பாஜகவுக்கு பயந்து பயிர்க் கடனை தள்ளுபடி செய்யவில்லை: கர்நாடக முதல்வர் சித்தராமையா

பாஜகவுக்கு பயந்து பயிர்க் கடனை தள்ளுபடிசெய்யவில்லை என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில், பெங்களூரில் வெள்ளிக்கிழமை பயிர்க்கடன்

பாஜகவுக்கு பயந்து பயிர்க் கடனை தள்ளுபடிசெய்யவில்லை என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில், பெங்களூரில் வெள்ளிக்கிழமை பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததற்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் சித்தராமையா பேசியது:
கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடனை தள்ளுபடி செய்ததை ஏதோ தங்களுக்கு பயந்து செய்ததாக பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். பாஜகவுக்கு பயந்து பயிர்க் கடனை தள்ளுபடி செய்யவில்லை. விவசாயிகளின் இன்னலை துடைப்பதற்காகவே பயிர்க் கடனை தள்ளுபடி செய்திருக்கிறோம்.
பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா போன்ற பல அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறேன். எனவே, இவரது மலிவான அரசியலுக்கு நான் அடிபணியமாட்டேன். ஒருசில அரசியல்வாதிகள் தங்களை விவசாயிகளின் மகன், மண்ணின் மைந்தர் என்று கூறிக் கொள்கிறார்கள். இவர்கள் யாரும் நிலத்தில் வேலை செய்தவர்கள் இல்லை.
எடியூரப்பா, குமாரசாமி ஆகியோருக்கு நிலத்தை உழுது பழக்கமில்லை, விதை விதைத்து பழக்கமில்லை. ஆனால், நான் உண்மையான உழவன் மகன். நிலத்தில் உழுதிருக்கிறேன். மாடு மேய்த்திருக்கிறேன். விவசாயிகளின் கஷ்டம் எனக்கு தெரியும். அதனால்தான் விவசாயிகளின்பயிர் கடனை தள்ளுபடி செய்திருக்கிறேன்.
ஆனால், நான் பாஜகவுக்கு பயந்து பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாகக் கூறுகிறார்கள். எடியூரப்பா முதல்வராக இருந்தபோது விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்தது உண்டா? ஒரு ரூபாய் பயிர்க் கடனையும் அவர் தள்ளுபடி செய்ததில்லை.
தேசிய வங்கியில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடியை கேள்வி கேட்பாரா எடியூரப்பா? பயிர்க் கடனை தள்ளுபடி செய்து வெகுவிரைவில் அரசாணைப் பிறப்பிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம்.
அனைவருக்காகவும் வளர்ச்சி என்று கூறிவரும் பிரதமர் மோடி, கிறித்தவ, முஸ்லிம் மக்களை அலட்சியப்படுத்திவருவது எதற்காக? பாஜக பெரு நிறுவனங்களாக நடத்தப்படும் கட்சி. காங்கிரஸ் கட்சியோ ஏழை, எளிய மக்களின் நலன்காக்கும் கட்சி.
ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் பயிர்க் கடனை தள்ளுபடிசெய்யப் போவதாக பாஜக, மஜதவினர் அறிவித்துள்ளனர். அப்படியானால் இதற்கு முன் ஆட்சியில் இருந்த போது பயிர்க் கடனை தள்ளுபடி செய்யாதது ஏன்? விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட ஒரே கட்சி காங்கிரஸ் என்பதை பயிர்க் கடன் தள்ளுபடி மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறோம் என்றார்.
நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர் சந்தனமாலை மற்றும் மைசூரு தலைப்பாகை அணிவித்து, இனிப்பூட்டி வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள், காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com