"தேனீக்களை பாதிக்கும் பூச்சிக் கொல்லிகளை தடை செய்ய வேண்டும்'

மகரந்த சேர்க்கை மூலம் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தேனீக்களை பாதிக்கும் பூச்சிக்கொல்லிகளை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக ஓய்வுபெற்ற பூச்சியியல் துறை பேராசிரியர்
"தேனீக்களை பாதிக்கும் பூச்சிக் கொல்லிகளை தடை செய்ய வேண்டும்'

மகரந்த சேர்க்கை மூலம் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தேனீக்களை பாதிக்கும் பூச்சிக்கொல்லிகளை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக ஓய்வுபெற்ற பூச்சியியல் துறை பேராசிரியர் பி.மணிதுரை மனோகரன் டேவிட் வலியுறுத்தினார்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) சார்பில், உலக தேனீ தினம் சென்னையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொண்டு நிறுவன நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், நபார்டு வங்கியின் சென்னை மண்டல தலைமைப் பொதுமேலாளர் பத்மா ரகுநாதன் பங்கேற்று பேசியது: 
இமாசலப் பிரதேசத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிள் உற்பத்தி வெகுவாகக் குறைந்தது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது, தேனீக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததே இதற்கு காரணம் எனத் தெரிய வந்தது. இமாசலப் பிரதேசத்தின் குளிர்ந்த தட்பவெப்பநிலையை மனதில் கொண்டு பிரத்யேகமாக சிமென்ட்டில் தயாரிக்கப்பட்ட தேனீ வளர்ப்புப் பெட்டிகளைப் பயன்படுத்தி, தேனீ வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்தி தேனீக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் பலனாக அங்கு ஆப்பிள் உற்பத்தி அதிகரித்தது. இதை நாம் உணர்ந்து தேனீக்களை பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.
ஓய்வுபெற்ற பேராசிரியர் பி.மணிதுரை மனோகரன் டேவிட் பேசியது:
உலகில் உணவுத் தேவை அதிகரித்து வரும் நிலையில், விவசாயத்தில் மகரந்தச் சேர்க்கையின் அவசியமும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. ஆனால், விளைச்சலை அதிகரிப்பதற்காக நாம் உபயோகிக்கும் பூச்சிக்கொல்லிகளால், மகரந்தச் சேர்க்கைக்கு அத்தியாவசிய உயிரினமான தேனீக்கள் உயிரிழக்கின்றன.
நவீன பூச்சிக் கொல்லிகளால், தேனீக்கள் மற்றும் அதுபோன்ற பூச்சி இனங்கள் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளது. பசுமை சாயம் பூசிக்கொண்டு வரும் பூச்சிக் கொல்லிகளைப் பார்த்தது நாம் ஏமாந்துவிடக் கூடாது. ஐரோப்பிய நாடுகளில் தேனீக்களை பாதிக்கும் அனைத்து வகையான பூச்சிக் கொல்லிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை உலக நாடுகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com