"பண மதிப்பிழப்பு நடவடிக்கை சர்வாதிகார முடிவாகும்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை சர்வாதிகார முடிவு என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை சர்வாதிகார முடிவு என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மாநில தலைமைச் செயலக ஊழியர் சங்கம் சார்பில் பெங்களூரு, விதான செளதாவில் வெள்ளிக்கிழமை "பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு இயக்கங்கள், அரசு ஊழியர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம்' என்ற தலைப்பிலான கருத்தரங்கைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
கருப்புப் பணம் மற்றும் ஊழல் தடுப்பு, போலி செலாவணி ஒழிப்பு, பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை ஒழிப்பது போன்ற காரணங்களால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றில் எதுவும் தடுக்கப்படுவதில்லை. மாறாக, விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் கடுமையான இன்னல்களை எதிர்கொள்ள நேர்ந்தது.
எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தனர். இது தன்னிச்சையானது மட்டுமல்லாது, சர்வாதிகார முடிவாகும். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சாதாரண மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள்தான் பாதிக்கப்பட்டனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை அரசியல் லாப நோக்கத்திற்காகச் செயல்படுத்தப்பட்டதே தவிர, மக்களின் நலனுக்காக அல்ல. குறிப்பாக, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை நமது நாட்டின் பொருளாதாரத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நமது பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை சிதைந்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கூட்டுறவு சங்கங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு எந்தவொரு நல்ல திட்டத்தையும் அறிவிப்பதில்லை என்பது பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் தெளிவாகியுள்ளது.
பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு கேட்பதே விவசாயிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளது கண்டனத்துக்குரியது. அப்படியானால், உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பிரதமர் மோடி கூறியதை என்னவென்று கூறுவது? மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவின் கருத்து விவசாயிகள் மீதான பாஜகவின் அக்கறையை வெளிப்படுத்துகிறது என்றார். நிகழ்ச்சியில், மாநில மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.டி.சோமசேகர், முனிரத்னா, கர்நாடக அரசு ஊழியர் சங்கத் தலைவர் மஞ்சேகெளடா, மாநில தலைமைச் செயலக ஊழியர் சங்கத் தலைவர் நரசிம்மையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com