புதிய சீரக சம்பா நெல் ரகம்  விஜிடி -1 கண்டுபிடிப்பு!

தேனி மாவட்டம், வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் சீரக சம்பா நெல் விஜிடி-1 என்ற புதிய ரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிய சீரக சம்பா நெல் ரகம்  விஜிடி -1 கண்டுபிடிப்பு!

பெரியகுளம்: தேனி மாவட்டம், வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் சீரக சம்பா நெல் விஜிடி-1 என்ற புதிய ரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நெல் ரகங்கள் இருந்தாலும் சீரக சம்பா நெல் முதன்மை இடத்தை பிடித்துள்ளது. இந்த ரக நெல் நல்ல வளமான மண்ணில் மட்டுமே வளரும் தன்மை கொண்டது. மேலும் இதற்கு இயற்கை உரங்கள் மட்டுமே இடவேண்டும். இதில் நாட்டு சீரக சம்பா நெல் 6 அடி உயரம் வரை வளரும் தன்மையுடையது. சில நேரங்களில் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் இதனை பயிரிடுவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்நிலையில் அனைத்து காலங்களிலும், அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மண்ணிலும் வளர்ந்து நோய் தாக்குலை சமாளிக்க கூடிய திறன் கொண்ட குட்டை ரக சீரக சம்பா அரிசியை வைகை அணையில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு விஜிடி-1 என்று பெயரிட்டுள்ளனர். வைகை அணை -1 என்பதன் சுருக்கமே விஜிடி -1. இந்த ரகம் விரைவில் விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து வைகை அணை வேளாண் ஆராய்ச்சி மைய பயிர் இனப் பெருக்கம் மற்றும் மரபியல்துறை உதவிப் பேராசிரியர் ம.மதன் மோகன் கூறியதாவது: 
சீரக சம்பா அரிசி பொதுவாக பிரியாணி மற்றும் பொங்கல் தயாரிக்கப் பயன்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 900 கிலோ முதல் 1200 கிலோ வரை கிடைக்கிறது . இப்பயிர் 125 முதல் 145 நாள்களுக்குள் அறுவடைக்கு வந்து விடும். மேலும் இதன் தேவை அதிகமிருந்தாலும் குறைந்த இடங்களிலேயே பயரிடப்படுகிறது. இது குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட பருவத்தில் பயிரிடப்படுவதால் இதன் விலையும் அதிகம்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சீரக சம்பா நெல் ஆராய்ச்சி நடைபெற்று வந்தது. இதன் பயனாக விஜி 09006 என்ற நெல் வளர்ப்பு கண்டறியப்பட்டு, பல தரப்பட்ட சோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டு வெற்றி காணப்பட்டுள்ளது.
இந்த விஜி 09006 நெல் ரகத்தின் தாயாக ஏ.டி.டி43 ரகமும், தந்தையாக சீரக சம்பாவும் உள்ளன. இது எல்லா பருவத்துக்கும் பயிரிட ஏற்றது. ஏறக்குறைய 125 நாள்களுக்குள் அறுவடைக்கு வந்துவிடும். சாயாத குட்டை தன்மையும், நீண்ட மற்றும் சன்னமான நெல்மணிகளையும் கொண்டது.
செடி ஒன்றுக்கு குறைந்தது 25 கதிர்கள் உள்ளன. 1000 தரமான நெல்மணிகளின் எடை 9 கிராம் ஆகும். அரிசியின் நிறம் வெண்மை தன்மை கொண்டது. மேலும் இந்த நெல் ரகம் குலைநோய், இலைப் புள்ளி நோய், இலையுறை கருகல்நோய், புகையான் மற்றும் பச்சை தத்துப்பூச்சி சேதாரங்களை தாங்கி வளரக்கூடியது.
ஏக்கருக்கு சுமார் 2400 கிலோ முதல் 2500 கிலோ வரை மகசூல் எடுக்கலாம். இந்த ரக விஜி 09006-ன் நெல் மணிகள் சுவையானது பாரம்பரிய சீரக சம்பா போன்றே உள்ளது. எனவே பிரியாணி, சர்க்கரைப் பொங்கல் மற்றும் குஸ்கா, தேங்காய் சாதம் செய்வதற்கு மிகவும் ஏற்றது.
இந்த ரகத்தை விஜிடி 1 என்ற நெல் ரகமாக வெளியிட பல்கலைக்கழக ரகம் வெளியிடும் அமைப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது வரும் 2019 ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com