கர்நாடக தமிழர்களின் உயிர்த் தியாகம்: வரலாறு போற்றும் தியாகக் காவியம்!

தமிழை பாதுகாக்க கர்நாடகத்தில் நடைபெற்ற மொழிப் போரில் தமிழ் இளைஞர்களின் உயிர்த் தியாகம் காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று காவியமாகும் என்று கர்நாடகத் தமிழர்களால் நெகிழ்ச்சியுடன் கூறப்படுகிறது.
கர்நாடக தமிழர்களின் உயிர்த் தியாகம்: வரலாறு போற்றும் தியாகக் காவியம்!

தமிழை பாதுகாக்க கர்நாடகத்தில் நடைபெற்ற மொழிப் போரில் தமிழ் இளைஞர்களின் உயிர்த் தியாகம் காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று காவியமாகும் என்று கர்நாடகத் தமிழர்களால் நெகிழ்ச்சியுடன் கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தின் கோலார் தங்கவயலில் 1982, ஜூலை 5,6,7 ஆகிய தேதிகளில் தமிழ் மொழிக் காக்கும் போராட்டத்தில் தமிழ் இளைஞர்கள் நான்கு பேர் உயிர்த் தியாகம் செய்த வரலாற்று நிகழ்வு கர்நாடக தமிழர்களால் மறக்க முடியாத, காலத்தால் அழிக்கமுடியாத துக்கம் தோய்ந்த நிகழ்வாகும்.

1956-ஆம் ஆண்டு நவ.1-ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, கர்நாடகத்தில் காலாகாலமாக வாழ்ந்துவந்த தமிழர்கள் மொழிச் சிறுபான்மையினர் ஆகிவிட்டனர். அதன் தொடர்ச்சியாக, கர்நாடகத்தில் தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களை, வாழ்வாதாரத்தை, பேச்சுரிமையை, அரசியல் அங்கீகாரத்தை, தாய்மொழி உரிமையை, குடிமை உரிமையை தற்காத்து கொள்வதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது.

கர்நாடகத்தில் மும்மொழிக் கொள்கை அமலில் உள்ளது. அந்தகாலத்தில் அதிக மதிப்பெண்களை பெறும்நோக்கில், பள்ளிகளில் முதல்பாடமாக சம்ஸ்கிருதத்தை படிக்கும்போக்கு கன்னடர்களிடம் அதிகரித்தவண்ணம் இருந்தது. இதுதவிர, ஹிந்தி மொழி மீதான மோகமும் கன்னடர்களிடையே அதிகளவில் காணப்பட்டது.

சம்ஸ்கிருதமும், ஹிந்தியும் கன்னடத்தை கபளீகரம் செய்வதை கவனித்த கன்னட ஆர்வலர்கள், கன்னடமொழிக்கு முக்கியத்துவம் அளிக்க போராட்டம் நடத்தினர். அதன்விளைவாக, கன்னட மொழி வளர்ச்சி குறித்து ஆராய்வதற்கு கல்வி அறிஞர் முன்னாள் துணைவேந்தர் வி.சி.கோகாக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அனைத்து அரசு பள்ளிகளிலும் கன்னட மொழியை முதல்பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும். வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கன்னடம் படித்தால் மட்டுமே அரசு வேலை போன்ற பரிந்துரைகளை அக்குழு அளித்திருந்தது.

இந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட அப்போதைய குண்டுராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, அதை உடனடியாக அமல்படுத்த உத்தரவிடப்பட்டு, அதற்கான பணியைத் தொடங்கியது. இதனால், தமிழ் மொழியை முதல்பாடமாக எடுத்துப்படித்து வந்த தமிழர்கள் பாதிக்கப்பட்டனர்.

தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், உருது, மராத்தி மொழியைப் படித்து வந்த மாணவர்களுக்கும் தாய்மொழிக் கல்வி மறுக்கப்பட்டது. இதனால், கிளர்ந்தெழுந்த தமிழர்கள் தமிழ் இலக்கியப் பேரவையின் கோலார் தங்கவயலில் ஜிம்கானா திடலில் கோகாக் அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ் மொழிக் கல்வியைப் பாதுகாக்கக் கோரியும், கோகாக் அறிக்கையை திரும்பபெறக்கோரியும் வலியுறுத்தி 1982-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி பெங்களூரில் பிரமாண்டமானபேரணி நடத்தி, அன்றைய ஆளுநர் கோவிந்த்நாராயண், முதல்வர் குண்டுராவிடமும் மனு அளிக்கப்பட்டது.

பின்னர், கப்பன்பூங்காவில் தமிழர்களின் எழுச்சி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கோலார் தங்கவயலில் ஜூலை 1-ஆம் தேதி திமுக சார்பில் கோகாக் அறிக்கையை திரும்பபெறக் கோரி கூட்டம் நடத்தப்பட்டது. இது கோலார்தங்கவயல் இளைஞர்கள், மாணவர்களிடையே பெரும் எழுச்சிக்கு வித்திட்டது. இதனிடையே, கோலார்தங்கவயல், இராபர்ட்சன்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அன்றைய கோலார் தங்கவயல் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ சி.எம்.ஆறுமுகம்,"கர்நாடகத்தில் தமிழில் படிக்க வேண்டும் என்று கூச்சல் போடுவோர், ஜோலார்பேட்டைக்கு ஓடிவிடுங்கள்" என்று தமிழ்மொழிக்கு எதிராகப் பேசினார்.

இதற்கு கோலார்தங்கவயலில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, ஜூலை 5-ஆம் தேதி கோலார் தங்கவயலில் ஆயிரக்கணக்கில் திரண்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் தமிழ் மொழிக் கல்வி பாதுகாக்கக் கோரி ஊர்வலம் நடத்தினர். நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்ற ஊர்வலம் ராபர்ட்சன்பேட்டையில் உள்ள காந்திசிலை அருகே ஊர்வலம் வந்தபோது, ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது ஏற்பட்ட தகராறில், கூட்டத்தை கலைக்க மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டு வீசினர். இதில் சின்னாபின்னமாக சிதறி ஓடிய மாணவர்கள் மீது வன்முறை ஏவப்பட்டது. மாணவர்களின் போராட்டம் தீவிரமடைவதை உணர்ந்த போலீஸார், மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தங்கம் விளைந்த கோலார் தங்கவயல் நகரமே கலவரக்காடானது.

மாணவர் போராட்டங்களை நசுக்க போலீஸார் வன்முறை வெறியாட்டத்தை அவிழ்த்து விட்டனர். என்.டி.பிளாக் பகுதியைச் சேர்ந்த மாணவர் பரமேஷ், போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு முதல் பலியானார். கோலார் தங்கவயலில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்தது. சாம்பியன்ரீஃப் பகுதியில் மோகன் என்பவர் மார்பை திறந்துகாட்டு சுடு என்று வீராவேசமாக கூறிய வேகத்தில், அவரது மார்பை போலீஸாரின் குண்டு துளைத்ததில் மாண்டுபோனார்.அவரைத் தொடர்ந்து, பால்ராஜ், உதயகுமார் போன்ற இளைஞர்களும் போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழந்தனர். இந்தபோராட்டத்தில் போலீஸாரின் தடியடி, துப்பாக்கிச்சூட்டில் 300-க்கும்மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஜூலை 7-ஆம் தேதி கோலார் தங்கவயலில் மாணவர் போராட்டம் ஓய்ந்தது. ஆனால், தமிழ் மொழிக்காக நான்கு தமிழ் இளைஞர்கள் செய்த உயிர்த்தியாகம் இன்னமும் கோலார் தங்கவயல் மக்களின் மனங்களை வேதனையால் நிலைத்திருக்கின்றன.

உயிர்த் தியாகம் செய்தும் மொழிச் சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள் தங்களின் மொழி உரிமையை பெற முடியாத நிலை 35 ஆண்டுகளாக நீடித்துவருவது வேதனை தருவதாக மொழி ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கோலார் தங்கவயலின் பல்வேறு பகுதிகளில் ஜூலை 5,6,7 ஆகிய 3 நாள்களிலும் தமிழ் அமைப்புகளால் வீரவணக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

தாய்மொழி உரிமையைப் பெறுவதில் உறுதியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நான்கு தியாகிகளின் வீரவணக்க நாள், கர்நாடக தமிழர்களின் மனதில் எழுச்சியை ஏற்படுத்தும் என்று தமிழ் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com