நெல்லை மாவட்டத்தில் கார் பருவ சாகுபடி பணிகள் தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கார் பருவ சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. நாற்றுப் பாவுதல், நடவு செய்தல் போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கார் பருவ சாகுபடி பணிகள் தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கார் பருவ சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. நாற்றுப் பாவுதல், நடவு செய்தல் போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
 தாமிரவருணி பாசனத்தில் பாபநாசம் அணையின் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் 11 கால்வாய்கள் மூலம் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து ஜூன் 24இல் தண்ணீர் திறக்கப்பட்டது.
 முதல் கட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 7 கால்வாய்களில் 20,769 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. இதையடுத்து, கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய் பாசனத்தில் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
 இம்மாவட்டத்தில் நிகழ் கார் பருவத்தில் 25 ஆயிரம் ஏக்கர் நெல் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, பாளையங்கால்வாய் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, தென்காசி, செங்கோட்டை வட்டங்களில் முழு அளவில் விவசாயிகள் நாற்று பாவுதல், நடவு செய்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 பாபநாசம் அணையின் மூலம் இவ்விரு மாவட்டத்தில் பாசனம் பெற்று வரும் நிலங்களுக்கு முழுமையாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தாமிரவருணி பாசனத்தில் அனைத்து கால்வாய்கள் மூலம் பாசனம் பெற்று வரும் நிலங்கள், குடிநீர்த் தேவைக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 6) முதல் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வரை தண்ணீர் வழங்க அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
 நீர்மட்டம் நிலவரம்: வியாழக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் 95.30 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 77.39 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83.73 அடியாக இருந்தது. பிற அணைகளில் நீர்மட்டம்: கடனாநதி அணை 68.50 அடி, ராமநதி அணை 70 அடி,
 கருப்பாநதி அணை 67.53 அடி, குண்டாறு அணை 36.10 அடி, அடவிநயினார் அணை 114.75 அடி, வடக்குப் பச்சையாறு அணை 9.50 அடி, நம்பியாறு அணை 11.58 அடி, கொடுமுடியாறு அணை 46.50 அடி.
 பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 164.67 கனஅடி, சேர்வலாறு அணைக்கு 386.02 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 98 கனஅடி, கடனாநதி அணைக்கு 60 கனஅடி, ராமநதி அணைக்கு 15.34 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 10 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 6 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 28 கனஅடி நீர்வரத்து இருந்தது.
 பாசனம், குடிநீர்த் தேவைக்காக பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 904.75 கனஅடி, மணிமுத்தாறு அணையில் 375 கனஅடி, கடனாநதி அணையில் 60 கனஅடி, ராமநதி அணையில் 40 கனஅடி, கருப்பாநதி அணையில் 25 கனஅடி, அடவிநயினார் அணையில் 35 கனஅடி, கொடுமுடியாறு அணையில் 50 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com