, வாழை, பப்பாளி மற்றும் இதர பழங்களையும் பழுக்க வைக்க முடியும். இந்த முறையில் பழுக்க வைப்பதால் மனிதர்களுக்கு எந்தவொரு தீங்கும் ஏற்படாது. பழங்களும் நீண்ட நாள்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். பழம் பழுக்க வைக்கும் அறை அமைப்பதற்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.1 லட்சம் செலவு ஆகும். ரூ.35 ஆயிரம் மானியத் தொகை தோட்டக்கலைத்துறையின் மூலம் வழங்கப்படும். இத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தங்கள் பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com