பாஜகவில் எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது?

கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு எதிராக பாஜகவில் மீண்டும் அதிருப்தி எழுந்துள்ளது. மேலும், அதிருப்தியாளர்கள் ஒன்றுகூடி வரும் 27-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
பாஜகவில் எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது?

கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு எதிராக பாஜகவில் மீண்டும் அதிருப்தி எழுந்துள்ளது. மேலும், அதிருப்தியாளர்கள் ஒன்றுகூடி வரும் 27-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

பாஜகவில் இருந்து விலகி, கர்நாடக ஜனதா கட்சியைத் தொடங்கி, 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட எடியூரப்பா, மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

இந்த நிலையில், கர்நாடக பாஜக தலைவராக எடியூரப்பாவை அக் கட்சியின் தலைமை நியமித்ததோடு, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

எடியூரப்பாவுக்கு அனைத்து அதிகாரங்களையும் அளித்துள்ளதால், அவர் தனது ஆதரவாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.

தலித், பிற்படுத்தப்பட்டோரை மையப்படுத்தி எடியூரப்பாவுக்கு எதிராக அரசியல் நடத்துவதற்காக சங்கொல்லி ராயண்ணா படை என்ற அமைப்பை கே.எஸ்.ஈஸ்வரப்பா தொடங்கி நடத்திவருகிறார்.

இதுதொடர்பாக எடியூரப்பா, ஈஸ்வரப்பாவை அழைத்த பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். ஆனாலும், சங்கொல்லி ராயண்ணா படையை ஈஸ்வரப்பா தொடர்ந்து நடத்தி வருகிறார்.

நஞ்சன்கூடு, குண்டல்பேட் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலை எடியூரப்பா தலைமையில் எதிர்கொண்ட பாஜக படுதோல்வி அடைந்தது. இதை காரணமாக வைத்துக் கொண்டு எடியூரப்பாவுக்கு எதிரான அரசியலை முன்னெடுத்திருக்கிறார் கே.எஸ்.ஈஸ்வரப்பா.

பாஜகவின் உண்மையான தொண்டர்கள் என்ற பெயரில் ஏப்.27-ஆம் தேதி பெங்களூரில் பாஜகவைக் காப்பாற்றுவோம் என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்த ஒருசிலர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஈஸ்வரப்பா முடிவு செய்திருக்கிறார். இதன்மூலம் எடியூரப்பாவுக்கு எதிரான கோஷ்டிபூசலை ஈஸ்வரப்பா முன்னெடுத்து செல்வதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறுகையில், கட்சியின் உண்மையான தொண்டர்களால் நடத்தப்படும் கூட்டத்தில் கலந்து கொள்வது கட்சி விரோதச் செயல் ஆகாது. மேலும், அக்கூட்டம் கட்சியைப் பலப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. எடியூரப்பாவின் செயல்பாடுகள் ஒருசிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கூறியபடி பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகளின் நியமனத்தை மறுபரிசீலனை செய்யாதது ஏன்? இதுபோன்ற விவகாரங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு இதுவரை ஒருமுறையும் கூடவில்லை.

கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்களைப் புறக்கணிக்கும் போக்கு பாஜகவில் உள்ளது. மைசூரில் மே மாதம் நடக்கவிருக்கும் மாநில செயற்குழு கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்ளவிருக்கிறார். அப்போது, அவரிடம் இதுகுறித்து புகார் அளிப்போம். நஞ்சன்கூடு, குண்டல்பேட் தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தல் தோல்விக்கு எடியூரப்பாவின் அலட்சியப்போக்கே காரணம் என்றார்.
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com