கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி: முதல்வர்- காங்கிரஸ் மாநிலத் தலைவர் முரண்பட்ட கருத்து

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து முதல்வர் சித்தராமையாவும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வரும் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து முதல்வர் சித்தராமையாவும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வரும் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இதனால், காங்கிரஸாரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய 3 கட்சிகளும் தனித்தனியே போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தன. இந்த நிலையில், தேர்தல் கூட்டணி தொடர்பாக முதல்வர் சித்தராமையாவும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வரும் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சிவமொக்காவில் முதல்வர் சித்தராமையா சனிக்கிழமை கூறியது:-
மதவாத சக்திகளுக்கு எதிராக தேசிய அளவில் மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறியிருந்தேனே தவிர, கர்நாடகத்தில் அல்ல.
கர்நாடகத்தில் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. கர்நாடகத்தில் மதவாத சக்திகள் பிரபலமாக இல்லை. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பலம்பெற்று விளங்குகிறது. அதனால் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதையே விரும்புகிறது.
சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் திட்டம் காங்கிரஸிடம் இல்லை. ஆகவே, காங்கிரஸ் தனித்து போட்டியிடும்.
நஞ்சன்கூடு, குண்டல்பேட் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மஜதவுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம் எதையும் செய்துகொள்ளவில்லை. இரு தொகுதிகளிலும் மஜத வேட்பாளர்களை நிறுத்தாததால் இயல்பாகவே அந்தக் கட்சியினர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்தனர். அதற்காக மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று கூறுவது சரியல்ல.
அமைச்சரவையில் காலியாக உள்ள 2 இடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளோம். பாதுகாப்பில் குறைபாடு இருந்ததால்தான் மண்டியா மாவட்ட காவல் கண்காணிப்பாளரை மேடையில் அழைத்து விசாரித்தேன். அப்படி விசாரணை நடத்துவதற்கு முதல்வராக எனக்கு உரிமையும் அதிகாரமும் இருக்கிறது. இதில் அவரை அவமானப்படுத்தியதாக கூறுவதெல்லாம் பொய் என்றார் அவர்.
ஜி.பரமேஸ்வர்: இந்த நிலையில், பெங்களூருவில் ஜி.பரமேஸ்வர் சனிக்கிழமை நிருபர்களிடம் கூறியது:-
சட்டப்பேரவை தேர்தலில் மதசார்பற்ற சக்திகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் மதசார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டு கூட்டணி அமைக்க முன்வந்தால், அதை வரவேற்பேன்.
சட்டப் பேரவைத் தேர்தலில் 150 தொகுதிகளை கைப்பற்ற பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. பாஜகவின் அரசியல்வியூகத்தை முறியடிக்க காங்கிரஸ் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது. மதவாத சக்திகளை வீழ்த்த மதசார்பற்ற சக்திகள் ஒன்றுபட்டு கூட்டணி அமைக்க முன்வந்தால், அதை நானும், முதல்வர் சித்தராமையாவும் வரவேற்போம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com