குறுவைக்கேற்ற நெல் ரகங்களும், நாற்றங்கால் தயாரிப்பு முறையும்!

பெரியாறு - வைகை பாசனப் பகுதிகளில் பேரணை முதல் கள்ளந்திரி மதகு வரையிலான இருபோக சாகுபடிப் பகுதிகளுக்கு ஜூன் மாதத்திலேயே விவசாயத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளதால்,
குறுவைக்கேற்ற நெல் ரகங்களும், நாற்றங்கால் தயாரிப்பு முறையும்!

மேலூர்: பெரியாறு - வைகை பாசனப் பகுதிகளில் பேரணை முதல் கள்ளந்திரி மதகு வரையிலான இருபோக சாகுபடிப் பகுதிகளுக்கு ஜூன் மாதத்திலேயே விவசாயத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளதால், சந்தை நிலவரம், அணைகளின் நீர் இருப்பு நிலவரத்துக்கேற்ப குறுவை நெல்ரகங்களை தேர்வு செய்து விவசாயிகள் அதிக மகசூலைப் பெறலாம் என மதுரை வேளாண் அறிவியல் மையத்தினர் தெரிவித்தனர்.
தற்போது அரிசிச் சந்தையைப் பொறுத்தவரை மக்கள் மிகச்சன்ன ரக அரிசியை விரும்பி வாங்குகின்றனர். மிகச்சன்ன நெல்ரகங்கள் பல சாகுபடியில் இருந்தாலும், நோய் எதிர்ப்புத் திறன், பருவமழை காலத்தில் விளைந்த நெல் சாய்ந்து படுத்துவிடாமல் தாக்குப் பிடிக்கவும், 105 முதல் 110 நாட்களில் அறுவடைக்குத் தயாராவதாகவும் உள்ள நெல் ரகங்களை விவசாயிகள் தேர்வுசெய்யவேண்டும்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ள கோ 51, மதுரை 6 மற்றும் அம்பை 16 ரகங்களை தற்போதைய சூழ்நிலையில் பயிரிடலாம் என மதுரை வேளாண் அறிவியல் மையத்தினர் பரிந்துரைக்கின்றனர். ஆடிப் பட்டத்துக்கும் புரட்டாசிப் பட்ட சாகுபடிக்கும் இந்த ரகங்கள் கைகொடுக்கும். இந்த ரக நெல் இலைப்புழுவிற்கு எதிர்ப்புத் திறன் கொண்டதுடன், புகையான், பச்சைதத்துப் பூச்சி, தண்டுதுளைப்பான் பிரச்னைகளைத் தாக்குப் பிடிக்கும் திறனும் உள்ளது. மேலும், வறட்சியைத் தாங்கி வளரும். இதில் எக்டேருக்கு 6,603 கிலோ மகசூல் தரவல்லது.
110 முதல்115 நாட்களில் விளைச்சல் தரும் அம்பை 16ரகம் குலைநோய் தாக்குதலை தாக்குப் பிடிக்கும் திறனுடையது. மல்லிகைப் பூவாய் இட்லியும் வாய்க்கு ருசியான தோசையும் சுடுவதற்கேற்ற மாவை தரும் குண்டு அரிசியாகும். பலகாரங்களுக்கு தேவையான அதிக மாவைத்தரும் அரிசிரகம் இது. சந்தையில் குண்டு அரிசிக்கு தனி இடமுண்டு. 
பச்சைதத் துப்பூச்சி, வெண்முதுகுபூச்சி மற்றும் தண்டு துளைப்பானுக்கும் மிதமான எதிர்ப்புத் திறனுடையது. ஒரு எக்டேருக்கு 9,338 கிலோ மகசூல் தரவல்ல நெல் ரகமாகும். இதற்கெல்லாம் அடிப்படை தரமான சான்றிதழ்பெற்ற, விதைகளையே விவசாயிகள் வாங்கிப்பயன்படுத்தவேண்டும்.
நாற்றங்கால் தயாரிப்பு: நாற்றங்காலில் குப்பை அடியுரமிட்டு உழவேண்டும். நாற்றங்காலில் களைக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். 20 சென்ட் நாற்றங்காலில் பிரிட்டிகுலோர் மருந்து 300 கிராம் கலந்து தெளிக்கவேண்டும். மருந்தைத் தெளிக்கும் முன், நாற்றங்காலில் உழுது சமப்படுத்தி, தண்ணீரைத் தேக்கிவைக்கவேண்டும். பின்னர் வடிகால் மூலம் தண்ணீரை வடித்துவிட வழி செய்து வைக்க வேண்டும். விதை விதைத்த பின்னர், நாற்றின் வளர்ச்சியைக் கண்காணிக்கவேண்டும். வளர்ச்சி குன்றியிருந்தால், விதை விதைத்த 10-வது நாளில் 0.5 சதம் யூரியா மற்றும் 0.5 சதம் துத்தநாகம் கரைசலைத் தெளிக்கலாம்.
நாற்றங்கால் மண் களிமண்பாங்காக இருந்தால் நாற்று பறிக்கும்போது நாற்றின் வேர்கள் அறுபடாமல் இருக்க 4 கிலோ ஜிப்சத்துடன் ஒரு கிலோ டிஏபி கலந்து நாற்றங்காலில் தெளிக்க வேண்டும். மேலும் அசோசஸ்பயிரில்லம், பாஸ்போ பாக்டீரியா 4 பாக்கெட்டுகளை 40 லிட்டர் நீரில் கலந்து நாற்றுக்களின் வேர்கள் நனையுமாறு மூழ்க வைக்க வேண்டும். இதனால், நடவுவயலில் நாற்றின் வளர்ச்சியை அதிகரிக்கும். 
நாற்றங்காலில் தத்துப்பூச்சி, இலைப்பேன் தாக்குதல் காணப்பட்டால் இதனைக் கட்டுப்படுத்த 3 சதம் வேப்பெண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் கலந்து ஒரு லிட்டர் நீரில் மோனோகுளோரேட்டோபாஸ் 2 மில்லியை கலந்து நாற்றில் தெளித்து சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
நடவுதொழி: நாற்றுநடவுக்கு தொழி தயாரானதும் அடியுரம் இடுவதற்கு முன் அதில் ஏக்கருக்கு நூறு கிலோ வேப்பம்புண்ணாக்கை கலந்து தொழியில் இடவேண்டும். இதனால், நடவான நாற்றில் அதிக சிம்புகள் தோன்றும். மேலும் பூச்சிநோய் தாக்குதலை கட்டுப்படுத்தும். நாற்றினை அசோஸ்பைரில்லத்தில் நனைக்கும் முன் ஒருலிட்டர் நீரில் 2 மில்லி குளோர்பைரிபாஸ் கரைசலில் நனைத்தால் இளம்பயிரில் பூச்சித் தாக்குதலை தவிர்க்கலாம். 
செம்மைநெல் சாகுபடி: செம்மைநெல் சாகுபடிக்கு சமமான நிலைத்தில் நாற்றங்கால் தயார்செய்து அதில் பிளாஸ்டிக் விரிப்பை போடவேண்டும். விரிப்பில் 24 மணிநேரம் ஊற வைத்த நெல் விதையை சீராக விதைக்க வேண்டும். நாற்றுக்கு பூவாளி பயன்படுத்தி தண்ணீர் தெளிக்கவேண்டும். தினசரி இரண்டு அல்லது மூன்றுமுறை நீர்தெளித்து மண்ணை ஈரப்பதத்துடன் வைக்கவேண்டும். இதில் தயாரான நாற்றை 15 நாளுக்குப்பின் நடவுசெய்ய வேண்டும் என மதுரை வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆனந்தி, செல்வராணி ஆகியோர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com