இடைத்தேர்தல் தோல்வி: பெங்களூரில் இன்று பாஜக தலைவர்கள் ஆய்வு

நஞ்சன்கூடு, குண்டல்பேட் இடைத்தேர்தல் தோல்வி குறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை பாஜக தலைவர்கள் ஆய்வு நடத்த இருக்கிறார்கள்.

நஞ்சன்கூடு, குண்டல்பேட் இடைத்தேர்தல் தோல்வி குறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை பாஜக தலைவர்கள் ஆய்வு நடத்த இருக்கிறார்கள்.
மைசூரு மாவட்டத்தின் நஞ்சன்கூடு, சாமராஜ்நகர் மாவட்டத்தின் குண்டல்பேட் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்.9-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் சீனிவாஸ்பிரசாத், நிரஞ்சன்குமார் படுதோல்வி அடைந்தனர். இந்த இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தினால், அது அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும், அதை வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்யலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா கணக்கு போட்டிருந்தார்.
ஒருமாத காலம் நஞ்சன்கூடு, குண்டல்பேட் தொகுதிகளில் முகாமிட்டு பிரசாரம் செய்தபோதும் இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்ததை பாஜக தலைவர்களால் நம்பமுடியவில்லை.
இந்நிலையில், எடியூரப்பாவுக்கு எதிராக கட்சியில் மீண்டும் சிலர் கலகக்குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் எடியூரப்பாவை பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு பலர் அதிருப்தியை தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் எடியூரப்பாவை சுற்றியிருக்கும் ஷோபாகரந்தலஜே, வி.சோமண்ணா, பிரதாப்சிம்ஹா போன்ற ஒருசில தலைவர்களால் தான் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜகவுக்கு வெற்றிவாய்க்கவில்லை என்று பாஜக மூத்தத் தலைவர்கள் பலர் பேச தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கட்சியில் தனது ஆளுமையை தக்கவைத்துக் கொள்ள விரும்பும் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, தனது தலைமையில் பெங்களூரில் சனிக்கிழமை கட்சி அலுவலகத்தில் பாஜகவின் மூத்தத் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஆய்வுக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இக்கூட்டத்தில், இடைத்தேர்தலில் அடைந்த தோல்விக்கான காரணத்தை ஆராய திட்டமிட்டுள்ளனர்.
மேலும், தோல்விக்கு காரணமானவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த மாதம் மைசூரில் நடக்க இருக்கும் மாநில செயற்குழுக் கூட்டம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதம் நடக்க இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com