இந்திய விடுதலை இயக்கம்: கர்நாடகத்தில் நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டங்கள்

இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாக வரலாற்றுச் சிறப்பு மிக்க பல்வேறு போராட்டங்கள் கர்நாடகத்தில் நடந்துள்ளன.
இந்திய விடுதலை இயக்கம்: கர்நாடகத்தில் நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டங்கள்

இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாக வரலாற்றுச் சிறப்பு மிக்க பல்வேறு போராட்டங்கள் கர்நாடகத்தில் நடந்துள்ளன.
  ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்தியர்கள் அனுபவித்த துன்பங்கள், வறுமையின் கொடுமைகளைக் கண்டு வேதனையுற்ற அமெரிக்காவை சேர்ந்த வரலாற்றறிஞரும், தத்துவ அறிஞருமான வில்டூரன்ட், அவற்றை தனது "இந்தியாவுக்கான வழக்கு' (எ கேஸ் ஃபார் இண்டியா) என்ற நூலில் தக்க சான்றுகளுடன் பதிவு செய்திருக்கிறார்.
 1957-ஆம் ஆண்டு வங்கத்தில் பிளாசி மற்றும் 1764-இல் பக்சர் என்ற இடங்களில் நிகழ்ந்த சண்டைகளில் வங்கத்தை வீழ்த்தி, இந்தியாவை 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்கள் ஆண்டனர். இந்திய மக்களை அடிமைகளை போல நடத்திய ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு கடிவாளம் போடுவதற்காக 1884-ஆம் ஆண்டு ஏ.ஓ.ஹூயும் என்ற ஆங்கிலேயரால் தொடங்கப்பட்டதுதான் இந்திய தேசிய ஒன்றியம் அமைப்பு. 1885-ஆம் ஆண்டு இந்த அமைப்பு தனது பெயரை இந்திய தேசிய காங்கிரஸ் என்று மாற்றிக்கொண்டது.
 1920-களில் காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்ற காந்தியடிகள்,  விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார். காந்தியடிகளின் விடுதலைப் போராட்டத்துக்கு முன்பும், பின்பும் ஆங்கிலேயர்களின் அட்டூழியங்களை, மக்கள்விரோத ஆட்சியை விரட்டியடிக்க கர்நாடகத்தில் எழுச்சிமிகுந்த போராட்டங்கள் நடந்தேறியுள்ளன.
முதல் உயிர்த் தியாகம்
1857-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சிப்பாய்க் கலகம் அல்லது முதல் விடுதலைப் போர் நடந்தது. பெலகாவியில் ஆங்கிலேயர் ராணுவத்தில் பணியாற்றி வந்த சிப்பாய் முன்ஷி மஜ்கர் அலி ஆங்கிலேயர்களின் வதையாட்சியை எதிர்த்து புரட்சி செய்தார். வாஹாபி இயக்கத்தில் பங்காற்றிய மஜ்கர் அலி, 1857-ஆம் ஆண்டு நடந்த சிப்பாய்க் கலகத்தில் தீவிரம் காட்டினார். ஆங்கிலேயர்களால் 1857 ஆக.23-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர் பெலகாவியில் உள்ள குதிரைப் பந்தயத் திடலில் தூக்கிலிடப்பட்டார்.
கொடிப் போராட்டம்
சிக்பளாப்பூர் மாவட்டத்தின் கெளரிபிதனூர் வட்டத்தில் உள்ள விதுராஷ்வதா கிராமத்தில் விதுராஷ்வதா கோயிலில் 1938-ஆம் ஆண்டு நடைபெற்ற ஊர்த் திருவிழாவில் பங்கேற்ற மக்கள், ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி, தேசியக் கொடியை ஏற்றுவது என்று முடிவெடுத்தனர். இதைத் தடுக்க ஆங்கிலேயர் அரசு காவல் துறையினரை குவித்தித்தது. இதனிடையே, ஆங்கிலேயர்களின் தடையை மீறி தேசியக் கொடியை ஏற்றியதைக் கண்ட காவல் துறை அதிகாரி மக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து,  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 700-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் மக்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களை கொதித்தெழத் தூண்டியது.
சிவாப்புரா கொடிப் போராட்டம்
மண்டியா மாவட்டம், மத்தூர் அருகே 1938-ஆம் ஆண்டு ஏப்.10, 11, 12 ஆகிய தேதிகளில் சிவப்புரா கிராமத்தில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தொடக்கமாக காங்கிரஸ் கொடியை ஏற்ற அக்கட்சியினர் முற்பட்டனர். காங்கிரஸ் கொடியை ஏற்றுவற்கு உடையார் அரசு தடைவிதித்தது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்கரர்களை அடக்கி ஒடுக்க வன்முறையைக் கையாளப்பட்டது. இந்தப் போராட்டம் கர்நாடக வரலாற்றில் திருப்புமுனையாக இருந்தது.
மைசூருக்கு புறப்படு
இந்தியா விடுதலை அடைந்து ஆங்கிலேயர்கள் வெளியேறியதும், இந்தியாவில் தன்னாட்சி நடத்தி வந்த இந்திய மன்னர்கள், தங்கள் பகுதியை சுதந்திரப் பகுதியாக அறிவித்துக்கொண்டனர். மைசூரை ஆட்சி செய்த மன்னர் ஜெயசாமராஜேந்திர உடையாரும் தனது பகுதியை சுயாட்சியாக அறிவித்துக் கொண்டார். இதை சற்றும் எதிர்பாராத காங்கிரஸ் கட்சியினர், ஜெயசாமராஜேந்திர உடையாரின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் கே.சி.ரெட்டி, 'மைசூருக்கு புறப்படு' என்ற போராட்டத்தை அறிவித்தார். 1947-ஆம் ஆண்டு செப். 4-ஆம் தேதி தொடங்கிய போராட்டத்துக்கு மைசூரு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் மக்கள் மைசூரு நோக்கி புறப்பட்டு அரண்மனை முன் திரண்டு, மைசூரு மாகாணத்தை இந்தியாவுடன் சேர்த்து விடுதலை அடைந்த பகுதியாக அறிவிக்க கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர். இந்த போராட்டத்தில் கே.சி.ரெட்டி, கெங்கல் ஹனுமந்தையா உள்ளிட்ட ஏராளமானோர் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராமசாமி என்ற பள்ளி மாணவர் இறந்தார். இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, போராட்டத்தை தீவிரமாக்கியது. இதையடுத்து, மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்த மன்னர் மைசூரு மாகாணத்தை இந்தியாவுடன் இணைக்க ஒப்புக்கொண்டார். அதன்படி, 1947 அக்.24-ஆம் தேதி மைசூரு மாகாணம் விடுதலை அடைந்ததாக அறிவிக்கப்பட்டு, இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதுபோன்ற பல்வேறு போராட்டங்கள் இந்திய சுதந்திரத்துக்கு வித்திட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com