நாளை காவிரி ஆற்றுப்படுகை ஆலோசனைக் கூட்டம்

காவிரி ஆற்றுநீர்ப்படுகை ஆலோசனைக் கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் திங்கள்கிழமை (ஆக.14) நடைபெறுகிறது.

காவிரி ஆற்றுநீர்ப்படுகை ஆலோசனைக் கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் திங்கள்கிழமை (ஆக.14) நடைபெறுகிறது.
கர்நாடகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதுமான மழை பெய்யவில்லை. இதனால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து குறைந்து, கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகளின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. ஒருபுறம் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டுமென்றால், மறுபுறம் பாசனத்துக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனிடையே, கடந்த வாரம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற காவிரி ஆற்றுப்படுகை மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகள் கூட்டத்தில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க ஏரிகள், குளங்கள், குட்டைகளை நிரப்புவதற்காக நான்கு அணைகளில் இருந்தும் கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனிடையே, காவிரி ஆற்றுநீர்ப் பகிர்வு தொடர்பான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. கர்நாடக அரசு தரப்பு வாதம் முடிவடைந்துள்ள நிலையில், தமிழக அரசு தரப்பு வாதம் நடந்துவருகிறது. இந்த வாதத்தை ஆக.17-ஆம் தேதிக்குள் நிறைவுசெய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதோடு, அடுத்த விசாரணையை ஆக.16-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இதன் முடிவில், காவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு வெளியாவதற்கான தேதி அறிவிக்கப்படும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருக்கும்? அதை எவ்வகையில் எதிர்கொள்வது? என்பது குறித்து விவாதிக்கவும், கையிருப்பில் உள்ள தண்ணீரை எவ்வகையில் பயன்படுத்துவது? உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கவும் பெங்களூரு, விதானசெளதாவில் ஆக.14-ஆம் தேதி நண்பகல் 12 மணிஅளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை, சட்டமேலவையின் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், காவிரி ஆற்றுப்படுகை மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மகத்தான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகதாயி ஆற்றுநீர் சிக்கல்
முன்னதாக, பெங்களூரு, விதானசெளதாவில் ஆக.14-ஆம் தேதி காலை 10 மணிக்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் மகதாயி ஆற்றுநீர்ப்பங்கீடு, கலசா-பண்டூரி கால்வாய் திட்டம், தேசிய பேரிடர் இழப்பீடு நிதியில் இருந்து மாநிலத்துக்கு மத்திய அரசின் ஒதுக்கீடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை, சட்டமேலவையின் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், பாகல்கோட், பெலகாவி, தார்வாட், கதக் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com