உயர் விளைச்சல் தரும் மரவள்ளி சாகுபடி தொழில்நுட்பங்கள்!

உயர் விளைச்சல் தரும் மரவள்ளி சாகுபடி தொழில்நுட்பங்கள்!

மரவள்ளிப் பயிரில் சாகுபடி தொழில்நுட்பங்களை முறையாகப் பின்பற்றினால் கூடுதல் மகசூல் பெறலாம் என ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வேளாண் தொழில்நுட்ப ஆலோசகரும்

நாமக்கல்: மரவள்ளிப் பயிரில் சாகுபடி தொழில்நுட்பங்களை முறையாகப் பின்பற்றினால் கூடுதல் மகசூல் பெறலாம் என ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வேளாண் தொழில்நுட்ப ஆலோசகரும், ஓய்வுபெற்ற வேளாண் துணை இயக்குநருமான மதனகோபால் தெரிவித்தார்.
மண்வகை:இதற்கு மண் மற்றும் மணல் கலந்த பூமி ஏற்றது. களிமண் மற்றும் வண்டல் மண்ணில் சாகுபடி செய்ய இயலாது. மண்ணில் கார அமிலத் தன்மை 6 முதல் 6.5 சதவீதம் வரை இருத்தல் வேண்டும்.
மரவள்ளியை இறவையிலும், மானாவாரியிலும் சாகுபடி செய்யலாம். மலைப் பிரதேசங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யப்படுகிறது. இறவையில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடவு செய்யலாம்.
ரகங்கள்:நீர்ப் பாசன வசதியுள்ள சமவெளிப் பகுதிகளில் முள்ளுவாடி, கோ-2, தாய்லாந்து, பர்மா, குங்குமரோஸ் போன்ற ரகங்களும், நீர்ப்பாசனம் குறைவாக உள்ள பகுதிகளில் எச்-226 என்ற ரகமும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஏத்தாப்பூர்-1 என்ற ரகம் இறவை சாகுபடிக்கு உகந்தது. 
விதைக் கரணை தேர்வு, நேர்த்தி: நன்கு வளர்ச்சி அடைந்த நோய் தாக்காத செடிகளிலிருந்து விதைக் கரணைகளைத் தேர்வு செய்து, குச்சியின் மேல் பாகம் மற்றும் அடிபாகத்தை நீக்கிவிட்டு நடுப் பாகத்திலிருந்து 15 செ.மீ. நீளமான தரமான குச்சிகளை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
குச்சிகளை நடுவதற்கு முன், இயற்கை முறையாக இருந்தால் 1 லிட்டர் நீருக்கு 30 கிராம் அசோஸ்பைரில்லம், 30 கிராம் பாஸ்போபாக்டீரியா, 10 கிராம் டி.விரிடி வீதம் ஒரு ஏக்கருக்குத் தேவையான அளவு கரைசலை தயார் செய்து, அதில் 15 நிமிடம் நடவு கரணைகளை ஊறவைத்து அதன் பின்னர் நடவு செய்ய வேண்டும். 
மானாவாரிப் பயிராக இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, சிங்க் சல்பேட் 5 கிராம் மற்றும் பெரஸ் சல்பேட் 5 கிராம் வீதம் தேவையான அளவு கரைசலைத் தயார் செய்து, நடவு கரணைகளை 15 நிமிடம் ஊறவைத்து நடவு செய்ய வேண்டும். நடவு செய்யும் போது, கணுவின் பருக்கள் மேல்நோக்கி இருக்குமாறு நடுவது மிகவும் அவசியம்.
பயிர் இடைவெளி: இறவைப் பயிருக்கு வரிசைக்கு 75 செ.மீ. பார்களும், செடிக்கு 75 செ.மீ. இடைவெளியும் இருத்தல் வேண்டும். மானவாரிப் பயிருக்கு வரிசைக்கு 60 செ.மீ. பார்களும், செடிக்கு 60 செ.மீ. இடைவெளியும் இருத்தல் வேண்டும். 
உர அளவு: கடைசி உழவில் ஒரு ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் மற்றும் 100 கிலோ ஜிப்சம் இடுவதன் மூலம் மண் இலகுவாகி கிழங்குகள் நன்கு பருமனாவதுடன், கிழங்குகளின் மாவுச்சத்து அளவும் அதிகரிக்கும். 
நீர் நிர்வாகம்: மரவள்ளி நட்ட மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் விட வேண்டும். பின் செடிகள் நன்றாக வளர ஒரு மாதம் வரை 3 நாள்களுக்கு ஒருமுறையும், பின் 2-ஆம் மாதம் முதல் 7 மாதங்கள் வரை 7 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறையும், 8-ஆவது மாதம் முதல் அறுவடை வரை 20 முதல் 30 நாள்கள் இடைவெளியிலும் நீர் பாய்ச்ச வேண்டும்.
சொட்டு நீர் உரப் பாசனம்:
ஒரு ஏக்கருக்குத் தேவையான யூரியா 80 கிலோ மற்றும் வெள்ளை பொட்டாஷ் 160 கிலோ ஆகியவற்றை பயிர் வளர்ச்சி பருவம் முழுவதும் பிரித்து அளிக்கலாம்.
நடவு செய்த 20 நாள்களுக்குள் இடைவெளியை நிரப்ப வேண்டும். வயலில் முதல் களை 25 நாள்களிலும் அதன் பின் மாதம் ஒரு முறை வீதம் ஐந்தாம் மாதம் வரை களை எடுக்க வேண்டும். நடவு செய்த 60-ஆம் நாளில் நன்றாக வளர்ந்துள்ள இரண்டு கிளைகளை மட்டும் விட்டு இதர பக்கக் கிளைகளை அகற்ற வேண்டும்.
ஊடு பயிர் சாகுபடி: ஊடுபயிராக சிறிய வெங்காயம், உளுந்து, பச்சைப்பயறு, மற்றும் கொத்தமல்லி போன்ற குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்யலாம். நடவு செய்த 60-70 நாள்களில் ஊடுபயிரை அறுவடை செய்து, மேலுரம் இட்டு பின்னர் மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
நுண்ணூட்டச் சத்துகள் பற்றாக்குறை: இரும்புச்சத்து பற்றாக்குறை தென்பட்டால், இளம் செடிகளில் உள்ள இலைகளில் வெளிர்பச்சை நிறமாகவோ அல்லது மஞ்சள் நிறமாகவோ மாறும்.
இதனை நிவர்த்தி செய்ய ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரும்பு சல்பேட் என்ற அன்னபேதி உப்பு 10 கிராம், துத்தநாக சல்பேட் 5 கிராம், யூரியா 10 கிராம் ஆகியவற்றை சேர்ந்த கரைசலை தேவையான அளவு தயார் செய்து கைத்தெளிப்பான் கொண்டு இலைகள் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்.
களை நிர்வாகம்: கரணை நட்ட 3 நாள்களுக்குள் ஏக்கருக்கு 1.3 லிட்டர் பெண்டிமெத்தலின் களைக்கொல்லி மருந்தை தெளித்து களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
பூச்சிக் கட்டுப்பாடு
மாவுப்பூச்சி: மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு அசிரோபேகஸ் பப்பாயே என்ற ஒட்டுண்ணியை 100 எண்ணிக்கையில் விட வேண்டும். 16 நாள்களில் ஒரு ஏக்கரில் விடப்பட்ட 100 ஒட்டுண்ணிகள் சுமார் 5,000 ஒட்டுண்ணிகளாக இனவிருத்தி அடையும். ஒட்டுண்ணிகளை விடுவித்த பகுதிகளில் பூச்சிக்கொல்லிகள் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
வெள்ளை ஈ தாக்குதல்: இதனைக் கட்டுப்படுத்த டிரைசோபாஸ் 40 ஈ.சி 2 மில்லியை ஒரு லிட்டர் நீர் வீதம் தேவையான அளவு கரைசலை தயார் செய்து, தெளிப்பான் மூலம் தெளித்து விட வேண்டும்.
சிவப்பு சிலந்தி பேன் தாக்குதல்: இதனைக் கட்டுப்படுத்த டைக்கோபால் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீர் வீதம் தேவையான அளவு கரைசலை தயார் செய்து தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
தேமல் நோய் கட்டுப்பாடு: நாற்றங்கால் முறையைப் பின்பற்றி தேமல் நோய் தாக்கப்படாத நாற்றுகளை நடவு செய்ய தேர்ந்தெடுக்க வேண்டும். நோய் தாக்கிய செடிகளைப் பிடுங்கி எடுத்து தனியாக போட்டு எரித்து விட வேண்டும்.
கிழங்கு அழுகல் நோய் கட்டுப்பாடு: வயல்களில் வடிகால் வசதியினை மேம்படுத்த வேண்டும். ஏக்கருக்கு 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி என்னும் உயிர் பூஞ்சாணத்தை 100 கிலோ தொழுவுரத்துடன் கலந்து கரணைகளை நடவு செய்யும் முன் மண்ணில் இட வேண்டும்.
நடவு செய்த 7, 8 மற்றும் 9 மாதங்களில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு என்ற ரசாயன பூஞ்சாணக்கொல்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து செடியின் வேர்பாகம் நன்கு நனையுமாறு ஊற்ற வேண்டும்.
இலைப்புள்ளி நோய் கட்டுப்பாடு: மாங்கோஜெப் ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் வீதம் தேவையான அளவு கரைசலை தயார் செய்து, கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
அறுவடை: இப்பயிர் 8 முதல் 10 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும். அறுவடை செய்வதற்கு நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு முன் நீர் பாய்ச்ச வேண்டும்.
மகசூல்: மானாவாரி பயிராக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 6 முதல் 10 மெட்ரிக் டன்னும், இறவைப் பயிராக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 16 முதல் 20 மெட்ரிக் டன் வரை மகசூல் பெறலாம். விவசாயிகள், வேளாண் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கட்டணமில்லா உதவி தொலைபேசி எண்: 18004198800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com