புதிய தொழில்நுட்பத்தில் உளுந்து சாகுபடி

உளுந்து பயறு சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து அதிக வருவாயை ஈட்டலாம் என்று
புதிய தொழில்நுட்பத்தில் உளுந்து சாகுபடி

விழுப்புரம்: உளுந்து பயறு சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து அதிக வருவாயை ஈட்டலாம் என்று வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பயறு வகைகளில் புரதச் சத்து மிக அதிகம். இது நமது உடல் வளர்ச்சிக்கும், அறிவாற்றலுக்கும் மிகவும் அவசியமானது. பயறு வகைப் பயிர்களில் உள்ள புரதத்தின் அளவு தானியப் பயிர்களின் அளவைவிட 2 முதல் 3 மடங்கு அதிகமாகும்.
தமிழகத்தில் பயறுவகைப் பயிர்கள் சுமார் 8.84 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, 7.67 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது நமது தேவையைவிட குறைவாகும். இதனால், பயறு வகைப் பயிர்களில் விளைச்சலை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
நிகழ் ஆண்டில், விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கண்டமங்கலம் வட்டாரத்தில் 3, 000 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
உளுந்து விதைப்பு, விதைநேர்த்தி: பயறு வகைப் பயிர்களின் சாகுபடியில், உளுந்து முதன்மைப் பயிராக உள்ளது. உளுந்தில் தற்போது, வம்பன் 5, வம்பன் 6 போன்ற ரகங்களை விதைப்புச் செய்யலாம். இதில், 65 முதல் 70 நாள்களில் அறுவடைக்கு வரும் தனிப் பயிராக விதைக்க, ஒரு ஹெக்டேருக்கு 20 கிலோவும், ஊடுபயிராக 10 கிலோவும் பயன்படுத்தலாம்.
பூஞ்சாண விதைநேர்த்தி செய்ய ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பெண்டாசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரைசன்ஸ் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
பூஞ்சாண விதைநேர்த்தி செய்து 24 மணி நேரம் கழித்து 3 பாக்கெட் ரைசோப்பியம் மற்றும் 3 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியாவினை, சுமார் 750 மி.லி. ஆறிய அரிசி கஞ்சியுடன் சேர்த்து பூஞ்சாண விதைநேர்த்தி செய்த, விதையைக் கலந்து நன்கு பிசைந்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி பிறகு விதைக்க வேண்டும்.
உளுந்து விதைகளை, விதைக்கும் கருவி கொண்டு விதைப்பதால் வரிசைக்கு, வரிசை 30 செ.மீ. இடைவெளியும் செடிக்குச்செடி 10 செ.மீ. இடைவெளியும் விடுவதனால், ஒரு சதுர மீட்டரில் 33 செடிகளைப் பராமரிக்க முடியும். பூஞ்சாண விதைநேர்த்தி செய்வதால் விதைமூலம் பரவும் வேர்வாடல், இலைப் புள்ளி நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.
முளைப்புத் திறன் அதிகரிக்கும் மண்ணின் மூலம் பரவும் நோய்களை இளஞ்செடிகளில் இருந்து காப்பாற்ற முடிகிறது. பயறு வகைகளில் உள்ள சிறப்புத் தன்மை, அதில் உள்ள வேர்முடிச்சுகளே ஆகும். ரைசோப்பியம் விதைநேர்த்தி செய்வதால் அதிக வேர்முடிச்சுகள் உண்டாகி, காற்று மண்டலத்தில் உள்ள தழைச் சத்தை பூமியில் நிலைநிறுத்தி அதைப் பயறு வகைப் பயிர்கள் கிரகிக்க உதவுகிறது.
பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் விதை நேர்த்தி செய்வதால், மணிச்சத்தை பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் கிரகித்து பயிருக்கு எளிதில் கிடைக்கும். இதனால், ரசாயன உரச் செலவைக் குறைக்கவும், மகசூலை அதிகரிக்கவும் முடியும்.
நீர்ப்பாசனம், உர மேலாண்மை: பயறு வகைப் பயிர்களுக்கு குறைந்த நீர் போதுமானது. பயிரானது 250 முதல் 300 மி.மீட்டராகும் வளர்ச்சிப் பருவத்தின் போதும், பூக்கும் தருணம் மற்றும் விதை பிடிக்கும் தருணங்களில் கண்டிப்பாக நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். தழை, மணி மற்றும் சாம்பல் சத்து ஒரு ஹெக்டேருக்கு 25, 50, 25 கிலோ என்ற அளவில் இடவேண்டும்.
இலைவழி உரம்: அதிக திரட்சியான காய்கள், கூடுதல் மகசூல் பெறுவதற்கு, 2 சதம் டிஏபி கரைசலான, அதாவது 5 கிலோ டிஏபி யை 10 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் வடித்து தெளிந்த கரைசலை 250 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.
தெளிக்கும்போது வயலில் போதுமான ஈரப்பதம் இருக்க வேண்டும். இதை 50 சதம் பூக்கும் தருணத்தில் ஒருமுறையும் 15 நாள்கள் இடைவெளி விட்டு மறுமுறையும் தெளிக்க வேண்டும். மஞ்சள் தேமல் நோயால் பாதிக்கப்பட்ட செடிகளை உடனடியாக களைதல் வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு: ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வேரழுகல் நோயை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த, சூடோமோனாஸ் புளோரைசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியை ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோவுடன்50 கிலோ தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து, விதைத்த 30 நாள்கள் கழித்து மண்ணில் இடவேண்டும். அல்லது வேப்பம் பிண்ணாக்கு 150 கிலோ ஒரு ஹெக்டேருக்கு இட வேண்டும்.
விழுப்புரம் மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் போதிய அளவு உளுந்து விதைகள் இருப்பில் உள்ளன. தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் (பயறு வகை) திட்டத்தின் கீழ், மானிய விலையில் உளுந்து விதைகளைப் பெற்று, மேற்கண்ட தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து, அதிக மகசூல் பெற்று பயனடையலாம் என்று வேளாண் உதவி இயக்குநர் இரா.பெரியசாமி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com