நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற

நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற அதற்குரிய தொழில்நுட்பங்களை கையாள வேண்டும் என வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.
நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற

பட்டுக்கோட்டை: நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற அதற்குரிய தொழில்நுட்பங்களை கையாள வேண்டும் என வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ஈஸ்வர் கூறியதாவது: 
டெல்டா பகுதி விவசாயிகள் மணற்பாங்கான நிலங்களில் நெல் அறுவடை செய்த பிறகு, நிலத்தை நன்கு உழுது சமன் செய்து, இயந்திரம் மூலமாகவோ, ஆள்களைக் கொண்டோ நிலக்கடலையை விதைத்து, பாத்திகள் அமைத்த பின்னர் கீழ்க்கண்ட தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டும். 
நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற பயிர் எண்ணிக்கையை பராமரிப்பது மிக அவசியம். ஏக்கருக்கு 80 கிலோ விதைகள் தேவைப்படும். வேளாண்துறை மூலம் கே 6 என்ற புதிய ரகம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. 
மேலும், நிலக்கடலையில் விதை மூலமும், மண் மூலமும் பரவும் வேர் அழுகல், தண்டு அழுகல், இலைப்புள்ளி ஆகிய நோய்களைக் கட்டுப்படுத்த 1 கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் டி.விரிடி கலந்து விதை நேர்த்தி செய்து, 24 மணி நேரம் கழித்து 200 கிராம் ரைசோபியம், 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை ஆறிய வடிக்கஞ்சியில் கலந்து நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும். 
விதைகளை விதைக்கும்போது செடிக்கு செடி 10 செ.மீ வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளி இருக்குமாறும், விதைக்கப்படும் விதை 4 செ.மீ ஆழத்திற்கு கீழே சென்று விடாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு விதைப்பு செய்வதால் 1 சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற அளவில் பயிர் எண்ணிக்கையை சரியாக பராமரிக்க முடியும். 
நிலக்கடலையில் களைகளைக் கட்டுப்படுத்த விதைப்பு செய்த 3 நாள்களுக்குள் மண்ணில் ஈரம் இருக்கும் சூழ்நிலையில் புளுகுளோரோலின் என்ற களைக் கொல்லியை ஏக்கருக்கு 800 மிலி என்ற அளவில் மணலுடன் கலந்து தூவ வேண்டும். நிலக்கடலையில் நன்கு திரட்சியான பருப்புகள் உருவாக விதைத்த 45 நாளில் மண் அணைக்கும்போது ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சம் இட்டு பயிரைச் சுற்றி மண் அணைக்க வேண்டும். 
ஜிப்சத்தில் உள்ள சுண்ணாம்பு சத்து காய்களை திரட்சியாக, அதிக எடை கொண்டதாக மாற்றவும், கந்தகச் சத்து எண்ணெய் சத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. நிலக்கடலையில் பூக்கள் அதிகம் பிடிக்கவும், வறட்சியை தாங்கும் தன்மை அதிகரிக்கவும், உயர் விளைச்சலைப் பெறவும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக தயாரிப்பான நிலக்கடலை ரிச் என்ற பயிர் வளர்ச்சி ஊக்கியை ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 லிட்டர் நீரில் கலந்து அதனுடன் ஒட்டும் திரவம் சேர்த்து பூக்கும் பருவத்தில் ஒரு முறையும், காய் பிடிக்கும் பருவத்தில் ஒரு முறையும் தெளிக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com