விவசாயத்துக்கு உறுதுணை புரியும் மண்வளப் பரிசோதனை

'மண்வளமே விவசாயிகளின் நலம்' என்ற உயரிய நோக்கத்துடன் தமிழக அரசு அனைத்து விவசாயிகளுக்கும் மண்பரிசோதனை செய்து மண்வளத்தை பெருக்குவதற்கான வழிமுறைகளை

புதுக்கோட்டை: 'மண்வளமே விவசாயிகளின் நலம்' என்ற உயரிய நோக்கத்துடன் தமிழக அரசு அனைத்து விவசாயிகளுக்கும் மண்பரிசோதனை செய்து மண்வளத்தை பெருக்குவதற்கான வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது. 
மண்வளம் என்பது பயிருக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள், நன்மை தரும் நுண்ணுயிரிகள், மண்புழுக்களை கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது.
உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், தீவிர பயிர் சாகுபடியில், அளவிற்கு அதிகமான ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டு, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் மண்புழுக்கள் எண்ணிக்கையில் குறைக்கப்பட்டு மண் உயிரற்றதாகிறது.
இத்தகைய மண்ணில் விளையும் பயிர்களின் வளர்ச்சி குன்றிபூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. மண் மாசுபடுதல், மாறிவரும் பருவநிலைகளின் விளைவுகள் போன்ற பல்வேறு காரணங்களால், 1980 ஆம் ஆண்டில் 1.26 சதவீதமாக இருந்த மண்ணின் அங்ககச் சத்து 2013-14 -ஆம் ஆண்டில் 0.68 சதவிகிதமாக குறைந்துள்ளது. எனவே, விளைநிலங்களின் மண்வள நிலையை குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிந்து, அதற்கேற்ப பயிருக்கேற்ற சமச்சீர் உரங்களை இடுவதும், அதிக அளவில் தழை மற்றும் தொழு உரங்களை உபயோகிப்பதால் மட்டுமே இழந்த மண்வளத்தை மீட்கவும் பாதுகாக்கவும் முடியும்.
இதை கருத்தில் கொண்டே தமிழக அரசால் கடந்த 2011-2012 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பண்ணைக் குடும்பங்களுக்கும் ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், அனைத்து விவசாயிகளின் விளைநில மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் விவசாயிகள் தங்கள் பயிர் சாகுபடி திட்டத்தை மேற்கொள்ளவும், பயிர் வாரியான இடுபொருட்கள் மற்றும் ஊட்டச் சத்துக்களை இடவும், திட்டப் பயன்கள் குறித்து அறியவும் ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு மூலம் வழிவகை செய்யப்பட்டது. மேலும், போதிய அளவு உரமிடவும், பண்ணை மற்றும் பருவ வாரியான உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் குறித்த விவரங்களை பராமரிக்கவும், இந்த கையேடு விவசாயப் பெருமக்களுக்கு பேருதவியாக விளங்கியது.
தமிழகத்தின் இத்திட்டத்தை முன்னோடியாகக் கொண்டு பிரதமரால் கடந்த ஆண்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 'மண்வள அட்டை' வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக மண்வள அட்டை வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மண்வள அட்டையின் மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண்வளத்தை அறிந்துகொள்ளவும், மண்ணில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிந்து, சீர்திருத்த முறைகளை மேற்கொண்டு, அப்பிரச்னைகளை நிவர்த்தி செய்ய இயலும். 
ரசாயன உர உபயோகத்தை குறைத்து அதிக அளவில் தொழு , தழை உரம், பசுந்தாள் உரம் மற்றும் நுண்ணுயிரி உரங்களை உபயோகிக்கவும் மண்வள அட்டையின் மூலம் பரிந்துரை செய்யப்படுகிறது. இவ்வாறு தேவைக்கேற்ப அங்கக, ரசாயன உரங்களை உபயோகிக்க வழிவகை செய்வதால் சாகுபடி செலவு குறைக்கப்படுவதுடன், அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்கள் மண்ணில் இடப்படுவது தவிர்க்கப்பட்டு மண்வளம் பாதுகாக்கப்படுகிறது.
மண்வள அட்டை வழங்கும் திட்டம் தமிழகத்தில் 2015-2016 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், புவியியல் விவரங்களுடன் கூடிய கட்ட அடிப்படையிலான, இறவை பரப்பில் 2.5 எக்டருக்கு ஒரு மாதிரி மற்றும் மானாவாரிப் பரப்பில் 10 எக்டருக்கு ஒரு மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் பயிருக்கேற்ற உரப்பரிந்துரையுடன் கூடிய மண்வள அட்டை அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. உரச் செலவை குறைத்து, விளைநிலங்களின் மண்வளத்தை பேணுவதில் பெரும் பங்காற்றும் இந்த மண்வள அட்டையைப் பெற்று அதில் குறிப்பிட்டுள்ளவாறு உரங்களைப் பயன்படுத்தி, விவசாயம் செய்து பயனடையலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com