தென்னையில் வெள்ளை ஈயின் பாதிப்பும், தடுப்பு வழிமுறைகளும்!

தென்னையைத் தாக்கும் புதுவகையான ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை
தென்னையில் வெள்ளை ஈயின் பாதிப்பும், தடுப்பு வழிமுறைகளும்!

நீடாமங்கலம் : தென்னையைத் தாக்கும் புதுவகையான ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் ராஜா. ரமேஷ் தெரிவித்துள்ள ஆலோசனைகள்:
கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் தென்னை மரத்தைப் பல்வேறு பூச்சிகள் தாக்கி, மகசூல் பாதிப்புக்குக் காரணமாக அமைகின்றன. தற்போது புது வகையான ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ என்ற பூச்சியின் தாக்குதல் தென்னை சாகுபடி செய்யப்படும் ஒரு சில பகுதிகளில் தென்படுகிறது. 
ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ: முதல் முதலில் இந்த ஈயானது, கடந்த 2004-ஆம் ஆண்டு மத்திய அமெரிக்காவிலுள்ள பெலிஸ் நாட்டில் கண்டறியப்பட்டது. ஆனால், இவற்றின் தீவிர தாக்குதலானது புளோரிடா மாகாணத்தில் 2009-ஆம் ஆண்டு தென்னையில் கண்டறியப்பட்டது. தமிழகத்தில் முதல்முறையாக பொள்ளாச்சி பகுதிகளில் கடந்த 2016-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. 
வாழ்க்கை சுழற்சி: இந்த வெள்ளை ஈக்கள் வட்ட அல்லது சுருள் வடிவிலான 0.3 மி.மீ. அளவுள்ள மஞ்சள் நிற முட்டைகளை இலைகளின் அடிப்பரப்பில் தனித்தனியாக இடுகின்றன. இவை மெழுகுப் பொருளால் ஒன்றிணைக்கப்பட்டு அரை வட்டமாகக் காட்சியளிக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் முதல்நிலை குஞ்சுகள் கால்களுடன் நகரும் தன்மை கொண்டவை. மற்ற நிலை குஞ்சுகள் நகரும் தன்மையற்றவை.
முதிர்ந்த பருவத்தில் இறக்கைகளுடன் காணப்படும். 2.5 மி.மீ., நீளமுள்ள இவை மற்ற வெள்ளை ஈக்களைக் காட்டிலும், அளவில் சற்று பெரியவை. மேலும், ஒழுங்கற்ற இளம்பழுப்பு நிற பட்டையானது இதன் இறக்கைகளில் காணப்படுவது இவற்றைக் கண்டறிவதற்கு முக்கிய அடையாளமாகும்.
சேத அறிகுறி: குஞ்சுகளானது இலைகளின் சாற்றை உறிஞ்சி வளர்கின்றன. இவை 30 நாள்களில் முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறி, காற்றின் திசையில் பரவி, அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் கூட்டம் கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் காணப்படும். இந்த ஈக்களிலிருந்து வெளியேறும் பசை போன்ற கழிவு, இலைகளின்மேல் படர்ந்து கேப்னோடியம் எனப்படும் கரும்பூசணம் ஏற்பட ஏதுவாகின்றது. இவ்வாறு மேற்புறம் கருப்பாக மாறிய ஓலையில் பச்சையம் செயலிழந்து மகசூல் குறையவும் வாய்ப்புள்ளது. 
தாக்கும் பிற மரப்பயிர்கள்: ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயானது, 200-க்கும் மேற்பட்ட பயிர்களைத் தாக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றுள் மிக முக்கியமானவை மா, பலா, வாழை, கொய்யா, சீதாப்பழம் உள்ளிட்டவையாகும். ஆனால், குட்டை ரக தென்னை மரங்களையே இவை அதிக அளவில் தாக்கும் தன்மை வாய்ந்தவை.
தடுப்பு முறைகள்: 
ஏக்கருக்கு ஒன்று என்ற அளவில் விளக்குப் பொறிகளைப் பயன்படுத்தி, பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும்.
மஞ்சள் நிற ஒட்டும்பொறிகள் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையவை. எனவே, 3 அடி நீளம் மற்றும் 1 அடி அகலமுடைய பாலித்தீன் தாள்களால் ஆன ஒட்டும்பொறிகளை ஏக்கருக்கு 20 எண்ணிக்கையில் தென்னைத் தோட்டங்களில் 5 முதல் 6 அடி உயரத்தில் வைத்து, பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும்.
பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்க தென்னை ஓலையின் அடிப்புறம் தண்ணீரை நன்கு பீய்ச்சியடிக்க வேண்டும்.
கிரைசோபாலா இரை விழுங்கிகள் இந்த பூச்சிகளின் வளர்ச்சி நிலைகளை நன்றாக உள்கொள்வதால், ஒவ்வொரு தென்னந்தோப்புகளிலும் இதை ஹெக்டேருக்கு 1,000 என்ற எண்ணிக்கையில் விட வேண்டும்.
ஒரு லிட்டர் நீருக்கு வேப்பெண்ணெய் 30 மில்லி அல்லது அசாடிராக்டின் ஒரு சதவீத மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி என்ற அளவில், தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து, தென்னை ஓலையின் அடிப்புறம் நன்கு படும்படி 15 நாள்கள் இடைவெளியில் 2 முறை தெளித்து தாக்குதலைக் குறைக்க வேண்டும்.
இலைகளின் மேல் படரும் கரும்பூசணத்தை நிவர்த்தி செய்ய ஒரு லிட்டர் நீருக்கு 25 கிராம் என்ற அளவில் மைதா மாவுக்கரைசலை தென்னை ஓலைகளின் மேல் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.
இவ்வகை வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும்போது, கிரைசோபாலா இரைவிழுங்கிகள், காக்சினெல்லிட் பொறி வண்டுகள் மற்றும் என்காரிஸியா ஒட்டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே உருவாக ஆரம்பிக்கும். 
அதிக அளவு பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்கும்போது இயற்கை எதிரிகள் அழிந்துவிடும். எனவே, பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து, இயற்கை எதிரிகள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது முக்கியமாகும். ஆகையால், தென்னை விவசாயிகள் அனைவரும் புதிய வகையான ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ பூச்சியின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அவசர கால தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com