மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெங்களூரின் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்களை பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் சனிக்கிழமை அகற்றினர்.

பெங்களூரின் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்களை பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் சனிக்கிழமை அகற்றினர்.

பெங்களூரில் ஜூலை 28-ஆம் தேதி நள்ளிரவு பெய்த பலத்த மழையில் சிக்கபேகூர், கோடி சிக்கனஹள்ளி, மடிவாளா, பெலந்தூர் உள்ளிட்ட பல ஏரிகளில் நீர் நிரம்பி, வடிகால்கள் மூலம் மழைநீர் சாலையில் புகுந்தது. மேலும், தாழ்வான பகுதிகளில் கட்டப்பட்டிருந்த வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இதுகுறித்து முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆக.3-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், பெங்களூரில் மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சனிக்கிழமை எலஹங்கா, பொம்மனஹள்ளி, மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 32 இடங்களில் 300 மீட்டர் நீளம் கொண்ட மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கட்டடங்களையும் பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் கிரேன்கள், கட்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் அகற்றினர்.

இதற்கு கட்டடங்களின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும், காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்போடு வருவாய்த் துறை, மாநகராட்சி அதிகாரிகளின் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

எலஹங்கா சட்டப்பேரவைத் தொகுதியில் சிவனஹள்ளி, புட்டேனஹள்ளி உள்ளிட்ட பல இடங்களிலும், மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் கசவனஹள்ளி முதல் கைகொண்டனஹள்ளி வரையில் 10 இடங்களிலும், பொம்மனஹள்ளி சட்டப்பேரவைத் தொகுதியில் சிருங்கேரி நகர் பகுதியிலும், அவலஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஏக்கர் பரப்பளவிலான மழைநீர் வடிகால்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இப் பணியில் 300-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சனிக்கிழமை இரவு முழுவதும் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கும் என்றும், மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை எளிதில் விடமுடியாது என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com