இயற்கை முறையில் காபி உற்பத்தி: அதிக விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி

இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் காபி பயிருக்கு அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
நீலகிரி மாவட்டம், பெங்கால்மட்டம் பகுதியில் காய்த்துக் குலுங்கும் காபிப் பழம்.
நீலகிரி மாவட்டம், பெங்கால்மட்டம் பகுதியில் காய்த்துக் குலுங்கும் காபிப் பழம்.

இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் காபி பயிருக்கு அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம், குந்தா பகுதியில் தேயிலை சாகுபடி பிரதானத் தொழிலாக உள்ளது. தேயிலைச் செடிகளுக்கு நடுவே ஊடுபயிராக காபி பயிரிடப்படுகிறது. மஞ்சூர், கிண்ணக்கொரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 6,000 ஹெக்டேர் பரப்பளவில் காபி சாகுபடி செய்யப்படுகிறது. 
தேயிலைக்கு போதிய விலை கிடைக்காத நிலையில், காபி சாகுபடியை அதிகரிக்க விவசாயிகள் முன்வந்தனர். போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிறு விவசாயிகள் காபி உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறையினர் கூறியதாவது:
இயற்கை விவசாயத்தில் அதிக அளவில் விளையும் பயிர்களில் காபி ஒன்றாகும். இதன் உற்பத்திக்கு இதமான வெயில், நிலையான காலநிலை அவசியம். மலைச் சவுக்கு என்று அழைக்கப்படும் சில்வர் ஓக் மரத்தின் அடியில் காபி சாகுபடி செய்யப்படுகிறது.
இதனால், காபி செடிக்குத் தேவையான நிழல் கிடைப்பதுடன், இம்மரத்தில் இருந்து விழும் இலைகள் மூலம் தேவையான இயற்கை உரமும் கிடைக்கிறது. ஒரு ஹெக்டேர் பரப்பளவில் 10,000 கிலோ இலைகள் உதிர்கின்றன. தோட்டத்தில் இவை மக்கும்போது 160 கிலோ தழைச்சத்து, 45 கிலோ மணிச்சத்து, 50 கிலோ சாம்பல் சத்து ஆகியவை கிடைக்கும். இத்துடன் நுண்ணூட்டச் சத்தும் காபி செடிக்கு கிடைக்கிறது.

காபி தோட்டத்தில் காலியாக உள்ள இடங்களில் கொள்ளு, தட்டைப்பயறு போன்ற பயிர்களையும் விதைக்கலாம். இவை காற்றிலுள்ள தழைச்சத்துக்களை இழுத்து மண்ணை வளப்படுத்துகிறது. இதன் மூலம் கூடுதல் வருமானமும் கிடைக்கிறது. ஒரு ஹெக்டேரில் 25 டன் வரை தொழுஉரம் இடலாம். கோழி எருவாக இருந்ததால் குறைந்தது 2 ஆண்டுகள் மட்க வைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், தொழுஉரம் அல்லாமல் அசோஸ்பைரில்லம், பாஸ்பூ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களையும் பயன்படுத்தலம். இயற்கை முறையில் சாகுபடி செய்யும்போது செலவு குறைவதுடன், கூடுதல் விலையும் கிடைக்கும் என்றனர்.

இது குறித்து காபி விவசாயி சசிகுமார் கூறியதாவது: 
மஞ்சூர் பகுதியில் தேயிலைச் செடிகளுக்கு நடுவே ஊடுபயிராக காபி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காபி சாகுபடிக்கான மானியத்தை அளித்தால் உதவியாக இருக்கும். இயற்கை முறையில் விளையும் காபிக்கு விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால், விளைச்சலை அதிகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

கடந்த காலங்களில் தேயிலை விவசாயத்தில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தோம். தேயிலை விலை வீழ்ச்சி ஏற்பட்டதால், ஊடுபயிராக காபி பயிரிட்டோம். இயற்கை முறையில் பயிரிடப்படும் காபிக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com