"மனசாட்சியோடு செயல்பட்ட மாபெரும் தலைவர் காமராஜர்'

இந்தியாவில் மனசாட்சியோடு செயல்பட்ட மாபெரும் தலைவர் காமராஜர் என பாஜக எம்.எம்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

இந்தியாவில் மனசாட்சியோடு செயல்பட்ட மாபெரும் தலைவர் காமராஜர் என பாஜக எம்.எம்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
 கர்நாடக சிவாஜி அறக்கட்டளையின் சார்பில், பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை தமிழக முன்னாள் முதல்வர், பெருந்தலைவர் காமராஜரின் 115}ஆவது பிறந்த நாள், காந்தியவாதி எம்.பெருமாள் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று காமராஜரின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பிறகு, அவர் பேசியது: இந்திய நாடு கண்ட தலைசிறந்த தலைவர் கர்மவீரர் காமராஜர். காமராஜரை போன்ற தலைவர்கள் நமது நாட்டில் வாழ்ந்தார்கள் என்பதே நமக்கெல்லாம் பெருமை தருவதாகும்.
 காமராஜரின் எளிமையான வாழ்க்கை முறை, நேர்மையான அரசியல் அணுகுமுறை, தூய்மையான தொண்டுள்ளத்தை நாம் அனைவரும் கற்க வேண்டும். காந்திய வழியில் சுயநலமில்லாமல் தூய்மையான முறையில் மக்கள்பணியாற்றியவர் காமராஜர்.
 இந்தியாவில் மனசாட்சியோடு செயல்பட்ட மாபெரும் தலைவர் காமராஜர். எளிமையான வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை என்ற அடைமொழிக்கு உதாரணமாக வாழ்ந்தவர் அவர்.
 எப்போதும் யாராலும் திருடமுடியாத செல்வம் கல்வி என்பதை உணர்ந்த காமராஜர், இளம் தலைமுறையினருக்கு கல்விதானம் வழங்கினார். கல்வி அறிவுபெற்ற சமுதாயத்தால் நாடு வளம்பெறும் என்பதை உணர்ந்திருந்தார். நாடு மட்டுமல்ல வீடும் செழிக்கும் என்பதை அறிந்திருந்ததால்தான் கல்வி வளத்தை பெருக்க கிராமம்தோறும் கல்விக் கூடங்களை தொடங்கினார். மேலும் வறுமையாலும், பசியாலும் உழன்ற குழந்தைகள் பள்ளிக்கு வரமுடியாத சூழ்நிலை இருந்ததை அறிந்த காமராஜர், இந்தியாவில் முதல்முறையாக பள்ளிக் கூடங்களில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கினார்.
 இந்தியாவில் தூய்மையான தலைவர் என்ற பெருமைக்குரியவர் காமராஜர். முதுமையான தனது தாய்க்கு சிறப்பு சலுகைகளை வழங்க மறுத்த உத்தம தலைவர். இன்றைய அரசியல்வாதிகள் காமராஜரை முன்னுதாரணமாக கொண்டு, நேர்மையான அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
 அதேபோல, ஸ்ரீராமபுரத்தில் காந்தியடிகளின் நெருங்கிய நண்பராக விளங்கியவர் காந்தியவாதி பெருமாள் வாத்தியார். இப்பகுதியில் காந்தி வித்யாசாலாவை தொடங்கி ஆயிரக்கணக்கான குழந்தைகள் வாழ்க்கையில் கல்வி ஒளி வழங்கியவர்.அவரது நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் அவர்.
 விழாவில் முன்னாள் அமைச்சர் பி.ஜி.ஆர்.சிந்தியா, அறக்கட்டளை தலைவர் மா.நடராஜ், மாமன்ற உறுப்பினர் டி.சிவபிரகாஷ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.ரவீந்திரா, கல்வியாளர் ஏ.மதுசூதன்பாபு, மைசூரு சம்புகுல சத்திரிய சங்கத் தலைவர் என்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து
 கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com