மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளியின் பெயரில் மாற்றம் இல்லை: முதல்வர் சித்தராமையா விளக்கம்

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் பெயரில் அமைந்துள்ள உண்டு உறைவிடப் பள்ளியின் பெயரை மாற்றும் திட்டம் அரசிடம் இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் பெயரில் அமைந்துள்ள உண்டு உறைவிடப் பள்ளியின் பெயரை மாற்றும் திட்டம் அரசிடம் இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
 இதுகுறித்து தில்லியில் உள்ள கர்நாடக மாளிகையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் பெயரில் அமைந்துள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளின் பெயரை இந்திரா காந்தியின் பெயரில் மாற்றும் திட்டம் எதுவும் அரசின் முன் இல்லை. புதிதாக திறக்கப்படும் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்குத்தான் இந்திரா காந்தியின் பெயர் சூட்டப்படுகிறது. உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு மொரார்ஜி தேசாயின் பெயரை சூட்டியது யார் என்பது பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பாவுக்குத் தெரியுமா? 1994-95-ஆம் ஆண்டுகாலத்தில் நான் நிதி அமைச்சராக இருந்த போது, உண்டு உறைவிடப் பள்ளிகளைத் தொடங்கி, அவற்றுக்கு மொரார்ஜி தேசாய் பெயரை சூட்டியிருந்தேன்.
 டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பெயரில் 125 உண்டு உறைவிடப்பள்ளிகளை புதிதாக தொடங்கவிருக்கிறோம். அதேபோல, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது பெயரில் புதிதாக 100 உண்டு உறைவிடப் பள்ளிகள் தொடங்கப்படும்.
 இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெங்களூரு மாநகராட்சித் தொடங்கியுள்ள உணவகங்களுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. எந்த ஏரியையும் நாங்கள் பொதுப் பயன்பாட்டுக்கு நிலமாக மாற்றித் தரவில்லை. அதுபோன்ற திட்டம் எதுவும் மாநில அரசிடம் இல்லை.
 அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கட்சி மேலிடத் தலைவர்களிடம் விரிவாக ஆலோசித்திருக்கிறேன். அமைச்சரவையில் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படுவோர் குறித்த பட்டியலும் தயாராகிவிட்டது. ஆனாலும், அந்த பட்டியலை தற்போது கூறமுடியாது. கட்சி மேலிடத்தின் ஒப்புதல் கிடைத்தும் அமைச்சரவை விரிவாக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com