'தமிழகத்தை போல கர்நாடகத்திலும் இருமொழிக் கொள்கை வேண்டும்'

தமிழகத்தை போல கர்நாடகத்திலும் இருமொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தை போல கர்நாடகத்திலும் இருமொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் கேட்டுக் கொண்டார்.
கர்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பின் சார்பில், பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தியாவில் மொழி சமத்துவத்துக்கான கோரிக்கை வட்டமேசை மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது: வேற்றுமையில் ஒற்றுமையை போற்றிவரும் இந்திய நாட்டில் பல்வேறு ஜாதிகள், மதங்கள், மொழிகளைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட பன்முகத்தன்மையைக் கொண்ட இந்தியாவை ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற கோட்பாட்டுக்குள் கொண்டு செல்ல ஒருசில சுயநலவாதிகள் முயற்சித்து வருகிறார்கள். இதற்கு இடங்கொடுத்தால் இந்தியாவின் தன்னியல்புகள் பாதிக்கப்படுவதோடு, நமது நாட்டின் ஒருமைப்பாடு மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை ஆட்சியில் இருப்போர் கவனிக்க வேண்டும்.
தென்னிந்தியாவின் கருப்பின மக்களுடன் வடநாட்டினர் இணக்கமாக வாழவில்லையா? என்று வடநாட்டின் முன்னாள் எம்.பி. ஒருவர் கூறியது, தென்னாட்டவர் குறித்து வடநாட்டினரின் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் தென்னிந்தியர்கள் மட்டுமல்லாது, வட இந்திய மக்கள் மீதும் ஹிந்தி மொழி திணிக்கப்படுகிறது. மொழியால் இந்திய மாநிலங்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிப்பதோடு, மக்களை பிளவுப்படுத்த துணிந்துள்ளனர். வடநாட்டில் ஐந்து மாநிலங்களில் மட்டுமே ஹிந்தி பேசப்படுகிறது. ஹிந்தியின் ஆதிக்கத்தை தமிழகம் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்துள்ளது. 1965-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது, காமராஜர், சஞ்சீவரெட்டி, நிஜலிங்கப்பா ஆகியோரின் முயற்சியால் ஹிந்தி பேசாத மக்கள் மீது ஹிந்தியை திணிக்க மாட்டோம் என்று பட்டாபி, வீரண்ண கெளடா, சி.சுப்பிரமணியம் ஆகியோர் கையெழுத்திட்ட உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை காற்றில் பறக்கவிட்டுள்ள மத்திய அரசு ஹிந்தியை தொடர்ந்து திணித்து வருகிறது.
ஹிந்தியின் ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டுமானால், தமிழகத்தை போல கர்நாடகத்திலும் இருமொழிக் கொள்கையை பின்பற்றவேண்டும். ஆட்சிமொழியாக கன்னடம் மற்றும் ஆங்கிலமே இருக்க வேண்டும். தென்னிந்தியா முழுவதும் இருமொழிக் கொள்கை அமல்படுத்தினால், ஹிந்தியின் ஆதிக்கம் தகர்க்கப்படும் என்றார் அவர்.
முன்னதாக, கர்நாடக ரக்ஷனவேதிகே தலைவர் நாராயண கெளடாவை தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன், செயற்குழு உறுப்பினர் ராமசந்திரன் ஆகியோர் சால்வை அணிவித்து கெளரவித்தனர். அப்போது, கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com