'நிலக்கடலையில் விதை நேர்த்தி செய்தால் அதிக மகசூல் பெறலாம்'

'நிலக்கடலையில் விதை நேர்த்தி செய்தால் அதிக மகசூல் பெறலாம்'

இறவை நிலக்கடலையில் விதை நேர்த்தி செய்தால் அதிக மகசூல் பெறலாம் என சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன் தெரிவித்துள்ளார்.

அரியலூர்: இறவை நிலக்கடலையில் விதை நேர்த்தி செய்தால் அதிக மகசூல் பெறலாம் என சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
அரியலூர் மாவட்டத்தில் இறவை நிலக்கடலை ஏறக்குறைய 18 ஆயிரம் ஹெக்டரில் பயிர் செய்கின்றனர். டிஎம்வி-7, கோ-3, கோ-4, விஆர்ஐ-2, விஆர்ஐ-3, விஆர்ஐ-5, டிஎம்வி-13 மற்றும் விஆர்ஐ-8 போன்ற ரகங்கள் இப்பருவத்திற்கு ஏற்ற ரகமாகும். இறவையில் நிலக்கடலை விதைப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 50 கிலோ விதை போதுமானதாகும். பெரிய பருப்பு ரகங்களான விஆர்ஐ-2, விஆர்ஐ-8, கோ-2, கோ-3 போன்ற ரகங்களுக்கு கூடுதலாக 5 கிலோ பயன்படுத்த வேண்டும்.
விதைகளை விதைப்பதற்கு முன் விதைநேர்த்தி செய்தல் மிக அவசியம். விதைகளை உயிர் பூஞ்சாணமான டிரைகொடெர்மா விரிடி 1 கிலோ விதைக்கு 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ் 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் விதைநேர்த்தி செய்து பின்பு உயிர் உரங்களான ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உடன் தலா 2 பொட்டலம் வீதம் விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
விதைநேர்த்தி செய்வதன் மூலம் விதைகள் மூலம் வரும் பூஞ்சாண நோயை கட்டுப்படுத்தலாம். விதைகளை விதைக்கும் போது வரிசைக்கு வரிசை 30 செ.மீ, செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளிவிட்டு விதைக்க வேண்டும். இயந்திரத்தின் மூலம் விதைப்பதினால் விதை அளவு மற்றும் விதைப்பு செலவு குறைகிறது.
மேலும் நிலக்கடலை விதைப்பதற்கு முன் அடியுரமாக 5 டன் தொழு உரம், யூரியா 11 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 125 கிலோ, பொட்டாஷ் 25 கிலோ, ஜிப்சம் 80 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 50 கிலோ மற்றும் உயிர் உரமான அசோஸ்பைரில்லம் 1 கிலோ, பாஸ்போ பாக்டீரியா 1 கிலோ மற்றும் எதிர் உயிர் பாக்டீரியா சூடோமோனாஸ் ப்ளோரோசன்ஸ் 1 கிலோ இட வேண்டும். மண் பரிசோதனையின் படி உரமிடுதல் நல்லது.
மேலும் வரப்பு ஓரங்களில் ஆமணக்கு, கம்பு மற்றும் மக்காச்சோளம் பயிரிடுதல் மூலம் பூச்சியின் தாக்கத்தை தவிர்க்கலாம், ஊடுபயிராக துவரை, உளுந்து, தட்டைப்பயிறு, கம்பு ஆகிய பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் பூச்சிகளின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
விளக்கு பொறிகளை இரவு 7-10 மணி வரை வைத்து அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம், இனக்கவர்ச்சி பொறிவைத்து புரோடீனியா, கிலியோதீஸ் ஆண் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம், பச்சை தத்துப்பூச்சி, வெள்ளை ஈக்களை கவர மஞ்சள் நிற ஒட்டுப்பொறி வைத்து கவர்ந்து கட்டுப்படுத்தலாம்,
மேலும் நோய் தென்படும் சமயங்களில் சூடோமோனாஸ் ப்ளோரொசன்ஸ் எதிர் உயிர் பாக்டீரியா லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் தெளிப்பதன் மூலம் வேர் அழுகல் மற்றும் தண்டு அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நிலக்கடலையில் ஒரு ஏக்கருக்கு 1000 கிலோ முதல் 1200 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com