எந்தவொரு அதிகாரியின் ஒழுக்கமின்மையையும் சகித்துக்கொள்ள இயலாது: முதல்வர் சித்தராமையா

எந்தவொரு அதிகாரியின் ஒழுக்கமின்மையையும் சகித்துக்கொள்ள இயலாது என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

எந்தவொரு அதிகாரியின் ஒழுக்கமின்மையையும் சகித்துக்கொள்ள இயலாது என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
 இதுகுறித்து மைசூரில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவிலுள்ள மத்திய சிறையில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து எந்தவொரு அதிகாரியின் ஒழுக்கமின்மையையும் சகித்துக்கொள்ள இயலாது. மாநில அரசின் உத்தரவுகளைமீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மூத்த அதிகாரிகள் யாராக இருந்தாலும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.
 எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும், அதுகுறித்து மாநில அரசுடன் விவாதிக்க வேண்டும். வெறும்வாய்க்கு அவல் கிடைத்ததுபோல, மக்கள் எள்ளி நகையாடும் வகையில் அதிகாரிகள் நடந்து கொள்ளக் கூடாது. எந்த அதிகாரியாக இருந்தாலும் நம்பகத்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும். உயரதிகாரிகள் நேர்மறையான சிந்தனையோடு செயலாற்றினால் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தேறாது. சாட்சி ஆதாரங்களை அழிப்பது உள்ளிட்டவை குறித்து கடுமையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன்.
 மத்திய சிறையில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை கிடைத்ததும் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய சிறை முறைகேடுகள் குறித்து விசாரணைக்குழு அமைத்திருந்தாலும், மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக எதிர்க்கட்சிகள் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருக்கின்றன.
 ஆடி மாதத்துக்கும் அமைச்சரவை விரிவாக்கத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. கட்சி மேலிடத்துடன் பேசியபிறகு அமைச்சரவைவிரிவாக்கம் குறித்து இறுதி முடிவெடுக்கப்படும். இதற்காக வெகுவிரைவில் தில்லி செல்ல இருக்கிறேன். ஆடி மாதத்தில் அமைச்சரவையை விரிவாக்கக் கூடாது என்று எந்த விதிமுறைகளும் இல்லை. இதுபோன்ற கற்பிதங்கள் அனைத்தும் மூடநம்பிக்கையாகும். நல்ல வேலையை செய்வதற்கு எந்த மாதமாக இருந்தால் என்ன?
 மாநிலம் முழுவதும் சீரான மழை பெய்யவில்லை. அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. விவசாயிகளின் நலன்கருதி செயற்கை மழைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார் அவர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com