சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்க முயன்றால் கடும் நடவடிக்கை: கர்நாடக முதல்வர் சித்தராமையா

கர்நாடகத்தில் சட்டம்- ஒழுங்கைச் சீர்குலைக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா எச்சரித்தார்.

கர்நாடகத்தில் சட்டம்- ஒழுங்கைச் சீர்குலைக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா எச்சரித்தார்.
பெங்களூரு விதான செளதாவில் புதன்கிழமை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப் பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
கர்நாடக அரசு செயல்படுத்தியிருக்கும் திட்டங்களைத் தொடக்கி வைக்கவும்,  புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் டிச.13-ஆம் தேதி சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறேன்.  இதில் எதிர்க்கட்சிகள் தவறு கண்டுபிடிக்கத் தொடங்கியுள்ளன.  கடந்த நான்கரை ஆண்டுகளாக மாநிலத்தில் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கிறேன். 
சட்டம்- ஒழுங்கைப் பாதுகாப்பது மாநில அரசின் கடமையாகும்.   எனவே,  சட்டம்- ஒழுங்கை யாராவது சீர்குலைக்க முயன்றால்,   கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா,  உன்சூரில் ஹனுமான் ஜயந்தி நடந்தபோது தடை விதிக்கப்பட்டிருந்த சாலையில் ஊர்வலம் செல்ல முயன்றார். 
இது சட்டம்- ஒழுங்கைச் சீர்குலைக்கும் என்பதால்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதாப் சிம்ஹாவை போலீஸார் கைது செய்தனர்.   உன்சூரில் நடந்த சம்பவத்துக்கு உள்துறை அமைச்சரின் ஆலோசகர் கெம்பையாவின் பங்கு எதுவுமில்லை.  மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவி சென்னன்னவருடன் கெம்பையா பேசியது தவறு ஒன்றுமில்லை.  உள்துறை அமைச்சரின் ஆலோசகராக காவல் கண்காணிப்பாளரிடம் பேசியதில் முக்கியத்துவம் எதுவும் இல்லை.
அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்,  அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் கூறியிருக்கும் அனைத்து அம்சங்களையும் எனது அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.  அம்பேத்கரின் சிந்தனைகளை நடைமுறைக்குக் கொண்டுவர உறுதி ஏற்கிறோம் என்றார். 
   அமைச்சர்கள் ஆஞ்சநேயா,  மகாதேவப்பா,  ஆர்.வி.தேஷ்பாண்டே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com