மூட நம்பிக்கை வேண்டாம்; அறிவியலை நம்புங்கள் மாணவர்களுக்கு சித்தராமையா அறிவுரை

மூட நம்பிக்கையைக் கைவிட்டு, அறிவியல் மனோபாவத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவுறுத்தியுள்ளார்.

மூட நம்பிக்கையைக் கைவிட்டு, அறிவியல் மனோபாவத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவுறுத்தியுள்ளார்.
 பெங்களூரு ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தில் புதுப்பிக்கப்பட்ட அரங்கத்தை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து அவர் பேசியது:
 மூட நம்பிக்கை ஒழிய வேண்டும் என்றால், அறிவியல் குறித்த புரிந்துணர்வு அதிகரிக்க வேண்டும். எனவே, மாணவர்களிடத்தில் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய ஆசிரியர்கள் முன்வர வேண்டும். நான் சிறுவயது முதலே அறிவியலில் ஆர்வமாக இருந்ததால், மூட நம்பிக்கை குறித்த புரிதல் இருந்தது.
 மாணவர்கள் விஞ்ஞானிகள் ஆகும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். அண்மைக் காலமாக அறிவியல் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தகவல் தொழில்நுட்பம், பொறியியல் துறைகளில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
 மூட நம்பிக்கையால் சூரிய, சந்திர கிரகணங்களின்போது வெளியே வரக் கூடாது என்பதனை சிலர் தெரிவித்து வருகின்றனர்.
 ஆனால், ஒருசில நேரங்களைத் தவிர, கிரகணங்களின்போது வெளியே வந்தால் பாதிப்பு எதுவும் இருக்காது.
 கூலித் தொழிலாளிகள் எல்லா நேரங்களிலும் வெளியே வருகின்றனர்.
 அவர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதை அனைவரும் கவனிக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை கூந்தலை வெட்டக் கூடாது என்பர். காரணம் அன்று கூந்தல் வெட்டும் நிலையங்கள் மூடியிருக்கும். எனவே, அறிவியல் அல்லாத மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும்.
 அறிவியலால் மங்கள்யானை விண்ணுக்குச் செலுத்தியுள்ளோம். ஆனாலும், நவக்கிரகங்களை பூஜை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற நம்பிக்கைகளைத் தகர்க்க ஊடகங்கள் முன்வர வேண்டும் என்றார்.
 நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.ஆர்.சீதாராம், ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தின் இயக்குநர் பி.எஸ்.சைலஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 "வறட்சி நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்'
 வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகத்துக்கு நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று, அந்த மாநில முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்தார்.
 இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
 மாநிலத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர்ப் பிரச்னையும் அதிகரித்து வருகிறது. எனவே, வறட்சி நிவாரண நிதியாக ரூ. 4,702 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.
 ஆனால், மத்திய அரசு ரூ. 1787 கோடி வறட்சி நிவாரண நிதி வழங்குவதாகத் தெரிவித்தது. ஆனால், அந்த நிதியும் இதுவரை வழங்கவில்லை. வறட்சி நிதியை உடனடியாக விடுவித்தால்தான் நிவாரணப் பணிகளை விரைந்து நிறைவேற்ற முடியும்.
 கூடுதல் நிதி ஒதுக்க அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற வெளிநாட்டில் குடியேறியுள்ள இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடியிடமும் வலியுறுத்தியுள்ளோம். விரைவில் அவர் கூடுதல் வறட்சி நிவாரண நிதி ஒதுக்குவார் என எதிர்பார்க்கிறோம்.
 விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து விரைவில் ஆய்வு செய்து, அறிக்கை பெறப்படும். பயிர் சேதத்திற்கும் மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும் என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com