கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்: காங்கிரஸாரை விரைவில் சந்திக்கிறார் ராகுல்

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலை கவனத்தில் கொண்டு, அடுத்த மாதம் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்க அந்தக் கட்சியின் துணைத் தலைவர்ராகுல் காந்தி திட்டமிட்டிருக்கிறார்.
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்: காங்கிரஸாரை விரைவில் சந்திக்கிறார் ராகுல்

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலை கவனத்தில் கொண்டு, அடுத்த மாதம் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்க அந்தக் கட்சியின் துணைத் தலைவர்ராகுல் காந்தி திட்டமிட்டிருக்கிறார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பாஜக, மஜதவின் தேர்தல் வியூகங்களை முறியடிக்க வாக்குச்சாவடி அளவில் முகவர்களை இந்த மாத இறுதிக்குள் நியமிக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் அண்மையில் 3 நாள்கள் முகாமிட்டிருந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, "காங்கிரஸ் அரசை ஊழல் ஆட்சி' என்று வர்ணித்திருந்தார். "ஊழல் ஆட்சி' என்று முத்திரை குத்தி அரசின் நற்பெயரை சீரழிக்க பாஜக வகுத்திருக்கும் திட்டத்தை முறியடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இதற்காக கர்நாடக காங்கிரஸ் அரசின் சாதனைகள், மத்திய பாஜக அரசின் தோல்விகளை மக்களை வீடு வீடாகச் சென்று சந்திக்க வாக்குச்சாவடி அளவிலான 66 ஆயிரம் முகவர்களின் வாயிலாக பிரசாரம் செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது.

இவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதத்தில் பயிற்சி அளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். இதுதவிர, தேர்தலுக்கு கட்சியை தயார்ப்படுத்தவும், வியூகங்களை வகுக்கவும் முடிவுசெய்துள்ள ராகுல், கர்நாடகத்திற்கு அடிக்கடி வரவிருக்கிறார். கர்நாடகத்தில் சில நாள்கள் முகாமிட்டு கட்சிப்பணிகளை முடுக்கிவிட ராகுல்காந்தி திட்டமிட்டிருக்கிறார்.
மாவட்டத் தலைவர்கள் மாற்றம்?
 இதுதவிர, "ஒருவருக்கு ஒரு பதவி' என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தவிருக்கும் காங்கிரஸ் புதிதாகப் பதவியை பெற்றிருக்கும் ஜி.சிவராம், ஆத்மானந்த், ரவிகெளடா பாட்டீல், ஆஞ்சிநேயலு ஆகியோருக்கு பதிலாக முறையே ஹாசன், மண்டியா, விஜயபுரா, பெல்லாரி மாவட்டங்களுக்கு புதிய மாவட்டத்தலைவர்களை நியமிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதேபோல, 23 மாவட்டங்களின் நிர்வாகிகளை மாற்றவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

உலக நிறுவனத்துடன் ஒப்பந்தம்: ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் சிறப்பான பிரசாரங்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த ஜே.வால்டர் தாம்சன் நிறுவனத்துடன் காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்காக ஜே.வால்டர் தாம்சன் நிறுவனத்துக்கு செய்தி- மக்கள் தொடர்புத் துறை ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

சாதனைகளை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் முழுமையான வெற்றியை பெறவில்லை என்ற குற்றச்சாட்டை துடைத்தெறிவதற்காகவும், சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்தும் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

காணொலிக்காட்சிகள், விளம்பரங்கள், சமூக வலைத்தள கருத்து பரவல் உள்ளிட்டமுறைகளில் பிரசாரங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. நகர்ப்புற மக்களிடையே சித்தராமையா அரசுக்கு போதிய செல்வாக்கு இல்லாதநிலையை மாற்றியமைக்க இந்தவிளம்பரங்கள் உதவும் என்று கருதப்படுகிறது. இதற்காக 30 பேர் கொண்ட குழுவை ஜே.வால்டர் தாம்சன் நிறுவனம் அமைத்து, பணியை தொடங்கியிருக்கிறது.

மத்திய பாஜக அரசின் தோல்விகள், கர்நாடக காங்கிரஸ் அரசின்சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்ல 2 மாதங்களுக்கு ஒருமுறை துறைவாரியாக ஊடகங்களை சந்தித்து விவரங்களை தரவேண்டும் என்று அமைச்சர்களுக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர் அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com