கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்கள் நிறுத்தம்?

கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்கள் திரையிடுவதை தடுத்து நிறுத்தி கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்கள் திரையிடுவதை தடுத்து நிறுத்தி கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
காவிரி விவகாரத்தில் தனது பேச்சு கன்னடர்களை புண்படுத்தும்படி அமைந்திருந்தால், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக நடிகர் சத்யராஜ் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டிருந்த கன்னட திரைப்படங்கள் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதை அறிந்த கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்கள் திரையிடுவதை சனிக்கிழமை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு, சஞ்சய்நகரில் உள்ள திரையரங்கம் உள்ளிட்ட கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டிருந்த தமிழ் திரைப்படங்களை கன்னட அமைப்பினர் தடுத்து நிறுத்தினர். மேலும் திரையரங்குகளின் வெளியே ஒட்டப்பட்டிருந்த தமிழ் திரைப்பட சுவரொட்டிகளையும் கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாள்முழுவதும் தமிழ் திரைப்படங்கள் ரத்துசெய்யப்பட்டன.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை கர்நாடக ரக்ஷனவேதிகே (ஷெட்டி பிரிவு) தலைவர் பிரவீண் ஷெட்டி செய்தியாளர்களிடம் கூறியது: நடிகர் சத்யராஜ் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டிருந்த கன்னட திரைப்படங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கன்னடர்களின் சுயமரியாதையை கேலிக் கூத்தாக்கியிருக்கும் இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். கன்னட திரைப்படங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிர்வினையாக கர்நாடகத்தில் திரையிடப்பட்டிருந்த தமிழ் திரைப்படங்களை தடுத்து நிறுத்தினோம் என்றார் அவர்.
இதனிடையே, கன்னட திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்து கூறியது: தமிழகத்தில் கன்னட திரைப்படங்கள் நிறுத்தப்பட்டதாக கூறுவதில் உண்மையில்லை. அங்குள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையை தொடர்பு கொண்டதில், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்று உறுதிபட கூறினர். எனவே, இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com