குறுவைப் பருவத்துக்கேற்ற நெல் ரகங்கள்!

குறுவைப் பருவத்துக்கேற்ற நெல் ரகங்கள் குறித்து திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜா. ரமேஷ், ஆ. பாஸ்கரன் ஆகியோர் அளித்துள்ள பரிந்துரைகள்:
குறுவைப் பருவத்துக்கேற்ற நெல் ரகங்கள்!

நீடாமங்கலம்: குறுவைப் பருவத்துக்கேற்ற நெல் ரகங்கள் குறித்து திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜா. ரமேஷ், ஆ. பாஸ்கரன் ஆகியோர் அளித்துள்ள பரிந்துரைகள்:
ஆடுதுறை 36: 110 நாள்கள் வயதுடைய இந்த ரகம், குட்டையான சாயாத தன்மை கொண்டது. ஹெக்டேருக்கு 6 டன் விளைச்சல் தரவல்லது. நடுத்தர சன்ன வெள்ளை நிறமுடைய அரிசி. குருத்துப் பூச்சிக்கும், குலை நோய்க்கும் ஓரளவு எதிர்ப்புத் தன்மை உடையது. தமிழகமெங்கும் சாகுபடிக்கு ஏற்றது. 
ஆடுதுறை 37: 105 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 5.5 முதல் 6 டன் விளைச்சல் தரக்கூடியது. குட்டைப் பருமனுடன் வெள்ளை நிறமுடையது. குலை நோய், பழுப்புப் புள்ளி நோய், புகையான், பச்சை தத்து பூச்சிகளுக்கு நல்ல எதிர்ப்பு கொண்டது. இலைக்கருகல் நோய், மஞ்சள் குட்டை நோய், ஆனைக்கொம்பன், இலைச்சுருட்டுப் புழுவுக்கு ஓரளவு எதிர்ப்புடையது.
ஆடுதுறை 42 : 115 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 6 முதல் 6.5 டன் விளைச்சல் தரவல்லது. நீண்ட சன்ன, வெள்ளை நிறமுடையது. குலை நோய்க்கும், புகையானுக்கும் நடுத்தர எதிர்ப்பு கொண்டது. சொர்ணவாரி, கார், குறுவைப் பருவங்களில் தமிழகமெங்கும் பயிரிடுவதற்கு ஏற்ற ரகம். 
ஆடுதுறை 43 : 105 -110 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 6,000 கிலோ விளைச்சல் தரவல்லது. மத்திம சன்ன வெள்ளை அரிசி. சொர்ணவாரி, கார், குறுவைப் பருவங்களுக்கு ஏற்ற ரகம். 
ஆடுதுறை 45 : 105 - 115 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 6,000 கிலோ விளைச்சல் தரவல்லது. மத்திம சன்ன அரிசி. கார், குறுவை, சொர்ணவாரி ஆகிய பருவங்களுக்கு ஏற்றது. 65 சதவீதம் முழு அரிசி காணும் திறனுடையது. ஆனைக்கொம்பனுக்கு எதிர்ப்புத் திறன் உடையது. புகையானுக்கும், குருத்துப்பூச்சிக்கும் மிதமான எதிர்ப்பு திறன் உடையதாகும்.
ஆடுதுறை 47 : 115- 118 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 7 டன் வரை விளைச்சல் தரவல்லது. மத்திம சன்ன வெள்ளை அரிசி. சொர்ணவாரி, கார், குறுவை, நவரை ஆகிய பருவங்களுக்கு ஏற்றது. இலைக்கருகல், துங்ரோ நோய்க்கு எதிர்ப்புத் திறனுடையது. 
ஆடுதுறை 48 : 95 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 4.8 டன் விளைச்சல் அளிக்கும். நீண்ட சன்ன வெள்ளை அரிசியை உடையது. தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் நேரடி விதைப்புக்கு ஏற்றது. பாசன நீர் வருவது தாமதமாகும் காலங்களில் தஞ்சை, நாகை மாவட்டங்களில் பின் குறுவைக்கு ஏற்றது. இந்த ரகம் குருத்துப்பூச்சி, இலைமடக்கு புழுவுக்கு எதிர்ப்புத் திறனுள்ள ரகமாகும். 
திரூர்குப்பம் 9 : 105 முதல் 110 நாள்கள் வயதுடையது. இந்த ரகம் குட்டையான சாயாத தன்மைக் கொண்டது. ஹெக்டேருக்கு 6.5 டன் விளைச்சல் அளிக்கும். குட்டை பருமனான சிவப்பு நிற அரிசியை உடையது. 
அம்பாசமுத்திரம் (ஏஎஸ்டி) 16 : 115 நாள்கள் வயதுடையது. 90 முதல் 95 செ.மீ., வளரக்கூடிய சாயாத ரகம். ஹெக்டேருக்கு 5.5 டன் விளைச்சல் அளிக்கும். வைக்கோல் விளைச்சலும் அதிகம். குட்டை பருமனான அரிசியை உடையது. குலைநோய் மற்றும் புகையானுக்கு எதிர்ப்புத்தன்மை கொண்டது.
திருச்சி 2 : 115 முதல் 120 நாள்கள் வயதுடையது. இந்த ரகம் குட்டையான சாயாத தன்மைக் கொண்டது. ஹெக்டேருக்கு 5.4 டன் விளைச்சல் அளிக்கும். நீண்ட சன்ன வெள்ளை நிற அரிசி. களர் உவர் நிலங்களுக்கு ஏற்ற ரகமாகும். குலைநோய்க்கு எதிர்ப்புத்தன்மை கொண்டது.
மதுரை 5 : 95 முதல் 100 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 5 டன் விளைச்சல் தரவல்லது. மத்திய சன்னரக வெள்ளை நிற அரிசி. வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடையது.
மதுரை 6 : 110 முதல் 115 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 6.2 டன் விளைச்சல் தரவல்லது. நீண்ட சன்னரக வெள்ளை நிற அரிசி. அவல் செய்வதற்கு மிகவும் ஏற்றது. 
கோயம்புத்தூர் 51: 105 முதல் 110 நாள்கள் வயதுடையது. தூர் பிடித்து சாயாத தன்மைக் கொண்டது. 
ஹெக்டேருக்கு 6.6 டன் விளைச்சல் அளிக்கவல்லது. சன்னரக வெள்ளை நிற அரிசி. குலை நோய், புகையான் மற்றும் பச்சை தத்துப்பூச்சிகளுக்கு மிதமான எதிர்ப்புத் தன்மைக் கொண்டது. இந்த ரக நெல்கள் குறுவைப் பருவத்துக்கு ஏற்றதாகும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com