எல்லாக் காலத்திலும் மகசூல் தரும் மல்லிகை சாகுபடி!

பருவமில்லாத காலங்களிலும் மல்லிகை பூக்களின் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகள் வருமானம் பெறுவதற்கான நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை வேளாண்துறை வழங்கி வருகிறது.
எல்லாக் காலத்திலும் மகசூல் தரும் மல்லிகை சாகுபடி!

விழுப்புரம்: பருவமில்லாத காலங்களிலும் மல்லிகை பூக்களின் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகள் வருமானம் பெறுவதற்கான நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை வேளாண்துறை வழங்கி வருகிறது.
இதுகுறித்து ஓய்வுபெற்ற தோட்டக்கலைத் துணை இயக்குநர் எஸ்.ராதாகிருஷ்ணன் கூறும் ஆலோசனைகள்:
புவியியல் குறியீடு பெறப்பட்ட ராமநாதபுரம் உள்ளூர் ரக குண்டு மல்லி தமிழகத்தில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. மல்லிகைப் பூ பெரும்பாலும் குளிர்காலங்களிலும், அதிக மழைக் காலங்களிலும், குறிப்பாக செப்டம்பர் முதல் ஜனவரி-பிப்ரவரி மாதங்கள் வரை பூக்கும் தன்மை குறைந்து மகசூல் தருவதில்லை. அந்தக் காலங்களிலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற முடியும்.
மல்லிகை மகசூல் குறைவைத் தவிர்ப்பதற்கு தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இடுவதை நிறுத்த வேண்டும். தமிழக அரசின் மண் பரிசோதனை ஆய்வுக் கூடங்களில் மண் பரிசோதனை செய்ய வேண்டும். ஆய்வு முடிவின்படி பரிந்துரைக்கப்படும் உயிர் உரங்களை பேரூட்டம் மற்றும் நுண்ணூட்டம் பெற்ற உரங்களை மட்டும் கட்டாயம் பிரித்து இட வேண்டும். எந்தவித பரிந்துரையும் இல்லாமல் காம்ப்ளக்ஸ்,  டிஏபி போன்ற உரங்களை இடுவது பயனற்றதாகும்.
மல்லிகை சாகுபடியைப் பொருத்த வரையில் செடியை அதிகளவில் வளரவிடக் கூடாது. முக்கியக் கிளையில் இருந்து பிரியும் இரண்டாவது பக்கக் கிளையில்தான் அதிகளவு பூக்கள் தோன்றும். அதில் பிரியும் மூன்றாவது, நான்காவது கிளைகளை அதிகளவில் வளரவிடக் கூடாது. இதற்காக, மல்லிகைச் செடிகளை முறையாக அடி கவாத்து மற்றும் நுனி கவாத்து செய்ய வேண்டும்.
அடி கவாத்து (கிளைகளை வெட்டுதல்) : அடி கவாத்தினை செப்டம்பர் மாதத்திலும், நவம்பர் மாதக் கடைசியிலும் பிரித்து செய்ய வேண்டும். உதாரணமாக, ஒரு விவசாயி 1,000 செடிகளைப் பயிரிட்டிருந்தால் அதில் 500 செடிகளை செப்டம்பர் மாதத்திலும், மீதமுள்ள 500 செடிகளை நவம்பர் மாதத்திலும் அடி கவாத்து செய்ய வேண்டும்.
அடி கவாத்து என்பது, தரையிலிருந்து 50 செ.மீ. உயரத்தில் உள்ள கிளைகளை வெட்டி விடும் முறையாகும். காய்ந்த கிளைகளையும்,  நீக்கிவிட வேண்டும். கவாத்து செய்த உடன் பூச்சி தாக்குதல் பரவாமல் இருப்பதற்கு ஒரு லிட்டர் தண்ணீரில் 3 மில்லி அசாடிராக்டின் என்னும் தாவர பூச்சிக்கொல்லியை தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும். இதனால், அதிக பூக்கள் மகசூல் செய்து நிலையான வருமானத்தைப் பெற முடியும்.
அடி கவாத்து செய்த 7 நாள்கள் கழித்து குளோர்மெக்குவாட் குளோரைடு எஸ்எல் (சிசிசி சைக்கோசெல்) என்னும் பயிர் வளர்ச்சித் தடுப்பானை 1000 பிபிஎம் வீதம் ஒரு முறையும், பிறகு 7 நாள்கள் கழித்து 1,500 பிபிஎம் என்கிற அளவில் கைத்தெளிப்பானால் காலை அல்லது மாலை வேளைகளில் செடிகள் மீது தெளிக்க வேண்டும்.
பிறகு பரிந்துரைக்கப்பட்ட தழை, மணி, சாம்பல் பேரூட்ட சத்துக்களை செடி ஒன்றுக்கு 60: 120: 120 என்ற விகிதத்தில், அடி கவாத்து செய்த 15 நாள்களில் ஒரு முறை அல்லது 4 அல்லது 6 முறையாக பிரித்து இட வேண்டும். இதேபோல, ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை பிரித்து இட வேண்டும்.
ரசாயன உரங்களை இடுவதற்கு முன்பாக (7 நாள்களுக்கு முன்பு) அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்ட்டீரியா பொட்டாஷ், டிரைக்கோடெர்மா விரிடி, சூடாமோனாஸ், புளுரோசன் போன்ற நுண்ணுயிரிகளை தொழு உரத்துடன் வேப்பம் பிண்ணாக்கு கலந்து இட வேண்டும்.
பேரூட்ட சத்துக்களை இட்ட பிறகு, இரண்டு வாரங்கள் கழித்து பரிந்துரைக்கப்டட்ட அளவில் போராக்ஸ், துத்தநாக சல்பேட், மேங்கனீஸ் சல்பேட்,  இரும்பு சல்பேட் நுண்ணூட்ட சத்துக்களை தெளிக்க வேண்டும்.
நுனி கவாத்து: நுனி கவாத்தை அவ்வப்போது மலர்களை பறிக்கும்போதே செய்ய வேண்டும். செடியின் மூன்றாவது, நான்காவது கொடிகளையும், காய்ந்த கிளைகளையும் உடனுக்குடன் அகற்ற வேண்டும். தேவையின்றி பயிர் வளர்ச்சி ஊக்கிகளையும் (டானிக்), பரிந்துரைக்காத உரங்களையும் இடக் கூடாது.
சொட்டு நீர் பாசனம் செய்துள்ள மல்லிகை தோட்டங்களில், உரப் பாசன கருவி மூலம் 7 நாள்களுக்கு ஒருமுறை பரிந்துரைத்த அளவில் யூரியா போன்ற நீரில் கரையும் உரங்களை வேளாண் துறை அறிவுறுத்தியுள்ள அளவில் செலுத்த வேண்டும்.
மல்லிகைச் செடிகளின் வளர்ச்சியை எந்த அளவு கட்டுப்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு தரமான அதிக எடையுள்ள பூக்களை மகசூலாக பெற முடியும். 
இந்த முறையை விவசாயிகள் கையாண்டு வந்தால், பருவமில்லாத காலங்களில் கூட அதிகளவில் பூக்களை மகசூல் செய்து வருமானம் பெற முடியும்.
இதுதொடர்பாக தோட்டக்கலைத் துறையினரை அணுகி அறிவுரைப் பெற்று பயன்பெறலாம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com