நெல், கரும்பு பயிர்களில் நோய்த் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்களை கட்டுப்படுத்தி, மகசூலைப் பெருக்குவது குறித்த ஆலோசனைகளை தமிழ்நாடு வேளாண்மைப்
நெல், கரும்பு பயிர்களில் நோய்த் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

கோவை: நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்களை கட்டுப்படுத்தி, மகசூலைப் பெருக்குவது குறித்த ஆலோசனைகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.
நெல்: நெற்பயிரில் தற்போது குருத்துப் பூச்சியின் தாக்குதல் தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகிறது. இதன் தாக்குதல் பொருளாதாரச் சேத நிலையை விடக் குறைவாகவே உள்ளது. சேதம் அதிகம் தென்படும்போது பூச்சிக் கொல்லிகளான குளோர்பைரிபாஸ் 500 மி.லி. அல்லது கார்டாப் 400 கிராம் அல்லது குளோரான்ட்ரினிலிபுரோல் 60 மி.லி. ஏக்கருக்கு தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
தற்போது நிலவி வரும் வெப்பமான சூழ்நிலையில் கோடை நெல்லில் இலைச் சிலந்தி தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விவசாயிகள் இதன் தாக்குதலைக் கண்டறிந்து சிலந்தி கொல்லிகளான டைக்கோபால் ஏக்கருக்கு 200 மில்லி தெளிக்க அறிவுறுத்தப்படுகிறது.
நெல்லில், வரக்கூடிய மாதங்களில் தமிழகம் முழுவதும் இலைப்புள்ளி நோய் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. இலைப்புள்ளி நோயைக் கட்டுபடுத்த ஹெக்ஸகோனசோல் 4 சதவீதம், சினிப் 68 சதவீதம் மற்றும் 1000 கிராம் ஏக்கருக்கு எனும் அளவில் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.
பயறு: திண்டுக்கல் மாவட்டத்தில் பயறு வகைப் பயிர்களில் காய், துளைப்பான் தாக்குதல் குறைந்த அளவு தென்படுகிறது. தாக்குதல் அதிகமாகும்போது குளோரான்ட்ரானிலிபுரோல் ஏக்கருக்கு 60 மில்லி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். துவரை, உளுந்து மற்றும் பச்சை பயிர்களில் வேர் அழுகல் நோய்த் தாக்க வாய்ப்புள்ளது. இந்நோயைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட இடத்தில் கார்பன்டாசிம் 1 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
பருத்தி: திண்டுக்கல் மாவட்டத்தில் தத்துப் பூச்சிகளின் தாக்குதல் பொருளாதாரச் சேத நிலையைவிட குறைவான அளவில் காணப்பட்டது. இப்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது இமிடாகுளோபிரிட் ஏக்கருக்கு 40 மில்லி தெளிக்க வேண்டும். இளஞ்சிவப்புக் காய்ப் புழுவின் தாக்குதல் ஈரோடு மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள பருத்திப் பயிரில் பரவலாகத் தென்பட்டது. இதைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு புரோபனோபாஸ் 800 மில்லி தெளிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
கரும்பு: ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்புப் பயிரில் வெள்ளைக் கம்பளி அசுவனி பூச்சித் தாக்குதல் தென்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த இயற்கையாக வயலில் உள்ள இரை விழுங்கிகளான டைபா புழுக்கள் மற்றும் பழுப்புக் கண்ணாடி இறக்கைப் பூச்சிகளைப் பாதுகாக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
வாழை: கோவை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி மற்றும் தேனி மாவட்டங்களில் வாழையில் இலைப்புள்ளி நோய்த் தாக்குதல் காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 0.1 சதவீதம் (1 கிராம், லிட்டர்) அல்லது மான்கோசெப் 0.2 சதவீதம் (2 கிராம் , லிட்டர்) அல்லது ப்ரபிகெனசோல் 0.1 சதவீதம் (1மி.லி, லிட்டர் மற்றும் ஒட்டுந்திரவமான டீப்பால் சேர்த்து 3 முறை 10-15 நாள்கள் இடைவெளியில்) அறிகுறிகள்ஆரம்பித்ததில் இருந்து இலையின் அடிப்பகுதியில் தெளிக்க வேண்டும். 
பியூசேரியம் வாடல் நோயை கட்டுப்படுத்த மரத்தின் 3, 5 மற்றும் 7- ஆம் மாதத்தில் கார்பன்டாசிம் 2 விழுக்காடு (20 கிராம் லிட்டருக்கு) கரைசல் தயாரித்து 3 மி.லி.யை கிழங்கினுள் ஊசி மூலமாகச் செலுத்த வேண்டும். நோய்த் தாக்கப்பட்ட மரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மற்ற வாழை மரங்களுக்கும் கார்பன்டாசிம் (1 கி,லிட்டர்) தயாரித்து மரத்தை சுற்றி 2, 4 மற்றும் 6-ஆம் மாதத்தில் ஊற்ற வேண்டும்.
பப்பாளியில் வளையப் புள்ளி வைரஸ் நச்சுயிரி நோய்: பப்பாளியில் வளையப் புள்ளி வைரஸ் நச்சுயிரி நோய்த் தாக்குதல் காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த நடவு செய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன் இரு வரிசைகளில் மக்காச்சோளப் பயிரை தோட்டத்தைச் சுற்றி நட வேண்டும். பூச்சிகளைக் கட்டுப்படுத்த, மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறியை ஹெக்டேருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.
மேலும் லிட்டருக்கு வேப்பெண்ணெய் 1 மி.லி. (அல்லது) அஸிபேட் 1.5 மி.லி (அல்லது) இமிடாக்ளோபிரிட் 0.75 மி.லி. எனும் அளவில் கலந்து நடவில் இருந்து 4 மாதம் வரை ஒரு மாத இடைவெளியில் தெளிக்க வேண்டும். நட்ட நான்காவது மற்றும் ஏழாவது மாதத்தில் 5 கிராம் துத்தநாக சல்பேட் மற்றும் ஒரு கிராம் போரிக் அமிலம் 1 லிட்டர் நீருக்கு எனும் அளவில் தெளிக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com