மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்

மானாவாரி மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் "புருஜிபெர்டா' படைப்புழுவைக் கட்டுப்படுத்துவது குறித்து தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்

திருநெல்வேலி: மானாவாரி மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் "புருஜிபெர்டா' படைப்புழுவைக் கட்டுப்படுத்துவது குறித்து தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வேளாண் பூச்சியியல் துறைத் தலைவர் து. அப்துல் ரசாக் வழங்கியுள்ள ஆலோசனைகள்:
 திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள வீரிய ரக ஒட்டு மானாவாரி மக்காச்சோள ரகங்களில் புருஜிபெர்டா படைப்பழுவின் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இப்படைப்புழுவின் தாக்குதல் 2015ஆம் ஆண்டு வரை கனடாவின் தென் பகுதி, சிலி, ஆர்ஜென்டீனா நாடுகளில் மட்டுமே காணப்பட்டது. பின்னர், நைஜீரியாவில் 2016இல் கண்டறியப்பட்டது. தற்போது மக்காச்சோளம் பயிரிடப்படும் அனைத்து ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தப் படைப்புழு மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் முதன்முதலாக கர்நாடக மாநிலத்தில் சிவமோகா பகுதியில் இதன் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது.
 அறிகுறி: முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழு, இலைகளின் ஆழப்பகுதியில் இருந்துகொண்டு பச்சையத்தைச் சுரண்டி தின்னும். இதனால் பாதிக்கப்பட்ட இலை பச்சையத்தை இழந்து வெளுத்துக் காணப்படும். வளர்ச்சியடைந்த புழு, விரியாமலிருக்கும் நடுக்குருத்தைக் கடித்துத் தின்பதால் இலைகள் விரியும்போது இலைகளில் வரிசையாக துளைகள் காணப்படும். கதிர் உருவான பின்னர் புழுக்களானது கதிரின் இலையுறை, கதிரை சேதப்படுத்தி மகசூல் இழப்பை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட கதிரின் உள்ளே புழுவும், அதன் எச்சமும் இருப்பதைக் காணலாம்.
 வாழ்க்கைப் பருவம்: படைப்புழு மக்காச்சோளம் தவிர, நெல், சோளம், கரும்பு, காய்கறிப் பயிர்கள் போன்ற 100-க்கும் அதிகமான பயிர்களைத் தாக்குகிறது. தாய் அந்துப்பூச்சி முட்டைகளை குவியல்களாக இலைகளின் அடியில் இட்டுச் செல்லும். அதிலிருந்து 3-5 நாளில் வெளிவரும் இளம்புழு கருப்புத் தலையுடன் கரும்பச்சை நிறத்தில் காணப்படும். வளர்ச்சியடைந்த புழுவின் தலைப்பகுதியில் ஆங்கில "ஒய்' எழுத்துபோன்று தலைகீழ் வடிவிலும், உடம்பின் கடைசிப் பகுதியில் 4 புள்ளிகளும் காணப்படும். புழுப் பருவம் 14 முதல் 28 நாள்களைக் கொண்டது. புழு மண்ணுக்குள் சென்று கூட்டுப் புழுவாக மாறி, 7முதல் 14 நாளுக்குப் பிறகு அந்துப்பூச்சியாக வெளிவரும். அந்துப்பூச்சியின் இறக்கைகள் பழுப்பு நிறத்திலும், அவற்றின் நுனி, மத்தியப் பகுதிகளில் வெண்ணிறத் திட்டுகளும் காணப்படும்.
 கட்டுப்படுத்தும் முறை: ஒரே வயலில் மக்காச்சோளத்தைத் தொடர்ந்து பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை பூச்சியின் முட்டைக் குவியல், புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும். குளோர்பைரிபாஸ் 20 இசி பூச்சிமருந்தை (ஹெக்டேருக்கு) கைத்தெளிப்பானின்{என்றால் 20 மில்லியை 10 லிட்டர் நீரிலும், விசைத் தெளிப்பான் என்றால் 60 மில்லியை 10 லிட்டர் நீரிலும் கலந்து தெளிக்க வேண்டும். குளோர் ஆன்ட்ரனிலிபுரோல் 18.5 20 இசி பூச்சிமருந்தை (ஹெக்டேருக்கு) கைத்தெளிப்பான் என்றால் 3 மில்லியை 10 லிட்டர் நீரிலும், விசைத் தெளிப்பான் என்றால் 9 மில்லியை 10 லிட்டர் நீரிலும் கலந்து தெளிக்க வேண்டும். புளுபென்டியமைடு 480 எஸ்சி மருந்தை (ஹெக்டேருக்கு) கைத்தெளிப்பான் என்றால் 3 மில்லியை 10 லிட்டர் நீரிலும், விசைத் தெளிப்பான் என்றால் 9 மில்லியை 10 லிட்டர் நீரிலும் கலந்து தெளிக்க வேண்டும். ஸ்பைனோசோடு பூச்சிமருந்தை (ஹெக்டேருக்கு) கைத்தெளிப்பான் என்றால் 3 மில்லியை 10 லிட்டர் நீரிலும், விசைத் தெளிப்பான் என்றால் 9 மில்லியை 10 லிட்டர் நீரிலும் கலந்து தெளிக்க வேண்டும். தயோடிகார்ப் 75 டபிள்யூசி பூச்சிமருந்தை (ஹெக்டேருக்கு) கைத்தெளிப்பான் என்றால் 20 கிராமை 10 லிட்டர் நீரிலும், விசைத் தெளிப்பான் என்றால் 60 கிராமை 10 லிட்டர் நீரிலும் கலந்து தெளிக்க வேண்டும்.
 மருந்துக் கரைசல் இலைச்சுருள்களுக்குள் நன்கு பரவிப்படிய வேளாண்மைக்கான திரவ சோப்புகளில் ஒன்றை (சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால்) ஒரு லிட்டர் மருந்துக் கரைசலுக்கு அரை மில்லி வீதம் சேர்த்து கலக்கிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தடவையும் தனித்தனியாக தெளிப்பானுக்கு ஏற்றபடி ஒரு பிளாஸ்டிக் வாளியில் மருந்துக் கரைசலை நன்கு கலக்கிய பின்னரே தெளிப்பானின் கொள்கலத்தில் ஊற்றித் தெளிக்க வேண்டும். சாதாரண சோப்புகளான காதி பார் சோப், சலவை சோப்புகள், ஷாம்புகள் ஆகியவற்றை மருந்துக் கரைசலுடன் சேர்க்கக்கூடாது. ஏனெனில் அவற்றில் உள்ள காரத்தன்மை பூச்சிமருந்தின் விஷத்தன்மையை முறித்துவிடும் என்றார் அவர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com