வெயிலுக்கேற்ற வெள்ளரி!

நமது உடலுக்கு நீர்ச் சத்தும், குளிர்ச்சியும் தரும் காய்கனிகளில் ஒன்று வெள்ளரி. இதைத் தோட்டப் பயிராக சாகுபடி செய்து,
வெயிலுக்கேற்ற வெள்ளரி!

நமது உடலுக்கு நீர்ச் சத்தும், குளிர்ச்சியும் தரும் காய்கனிகளில் ஒன்று வெள்ளரி. இதைத் தோட்டப் பயிராக சாகுபடி செய்து, 50 நாளில் அறுவடை செய்யலாம். இதன் மூலம் குறுகிய நாளில் அதிக லாபம் பெறலாம் என, தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. 
வெள்ளரி எல்லா வகை மண்ணிலும் வளரும். ஆனால், அதிக மகசூல், சாகுபடி கிடைக்க களிமண்ணுடன் கூடிய இரு பாங்கான மண் வகை மிகவும் ஏற்றது. வெள்ளரி வெப்ப மண்டலப் பயிர். குறைந்த வெப்பநிலை கொண்ட பருவம் சாகுபடி செய்ய மிகச் சிறந்தது. ஜூன் - செப்டம்பர், டிசம்பர் - மார்ச் மாதங்களில் சாகுபடி செய்யலாம்.
நிலம் தயாரித்தல்: நிலத்தை 3 அல்லது 4 முறை நன்றாக உழுது, 1.5 மீட்டர் இடைவெளியில், 45 செ.மீ. ஆழம், அகல, நீளத்தில் குழி வெட்டி, அதில் 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரமிட வேண்டும். அதனுடன் 100 கிராம் கலப்பு உரமிட்டு மேல் மண் கலந்து நிரப்பி விதை ஊன்ற வேண்டும்.
நடவு முறை: ஒரு ஹெக்டேருக்கு 2 கிலோ விதை தேவை. விதை ஊன்றும் முன் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் பெவிஸ்டின் மருந்து கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு குழிக்கு 4 முதல் 5 விதை ஊன்ற வேண்டும்.
நீர் மேலாண்மை: விதை ஊன்றியதும் குடம் மூலமும், செடி வளர்ந்ததும் வாய்க்கால் மூலமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடி நன்றாக வளர்ந்ததும் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
பின்செய் நேர்த்தி: விதை முளைத்ததும் குழிக்கு 3 செடி விட்டு மற்றவற்றைக் களைய வேண்டும். கொடி வளர்ந்ததும் குழியை 30 நாள் இடைவெளியில் களையெடுத்து சுத்தப்படுத்த வேண்டும்.
எத்ரல் என்ற வளர்ச்சி ஊக்கியான 25 பிபிஎம் என்ற மருந்தை 10 லிட்டர் நீரில் 2.5 மில்லி கிராம் அளவில் கலந்து 2ஆம் இலைப் பருவத்தில் முதல் முறையும், பிறகு 7 நாள் இடைவெளியில் 3 முறையும் தெளிக்க வேண்டும். இதன் மூலம் பெண் பூ உற்பத்தி அதிகரிக்கும். விதை ஊன்றி 30 நாள் கழிந்ததும் 50 கிராம் யூரியாவை மேல் உரமாக இடலாம்.
பயிர்ப் பாதுகாப்பு: பூசணி வண்டு, பழ ஈயின் தாக்குதல் இருக்கும். பூசணி வண்டைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீரில் கார்பரைல் கலந்து தெளிக்க வேண்டும்.
பழ ஈயை கட்டுப்படுத்த மாலத்தியான் மருந்து ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி லிட்டர் கலந்து தெளிக்கலாம். பழஈயைக் கருவாட்டுப் பொறி வைத்தும் கட்டுப்படுத்தலாம்.
அறுவடை: மேற்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம் விதை ஊன்றிய 50 நாளில் வெள்ளரிக் காய்களை அறுவடை செய்யலாம். பிறகு, 8 முதல் 10 நாள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்வதன் மூலம் ஒரு ஹெக்டேருக்கு 8 முதல் 10 டன் வரை வெள்ளரிக் காய் கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com